top of page

வாழிய நிலனே - 2

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.

(முதற்கனல்: பொற்கதவம்- 9 , ஓவியம்: ஷண்முகவேல்)

அரசவீதி முழுக்க கால்நடைகளும், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்த சாணிக்குவியல்களும், முகம் கன்றிச்சிவந்த குழந்தைகளும், திண்ணைகளில் கம்பளிநூல்களால் ஆடை பின்னும் முதியவர்களும் என ஒரு மலைக்கிராமமாகவே பால்ஹிகபுரி இருக்கிறது.

பாலையும் புல்வெளியும்


மழைப்பாடல் வெண்முரசின் அரசியல் பின்புலத்தை சித்திரமென தீட்டிக் காட்டும் பகுதி. யயாதியால் குருநிலம் விட்டு வெளியேற்றப்படும் இரண்டு மைந்தர்களில் துர்வசு பாலை நிலத்தில் காந்தார அரசை நிறுவுகிறான். மற்றொரு மைந்தன் யது மேய்ச்சல் நிலங்களை அடைந்து யாதவ அரசை அமைக்கிறான். புரு வழியே குருவம்சம் தொடர்கிறது. மூன்றும் இணைந்தும் முரண்பட்டும் பாரதத்தின் கதையை சமைக்கின்றன. இது தன்னைத்தானே வகுத்தும் பிரித்தும் அழித்தும் மீண்டும் முளைத்தும் முன்செல்லும் பேரியற்கையின் ஒரு திட்டம் என்றும் தோன்றுகிறது.


இதில் காந்தாரியின் நிலமான காந்தாரம் பாலை நிலம் ஆனபோதிலும் ஷத்ரிய அரசு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். குந்தி மேய்ச்சல் நிலத்தின் எழுந்து வரும் அரசுகளான யாதவப்பின்னணி கொண்டவள். அந்நிலங்களுக்கிடையே எழும் மோதலே இப்பெருங்காதையின் இரு முக்கியமான பெண்களுக்கு, இரு முக்கியமான தரப்புகளுக்கிடையேயான முரண்பாட்டின் அடித்தளம். இங்கு கிளம்பும் முரணே மிகப் பெரிய போராக பின்னர் வெடிக்கிறது. ஷத்ரியர்களுக்கும் எழுந்து வரும் பிற குடிகளுக்குமான போர் என்பதாலேயே போரில் பெரும்பாலான ஷத்ரியர்கள் துர்யோதனனை ஆதரிக்கிறார்கள். அப்போரில் வென்றது பாண்டவர்கள் தரப்பு, யாதவத்தரப்பு.


காந்தாரம் பாலை நிலமாக இருந்தாலும் கிழக்கே பீதர் நிலத்திலிருந்தும் கங்காவர்த்தத்தில் இருந்தும் பட்டும், நறுமணங்களும், இன்ன பிற வணிகப் பொருட்களும் மேற்கு நிலங்களுக்கு செல்லும் வணிகப் பெரும்பாதையில் இருப்பதால் புதிய வரிப்பணம் மூலம் உருவாகி ஆதிக்கம் கொண்டு வளரும் அரசு. அங்கு சகுனி மாபெரும் கனவுகளோடு மிகப் பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருக்கிறான். பலநூறு மைல்களுக்கு விரிவெளியை எல்லையெனக் கொண்ட காந்தாரத்துக்கு அக்கோட்டை தேவையே இல்லை என்றாலும் சகுனியின் திசை வென்று பேரரசொன்றை உருவாக்கும் கனவுகளின் அடித்தளம் அந்தக் கோட்டை.


யாதவர் புதிய புல்வெளிகளை நாளும் கண்டடைந்து விரியும் குடியினர். மேய்ச்சல் மூலம் உருவாகிவந்த புதிய தரப்பு. மகாபாரதம் நிகழும் காலகட்டத்தில் கங்கைச் சமவெளிக்கு அப்பால் பெரும் நிலப்பகுதி இருக்கிறது. அங்கே புதிய மேய்ச்சல் நிலங்கள் விரிவடைகின்றன. அங்கே ஆடு,மாடு மேய்த்தல் பெரும் தொழிலாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வேளாண்தொழிலை விட மேய்ச்சலுக்கு ஆட்கள் குறைவாகவே தேவைப்படுகின்றனர். மேய்ச்சல் தொழில் பெருகுகிறது.


உதாரணமாக யாதவபுரியாகிய மதுராவின் எழுச்சியைப் பார்க்கலாம். தொன்மங்களின் படி, யாதவர்களின் முதன்மை உருவாக்கப்படுகிறது:

“இமயம்முதல் குமரிவரை காந்தாரம் முதல் காமரூபம் வரை விரிந்து கிடந்த பாரதவர்ஷத்தில் நூற்றியெட்டு ஆயர்குலங்கள் இருந்தன. இந்திரனால் வானம் மழையாக ஆக்கப்பட, மழை புல்லாக ஆகியது. புல்லை அமுதமாக ஆக்கியவை பசுக்கள்…. பசுக்களை மேய்க்கும் ஆயர்குலமே குலங்களில் முதன்மையானது என்று புராணங்கள் சொல்லின. “


யயாதியின் மைந்தனான துர்வசு தந்தையால் நாடு மறுக்கப்பட்டு வடதிசையில் காந்தார நாட்டை அமைத்தது போல,மற்றொரு மைந்தன் யது மனிதர்கள் வாழாது வெயில் பரவி வீண்நிலமாகக் கிடந்த பர்ணஸா என்னும் ஆற்றின் படுகையை அடைந்து முதல் யாதவ அரசை அமைக்கிறான். அவர்கள் அங்கே பாலைநிலப்பெண்டிரை மணந்து மைந்தரைப்பெற்று நூறு கணங்களாக ஆகிறார்கள். அந்த நூறு கணங்களும் பதினெட்டு ஜனபதங்களாக விரிந்தன. பதினெட்டு ஜனபதங்களும் இணைந்து யாதவகுலமாக மாறுகிறது.


யமுனைக்கரையில் ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான படகுகளில் நெய்ப்பானைகள் வந்துசேருமிடமாக இருந்த மதுபுரம் ஒரு நகரமாக ஆகிறது. நெய்கொள்வதற்காக பல்லாயிரம் வண்டிகள் மதுபுரத்துக்கு வரத்தொடங்குகின்றன. ஆக்னேயபதங்கள் என்றழைக்கப்பட்ட எட்டு வண்டிச்சாலைகள் அங்கே வந்து சேர்கின்றன. நெய் யமுனைவழியாக கங்கைக்குச்சென்று நாவாய்கள் வழியாக மகதத்துக்கும் வங்கத்துக்கும் செல்கிறது. நெய்ச்சந்தையாக இருந்த மதுபுரம் படையும் காவலும் கொண்டு, ஆக்னேயபதங்களின் வண்டிகளும் யமுனையின் படகுகளும் கொண்டுவந்து குவித்த சுங்கத்தால் மதுபுரம்(மதுரா) வளர்ந்து தனி அரசாகிறது. இது மழைப்பாடல் காட்டும் சித்திரம்.


மேய்ச்சல் நிலத்தில் வாழும் யாதவ குலங்கள் பெருகுகின்றனர். குலங்களும் பெருகி வருவாயும் அதிகரிக்கும்போது யாதவ அரசுகள் உருவாகத் தொடங்குகின்றன. இந்த இரு நிலங்களின் போரே கௌரவருக்கும் பாண்டவருக்குமான குருக்ஷேத்திரப் போர். பாலைக்கு அப்பாலிருந்து எல்லாவற்றையும் ஆட்டிவைக்கும் துவாரகையும் அந்த எழுந்து வரும் புதிய குடிகளின் சான்று.


காடும் நகரமும்


காடுகளுக்கும் நகரங்களுக்கும் இடையேயான உறவு அன்றிலிருந்து இன்று வரை நாம் காணக்கூடிய ஒன்று. நகரங்களின், நாகரீகத்தின் வளர்ச்சியின் பொருட்டு காடுகள் தொடர்ந்து வயல்களாக, நகரங்களாக மாறிக்கொண்டே இருக்கின்றன. மனிதர்கள் தாங்கள் சார்ந்த நிலப்பகுதியை முழுமையாக பயன்படுத்த முற்படுவதும், தாங்கள் அறியாத தொலை நிலங்களை அவ்வண்ணமே இயற்கை எழிலோடு திகழ வேண்டுமென விரும்புவதும் குறித்து நீர்க்கோலம் பகுதியில் தமனர் என்னும் முனிவர் குறிப்பிடுவது இன்றும் எண்ணிப் பார்க்க வேண்டியது. சுற்றுலாப் பயணங்களில் நாம் காணும் பசுமை நிறைந்த நிலங்களை இது இப்படியே மாறாமல் இருக்க வேண்டும் என உணர்ச்சி மேலிட என்னும் அதே நேரம், நாம் வாழும் ஊரையும் வீட்டையும் அதே பசுமையை அழித்தே அமைத்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டே எண்ணுகிறோம்.


சிருங்கசிலை

வடக்கே உசிநாரர்களின் சிருங்கபுரிக்கு அருகே இருந்த மலைச்சாரல் கிருஷ்ணசிலை எனப்படுகிறது. அங்கு விலங்குகளை வேட்டையாடியும், சிறிய பறவைகளை பொறி வைத்துப் பிடித்தும் வாழும் ஊஷரர்கள் என்னும் மலைக்குடிகள் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்ந்த நிலம் மெல்ல மற்ற குடியினரால் கைக்கொள்ளப்படுகிறது. அந்த மலைச்சாரலை ஒவ்வொரு வருடமும் புதிய மேய்ச்சல் நிலங்களைத் தேடிக்கொண்டிருக்கும் உசிநார நாட்டு யாதவர்கள் தீவைத்து எரித்து புல்வெளியாக்குகின்றனர். உழவர்கள் புல்வெளிகளை அவர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி கழனிகளாக்குகின்றனர். கழனிகள் நடுவே ஊர்கள் அமைகின்றன. ஊர்கள் நடுவே வணிகர்களின் சந்தைகள் எழுகின்றன. சந்தைகளில் சுங்கம் கொள்ள ஷத்ரியர்கள் வருகின்றனர். ஷத்ரியர்களிடம் நிதிபெற்று பிராமணர்கள் அங்கே வந்து வேள்வி எழுப்புகின்றனர். இது காலம்காலமாக வனங்கள் நகரமயமாவதன் ஒரு துல்லியமான சித்திரம். மிகச் சுருக்கமான வரிகளில் அழுத்தமாக வெண்முரசு இதனைப் பதிவு செய்கிறது:

"யாதவர்களின் நெருப்பு ஒவ்வொன்றும் வேள்வி நெருப்பாக மாறிக்கொண்டிருந்தது. வெம்மைகொண்ட உலோகப்பரப்பின் ஈரம் போல காடு கண்காணவே வற்றி மறைந்துகொண்டிருந்தது."


இடும்பவனம்

பிரயாகையில் இடும்பவனத்தின் கதை வருகிறது. பீமனைத் தனது கணவனென இடும்பகுடிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் இடும்பி. சினத்துடன் இடும்பர்களின் தலைவனான அவளது தமையன் இடும்பன் காட்டில் ஒருபோதும் அயலவர்களை விடக்கூடாது என்றும், மீறி உள்நுழைந்தவர்களை உயிரோடு வெளியே அனுப்பக்கூடாது என்றும் கூறுகிறான். கங்கைச் சமவெளியெங்கும் இருந்த பல நூறு காடுகளும் அதில் வாழ்ந்த கான்குடியினரும் அழிந்து போனதற்கு இது போன்ற வெளி மனிதர்களே காரணம் என்று உரைக்கிறான். காடுகளில் வாழ்ந்த தொல்குடிகள் விரட்டப்பட்டு மலைகளில் சென்று மறைந்தனர் என்றும், எஞ்சியோர் அடிமை வாழ்வு வாழ்கின்றனர் என்றும் கூறுகிறான். வண்ணத்தோல் கொண்டவர்களின் பேராசையே காடுகளுக்கு எதிரி என்று கூறுகிறான். சிறிய பொருட்களுக்கும் வெளியுலகு காட்டும் பகட்டுக்கும் மயங்கி அந்நியர்களை நம்பிய தொல்குடிகள் அனைத்தும் அழிந்து போயிருக்கின்றன என்று கூறுகிறான். இதுவே அரக்கர்கள் என்று வரையறை செய்யப்பட தொல்குடிகளின் அனுபவ பாடமாக இருக்கிறது.


ஹிரண்யவாகா

வண்ணக்கடல் காட்டும் ஹிரண்யவாகாவில் ஆசுர குடிகள் வாழ்கிறார்கள். தனது விற்கலையின் பொருட்டு கானகத்தில் இடையறாத பயிற்சியில் இருந்த ஏகலைவனிடம் அவனது அன்னை சுவர்ணை அதையே கூறுகிறாள். அவனது விற்திறனைக் காட்டியதன் மூலம், காட்டின் விளிம்பை அவன் தீண்டிவிட்டிருப்பதால் அவர்கள் (அரசகுடியினர்) எச்சரிக்கை அடைந்திருப்பார்கள் என்றும் அவனை அடக்கவும் அழிக்கவும் முனைவார்கள் என்றும் கூறுகிறாள். அவள் கூறியவண்ணமே நிகழ்கிறது. அதில் துரோணரின் மனக்கணக்குகளும் இருந்தாலும் இதுவும் காலம் காலமாக நிகழ்ந்து வரும் கானகத்தின் விசைக்கும் நகரத்தின் விழைவுக்குமான மற்றொரு முகமாகவே இருக்கிறது.


இந்திரப்பிரஸ்தம்

வெய்யோனில் இந்திரப்பிரஸ்த நகரின் சுடரேற்று விழாவுக்கு கர்ணன் செல்லும் போது, யமுனைப் பெருக்கில் நாகர்கள் பலநூறு சிறு வள்ளங்களில் அங்கிருந்து கண்ணீரோடு வெளியேறுவதைக் காண்கிறான். அவற்றில் ஒன்றில் ஏறிக்கொண்டு நாகர்களின் கண்ணீரின் கதையை அறிகிறான். இந்திரப்பிரஸ்தம் உருவாவதன் முன் அங்கிருந்த காண்டவப்பிரஸ்தம் பல்லாயிரம் தலைமுறைகளாக நாகர்களின் காடு. அடர்குளிர்பசுங்காடுகளின் இருண்ட ஆழங்களுக்குள் நாகர்கள் அங்கே வாழ்ந்து வருகிறார்கள்.


இந்திரப்பிரஸ்தம் நகர் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட நிலமாகிய காண்டவ வனத்தை கிருஷ்ணனின் துணையுடன் அர்ஜுனன் எரித்தழிக்கிறான்.

பச்சை நிறமன்றி பிறிதொன்றை அறியாத காண்டவத்து இளநாகர்கள், அர்ஜுனன் இட்ட எரி அவர்களைச் சூழ்ந்து வந்தபோதும் அது ஏதென்றறியாது இளம்புலரி என்றும் மாபெரும் மலரிதழ் என்றும் அணுகிச்செல்கிறார்கள். நாற்புறமும் சூழ்ந்து அது வரக்கண்ட பின்னர்தான் கொல்ல வரும் பகை என்றறிகிறார்கள். மாபெரும் வலைபோல் அவர்களை நாற்புறமும் சுற்றி இறுக்குகிறது அனல். அக்கொடும் தீக்கு அஞ்சி இந்திரமேரு என்ற பசுங்குன்றின் மலைவளைவுகளில் நின்றிருந்த தேவதாரு மரங்களை எரித்து இந்திரனுக்கு அவியாக்கி நிற்கின்றனர். சிலகணங்களுக்குப்பின் நீர்ப்பெருங்காடென மழை அவர்களை நாலாபுறமும் சூழ்ந்து காக்கிறது. கண்முன் காட்டெரி தணிவதைக் கண்ட அர்ஜுனன் இளைய யாதவர் உதவியுடன் நீரிலும் நின்றெறியும் பீதர் நாட்டு எரிப்பொடி கொண்டு நிறைக்கப்பட்ட மூங்கில்குழாய்கள் அம்புகளென செலுத்தி காண்டவ வனத்தை முற்றிலும் எரிக்கிறான். நாகர் குலமே அந்தத் தீயில் கருகி அழிகிறது, நாகர்களின் மைந்தர்கள் அனலில் பொசுங்க எஞ்சியோர் அங்கிருந்து பெருகும் வஞ்சத்தோடு ஊர் நீங்குகிறார்கள்.


காண்டவ வனத்தைச் சூழ்ந்த சதுப்புகள் ஊர்களாகவும், காடுகள் கழனிகளாகவும், காடு நகரமாகவும் மாறுகிறது. காண்டவப்ரஸ்தம் எரிந்துபடவே அவர்கள் குல அன்னையின் ஆணையின்படி, பாரதவர்ஷத்தின் கிழக்கே ஓயாதுபெருநீர் பெருகும் பெரு நதிக்கு அப்பால் உள்ள நிலம் நோக்கி, எஞ்சிய உயிரில் வஞ்சம் தேக்கி செல்கிறார்கள்.


விராடபுரி

காடுகளில் இருந்து விராடபுரி நகரமென எழுந்து வரும் சித்திரம் நீர்க்கோலத்தில் இருக்கிறது. நிஷதர்களின் பெருநகராகிய விராடபுரி முன்னர் கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கோதைவரி மலையிறங்கும் இடத்தில், அஸனிகிரி என்ற சிறிய மலையைச் சுற்றியிருந்த காடுகளில், நாணலும் கோரையும் விரிந்த பெருஞ்சதுப்பு நிலத்தில் வாழ்ந்த நிஷதர் வணிகத்தின் மூலம் செல்வம் பெருகி, மொழி விரிந்து படைக்கலங்கள் பெற்று அரசமைக்கின்றனர். அதன் பிறகு அஸனிகிரி கிரிப்பிரஸ்தம் என்றும் இந்திரபுரி என்றும் புகழ்பெற்றிருந்தது. இரண்டாம் கீசகர் தலைமையில் விராடபுரி என்னும் பெருநகராகிறது அது.


மலையும் சமவெளியும்


வெண்முகில் நகரத்தில் அறிமுகமாகும் பால்ஹிகபுரி, பிற தேசத்து தலைநகரங்களாகிய காம்பில்யத்துடனும் சத்ராவதியுடனும் ஒப்பிட்டால், ஒரு சிறிய மலை சிற்றூர் என்னும் அளவிலேயே இருக்கிறது. அரசவீதி முழுக்க கால்நடைகளும், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்த சாணிக்குவியல்களும், முகம் கன்றிச்சிவந்த குழந்தைகளும், திண்ணைகளில் கம்பளிநூல்களால் ஆடை பின்னும் முதியவர்களும் என ஒரு மலைக்கிராமமாகவே பால்ஹிகபுரி இருக்கிறது. அங்கு உலர்ந்த இறைச்சிநாடாக்கள், உலர்ந்த மீன், வேட்டைக்கருவிகள், கொம்புப்பிடியிட்ட இரும்புக் கத்திகள் என மலைசார்ந்த வணிகம் நடக்கிறது. உப்பையே மலைமக்கள் நாணயமாகப் பயன்படுத்துகிறார்கள்.


எளிய மலைமகனாக அறிமுகமாகும் பூரிசிரவஸ், நிகர் நிலங்களுக்கு வந்து ஆரியவர்தத்தின் மைய அரசியலில் பங்குபெறும் வாய்ப்பு பெற்று, துரியோதனின் அணுக்கர்களில் ஒருவன் என மாறுகிறான். ஒரு முறை தொலைதூரப் பயணத்துக்குப்பின் பால்ஹிகபுரியின் தொலைதூரக்காட்சி தெரியும் ஒரு மலைவிளிம்பில் இருந்து தனது நகரைப் பார்க்கிறான். பகடைக்களத்தில் கையால் அள்ளி வைக்கப்பட்ட சோழிகளைப்போல அந்நகரம் அவனுக்குத் தோன்றுகிறது. எந்தத் திட்டமிடலும் இல்லாது சிதறிக் கிடைக்கும் மலை சிற்றூர். அதை விரிவாக்கி கோட்டை அமைக்கும் எண்ணத்தை பூரிசிரவஸ் அடைகிறான்.


மலை நகரான பால்ஹிகபுரி உருமாறி வளர்வதன் சித்திரம் செந்நா வேங்கையில் வருகிறது. பூரிசிரவஸ் நாகமரியாதம் என்னும் பெருங்கோட்டையை நகரைச் சுற்றி எழுப்புகிறான். பாணாசுரரின் கோட்டைக்கட்டுமானம் போல பெரும்பாறைகளை மலைகளிலிருந்து பெயர்த்து நதியிலிட்டு உருட்டி கீழே கொண்டு வந்து இறங்குவிசையாலேயே ஒன்றின்மேல் ஒன்றென ஏற்றி நிறுத்தி அக்கோட்டையை கட்டியிருக்கின்றனர். கோட்டை முகப்பில் இருந்து நேராக அரண்மனைக்கு நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை அமைக்கிறான். தொன்மையான அரண்மனையை இடித்துவிட்டு ஏழு அடுக்குகள் கொண்ட புதிய மாளிகையை அமைக்கிறான். நிகர்நிலத்தில் அமைப்பது போல அங்கு அமைக்கமுடியாதென்று மலைநிலத்துக்கு ஏற்றது போல கலிங்கச் சிற்பியின் துணையுடன் பால்ஹிகக் குலச்சிற்பிகள் வரைந்து காட்டிய வரைபடங்களைக் கொண்டு அந்த மாளிகை எழுப்பப்படுகிறது.


இமையமலைப்பகுதியில் முதன்முறையாக மலைச்சாலை உருவாகி வருகிறது. சிந்தாவதி ஆற்றங்கரை அருகே மலைமீது சுழன்றேறி உச்சிப்பாறையை அடைந்து பால்ஹிகநகரிக்குள் இறங்கும் கழுதைப்பாதை பொதிவண்டிகள் ஏறிவரும் பெருஞ்சாலையாக மாறுகிறது. மூன்றாண்டுகாலம் பல்லாயிரம் ஊழியர் வேலை செய்ய அஸ்தினபுரியின் உதவியுடன் பழைய வழித்தடத்தையே வண்டிகள் செல்லும் சாலையாக பூரிசிரவஸ் மாற்றுகிறான்.


மலைச்சாலை அமைப்புப் பணிகளுக்காக காலம்காலமாக அங்கிருந்த பெரும்பாறைகள் பெயர்க்கப்படுகின்றன. அவை திடுக்கிட்டு முனகியபடி மெல்ல சரிகின்றன. வழியில் இருக்கும் சிறுபாறைகளையும் கற்களையும் பொடித்தபடி உருண்டிறங்குகின்றன. அதைக் கண்ட மலைக்குடியினர் பலரும் அஞ்சி விழிநீர் விடுகின்றனர். உருண்டு சென்ற பாறைகள் புதிய இடங்களில் அமர்கின்றன. அவற்றில் ஊழ்கம் விட்டெழுந்த தெய்வங்களுக்கு அவற்றில் விழிகள் எழுதி பலி கொடுத்து மலைக்குடிகள் வணங்குகின்றனர். அவ்விழிகள் அப்புதிய சாலைகளை வெறிக்கின்றன என்ற சித்திரம் மாற்றத்தை மலைப்புடன் பார்க்கும் மலைகளின் விழிகளாகவே தெரிகின்றன.


ஒரு சாலை எவ்விதம் அங்குள்ள மக்களின் வாழ்வையும் எண்ணங்களையும் மாற்றியமைக்கிறது என அறிய முடிகிறது. மலையிலிருந்து வந்த எல்லா சிறுவழிகளும் ஒருங்கிணைந்து மையச்சாலையில் இணைகின்றன. அங்கே ஒரு சிற்றங்காடி உருவாகிறது, அந்த சாலை ஓரங்களில் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. நாளடைவில் அவற்றைச் சூழ்ந்து விடுதிகளின் பெயராலேயே ஊர்கள் எழுகின்றன.


அதற்கு முன்னதாக பாரதவர்ஷத்தின் தென்னகத்தையும் வடநிலங்களையும் இணைக்க விந்தியனில் மட்டுமே உச்சிமலை ஏறிக்கடக்கும் சாலைகள் இருக்கின்றன. மலைகளை ஒட்டுமொத்தமாக நோக்கி சரிவான வழிகளை கண்டடைந்து அவற்றினூடாக சர்ப்ப பதங்கள் என்று அழைக்கப்பட்ட சாலைகளை அமைக்கும் நுட்பம் வளர்ந்து வருகிறது. அதில் தேர்ந்த மாளவ சிற்பிகளின் வழிகாட்டலைக் கொண்டு மலைச்சாலையை அமைக்கிறான் பூரிசிரவஸ்.


அந்தச் சாலை மலைக்கு பலவிதமான முன்னேற்றங்களைக் கொண்டு வருகிறது. வணிகம் பெருகுகிறது. உணவு, அணிமணிகள், அரண்மனை, பீதர்நாட்டுப் பட்டாடைகள், கலிங்கப் பருத்தியாடைகள், பொற்கங்கணங்கள், முத்துக் கணையாழிகள் என்று அதுவரை மலைக்குடி கண்டிராத வாழ்க்கை வசதிகள் பெருகியிருக்கின்றன. மலைக்குடியென வாழ்ந்த அரசகுலப் பெண்கள் அரசியர் என வாழ்க்கை முறையை அடைகின்றனர். அந்த சாலையே அந்த மலைமக்களை சமநிலத்தின் போருக்கும் அழைத்து வருகிறது.
- மேலும்265 views

Recent Posts

See All

Comments


bottom of page