வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.

(முதற்கனல்: வேள்விமுகம் - 2 , ஓவியம்: ஷண்முகவேல்)
ஒரு இமயப் பயணத்தில் முதன்முறையாக அளகநந்தை-பாகீரதி நதிகளின் கூடுதுறையாகிய தேவப்பிரயாகையை பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தின் காட்சிக்கோணத்தில் அந்த சங்கமத்தை ஏற்கனவே அப்படியே பார்த்திருக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டது.
வெண்முரசு மகாபாரதத்தின் நவீன மறுஉருவாக்கம். வெண்முரசு போன்ற நவீன காவியம் ஒன்றை வாசிக்கும் போது அதன் அத்தனை நுட்பங்களையும் முடிந்த அளவு அள்ள முயற்சிக்க வேண்டும். அதிலுள்ள நிலக்காட்சி விவரணைகளை நம் கற்பனையால் விரித்து அங்கே வாழத்தொடங்க வேண்டும். அதில் இடம்பெறும் படிமங்களையும் உள்ளத்தில் விரித்து பொருள்கொள்ளப் பழக வேண்டும். இலக்கிய வாசிப்பின் முக்கியமான அனுபவம், இத்தகைய நிகர் வாழ்க்கை அனுபவத்தை அடைவதே ஆகும்.
இதுகாறும் எழுதப்பட்டவற்றிலேயே மாபெரும் ஆக்கமாகிய இப்படைப்பை ஒவ்வொரு நாளும் வெளிவரும்போது வாசித்து வந்தோருக்கு இல்லாத ஒரு தயக்கம், இதை ஒட்டுமொத்தமாக வாசிக்கத் தொடங்குவோருக்கு இருக்கக்கூடும். வெண்முரசைத் தொடங்கும் ஒரு புதிய வாசகருக்கு இதன் பக்க எண்ணிக்கையும், மிகச் செறிவான மொழி நடையும், பாத்திரங்களின் எண்ணிக்கையும் முதலில் ஒரு மலைப்பை ஏற்படுத்தக்கூடும்.
கங்கையை தரிசிக்கத்தான் போகிறோம் என்றறிந்திருந்தாலும், காசியின் நெரிசலான சந்துகளில் நடந்து வந்துகொண்டே இருக்கையில் திடீரென கண்முன் விரியும் கங்கையைப் பார்ப்பது போன்ற ஒரு மனஅதிர்வு. இதை முழுவதும் நீந்திக்கடப்பது எப்படி என்றெண்ணி மலைக்காமல், கையளவு அள்ளும் நீரும் கங்கையே என்றெண்ணி படித்துறையில் நீரில் கால் வைப்பது மட்டுமே செய்ய வேண்டியது. நீரின் முதல் சிலிர்ப்பும் வேகமும் பழகி இறங்கிவிட கதையொழுக்கே பெருநீர்ப் பிரவாகத்தில் இழுத்துக்கொண்டு சென்றுவிடும். அடுத்தது என்ன என்ற ஆர்வம் கொண்டு வெறும் கதை வாசிப்பாக வாசிக்கும் முதல் வாசிப்பிலேயே கூட வாசகரறியாமலேயே மனதின் பல ஊடு வழிகளில் வெண்முரசின் ஆழத்து நீரும் வளமான வண்டலும் உள்ளே சென்று படிந்து கொண்டேதானிருக்கும். மேலோட்டமான வாசிப்பில் தவறவிட்டுவிடக்கூடியவை என்று பல இருந்தாலும் நம் மனம் அள்ளிக்கொள்ளக்கூடிய அறியா நுட்பங்கள் ஆயிரமாயிரம்.
ஒட்டுமொத்த பாரதத்தின் கதையைக் கூறும் இப்படைப்பில் இந்தியாவின் பண்டைய வரலாறும் அரசியலும், மனிதவாழ்க்கையின் இன்பங்களும், துன்பங்களும், அலைக்கழிப்புகளும், கேள்விகளும், நமது மெய்ஞ்ஞானத்தின் அடிப்படைகளும்,அதன் சாரமும், பெருமாந்தர்களின் கனவும் கண்ணீரும் பேசப்படும்போது அதற்கான வரைபரப்பு மிக மிகப் பெரியதாகவே அமையும். இது எண்ணற்ற நிலப்பகுதிகள், நீர்வழிகள், நகரங்கள், துறைமுகங்கள், காடுகள், மலைகள், வணிகப் பாதைகள், சந்தைகள் என மிகப் பெரிய பரப்பின் கதை. காடு நகரமாகும் கதை, ஓங்கி வான் முட்டிய நகரங்களை மீண்டும் காடு உண்ணும் கதைகள்.
வணிகம் ஒரு அடர்கானகத்தின் வளத்தை, அணுகமுடியா மலைசிகரத்தின் பொருட்களை நிலத்துக்கும், சமவெளியின் புதிய விழுமியங்களை மலைக்கும், காடுகளுக்கும் கொண்டு கொடுத்து வளர்ந்து செல்லும் நாகரீகத்தின் கதை. மேற்சொன்ன அனைத்துமே அன்றும் இன்றும் என்றுமென உள்ளதென்பதை உணர்ந்துகொள்ளத் தேவையான ஒரு பெரிய சித்திரத்தை கண்முன் பல கைகள் விரைந்து முழுமை செய்யும் களமெழுத்துப் போல வரைந்து செல்கிறது வெண்முரசு.
முதல் முறையாக பேரிலக்கியங்களுக்குள் கால் வைக்கும் புது வாசகருக்கு ஒரு இலக்கியப்படைப்புக்கு இத்தனை தகவல்கள் எதற்கு, இவை எல்லாம் நினைவில் நிற்குமா, தகவல்கள் எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்லப்படுகின்றன என்ற கேள்விகள் எழலாம். எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கற்பனையில் விரிந்து நிகழ்வது வாசகரின் மனதிலேயே.
ஒரு படைப்பு மிக விரிவாக இடங்களை, புறவுலகை, சூழலை சித்தரிக்கும் போதே, வாசகனுக்கு தனது நிதர்சன வாழ்வைப் போலவே ஒரு நிகர் வாழ்க்கையாக படைப்புலகை விரித்துக் கொள்ள முடியும். கதை நிகழும் இடங்களில் வாசகனும் மானசீகமாக வாழ்கிறான். வாசகர் கற்பனையில் விரித்துக்கொள்ள போதுமான நுட்பான விவரிப்புகள் இல்லாது போனால் இது நிகழ்வதில்லை. அதை வெறும் வார்தைகளாகவே கடந்து போக நேரும்.
உதாரணமாக 2018ல் ஒரு இமயப் பயணத்தில் முதன்முறையாக அளகநந்தை-பாகீரதி நதிகளின் கூடுதுறையாகிய தேவப்பிரயாகையை பார்த்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தின் காட்சிக்கோணத்தில் அந்த சங்கமத்தை ஏற்கனவே அப்படியே பார்த்திருக்கிறேன் என்ற எண்ணம் ஏற்பட்டது. அங்கு ஒரு புறம் ஓங்கிய சுவரென மலையும், மறுபுறம் ஆழத்தில் இருநதிகளும் இருக்கும். அந்தக் காட்சிக்கோணமும், அந்நதிகளின் இயல்பும் வண்ணமும், நீரின் தண்மையின் வேறுபாடுகள் உட்பட அந்தத் தருணம் முழுமையாக உள்ளே ஏற்கனவே பதிவாகி இருந்தது. அது வெண்முரசின் பிரயாகையில் துருபதன் தன் அமைச்சரோடு செல்லும் பயணத்தில் வரும் ஒரு காட்சி. உலகின் மகத்தான பேரிலக்கியங்கள் எல்லாம் நுண்சித்தரிப்புகளால் இந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
வெண்முரசு போன்ற ஒரு இலக்கியம் வாசிப்பதற்கு ஒரு மனப்பயிற்சி தேவை. அத்தனை வரிகளிலும் பல நுட்பங்களை கவனிக்கும் மனப்பழக்கம் பயின்று தேர்ச்சிபெறக்கூடிய ஒன்று. அந்நிலப்பகுதியை கற்பனை செய்து, அந்த நூலின் ஒரு கதை மாந்தராக அதற்குள் சென்று அந்த வாழ்க்கையை வாழ்வோருக்கே இதன் முழுமையான வாசிப்பனுபவம் கிட்டுகிறது. பரபரப்பு வாசிப்புக்கு பழகிவிட்டிருந்தால் இது ஆரம்பத்தில் பெரிய தடையாக வரக்கூடும். அத்தகைய மேலோட்டமான வாசிப்பு இத்தகைய பேரிலக்கியங்களில் நுழைய முடியாமல் செய்து விடக்கூடும்.
வெண்முரசின் நிலக்காட்சிகள் பல இன்றளவும் பெரிய மாற்றங்களின்றி நாம் சென்று காணக்கூடியவை. ஆசிரியரின் பல்லாண்டுகால பயணங்களும் நினைவுகளும் தீட்டும் சித்திரம் பாரத நிலமாக விரிந்திருப்பதை இந்நூலில் காணலாம்.
நிலங்களின் அரசியல் பிண்ணனி
ஒரு தேசத்தின் வரலாற்றை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று அதன் புவியியல் அமைப்பு. வடக்கே உயர்ந்த பெரும் வெண்பனிக்கோட்டைச் சுவரென இமயமும், முப்புறமும் சூழ்ந்த கடல்களும், மேற்கே பெரும் பாலை நோக்கி விரியும் வருநிலமும் இப்பெருநிலத்தின் கதையைப் பெருமளவு தீர்மானிக்கின்றன. "வாழ்க்கையும் ஒட்டுமொத்த வரலாறும் ஒருபார்வையில் நிலத்தின் ஒரு சிறு சலனம் மட்டுமே" என்று ஆசிரியர் ஜெயமோகன் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல, ஒரு நாட்டு மக்களின் வரலாற்றை, சமூகவியலை, வாழ்வு முறைகளை, மனநிலைகளை, ஒழுக்க வரையறைகளை, போர்களைப் புரிந்து கொள்ள அந்த நிலம் பற்றிய புரிதல் மிக அவசியம்.
பண்டைய இந்தியாவின் நீர் வளங்களான சிந்துவும் கங்கையும் யமுனையும் இதன் அரசியலைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இந்நதிகள் பாய்ந்து வளப்படுத்திய சமவெளிகள் ஆரியவர்த்தம் என்றழைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலம் மகாபாரத காலத்துக்கும் முன்னரே (கிமு 6 - கிமு 4) பதினாறு* மகாஜனபதங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவை வளர்ந்து பதினாறு நாடுகளாக ஆகின்றன. அவற்றை ஆளுவதற்கு ஆங்காங்கே இருந்த மலைவேடர்கள், மீனவர்கள் போன்ற குடிகளில் இருந்து தலைவர்கள் எழுந்து வருகிறார்கள், அரசர்கள் எனப்படுகிறார்கள். ஆளும் குடிகள் காலப்போக்கில் ஷத்ரிய குலங்கள் என்ற அடையாளத்தைப் பெறுகின்றன. இவர்களின் அதிகாரம் நிலைநிறுத்தப்படும் பொருட்டு இவர்களுக்குரிய அரச உரிமை என்பது இறைச்சக்திகளால் அருளப்பட்டது என்ற எண்ணங்கள் விதைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகின்றன. சூரியகுலம், சந்திரகுலம் என்பது போல தெய்வங்களில் இருந்து வம்சங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன.
பதினாறு நாடுகள் காலப்போக்கில் ஐம்பத்தாறு நாடுகளாக ஆகின்றன. வணிகப் பாதைகள் மேலும் அவற்றை ஒன்றோடொன்று இணைக்கின்றன. ஒவ்வொரு தேசமும் பிற குழுக்களை வென்று தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திப் பேரரசுகளாக ஆகும் முயற்சிகளில் ஈடுபடுவதே போர்கள் ஆகின்றன. இவர்களது சமூக அடுக்குகளும், நிலைநிறுத்தப்பட்ட விதிகளும், சமூக வழக்கங்களும், வணிகப் பாதைகளும் சென்று தொடாத பழங்குடிகளின் அரசுகள் அசுர நாடுகள், அரக்க நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. வெண்முரசில் வெவ்வேறு நிலங்களைச் சார்ந்த சமூகங்களின் எழுச்சியும் மோதலும் வருகிறது. உதாரணமாக பூரிசிரவஸ் போன்ற ஒரு மலைமகன் எழுந்து வந்து மைய வரலாற்றில் இணைவதென்பது அந்த மலைச்சமூகம் எழுந்து வருவதன் ஒரு குவிமுனை என்று புரிந்து கொள்ளலாம்.
புதிய மேய்ச்சல் நிலங்களைக் கண்டடைந்து யாதவ குலங்கள் வலுப்பெற்று புதிய அரசுகள் எழுகின்றன. நீர் வழி வணிகம் அரசுகளின் கருவூல நிதியை நிர்ணயிப்பதால் கரையோரங்களில் புதிய அரசுகள் மேலெழுந்து வருகின்றன. மச்சர் குலங்களும் எழுச்சி பெற்று அரசுகளை அமைக்கின்றனர். அதே சமயம் கடல்வணிகம் ஆற்று வணிகத்தை விடப் பெரியதாக வலுவாக உருவாகி வருகிறது. எனவே கடலோர நகரங்கள், துறைமுகங்கள் பொருள் கொண்டு வளர்ச்சியடைகின்றன. அங்கு உருவாகி வரும் நாடுகள் வலுவான நாடுகளாக ஆகின்றன. அவ்விதம் எழும் புதிய குலங்களை இறையருள் பெற்றவர்களாக நிலைநிறுத்தப்பட்டுவிட்ட ஷத்ரியர்களுக்கு இணையாக அங்கீகரிக்க பழைய ஷத்ரியர்களால் முடியவில்லை. நாடாள்வதற்கு அவர்களுக்கு இருந்த தெய்வீக உரிமையை அசைத்துப் பார்ப்பதாக அந்த எழுச்சி இருக்கிறது. ஆகவே அன்றைய ஷத்ரியர்கள் அவ்வாறு புதிதாக எழுந்து வரும் அரசுகளை எதிர்க்கின்றனர்.
இந்தப் பின்புலத்தில் வைத்து மகாபாரதத்தை வாசிக்கும் போது இந்தப் போர்கள் மனிதர்களுக்கிடையேயான போர் அல்ல என்பதும் நிலங்களுக்கு இடையேயான போர் என்பதும் புரிந்து கொள்ள முடியும். பழைய ஷத்ரிய அரசுகளுக்கும் எழுந்து வரும் புதிய அரசுகளுக்கும் இடையேயான போர். புதியவர்களுக்கு இடம்கொடுத்தே ஆகவேண்டும் என்ற சூழலில் குருக்ஷேத்திரப் போர் நிகழ்கிறது. அதன் பின்னரே மௌரியர்களைப் போல பழங்குடித்தன்மை கொண்ட தொன்மையான அரசுகளில் இருந்து பேரரசுகள் எழுந்து வருகின்றன.
இதை மிகத் தெளிவாக ஆசிரியர் ஜெயமோகன் வெண்முரசு தொடர்பான உரையாடல்களில் விளக்கியிருக்கிறார்.
- மேலும்
Comments