தளத்தை பற்றி
கடந்த அறுபது ஆண்டுகளில் பயணம் செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர், பயணத்திற்கான வழிகளும் இலகுவாகி உள்ளது, ஆனால் பயணம் சார்ந்து பதிவு செய்யப்படும் எழுத்துக்கள் குறைந்து வருகின்றது. இருபது ஆண்டுகளுக்கு முன் பயணம் செய்தவர்கள் மொழியின் மூலம் மட்டுமே அவர்கள் கண்ட நிலப்பரப்பையும், மனிதர்களையும், அனுபவங்களையும் நினைவில் சேகரித்துக் கொண்டனர். இன்று கைலாய யாத்திரையே முப்பது வினாடி காணொளியில் சுருங்கி விழுகின்றது.
பயண வழிகளிலும், பயணத்தை பதிவு செய்யும் முறைகளிலும் கடந்த இருபது ஆண்டுகளில் பல மாற்றம் வந்துள்ள போதிலும், பயணத்தை பதிவு செய்வதில் மொழியின் பங்கு தவிர்க்கமுடியாத ஒன்று என நாங்கள் எண்ணுகின்றோம்.
இந்த தளத்தில் இதுவரை நாங்கள் செய்த பயணத்தையும், அனுபவத்தையும் பதிவுசெய்வது முதல் இலக்கு, எங்களை போல் பலர் பயணம் செய்துள்ளனர் அவர்களையும் பயணம் சார்ந்து எழுதவைப்பது மற்றுமோர் இலக்கு. இந்த தளத்தின் தொலை நோக்கு இலக்கு ஒன்று உண்டு, அது உலகில் உள்ள அத்தனை நிலப்பரப்பை பற்றியும் தமிழில் ஒரு கட்டுரையாவது அங்கே பயணித்தவர்கள் இந்த தளத்தின் வழியே எழுதவேண்டும் என்பது . இந்த தளத்தின் அடிப்படை செயல்பாடுகளாக சிலவற்றை திட்டமிட்டுள்ளோம் அவை
1) சிறந்த பயண அனுபவங்களை தமிழில் ஆவண படுத்துதல்.
2) பிற தளங்களில் வெளியாகி கவனம் பெறாமல் போன பயண பதிவுகளை மறுபிரசுரம் செய்தல்.
3) அச்சில் இல்லாத பழைய பயண நூல்களை தொகுத்து இந்த தளத்தில் பகிர்ந்து வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.
3) ஆங்கிலத்தில் வந்த சுவாரசியமான பயண நூல்களை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுதல்.
4) அணைத்து தரப்பு பயணிகளும் பயன்பெரும் வகையில் ஊர், இடம் சார்ந்து வழிகாட்டி நூல்களை தயாரித்து இலவசமாக அளித்தல்.
5) ஊடக வெளிச்சம் பெறாத பயணிகளை பற்றியும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்தல்.
6) பயண இலக்கியத்திற்கான சரியான அமைப்பையும், நெறிமுறைகளையும் வகுத்தல்.
7) ஆங்கிலத்தில் இருப்பது போன்று சர்வதேச தரத்தில் பயண எழுத்தாளர்களை உருவாக்குதல்.
அமைந்தவர்கள் அலையத்துவங்கவும், அலைந்தவர்கள் அமைந்துகொள்ளவும் இந்த வழி என்றும் திறந்து இருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகன் பரிந்துரைத்த பயண விதிகள்
எந்தப்பயணத்திலும் திட்டமிட்டு, பயின்று, ‘கவனமாக’ இருக்கவேண்டும். அதற்குரிய சில வழிகள் உள்ளன
அ. செல்லுமிடத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுதல். இன்று எந்த இடத்தைப்பற்றியும் இணையம் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். ஓர் இடத்தின் வரலாறு, பண்பாடு, அதன் கலைப்பெறுமதி, நடைமுறை முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டாலே நாம் அதன்மேல் நம் கவனத்தை நிலைநிறுத்த ஆரம்பிக்கிறோம். கொஞ்சம் தெரிந்துகொண்டதுமே அந்த இடம் மாறிவிட்டிருப்பதைக் காணமுடியும்.
ஆ. அந்த இடத்தில் போதுமான அளவு நேரம் செலவழித்தல். பார்த்தல் வேறு, உள்வாங்குதல் வேறு. வேகமாகப் பார்க்கும் இடங்கள் நினைவில் நிற்பதில்லை. அங்கே திட்டமிட்டு குறிப்பிட்ட நேரம் செலவழிக்கவேண்டும். அந்த இடத்தின் முக்கியமான இடங்களை கண் ஊன்றி கருத்தூன்றி பார்க்கவேண்டும். புகைப்படம் எடுத்துக்கொண்டு அகன்றுவிடக்கூடாது.
இ. விழிகளால் ஊழ்கம் செய்தல். நாங்கள் செய்யும் ஒரு பயிற்சி உண்டு. ஓர் இடத்தில் அமர்ந்து விழிகளை 180 பாகைக்கு மிகமிக மெல்ல ஓட்டி ஒவ்வொரு பொருளாக கூர்ந்து நோக்கி 20 நிமிடம் அமர்ந்திருப்பது. அது ஊழ்கம்தான். அப்போது எண்ணம் எழுந்து நோக்கும் பொருட்களிலிருந்து அப்பால் கொண்டுசெல்லும். அவற்றை உந்தித்தவிர்க்கவேண்டும். மீண்டும் மீண்டும் காட்சியிலேயே கருத்தை நிறுத்தவேண்டும். இப்படி ஊழ்கத்திலிருந்த எல்லா இடங்களும் மிக ஆழமாக உள்ளே சென்றுள்ளன.
ஈ. பயணத்தின் இரவுகள் முக்கியமானவை. செல்லுமிடங்களை எண்ணியபடி படுங்கள். இரவில் அரட்டை, குடி என பொழுதுசெலவிட்டால் நோக்கியவை அகன்றுவிடும். துயில்வதற்கு முன் இறுதியாக கண்களுக்குள்ளும் சிந்தனையிலும் எஞ்சவேண்டியவை நாம் அன்று கண்ட காட்சிகள்.
- ஜெ