வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.
(முதற்கனல் 18 : அணையாச்சிதை, ஓவியம்: ஷண்முகவேல்)
ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என்ற பாணன் இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே கடல்கொண்டுவிட்ட தமிழ்நிலத்தில் தொடங்கி ஒரு நீள்நெடும்பயணம் செய்து, இறுதியில் மையநிலமான அஸ்தினபுரியை வந்தடையும் மாபாரதப் பயணம் வண்ணக்கடலின் களம்.
சூதர் விழியில் பாரதம் (வண்ணக்கடல்)
மகாபாரதம் உண்மையில் கங்கைச்சமவெளியிலேயே நிகழும் கதை. அர்ஜுனன் திசைவெல்லும் பயணங்கள் மற்றும் அஸ்வமேதத்தில் நிகழும் திசைவெற்றிக் கதைகள் என பிற அனைத்தும் சிறு குறிப்புகளே. மேலே காஷ்மீரம் முதல் முதல் குமரிமுனைவரை வெண்முரசுதான் கால்பதிக்கிறது. அப்படி வெண்முரசு மகாபாரதக்கதையை இந்தியா முழுமையையும் பேசும் காவியமாக ஆக்கியிருப்பது வெண்முரசு நிகழ்த்தியிருக்கும் சாதனைகளில் ஒன்று.
“வண்ணக்கடலின் தரிசனம் என்பது பன்மையை உணருதல் என்றே சொல்வேன். பாரதம் என்ற தேசத்தின் பன்மைத்தன்மையை, அப்பன்மைகளில் இருந்து தனக்கான தனித்துவத்தை, தத்துவத்தை ஒருவன் அடைந்து கொள்வதே அது சொல்லும் முதன்மைத் தரிசனம்.” - ஆசிரியர் ஜெயமோகன்
வெண்முரசு பாரதவர்ஷம் என்ற ஒற்றை பண்பாட்டு நிலப்பரப்பை சித்தரிக்கிறது. அதில் வாழும் வெவ்வேறு வகையான மக்களையும் அவர்களின் அரசியல்மோதல்களையும் அதற்கான காரணிகளையும் பேசுகிறது. உணவு, உருவம், உடை, வழிபாடு, சிந்தனை முறைகள் எனப் பல பட்டைகளில் இதன் வண்ணம் ஒளியடிக்கிறது. பாரதத்தில் அன்றிருந்த எல்லாச் சிந்தனை முறைகளையும் மெய்த்தேடல்களையும் வெண்முரசிலே பார்க்கமுடிகிறது.
(இளநாகன் பயண நிலங்கள் உத்தேச வரைபடம்)
கடல்கொள் தமிழ்நிலம்
ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் என்ற பாணன் இன்றுள்ள குமரிமுனைக்குத் தெற்கே கடல்கொண்டுவிட்ட தமிழ்நிலத்தில் தொடங்கி ஒரு நீள்நெடும்பயணம் செய்து, இறுதியில் மையநிலமான அஸ்தினபுரியை வந்தடையும் மாபாரதப் பயணம் வண்ணக்கடலின் களம். அப்பகுதி ஏழ்தெங்க நாடு, ஏழ்பனை நாடு முதலிய நாற்பத்தொன்பது நாடுகளைக் கொண்டு திகழ்ந்தது எனும் சித்திரத்தை இலக்கியங்களில் இருந்து அறிகிறோம். அந்நிலப்பரப்பில் குமரிமலைத் தொடரும், பற்றுளி ஆறும் இருந்தன என்பதும் ஒரு பெருங் கடல்கோளால் அவையாவும் கடலுள் ஆழ்ந்தன என்பதும் பண்டைய நூல்கள் கூறும் செய்தி.
வண்ணக்கடலில் எருமைகள் மேயும் நிலம், புல்வேய்ந்த சிறுவீடுகளின் அணிலாடும் முன்றில், பனைமரங்கள் சூழ்ந்த வெளி, வெயில் மின்னிக்கிடந்த வயல்வெளி என்று தென்னிலம் கண்ணில் விரிகிறது. அரசர் ஏழுதெங்குநாட்டு சேந்தூர்க்கிழான் தோயன்பழையன் அவையில் தொடங்குகிறது இளநாகனது பயணம். சொல்திறம் தேறா மன்னனிடம் வரிசையறியாப் பரிசிலை வாங்குவதன் கீழ்மையை மன்னன் அவையிலேயே பாடிவிட்டு நாடுநீங்குகிறான் இளநாகன். அந்தப் பகுதியிலிருந்து உப்பு விளைவித்து வடக்கே விற்கச் செல்லும் உமணர் குழுவுடன் பயணம் செய்து பன்னிருநாட்களில் வடக்கே பஃறுளி ஆற்றைக் கடந்து தென்மதுரை மூதூருக்கு பயணிக்கிறான். ஓங்கி நிற்கிறது குமரிக்கோடு, அதன் மேல் குமரியன்னையின் ஆலயம் எழுந்து நிற்க, மலையின் காலடியில் கிடக்கிறது கடல் விழுங்கிய மதுரைப் பெருநகர்.
மூதூர் மாமதுரை
இப்பகுதியில் இருந்து கடல் கொண்ட பழைய மதுரை குறித்த வரைபடம் ஒன்றை மனதில் உருவாக்கிக்கொள்ள முடிகிறது. மதுரை கடலை வேலியிட்ட அலைவாய் நகரமாக இருந்திருக்கிறது. சிப்பிகள் கலந்த கடற்பாறைகளை வைத்துக்கட்டப்பட்ட கோட்டைமதில் மேல் கடல் அலைகள் அறைந்து துமி தெறிக்க, வெயிலொளியில் மின்னுகிறது. பஃறுளி கடல் சேரும் இடத்தில் பெருந்துறைமுகமொன்று இருக்கிறது. கரும்பாறைகள் சூழ்ந்த மதுரைத்துறையை அணுக முடியாது சற்று தொலைவில் நூற்றுக்கணக்கான நாவாய்கள் நிற்கின்றன.
இன்றைய தென்னில மக்களின் குணநலன்களின் நதிமூலம் பார்ப்பது போல முன்மதியம் கைகலந்து, பின்மதியம் கள்ளருந்தி ஒன்று கூடும் மதுரை மக்கள். கூலவாணிக வீதியில் ஒரு செப்புக்காசுக்கு புட்டும் தெங்குப்பாலும், இன்னொரு செப்புக்கு கள்ளும் உண்டுவிட்டு அவன் காணும் வணிக கடைகளின் சித்திரம் விரிவாக வருகிறது. - நறுஞ்சுண்ணம், சந்தனம், அகில், துகில், உலர்மீன், ஆமையிறைச்சி, மீனெண்ணை, புன்னைக்காய் எண்ணை, ஆமணக்கெண்ணை, எள்ளெண்ணை, நெய், எருமைத்தோல், மரப்பொருட்கள், தந்தச்செதுக்குகள், கொம்புப்பிடியிட்ட குத்துவாட்கள், யவனத்தேறல், பொற்கலங்கள், அணிகள், சீனப்பட்டுகள், கலிங்கங்கள் என அனைத்தும் மதுரையில் விற்கப்படுகின்றன
அஸ்தினபுரியிலிருந்து வந்த சூதரை அங்கே சந்திக்கிறான் இளநாகன். எதிரிகள் என்று யாருமின்றிப் போர்மறந்த நகராக, மதுரை துயரறியாக் குழந்தைபோல, சிம்மமில்லா காட்டின் பெருங்களிறுபோல இருக்கிறது என்று வடபுலத்துச் சூதர்கள் பாடுகிறார்கள். போரரறியாத ஒரு நகரம் எப்படி இருந்திருக்கும் என்ற சித்திரம் - பலவிதமான உணவும், வெளிதேசங்களில் இருந்து வரும் இசைச்சூதரும், அணிப்பரத்தையருக்கென பெரும் வீதிகளும் என கள்ளில் மயங்கிய வண்டெனக் கிடக்கிறது மூதூர் மதுரை.
வெண்ணிறமான சுதைக்கூரைகள் கொண்ட மாடங்களாலான மாமதுரை ஒரு வெண்தாமரைக்குளம். அதன் நான்மாட வீதிகளில் தரைகளில் எங்கும் கற்பலகைகள் பதிக்கப்பட்டு முதலை முதுகுபோலிருக்கின்றன. அவற்றில் ஓடும் ரதச்சகடங்களும் குதிரைக்குளம்புகளும் தாளமாக ஒலிக்க மக்கள் மகிழ்ந்துபேசும் ஒலி இசையாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கொற்றவை ஆலயத்து பெருவீதியிலிருந்து கிளைபிரியும் மூங்கில் கூரையிட்ட மறவர் தெருக்களும், வேளாண்வீதிகளில் புல்கூரையிட்ட வீதிகளில் எழும் உணவின் மனமும், செந்தழலோன் கோட்டத்தருகே ஆமையோட்டுக் கூரையிட்ட மாளிகைகள் அமைந்த நகரத்தார் வீதிகளும் வெவ்வேறு தொழில் புரிவோரின் செல்வநிலையையும் வாழ்வுமுறையையும் அடிக்கோடிடுகிறது. கிழக்கே மீன் கொடி பறக்கும் செழியனின் ஏழடுக்கு மாளிகை.
“ஆம்! மதுரைமூதூர் பாரதவர்ஷமெனும் பெருங்காவியத்தின் நிறைமங்கலச் செய்யுள். அவள் வாழ்க! இமயப்பனிமுடி தாழ்த்தி பாரதவர்ஷமெனும் அன்னை குனிந்துநோக்கும் ஒண்டொடிப் பாதம். அவள் வாழ்க!” என்று சூதர் மதுரையை வாழ்த்திப் பாடுகிறார்கள்.
அந்த சூதர்களிடம் அஸ்தினபுரிக்கு வழி கேட்கிறான் இளநாகன். பாராதவர்ஷம் மலைகளாலும், ஆறுகளாலும் பிரிக்கப்பட்டு இணைக்கும் பெருவழிகள் இன்றியே இருக்கிறது என்றும் சூதர் பாடல்களே இப்பெருநிலத்தை நரம்புப் பின்னலென இணைந்திருப்பதால் சூதர்பாடல்களைப் பற்றியபடி மேலேறிச் செல்லுமாறு சொல்கிறார்கள்.
பெருந்துறைப் புகார்
காவிரியின் கிளைநதியான குடமுருட்டியின் கரைமணலில் அமர்ந்து , வடபுலத்திருந்து வந்த சூதர்கள் அஸ்தினபுரியில் சதசிருங்கத்திலிருந்து திரும்பிய பாண்டவர்கள் குறித்து சொல்கிறார்கள். இளநாகன் பயணத்தில் அந்தந்தப் பகுதியின் உணவு வகைகளும் நுட்பமான விவரணைகளோடு இடம் பெறுகின்றது. மண்ணில் குழியெடுத்து அதில் தீயில் வாட்டிய வாழையிலையை விரித்து குழித்து செந்நிறச் சம்பா அரிசியுடன் பாசிப்பயறும் கீரையும் இட்டு காய்ச்சி உப்பிட்டு இறக்கப்பட்ட கஞ்சியை உண்கிறார்கள். காவிரி மீனைப் பிடித்து சேற்றில் பொத்தி கனலில் இட்டுச் சுட்டு உரித்தெடுத்த வெள்ளை ஊனும், விளாங்காயுடன் உப்பும் இஞ்சியும் சேர்த்து சதைத்த துவையலும் இரு பூவரசம் இலைகளில் தொட்டுக்கொள்வதற்காக என்று தென்னக உணவும் உடன் வருகிறது. மையக்காவிரி நீர்ப்பெருக்கு பாயும் வளமான பகுதியை அடைகிறார்கள். சோழ வளநிலத்தின் விரிந்த வயல்வெளிகள் காற்று அலையடிக்க, பெருந்துறை புகாரின் முதல் அலைஓசை காற்றில் வருகிறது.
சோழவளநாடு நெற்களஞ்சியமாகத் திகழ்ந்ததன் காரணிகள் குறிப்புகளாக வருகின்றன. புகாருக்கு வடமேற்கே திருவிடத்தின் எல்லை வரை அலையலையாக விரிந்துகிடக்கும் நெல்வயல்வெளியிலிருந்து வரும் நெல் அனைத்தும் தஞ்சைக்கும் உறையூருக்கும் ஓடங்களில் வந்து சேர்கிறது. இவ்விரண்டு நகரங்களும் நெற்களஞ்சியங்களாகத் திகழ்கின்றன. ‘கடல் மண் வற்றினும் செஞ்சோறு வற்றா அறநிலம்’ என்று புகாரைப் பாடியபடி உள்நுழைகிறான் இளநாகன். காவிரியின் சேற்றுப்படுகை இடப்புறமும் பெருமணல் குன்றுகள் வலப்புறமும் பின்புறம் அலைக்கும் கீழைக்கடலுமாக கரைநோக்கி முகப்பு கொண்டு நின்றது புகாரின் மரத்தாலான கோட்டை. சுண்ணமும் களிமண்ணும் கலந்து பூசப்பட்ட மரச்சுவர். கோட்டைக்கும் சாலைக்கும் நடுவே ஆழ்ந்த அகழி இருக்கிறது.
தூரத்து தேசங்களின் செல்வம் வந்திறங்கும் புகார் நகர் மதுரையிலிருந்து வேறுபட்டிருக்கிறது. புகாரின் அனைத்து மாடமாளிகைகளும் மரத்தாலானவை, செவ்வரக்காலும் நீலத்தாலும் சித்திரமெழுதப்பட்டு அணிசெய்யப்பட்ட செம்பட்டும் பொன்பட்டும் திரைகளாகத் தொங்கிய மாளிகையின் பெருந்தூண்கள். கரும்பாறைகளை அடுக்கி போடப்பட்ட நகர்ச்சாலைகள், மையத் தெருவிலிருந்து பிரிந்து செல்லும் வணிகர்த்தெருக்கள்,
மன்னரின் அரண்மனைகளும் தளபதிகளின் இல்லங்களும் பெருங்குடிவணிகர் மாளிகைகளும் அமைந்த கிழக்குவீதி. பட்டினப்பாக்கத்தின் அனைத்து மாளிகைகளின் பின்முற்றங்களையும் இணைத்தபடி காவேரியின் நீர் ஒழுகும் கால்வாய்கள் வளைந்தோடுகின்றன. அவை நீர்பெருகிச்சென்று மருவூர்ப்பாக்கத்தை பட்டினப்பாக்கத்திலிருந்து பிரித்த காயலில் சென்று சேர்கின்றன.
நாளங்காடியில் அகிலும் சந்தனமும் செம்பஞ்சும் குங்கிலியமும் மிளகும் நறுஞ்சுண்ணமும் மஞ்சளும் களபமும் குங்குமமும் கலந்த மணமெழ, அணியங்காடியில் பொன்னாலும் முத்தாலும் சங்காலும் சிப்பியாலும் செய்யப்பட்ட நகைகள் பரபரப்பட்டிருக்கின்றன. கலிங்கப்பட்டும் துளுவப்பட்டும் பாண்டிக் கூறையும் துகிலங்காடியில் நிறைந்திருக்கின்றன
என்று நாளங்காடியின் சித்திரம் வருகிறது. உணவங்காடிகளில் விற்கப்படும் பல்வகை உணவுகளின் மிக விரிவான தகவல்கள் அந்த உணவின் மணத்தை நம் நாசியறிய நாவூறச் செய்கின்றன. புகாரின் புகழ் மிக்க சதுக்க பூதம் பற்றிய குறிப்பும் வருகிறது.
புகாரிலிருந்து கிளம்பிய உமணர்களோடு ‘திருவரங்கம்’ வந்து விண்ணளந்தோனைத் தொழுது காவிரி நிலம் கடந்து ‘சிற்றம்பலநகரி’ (சிதம்பரம்) சென்று முக்கண்ணன் ஆலயம் கூத்துக்குழுவினருக்கு பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு விரிசடைப் படிவருடன் இணைந்து ‘எரிதழல் இலங்கிய செம்மலைச் சிகரம்’ (திருவண்ணாமலை) சென்று தாழம்புக்காட்டில் அமைந்த சிவக்குறியைக் கண்டு வணங்கி அங்கே சில நாட்கள் தங்குகிறான். பட்டுத்துணி விற்க வந்த கலிங்க வணிகருடன் இணைந்துகொண்டு அவர்களின் ஒழிந்த சுமைவண்டியிலேறி மாநகர் காஞ்சிக்குச் சென்றடைகிறான்.
கலைதிகழ் காஞ்சி
திருவிட நாட்டின் தென்திசை எல்லையில் வாளென வளைந்தோடிய வேகவதியின் கரையில் பிறைநிலவு வடிவில் அமைந்திருக்கிறது காஞ்சி. வேகவதி வடக்கெல்லையாகவும் அதன் இருபெரும் கால்வாய்கள் பிற எல்லைகளாகவும் சூழ கனத்த வெண்ணிற அடிமரம் கொண்ட நீர்மருதுகளும் வேர்கள் புடைத்தெழுந்த கருவேங்கைகளும் செறிந்த அடர்காடே கோட்டையாக இருக்கிறது. காஞ்சியில் இருந்து வடக்கே கோதைவரை விரிந்திருக்கும் பகுதியே திருவிடம் என்று குறிப்பிடப்படுகிறது. கலையும் கல்வியும் திகழும் நகர். ஆயிரம் ஆலயங்கள் கொண்ட நகர் என்று சகஸ்ரபீட நிலையம் என்று பெயர்பெற்றிருக்கிறது. மரத்தாலான மாளிகைகள் ஒன்றோடொன்று தோள்தொட்டு நிற்க, இடுங்கிய கற்கள் பாவிய தெருக்கள்.
தென்னகத்துக்கு வணிகத்துக்கு வரும் வடநாட்டினர் தங்கள் தெய்வங்கள் அனைத்திற்கும் கோவில் எழுப்பியிருக்கின்றனர். மாநாகர்கள், முண்டர்கள், சந்தாலர்கள், கானிகர்கள் என அத்தனைத் தொல்குடியினரின் தெய்வங்களும், கடல்மல்லையில் கலமிறக்கி வரும் பீதர்களும் யவனர்களும் காப்பிரிகளும் சோனகர்களும்கூட தங்கள் தேவர்களை நிலைநாட்டியிருக்கும் நகரம்.
கணபதி, கொற்றவை, திருமகள், கலைமகள், இந்திரன், மணிவண்ணன், அனல்வண்ணன், கந்தன், சூரியன், அனுமன் என ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு வேறு வகையிலான கோவில்கள். கோவில் முகடுகளும் கோபுரங்களும் வண்டிக்கூரைவடிவில், கவிழ்ந்த கலத்தின் வடிவில், விளிம்புகள் எழுந்த கூடைவடிவில், இருபக்கமும் வளைந்த காவடிவடிவில், காவடிகள் மேல் காவடி அமைந்தவடிவில், சதுரப்பட்டைக் கூம்பு வடிவில், அறுபட்டைக் கூம்புவடிவில், எண்பட்டைக் கூம்பு வடிவில், தாமரை மொட்டுவடிவில் எனப் பல வடிவில் இருக்கின்றன. அக்காலகட்டத்தின் விமானங்களின் விரிவான கலை நேர்த்தியைக் காண்கிறான். அரைநிலவு வடிவ யவனர்களின் கோபுரமில்லாத ஆலயங்கள், கவிழ்த்த வெண்மொட்டுகளைப்போன்ற குவைமுகடுகள் கொண்ட சோனகர்களின் ஆலயங்கள், விழித்த கரிய கண்களும் தொங்கும் குருதிநாக்கும் கொண்ட காப்பிரிகளின் தெய்வங்கள், விழித்த துறுகண்களும், பிளந்த வாய்க்குள் அனலாகப் பறந்த செந்நாக்கும், சுருண்டுச் சுருண்டு மடிந்து சென்ற அரவுடலும் கொண்ட பீதர் ஆலயங்கள் என்று அனைத்து தெய்வங்களும் உறையும் தலம்.
நகர் நடுவே எட்டுமாடங்களுடன் எழுந்த மன்னனின் அரண்மனையும் பலநாட்டுக் கலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் முற்றங்களையும் காண்கிறான். அங்கும் அஸ்தினபுரியின் கதை ஆரியக் கூத்தர் ஒருவரால் பாட்டிடையிட்ட கதையாக சொல்லப்படுகிறது.
தார்க்கிகர்கள், வேதாந்திகள், சார்வாகர்கள், வைதிகர்கள், சாங்கியர்கள் என்று பல ஞான முறைகள் குறித்து அங்கு விவாதிக்கப்படுகிறது. கலை கற்ற வல்லுனர்களும், பல்வேறு ஞான முறைகளைப் பயில்வோரும் சங்கமிக்கும் இடமாக இருந்திருக்கிறது காஞ்சி. அஸ்தினபுரியின் அமைச்சர் சௌனகருக்கு தர்க்கம் கற்பித்தவரின் மகனை அங்கு சந்தித்து அவர் வாயிலாக அஸ்தினபுரி நிகழ்வுகளை மேலும் அறிகிறான் இளநாகன்.
- மேலும்
Comments