top of page

கானகமும் கயமுனியும் - 2

Updated: May 29, 2023

நாங்கள் ஊட்டி நாராயண குருகுலம் சென்று அங்கிருந்து மசினகுடி சென்று சேர்ந்தது வரை இந்த பதிவில் உள்ளது.

(குரு நித்யா பெர்ன்ஹில் குருகுலத்தில்)


"யதி என்னும் வான் உயரும் பறவை வந்து அமர்வதற்காகவே ரமணர் என்னும் பேராலமரம் "செயல் அற சும்மா இருந்தது". இன்று யதி அண்டம் எங்கும் விரிந்து பரவி கிடக்கும் ஆழ் நிலத்து வேர் "

நாங்கள் துயில் களைந்து எழுகையில் அறையின் பால்கனியை எட்டியிருந்த இளங்கதிர் மென்நகர்வுடன் எங்கள் அறையிலிருந்த ஆடியில் பிரதிபலிக்கத் தொடங்கியது , குளித்துமுடித்து வெளியே வந்ததும் தேகத்தில் வழிந்து நின்ற நீர் குமிழிகளை காற்று தொட்டதும் என்னைக் குளிர் சூழ்ந்தது, கதிரின் வெக்கையும் அங்கே உணர முடிந்தது. மலை வாஸ்தளங்களில் உச்சிவெயில் தகிக்கும், கூடவே குளிர் காற்று நாசியை தொடும், எனக்கு இந்தவகை வானிலை ஒற்றை தலைவலியையும், குமட்டல் உணர்வையும், அஜீரணத்தையும் அளிக்கும்.


அறையைவிட்டு வெளியேறும்போது மணி ஒன்பதரை ஆகி இருந்தது, காலை உணவிற்கு கலைவாணி காபி பார் என்ற ஒரு சிறிய உணவகத்திற்கு சென்றோம். இட்லி, தோசை மட்டுமே இருந்தது, சாம்பாரும், காரச்சட்டினியும் வீட்டு சுவையில் இருந்தன, தேநீரில் சக்கரை சற்று அதிகமாகவே இருந்தது. பெரும்பாலான பயணங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவம் இத்தகைய அதிக சீனியிட்ட தேநீரை பருகுவது, நான் அறிந்தவரை வெகுஜனம் தித்திப்பு சுவைக்காகவே தேயிலை பானங்களை அதிகம் அருந்துகின்றனர், உண்மையில் அதன் கசப்பு சுவையே அதை மேலும் குடிக்கத்தூண்டுவது, அத்தகைய தேவ பானம் எப்போதும் வாய்த்துவிடுவதில்லை.


ஊட்டியை பற்றிய வரலாற்றையும் எழிலையும் பற்றி கதைத்துக் கொண்டே ஊட்டி நாராயண குருகுலம் நோக்கி பயணப்பட்டோம். பொதுவாகவே ஆங்கிலேயர்கள் அவர்கள் செல்லும் புது நிலத்தைப் பற்றிய மர்மங்கள் நிறைந்த கதைகளையும், தகவல்களையும் அறிந்திருப்பார்கள், அது அவர்களின் சாகச உணர்வை தூண்டி புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதற்கு உந்துதலாய் அமையும். அவ்வாறு 1819 ஆம் ஆண்டு, ஜனவரி இரண்டாம் தேதி, அன்றய கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஜான் சல்லிவன் (John Sullivan) அதுவரை தான் அறிந்திருந்த மர்மங்கள் நிறைந்த நீல மலைத் தொடர்களை தேடிப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். இவருடன் கிழக்கிந்திய சிப்பாய்கள் சிலர் உடன் சென்றனர், கடுமையான மலைப்பாதைகளையும், வனவிலங்குகளின் ஆபத்துக்களையும் கடந்து , சில உயிரிழப்புகளுடன் இவரது குழு பயணத்தை துவங்கிய ஆறாம் நாள் மிதமான தட்வெட்பம் கொண்ட சமவெளித்தளம் ஒன்றைக் கண்டுபிடித்து அங்கேயே ஆங்கிலயேக் கொடியை ஏற்றியது.

ஜான் சல்லிவன் தன் குழுவுடன் கண்டுபிடித்த சமவெளியை இராணுவ படைகள் வந்து தங்கிக்கொள்ள ஏற்றது என மெட்ராஸ் மாகாண அரசுக்கு பரிந்துரைத்தார். 1822 இல் தோடர்களிடமிருந்து ஏக்கருக்கு ஒரு ரூபாய் அளித்து சில ஏக்கர் இடத்தை தனக்கென வாங்கி அதில் ஆங்கிலேய பாணி கல் பங்களா ஒன்றை தன் சொந்த பிரயோகத்திற்காக சல்லிவன் எடுப்பித்துக்கொண்டார். இன்று அந்த பங்களா ஊட்டி அரசு கலைக்கல்லூரி தாளாளர் தங்கும் விடுதியாய் மாற்றம் பெற்றுள்ளது. மலை ஓடைகளிருந்து வீணாய் வழிந்து செல்லும் நீரை பாசனத்திற்கும், மலை வாழ் மக்களின் நீராதார தேவைகளுக்கும் தேக்கி வைக்கும் எண்ணத்தோடு பதினான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஊட்டி ஏரியை 1823 இல் ஊட்டியின் மைய பகுதியில் வடிவமைத்தார், அதன் பணி 1825 இல் நிறைவுபெற்றது. அன்றைய ஆங்கிலேய மாநில கவர்னரிடம் சுமார் இரண்டாயிரம் ருபாய் மதிப்பீட்டில் சிகுர் சமவெளிக்கும் (இன்றைய மசினகுடி பள்ளத்தாக்கு) , ஈரோட்டுக்கும் இந்த ஏரி நீரை பயன்படுத்தும் நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை பரிந்துரைத்தார், நிதி பற்றாக்குறை காரணமாக அந்த திட்டம் அன்று கைவிடப்பட்டது. 1831 ஆம் ஆண்டு ஏரியின் கரை பெயர்வதைத் தடுக்க வில்லோ மரங்களை ஏரிக்கரையோரம் நட்டார். இன்று அவர் நட்ட மரங்களில் ஒன்று ஊட்டி ரேஸ் கோர்ஸின் முகப்பில் உள்ளது, ஆனால் அங்கிருந்த ஏரியை புரவிகளின் கால் தடங்கள் மூடி விட்டன.


(1851 இல், ஜார்ஜ் ஹட்சின்ஸ் பெல்லஸிஸ் என்ற ஓவியர் வரைந்த ஊட்டி ஏரி)


இன்று இருக்கும் ஊட்டி பேருந்து நிலையமும், ரேஸ் கோர்ஸும் ஊட்டி ஏரியின் ஒரு பகுதி, தற்போதைய நிலையில் ஊட்டி ஏரியில் ஆறு கிலோமீட்டர் சுற்றளவே எஞ்சியுள்ளது. சல்லிவனின் முயற்சியால் ஊட்டியில் தேயிலை தோட்டம் பெரிய அளவில் உருவாக்கப்பட்டது, வெள்ளையர் குடியேற்றமும், தேயிலை தோட்டப் பணியாளர்களின் குடியேற்றமும் பரவலாய் நிகழ்ந்தது. 1855 இல் சல்லிவன் மறைந்தார் அவரின் நினைவகமான பெத்தகல் பங்களா கோத்தகிரியில் உள்ள கண்ணேறு முக்கு பகுதியில் அமைந்துள்ளது, தற்போது அது நீலகிரி தொடர்பான ஆய்வக காப்பகமாகவும், அருங்காட்சியகமாகவும் செயல் படுகின்றது. சல்லிவன் மறைந்து ஐந்தாண்டுகளுக்கு பின் 1860இல் உதகை மெட்ராஸ் மாகாணத்தின் கோடைகால தலைநகராக தேர்ந்தெடுக்கபட்டு இன்று நாம் காணும் ஊட்டியாய் இரைச்சலும், புழுதியும் நிறைந்து வளர்ந்து வருகின்றது.


காலை பதினோரு மணி தாண்டியிருந்தது, பெர்ன் ஹில் பகுதியில் அமைந்துள்ள குரு நித்ய சைதன்ய யதியின் நாராயண குருகுலத்திற்கு சென்றோம், ஊட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஊட்டி ஏரியை ஒட்டிய சாலையில் சென்றோம்,கிட்டத்தட்ட நூற்று எழுபது வருடங்களுக்கு முன், ஜார்ஜ் ஹட்சின்ஸ் பெல்லஸிஸ் என்ற ஓவியர் 1851 இல் ஊட்டி ஏரியை தான் தங்கியிருந்த வராந்தாவிலிருந்து ஒரு நீர் வண்ண ஓவியம் வரைந்தார், அதுவே ஊட்டி ஏரியை பற்றி நமக்கு கிடைக்கும் பழைய ஓவியம். 1920 இல் எடுக்கப்பட்ட ஊட்டி ஏரியின் புகைப்படமும் நமக்கு கிடைக்கின்றது.


(1920 இல் எடுக்கப்பட்ட ஊட்டி ஏரியின் புகைப்படம்)


ஊட்டி சேரிங் கிராஸ்சிலிருந்து செல்லும் வழி சற்றே வளைந்தும், குறுகியும், மேடு, பள்ளங்களுடன் இருந்தது, ஆசிரமத்தின் கதவிலிருந்து ஆசிரமத்தின் முகப்பு வரை செல்லும் பாதையில் சேறும் சகதியும் மிகுதியாய் இருந்தது, எங்கள் இருசக்கர வாகனத்தின் சிறிய சக்கரங்கள் அடர்ந்த சேற்று சாலையில் சிக்கிக்கொண்டது. ஞானத்திற்கு கொண்டு செல்லும் பாதை எவ்வாறு இருக்குமோ அவ்வாறே இருந்தது நாங்கள் குருகுலத்தை அடைந்த பாதையும்.


நித்ய சைதன்ய யதி, அத்வைத ஞானி நாராயண குருவின் சீடரான நடராஜ குருவின் மாணவர். நித்ய சைதன்ய யதி ஒரு துறவி அதைத் தாண்டி அவர் ஓர் கவிஞர், ஓவியர், எழுத்தாளர். ‘நகைச்சுவை இல்லாவிட்டால் தத்துவம் உயிரிழந்துவிடும்’ என்பதை அவர் உயிர் தன் உடலைவிட்டு விலகும் தருவாய் வரை அவர் நம்பியது மட்டுமல்லாமல் அதை நடைமுறைப் படுத்தினார். எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் யதியின் மாணவர்கள், அவர்களுடன் உரையாடும் ஒவ்வொரு தருணத்திலும் யதி அவர்களிடம் விதைத்த ஞானம் புன்னகை பூப்பதை உணர்கிறேன். ஆசிரியர் ஜெயமோகனுடனான எந்த ஒரு உரையாடலையும் வெடிச்சிரிப்புடன் தான் தொடங்கவோ, முடிக்கவோ இயலும், ஒவ்வொரு கணத்திலும் ஆசிரியரின் உண்மைச் சீடனாகவே என் ஆசான் வாழ்கிறார். என் ஆசிரியரிலிருந்தே அவரின் ஆசிரியரை நான் கண்டுகொள்கின்றேன்.


(குரு நித்யா என்னும் பயணி)


நித்ய சைதன்ய யதி ஞானி ஆனபோதிலும் பெரும் கொந்தளிப்புகள் கொண்ட பயணி என்பதை அவரது பயண அனுபவங்களிலிருந்து அறிய முடிகின்றது. அவர் போர்ட்லேண்ட் பல்கலை கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நாட்களில் கிரேக்க நாடகங்களின் மேல் கொண்ட மோகத்தால் தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு அன்றே கிரீஸுக்கு சென்று ஒன்றரை வருடம் அங்கேயே தங்கி கிரேக்க நாடகங்களை வாசித்து தீர்த்து, மீண்டும் போர்ட்லேண்ட் பல்கலைக்கழகத்தில் பணியில் இணைந்தார்.


யதி காந்தியை அவரது சபர்மதி ஆசிரமத்தில் சந்தித்திருக்கிறார், அங்கே சிலகாலம் தங்கி சேவையும் செய்துள்ளார். தான் துறவறம் பூண்டுகொள்ள ரமணரை மானசீகமாய் குருவாய் ஏற்று அவரை காண திருவண்ணாமலை சென்றுள்ளார் , ரமணரையும் சந்தித்தவர் ரமணாசிரமத்திலும் சில நாட்கள் தங்கி அங்கிருந்து துறவு பெற்று தன் பயணத்தை துவங்கினார். காந்தி-ரமணர் இரு துருவங்களையும் யதி ஏற்றுக்கொண்டார். அலைதலும் அமைதலும் தான் யதியை அணுகும் வழி.


தன் இருபத்து மூன்று வயதில் ரமணரை முதல் முறையாய் சந்தித்த யதியின் பரவசத்தையும், துடிப்பையும் இன்று எண்ணிக்கொள்ளும் போது பெரும் வியப்பு ஏற்படுகின்றது, யதி என்னும் வான் உயரும் பறவை வந்து அமர்வதற்காகவே ரமணர் என்னும் பேராலமரம் "செயல் அற சும்மா இருந்தது". இன்று யதி அண்டம் எங்கும் விரிந்து பரவி கிடக்கும் ஆழ் நிலத்து வேர் , அதிலிருந்து வெவ்வேறு வடிவில் தனி மரங்களும் , தோப்புகளும் எழுந்து புவி நிறைக்கின்றன.


(உலகை கடவுசீட்டு இல்லாமல் சுற்றிய பயணி கேரி டேவிஸ், குரு நித்யாவுடன். குருவின் கையில் ஜப்பான் சாமுராய் கட்டானா. இருவரும் ஊட்டி குருகுலத்தில் உள்ள நாராயண குருவின் சிலையின் கீழ் நிற்கின்றனர் )


யதியின் குருகுலம் இன்று அடர்ந்த புற்கள் நிறைந்த ஓர் அமைதி வெளி, ஆசிரமத்தின் வலது புற முகப்பில் கண்ணாடிக்கதவு கொண்ட தங்கும் அறையை தாண்டிச்சென்றால், மலைகளையும், சிற்றூர்களையும் பார்த்தவாறு கட்டப்பட்டிருக்கும் அழகிய பச்சைநிற கண்ணாடிக்கூண்டு கட்டிடம். பச்சை கொடிகள் படர்ந்து சூந்திருக்கும் அந்த மைய்ய பிராத்தனைகூடமே யதி தியானித்த பிரம்ம வெளி, அதன் நேர் எதிரில் சமையற்கூடம் அமைந்திருக்கின்றது. சமையற்கூடத்தின் வெளியே நாங்கள் எங்கள் வாகனத்தை நிறுத்தினோம்.எங்கள் பயண சுமைகளையும் எங்கள் வாகனத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து குருகுலம் நோக்கி நடந்தோம் , ஏற்கனவே நிக்கிதா இங்கே நடந்த இலக்கிய முகாமிற்கு வந்திருந்தமையால் எனக்கு ஒவ்வொரு இடமாக சுற்றி காண்பித்து விளக்கி கொண்டுவந்தார். மைய பிரார்த்தனை கூடத்திலிருந்து நூலகம் செல்லும் வழியில் ஆன்மீக சாதனை செய்பவர்கள் தங்கிக்கொள்வதற்கென சிறிய குடில் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அந்த குடில் என் விபாசன சாதனா நாட்களை நினைவு படுத்தியது.


ஏறக்குறைய உலகின் தலை சிறந்த செயல் தீவிரம் கொண்ட மனிதர்கள் இங்குள்ள நூலகத்தில் தங்கி, வாசித்து, கல்வி கற்று, உரையாடி ஞானத்தின் திறவுகோலை தங்கள் வசம் வைத்து பிரபஞ்ச விசையை மாற்றும் வரத்தை பெற்றவர்களாக உள்ளார்கள். நூலகத்தின் உள்ளே அமர்ந்திருந்த குரு வியாசப்பிரசாத் இணையவழி வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார், அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என உள்ளே செல்லாமல் குருகுல வளாகத்தை நோக்கி நடக்க தொடங்கினோம். மாற்று உளவியலின் பிரச்சாரகர்கள் முதல், உலகை சுற்றி அலைந்த பெரும் பயணிகள் வரை வெவ்வேறு துறைசார்ந்தவர்கள் அமர்ந்து சென்ற கூடு இந்த குருகுலம் .


பசுமை நிறைந்த புல்வெளியில் நடந்து சென்றோம் சுற்றிலும் மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு புதர் மலர்கள் பூத்து நிறைந்தன . நடந்து சென்ற வழியெங்கும் மதுரம் பருகி செல்லும் தேனீக்களும், வண்ணத்துப்பூச்சிகளும், சிவப்பு நிற குடுவை வடிவ சிறுவண்டுகளும், சுழன்றலையும் தட்டான்களும் நிரம்பி இருந்தது. காற்றிலாடும் கிளைகள் பனித்துளி ததும்பும் இலைகளை ஈரம் தூவ செய்தது, கதிரொளி சற்று கதகதப்பை தன்தது, சதுப்பு செம்மண்ணில் எங்கள் கால் சிக்கி செல்லும் ஒலி எங்களை தொடர்ந்தது. சிறிய குளம் , அதனுள் நீர் பூச்சிகள் விரைந்து சென்று வட்ட வடிவ நிலையற்ற ஓவியத்தை தீட்டின, பாசி மிதக்கும் நீர்ப்பரப்பில் நடமாடும் தவளையும் இன்ன பிற உயிரினங்களும் இசைத்தன. குளத்தின் மேல் ஓர் ஆள் நடந்து செல்ல கூடிய வளைந்த பாலம் ஒன்று இருந்தது, அதில் நடக்க ஆசை இருந்தாலும் அது உடைந்துவிடும் என்ற பயமும் இருந்தது. குளத்தை தாண்டி சென்றதும் ஜப்பான் பாணியில் கட்டப்பட்டிருந்த கட்டிடம் இருந்தது, அதுவே குரு நித்ய சைதன்ய யதி உறங்கும் சமாதி. எங்கள் சப்பாத்துக்களை கழட்டிய பின் குரு உறங்கும் கருவறையுள் நுழைந்தோம், அறையில் குளிரும், பூவின் மெல்லிய மனமும் நிறைந்திருந்தன. பிரதான பீடமும், அதை சுற்றி தியானித்து அமர்வதற்கான இருக்கைகளும் இருந்தன, சமாதியின் வலதுபக்கம் நானும் , இடதுபக்கம் நிக்கிதாவும் அமர்ந்தோம். சொற்களால் விளக்கிவிட முடியாத அமைதியும், அணுக்கமும் அந்த அறையில் உணரமுடிந்தது. கண்களை மூடி தியானிக்கத் தொடங்கியதும் மூச்சின் ஒளி மட்டும் அறையில் எதிரொலித்தது, முழு நிறைவுடனும் தியானம் முடிந்து அறையிலிருந்து வெளியேறினோம்.


(குரு நித்ய சைதன்ய யதி துயிலும் நினைவு மண்டபம்)


மௌனமாய் இயற்கையுடன் உரையாடி, எதோ ஒரு பெரும் ஆற்றலுடன் ஒன்றிணைந்த உணர்வுடன் குருவின் சமாதியை சுற்றிவந்தோம். கட்டிடத்தை சுற்றிலும் சுதைச் சிற்பங்கள் நிறைந்திருந்தன, அந்த கட்டிடத்தின் வடிவமைப்பு வேறேதோ தேசத்தில் நாங்கள் இருப்பதாக உணரச் செய்தது. யதியின் சமாதியிலிருந்து சற்று தொலைவு நகர்ந்து வந்ததும், பரந்த புல்பரப்பின் ஓரத்தில், தெளிந்த வான்வெளியின் கீழ் நாராயண குருவின் சிலை நிறுவப்பட்டிருந்தது, தத்துவ எண்ணங்கள் சிந்தையில் அறைந்து கொண்டிருந்தது, அவரைக் கண்டு புன்னகைத்து வணங்கி குருகுலத்திலிருந்து விடைபெற்றோம். குருகுலத்திலிருந்து இறங்கி பிரதான சாலையை அடைந்தோம் , மர நிழல் சூழ்ந்திருந்த சாலையின் ஓரம் சென்று நான் அணிந்திருந்த வேட்டியை கழட்டி கால்சட்டையை அணிந்தேன். தொடர் பைக் பயணத்தால் என் முட்டிகள் தேய்மானம் ஆகி இருந்தன, பைக்கர்கள் பொதுவாக அவதிப்படும் ஆர்த்திட்டீஸ் மூட்டுவலியால் நானும் பாதிப்புள்ளாகி இருந்தேன், வலியைப் போக்க முட்டி உறை ஒன்றை அணியவேண்டி இருந்தது, என் உடை அலங்காரங்கள் முடிந்ததும் மசினகுடி நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம். ஊட்டி ஏரியைச்சுற்றி சென்ற மரங்கள் நிறைந்த சாலை வழியாகவே பயணித்தோம், அங்கிருந்து மசினகுடியை அடைவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகுமென கூகிள் கூறியது.


ஊட்டியிலிருந்து நான்காயிரம் அடி உயர வித்தியாசம் கொண்ட சமவெளிப் பள்ளத்தாக்கு மசினகுடி. ஊட்டியிலிருந்து மசினகுடியை இரண்டு வழிகளில் அடையாளம் ஒன்று தலை குந்தாவிலிருந்து கல்லட்டி சென்று மாவனல்லா கிராமத்தின் வழியாக மசினகுடியை அடைவது , இரண்டாவது வழி கூடலூர் சென்று தெப்பக்காடு வழியாக மசினகுடியை அடைவது, இது சுற்றுவழி ஏறக்குறைய ஊட்டியிலிருந்து மசினகுடி அடைவதற்கு என்பது கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். கல்லட்டி வழியாக சென்றால் முப்பத்தைந்து கிலோமீட்டரில் அடைந்து விடலாம், தமிழகத்தில் மிகவும் ஆபத்தான மலை பாதையில் இதுவும் ஒன்று . முப்பத்தி ஆறு கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட பாதை மிகவும் சரிவானது, தொடர் விபத்துக்கள் இந்த சாலையில் நிகழ்கின்றது அதனால் காவல் துறை இப்பாதையை சுற்றுலாப் பயணிகளின் உபயோகத்திற்கு தடைசெய்துள்ளது.


நாங்கள் தலை குந்தாவை அடைந்ததும் காவலர்கள் எங்களை கல்லட்டி வழியாக செல்ல அனுமதிக்காமல் கூடலூர் வழியாய் செல்லுமாறு திசை திருப்பினர். பின்பு பயண விவரத்தை எடுத்து சொல்லியதில், அங்கிருந்த காவலர் எங்களை எச்சரித்து, விபத்து நிகழும் பட்சத்தில் தாங்கள் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்தார், இருபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். நான் அவரின் உத்தரவுகளை பெரிதாய் பொருட்படுத்தவில்லை, அவர் அதிகம் பயமுறுத்துவதாய் நினைத்துக்கொண்டேன். ஆனால் தலை குந்தா சோதனை சாவடியைத் தாண்டியதுமே பாதையின் கடினம் கூடியது ஏற்றமும் இறக்கமும் நிறைந்த பாதை, சாலையில் எங்கள் வண்டி மாத்திரமே இருந்தது , முன் பின் வேறு ஏதும் வண்டிகள் இல்லை, கொண்டையூசி வளைவுகள் மிக கூர்மையாய் இருந்தது, சாலையின் சரிவு மிக ஆழமாய் இருந்தது, வாகனத்தின் ஆக்ஸிலேட்டர் பயன்படுத்தாமல் புவி ஈர்ப்புவிசையை வைத்தே பெரும்பாலும் வண்டி சென்றது.


(கூர்மையான வளைவுகள் கொண்ட கல்லஹாட்டி சாலை)


கல்லட்டி சோதனை சாவடியிலிருந்து பைசன் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் வழி மிகவும் ரம்யமான இயற்கை அழகு கொண்டது , கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைத் தொடர்களும், தேயிலைத் தோட்டங்களும், பசுமைக் காடுகளும் நிரம்பி இருந்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் முழு காட்சியை கான்கிரீட் கட்டிடங்கள் ஏற்படுத்தும் பார்வை மாசு இல்லாமல் காண முடிந்தது. காட்டெருமைகள் அதிகம் நிரம்பி இருப்பதாலும், ஆங்கிலேயர் காட்டெருமைகளை வேட்டையாட தேர்ந்தெடுத்திருந்த இடம் என்பதாலும் பைசன் பள்ளத்தாக்கு என்ற பெயர் வந்திருக்கலாம்.


(இயற்கை எழில் நிறைந்த பைசன் பள்ளத்தாக்கு)


கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி சமதளத்தை அடைந்ததும் சாலையின் இருபுறமும் புல்வெளியும், இலையுதிர் காடும் விரிந்திருந்தது . காட்டு முயல்களும், மயில்களும், கொம்புவைத்த புள்ளி மான்களும், காட்டு கோழிகளும், இங்கும் அங்குமாய் இருந்தன. மாவனல்லா கிராமத்தை தாண்டியதும் பவித்ராவை அழைத்தோம் அவர் மசினகுடி பேருந்து நிலையம் அருகில் எங்களுக்காகக் காத்திருப்பதாய் கூறினார், அடுத்த பத்து நிமிடத்தில் அவரைக் கண்டுவிட்டோம், தன் உதவியாளர் ஒருவருடன் வந்திருந்தார்.


நாங்கள் நால்வரும் சேர்ந்து அருகிலிருந்த ஓர் உணவகத்திற்கு சென்றோம், உணவு தரமாகவும் சிறப்பாகவும் இருந்தது. அந்த உணவகம் சுற்றுலா பயணிகளை மையமாக வைத்து கட்டப்பட்டிருந்தது, ஆகையால் நகரத்தில் கிடைக்கும் எல்லா வகையான சைவ, அசைவ உணவுகளும் அங்கே சற்று அதிக விலையில் கிடைத்தது. உணவு மேஜையில் அமர்ந்து பவித்ராவின் பணி, மசினகுடியின் மக்கள் குறித்து உரையாடத் தொடங்கினோம்.


(மசினகுடி செல்லும் சாலை)


சிகுர் பீடபூமியில் அமைந்துள்ள பஞ்சாயத்து கிராமம் மசினகுடி, பழங்குடி மக்கள் அதிகம் வாழும் நிலப்பரப்பு. இங்கு கணிசமான இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர், இவர்களின் மூதாதையர்கள் திப்பு சுல்தானின் படைகளில் பணியாற்றியிருக்க வாய்ப்புண்டு, படைகளின் இடப்பெயர்வில் இவர்களுக்கென வசிப்பிடங்கள் உருவாகி இருக்கலாம். இங்கு வாழும் பழங்குடி இன மக்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கர்நாடகத்திலிருந்து இங்கே புலம்பெயர்ந்து வந்து மாயாற்றின் கரையோரம் அவர்களுக்கான குடியிருப்புக்களை அமைந்து கொண்டனர். மசினகுடி என்ற பெயரே இங்கு வாழும் மக்களின் குலதெய்வமான மசினி அம்மன் என்ற தெய்வத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். இருளர் இன மக்கள் இங்கே அதிகம் காணபடுகின்றனர், இருளர் என்ற சொல் "இருள்" என்ற சொல்லிலிருந்து பிறந்திருக்க வாய்ப்புண்டு, இவர்கள் இரவுலாவிகளாக வனங்களில் திரிபவர்கள்.


சோழ வம்சத்து அரசர்களுக்கு இவர்கள் இரவு நேர காவலர்களாக பணிபுரிந்ததாக நம்பபப்படுகின்றது, இரவு காவலர்களாக இவர்கள் பணியேற்றுக்கொள்ளும் முன்பு ஒரு கல் தூணின் முன்பு நின்று சத்தியம் செய்வது வழக்கம், இன்றும் அந்த கல்தூண் இருளர்களின் வழிபாட்டு இடமாக கருதப்படுகின்றது. இருளர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் வாழ்கின்றனர், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளிலும் கணிசமானவர்கள் உள்ளார்கள். இன்று பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிப்பதில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது, நகர்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்த பாம்புகளை மீட்பதற்கு இவர்களே உதவுகின்றனர். மசினகுடியில் வாழும் இருளர்கள் கால்நடை வளர்ப்பை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.


(இருளர்களின் வழிபாட்டு இடமாக கருதப்படுகின்ற கல்தூண்)


பவித்ரா கால்நடை மருத்துவத்தில் தன் முதுகலை படிப்பை சென்னை வேப்பேரியில் முடித்துவிட்டு, முனைவர் பட்டத்திற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்று கொண்டிருக்கும் போது தமிழக அரசின் கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று , கலந்தாய்வின் மூலம் தனக்கு கிடைத்த பணியில் சேர்ந்து இங்கே அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். சுற்றுபுற கிராமங்களான வாழைத்தோப்பு, பொக்காபுரம், மாயாறு ஆகிய பகுதிகளுக்கும் இவரே கால்நடை மருத்துவர். இங்கே உள்ள வளர்ப்பு பறவைகளுக்கும், கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது அவற்றை நோயிலிருந்து பாதுகாப்பது இவரின் பொறுப்பு, அதனுடன் இறந்த வனவிலங்குளை பிரேத பரிசோதனை செய்வதும் இவரின் பொறுப்புகள்.


உணவுண்டு முடித்து பவித்ராவின் இல்லத்திற்கு சென்றோம், அரசு குடியிருப்பு இங்கே இல்லை அதனால் பவித்ரா அவரின் செலவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாகத் தங்குகிறார். வீட்டில் நுழைந்ததும் அவர் மசினகுடியிலிருந்து மாற்றல் ஆகிச் செல்வதற்கு முன்னதாக காடு நாவலை வாசித்து முடிக்குமாறு அவரிடம் அன்பு வேண்டுகோள் ஒன்றை வைத்தேன். சம்பிரதாயமான அறிமுகங்கள், உபசரிப்புகள் முடிந்து பேச்சு கச்சேரி தொடங்கியது, எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளை பற்றி உரையாடத் தொடங்கி, வெண்முரசு மாந்தர்கள் மேற்கொண்ட பயணங்கள், சைவ சித்தாந்த தத்துவம், நான் கண்ட நிலப்பரப்பு, என் பயணக்கதைகள் என உரையாடல் விரிந்து விரிந்து சென்றது.


எனக்கு பவித்ராவின் பணி குறித்தும் அவரின் ஆர்வங்கள் குறித்தும் அறிந்து கொள்ள ஆர்வம் இருந்தமையால் அதை ஒட்டி உரையாடலை நகர்த்தினேன்.சைவ சித்தாந்தத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் திருக்கைலாய பரம்பரையில் வந்த குருவிடம் சமய தீக்ஷை பெற்றுள்ளார். பண்ணிசை பயில்வதற்கும், இந்திய தத்துவங்களை பயில்வதற்கும் தினசரி தன் நேரத்தை திட்டமிட்டுள்ளார். தன் ஆசிரியர் மருத்துவர் தங்க பாண்டியனின் மூலம் யானை டாக்டர் கதையை அறிந்தவர், நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு வெண்முரசில் வண்ணகடல் வரை வாசித்துள்ளார். தன் குடும்பச்சூழல், நண்பர் வட்டம், பள்ளி கல்லூரி நாட்கள், சைவ தலங்களுக்கு தான் சென்ற பயணங்கள் என தன் வாழ்வனுபவங்களை எங்களுடன் பகிர்ந்தார். உரையாடல் முடித்து சற்று ஓய்வு எடுக்கலாம் என முடிவு செய்தோம்.


(மேலும்)


Recent Posts

See All

Comentarios


bottom of page