top of page

கானகமும் கயமுனியும் - 4

Updated: May 30, 2023

நாங்கள் தெப்பக்காடு யானைகள் முகாம் சென்றதும், யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய தகவல்களும் இந்த பதிவில் உள்ளது .

(கும்கி யானையை வைத்து காட்டு யானையை பிடிக்கும் காட்சி - நன்றி :Kalyan Varma)

"யானைகளுடன் தொடர்ந்து பணியாற்றுவதும், கடைசியாக ஒரு யானையால் கொல்லப்பட வேண்டும் என்பதும் எனது விருப்பம். அது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் நான் இறப்பதை விட மிகவும் செலவு குறைந்தது "

அன்று மாலை யானைகள் குளிப்பதைக் காண மாயாறு சென்றோம், மனிதர்களைப் போலவே நீரில் இறங்கியதும் அதிலிருந்து வெளி வர மனமில்லாமல் குதுகலித்தன, பாகனின் அதட்டலுக்குப் பின் அந்த பேருருவம் நீரிலிருந்து எழுந்து வந்தது, நீரில் மூழ்கிய கரும்பாறை ஒன்று நீரை உதறி தன்னிச்சையாய் மேல் எழும்புவதை தரிசிப்பது போல் இருந்தது. ஒவ்வொரு கொம்பனின் கால்களிலும் முப்பது அடி நீல இரும்பு சங்கிலி கட்டப்பட்டிருந்தது, அளப்பறியா காட்டை சிறு தாம்பு வைத்து காட்டியது போல் இருந்தது, அந்த சிறுத்தாம்பு தன்னை அடக்கிவிடும் என்பது அந்த யானைக்கு நம்பவைக்கப்பட்டிருந்தது. அது அந்த சங்கிலியை புழுதி கிளப்பி இழுத்து செல்லும் ஒலி நிலத்தை அதிரச் செய்தது , தன் விலங்கை தானே சுமக்கும் விலங்கு என எண்ணிக்கொண்டேன்.


அந்த வயது முதிர்ந்த ஆண் யானையின் பின் நடந்தோம், நிக்கிதா கம்பராமாயணத்தில் ராமன் நடப்பதை யானை நடக்கும் பின் அழகுடன் ஒப்பிட்டு கம்பர் எழுதியிருப்பதை நினைவு கூர்ந்தாள், கம்பனின் ரசனையை எண்ணி இருவரும் சிரித்துக் கொண்டோம்.


நாங்கள் முகாமைச்சுற்றி நடந்து வந்தபோது சீசர் என்ற யானையின் நினைவாக ஒரு நினைவு தூண் இருந்ததை கவனித்தோம். முதல் முறையாக யானைக்கென ஒரு சமாதி இருப்பதை அங்கே தான் கண்டேன், சீசர் 1900 பிறந்து 1969 வரை வாழ்ந்துள்ளான். பவித்ராவிடம் யானையின் ஆயுட்காலம் பற்றி விசாரித்த பொழுது அது மனிதனின் ஆயுட்காலம் போன்றதே, நூறு வயதுவரை கூட யானைகள் வாழும், அதன் சராசரி ஆயுட்காலம் அறுபதிலிருந்து எழுபது வயது வரை வைத்துக்கொள்ளலாம் என கூறினார். உலகின் மிக வயதுடைய யானை நூற்று ஐந்து வயதான நந்தா, மத்திய பிரதேச பண்ணா புலிகள் காப்பகத்தில் வாழ்பவன் என பின்னர் இணையத்தில் அறிந்துகொண்டேன்.


(சீசரின் நினைவு தூண்)


அன்று மாலை மாயாற்றில் குளித்துவிட்டு உணவுண்ண நடந்து வந்த மக்னா யானை ஒன்றை பார்த்தோம், மோழ யானை என்று காடுவாழ் மக்களால் அழைக்கப்படும் இந்தவகை யானைகளுக்கு மரபணு குறைபாட்டால் தந்தம் வளர்வதில்லை. இந்தவகை யானைகளை பிற பெண் மற்றும் ஆண் யானைகள் தங்கள் கூட்டங்களிலிருந்து விலக்கி வைக்கின்றன, இதனால் இவ்வகை யானைகள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இயல்பை வளர்த்துக்கொள்ளும். பல சமயங்களில் எதிர்ப்படும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் தாக்கும் குணம் கொண்டவையாக இருக்கும். தந்தமுள்ள ஆண் யானையை விட, மக்னா யானையின் தலைப்பகுதியும், நெற்றிப் பகுதியும் நன்கு பெரிதாக இருக்கும்.சராசரி ஆண் யானைகளை விட பலமுள்ளவை மக்னா யானைகள்.


நாங்கள் பார்த்த மக்னா யானை இரண்டு பாகன்களுடன் வந்தான், அதில் ஒரு பாகன் கை ஓங்கியதை கண்டு அலறி நடுங்கினான், எங்கள் அருகிலிருந்த பாகன் ஒருவர் "சார் அவன் பெயர் மூர்த்தி, இருபத்திரண்டு பேரை இதுவரைக்கும் மிதிச்சி கொன்னுருக்கான், ஆனா இப்போ பாத்திங்களா சார் நாங்க கை ஓங்குனாலே அலறுறான், வெளியில இருந்து பாக்குற நீங்களாம் ஐயோ பாவம் இவங்கதான் யானையை கொடுமை படுத்துறாங்கனு நினைப்பீங்க, இவன் நடிக்குறான் சார்" என்றார். நான் அந்த யானையை நினைத்து நினைத்து சிரிப்பதுண்டு, யானைகள் நடமாடும் பிரம்மம் அது குழந்தை அசுரன், அரசன், சேவகன், காவலன் என பல உருமாற்றங்களை அடைந்துகொண்டே இருக்கின்றது, யானையை அருகிலிருந்து அதிகம் கண்டவர்களுக்கு அது என்ன ரூபத்தில் உள்ளது என்பதை யூகிக்க முடியும் என எண்ணிக்கொண்டேன்.


உலகளவில் முன்னோடி யானை முகாமாக முழுவீச்சுடன் தெப்பக்காடு இன்று செயல்படுவதற்கு, "யானை டாக்டர்" என நன்கு அறியப்பட்ட கால்நடை மருத்துவர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்திக்கு அதிக பங்குண்டு. மருந்துகள் நிறைந்த ஊசிகளை யானையின் மீது செலுத்தி, பெரிய பாதிப்புகளுக்கு அவைகளை உள்ளாகாமல் அவற்றை பிடிக்கும் யுக்தியை இந்திய வனத்துறையில் அறிமுகபடுத்திய முன்னோடியும் அவரே. யானைகளை தன் குடும்ப அங்கமாகவே டாக்டர் கே எண்ணினார் அவையும் அவரை தங்கள் குழுவில் ஒருவர் என்றே எண்ணியிருக்கவேண்டும். அவர் முதலில் பணியாற்றிய டாப்ஸ்லிப்பில் நான்கு வருடங்களில் ஒரு மாதத்திற்கு குறைந்தது இருபது முறையேனும் ஆனைமலையின் வராகலியார் யானை முகாமில் நோய்வாய்ப்பட்ட யானைகளைப் பார்க்க இருபத்திநான்கு கி.மீ அவர் மலையேறினார்.


யானைகளுக்கு தெளிவான பார்வைத்திறன் இல்லாவிட்டாலும், அவற்றின் வாசனை மற்றும் செவிப்புலன் உணர்வு மிகவும் கூர்மையாக இருக்கும், மேலும் அவை மனிதர்களை வாசனை மற்றும் குரலால் வேறுபடுத்தும் திறன் கொண்டவை என அவர் ஆழமாய் நம்பினார். 1957-1961 ஆகிய காலகட்டத்தில் வரகலியார் யானை முகாமில் உள்ள கும்கியானை சரோஜாவின் மேல் அளவுகடந்த அன்பினை செலுத்தி டாக்டர் கே பராமரித்துக் கொண்டார், இந்தகாலகட்டத்தில் பணிச்சுமையால் சரோஜா எந்த கன்றையும் ஈனவில்லை.1966 ஆம் ஆண்டு வனயுரியல் மருத்துவராய் அங்கே மீண்டும் சென்ற நேரத்தில், ஆறு ஆண்டுகள் கழித்து சரோஜா தனது முதல் குட்டியை ஈன்றெடுத்திருந்தது. வழக்கமாக குட்டியை ஈன்ற தாய் யானை மிகவும் ஆக்ரோஷமாக குட்டியை பாதுகாக்கும், ஆனால் இவரை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியில் வேகமாக அருகே வந்து தனது தும்பிக்கையால் அவர் கையை பிடித்து கூட்டிச்சென்று தனது குட்டியின் அழகை சரோஜா ரசிக்கச்செய்தது. மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே உள்ள அன்பின் வெளிப்பாட்டினை பற்றி கேட்பவர்களிடம் ஒவ்வொரு முறையும் தன் உள்ளம் மகிழ இந்நிகழ்வினை டாக்டர் கே பகிர்ந்து கொண்டுள்ளார்.


( தெப்பக்காட்டில் யானை ஒன்றை பரிசோதிக்கும் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி )


டாக்டர் கே தனது வாழ்க்கையில் அதிகபட்ச யானை பிரேத பரிசோதனைகளை நடத்தி கின்னஸ் சாதனைக்கு உரித்தானர். அவர் ஐநூறுக்கும் மேற்பட்ட யானை பிரேத பரிசோதனைகளை நடத்தியிருக்க வேண்டும், இதில் காட்டு யானைகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளும் அடங்கும். ஒரு விரிவான யானை பிரேதப் பரிசோதனைக்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் ஆறு மணி நேரம் தேவைப்படும், யானையின் மரணத்திற்கு காரணமான பல்வேறு நோய்களையும் காரணங்களையும் புரிந்துகொள்ள இந்த பிரேத பரிசோதனைகளை அவசியம் என டாக்டர் கே தீர்க்கமாய் நம்பினார். இன்று டாக்டர் கே யானைப் பாதுகாப்பில் தனது செயல்பாடுகளுக்காக அறியப்படுகிறார்.


காட்டு யானைகளை பாதுகாப்பான முறையில் ரசாயன ஊசிகளை பயன்படுத்தி பிடிக்கும் வழிமுறையை பரிந்துரைத்தார்.தமிழ்நாடு முழுவதும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தெப்பக்காடு யானைகள் முகாம் சிறப்பாக இயங்க பெரும் பங்காற்றினார். தற்போது வெற்றிகரமாக பின்பற்றப்படும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை அறிமுகப்படுத்த தமிழக அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.


"யானைகளுடன் தொடர்ந்து பணியாற்றுவதும், கடைசியாக ஒரு யானையால் கொல்லப்பட வேண்டும் என்பதும் எனது விருப்பம். நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் நான் இறப்பதை விட மிகவும் செலவு குறைந்தது" என வேடிக்கையாக டாக்டர் கே கூறியுள்ளதை அவர் மகன் ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தது நினைவுக்கு வந்தது.


(டாக்டர் "கே" நினைவு பரிசு ஒன்றை பெற்று கொண்ட பொழுது , நன்றி :ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி )


தேவதுந்துபிகள் முழங்கின! வான்முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானைமுக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது - யானை டாக்டர் கதையிலிருந்து.


தேவதுந்துபிகள் முழங்கின! வான்முரசுகள் இயம்பின! கருமேகம் திரண்ட விண்ணெங்கும் யானைமுக வானவர்களின் புன்னகை நிறைந்திருந்தது - யானை டாக்டர் கதையிலிருந்து.


யானைகளைப் பற்றி "சூடாமணி நிகண்டு" என்ற சங்க இலக்கிய நூலும், மதங்கலீலை என்னும் சமஸ்கிருத நூலும் மிக விரிவாக பேசுகின்றன. யானையை பிடிக்கும் முறைகளாக பயம்பு, வாரிப்பு, கெட்பி, அவபாதம், வாரி பந்தம், வாசப் பந்தம், அனுக பந்தம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.


இதில் பயம்பு முறை பரவலாக அறியப்பட்ட ஒன்று, யானையின் வழித்தடத்தில் பெரியகுழி ஒன்றை தோண்டி அதை மூங்கில் படலை பரப்பி மூடி , அதன் மேல் யானையின் விருப்ப உணவுகளை சில நாட்கள் வளரச்செய்து, மண்னையும், காய்ந்த சருகுகளையும் மூங்கில் படல் மேல் நிரப்பி நிலம் போல் அதை தோன்றச்செய்து யானைக்கு பொறி வைத்து அதை அந்த குழியில் விழச்செய்வது.


வாரிப்பு என்னும் யானையை பிடிக்கும் முறை பற்றி நச்சினார்கினியார் விரிவாக பதிவு செய்துள்ளார், அடர்ந்த மரங்கள் நிறைந்த வனத்தில் வாழும் யானைகளை அடைப்பு நிறைந்த பகுதியில் வைத்து பழகிய யானைகளை வைத்து பிடிபடவேண்டிய யானைகளின் காலில் பாகன்கள் கனத்த கயிறுகொண்டு சுருக்கிட்டு, பல யானைகளை ஒரு சேர பிடிப்பது இந்த முறை.பத்துப்பாட்டான மலைப்பாடுகடாமின் தலைவன் நன்னன் முதல் திப்புசுல்தான் வரை இந்த முறையில் தான் யானைகளை பிடித்துள்ளனர்.


வாரிப்பு முறையை போன்றதே அவபதாம் என்னும் முறையும், இதில் பழகிய யானை கொண்டு காட்டில் திரியும் யானையை துரத்தி சென்று அதன் காலில் சுருக்கிட்டு பிடிப்பதாகும், இந்த முறையை ஆங்கிலேயர் பயன்படுத்தி யானைகளை பிடித்துள்ளதை "Rifle and the Hound in Ceylon" என்ற புத்தகத்தில் சாமுவேல் பேக்கர் என்பவர் விரிவாய் பதிவு செய்துள்ளார்.


(வாரிப்பு முறை, Rifle and the hound in ceylon புத்தகத்திலிருந்து)


இப்படி எந்த வகை பிடிக்கும் முறையிலும் சிக்காதவன் தான் மக்னா மூர்த்தி, அவன் பிடிபட்டு, தெப்பக்காடு வந்தது சுவராசியமான ஒரு கதை. 1998 ஆம் ஆண்டு மூர்த்தி அவனது முப்பத்தி ஐந்து வயதிற்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் இருபத்தி இரண்டு மனிதர்களை கொன்று குவித்தான். மேலும் மனித உயிர்களை இழக்காமல் இருப்பதற்காக இவனை கண்டதும் சுட கேரளா அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த யானையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களும் நாட்டு துப்பாக்கிகளை கொண்டு இவனை சுட பல முறை முயன்றுள்ளனர். கூடலூர் அருகே இவனை கும்கி யானைகள் கொண்டு மடக்கி, மயக்க மருந்து ஊசிகளை துப்பாக்கிகளை கொண்டு செலுத்தி பிடிக்க டாக்டர் "கே" தமிழக வனத்துறைக்கு உதவினார்.


சுமார் பத்து அடி உயரமும், நான்கரை டன் எடையும் கொண்ட, யார்க்கும் அடங்காமல் சுற்றி திரிந்த அவனை தன் சாதுரியத்தால் பிடித்த டாக்டர் "கே" அவர்களின் பெயராலே மூர்த்தி என அழைக்கப்படுகிறான்.


(மூர்த்தியும், அவனது பாகனும் மாயாற்றில் நிற்கும் தருணம், நன்றி : Senthil Kumaran )


உணவுண்ண நேரம் வந்ததும் எல்லா யானைகளும் அவர் அவர்களின் இடங்களுக்கு பாகன்களால் அழைத்துவரப்பட்டு நிற்க வைக்கப்பட்டன, ஏறக்குறைய ஒரே நேரத்தில் எல்லா யானைகளுக்கும் பாகர்கள் தாங்கள் தயாரித்த உணவை ஊட்ட தொடங்கினர். அந்த காட்சி ஒருவகை சிலிர்ப்பை அளித்தது, பழங்காலத்தில் போருக்கு செல்லும் யானைபி படைகளுக்கும் இவ்வாறு தான் பயிற்சியும், உணவும் அளிக்கப்பட்டிருக்கும் என எண்ணிக்கொண்டேன். யானை வாயிலிருந்து சிதறிய உணவையும், யானைகள் சாப்பிடாமல் மிச்சம் வைத்த உணவையும் அருகிலிருந்த பன்றிகளும், அணில்களும், மான்களும் உண்டன, மயில்களும், குருவிகளும் அங்கே சுற்றி வந்தன . அந்த காட்டின் உயிரியக்கம் சில கணங்கள் எங்கள் கண் முன் விரிந்தது.


யானைகள் உண்டு முடித்ததும் பாகன்கள் அவற்றை அவற்றின் ஓய்விடங்களுக்கு அழைத்து சென்றனர், நாங்கள் அங்கிருந்த அலுவலகத்திற்கு சென்றோம். அங்கே பதப்படுத்தப்பட்ட பல மாதிரி உயிரினங்களை கண்ணாடி கோப்பையில் ரசாயன திரவத்தில் மூழ்க வைத்திருந்தனர், கையடக்க யானை முதல் மலைப்பாம்பு குட்டி வரை அங்கே பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. யானை டாக்டரின் தகவல்கள் அடங்கிய புகைப்படம் ஒன்று அங்கே மாட்டப்பட்டிருந்தது, அதன் அருகில் யானையின் பல் ஒன்று இருந்தது. யானையின் பல்லை ஒருமுறை கைகளால் தூக்கி காட்டின் கனத்தை அறிந்தேன். காட்டின் அரசன், ஓர் இலக்கிய வாசகன், வரலாற்று நாயகன் இவர்கள் யாவரும் சந்தித்த கையடக்க காடு அந்த ஒற்றை பல்.


(யானை பல்லுடன் நான்)


- முற்றும் -


Recent Posts

See All

Comentarios


bottom of page