top of page
Writer's pictureஇளம்பரிதி

கானகமும் கயமுனியும் - 1

Updated: May 29, 2023

கோவையிலிருந்து கிளம்பி மசினகுடி வரை சிறு ஸ்க்குடரில் நானும் என் மனைவி நிக்கிதாவும் செய்த பயணத்தின் கதை இது. நான் சென்னையிலிருந்து கிளம்பி, கோவை சென்று அங்கிருந்து, ஊட்டியை அடைந்தது வரை இந்த பதிவில் உள்ளது.


(1800 இல் வரையப்பட்ட குன்னூர் பற்றிய ஓவியம்)

"மேற்கு தொடர்ச்சிமலை முதிர்ந்த அன்னையின் திடம் கொண்டவை, ஓங்கி வளர்ந்த பெருங்களிறு; இமையமோ தவழ்ந்து வளரும் பெங்குயின் போல, அடிக்கடி சறுக்கி விழும் நடை பயிலும் மழலை"

பருவமழை சென்னையை நெருங்கும் ஓர் செப்டம்பர் மாதத்தில், காலை கதிர் எழுகைக்கு முன் நான்கு மணிக்குத் துயில் விலக்கி, ஐந்து முப்பது மணிக்கு ஆட்டோவில் எழும்பூர் ரயில் நிலையம் சென்று சேர்ந்தேன். குளிர் குறைவாகவே இருந்தது , காலை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுவது என்பது ஓர் தியான செயல்பாடு என்று தோன்றுகிறது. புலரிக்கு முன் புவியில் நிரம்பிய புதுதென்றலை நாசி நுகர்ந்ததும், மூலையில் மென் தூரிகை வைத்து தீண்டும் ஓர் புத்துணர்வு அரும்பும்.


நடைமேடையில் ரயில் எனக்காகக் காத்திருந்தது, எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெட்டியை அடைவதற்கு நெடுந்தூரம் நடக்கவேண்டி இருந்தது. நம் ரயில்நிலையங்கள் திசைகள் கடந்து பல பண்பாட்டு இணையும் ஓர் முனை என நான் எண்ணுவதுண்டு. குழந்தையை நெஞ்சோடு அணை த்துக்கொள்ளும் தகப்பன்கள், அடம்பிடிக்கும் குழந்தைகளை முறைத்தே கண்டிக்கும் தாய்கள், நம்பிக்கைகளைச் சுமந்துகொண்டு புது வாய்ப்புகளுக்காகப் பயணிக்கும் யுவன், யுவதிகள். பட்டினி கிடந்த முகங்கள், விடியலுக்கு முன்னமே எழுந்து ஒப்பனை செய்து ரயில் முழுவதும் தங்கள் வாசனையை பரப்பிச் செல்லும் குமரிகள் இவர்கள் யாவரும் ஒரே திசைநோக்கி, வெவ்வேறு இலக்குகளுடன் சந்தித்துச் சிதறி செல்லும் ஓர் அணு ஆட்டம் தான் ரயில் நிலையங்கள்.


திருமணத்திற்குப் பின்பு முதல்முறையாக நிக்கிதாவை பிரிந்து பதினைந்து நாட்கள் தனிமையுடன் பொழுதுகளைக் கடக்க வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது. பதினைந்து நாட்களும் ஒவ்வொரு வகையான அலைக்கழிப்பும் கொந்தளிப்பும் மனம் நிறைந்து இருந்தது, ஏன் என நானே பல முறை எண்ணிக்கொண்டேன்.திருமணத்திற்கு முன் என் மனைவி பிறிதொருவரின் மகள், வேறு ஒரு வீட்டில் வசித்த உடல், தன் சுற்றத்திற்காக உணர்வுகளைப் பகிர்ந்தளிக்கும் ஓர் மேன்மை, அவளது கடமைகளும் உணர்வுகளும் பொறுப்புகளும் வேறு ஒரு தளத்திலிருந்து இயங்கிவந்தது. இன்று என் மனைவி என்னை நோக்கியே இயங்கும் ஓர் எண்ணம் , அவள் என்னை நோக்கி இயங்குவதை விட , அவரை என் இயக்கு விசை ஈர்ப்பதும், எதிர்பார்ப்பதுமே அதிகம். பிரிவு மனதையும் சிந்தனையும் கன மாக்குவதை விட, சிந்தனையின் பெருக்கை கட்டற்றதாக்குகின்றது, எதைச் சிந்திக்கவேண்டும், எதைத் தவிர்க்கவேண்டும் என்னும் தெளிவே அற்ற நிலையைப் பிரிவு அளிக்கின்றது, நான் அறிந்த நண்பர்கள் பல வகையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரிவுகள் அளிக்கும் குழப்பமான மனநிலையிருந்து வெளிவருவதற்கு சிக்கலான உடனடி தீர்வுகளை முயற்சிப்பவர்கள் அது மேலும் வெறுமையே அளிக்கின்றது.


நிக்கிதா தன் அம்மா, தங்கையுடன் தன் தந்தையின் நினைவுகளை மீட்டிக்கொள்ள சென்ற பயணம் இது என்று அறிந்தும், அவளின் பிரிவு எதோ ஓர் வெறுமையையும் இழப்பையும் எனக்கு அளித்தது. இந்த முடிவிலா ஆடலின் முதல் துளியை மெல்லப் பருகிக்கொண்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன், கொஞ்சம் சிந்தித்ததும் அறிந்துகொண்டேன் நான் இழந்துகொண்டிருப்பது என் இருப்பை, நான் இருக்கின்றேன் என்ற உணர்வை எனக்கு அளிப்பதே என் மனைவியின் நேசமும் அருகணைவும் தான் . அவளால் புகழப்படவும், இகழப்படவுமே நான் செயலாற்றிக் கொண்டிருந்தேன். துயில் களைந்து எழுந்து கொள்கையில் அவளின் தேகம் என் அருகில் இல்லை என்பதை எப்போதே அறிந்துகொண்ட என் மனம் அதை நம்ப நேரம் எடுத்து எதிர்பார்ப்பு உடைந்து மேலும் மேலும் தனிமையில் செல்ல ஆரம்பிக்கும். தனிமையை என்னை போல் ரசிக்க தெரிந்தவர் யாரும் இல்லை என்ற ஆணவம் சிறிது சிறிதாய் கரைந்து அதில் நான் ஒழுகிச் செல்வதை காண்பதே என் அன்றாடம் என்றாகியது. கரைந்தழிந்த நான் மீண்டும் வேறொரு நானாய் மாற விரைந்து சென்று அவளுடன் அமைவதே வழி என்பதை அறிந்துகொண்டே அவளைக் காண உடனே முடிவுசெய்து என் பயணத்தைத் துவங்கினேன் .


ரயிலில் ஏறியதும் வெண்முரசின் நாலாவது நாவலான "நீலம்" வாசிக்கத் துவங்கிவிட்டேன் , பெயரழிதல் நிலையைத் தாண்டி வந்துகொண்டிருந்தேன். மதுராவில் வசித்துக்கொண்டு விருந்தாவனத்தை எண்ணிக் கொண்டிருக்கும் ராதை போலானேன்.


சேலம் தாண்டுவதற்குள் மூன்றுமுறை இருக்கை மாற்ற வேண்டியிருந்தது , ஈரோட்டிலிருந்து ரயில் இருக்கை காலியாகத் தொடங்கியதும் காற்றின் வேகமும் மனமும் மாறியது. இதோ என் அருகில் வந்துவிட்டாயா நண்பா என நிக்கிதாவின் ஏங்கும் குரல் என் செவி நிறைத்தது. எப்போ வருவே , எங்க இருக்க இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் ஆகிய சொற்களே ரயிலை வேகமாய் இயக்குவதை மனம் அறிந்தது. சற்றுகூட துயில் கொள்ளவில்லை , கண் இமைக்குள் மஞ்சள் நிற பெயர்ப்பலகைகள் மாறிக்கொண்டிருந்து. கண்ணைச் சிமிட்டி மீள்வதற்குள் கோவை வடக்கு வந்தது. இதோ என் விருந்தாவனம், என் கள்வனின் உறைவிடம்.


பைபிள் போல கைகளில் நீலத்தைப் பிடித்துக்கொண்டு ரயில் விட்டிறங்கியதும் , எனக்கான வாகனத்தை அமைத்துக்கொண்டு என் இல்லம் நுழைந்தேன், அங்கே அவள் இல்லை அவளின் இனிய கானம் என் செவி நிறைத்தது , தொலைபேசியில் நண்பியுடன் அளாவிக் கொண்டிருந்தாள் என் குலமகள், அடியே உன் புருஷனப் பாரு எத்தனை நாள் ஆச்சு என்று வாயிலிருந்து சொற்கள் உதிர்வதற்குள் , அவளின் கண்கள் என்னை ஆட்கொண்டது. பள்ளி முடிந்து தந்தையை நோக்கி வெளியே ஓடி வரும் மகளின் பூரிப்பும் ஏக்கமும் அந்த கண்களில் நிறைந்திருந்தது, நண்பனைக் காணும் கண்கள். என் தோளில் அவள் விரல்கள் தொட்டதும் என் இருப்பை மீண்டும் உணர்ந்துகொண்டேன். அன்பின் விழி சந்திக்கும் சிறுநொடி போதும் போர்க்களம் சிதறுண்டு பாழ்நிலம் புது வெளியாய் பூத்து நிறைவதற்கு.


சாப்பிட்டு கை காய்வதற்குள் மசினகுடி போலாமா , எனக்கு தெரிஞ்சவங்க அங்க அரசு கால்நடை மருத்துவர், பெயர் பவித்ரா என்று நிக்கிதா தொடங்கினாள். பெரும்பாலும் எங்கள் பயணங்கள் அவளின் ஆசையினாலும் என்னுடைய திட்டமிடலாலும் ஊக்கம்பெறும், இப்பயணமும் அவ்வாறே ஆனால் சிறு தயக்கம் இருந்தது, நான்கு மணிநேரம் கியர் அற்ற சிறிய இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும், கோவையின் மேகம் கொஞ்சம் மோகம் கொண்டால் உடனே மண் சிலிர்த்துவிடும், மழை பூத்துவிடும், கோவை குளிரே விரல் நடுங்க வைக்கும் , ஊட்டி குளிரை நினைத்ததுமே காது குளிரில் அடைத்துக்கொண்ட உணர்வு, ஊட்டியிலிருந்து மேலும் இரண்டு மணிநேரம் கானகத்தில் பயணம் , இப்படிப் பல காரணங்களால் பயண கோரிக்கையை மாற்றி அமைக்க முயன்றேன். பயணம் என்ற உணர்வே எல்லா எதிர்மறை எண்ணங்களை உடைத்து , வா போவோம் என்ற உத்வேகத்தைத் தந்தது. மிஷன் இம்பாசிபில் கதாநாயகன் போல தேவையானவற்றை எடுத்து குவித்து ஒரு மூட்டை கட்டி , எந்த தினத்திற்கு என்ன உடை என்பதை மனக்கணக்கில் வரைந்துவிட்டேன். என்னிடம் பேசிக்கொண்டே நிக்கிதாவும் கிளம்பிவிட்டாள்.


குளிருக்கான கனத்த ஆடைகளை அணிந்துகொண்டு , வண்டியின் இருக்கையைத் தூக்கிச் சேமிப்பு தளத்தில் மழையில் நினையாமல் இருக்க வேண்டிய பொருட்களை நிரப்பி, கால்கள் வைக்கும் இடத்தில் பயண பொதியை வைத்துவிட்டு ஹெல்மெட் அணிந்து வெளியே வந்தால் வெயில் சுடர்ந்து வெள்ளி மின்னியது . நிச்சயம் மழைவரும் , இல்லை குளிர் அடிக்கும், அப்படியும் இல்லையா தூசி படாது என்றெல்லாம் எனக்கு நானே காரணத்தைச் சொல்லி குளிராடைகளைக் கழற்றி வைக்க மறுத்துவிட்டேன்.


வீட்டிலிருந்தவர்களிடமிருந்து விடைபெற்று , மதியம் சாப்பிட்ட சீரகச் சம்பா சோற்றின் வாசம் வீசும் ஏப்பத்துடன் வாகனத்தைத் துவக்கினோம். முதலில் நிக்கிதாவிற்கு ஒரு ஹெல்மெட் வாங்கிவிட்டு, அவளுடன் எப்போதும் பிணைந்து இருக்கும் ஜலதோசத்திற்கு என் தம்பி பரிந்துரைத்த சித்த மருந்துகளை வாங்கிக்கொண்டு மேட்டுப்பாளையம் சாலையில் பயணித்தோம்.


(பழைய கோவை-மேட்டுப்பாளையம் சாலை, இன்று சாலையில் இந்த மரங்கள் இல்லை)


மேட்டுப்பாளையம் சந்திப்பு தாண்டும் வரை சாலை குறுகலாகவும், புழுதியாகவும், வாகன நெரிசலுடனும் இருந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி நோக்கி செல்லும் இடதுபுற சாலையை அடைந்ததும் உடலும் மனமும் உற்சாகம் அடைந்தது. "பிளாக் தண்டர்" என்ற விளையாட்டுப் பூங்காவை அடைந்ததும் ஒரு வித சிலிர்ப்பு வந்தது, ஆறு வயதில் ரேடியோ விளம்பரத்திலும் , அன்றைய சன் டிவி விளம்பரங்களிலும் கேட்டு கேட்டு பதிவான முகவரி , ஊட்டி மெயின்ரோடு, மேட்டுப்பாளையம். விளம்பரத்தில் கேட்டே அதே கணீர் குரல் அந்த வளாகத்தை தாண்டும் பொழுதும் கேட்டது. ஊட்டி செல்லும் சாலை மிக தரமான ஒன்று, மலைகளின் அரசி என்ற பெயரினாலே இந்த சிறப்பு சாலை அந்தஸ்து ஊட்டிக்கு கொடுக்கபட்டுள்ளது, மிதமான குளிர் இருந்தது .


இமய மலைகளில் இருக்கும் சாலைகளை ஒப்பிட்டால் ஊட்டி சாலை பத்து பங்கு அதிகம் மதிப்பெண் வாங்கிவிடும். நீலகிரி மலைகளின் அரசி மட்டும் இல்லை , ஒருவகையில் இமய மலை தொடர்களுக்கு மூதன்னை கூட . மேற்கு தொடர்ச்சி மலை சிகரங்கள் சுமார் நூற்று ஐம்பது மில்லியன் வருடங்கள் பழமையானது , ஒப்புநோக்க இமயமலைத் தொடர்கள் ஐம்பது மில்லியன் வருடங்கள் தான் பழமைவாய்ந்தது . மேற்கு தொடர்ச்சி மலை முதிர்ந்த அன்னையின் திடம் கொண்டவை ஓங்கி வளர்ந்த பெருங்களிறு , இமயமோ தவழ்ந்து வளரும் பென்குயின் போல அடிக்கடி சறுக்கி விழும் நடை பயிலும் மழலை.


குன்னூரை அடைவதற்கு முன் சில கொண்டை ஊசி வளைவுகள் உண்டு, அங்கிருந்து பார்த்தால் பாகாசுரன் மலை என்னும் சிகரங்களைக் காண முடியும். பகாசுரன் வியூ பாய்ண்ட் வந்ததும் நிக்கிதா அவள் பாட்டியுடன் பஸ்சில் பயணம் செய்த நினைவுகளையும், அவர் அவளுக்கு கூறிய பகாசுரனின் கதைகளையும் நினைவிலிருந்து மீட்டெடுத்து என்னுடன் பகிர்ந்தாள். பதினாறாம் நூற்றாண்டில் திப்புவின் ஆட்சிக்காலத்தில் எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனிப்பதற்காக கட்டப்பட்ட “துரூக் கோட்டையின்” எச்சங்கள் இன்றும் பகாசுரன் மலையில் உள்ளது. குன்னூரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்திலிருந்து, மலை ஏறி இந்த கோட்டையை அடையலாம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகமும் மனித நெரிசல் இல்லாத இடங்களில் இதுவும் ஒன்று.


குன்னூரை அடையும் முன்பு நீலகிரி மலை ரயில் செல்லும் தண்டவாளத் தடம் பிரதான சாலையை ஒட்டிச் சென்றது, அதைக் கண்டவாறே அதன் அருகிலேயே வண்டியை ஓட்டிச் சென்றேன். உலகிலேயே மிக முக்கியமான, பாரம்பரியமான ரயில் தடத்தில் இந்த ரயில் தடமும் ஒன்று. 1854ல் திட்டமிடப்பட்ட மேட்டுப்பாளையம்-நீலகிரி மலை ரயில் பாதை நாற்பத்து ஐந்து வருடங்கள் கழித்து 1899 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 1071 அடி உயரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து 7200 அடி உயரம் கொண்ட உதகை வரை செல்லும் இந்த ரயில் தடம் ஆசியாவிலேயே செங்குத்தான ரயில் பாதையாகக் கருதப்படுகின்றது. இந்த ரயில் பாதையில் மலை ரயில் சேவை 1908 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது,


இந்தியாவில் உள்ள ஒரே ரேக் வகை ரயில் சேவை இதுவே ஆகும், நாம் காணும் சாதாரண தடத்துக்கு பதிலாக பற்கள் கொண்ட சக்கரங்கள் , கியர் அமைப்பு போல் பற்கள் கொண்ட தண்டவாளத்தின் மீது செல்லும் வகையில் இந்த ரயில் இயங்குகின்றது. என் ஆறு வயதில், அப்பா, அம்மா, ஆறு மாதம் ஆன தம்பியுடன் குடும்பமாய் இதில் பயணித்துள்ளோம், சென்னையிலிருந்து மேட்டுப்பாளையம் வரை பேருந்தில் வந்து அங்கிருந்து ஓடி விரைந்து ரயில் கிளம்பும் முன் ரயிலில் ஏறி அமர்ந்ததாக ஞாபகம் உண்டு.


(நீலகிரி மலை ரயில் தடத்தின் வரைபடம், ராஜ்பகத் பழனிச்சாமி உருவாக்கியது)


ஆறு மணிவாக்கில் குன்னூரை வந்தடைந்தோம், அகலமான , வாகன நெரிசல் குறைந்த சாலையில் விரைவாக வரமுடிந்தது. குன்னூர் ரயில் நிலையம் அருகில் சற்று இளைப்பாற வண்டியை நிறுத்தினோம், அழகான ஆங்கிலேய பாணி கல் கட்டிட ரயில் நிலையம். இ. எம்.பார்ஸ்ட்டர் எழுதிய "பேசேஜ் டூ இந்தியா" என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாக சர் டேவிட் லீன் இயக்கினார், ("லாரன்ஸ் ஆப் அரேபியா" வை இயக்கிய அதே இயக்குநர்). 1984 இல் வெளியான "பேசேஜ் டூ இந்தியா" திரைப்படத்தில் குன்னூர் ரயில் நிலையம் இரண்டு முக்கிய காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.


ஒரு டீ போடலாமா சகாவே என்ற தொனியில் நிக்கிதா தேநீர் கடை நோக்கி செல்ல சொன்னாள், கூட்டம் அதிகமிருந்த ஒரு கடையில் இரண்டு டீ ஆர்டர் செய்தோம் .ஆங்கிலேய முறையில் தேநீர் தயாரித்தார் கடைக்காரர், தேயிலை தூசியை வடிகட்டியில் கொட்டி , அதில் சுடுநீரை விட்டு அதன் வழியில் தேநீர் தயாரித்தார் , பின்னர் கொதிக்கும் பாலை அதில் சேர்த்து வெள்ளை சீனியிட்டு கொடுத்தார் . நான் டார்ஜிலிங்கில் ஒரு கடையில் இது போன்று தேநீர் தயாரித்து கண்டிருக்கின்றேன், தமிழகத்தில் இதுபோன்று டீ போடுவதை அன்றுதான் கண்டேன்.


(1980'இல் உலகின் மிக முக்கிய ரயில் தடங்களை ஆவண படுத்திய தொலைகாட்சி தொடரில் நீலகிரி மலை ரயில் தொடர்பான காட்சி)


குளிர் அதிகரித்துக்கொண்டே வந்தது, டீ கொடுத்த கதகதப்பு குறைந்துகொண்டே வந்தது. ஊட்டியை அடைந்தபொழுது மணி ஏழரை ஆகியிருந்தது ,ஊட்டி நகர் முழுவதும் மின்வெட்டு. ஏழு மணிக்கு மேல் மசினகுடி செல்லும் கல்லட்டி காட்டு வழி சாலையில் செல்ல அனுமதி இல்லை, அதனால் ஊட்டியிலேயே தங்க முடிவெடுத்தோம். வழக்கம் போல நான் ஒரு சிறந்த விடுதியை மிகவும் கம்மி விலைக்கு கண்டு முன்பதிவு செய்துவிட்டிருந்தேன். சகுனம் பார்த்து சதிசெய்யும் கூகிள் அன்றும் தப்பான வழியை காண்பித்தாள், விடுதியை அடைய சற்று தாமதமாகியது. எட்டு மணிக்கு விடுதியை அடைந்தோம் மூன்று பேர் தாராளமாக தங்க கூடிய அறை , சுடுநீர் உண்டு , ஆபரணச் செடிகள் நிறைந்த பால்கனியில் நின்று பார்த்தால் நகரின் முச்சந்தி தெரியும் , வண்டியை நிறுத்திக்கொள்வதற்கு இடவசதியும் கீழ் தளத்தில் உண்டு, இவை எல்லாவற்றையும் படம் பிடித்து , கேரளாவில் நட்சத்திர விடுதி நடத்தும் என் நண்பருக்கு அனுப்பி இருந்தேன் , இந்த அறைக்கு என்ன வாடகை கொடுக்கலாம், நான் எத்தனை ரூபாய்க்கு இதை பதிவு செய்திருப்பேன் என அவரைச் சீண்டி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தேன்.


உணவருந்த சில நல்ல இடங்களை தேர்வு செய்துவைத்திருந்தேன் , தாவரவியல் பூங்கா செல்லும் வழியில் திபெத்தியர்கள் நடத்தும் "டார்ஜீலிங் ஸ்பைசி மோமோ" என்ற உணவகம் ஒன்றில் பிரைடு ரைஸும் , மோமோவும் உண்டோம். அங்கிருந்து இனிப்பாய் எதாவது சாப்பிடலாம் என எண்ணிக்கொண்டே "சுகர் ட்ரிப்பில்" என்ற குட்டி கஃபேவை அடைந்தோம். குறுகலான இடத்தில் அழகான சுவர் ஓவியங்களுடன், மங்கிய மஞ்சள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஐரோப்பிய பாணி கடை . சூடான சாக்லட் பானமும், சீஸ் கேக்கும் சாப்பிட்டோம், உடலை உரசி குத்தும் குளிருக்கு அந்த அதீத மதுர சுவை சுகமளித்தது, சிறு கதகதப்பு குடல் நுழைந்தது.


(சுகர் ட்ரிப்பில் என்ற குட்டி கஃபேவில் வரையப்பட்டிருந்த ஓவியத்தின் அருகில் நான்)


விடுதியை அடைந்த பொழுது மணி ஒன்பது ஆகி இருந்தது, சித்த மருந்துகளை நிக்கிதா தேனில் குழைத்து சாப்பிட்டு முடிக்கும் முன் நான் பயணக் களைப்பில் மெத்தையில் விழுந்துவிட்டேன். தூங்குவதற்கு முன் உள்ளூர் தொலைக்காட்சியில் கோத்தர் பழங்குடி இன மக்கள் குறித்து விரிவான ஆவணத் தொடர் ஒன்றைப் பார்த்தோம். கோத்தர் இன பழங்குடி மக்கள் நீலகிரியில் ஏழு கிராமங்களில் வாழ்கின்றனர், ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் கர்நாடகாவின் குடகு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நீலகிரிக்கு வந்திருக்கலாம் என நம்பப்பகின்றது. குந்தா கோத்த என்ற கிராமத்தில் உள்ள 900 வருட பழமையான அரச மரம் இவர்களின் புனித மரம். எல்லா நல்ல காரியங்களையும் இவர்கள் இங்கிருந்தே தொடங்குகின்றனர். கிளைகள் படர்ந்த மரத்தின் வெளிச் சுற்றளவு ஐம்பது பேர் சுற்றி நின்று வளைக்கும் அளவிற்கு பெரியது.


(கோத்தர்கள் வழிபடும் 900 வருட பழமையான அரச மரம்)


கோத்தர் இன மக்களின் மொழி கோவ் மாண்ட், இந்த மொழி தோடர் பழங்குடியினரின் மொழியுடன் நெருங்கிய ஒற்றுமையுடையது. இந்த பழங்குடி மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மற்றும் மலையாளத்திலிருந்து பிரிந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது , இதற்கு சான்றாக தமிழ் மற்றும் கோவ் மாண்டின் உள்ள சொற்களின் ஒலி மற்றும் பொருள் ஒற்றுமையயைக் கூறலாம். உதாரணத்திற்கு "செய்" என்ற சொல் இரு மொழியிலும் ஒரே பொருள் உள்ள கொண்டுள்ளது. தென் இந்திய மொழிகளை ஆராய்ந்து திராவிட இலக்கண ஒப்பீடு புத்தகத்தை ராபெர்ட் கால்டுவெல் 1875 இல் பதிப்பித்தார், அதில் கோத்தர்களின் மொழியை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோத்தர்களின் அய்யனூர் அம்மனூர் தெய்வங்களை வழிபடும் முறைகள், குழந்தைக்கு வெயில் காட்டும் சடங்குகள், கோசி விழா போன்ற கொண்டாட்டங்கள் பற்றி தெளிவாய் விளக்கியது அந்தத் தொலைக்காட்சி தொடர்.


விரிவாக கோத்தர்களுடனும், தோடர்களுடனும் சென்று சில நாட்கள் தங்கி அவர்களின் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சிந்தனையும் களைப்பும் ஒன்றுசேர துயிலில் ஆழ்ந்தோம்.


(கோத்தர்கள் அவர்கள் வழிபடும் மரத்தை சுற்றி ஆடும் காணொளி)



(மேலும்)


Recent Posts

See All

Comments


bottom of page