நாங்கள் தெப்பக்காடு யானைகள் முகாம் சென்றது இந்த பதிவில் உள்ளது .
(தெப்பக்காடு யானைகள் முகாமின் மாலை காட்சி)
"நீண்டாடும் அந்த குட்டி துதிக்கையில் என் தாய் கட்டிய தூளியை உணர்ந்தேன், மர்மம் நிறைந்த அதன் கண்களுக்குள் மலை சிகரத்தின் பேரமைதி உறைவதை அறிந்தேன். "
மாலை மணி நான்கரை ஆகி இருந்தது, தேநீர் அருந்திவிட்டு வன உலா செல்லலாம் எனத் திட்டமிட்டோம், நாங்கள் வந்திருந்த இரு சக்கர வாகனத்திலேயே மூவரும் சேர்ந்து சாகசப் பயணத்தை தொடங்கலாம் என முடிவு செய்தோம். முதலில் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் சென்று, அங்கிருந்து விபூதி மலை முருகன் கோவிலுக்கு சிறு மலையேற்றம் ஒன்றைச் செய்யலாம் எனத் திட்டம், இருள் சூழத் தொடங்கிவிட்டால் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்ல முடியாது என்பதால், முதலில் தெப்பக்காடு சென்று வரலாம் என முடிவு செய்தோம்.
பவித்ராவின் வீட்டிலிருந்து தெப்பக்காடு எட்டு கிலோமீட்டர் தூரம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் செல்லும் வழி. வேகம் அதிகம் செல்லக் கூடாது, அதே நேரத்தில் அந்தி என்பதால் வனவிலங்குகள் மிகுதியாய் இருக்கவும் வாய்ப்புண்டு, எச்சரிக்கையுடனே பயணித்தோம். செல்லும் வழியில் பெண் யானை ஒன்று வனத்தில் அலைந்து மண்ணை அள்ளி தூவிக்கொண்டிருந்தது, சாலை ஓரத்திலிருந்தே யானையை கண்டு விலகினோம். சற்று தொலையிலே சோதனைச் சாவடியை கடந்ததும் காட்டிலாக அதிகாரிகள் அவர்களின் ரோந்து வாகனத்தில் நின்றிருந்தனர். பவித்ராவை அடையாளம் கண்டு மரியாதை நிமித்தமாய் விசாரித்தனர் அவர் யானை முகாமிற்கு அலுவல் ரீதியாகச் செல்வதாய் சொன்னார். பவித்ரா பரவலாக இங்கே அறியப்படும் முகம், காட்டிலாகா அதிகாரிகள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் பவித்ராவை அடையாளம் கண்டு வணக்கம் வைத்து, நலம் விசாரித்தனர் என்பதை அப்போது தான் கவனித்தேன்.
(நாங்கள் தெப்பக்காட்டை நோக்கி செல்லும் வழியில் இருந்த காட்டு யானை)
நாங்கள் தெப்பக்காட்டை அடைந்த பொழுது மணி ஐந்தே கால் ஆகி இருந்தது, முதுமலை புலிகள் காப்பகப்பகுதியில் அமைந்திருக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே பழைமையானது.1910 ஆம் ஆண்டு வாக்கில் காட்டு மரங்களை வெட்டி விற்கும் வியாபாரிகளுக்கு வெட்டிய மரங்களை இடம் பெயர்பதற்கு யானைகள் தேவைப்பட்டன, காட்டுயானைகளை மரம் தூக்கும் பணிக்காக பழக்கப்படுத்தும் இடமாக இது விளங்கியது. 1927 இல் ஆங்கிலேய அரசின் தலையீட்டில் இந்த இடம் யானைகள் முகாமாக உருப்பெற்றது, பின்னர் 1972 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்த இடம் செயல்பட்டு வருகின்றது. இந்த முகாமில் தற்போதைய நிலவரப்படி இருபத்தி எட்டு யானைகள் உள்ளன, இங்குள்ள யானைகளில் அதிக வயதுடையது பெண் யானை பாமா (73 வயது), குறைந்தது பொம்மி என்னும் பெண் யானை (2.5 வயது). பல்வேறு சந்தர்ப்பங்களில் காடுகளிருந்தும், நகரங்களிருந்தும் பிடிக்கப்படும் யானைகள் இங்கே கொண்டு வந்து தங்கவைக்கப்பட்டுள்ளன, இந்த முகாமில் உள்ள யானைகள் மனித-வன விலங்கு மோதல்கள் தடுக்கும் கும்கிகளாகவும், மழைக்காலங்களில் ரோந்து பணிக்கும் உதவும் வகையிலும் பயிற்றுவிக்கப் படுகின்றன.
நான் ஆறுவயது இருக்கும் பொழுது என் அப்பாவுடன் இங்கு வந்து நினைவு எனக்குள்ளது, அடர்ந்த கானகத்தின் வழியாக ஜீப் ஒன்றில் கூடலூரிலிருந்து பயணித்து யானைகள் விநாயகருக்கு மலர் தூவி, மணி இசைத்து பூசனை செய்யும் நிகழ்வைக் காண விடியலில் வந்தோம், நிகழ்வை கண்டோமா இல்லையா என்ற ஞாபகம் இல்லை, இன்றும் அந்த நிகழ்வு நடைபெறுகிறதா எனத் தெரியவில்லை. காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவூட்டும் நிகழ்வை சுற்றுலா பயணிகள் காணலாம். நாங்கள் மூவரும் யானைகளுக்கு மாலை உணவூட்டும் நிகழ்வை காணக் காத்திருந்தோம். இவை பல்வேறு சந்தர்பங்களில் பிடிக்கப்பட்ட யானைகள் என்பதால் இவற்றை பாகர்கள் தங்கள் உத்தரவுகளுக்கு பணியச் செய்வது அவசியம், இரண்டு யானைக்கு ஒரு பாகன் வீதம் என மொத்தம் பதினைந்து பாகன்களுக்கு மேல் இங்கே உள்ளனர். இங்கு உள்ள பாகர்கள் இருளர், காணி பழங்குடி இனத்தவர்கள். இவர்களே காட்டையும் அதன் உயிர்களையும் அதிகம் உடனிருந்து அறியும் மண்ணின் மைந்தர்கள், யானைகளை தங்கள் பிள்ளைகள் போல் கண் அசராமல் பார்த்துக்கொள்கின்றனர்.
காவேரிபூம்பட்டினத்து பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் இயற்றிய பின்வரும் முல்லைப்பாட்டில் வடமொழி கொண்டு யானையை பயிற்றுவிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது,
"தேம்படு கவுள சிறு கண் யானை,
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டெனக்,
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றிக்
கல்லா இளைஞர் கவளம் கைப்பக்"
மதம் பாய்கின்ற கன்னத்தையுடைய சிறிய கண்ணையுடைய யானை ஒன்று நின்றது. உயர்ந்து வளர்ந்த கரும்பும், அதிமதுரமும், மற்றும் வயலில் விளைந்த நெற்கதிரும் நெருக்கமாகச் சேர்த்து கட்டப்பட்ட இவற்றை உண்ணாமல் அவற்றைத் தன் நெற்றியில் தடவி, தன் தும்பிக்கையைத் தந்தங்களின் மீது வைத்தது. பிளவுபட்ட கூர்மையான கருவியைத் தன் கையில் கொண்ட வட மொழியை கற்காத இளைஞன் யானையிடம் வடமொழிச் சொற்கள் சிலவற்றைக் கூறி உணவுக் கவளங்களைக் கையில் கொடுத்தான், என்பது இப்பாட்டின் பொருள்.
ஆக கிபி மூன்றாம் நூற்றாண்டு முதலே வடமொழி இங்கே புழக்கத்தில் உள்ளது என்பதையும், யானைகளின் பயிற்று மொழியாக இன்றளவும் வடமொழியே உள்ளது என்பதை அறியமுடிந்தது.
(தெப்பக்காட்டில் 1971 இல் பிறந்த இரட்டை யானைகளில் ஒருவன் சுஜய் , புகைப்படம் : நிக்கிதா)
பொதுவாக தமிழ்நாடு வனத்துறையில் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் அனைத்தும் "உருது" மொழியில் பயிற்சியளிக்கப்படுகின்றன, நாடு முழுவதும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை "உருது" மொழியில் மட்டுமே பயிற்சியளிக்கப்படுகின்றன, மேலும் உருது மொழியில் சுமார் இருபது கட்டளைகள் உள்ளன. யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட ஆங்கிலேயர்களின் காலத்தில் கூட "உருது" மொழியில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது அதில் பெரும்பாலான கட்டளைகள் மரம் கடத்தும் வேலைக்கு பயன்படுத்தப்பட்டன.
ஒரு பாகன் தன் யானையிடம் "பரியா,பரியா" என்ற சொற்களால் கட்டளைகளை பிறபித்தார். "பரியா" என்றால் காணி மொழியில் மெல்ல மெல்ல என்று அர்த்தம் என அவர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் உண்மையில் அது உருதுவில் "வரியா" என்ற வார்த்தையிலிருந்து திரிந்துள்ள கட்டளை , அதற்கு அர்த்தம் "கீழே போடு" என்பதாகும். மேலும் சில யானையின் பயிற்று மொழி சொற்களை இணையத்திலிருந்து அறிந்து கொண்டேன். மத் என்றால் முன்னேறி செல், சரக் என்றால் பின்னே செல், பைட் என்றால் உக்கார், ஊட் என்றால் எழுக என பொருள்.
இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் யானைகளுக்கு பெரிதும் கடமைப்பட்டுள்ளது, எல்லா வகையிலும் காட்டின் அரசன் யானைகளே. பல படையெடுப்புகளும், போர்களின் பேரழிவுகள் இந்திய மன்னர்களின் யானை படைகளை பற்றி எதிரிகள் கொண்டிருந்த அச்சத்தாலே தவிர்க்கப்பட்டுள்ளது. எல்லாவகையிலும் தேசிய விலங்காய் கருதப்பட வேண்டியவை யானைகளே, ஆனால் ரயில் ஒலியால் காட்டின் ஒளிகளை அழித்து, கானக பிரஜைகளை கரிசனம் இன்றி கொன்று குவித்துள்ளோம்.
(தயார் நிலையில் உள்ள யானைகளின் மாலை நேர உணவு, யானைகளின் பெயர்களுக்கு நேராக அவற்றின் உணவுகள் அடுக்கிவைக்கபட்டுள்ளது)
தெப்பக்காட்டில் யானைகளுக்கு ஓய்வு கால உணவு, வேலை கால உணவு என இரு பிரிவுகளில் உணவுகள் தயாரிக்க படுகின்றன. இரண்டு வகையான உணவிற்கும் ஒரே வகையான மூலப்பொருட்களே பயன்படுத்தப்படும், மூலப்பொருட்களின் அளவு மட்டும் உணவிற்கு ஏற்றாற்போல் மாற்றப்படுவது வழக்கம். யானைகளுக்கு காலையும் மாலையும் அளிக்கப்படும் உணவில் குதிரை வாலி, கேழ்வரகு, அரிசி, வெல்லம், தாது கலவை, கரும்பு ஆகியவை பிரதான மூலப்பொருட்கள். ஒவ்வொரு பாகனும் தங்கள் யானைகளுக்கான மூலபொருட்களை சிறு இயந்திரத்தால் அரைத்து அதற்கான சதுர வடிவ அச்சில் அடைத்து கொஞ்சம் உலரவிட்டு, உணவூட்டும் முன் தங்கள் கைகளால் சதுரவடிவ மூலப்பொருட்களை பிசைந்து யானைகளுக்கான உணவைத் தயார் செய்கின்றனர். இந்த உணவை தங்கள் கைகளால் யானைகளுக்கு ஊட்டும் பொழுது அவை தங்கள் எஜமானர்களை கண்டு கொள்கின்றன.
(தெப்பக்காட்டில் யானைகளின் உணவை பற்றிய காணொளி, நன்றி: சுப்ரியா ஷாகு (இ.ஆ.ப))
காலைப்பொழுது புலர்ந்ததும் பாகர்களின் கைகளால் சத்துள்ள சிற்றுண்டியை உண்டு, காட்டை நோக்கி சென்று கும்கி பயிற்சி, அங்கே கிடைப்பதை அலைந்து திரிந்து ஒரு பிடி பிடித்ததும், அந்தியில் மாயாற்றில் ஓர் இனிய குளியல், குளியல் முடித்து மீண்டும் முகாம் நோக்கி நடந்து மாலைச்சிற்றுண்டியை பாகர்களின் கைகளால் உண்ணுவது இதுவே இங்குள்ள யானைகளின் அன்றாடம்.
முகாமை சுற்றிப்பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பொதுவாக இங்குள்ள யானைகளின் அருகில் செல்லுவதற்கு அனுமதி இல்லை, இவற்றில் பல யானைகள் மதம் கொண்டு மனிதர்களை கொன்று வீழ்த்தியவை. இங்கிருக்கும் யானைகள் காட்டின் இயல்பிலிருந்து அதிகம் விலகி இருப்பவை, தங்களுக்கென ஒரு காட்டை மனதுள் உருவாக்கி அதில் வாழப் பழகிக்கொண்டவை. காட்டில் வாழ்ந்தலையும் யானைகள் இங்கே வாழும் யானைகளுக்கு அன்னியமானவை, காட்டில் வாழும் யானைகள் நக்ஸல்கள் என்றால் இங்கே வாழும் யானைகள் துணை ராணுவப்படை போல, இங்குள்ள யானைகளுக்கு எல்லா சூது வாதும் தெரியும், தங்கள் வரையறைகளையும், கடமைகளையும் நன்கு அறியும். முகாமில் உள்ள யானைகள் போராளிகள் அல்ல நாகரிக விலங்குகள்.
ஆசியக்கண்டதை சூறையாடிய தைமூர், இந்தியாவிலிருந்து அள்ளிச்சென்ற செல்வங்களுள் சில நூறு யானைகளும் அடங்கும். காரியின் கருமையை வண்ணமைகள் கொண்டு நீக்கி காட்டின் அரசனுக்கு கோமாளி வேடம் தரித்து சமர்கண்டில் தன் அரண்மனை வாயிலில் நிறுத்திய சரித்திர மூடன் தைமூரின் ரசனையை எண்ணி வியப்பும் எரிச்சலும் ஒருங்கே வந்தது, பதினான்காம் நூற்றாண்டில் இமயமலைச்சரிவுகளிலும், வறண்ட குளிரும், மணற்புகை சூழ்ந்த பாலைவனங்களையும் தாண்டிச் சென்ற அந்த யானைகளை எண்ணிப்பார்க்கும் போது பெரும் ஆதங்கம் எழுந்தது, யானைகளின் வாழ்வியல் சூழல் அன்றிலிருந்து இன்று பெரிதும் முன்னேறி இருப்பதை கண்டு சற்று ஆசுவாசமும் எழுந்தது.
(முகாமில் உள்ள யானைகளின் அணிவகுப்பு, நன்றி: Mathangalila)
பொம்மி என்னும் குட்டியானை எங்களை மிகவும் கவர்ந்தது, பொம்மி காட்டில் காயங்களுடன் தனித்திருந்தபோது மீட்கப்பட்டு இப்போது முகாமில் உள்ளது. பொம்மி எங்களைக் கண்டதும் அதன் அருகில் அழைத்தது, என் சட்டை பையில் தான் மூக்கை நுழைத்து, அதன் தொடுகை அளவற்ற அன்புடனும் மேன்மையுடனும் இருந்தது. நீண்டாடும் அந்த குட்டி துதிக்கையில் தூளி கட்டும் என் தாயின் சேலை நெகிழ்வை உணர்ந்தேன் , மர்மம் நிறைந்த அந்த கண்களுக்குள் மலை சிகரத்தின் அமைதி உறைவதை கண்டேன். பொம்மியை நம் வீட்டுக்கு கூட்டி போய்விடலாம் என நிக்கிதா அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.
சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் மாயாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதில் தொப்புள் கொடி கூட காயாத பதினைந்து நாள் ஆன ஒரு குட்டி யானை அடித்து வந்தைப் பற்றி பவித்ரா கூறினார். அந்த யானையை மீட்டெடுத்த காட்டிலாகா அதிகாரிகள் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனின் குழுவை கண்டுபிடித்து சேர்க்க முயன்றனர். மனித வாசத்தையோ, குட்டியின் மேலிருந்து வீசும் மருந்து வாசத்தையோ யானைக்குழு அறிந்து கொண்டால், யானையின் குழு அந்த குட்டியை ஏற்றுக்கொள்ளாது. இந்த காரணத்தினால், மனித நடமாட்டங்கள் அதிகம் இல்லாத இடத்தில் காயங்கள் ஆறும் வரை அந்த யானை பாதுகாக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியும் அதிகாரிகளால் தொலைந்து வந்த குட்டியின் தாயையும் அதன் இருப்பிடத்தையும் அடையாளம் காண முடியவில்லை. பொதுவாகவே குழுவிலிருந்து தனித்துச் சென்ற யானையை பிற யானைகள் குழுவில் சேர்த்துக் கொள்வதில்லை, இங்கே சிக்கல் என்னவென்றால் இருபத்தி இரண்டு மாதம் கஜகர்ப்பத்திலிருந்து பிறந்த குட்டி யானை குறைந்தது ஒரு வருடத்திற்காவது தாயின் பாலைப் பருகுவது அவசியம், காட்டை துதிக்கை பிடித்து பிற யானைகள் குட்டிக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், இந்த நுணுக்கங்களை என்ன முயன்றாலும் மனிதர்களால் விலங்குகளுக்கு கற்பிக்க முடியாது.
(கிராலில் பாதுகாக்கபடும் குட்டி யானை)
மூன்றாவது நாள் அந்த குட்டியின் தாயை அதிகாரிகள் அடையாளம் கண்டனர், சில நாட்கள் காட்டில் குட்டியுடனே அதிகாரிகள் மறைந்திருந்து, அதை அதன் குழுவுடன் சேர்க்க முயன்றனர், அந்த முயற்சி இறுதியில் நெகிழ்ச்சியான வெற்றியில் முடிந்தது. காட்டில் பணிபுரியும் அதிகாரிகளின் வாழ்வென்பது பல உலகங்களில் ஒரு சேர வாழ்வது, இங்கே வெற்றி தோல்வி எல்லாமே சராசரி மனித வாழ்வில் உள்ளதை விட பல மடங்கு ஆழமான அனுபவத்தையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் கொடுக்கக்கூடியவை. ஒருவகையில் இவர்களின் வாழ்வின் உயரமும் , உன்னதமும் தாவரங்கள் உரையாடும் ரகசிய மொழியை அறிபவர்களுக்கு புரியக்கூடியவை.
(மேலும்)
Comments