top of page

வாழிய நிலனே - 10

Writer's picture: சுபஸ்ரீ சுபஸ்ரீ

Updated: Jul 15, 2024

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.


(முதற்கனல் 34: தழல்நீலம், ஓவியம்: ஷண்முகவேல்)


" வெள்ளமென நாடெங்கும் இருந்து திரளும் மக்களுக்காக அஸ்தினபுரியின் நான்கு பக்கமும் திட்டமிடப்பட்ட ஊர்கள் உருவாக்கப்படுகின்றன. அஸ்தினபுரியின் நிலவரைபடம் உருவாக்கப்படுகிறது "

               

வெண்முரசு காட்டும் இடங்கள்


மண்ணில் முகிழ்த்த மாநகர்கள்


மூதாதையர் தங்கள் தேவைக்கென்றே நகரங்களை அமைந்திருந்ததால் மதுரை, காஞ்சி போன்ற தொல் நகரங்கள் அனைத்துமே சிறியவையாகத்தான் இருந்திருக்கின்றன என்றும் ஆணவத்திற்குரியதை உருவாக்கிக்கொண்ட அசுரர்களும் அரக்கர்களும் மாகிஷ்மதி, மகேந்திரபுரி, இலங்கை போன்ற விண்ணுக்கெழுந்த நகரங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும் களிற்றியானைநிரையில் ஆதன் எண்ணிக்கொள்கிறான். ஆணவத்தின் உருவாக எழுந்தவையே உடைந்து மண்ணில் சிதறுகின்றன என்றும் சிந்திக்கிறான். அதுபோல மண்ணில் இருந்து விண்ணோக்கி எழுந்த சில மாநகரங்கள் குறித்து சில குறிப்புகள்.


மாநகர் ஒன்றை அமைப்பதில் நிலம் தேர்வதன் இன்றியமையாமையை அரசு ஆராய்ந்து நோக்க வேண்டியவற்றை துவாரகை, இந்திரப்பிரஸ்தம் என்னும் இரு மாபெரும் நகரின் முன்வரைவுத் திட்டங்களில் காண முடிகிறது.


அஸ்தினபுரி


அஸ்தினபுரியின் முதல் சித்திரம் முதற்கனலில் ஆஸ்திகன் கண்கள் வழியாக விரிகிறது. நாகர் குலத்தை முற்றழிவிலிருந்து மீட்க வந்தவனனுக்கு மகா மரியாதம் எனும் அக்கோட்டைச் சுவர் பாதாள நாகம் போன்றே தெரிகிறது.


"பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை.”


மழைப்பாடலில் அஸ்தினபுரியின் ஒட்டுமொத்த பெரிய வரைபடமும் விதுரன் பார்வையில் விரிகிறது, பகடைச்சதுரங்கக் களத்தின் வடிவ நகரமும் அரச வீதிகளும், வணிக வீதிகளும், வடக்கே நீளும் படைவீரர் இல்லங்களும், வடக்கு கோட்டைவாசலை ஒட்டிய புராணகங்கையும், தெற்கே விஸ்வகர்ம குலத்தவரின் இல்லங்கள் செறிந்த மகாரதச் சாலையும், தெற்குக்கோட்டையின் பெருவாயிலை ஒட்டி ரதங்களை நிறுத்தும் பெருமுற்றங்களும் குதிரைகளைப் பழக்கும் உபமுற்றங்களும், மேற்குக்கிளை முழுக்க வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும், மேற்குக்கோட்டை வாயிலுக்கு அருகே குளங்களை நிரப்பும் கால்வாய்களும், கிழக்கே செல்லும் சாலை முழுக்க வணிக வீதிகளும், கிழக்குக் கோட்டையின் வாயிலுக்கருகே நந்தவனமும்,ஆலயங்களும், கோட்டை மீதிருந்த நூற்றுக்கணக்கான கைவிடுபடைகள் நிரையும் என்று மிகத் தெளிவான வரைபடம்.


வண்ணக்கடலில் அஸ்தினபுரியின் சாலைகளில் இருபக்கமும் எழுந்த ஏழடுக்கு மாளிகைகளின் தாமரைமொட்டு போன்ற வெண்குவை மாடங்களில் பறக்கும் கொடிகள்; கல்பதிக்கப்பட்ட அகன்ற தெருக்களின் இருபக்கமும் மழைநீர் வழிந்தோடுவதற்கான ஓடைகள். வழிப்பந்தங்கள் எரிவதற்கான பெரிய கல்தூண்கள்; தலைக்குமேல் எழுந்து நின்ற காவல்மாடங்களில் நிலவுவட்டங்கள் எனத் தெரிந்த பெருமுரசுகள்; கவச உடைகள் ஒளிர அவற்றில் நின்றிருந்த வீரர்கள் - என்று கர்ணன் முதல்முறை காணும் அஸ்தினபுரி விரிகிறது.


குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு மீண்டும் புதிதாக உருக்கொள்ளும் அஸ்தினபுரியின் சித்திரம் களிற்றியானை நிரையில் விரிகிறது. அஸ்தினபுரியின் அனைத்து மாளிகைகளும் புதுப்பிக்கப்படுகின்றன. இரவுகளில் கூட நெய்விளக்குகளை ஏற்றியபடி செம்மைப்படுத்தும் பணிகள் நிகழ்கின்றன. மாடங்களின் மீது உருக்கிய அரக்கும் சுண்ணமும் கலந்த கலவை பூசப்படுவதன் மணம் காற்றில் நிறைந்திருக்கிறது. சிற்பிகளும் தச்சர்களும் நிரை நிரையாக அமர்ந்து வேலை செய்கிறார்கள்.பீதர்நாட்டு வெண்ணிறக் களிமண் ஓடுகள் மாளிகைகளின் மேலே அமைக்கப் படுகின்றன. பீதர்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குப் பாளங்கள் அரண்மனைச் சாளரங்கள் அனைத்திலும் பொருத்தப்படுகின்றன. அவை வெப்பத்தில் மணலை உருக்கி ஒளிரும் பாகென மாற்றி செய்யப்படும் ஒருவகை ஆடிகள். அவை அஸ்தினபுரியின் தோற்றத்தையே மாற்றி அமைக்கின்றன. முகடுகள் வெண்சுண்ணம் பூசப்பட்டு கருமை சூழ்ந்திருந்த நகரமே புத்தொளி கொள்கிறது.களிற்று யானைகளின் நிரை போலத் தெரிந்த அஸ்தினபுரியின் கோட்டை புதிதாக வெண்சுண்ணம் பூசப்படுகிறது. அதனால் விடியலிலேயே கோட்டை ஒளிகொள்ளத் தொடங்கிவிடுகிறது. வெள்ளமென நாடெங்கும் இருந்து திரளும் மக்களுக்காக அஸ்தினபுரியின் நான்கு பக்கமும் திட்டமிடப்பட்ட ஊர்கள் உருவாக்கப்படுகின்றன. அஸ்தினபுரியின் நிலவரைபடம் உருவாக்கப்படுகிறது.


ஆதனின் வடதிசை நோக்கிய பயணத்தில் அஸ்தினபுரி உருவாக்கப்பட்ட வரலாறு என ஒரு நாடோடிப்பாணர் ஒரு கதையைக் கூறுகிறார். மாமன்னர் ஹஸ்தி பாரதவர்ஷத்தின் தலைசிறந்த சிற்பிகளை வரவழைத்து தன் பெயரை நிலைநிறுத்தச் செய்யும் தலைநகரை உருவாக்கச் சொல்கிறார். அதை ஏற்று ஆயிரம் சிற்பிகள் அஸ்தினபுரிக்கு வருகின்றனர். இறுதியாகமயனின் வழிவந்தவராகிய தேவசிற்பி ஹஸ்திபதன் வருகிறார். அவர் அந்த நகருக்கான வாஸ்துமண்டலம் ஒன்றை உருவாக்குகிறார். அதற்கிணையான நகர் ஏதும் இல்லை என சிற்பிகள் கூறுகின்றனர். இருந்தும் அவர் நகர் எழுப்பும் பணிகளைத் தொடங்காது இருக்கிறார். அவருடைய கனவு ஒன்றில் தலைகீழாகத் தொங்கும் வௌவாலாக அந்த நகரத்தை நோக்கும் போது அது ஒன்றுடன் ஒன்று பொருந்தாது இருப்பதாக உணர்கிறார். நிலத்துக்கு அடியில் வாழும் நாகமாக மாறி பார்க்கும் போது மேலும் பிழைகளை அறிகிறார்.


"ஒரு நகர் மானுடருக்கு மட்டும் உரியது அல்ல. அங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் அதுவே இயல்பான உறைவிடம். புட்கள், பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்ட அனைத்துயிரும் தனக்கு உகந்தது என்றும் தன் நோக்கில் அழகியது என்றும் எண்ணும் நகரே முழுமைகொள்கிறது." என்று கூறி பிழை நீங்கிய வாஸ்து மண்டலம் எழுவதற்கு காத்திருக்கிறார். அமராவதியின் நிழல் அவர் கண்ணில் தெரிய அதைக் கொண்டு உருவாக்கியதே பிழைகளே அற்ற அஸ்தினபுரி நகரம் என்று பாணர் ஹஸ்தி எழுப்பிய அஸ்தினபுரியின் புகழைப் பாடுகிறார்.


இந்திரப்பிரஸ்தம்


இந்திரன் விழைவின் தெய்வம். குன்றா விழைவின் பெண்ணுருவென மண்மலர்ந்த திரௌபதி, பாண்டவர்களுக்கென தட்சிணகுருநிலமாக அளிக்கப்படும் நிலப்பகுதியில் பெருநகர் ஒன்றுக்கான திட்டம் வைத்திருக்கிறாள். அஸ்தினபுரியில் குருநிலத்தை இருவர்க்கும் பிரித்தளிக்கும் பேச்சுகள் கூடத் தொடங்கும் முன்னரே, நான்காண்டுகளாக அவ்விடத்தை அறிந்து அவள் கனவு காணும் மாபெரும் ஆற்றோரத் துறைமுகநகருக்கான வரைபடமும் தயாரித்து வைத்திருக்கிறாள்.


இந்திரனின் நகர் என்று அவள் உருவகிக்கும் தலைநகருக்கு அவள் தேர்வு செய்யும் நிலம், யமுனைக்கரையில் நீர்மட்டத்தில் இருந்து நூற்றைம்பது வாரைக்குமேல் உயரமுள்ள மிகப்பெரிய மண்மேடு. யமுனையில் இருபது துறைமேடைகள் அமைக்கவும், மிகப்பெரிய அங்காடி முற்றம் அமைக்கவும், குன்றுக்குப்பின்னால் உள்ள பெரிய செம்மண் நிலத்தில் பண்டகசாலைகளை அமைக்கவும் வாய்ப்புள்ள நிலம் என்று திட்டமிடுகிறாள். அந்நிலத்தின் தன்மையை நன்கு ஆராய்ந்து கலிங்கச் சிற்பியரால் நகருக்கான வாஸ்துபுனிதமண்டலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. செந்நிறமான மென்பாறைகள் கொண்ட அக்குன்றில் இருந்தே அங்கு கட்டிடங்களுக்குத் தேவையான உறுதியான கற்களை செஞ்சதுரமாக வெட்டி எடுக்க முடியும், சில இடங்களில் பாறையைக் குடைந்தே கோட்டைவழிகளையும் கட்டடங்களையும் அமைக்க முடியும் என்று திட்டமிடுகிறார்கள். முந்தைய மகாயுகத்தில் சேறாக இருந்து அழுந்தி பாறையான அவை மிக உறுதியானவை. அப்பகுதியிலேயே அதிக அளவு மழை பெய்யும் இடம் வெண்முகில்சூழ்ந்த அக்குன்றுதான் என்பதால் நீரின் தேவைகளும் நிறைவாக இருக்கும் என்று விளக்குகிறாள்.


துவாரகையைப்போல இந்திரப்பிரஸ்தமும் புரிவடிவ நகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துச் சாலைகளும் சுழன்று மையத்தில் அமைந்த இந்திரன் ஆலயத்திற்கு செல்கின்றன. இந்திரப்பிரஸ்தத்தின் யமுனைத் துறை விரிக்கப்பட்ட பீதர்நாட்டு விசிறிபோல பன்னிரண்டு துறைமேடைகள் கொண்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் கலங்களும் படகுகளும், படகுத்துறைக்கு மேலே பலநூறு தோணிகளுமாக யமுனைப் பெருக்கையே மறித்து நிற்கின்றன. இரண்டு மாபெரும் கோபுரங்கள் என பதினெட்டு அடுக்குகளுடன் கோட்டைமுகப்பு. மாளிகைகள் அனைத்தும் செந்நிறக் கற்கள். கோட்டைமுழுக்க சேற்றுக்கல். மாளிகைகளோ விண்ணின் வெண்முகில்கள் போலவும், வெண்பளிங்குப் படிகளும், ஆடிப்பரப்பென மாறிய சுவர்களும், கூரையிலிருந்து நீண்டிறங்கிய நூறுஇதழ் கொண்ட பொன்மலரென சரக்கொத்துவிளக்கும் என சித்திரமென துலங்குகிறது.


இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என்று மக்களால் சொல்லப்படுகிறது. எப்போதும் கட்டி முடிக்கப்படாத நகரமாகவே திகழ்கிறது. இந்திரப்பிரஸ்தம் அகழியாலோ காவல் காடுகளாலோ காக்கப்படாது ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த ஏழு கோட்டை நிரைகளே அதற்கு காப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எதிரிகள் உள்ளே நுழைந்தால் செதில்களை ஒன்றன் மேல் ஒன்றென மூடி உலோக உருளையென ஆகமுடியுமென கலிங்கச்சிற்பி வடிவமைத்திருக்கிறார்.


துவாரகை


பிரயாகையில் கூர்ஜரத்தின் தெற்கே கிருஷ்ணன் தான் அமைக்க நினைக்கும் நகருக்கென மிக விரிவான திட்டங்கள் வைத்திருப்பதை அர்ஜுனன் குந்தியிடம் விவரிக்கிறான். அந்தப் பாலை நிலத்தில், கூர்ஜரத்தின் தெற்கே கோமதி ஆற்றின் இருமருங்கும் மிகவிரிந்த புல்வெளிகள் உள்ளன. காட்டுப்பசுக்கள் மலிந்த நிலம். கடலோரமாக இருந்த குசஸ்தலி என்னும் சிறிய நகர் இக்‌ஷுவாகுக்கள் காலத்தில் கைவிடப்பட்டு சதுப்பாகிறது. தலைமுறைகளாகக் கைவிடப்பட்ட அந்நிலத்தை கிருஷ்ணன் தேர்ந்தெடுக்கிறான். அதற்கு அப்பால் கடல் நெடுந்தொலைவுக்கு பின் வாங்கி, பல நிலங்கள், பெரும்பாறைகள் கடலோரமாக வெளிவந்து நின்றிருக்கின்றன. அதில் கிருஷ்ணன் வணிகத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு கடல்துறைமுக நகரை அமைத்து அவனே முற்றதிகாரத்துடன் ஆளப்போகும் திட்டத்துடன் இருப்பதாக அர்ஜுனன் கூறுகிறான்.


பழைய குசஸ்தலிக்கு அப்பால் கோமதி ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில் கடலுக்குள் நீண்டு நின்றிருக்கும் நிலத்தில் அந்நகரம் அமைவதாக இடம் தேர்ந்திருக்கிறான். உறுதியான பாறைகளால் ஆன நிலம் என்பதால் பல அடுக்குகளாக அதில் கட்டடங்களை அமைக்க முடியும் என்றும் திட்டங்கள் தீட்டியிருக்கிறான்.


பெருவாயில்கொண்டவள் எனப் பொருள்பெறும் துவராகை அமையவிருக்கும் நிலம் உண்மையில் கடலுக்குள் புகுந்து நிற்கும் ஒரு மலைச்சிகரம். ஆகவே கடலுக்குள் நெடுந்தொலைவுக்கு அப்பால் அது தெரியும் என்பதால் அணுகுவோருக்கு ஒரு அழைப்பு போல, அறைகூவல் போல அங்கே இளைய யாதவன் நூறு வாரை(கிட்டத்தட்ட ஐநூறு அடி) கொண்ட மாபெரும் நுழைவாயிலை கடலை நோக்கி அமைக்கவிருக்கிறான் என்று அர்ஜுனன் சொல்கிறான். கடல்பாறைகள் கடல்காற்றால் அரிக்கப்படுவதில்லை என்பதால் கடல்பாறைகளை வெட்டி எடுத்து அவற்றைக் கொண்டே அதைக் கட்டுவதாகத் திட்டம். அந்தக் கட்டுமானத்தின் முழுத் திட்டமும் கிருஷ்ணனிடம் இருக்கிறது,


சோனகநாட்டில் காப்பிரிகளின் ஊரில் பெருமுக்கோண வடிவில் நூறு வாரை உயரத்துக்கு கட்டுமானங்களை(பிரமிடுகள்) அமைத்திருக்கிறார்கள் என்று வணிகர்கள் வாயிலாக அறிந்து அதன் கட்டுமான உத்திகளை அறிந்து வைத்திருக்கிறான்.


பெரு வல்லமையோடு எழுந்து வரும் துவாரகையின் காட்சிகள் வெண்முகில் நகரத்தில் விருஷ்ணி குலத்தவனாகிய சாத்யகியின் கண்கள் வழியாக விவரிக்கப்படுகிறது. யாதவர்களுக்கென்றே உருவாகும் மாநகரம் குறித்து இளமை முதலே கேட்டு வளர்ந்தவன் சாத்யகி. கனவென கேட்டவற்றை அணுகி , இளைய யாதவர் சேவையில் தன்னை அர்ப்பணிக்க, துவாரகைக்கு பயணம் செய்கிறான் சாத்யகி. தென்மேற்குக் கூர்ஜரத்தின் பெரும்பாலை நிலத்தின் வழியாக எட்டுநாட்கள் பயணம் செய்து துவாரகையின் முகப்பை அடைகிறான்.


பாலை நோக்கி நின்ற துவாரகையின் வடக்குத் தோரணவாயில் இருபக்கமும் சங்கும் சக்கரமும் நடுவே செம்பளிங்குக் கண்கள் கொண்ட கருடமுகமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. விழிதொடும் தொலைவுவரை வணிகர்கூட்டம் நிரம்பிய துவாரகையை சாத்யகி காண்கிறான். துவாரகையில் தண்டகாரண்யத்திலிருந்தும் தெற்கே வேசரநாட்டிலிருந்தும்கூட யாதவர்கள் வந்து குழுமுகிறார்கள்.


துவாரகை உயரமான குன்றின் மேல் அமைந்த நகரம். முழுக்குன்றும் நகரமாக மாறியிருக்கிறது. வளைந்து சுழன்று மேலேறிச் செல்லும் பாதைகள். தேர்களுக்கும் புரவிகளுக்கும் வண்டிகளுக்கும் போதிவிலங்குகளுக்கும் தனித்தனியே வகுக்கப்பட்ட பாதைகள் இருக்கின்றன. அரசப்பெருவீதியின் இருபுறமும் பல வகையான ஏழடுக்கு மாடங்கள் வரிசையாக நிற்கின்றன. நகரம் குன்றின் மேல் ஏறிச்சென்றுகொண்டே இருக்கிறது. உச்சியில் யாதவகிருஷ்ணனின் மாளிகை. சோனகநாட்டிலிருந்து வரும் புரவிகள், யவனர்களுடைய வெண்பளிங்குச் சிற்பங்கள், காப்பிரிநாட்டைச் சேர்ந்த யானைத்தந்தச் செதுக்குகள், பீதர்களால் கொண்டுவரப்பட்டவெண்களிமண் தூண்கள் என்று துவாரகையில் உலகம் வந்து இறங்கியிருக்கிறது.


மண்ணள்ளி உண்டுவிட்டு வாயில் உலகத்தைக் காட்டியவன், மண்ணள்ளிக் கட்டிய நகரின் வாயில் திறந்து உலகைக் காட்டுகிறான். துவாரகை குடிநீருக்கு மழையை நம்பி இருக்கிறது, அருகே இருக்கும் கோமதி ஆற்றை மூன்று பெருங்குன்றுகளால் தடுத்து துவாரகைக்கு திசைதிருப்பும் பெருந்திட்டம் தொடங்கவிருக்கிறது என சாத்யகி அறிகிறான். கிருஷ்ணனின் மாளிகையில் இருந்து சாளரம் வழியாக துறைமுகம் தெரிகிறது. கடல் நோக்கிய அப்பெருவாயிலை மாளிகையிலிருந்து மிக அருகே காண்கிறான் சாத்யகி. விழிதூக்கி நோக்கினாலும் மாடங்களுக்கு மேல் அதன் தூண் மேலெழுந்து செல்வதைத்தான் காண முடிகிறது. துவாரகையில் எங்கு நின்றாலும் அப்பெருவாயிலை முழுக்க காணமுடியாது என துறைமுகப்புக்கு சென்று அதைக் காண்கிறான். துவாரகையின் உண்மையான அமைப்பு அங்குதான் விழிக்குப் புலனாகிறது.


இரு குன்றுகளால் ஆனது துவாரகை. சங்கம் என அழைக்கப்பட்ட மேற்குப்பக்கத்துக் குன்றில்தான் துவாரகைநகரம் அமைந்திருக்கிறது. பெரியபாறைகளின் குவியலாக எழுந்து உச்சியில் கரிய உருளைப்பாறையுடன் நின்ற சக்கரம் என்ற குன்றின் உச்சிப்பாறைமேல் அந்த பெரிய அணிவாயில் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. இரு குன்றுகளுக்கு நடுவே எழுந்து கடலுக்குள் நீண்டிருந்த அஸ்வமுகம் என்ற பாறைநிலமே துறைமுகப்பு. அந்த அஸ்வமுகம் கடலுக்குள் சென்றிருந்த ஒரு பெரிய மலையின் உச்சி. அவ்விளிம்புக்கு அருகே கடல் ஆயிரம் வாரைக்குமேல் ஆழமிருந்த காரணத்தால் மிகப் பெரிய பீதர் கலங்கள் கூட அருகே வர முடிகிறது.


இந்திரநீலத்தில் கடல் முகமாக துவாரகையை அணுகும் காட்சிக் கோணம் வருகிறது. திருஷ்டத்யும்னன் மரக்கலத்தில் கடலில் இருந்து பார்க்கும்போது கணையாழி எனத் தெரியும் தோரணவாயில் அருகே நெருங்க வளையலாக மாறுகிறது. நீரின் தளும்பல்களில் ஏறி இறங்கி கரை அணுகும்போது அதை ஏந்திய பெரும்பாறைமுகடும் வலப்பக்கமாக நகரமும் சித்திரக் களித்தேர் போல நகரம் தெரிகிறது. கலத்திலிருந்து கரைசேர்வதற்கு துறைமேடையில் நின்றிருந்த பெரிய துலாக்கால் ஒன்று மெல்ல குனிந்து ஒரு வடத்தில் கட்டப்பட்ட மூங்கில்கடிகை ஒன்றை இறக்க, அதில் பயணிகள் ஏறிக்கொள்ள அப்படியே தூக்கிச் சுழற்றி கரைக்கு கொண்டு சென்று இறக்குகிறது. அந்த மூங்கில்கடிகையில் மெல்ல வானிலெழ வானிலிருந்து ஒரு காட்சிக்கோணம் - துவாரகையின் துறைமுகப்பு ஒட்டுமொத்தமாக தெரிகிறது, வலைபோல ஒன்றுடன் ஒன்று பின்னி விரிந்த துவாரகையின் தெருக்கள் தெரிகின்றன.


புலரியின் முதல் ஒளியில் எப்போதும் இளநீல மழை பொழியும் துவாரகை. துவாரகையில் மாலையில் நீராவியும் வெக்கையும் கொண்டிருக்கிறது கடற்காற்று. உப்பு மணம் நிறைந்து நனைந்திருந்த காற்று தொட்ட இடங்களில் எல்லாம் பளிங்குப் பரப்புகள் உப்புப் படலத்துடன் வியர்த்து பளபளக்கின்றன. கடலோசை எப்போதும் சூழ்ந்து ஒலிக்கும் நகரம் இருளுக்குள் நாற்புறம் கடல் சூழ, பெரும் கலம் போல துவாரகை மிதந்து கொண்டிருப்பதுபோல உளமயக்கு ஏற்படுத்துகிறது.


சோணிதபுரி

பாணாசுரரின் தலைநகரம் சோணிதபுரம். பாணாசுரரின் இளம் பருவத்தில் ஒருநாள் மலைக்குடிகளுடன் வேட்டைக்கென அடர்காட்டைக் கடந்து சென்றபோது தொலைவில் வெண்பனி சூடிய வடக்குமலைகளில் ஒன்று மட்டும்  பொன்னெனச் சுடர்வதைக் கண்டு அது கிரௌஞ்சமுடி என்றறிகிறார். மானுடர் ஏறமுடியாத ஒற்றைப்பாறைத்தூண்  போன்ற கிரௌஞ்சமலையுச்சிக்கு சென்று ஊழ்கத்தில் அமர்ந்து ஏழாண்டுகள் கழித்து மீள்கிறார். 


அதன் பிறகு அவர் காட்டெரி எனத் தோன்றிய வேங்கைக்காடு ஒன்றைக்கண்டு சோணிதபுரம் என்ற நகரை பாணர் உருவாக்குகிறார். ஆசுரநிலம் முழுக்க வேங்கைமரங்களின்மேல் காவலரண்கள் அமைக்கப்படுகின்றன. திரிகர்த்தர்களையும் உசிநாரர்களையும் வென்று சூழ்ந்திருந்த நிலங்களை நோக்கி எல்லை விரிக்கின்றனர் அசுரர். பதினெட்டுமுறை ஷத்ரியர்களையும் அவர்கள் தோற்கடித்திருக்கிறார்கள். சோணிதபுரியின் கோட்டை மிகப் பெரியதாக வண்டிகள் அணுகமுடியாத அரசத் தலைநகராக இருக்கிறது. நீளமாக குவிக்கப்பட்ட கற்களின் நிரை போல இருக்கிறது கோட்டை. சில கற்கள் ஐந்து யானை அளவுக்குப் பெரியதாகவும் தரையிலிருந்து இருபது ஆள் உயரத்திற்கு அடுக்கப்பட்டுள்ளன. எடைமிக்க கற்கள் ஒன்றன்மேல் ஒன்று தூக்கி வைக்கப்பட்டு தங்கள் எடையாலேயே ஒன்றையொன்று அழுத்திக்கொண்டு அச்சுவரை அமைத்திருந்தன என்றும் அதற்கான கற்கள் அனைத்தும் அங்கிருந்த மலைகளின்மேல் இருந்தவை. அங்கிருந்து நெம்புகோல் வழியாக பெயர்க்கப்பட்டு யானைகளைக்கொண்டு மெல்ல உருட்டி கொண்டுவரப்பட்டு மலைச்சரிவிலிருந்து நேராக இறக்கி ஒன்றன்மேல் ஒன்றென இங்கு அடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அபிமன்யு தன் தோழனிடம் அந்த நகரின் கட்டுமானம் குறித்துக் கூறுகிறான்.


புற்றிகபுரி 

மண் நிகழ்ந்த முதல் தச்சனின் மகன் த்வஷ்டா அமைத்த மகாவீரியமென்னும் நகர் இந்திரலோகத்தை வெல்லும் சிறப்பு கொண்டிருப்பதை அறிந்த இந்திரன் அதை அழிக்கிறான். தனது படைப்பு கண் முன் அழிந்ததை எண்ணி த்வஷ்டா கொண்ட வஞ்சத்தின் உருவாக திரிமுகன் என்னும் மும்முகம் கொண்ட மைந்தன் பிறக்கிறான். மும்முகன் (திரிசிரஸ்) பேருருவ மலை என மண்ணில் திகழ்கிறான். அவனது பெரும்புகழ் நாளும் வளர்கிறது. அவன் புகழ் விண்ணுலகை அடைகிறது. மீண்டும் மனம் குமைந்த இந்திரன் தனது சிற்பியைக் கொண்டு அம்மலையை மும்முகம் கொண்ட சிலை என செதுக்கி முடிக்கிறான், அதன் மேல் தன் மின்படையைச் செலுத்தி வீழ்த்துகிறான் இந்திரன். மும்முகனின் குருதி ஊறிப்பெருகி மும்மடங்கு பழியை அமராவதியைத் தொடுகிறது. 


திரிசிரஸின் இறப்பால் உளமுடைந்த த்வஷ்டா பிரஹஸ்பதி சொல்படி அணையாத அனலில் தன் படைப்பை நிகழ்த்த வேண்டுமென உளம் கொள்கிறார். அணையாதெரியும் அனலென்பது உயிரென அறிகிறார். சிம்மப்பிடரியும் சிறகும் நாகங்களின் உடலும் யானையின் தந்தங்களும் கொண்ட ஒரு மகனை விழைந்து விருத்திரனைப் பெறுகிறார். அவன் யாராலும் வெல்ல முடியாத பெருங்கோட்டையை அமைக்கும்படி சிதல்குலங்களின் தலைவர்களிடம் வேண்டிக்கொண்டு ஆயிரம்புற்றுகளை எழுப்பி தனக்கு ஒரு கோட்டையை அமைக்கிறான். முடிவின்றி எழுந்து கொண்டே இருக்கின்றன சிதல் புற்றுகள், அந்நகர் புற்றிகபுரி என்றழைக்கப்படுகிறது. சிதல் என்பது சிற்றுயிரல்ல கோடானுகோடி உடல்களில் எரியும் உயிரின் பெருந்தொகையாகிய பேருயிர் அது என்றறிந்து சிதல்களின் அருள் பெற்று விருத்திரன் அமைத்த நகரம் புற்றிகபுரி.


அக்கோட்டை குறித்த சித்திரம்:


"அன்னம், பிராணம், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் என அவை ஐந்து பெருஞ்சுற்றுகள். முதலில் இருந்த அன்னம் செவி, மூக்கு, விழி, நாக்கு, தோல் என ஐந்து. பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என பிராணம் ஐந்து. மனம் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம், பூர்ணம் என ஐந்து. ஸ்தவிரம், ருஜு, ஆலயம் என விஞ்ஞானம் மூன்று. தத்பரம், பரம் என ஆனந்தம் இரண்டு. இருபது வட்டங்களுக்குப் பின்னர் எழுபத்திரண்டு நாடிகளின் வளையங்கள். பின்னர் காலம், நியதி, கலை, வித்யை, ராகம், புருஷன் என்னும் வளையங்களுக்குப் பின் மாயாவளையம். அதற்குள் இருந்தது ஏழு அடுக்குகள் கொண்ட விருத்திரனின் மாளிகை. மூலம், சுவாதிட்டம், மணிபூரம், அநாகதம், விசுத்தி, என்னும் ஐந்து நிலைகளில் முறையே ஏவலர், சூதர், காவலர், கருவூலர், அமைச்சர் ஆகியோர் குடியிருந்தனர். ஆஞ்ஞை என்னும் ஆறாம் தளத்தில் விருத்திரனின் இருப்பிடம். ஏழாம் நிலையில் உச்சியில் இருந்த சகஸ்ரத்திலிருந்து அவன் விண்ணில் எழுந்தான்"


கிராதம் யோகப்பயணம் குறித்த பகுதி ஆகையால் முற்றிலும் யோக மண்டலங்களாக உடலைக் குறிக்கும் சித்திரமாகவும் இது இருக்கிறது.  


அவனது புகழ் கண்டும் உயிருள்ள கோட்டையை வெல்ல முடியாதென்று அறிந்தும்  இந்திரன் அச்சம் கொள்கிறான்.  அமராவதி சரிய இந்திரன் ஓடி ஒளிகிறான். விருத்திரன் விண்ணுகரசனாகி மண் மறைந்த முதல் மைந்தர்களை விண்ணேற்றியதும் த்வஷ்டா உடலை உதிர்க்கிறார். விருத்திரேந்திரனின் அரசு ஆயிரமாண்டுகாலம் கோல் கொள்கிறது. பொன்வண்டென அமராவதியிலிருந்து தப்பி ஓடிய இந்திரன் சதகூபம் என்னும் பெருங்காட்டில் ஒளிந்திருக்கிறான். நாரதர் அவனைத் தேடி அவன் கடமையைக் கூறி அமராவதியை மீட்க சொல்கிறார். 


இந்திரன் வருணனை துணைக்கழைத்து அலைநுரையை வாளென ஏந்தி புற்றிகபுரி மீது போர் தொடுக்கிறான்.  வருணனின் படைகளான நீலநீரலைகள் நாகபடமென சிதல் நகர் மீது படையெடுக்கின்றன. அசுரகுலத்தோர் விரைந்து பரவும் புல் வகைகளைத் தேர்ந்து நகருக்கு கொண்டுவருகின்றனர். நாளுக்கு இருமடங்கென பெருகும் திரணம், நாளுக்கு மும்மடங்கென பெருகும் குசம், நாளுக்கு ஐந்து மடங்கென பெருகும் உதம், நாளுக்கு ஏழுமடங்கெனப் பெருகும் கேதம் என்னும் நால்வகைப் புற்கள் புற்றிகபுரியைச் சுற்றி விதைக்கப்பட்டு புல் வளர சிதல் புற்றெழுகிறது. 


பன்னிரு ஆண்டுகள் புற்றுகளுக்கும் அலைகளுக்குமான சலியாப் போருக்குப் பின்னர் புற்றிகபுரி மண்ணில் வீழ்கிறது. அமராவதியை இந்திரன் மீட்கிறான். விருத்திரனின் மைந்தன் என்றாகி பின்னர் விருத்திரனை அழிக்கிறான் இந்திரன்.


- மேலும்



186 views

Recent Posts

See All

Comments


தொடர்புக்கு : vazhi.travel@gmail.com 

சுவாரஸ்யமான பயண கதைகளை வாசிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் !

இணைந்தமைக்கு நன்றி !

© 2022 vazhi.net  அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page