top of page

வாழிய நிலனே - 8

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.


(முதற்கனல் 28: தீச்சாரல் ஓவியம்: ஷண்முகவேல்)


"விதர்ப்பமும் நிஷதமும் அரசென்பதையே அறியா மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் கொண்டது. ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ள இப்பகுதியில் போர்களும் பூசல்களும் பிற பகுதிகளைப் போல இல்லை என்று நீர்க்கோலம் சொல்கிறது.

               

வெண்முரசு காட்டும் இடங்கள்


விதர்ப்பம்


விதர்ப்பம் வரதா என்னும் பெருநதி ஓடும் அழகிய நாடு. வடக்கே முகில்சூடி எழுந்த மலைகளும் காடுசெறிந்த பெருநிலவிரிவுகளும் கொண்டது. விதர்ப்பத்தின் தலைநகரம் கௌண்டின்யபுரி. கௌண்டின்யபுரியின் மாளிகைகள் அனைத்துமே பின்புறம் வரதாவை நோக்கி நீண்டிருக்கிறது. வசந்தமெழுகையில் கொன்றை பூப்பதன் முன் வரதா பூத்துவிடுவாள் என்பது சூதர் பாடல். மலைச்சரிவில் அமைந்திருந்த கௌண்டின்யபுரி படிகளாக இறங்கிச்செல்லும் மாளிகை முகடுகளால் ஆனது. மாளிகைகள் கருங்கற்களாலான சுவர்கள் கொண்டவை. அதனால் இரவுகளில் குளிர்ந்து கோடையிலும் சற்றுக் குளிர்ந்திருக்கும் தன்மை கொண்டவை என்ற குறிப்புகள் இந்திரநீலத்தில் ருக்மிணியின் கதையில் வருகின்றன.


விதர்ப்பமும் நிஷதமும் அரசென்பதையே அறியா மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் கொண்டது. ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ள இப்பகுதியில் போர்களும் பூசல்களும் பிற பகுதிகளைப் போல இல்லை என்று நீர்க்கோலம் சொல்கிறது.


விதர்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடக்கின்றனர். விதர்ப்பத்தின் காடு இலைகள் உதிர்ந்து உயரமற்ற மரங்களும், குற்றிலை செறிந்த முட்புதர்களும் கலந்து மான்களின் சலசலப்பும் பாம்புகளும் கீரிகளும் கடந்தோடும் கலைவோசையும் தலைக்குமேல் எழுந்து சிறகடித்துக் கூவிய பறவைகளின் கூச்சல்களுமாக இருக்கிறது. சீவிடு ஒலி சுழன்று சுழன்று உடன்வருகிறது.


அங்கநாடு


அங்கதேசம் கங்கைக்கரையில் அமைந்த நிலம் கங்கைக்கரையை நோக்கிச் சரிந்து வருகிறது நிலம். கங்கையிலிருந்து ஓடைக்கு நீரேற்றும் காற்றாடிகள் காற்றில் சுழல்கின்றன. செம்மண் நிலத்தில் கோடையில் வெள்ளரி பயிரிடப்பட்டிருக்கிறது. கங்கைக்கு அருகில் தோட்டங்கள் இருக்கின்றன, விலகிச் செல்லும்தோறும் தோட்டங்கள் குறைந்து, இறுகிய செம்மண்ணில் கூழாங்கற்கள் செறிந்த சாலையாக மாறி, இருபக்கமும் கருகிய பாறைகள் மட்டும் பரவியமர்ந்திருந்த சிவந்த மேட்டுநிலம் காய்ந்த புல்கூட்டங்களுடன் தெரிகிறது. நிழலே இல்லாத அந்த எல்லைப்பகுதியில், நீருக்காக ஊற்றைத் தேடி இளவயது கர்ணன் செல்லும் போது அப்பகுதியின் காட்டின் வர்ணனனை வருகிறது.


நூற்றுக்கணக்கான குளம்புத்தடங்களும் நகத்தடங்களும் செம்மண்ணில் பதிந்திருந்ததைக் கொண்டு ஊற்று இருக்கும் இடத்தை கண்டுகொண்டு, பாறை இடுக்குகள் வழியாகச் சென்ற சிறிய பாதை பலமுறை சுழன்று இறங்கிச்செல்ல, செக்கச்சிவந்த புண்போலத் ஒரு குட்டை, பாறையிடுக்குகளில் இருந்து ஊறி ஓடிவரும் நீர் தேங்கும் குட்டை காணப்படுகிறது. அத்திமரங்களும் மகிழமரங்களும் இளைய ஆலமரமும் சுற்றி நிற்கின்றன. தைலப்புல் படர்ந்த அப்பகுதியில் பிடரி விரிந்த ஆண் சிம்மம் ஒன்று படுத்திருந்தது.அங்கே அவை அரச குழுவைத் தாக்க, கர்ணன் அப்போதிருந்த அங்க அரசனை சிம்மங்களிடம் இருந்து காக்கிறான். சூதனால் காப்பாற்றப்பட்டது இழுக்கு என்று அவனைக் கொல்ல முற்படும் அரச வீரர்களிடம் இருந்து அவன் வில்வன்மையால் எளிதாகத் தப்பி அங்க நாட்டை விட்டு அஸ்தினபுரிக்கு தாய் தந்தையருடன் வெளியேறுகிறான்.


சம்பாபுரி


ஒரு காலத்தில் தர்ப்பைமண்டிய சதுப்பாக இருந்த அந்நிலம் சம்பா நதிக்கரையில்(மாலினி நதி) இருந்ததால் சம்பாபுரி என்ற பெயர் பெறுகிறது. பலியின் மைந்தனான அங்கன் என்பவரால் அமைக்கப்பட்டமையால் அங்க நாடு என்று பெயர் பெறுகிறது. சம்பாபுரியிலும் சூரியனார் கோயில் இருக்கிறது.


சம்பாபுரியின் அனைத்துத்தெருக்களும் மாலினியிலிருந்தும் கங்கையிலிருந்தும் தொடங்கி நகர் நடுவே இருந்த சூரியனார் ஆலயத்தையே சென்றடைகின்றன. அங்க தேசத்தின் தலைநகராகிய சம்பாபுரி, சூரியபாதையை கணக்கிட்டு கலிங்கநாட்டு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குருதிச்சாரலில் அங்கநாட்டு சம்பாபுரியின் விரிவான நகரமைப்பு வருகிறது. நகரம் முழுமையான வட்டவடிவமாக அமைக்கப்பட்டு அதன் நடுவே ஏழு முகடுகள் கொண்ட கோபுரத்துடன் சூரியனின் பேராலயம் இருக்கிறது. சகடத்தின் இருபத்துநான்கு ஆரங்களாக பாதைகள் எழுந்து வட்டமான கோட்டையைச் சென்றடைந்து உட்பக்கப் பெருஞ்சாலையில் இணைகின்றன. ஆறு வாயில்கள் கொண்ட சம்பாபுரியின் கற்கோட்டைக்குமேல் இருபத்துநான்கு காவல் மாடங்கள் அச்சாலைகளை நோக்கி திறந்திருக்கின்றன. அர்க்கபுரியின்(கோனார்க்) சூரிய தேவன் ஆலயம் போன்ற வடிவத்தில் செந்நிற மென்கற்களைக் கொண்டு அந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.


ஆலயத்தின் வெளிச்சுற்றில் பாரதவர்ஷத்தின் பெருநதிகளே அறுபத்துநான்கு யோகினி அன்னையராக கோவில் கொண்டு இருக்கிறார்கள். இது போன்ற சௌஷாத் யோகினி கோயில் என்று அழைக்கப்படும் அறுபத்து நான்கு அன்னையரின் பல ஆலயங்கள் ஒரிசாவில் இருந்து மத்தியப்பிரதேசம் வரைக்கும், அதாவது அன்றைய கலிங்கம் முதல் விதர்ப்பம் வரைக்கும் இருந்திருக்கின்றன என “கதிரவனின் தேர்” என்ற பயணக்கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.


மகதம்


மகாபாரதக் கதை நிகழும் காலகட்டத்தில் அஸ்தினபுரிக்கு இணையாக வலுவான அரசாகத் திகழ்கிறது மகத அரசு. மகதத்துக்கு கிழக்கே (இன்றைய பீகாரில்) இருந்த வனப்பகுதியை சேர்ந்த தொல்குடியினர் ஜரர்கள். எப்போதும் மழைபொழியும் அடர் வனம் அது. அதனுள் சிறு குகைகளிலும் பொந்துகளிலும் வாழ்ந்த ஜரர்கள் குறிய உடல் கொண்டிருக்கின்றனர். இடையறாத மழை ஈரம் அவர்கள் தோலை சுருக்கம் கொள்ளச் செய்கிறது. இளமையிலேயே முதிய தோற்றம் கொண்டவர்கள் என்ற பெயரில் அவர்கள் வணிகர்களால் ஜரர் என்றழைக்கப்படுகின்றனர்.


“மகதம் கங்கைப்பெருக்கால் காக்கப்படுவது. கண்டகி, மகாசோணம், சதாநீரை, சரயூ என நீர்ப்பெருக்குள்ள ஆறுகளால் சூழப்பட்டது. நூற்றுக்கணக்கான சிற்றாறுகள் மழைக்காலத்தில் சினம்கொண்டிருக்கும். பத்மசரஸையும் காளகூடத்தையும் ஏகபர்வதத்தையும் கடந்து மழைக்காலத்தில் படையென எதுவும் ராஜகிருஹத்தை நெருங்க முடியாது" என்று கர்ணனின் கூற்றால் மகதத்தின் எல்லைகளை அறியலாம்.


சேதி நாடு


நூற்றுக்கணக்கான ஓடைகள் சிற்றருவிகளாக வந்து சேர, தேன் நிறத்தில் வெள்ளம் பெருகிச் செல்லும் வேத்ராவதி பாயும் நாடு சேதி. சூக்திமதி சேதியின் தலைநகரம். தமகோஷர் அதன் அரசராக இருக்கிறார். மதுவனத்து யாதவர் குலத்தில் வந்த சுருதகீர்த்தியை மணந்து பெற்ற மகன் சிசுபாலன்.


நீர்க்கோலத்தில் தமயந்தியின் கதையிலும் சேதி நாடு வருகிறது. தமயந்தியின் காலத்திலேயே கலிங்கத்திலிருந்து சேதிக்கும் அவந்திக்கும் மாளவத்திற்கும் செல்லும் வணிகப்பாதைகள் இருந்திருக்கின்றன. அப்போது சேதிநாட்டரசராக இருந்த உபரிசிரவசு சூக்திமதியில் அண்டை நாட்டு அரசர்கள் அனைவரையும் வரவழைத்து அப்பாதைகளைப் பேணுவதற்கான 'ஷோடசபத சம்யுக்தம்' என்றழைக்கப்பட்ட பொதுக்காவல் அமைப்பொன்றை உருவாக்குகிறார். சேதி காலப்போக்கில் சிறிய நாடாகிறது. நளனைப் பிரிந்து அலையும் தமயந்தி வணிகர் குழுவுடன் சேதி நாடு நோக்கி செல்கிறாள். அப்பாதை "விந்தியமலை கடந்து சேதியை அடைவதென்பது காட்டாறுபோல பள்ளத்தாக்குகளில் மலைகளை வளைத்து நெளிந்து செல்லும் பாதைகளில் நாளும் பொழுதுமென்றிலாது சென்றுகொண்டே இருப்பதுதான். " என்று சொல்லப்படுகிறது.


பாண்டவர்களும் திரௌபதியும் கானுறை காலம் முடிந்து இமயமலைச்சாரலில் இருந்து கிளம்பி திரிகர்த்த நாட்டின் சமவெளிக்காடுகளில் நடந்து உத்தர குருநாட்டு வழியாக சிற்றூர்களை எல்லாம் கடந்து இரவில் காட்டுக்குள் சமைத்தும், சோலைப்புதர்களுக்குள் ஓய்வெடுத்தும், கங்கைக் கரையோரமாக காசியை அடைந்து, பின் அயோத்தியைக் கடந்து சேதிநாட்டை அடைகின்றனர். மேகலகிரி என்னும் இடத்தருகே மலைப்பாதையைக் கடந்து விந்தியமலையின் பன்னிரு மடிப்புகளை ஏறி இறங்கி குண்டினபுரிக்குச் செல்லும் பாதையில் நடக்கிறார்கள். கோடைக்காலமாதலால் விந்தியமலைகளின் காடுகள் வறண்டு காற்றில் புழுதி நிறைந்திருக்கிறது, உணவின்றி கண்ணில் படும் விலங்குகளெல்லாம் மெலிந்து சீற்றம் கொண்டிருக்கின்றன. சேதி நாட்டைக் கடந்து விதர்ப்ப நாட்டில் சௌபர்ணிகை ஆற்றின் கரையில் இருந்த தமனரின் தவக்குடிலுக்கு சென்று சேர்கிறார்கள்.


புண்டரம்


தீர்க்கதமஸுக்குப் பிறந்த நான்கு மைந்தர்களால் அங்கம் வங்கம் கலிங்கம் சுங்கம் புண்டரம் என்னும் ஐந்து நாடுகள் எழுகின்றன. வங்கத்தின் வடமேற்கே கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடத்தில் நூற்றியிருபது சிற்றூர்கள் கொண்ட குறுநாடு புண்டரம் . அங்குள்ள வெண்நாணல்பரப்பின் பொருட்டு அப்பெயர் பெறுகிறது. கோரைப்புல் கொய்து மீன்பிடிக்கும் கூடைசெய்து வாழும் மீனவக் குடிகளன்றி பிறர் வாழாத சதுப்பு நாடு அது. சேற்றுமணம் சுமந்து ஒழுகும் கந்தகியின் படுகையில் கோரைப்புல்வெளிகளுக்கு நடுவே மூங்கில்கழிகளை சதுப்பில் ஆழ ஊன்றி உருவாக்கப்பட்ட கூம்புக் குடில்களில் மீனவர்கள் வாழ்கின்றனர். நாணல்களைப் பின்னி உருவாக்கிய படகுகளில் சென்று சிற்றோடைகளில் மீன்பிடிக்கின்றனர். சதுப்பில் முதலைகளை வேட்டையாடி அவ்வூனை உண்கின்றனர். அவர்கள் கொண்டு விற்கும் முதலைத்தோலிற்கு சந்தைகளில் மதிப்பு உருவாகத்தொடங்கியபோது காலப்போக்கில் புண்டரம் ஒரு சிறுநாடென வங்கத்திற்கு திறை கொடுக்கும் சிற்றரசாக ஆகிறது.


நிஷதம்-விராடபுரி


அருகருகே அமைந்த நிஷதம் மற்றும் விதர்ப்பம் ஆகிய நீண்ட பொது எல்லை கொண்ட நாடுகள் விந்தியமலையடுக்குகளால் ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நிஷதம் பாரதவர்ஷத்திலேயே எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு காடுகள் கொண்ட நாடு எனப்படுகிறது. விராடபுரிக்கு பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் ஒவ்வொருவராக மாற்றுருக்கொண்டு வந்து அரண்மனை சார்ந்த வேறு வேறு பணிகளில் அமர்கின்றனர்.


விராடபுரியின் வடக்கே, கோதையை நோக்கிப் பாயும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே மலைச்சரிவில் தப்தோர்ணம் என்னும் சிறுகாடு ஒன்று அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருக்கிறது. இரு ஆறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளை வெட்டி உருவாக்கப்பட்ட அந்த ஈரநிலத்தில் மலர்மரங்களும் கனிமரங்களும் நிறைந்திருக்கிறது. வெயிலின் கொடிகள் நுழைந்திறங்கமுடியாத இருள் நிறைந்த செறிவு கொண்டது அக்காடு. ஓடைக்கரைகளில் அரசகுடியினர் தங்குவதற்குரிய கொடிமண்டபங்களும் கிளை விரித்த மரங்களின் கவர்களில் இரவு துயில்வதற்குரிய ஏறுமாடங்களும் அமைக்கப்பட்ட அணிக்காடு.


அங்கு காவல் பணியில் இருக்கும் முக்தன் வற்றாத ஊற்றுகள் கொண்டு சதுப்பென அமைந்திருந்த அக்காட்டைப் பற்றி எண்ணிக் கொள்வதாக வரும் வர்ணனனை:

"மலைகளை முலைகளாகக்கொண்டு கோதையை ஆடையென அணிந்து நீரோடைகள் நரம்புகளென பின்னிப்பரவியிருக்க மல்லாந்து கிடந்த அந்நிலமகளின் தொடைஇடை சிறுகருங்காடு என்று அது அவனுக்கு தோற்றமளித்தது. "


ஒவ்வொரு நாளும் காவல் பணியில் அமர்ந்திருக்கையில் அவன் விழிகள் வழியாக இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளும், உச்சிக்கிளையில் கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளையும், கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களையும், கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளையும், உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளையும், காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களையும் காண முடிகிறது.


மிதிலை


சொல்வளர்காடு பகுதியில் மிதிலையின் சித்திரம் வருகிறது, பாலென நுரைபொங்கும் தூத்மதி (கோசி நதியாக இருக்கலாம்) எனும் ஆறு மிதிலையை அணைத்து ஓடுகிறது. ஜலதையும் பலானையும் கமலையும் ராத்வதியும் ஆகிய துணை நதிகள் மலைச்சேற்று நிறங்களுடன் பெருகி அந்த நதியுடன் இணைகின்றன. இமயத்தின் குளிர் ஊறிவந்த அந்த ஆறுகளால் மிதிலை எப்போதும் குளிர்ந்திருந்தது.


ஐந்து ஆறுகளின் வண்டலால் ஆன அந்நிலம் சந்தன நிறமான அலைவடிவாக படிந்திருந்த படுகைகளைக் கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிய தாரிமொழியில் மண் மிதி எனப்பட்டது. அதுவே மிதிலை என்றாகிறது. அங்கு வளமான சிறுகழனிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பச்சைப்படிக்கட்டுகள் போல அவை மலைச்சரிவில் இறங்கி ஐந்து ஆறுகளை சென்றடைகின்றன. மிதிலைப் பகுதி இன்றும் ஆறுகள் கொண்டுவந்து சேர்க்கும் வண்டல் மண்ணால் வளம் நிறைந்த நிலமாகவே இருக்கிறது


நாகர் நிலம்


பாரதவர்ஷத்தை நாகலந்தீவு என்றழைக்கும் நாகர்கள் இம்மண்ணின் வேர்ப்படலம் என நிறைந்திருந்த தொல்குடியினர். ஆயிரத்தெட்டு குடிகளாகப் பெருகி நாகலந்தீவை நிறைத்தவர்களே நாகர்கள் என நாகர்களின் கதையை கர்ணனிடம் சொல்லும் மூதாட்டி "நாகலந்தீவின் வடநிலம் சாரஸ்வதம். கிழக்கு கௌடம். நடுநிலம் வேசரம். கீழ்நிலம் திராவிடம்" என்று பண்டைய பாரத நிலத்தின் எல்லைகளையும் கூறுகிறாள். சரஸ்வதி பல்லாயிரம் கிளைகளாகப் ஓடி வளப்படுத்திய சாரஸ்வதநிலமே நாகர்கள் பெருகி வாழ்ந்த நிலம் என்கிறாள். மண்மறைந்த சரஸ்வதி நதியின் அருகிருந்த நாகோத்ஃபேதம் என்னும் அடர்வனத்திலேயே நாகர்குலம் தோன்றியது என்கிறாள்.


மச்சர் நிலம்


விகர்ணன் மனைவி தாரை மச்சநாட்டை சேர்ந்தவள். அங்கு ஓடும் சர்மாவதி சேற்றுநதி. அவர்களின் இல்லங்கள் அந்நதியின் இரு கரைகளிளும் உள்ள சதுப்பின் மீது மூங்கில்கால் ஊன்றிக் கட்டப்பட்டிருக்கிறது. சதுப்பில் உள்ள கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்ப குடில்களுக்கு அடியில் இஞ்சிப்புல்லிட்டு புகையெழுப்புகிறார்கள். அப்புகை ஊரெங்கும் எப்போதும் மூடியிருப்பதால் புகையில்லாத காட்சிகளை காண்பது அரிது என தாரை துச்சாதனன் மனைவி அசலையிடம் சொல்கிறாள். நீரலைக்கு இருபுறமும் கோரைப்புல்லின் அலைகள், அந்த நீரில் படகுகள் செல்வதைப் பார்த்து அமர்ந்திருந்தால் வீடுகள் ஒழுகிச்செல்வதைப்போலத் தோன்றும் என்கிறாள். மேலும் ஆற்றின்மேல் எப்போதும் நீராவிப் படலம் இருப்பதால் காட்சிகள் மழையினூடாக பார்ப்பது போல நெளிந்தாடித்தான் தெரியும் என்கிறாள்.


இது போன்ற சதுப்பு நிலக்குடியிருப்புகள் இன்றும் உள்ளன. கம்போடியாவின் மாபெரும் ஏரியான டோன்லே சாப் மீது சென்ற படகுப்பயணத்தை நினைவு படுத்தியது இப்பகுதி. அங்குள்ள மக்களின் குடில்களும், பள்ளிகளும், மருத்துவமனையும் , மொத்த வாழ்வும் இது போன்றே நீர்வழிப் படூஉம் புணை போன்றே இருக்கிறது.


இதே மச்சர்குலத்திலிருந்து பிறந்தவர்களே விராட நாட்டில் வரும் கீசகர்களின் குலமும் என்ற கதை நீர்க்கோலத்தில் வருகிறது. சர்மாவதிக்கு அப்பால் காடுகளில் வாழ்ந்த காலகேயர்களென்னும் அசுரகுடியினருடன் கீசகர்கள் மணவுறவு கொள்கின்றனர். காலகேயர்களுடன் உறவு கொண்ட குலம் என்பதால் காலப்போக்கில் அவர்கள் நிஷாதர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.


சர்மாவதியின் கரையிலேயே உஜ்ஜயினி நகரமும் ஒரு துறைமுகத்தைக் கொண்டிருந்ததது என்பதை இந்திரநீலத்தில் மித்திரவிந்தையின் கதைப்பகுதியில் காணலாம்.

சர்மாவதி நதி முழுவதும் நிஷாதர் நிலத்தில் பெரும் தொழிலாக நிகழ்ந்த மரவுரியாடை படகுகளில் ஏற்றிச் செல்லப்படுவதை பிற்காலத்தில் வண்ணக்கடல் இளநாகன் பார்க்கிறான்.


பஞ்சஜனம்


சாந்தீபனி குருநிலையின் முதன்மை ஆசிரியர் அவரது இளமைக் காலத்தில் தந்தையின் பெரும் கனிவென்னும் சிறையிலிருந்து தப்புவதற்காக யாருமறியாமல் கிளம்பிச்சென்று விடுகிறார். சாந்தீபனி காட்டிலிருந்து தெற்கே உஜ்ஜயினி வந்து பிறகு மாளவத்திற்கு வடக்கே துவாரகைக்கு தென்னெல்லையாக அமைந்த பிரபாசக் கடல்துறைக்கு செல்கிறார்.

"அது கடல் நிலத்திற்குள் பீரிட்டு வந்து உருவாக்கிக்கொண்ட ஒரு பெருஞ்சுழி. அதன் விளிம்பில் இறங்கினால் நீர் நம்மை அள்ளி நெடுந்தொலைவுக்கு சுழற்றிக் கொண்டுசென்று மறு எல்லையிலுள்ள சிறிய குகைவாயிலுக்கு முன் விட்டுவிடும். அக்குகை அதனுள் உள்ள இயற்கையான அருமணிகளால் ஒளிகொண்டது" என்று வியாசமாலிகையில் அறிகிறார்.


அப்பகுதியில் வாழ்ந்த ஐந்து தொல்குடிகள் ஒன்றாக இணைந்து பஞ்சஜனம் என்ற அரசு அமைந்திருந்தனர். அந்நிலம் சங்கு வடிவில் இருப்பதால் சங்ககிரி என்றும் பெயர். இக்கதை நடக்கும் காலகட்டத்திற்கு சிலநூறாண்டுகளுக்கு முன்பு பெருங்கடல்கொந்தளிப்பு ஒன்று நிகழ்ந்து சங்ககிரி முழுமையாக கடலலைகள் மூடுகின்றன. நீர் வடிந்த பிறகு பாறையிடுக்குகளில் எல்லாம் சிப்பிகளும் சங்குகளும் சோழிகளும் நிறைந்திருப்பதை அங்கு வாழும் குடிகள் காண்கின்றனர். இரு பாறைகளுக்கு நடுவே வெண்பன்றிக்குட்டி போல கிடந்த பெரிய வலம்புரிச் சங்கு ஒன்றை ஒருவன் கண்டடைகிறான். அவன் அக்குடிகளின் தலைவன் என்றாகிறான். சங்கனின் வழிவந்த அரசர்கள் எல்லைகளைத் தாக்கிக் கொள்ளையிட்டு பொருள் வளர்க்கின்றனர்.


அங்கே சென்று கற்றோன் என சிறப்புடன் அமைகிறார் சாந்தீபனி குருநிலையின் இளையோன். அவரது தந்தையாகிய சாந்தீபனி குருநிலையின் அன்றைய முதன்மை ஆசிரியரின் ஆசிரியக்கொடையின் பொருட்டு கிருஷ்ணன் இவரை அழைத்துச் செல்ல அங்கே வருகிறான்.


இருபக்கமும் இரு மலைகள் கடலுக்குள் இறங்கிச் சென்றிருக்க நடுவே நின்றிருக்கும் நிலம் ஆதலால் பஞ்சஜனத்தின் கடற்கரை பேரலைகள் எழுவது. அங்கே கடல் பெரும் சீற்றம் கொண்டிருக்கிறது. அலைகள் கொப்பளிக்கும் கடலோட்டமும் காற்றும் அப்பாறைகளின் அமைப்பும் இணைந்து அக்கடல் பஞ்சஜனர் மட்டுமே அவ்வலைகளில் ஆட இயல்வதாயிருக்கிறது. ஒருநாள் யானை மீதமர்ந்தவனென, கடல் வழி அலை மேல் ஏறி கரை வந்தணைகிறான் இளைய யாதவன். அந்நொடியே இளையோர் மற்றும் பெண்களின் மனங்களை வென்று சங்கனையும் தனிப்போருக்கு அறைகூவி வெல்கிறான். அங்கிருந்து அவரை அழைத்துச் செல்கிறான்.


சிந்து நாடு


சிந்துநாட்டின் நில அமைப்பு குறித்து துச்சளையின் வாயிலாக வெண்முரசு விவரிக்கிறது. பெரும்பகுதி பாலைநிலமாக இருந்தாலும் கடல் போல கரைபுரண்டோடும் சிந்து நதி அந்நாட்டை வளமிக்கதாக்குகிறது. சிந்து நதியின் நீரை முறையாக பாசனத்துக்கு ஏற்ற வகையில் கிளை பிரித்து, தேக்கி, கால்வாய்களை உருவாக்கி வயல்களை அமைத்திருக்கிறார்கள்.


சிந்துநாட்டில் நான்கு விதமான குடிகள் இருக்கின்றனர் என துச்சளை விவரிக்கிறாள். வேட்டையாடி வாழும் தொல்குடியினர், வேளாண்மை செய்யும் மருதநிலக்குடிகள், கால்வாய்களை தங்கள் ஆட்சியில் வைத்திருக்கும் போர்க்குடிகள், சிந்துவிலிருந்து வந்து வணிகம் செய்யும் வணிகக்குடிகள் ஆகிய நால்வகையினர். எனில் தொல்முறைமைப்படி வேட்டைக்குடியினரே அவைகளில் முதன்மை அமர்வு உரிமை கொண்டவர்காளாக இருக்கிறார்கள். ஆலயங்களிலும் பூசனை உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜயத்ரதனின் மூதாதை பிரகதிஷுவின் காலத்திலேயே ஷத்ரிய அரசு அமைகிறது. சிபி தேசத்திடம் இருந்து சிந்துவை மீது, ஆட்சியை அவர் உறுதிப்படுத்துகிறார். பிரகத்ரதர் காலத்தில் சிந்து ஒருங்கிணைக்கப்படுகிறது.


பின்னர் பிருஹத்காயர் வெல்லமுடியாத அரசராக உருவெடுக்கிறார். எனவே அவரது மகனாகிய ஜயத்ரதனின் காலத்தில் சிந்து வல்லமை பொருந்திய அரசாகத் திகழ்கிறது.


- மேலும்



58 views

Recent Posts

See All

コメント


bottom of page