வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.
(முதற்கனல் 27 : தீச்சாரல், ஓவியம்: ஷண்முகவேல்)
"மண்ணிலிருந்து வரும் எந்த மாசும் மலையில் படிவதில்லை என்பார்கள். பனியைக் கடந்து எதுவும் செல்வதில்லை. நிகர்நிலத்தின் புழுதிப்புயல், நோய்கள், மானுடரின் மொழிகள், வஞ்சங்கள். மானுடரின் நாணயங்களுக்குக் கூட அங்கே மதிப்பில்லை.”
வெண்முரசு காட்டும் இடங்கள்
இடும்பவனம்
அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் இடும்பவனத்தில் முட்களும் பாம்புகளும் நச்சுச்செடிகளும் பெரு மரங்களும், சிற்றோடைகளும் நிறைந்திருக்கின்றன. ஒற்றையடிப்பாதை கூட இல்லாத முட்கள் செறிந்த காட்டுக்குள் பீமன் தன் கனத்த கால்களால் புதர்களை தழையச்செய்து வழியை உருவாக்க பாண்டவர்கள் பின்தொடர்கிறார்கள். கருங்குரங்குகள், புலிகள், யானைகள், பன்றிகள், நாகங்கள், நீரில் மீன்களும், முதலைகளும் நிறைந்திருக்கும் அடர் காடு. பாண்டவர்கள் அக்காட்டில் தங்குவதற்கு மூங்கிலை தூண்களாக்கி ஈச்சஓலைகளை முடைந்து கூரையாக வேய்ந்து குடில் உருவாக்குகிறார்கள். கீழே தைலப்புல்லை அடுக்கி நெருப்பிட்டு புகையவைத்து மேலே உறங்குகிறார்கள்.
இலைகளில் இருந்து ஒழியாது நீர் சொட்டியபடி இருக்கும் கானகம். பீமன் நடந்து செல்ல இலைத்தழைப்புகளுக்கு மேலே குரங்குகள் அவனுடன் வருகின்றன. அவனது அசைவில் இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகள் எம்பிக் குதித்து அகல்கின்றன, பச்சைப்பாம்புகள் வளைந்து விலகுகின்றன. பீமன் அங்கிருந்த குரங்குகளோடும் யானைகளோடும் உரையாடுகிறான், நட்பாகிறான். அங்கே கான்மகள் இடும்பியை வென்று அவள் காதலை ஏற்று குந்தியின் ஆசியோடு அவளை மணக்கிறான்.
இடும்பர்களின் வீடுகள் மரங்களில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள் போல அமைக்கப்பட்டிருப்பதைப் பாண்டவர்கள் பார்க்கிறார்கள். அடர் கானகம் ஆதலால் தரையில் மட்கிய மரப்பட்டைகளில் நச்சு விரியன் பாம்புகள் அதிகம் இருப்பதால் அவ்விதம் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கிறார்கள். இளம் மூங்கில்களையும் பிரம்புகளையும் வளைத்து வளர்த்து குடில்களைக் கட்டி உள்ளே புல் அடுக்கி சிறந்த படுக்கைகளை அமைத்து கட்டப்பட்ட குடில்கள்.
பீமன் அவர்களது திருமணத்தை ஏற்க மறுக்கும் அவர்களின் குடித்தலைவன் இடும்பனைப் போரில் வென்று கொல்கிறான். இடும்பர்களின் மூதாதை யரின் நடுகல் நிலத்தில், மறைந்த இடும்பனுக்கு நடுகல் நாட்டப்படுகிறது. மரங்களேதும் இல்லாத சிறிய குன்றின் உச்சியில் சீரான இடைவெளியோடு ஐந்து ஆள் உயரமான கனத்த பட்டைக்கற்கள் நடப்பட்டிருக்கின்றன. அங்கே அவனும் தொல்குடியோடு கல்நிற்கிறான். இது உலகமெங்கும் பழங்குடிகள் அனைவருக்கும் இருந்த ஒரு வழக்கம் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் கொடுமணல் பகுதியிலேயே இது போன்ற பெருங்கற்காலத்தை சேர்ந்த நடுகற்கள் இருக்கின்றன.
சாலிஹோத்ரசரஸ்
வாரணாவத எரிநிகழ்வுக்குப் பிறகு இடும்பவனத்தில் சிலகாலம் வாழ்ந்த பிறகு, பாண்டவர்கள் குந்தியுடன் அந்த அடர் கானகத்தின் எல்லையில் இருந்த சாலிஹோத்ரசரஸின் கரையில் சாலிஹோத்ர குருகுலத்தை சென்று சேர்கிறார்கள். ஒரு ஏரிநீர்குளத்தின் கரையில் அமைந்திருக்கிறது அக்குருகுலம். பாரதத்தின் தொன்மையான விலங்கியல் நூலாகிய சாலிஹோத்ர சம்ஹிதை இக்குருகுலத்தால் தொகுக்கப்பட்டிருக்கிறது. சாலிஹோத்ரர்களின் தெய்வமான ஹயக்ரீவரின் சிறிய ஆலயம் அதன் அருகே இருந்த தெய்வவடிவமான ஒற்றை ஆலமரம் ஒரு சிறுகாடு போல விழுதுகள் பரப்பி அதனால் கவ்வியிருப்பது போல இருக்கிறது. இந்த சித்திரம் மரத்தின் வேர்கள் உகிர்களென கோவிலைப் பற்றி விண்ணில் எழப்போவது போன்ற கம்போடியாவின் கோவில்களை நினைவுறுத்தும் ஒரு காட்சி.
சாலிஹோத்ரர்களின் குடில்கள் இருந்த பனிபடர்ந்த புல்வெளியில் நூற்றுக்கணக்கான காட்டுக்குதிரைகள் மேய வருகின்றன.அஸ்வபதம் எனப் பெயர்கொண்ட அப்பெரும்புல்வெளியிலும் அப்பாலிருந்த அரைச்சதுப்பிலும் நூற்றுக்கணக்கான காட்டுக் குதிரைக்கூட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்துப் பழக்கும் கலை பயின்ற வேடர்கள் அங்கே வருவது வழக்கம். அங்கு இருந்த முனிவர்களுக்கும் அவ்வேடர்களுக்கும் இடையேயான உரையாடல் வழியாக சாலிஹோத்ர குருமரபு உருவாகி வந்திருக்கிறது. அங்கே நகுலன் குதிரைகளைக் குறித்து நுணுகிக் கற்கிறான்.
ஏகசக்ரபுரி
கோசலத்தின் சரயு நதிக்கரையில் அமைந்த ரௌத்ரமுகம் என்னும் இடத்தில் சரயு ஆறு பாறைகள் வழியாக நுரைத்துப் பொங்குகிறது. அவ்விடம் படகுகளும் அணுகமுடியாததாக இருக்க, அங்கிருந்த தொல் மலைக்குடிகள் நாணல்களைப் பின்னி உருளைப்படகுகளை உருவாக்கி எளிதாகக் கடந்து வந்து மலைப்பொருட்களை விற்க கோசலத்தின் பிரகதம் என்னும் துறைமுகத்துக்கு வருகின்றனர். உசிநாரர்களின் எல்லை முடிந்து, கோசலத்தின் எல்லை தொடங்குவதன் முன்னம் இருந்த ஏகசக்ரபுரி எந்நாட்டுக்கும் உரியதாக இல்லை. தசரதன் கோசலத்தை ஆட்சி செய்த காலத்திலேயே ஏகசக்ரநகரி எந்த அரசின் கீழும் இல்லாது தனித்து நிற்கிறது என்று சூதர் பாடுகிறார்.
கிருஷ்ணசிலையின் ஊஷரர் மலைக்குடியில் பிறந்த பகன் பலராமரிடம் கதாயுதப் பயிற்சி பெற்று காளகூடத்தின் காட்டின் மேல் படையெடுத்துச் சென்று மலையுச்சியில் கற்களை அடுக்கி சிருங்கசிலை என்ற கோட்டையைக் கட்டி வாழ்கிறான். பகன் பிரமாணகோடியிலும் வாரணவதத்திலும் அமைந்த துறைமுகங்களைத் தாக்கி கலங்களை கொள்ளையிடுகிறான். சிருங்கசிலையில் நூறு கல்வீடுகள் எழுகின்றன. எனவே அவனை ஒடுக்க அஸ்வத்தாமன் ஆளும் சத்ராவதியின் படை காளகூடத்தை முழுமையாக சுற்றிக் கொள்கிறது.
அங்கிருந்து தப்பிப் பிழைத்து தன் வீரர்கள் சிலருடன் காடுவழியாக இருபத்தேழு நாட்கள் பயணம் செய்து உசிநாரபூமியைக் கடந்து சரயு நதியின் கரையில் இருந்த ஏகசக்ரபுரியை அடைகிறான். ஏகசக்ரபுரிக்கு அப்பால் இருந்த சிறிய மலையின் மேலே இருள் நிறைந்த பெரும் பிலம் ஒன்றிருக்கிறது. அதற்குள் ஒரு நீரோடை செல்கிறது. அங்கே பகனும் அவன் வீரர்களும் தங்குகின்றனர். இடும்பவனத்தில் இருந்து காம்பில்யம் செல்லும் வழியில் அங்கே தங்கும் பீமன் அம்மக்களைக் காக்க பகனைக் கொல்கிறான்.
ரேணுபுரி
துரோணர் குருநிலையில் கல்வி மறுக்கப்பட்ட கர்ணன் பரசுராமரைத் தேடி தென்திசை நோக்கி செல்கிறான். சூதர் வழியாக தென்னகத்தில் திருவிடத்தின் முனையில் பரசுராமரின் அன்னை ரேணுகையின் நாடு என்றறியப்பட்ட ரேணுபுரி இருக்கிறது (இன்றைய வட கர்நாடக-ஆந்திர எல்லை) என்றறிகிறான். கோதாவரி நதியைக் கடந்து, மலைக்காடுகளையும் நீரோடும் பேராறுகளையும் வெயில் வெந்து கிடந்த பாழ்நிலங்களையும் கடந்து அங்கே சென்றடைவது உளஉறுதியைக் கோருவது என்று பிரவாகர் என்னும் சூதர் சொல்கிறார். ரேணுநாட்டின் பிரதீபம் என்னும் காட்டுக்குள் பரசுராமரின் குருகுலம் இருப்பதாக விவகர் என்னும் சூதர் வழிகாட்டுகிறார்.
மத்ரதேசம்
குரு குல மூதாதை சிபியின் மைந்தன் அனு தந்தையால் மண் விட்டகலும் ஆணை பெற்று வடக்கே சென்று இமையமலைச்சாரலை அடைகிறார். அப்போது அங்கே மானுடரே இல்லாத இமயச்சரிவில் வேளாண்நிலம் இருக்கவில்லை. ஆண்டுக்கு மும்மாதம் பனி பெய்யும் நிலம் என்பதனால் விளைமரங்களும் இல்லை. விலங்கென இருந்தவை மலையணில்களும் மான்களும் மட்டுமே என்ற சித்திரம் வருகிறது. அனு அத்ரி முனிவரின் மகளாகிய மத்ரையை மணந்து, மலைமாடுகளும் ஆடுகளும் பெருகி மந்தை ஆகி, கழனி பெருகி, அங்கு பின்னர் அமைத்ததே மத்ர நாடு என்ற வரலாற்றை சல்யர் யுதிஷ்டிரனிடம் கூறுகிறார்.
மத்ர தேசம் இமயமலை அடுக்குகளில் இருக்கிறது. அங்கே பூரிசிரவஸ் செய்யும் பயணம் வழியாக அந்த நிலம் கண்ணில் விரிகிறது. விடியலின் முதல் ஒளியில் சிகரங்கள் துல்லியமாகத் துலங்கி வரும் சித்திரம். அது இரவின் கடுங்குளிருக்குப் பிறகு பகலில் இளவெயிலே இருக்கும் கார்காலம். அசிக்னியின் மூன்று வேராறுகளில் ஒன்றான பிரகதியின் கரையில் இருந்து மத்ரநாட்டின் வட எல்லை தொடங்குகிறது. அதன் கரையோரமாகவே மலையிறங்கிச் செல்கிறது மலைப்பாதை. நூற்றுக்கணக்கான சிற்றாறுகளும் மலையோடைகளுமாக இமையத்திலிருந்து இறங்கும் நீரும் வண்டலும் மத்ரநாட்டை ஒவ்வொரு வருடமும் தழுவிச் செல்வதால், அங்கே கற்கள் பரப்பி சாலையிடுவது இயலாதிருக்கிறது. எனவே சேற்றுமண்ணில் மரப்பட்டைகள் அமைத்து சகலபுரிக்குச் செல்லும் புரவிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மத்ரம் இமயமலைச்சாரலில் அமைந்திருந்தாலும் குளிர் முதிர்ந்த காலத்தில் மட்டுமே வெண்பனி பொருக்குகளாக வரும் நிலம்.
சகலபுரி
மத்ர தேசத்து தலைநகரம் சகலபுரி (சியால்கோட்). சகலபுரி முழுக்கவே மரங்களின் மேல் கட்டப்பட்ட நகரமாக இருக்கிறது. இயற்கை வளங்களையே காவல்மாடங்களாகவும் கோட்டைச்சுவராகவும் மாற்றி இருக்கிறார்கள். சேற்றுமண்ணில் மிக உயரமாக வளரும் மணிதேவதாரு மரங்களை நட்டு அவற்றின் உச்சிக்கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டப்பட்ட காவல்மாடம். சாலமரங்களையும் தேக்குமரங்களையும் நெருக்கமாக நட்டு அவற்றின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று பிணைத்து கட்டப்பட்ட பச்சைமரங்களாலான பெருங்கோட்டை. பன்னிரு அடுக்குகளாக நடப்பட்ட மரங்களே கோட்டையின் சுவர், அடிமரங்களின் இடைவெளியில் செறிவாக முட்செடிகள் நடப்பட்டிருக்கிறது. நகருக்குள் செல்ல பெரிய கொடிப்பாலம் அமைக்கப் பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மரங்களில் இருந்து தடித்த வடங்கள் கிளம்பிச்சென்று ஒன்றுடன் ஒன்று பின்னி சிலந்தி வலையென அசிக்னிக்குமேல் பாலமாக அமைந்திருக்கின்றன.
இது மேகாலயாவில் இன்றும் காணக்கூடிய வேர்ப் பாலங்களின் கட்டுமானம். அவ்விதம் ஏழு கட்டங்களாக உயிர்ப்பாலம் நீண்டு செல்கிறது.
கோட்டைக்கு வாயிலென ஏதுமின்றி போர் என்றால் பெரிய மரங்களைக்கொண்டு விரைவில் மூடிவிடமுடியும் வகையில் இருக்கிறது. அரசப்பெருவீதி ஒரு காட்டுப்பாதை போல கிளைகள் கூரையிட இருக்கிறது.அரசப்பெருவீதியின் முடிவில் ஓங்கிய தேவதாருக்கூட்டத்தின் மேல் அரண்மனைகள் அமைந்திருக்கின்றன. நகரெங்கும் ஊறிப் பெருகிய சிற்றோடைகள் இணைந்து வழிந்தோடி கான்கோட்டையை ஊடுருவி மறுபக்கம் அசிக்னி நோக்கி செல்கின்றன. வேறெந்த கோட்டை கட்டுமானமும் நீரைத் தடுக்கமுயன்று வலுவிழக்கும். இந்த நிலம்சார்ந்த கோட்டை அமைப்பு ஒன்றே அந்த ஈரமும் களிமண்ணுமான நிலப்பரப்புக்கு ஏற்றதாக இருப்பதை பூரிசிரவஸ் நோக்குகிறான். பெருமழைக்காலத்தில் அசிக்னி பெருகி நகரில் நிறையும் என்பதால் மென்மரங்களில் குடையப்பட்ட சிறிய படகுகள் ஒவ்வொரு வீட்டிலும் மரக்கிளைகளில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. மழைக்காலத்தில் சகலபுரி மிதக்கும் நகரமென நீருக்குமேல் நின்றிருக்கக்கூடும் என எண்ணிக் கொள்கிறான்.
பால்ஹிகம்
குருகுலத்தில் பிறந்த பால்ஹிகர் தேவாபியின் துறவுக்குப் பிறகு தனது அன்னையின் நிலமான பால்ஹிகத்துக்கு(பலுசிஸ்தான் பகுதி) சென்று விடுகிறார். பால்ஹிகரின் ஏழு மனைவிகள் மூலம் அவரது குருதியில் எழுந்த மைந்தர்கள் அமைத்த அரசுகள் பத்து. மத்ரநாடு(வடமேற்கு பஞ்சாப்), சௌவீர நாடு(பாகிஸ்தான்), பூர்வபால்ஹிகநாடு(வடமேற்கே இமய அடுக்குகளில்), சகநாடு(பால்ஹிக நிலத்துக்கும் மேலே), யவனநாடு (இது இமயமலையின் அடுக்குகளுள்) , துஷாரநாடு(துர்க்மெனிஸ்தான்) ஆகிய ஆறும் முதன்மை அரசுகள். கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் நான்கும் மலைக்குடிகளின் அவையரசுகள்.
இமய அடுக்குகளில் செல்லும் மலைப்பயணம் குறித்த மிக விரிவான சித்திரம் வெண்முகில் நகரத்தில் வருகிறது. பால்ஹிக குலத்தின் பத்து குடிகள் பாரத நிலத்தின் வடமேற்கே மலையடுக்குகளில் வாழ்கிறார்கள். காம்பில்யத்தில் திரௌபதியின் மணத்தன்னேற்பில் கலந்துகொண்டு ஊர் திரும்பும் - மத்திரதேசத்து சல்லியர், சௌவீர நாட்டின் சுமித்ரர், பால்ஹிக நாட்டின் சோமதத்தர் ஆகியோருடன் அவர்களது படைகள். அவர்களுடன் வரும் பால்ஹிக நாட்டின் இளவல் பூரிசிரவஸ் கண்கள் வழியாகவே இம்மலைப்பகுதி முழுவதும் வருகிறது.
மண்ணையும் பாறைகளையும் உமிழும் மலையடுக்குகளுக்குக் கீழே செந்நிற ஓடை போல வளைந்து சென்ற மலைப்பாதையில் அப்பயணம் நிகழ்கிறது.
தோளோடு தோள் தொட்டு நின்றிருந்த மலைகள் ஏதோ பேசிக்கொள்வது போல இருக்கின்றன. மலைகளின் தோளிலிலிருந்து மணலருவிகள் சால்வையென நழுவி நிற்கின்றன. காலடியில் கற்கள் உருளுகையில் குதிரைகள் மூச்செறிந்து எண்ணி காலெடுத்துவைத்தது. மடிந்து மடிந்து சுழன்று சுழன்று முடிவே இன்றி செல்லும் மலைப்பாதை. அவர்கள் எடுக்கும் முடிவின்படி பால்ஹிகரை சிபி தேசத்தில் இருந்து பால்ஹிகபுரிக்கு அழைத்து வர பூரிசிரவஸ் சிபிதேசம் செல்கிறான்.
பூரிசிரவஸ் தனது சிறிய படையுடன் பால்ஹிகரை அழைத்துக்கொண்டு சைப்யபுரியில் இருந்து கிளம்பி மூலத்தானநகரி (பாகிஸ்தானின் சிபியிலிருந்து முல்தான்) வரை தேர்களில் வந்து அங்கிருந்து சிந்துவில் படகுகளில் ஏறிக்கொண்டு அசிக்னி (செனாப்)ஆறு வழியாக சகலபுரி வரை(இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கருகே உள்ள சியால்கோட்) வந்து அங்கிருந்து மீண்டும் குதிரைகளில் பால்ஹிகபுரி நோக்கி அழைத்துச் செல்கிறான். சைப்யபுரியில் இருந்து மூலத்தானநகரி நகரியை அடைவதற்கு பாலை வழிப் பயணத்தில் பன்னிரண்டு நாட்கள் ஆகின்றன.
பால்ஹிக நாடும் பசுமையற்ற வெறும் மலையடுக்குகளால் ஆனதாக வருகிறது. நிலம் செந்நிறத்திரைச்சீலை என மடிந்து மடிந்து திசைகளை மூடி இருக்கிறது. மலைமுடிகளின் மேல் எப்போதுமே வெண்மேகங்கள் கவிந்திருக்கின்றன. குளிர்ந்த காற்று தழுவிச் சுழன்று செல்கிறது. “மாபெரும் முதுகுச்செதில்கள் கொண்ட உடும்பு” என்று பால்ஹிக நாட்டு மலைத்தொடரைப் பற்றி அம்மக்கள் சொல்கிறார்கள். மலைச்சிகரங்களால் மழைமுகில்கள் தடுக்கப்பட்டு அப்பகுதி மழைமறைவு நிலமாக இருக்கிறது. எனவே மழை அங்கே ஒரு விழவு போல கொண்டாடப்படுகிறது. மழைக்குப் பிறகான காலமே அம்மலைகளில் பசுமை துளிர் விடும் காலம். மேலும் இரு மழை பெய்தால் சிறிய குத்துச் செடிகள் முளைத்து, பள்ளத்தாக்கு முழுக்க பல வண்ணங்களில் மலர்கள் பூத்து விரிந்திருக்கும்.
மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து பயணம் செய்கிறார்கள். வழியில் தூமபதம் என்ற பெயருள்ள மலைக்கணவாயை அடைகின்றனர். அருகே சென்றால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகும் ஷீரபதம் என்ற பெயருள்ள இன்னொரு சிறிய மலை இடுக்கும் உண்டு. அது அசிக்னியின் துணையாறான சிந்தாவதி உருவாக்கிச் செல்லும் வழி. சிந்தாவதி அந்த பள்ளத்தாக்கை உருவாக்கிவிட்டு வளைந்து தெற்கே வந்து இன்னொரு மலையிடுக்கு வழியாக சென்று காட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிறிய அருவிகளாக விழுந்து சமநிலத்தை அடைகிறது. எனவே ஆற்றில் பனியுருகி வெள்ளம் வரும் காலத்தில் பால்ஹிகநாட்டை அணுக முடியாது இருக்கிறது. தூமவதி, ஷீரவதி, பிரக்யாவதி, பாஷ்பபிந்து, சக்ராவதி, சீலாவதி, உக்ரபிந்து, ஸ்தம்பபாலிகை, சிரவணிகை, சூக்ஷ்மபிந்து, திசாசக்ரம் எனப் பதினோரு மலைகளுக்கு பெயர்கள் வருகிறது.
இது காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்பிடி, லே பகுதிகள் போன்ற பனிப்பாலை நிலம் என வர்ணனையில் இருந்து விரித்துக் கொள்ள முடிகிறது.
சிந்தாவதியின் கரையில் இருந்து எடுக்கப்பட்ட உருளைக்கற்களால்தான் அந்நகரின் அத்தனை கட்டடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தடித்த தேவதாரு மரங்களை வைத்துக் கட்டப்பட்ட தாழ்வான கூரைச்சட்டத்துக்கு மேல் இடையளவு உயரத்தில் சுள்ளிகளை நெருக்கமாக அடுக்கி அதன்மேல் மண்ணைக்குழைத்துப்பூசி புல்வளர்த்திருக்கின்றனர். இன்றும் காஷ்மீர் லே, லடாக் மலைப்பகுதியில் இது போன்ற கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன.
மத்ர நாட்டிலிருந்து சல்லியர் இளவரசி விஜயையுடன் பால்ஹிகபுரிக்கு வருகிறார். அவளுடன் பூரிசிரவஸ் உரையாடும் இடம் மேலே கூரையிட்ட நந்தவனம் - சமநிலத் தாவரங்களை அங்கே வளர்ப்பதற்கு ஏதுவாக பெரிய மரப்பட்டைகளால் கூரையிடப்பட்ட பெரிய கொட்டைகை நூற்றுக்கணக்கான மெல்லிய மூங்கில்தூண்களின் மேல் நின்றிருக்கிறது. உள்ளே மரத்தொட்டிகளில் பூச்செடிகளும் காய்கறிச்செடிகளும் இடையளவு உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றன. இன்று கட்டுப்படுத்தப்பட்ட தட்பவெப்பநிலையில் செடிகளை வளர்க்கும் அமைப்பை ஒத்த ஒரு அமைப்பு இது.
பால்ஹிக நாட்டு மலைப்பகுதிகள்
யாருமறியாமல் அரண்மனையிலிருந்து வெளியேறி நூற்றைம்பது வயது தாண்டிய பால்ஹிகர் மேலே மலைப்பகுதிகளுக்கு வேட்டைக்கு சென்று விடுகிறார். குற்றிச்செடிகளின் மாபெரும் வெளியாகிய அந்நிலத்தில் மலை ஏறி மறுபக்கம் சென்று மேலும் செங்குத்தான சரிவில் ஏறிச்சென்றால்தான் மறிமான்களை வேட்டையாடமுடியும் என்று அப்பகுதிக்கு பால்ஹிகர் சென்றிருக்கிறார். மலைமேலேயே வாழும் பூர்வபால்ஹிக குடியில் ஒரு பெண்ணை பால்ஹிகர் மணந்து விட்டதாக செய்தி வந்ததும் பூரிசிரவஸ் அங்கு கிளம்பிச் செல்கிறான். அப்பகுதியின் வர்ணனை இமயத்தில் வாழும் சிலநாட்களை வாசகருக்கு அளிக்கும்.
சிந்தாவதி நதி ஷீரவதிக்கும் பிரக்யாவதிக்கும் நடுவே இருந்த மலையிடுக்குக்குள் இருபத்தெட்டு சிறிய அருவிகளாகக் கொட்டுகிறது. அந்நதி வெண்ணிறமான சால்வைபோல இறங்கி பள்ளத்தாக்கை அடைந்து பேரோசையுடன் நுரைத்துச் செல்கிறது. பால்மகள் என்று சொல்லப்படும் ஷீரவதியின் சரிவுகளில் வெண்ணிறமான மூடுபனி மூடியிருக்கிறது. மேலே ஏறிச்சென்ற பிறகு, சிந்தாவதியின் மறுகரையில் வெகு கீழே பால்ஹிகபுரி மிகச் சிறிதாகத் தெரிகிறது. ஒரு பறவைக்கோணத்தில் அந்த நகரத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் அனுபவம்.
ஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் மலையின் சரிவில் இருந்த வெட்டுப்பள்ளம் போன்ற இடைவெளியில் இருந்த சிறிய கல்வீடு ஒன்றை அடைகிறான். மேலிருந்து பெரும்பாறைகளை உருட்டிக்கொண்டுவந்து நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு. கூரைமண் மழைநீரில் கரையாமலிருக்க அதில் புல்வளர்க்கப்பட்டிருக்கிறது. மலைக்குளிருக்கு ஏற்ப மரப்பலகை போடப்பட்ட தரையில் புல்பரப்பி அதன் மேலே கம்பளியையும் விரித்திருக்கின்றனர். இல்லத்தின் நடுவே கணப்பு கனன்றுகொண்டிருக்க, கணப்பைச்சுற்றி அமரவும் படுக்கவும் உகந்த சேக்கைகள். அங்கே பால்ஹிகர் மணந்த ஹஸ்திகையின் தங்கை பிரேமை என்னும் பெண்ணை முத்திரைக் கணையாழி கொடுத்து மணக்கிறான் பூரிசிரவஸ்.
பல வருடங்களுக்குப் பிறகு போர் தொடங்குவதன் முன்னம் பூரிசிரவஸ் பிரேமையைக்காண க்ஷீரவதியைக் கடந்து மீண்டும் வெண்பனி மலைக்குச் செல்கிறான். கீழே வரும் வரிகள் அந்த நிலத்தை மட்டுமல்ல நிலத்தின் வாயிலாக பிரேமையின் அங்கிருந்த மலைமக்களின் சிறுமை அண்டாத தூய மனங்களையும் வாழ்வையும் சித்தரிப்பவை. “மண்ணிலிருந்து வரும் எந்த மாசும் மலையில் படிவதில்லை என்பார்கள். பனியைக் கடந்து எதுவும் செல்வதில்லை. நிகர்நிலத்தின் புழுதிப்புயல், நோய்கள், மானுடரின் மொழிகள், வஞ்சங்கள். மானுடரின் நாணயங்களுக்குக் கூட அங்கே மதிப்பில்லை.”
அந்தப் பனிமலை வெளியில் மாலையையும் காலையையும் பூரிசிரவஸ் காண்கிறான். மலைகளுக்கு மேல் கோடைகாலத்தில் அந்தி சாய்வது மிகவும் பிந்தித்தான் வருகிறது. கதிரவன் மறைந்த பின்னரும்கூட மலைகளின் ஒளி நெடுநேரம் எஞ்சியிருக்கிறது. கீழிருக்கும் ஊர்கள் எல்லாம் இருளில் மூழ்கிய பின்னரும் சில தருணங்களில் இரவெல்லாம் மலைகளின் ஒளி அணைவதே இல்லை என்று காண்கிறான். அதிகாலையில் கதிர் எழ நெடுநேரம் முன்னரே வானம் சாம்பல்நிற ஒளியுடன் முகில்களே இல்லா வெளியாக வளைந்திருப்பதையும் பார்க்கிறான். பனிமலை மட்டுமே உள்ளத்துள் உருவாக்கும் சொல்லில்லா நிலையை அடைகிறான்.
- மேலும்
Comments