top of page
Writer's pictureசுபஸ்ரீ

வாழிய நிலனே - 9

Updated: Jul 15, 2024

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.


(முதற்கனல் 34: தீச்சாரல் ஓவியம்: ஷண்முகவேல்)


" ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது. யானை மத்தகம் போன்ற மலைப்பாறை. அக்குகையில் கற்சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் இருக்கின்றன. யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் ஒருவனது ஓவியத்தை அங்கே காண்கிறார் பிச்சாண்டவர்.

               

வெண்முரசு காட்டும் இடங்கள்


பிரதிஷ்டானபுரி


நீர்க்கோலத்தில் சதகர்ணிகளின் வரலாறு பற்றிய குறிப்பு வருகிறது . கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் நடுவே விரிந்துள்ள பெருநிலத்தை சதகர்ணிகள் ஆள்கின்றனர். நூறு குலங்களின் தலைவன் என்ற பொருளிலேயே அதன் அரசன் சதகர்ணி எனப்படுகிறான். கால்மடித்தமர்ந்த மாகாளையைக் கொடியெனக் கொண்ட அவர்களது தலைநகரம் பிரதிஷ்டானபுரி (பைத்தான் - மகாராஷ்டிரம்). பரசுராமனால் அனல்குலத்து அந்தணர்கள் என்றாக்கப்பட்டு வத்ஸகுல்மத்தை (வாஷிம்) ஆண்ட வாகடர்கள் முதல் தெற்கே வெண்கல்நாட்டை(பல்லவநாட்டை) ஆண்ட பல்லவர்கள் வரை அவர்களுக்கு கப்பம் கட்டி இருக்கிறார்கள். அஸ்மாகர்களும்(பதினாறு மஹாஜனபதங்களில் ஒன்று) சாளுக்கியர்களும் அவர்களிடம் பணிந்திருக்கின்றனர். தான்யகடகமும்(தாரணிக்கோட்டை) இந்திரகீலமும் (விஜயவாடா) ராஜமகேந்திரபுரியும்(ராஜ்முன்றி) அவர்களுக்குரியதாயிருக்கின்றன. பின்னர் வடக்கே மகதமும் மேற்கே மாளவமும் கிழக்கே கலிங்கமும் ஆற்றல்கொண்டபோது சதகர்ணிகள் தெற்கே செல்கின்றனர். அவர்களின் இரண்டாவது தலைநகராக இருந்த வெண்கல்நாட்டு அமராவதியை (ஆந்திராவின் அமராவதி) மையமாக்குகின்றனர் என்றறிகிறோம்.


வண்ணக்கடல் இளநாகன் பயணத்திலும் சாதவாகனர்கள் என்றறியப்படும் சதகர்ணிகளின் நகரமான தான்யகடகத்தின் குறிப்பு வருகிறது.


உபப்பிலாவ்யம்


அஞ்ஞாதவாசம் முடிந்து போருக்கு முன்னர் பாண்டவர்கள் தங்கும் சிறு ஊர் உபப்பிலாவ்யம். முன்காலத்தில் அப்பகுதி அடர்காடாக இருந்தபோது அவந்தியிலிருந்து விராடபுரிக்கு செல்லும் மலை வேட்டுவ வணிகர்கள் பயன்படுத்தும் ஒற்றையடிப்பாதை இருந்திருக்கிறது. அங்கிருந்த உருளைப்பந்து போன்ற காய்களும் குற்றிலைகளும் கொண்ட மிகப் பெரிய காஞ்சிர மரம் ஒன்று ரக்தஃபோஜி அன்னையின் ஆலயமாக மாறிய கதை வருகிறது. காஞ்சிரத்தில் அணங்கோ தெய்வமோ குடியேறுமென்றால் மட்டுமே அது பேருருக் கொள்ளும் என்று குலப்பாடகர்கள் சொல்ல அங்கே அந்த குருதிபலி கொள்ளும் அன்னையின் ஆலயம் நிலைகொள்கிறது. காலப்போக்கில் அது சிறிய கொற்றவை ஆலயமாக உருக்கொள்கிறது. அந்த ஆலயம் உபப்பிலாவ்யத்தின் தென்மேற்கு மூலையில் இருக்கிறது.


உபப்பிலாவ்ய நகரி பன்னிரு சுற்றுத்தெருக்களும் நடுவே வட்டமான முற்றமும் கொண்ட சிறிய நகரம். முற்றத்தை நோக்கியவாறு இரண்டு அடுக்குள்ள தாழ்வான அரண்மனை நின்றிருக்கிறது. பெரிய கோட்டையோ அரண்மனைகளோ இல்லாத அந்த ஊர், போரின் நிமித்தம் பாண்டவர்கள் தங்கி இருக்கும் காலத்தில் விரிவடைவதைப் பற்றிய சித்திரம் வருகிறது.


அசோகவனி


தேவயானி என்றறியாது யயாதி தந்த வாக்கின் படி, தேவயானியை யயாதி மணக்க நேரிட்டு, சர்மிஷ்டை அவளுக்கு பணிப்பெண்ணாக குரு நிலம் புகநேர்கிறது. அதன் பிறகு சர்மிஷ்டை அசோகவனி எனும் எல்லைப்புற ஊர் ஒன்றில் வாழ்கிறாள். அஷ்டசிருங்கம் என்னும் மலையின் அடியில் சுரபஞ்சகம் என்னும் மலைச்சிற்றூருக்கு சென்றிருந்த யயாதி திரும்பும்போது குரு நிலத்தின் மேற்கு எல்லைக்கு அப்பால் இருந்த அசோகவனிக்கு வந்து அங்கு அவளை மீண்டும் சந்திக்கிறான். அசோகவனியின் உயிர்க்கோட்டை அமைப்பு இவ்விதம் இருக்கிறது:


"களிமண்ணை வெட்டிக் குவித்து உருவாக்கப்பட்ட சுவரின்மேல் முள்மரங்களை நெருக்கமாக நட்டு முட்கொடிகளால் சேர்த்துக் கட்டப்பட்ட உயிர்வேலியே கோட்டையாக அமைந்திருந்தது. பசுங்கோட்டையின் நடுவே இரு வேங்கை மரங்களே வாயில்சட்டங்களாக நின்றன. அவற்றின் கவைக்கிளைகளுக்குமேல் மூங்கிலால் ஆன காவல்பரண்கள் குருவிக்கூடுபோல தெரிந்தன."


ஆண்டில் பெரும்பாலான நாட்கள் குளிர்காலம் நிலவும் பகுதி என்பதால் இல்லங்களின் கூரைகள் எல்லாமே மிகத் தாழ்ந்து, வீடுகள் சாளரங்கள் இன்றி இருக்கின்றன. குருகுலத்து மூதாதை நகுஷன் தன் துணைவி அசோகசுந்தரி நினைவாக அவ்வூரில் அசோகமரங்களை நட்டு அந்த சோலைக்கு அசோகவனி என்று பெயரிட்டு தன் துணைவிக்கு சிறிய ஆலயம் ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்.


சரபஞ்சரம்


நீண்ட காலத்துக்குப் பிறகு எல்லைப்புறத்தைப் பார்வையிட வரும் தேவயானி அசோகவனியில் சேடியைப் போல வாழும் சர்மிஷ்டையை சந்திக்கிறாள். அங்கிருந்து இனம்புரியாது அமைதியிழந்த மனதோடு தேவயானி சரபஞ்சரம் செல்கிறாள். அசோகவனியிலிருந்து வடகிழக்காக இமயச்சரிவில் இரு சிறிய மலைகளின் குவிமடிப்புக்குள் அமைந்திருந்த சரபஞ்சரம் செல்வதற்கு மலையின் வளைவை சுற்றிசெல்லும் கழுதைப்பாதை மட்டுமே இருக்கிறது. பேரரசி தேவயானியின் பயணத்தை முன்னிட்டு அது விரைவாக தேர்ப்பாதையாக உருவாக்கப்பட்டு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. சுரவாகினி என்னும் நதியொன்றுக்குமேல் படகுகளை சேர்த்து நிறுத்தி மிதக்கும் பாலம் அமைக்கப்படுகிறது. மலைவளைவுகளில் மண்ணை வெட்டிச் சரித்து விளிம்புகளில் மூங்கில்களை அறைந்து எழுப்பி பலகைவேய்ந்து தேர்ச்ச்சாலை அமைக்கப்படுகிறது. வழியெங்கும் அடர் காடு.


தொல்குடிகளுக்குரிய வகையில் வட்டவடிவமாக அமைக்கப்பட்டிருந்த மலைச்சிற்றூர் சரபஞ்சரம். அங்கு அரசி தங்குவதற்க்கென ஈச்சஓலைக் கூரையிட்ட வட்டவடிவமான குடில் ஒரு ஆள் உயரத்தில் மூங்கில் கால் மேல் எழுப்பப்பட்டிருக்கிறது. அங்கு சர்மிஷ்டையின் மைந்தர்களை சந்தித்து அவர்கள் யயாதியின் மைந்தர்கள் என உணர்கிறாள் தேவயானி.


கஜசர்மம்

கரியுரித்தல் நிகழ்ந்த இடமென பன்னிரு இடங்களைக் கூறுகிறார் கிராதத்தில் வரும் பிச்சாண்டவர். பாண்டவர்களை எரித்துக்கொல்ல கௌரவர்கள் முயன்ற வாரணவதம் அதிலொன்று, அது நிகழ்ந்திருக்கக் கூடிய மற்றொரு இடமென இமயமலைச்சரிவில் திரிகர்த்தநாட்டின் எல்லையில் கின்னரர் நாடு தொடங்குமிடத்திலுள்ள கஜசர்மம் என்ற மலையைக் குறிப்பிடுகிறார். அதனுள் ஆயிரம்பேர் நின்றிருக்கும் அளவுக்கு பெரிய குகை ஒன்றுள்ளது. யானை மத்தகம் போன்ற மலைப்பாறை. அக்குகையில் கற்சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் இருக்கின்றன. யானைத்தோலை இழுத்துப் போர்த்தியபடி நின்றிருக்கும் ஒருவனது ஓவியத்தை அங்கே காண்கிறார் பிச்சாண்டவர்.


மாகேந்திரம்


மதுரையில் பாண்டியனின் அவைக்கு வடபுலத்தில் இருந்து வரும் சீர்ஷன் என்னும் பாணன், வண்ணக்கடலில் ஏழ்பனைநாட்டிலிருந்து அஸ்தினபுரி தேடி பாரதப் பயணம் மேற்கொள்ளும் இளநாகனின் குருதிவழியினனாக அறிமுகமாகிறான்.


அஷ்டகுலாசலங்கள் எனப்படும் மந்தரம், கயிலாயம், விந்தியம், நிடதம், நீலம், ஏமகூடம், கந்தமாதனம், மாகேந்திரம் ஆகிய எட்டு மாமலைச்சிகரங்களில் ஒன்றான மாகேந்திரம் இன்றைய தென்குமரிக்கும் தெற்கே இருந்த கடல்கொண்ட தென்மதுரைக்கும் அப்பால் இருந்திருக்கிறது என்பது தொன்மம். அன்னை குமரியென ஒற்றைக்காலில் நின்று தவம் செய்த மலை. அகத்தியரும் மாணவர்களும் தமிழாய்ந்த மலைமுடி. அம்மலை கடற்கோளால் நீருள் மறைய கடல் நீர் எல்லை கடந்து வந்து ஏழ்பனைநாட்டையும் ஏழ்தெங்குநாட்டையும் மூழ்கடித்து இறுதியாக தொல் தென்மதுரையை உண்டது என்ற சங்க இலக்கியக் குறிப்புகள் உணர்த்தும் நிலம் இது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது என்ற குருமரபின் வழக்கத்துக்காக மகேந்திர மலை தேடி வந்திருக்கிறான். பாண்டிய மன்னனும் உடன் வர குருபூர்ணிமையில் வியாசரின் சொல் கேட்க அந்த மலை கடலுக்குள் இருந்து எழும் என்ற நம்பிக்கையோடு தென்குமரிநிலம் செல்கிறார்கள். தாழைப்புதர்கள் மணல்மேட்டின்மீது மண்டிய தென்குமரி.


முழுநிலவு நாளில் தென் கடலில் படகுகள் செல்கின்றன, வானில் முழு நிலவு தோன்றியதும் அதுவரை அலையற்றிருந்த கடல் கொந்தளிக்கத் துவங்குகிறது. படகுகளை அள்ளிச் சுழற்றி வீசிப்பிடிக்கிறது. அலைகள் மலையளவு கண்முன் உயர்ந்தும், மறுகணம் தாழ்ந்தும் , பாறைகள் என நீர் வந்து அறைய ஆழிமேற் பயணம். சிறிது நேரத்தில் கடல் முற்றமைதி கொள்ள தமிழ் மனங்களில் ஆழத்தில் இருக்கும் கடல் கொண்ட கபாடபுரமும் தொல்மதுரையும், கோபுர முகடுகளும் கண் எதிரே நிலவின் ஒளியில் தெரியத்துவங்குவது கனவு நிறைக்கும் ஒரு அருங்காட்சி.


கனககிரி


சூதர் சொல்லில் திகழும் மற்றோரு நிலம் புராணநர்மதை மாபெரும் மலைப்பிளவினூடாக நிலமிறங்கிய இடத்தில் அமைந்த கனககிரி என்னும் பொன் தகடுகளால் ஆன நிலம். அங்கு கர்ணனின் கொடைத்திறத்தை அர்ஜுனன் உணர்ந்து கொள்வதாக ஒரு சூதர் கதை வருகிறது. அந்நிலம் மலை சூடிய மாபெரும் பொன்னணி போலவும், பொன்தகடுகளை ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கியது போலவும் இருக்கிறது.


போத நிலம்

வடக்கே கின்னர நிலத்தையும் தாண்டி இருக்கும் போத நிலம் குறித்தும் ஷம்பாலா குறித்தும் பீமனின் திசைப்பயணத்தில் அறிகிறான். வெண்பனி மூடிய இமையமலையடுக்குகளுக்கு அப்பால் பீத நிலம் (சீன தேசம்) இருப்பதை அறிந்திருக்கிறார்கள். எனில் மலைகளின் உச்சியில் வானில் என நின்றிருக்கும் போத நிலம் பிற எந்த நாடுகளோடும் தொடர்புகள் அற்று பல தொன்மங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் விளை நிலமாக இருக்கிறது. அதன் மகுடம் போல ஷம்பாலா என்னும் மெய்ஞானத்தின் நிலம் குறித்த வர்ணனைகள் கிடைக்கின்றன. அதற்கு ஓரளவு அருகாமையில் இருந்த கின்னர நிலத்திலேயே மின்னல்களின் நிலம் என்று சொல்லப்படும் போ அல்லது போத் நிலம் பற்றி எண்ணற்ற கருத்துகள் - ஊழ்கம் நிறைந்தவர்களே போதநிலத்தை சென்றடைய முடியும், அதிலும் கனிந்தவர்களே மேலும் எழுந்து ஷம்பாலாவுக்கு செல்லமுடியும் என்பது போன்ற நம்பிக்கைகள் இருக்கின்றன.


இரு நூற்றாண்டுகள் முன்னர் வரையிலும் கூட அணுகமுடியாமல் இருந்த திபெத் என்றுமே ஒரு மாய நிலமாக யோகியரை மெய்யறிவு நாடுவோரை வசீகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. கண்முன் நிற்கும் ஒன்று அணுகமுடியாமல் இருப்பது போல மானுட மனதை அறைகூவுவது பிறிதில்லை. விண்வெளியும், ஓங்கி நிற்கும் மலைமுகடுகளும், எல்லை அறியா ஆழ்கடலும், பாலையின் விரிவெளியும் மனிதர்களை ஈர்த்துக்கொண்டே இருக்கின்றன.


கைலாயம்


கைலை மலை போல குறிப்புணர்த்தும் மகாபோத மலை ஒன்றைப் பற்றி பீமன் அறிகிறான்.


“போதமலைகள் பன்னிரண்டு. அவற்றின் உச்சியில் அமைந்தது மகாபோத மலை. அதன்மேல் உள்ளது மெய்யறிவின் நகரமான ஷம்பாலா. போதமலையின் மீது எப்பொழுதும் மென்மையான மேகக்குவை ஒன்று நின்றிருக்கிறது. அது விண்ணொளியைக் கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் என்று சொல்கிறார்கள். அது அமுது. விண்ணில் நிறைந்திருக்கும் முடிவின்மையே அதில் அழிவின்மை என்றாகி திரண்டுள்ளது.”


கைலை மலை குறித்த மற்றொரு குறிப்பு மழைப்பாடலில் வருகிறது. சதசிருங்கத்தில் பாண்டு குந்தி மாத்ரியோடு வாழும் காலத்தில், அங்கிருந்த நூற்றெட்டு முனிவர்கள் மாணவர்களுடன் பதினெட்டு மலையுச்சிகளுக்கு அப்பால் மலைகளின் மகுடம்போல நிற்கும் கைலாய மலை செல்கிறார்கள். கருநிலவு நாளன்று அங்கே சென்று முழுநிலவு நாள் வரை பதினைந்துநாட்கள் அங்கே தவம்செய்து முழுநிலவில் முக்கண்முதல்வன் உறையும் மலையைக் கண்டு வணங்கிவிட்டுத் திரும்புவார்கள் என்று அறிந்து அங்கே செல்ல பாண்டு மிகவும் விழைகிறான். அவனுக்கு நீர்க்கடன் செய்ய குருதி முளைக்கவில்லை என்பதால் அனுமதி மறுக்கப்படுகிறது. இது இன்று ஆயிரக்கணக்கானோர் மானசரோவரில் இருந்து கைலாய மலை செல்லும் பயணம் போல அல்ல. அக்கால கட்டத்தில் செல்பவர்கள் உயிருடன் திரும்புவதற்கு உறுதி இல்லாத வகையிலான பயணம். பாண்டுவின் உள்ளக்கிடக்கை தீர குந்தி துர்வாசர் அளித்த மந்திரத்தின் துணையோடு தர்ம தேவனின் அருளால் மக்களைப் பெறுகிறாள்.


கின்னர கைலை


வியாசரின் இமைக்கண வாழ்வில் சுகரின் விண்ணேற்றம் குறித்த பகுதி. இமய சிகரங்களில் ஒன்றாகிய கின்னர கைலையை(கின்னர் கைலாஷ்) சிவ வடிவமாக வழிபட்ட புலகரிடம் நுண்சொல் பெற்று சுகர் நூற்றெட்டு இமய முடிகளைக் கடந்து அத்ரிசிருங்கத்தின் மேலேறி நின்று கைலை முடியை நோக்கி தவம் செய்கிறார். சுகருடைய தவம் கனிந்த போது நிலம் அதிர்ந்து நீரில் வளையங்கள் எழுகின்றன. பெரும்பாறைகள் நிலைபெயர்ந்து மலைச்சரிவில் உருள்கின்றன. பின்னர் பனிச்சரிவு நிகழ்கிறது, அது பார்ப்பதற்கு மலைமுடிகளில் இருந்து வெண்பனிப்படுகை நாரை சிறகுசரிப்பதுபோல் இறங்கி வருகிறது. ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிறது.


பராசரர் வாவி


வெண்பனி சூடிய இமயமலைமுடிகள் சூழ்ந்த மாண்டவ வனத்தில், விபாசா (பியாஸ் நதியாக இருக்கலாம்) நதியின் கரையில் வியாசரின் தந்தையின் குருகுலம் இருக்கிறது. அவரது மாணவரான மைத்ரேயரையும் வியாசரையும் ஊழ்கத்திற்கென தேவதாரு வனங்களின் ஊடாக அழைத்துச் சென்று, பனிக்குன்றுகள் சூழ அமைந்த நீள்வட்ட வாவி ஆகிய பராசரசரஸை அடைகிறார்கள். முன்பொரு காலத்தில் பராசரர் அங்கு ஊழ்கம் பயின்றதால் பராசரமானசம் என்று அழைக்கப்படும் அந்த ஏரி குளிர்காலத்தில் உறைந்து வெண்பனியாலானதாக மாறிவிடுவதனால் சுஃப்ரம் என்ற பெயரும் கொண்டது.


இன்றும் இமாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2730 மீ உயரத்தில் அமைந்துள்ள ஏரி இது. உறைபனி காலத்தில் வெண்மைக்கு நடுவே திறந்த விழி என்றும், பிற பருவங்களில் பசுமை பொதிந்து வைத்த வெளியின் துளி என்றும் காட்சி தரும் நீர்நிலை இது.


பிற இமயமலை நாடுகள்


  • இமயமலையின் மேல் வெண்பனியில் உறையும் கிம்புருடநாட்டை வென்றான் என்றும் அதன் அரசன் துருமபுத்திரனை கப்பம் கட்டச்செய்தான் என்றும் சொல்கிறார்கள் (பன். படை. 49)

  • யட்சர்களால் காக்கப்படும் ஹாடகம் என்னும் பனிநாட்டினர் அவனை எதிர்க்காமலேயே ஏற்றனர் (பன். படை. 49)

  • ரிஷிகுல்யம் என்னும் நூற்றெட்டு கால்வாய்கள் ஓடும் அந்நிலத்தையும் அவை ஊறி எழும் மானசரோவரம் என்னும் நீலஏரியையும் அவன் வென்றான் என்று அங்கே இந்திரப்பிரஸ்தத்தில் சொல்கிறார்கள். (பன். படை. 49)

  • நிஷதம், இலாவிரதம் ஆகிய மலைநாடுகளைக் கடந்து அவன் கைலாயமெனும் மேருவைக் கண்டு மீண்டான் என்கிறார்கள் (பன். படை. 49)


- மேலும்



18 views

Recent Posts

See All

Comments


bottom of page