top of page

கீழவிடயல்‌ - தி.ஜானகிராமன்

Updated: Feb 14

1969ல் ஆனந்த விகடனில் , தன் சொந்த ஊர் சென்ற அனுபவத்தை பற்றி எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய பயண கட்டுரை இது .


(பொம்மலாட்ட கலைஞர் ஒருவரின் ஓவியம். நன்றி Jalseen Kaur )


"கீழவிடயல்‌ எனக்குப்‌ பிடித்திருப்பதற்கு முதல்‌ காரணம்‌, அதன்‌ அமைப்பு. குடமுருட்டி ஆற்றங்கரை, காவிரிக்கு ஒப்பாக இதன்‌ வளத்தைச்‌ சொல்வதுண்டு. பஸ்ஸிலிருந்து சாலை இறங்கியதும்‌ ஒரே சோலை. மூங்கில்‌ தோப்பு - தூங்கு மூஞ்சி, மா, பலா, வாழைத்‌ தோட்டங்கள்‌."

“என்‌ ஊர்‌! என்று ஒரு கிராமத்தைச்‌ சொல்லிக்‌ கொள்கிறவனுக்கு புதிதாகச்‌ சொல்ல என்ன இருக்கப்போகிறது? இரண்டு மூன்று அல்லது நான்கு தெருக்கள்‌, ஒரு சிவன்‌ கோயில்‌, ஒரு பிள்ளையார்‌ கோயில்‌ அல்லது பெருமாள்‌ கோயில்‌, ஒரு குளம்‌, அரசமரம்‌, ஆற்றங்கரை, தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களாக இருந்தால்‌ எங்கும்‌ பச்சை வயல்கள்‌ - சாலையில்‌ ஒரு பெட்டிக்‌ கடை, ஒரு பிடாரி கோவில்‌, வாய்க்கால்‌ மதகு, ஒரு சத்திரம்‌ - இதுதான்‌ தமிழ்நாட்டுக்‌ கிராமம்‌.


ஒரு நெல்லு மிஷின்‌, ஒரு *கோவாப்பரேட்டிவ்‌ சொஸைட்டி”; மின்‌ விளக்கு, ஓர்‌ உச்சஸ்தாயி ரேடியோக்‌ கம்பம்‌, பக்கத்து பஞ்சாயத்து டவுனில்‌ நடக்கும்‌ திரைப்படத்தின்‌ விளம்பரச்‌ சுவரொட்டி - இவை இந்தக்‌ காலத்துச்‌ சேர்க்கைகள்‌. இவற்றை விட்டுத்‌ தனித்‌ தனியாகப்‌ பெரிதாகச்‌ சொல்ல என்ன இருக்கிறது என்று சில சமயம்‌ தோன்றுகிறது.


சில சமயம்‌ எது நம்முடைய ஊர்‌ என்றே சந்தேகம்‌ வந்துவிடுகிறது. பிறந்த ஊரா? படித்த ஊரா?சோற்றையும்‌ மாய மானையும்‌ தேடிக்கொண்டு சென்னை, பம்பாய்‌, டில்லி என்று நாடோடியாகி விட்ட மக்கள்‌ திரளில்‌ ஒரு சொட்டுத்‌ துளிதான்‌ நான்‌.


எங்களுக்குப்‌ பூர்வீகம்‌ தஞ்சை மாவட்டம்‌ பழந்தேவங்குடி என்றாலும்‌, “எந்தையும்‌ தாயும்‌ மகிழ்ந்து குலாவி' இருந்த ஒரு காரணத்திற்காக எங்கள்‌ ஊர்‌ என்று ஒன்றைச்‌ சொல்லுகிறேன்‌, என்‌ தந்தையும்‌ தாயும்‌ அங்கு விரும்பி வாழ்ந்தார்கள்‌. மண்ணில்‌ பயிரிடப்‌ பங்கு வாங்கினார்கள்‌. அந்த மண்ணிலேயே இருவரும்‌ மடிந்து ஒன்றினார்கள்‌. நாற்பது ஆண்டுகளாகப்‌ பல வித மணங்களுடன்‌ இந்த அழகான கிராமம்‌ என்‌ நினைவில்‌ கமழ்கிறது.


கீழவிடயல்‌ என்றால்‌ நீங்கள்‌ கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்‌. தஞ்சை மாவட்டத்தில்‌ கும்பகோணத்திற்குத்‌ தெற்கே, மகாகனம்‌ ஸ்ரீனிவாச சாஸ்திரியார்‌ பிறந்த வலங்கைமானுக்குக்‌ கிழக்கே மூன்றரைக்கல்‌ தொலைவில்‌, குடவாசலுக்குச்‌ செல்லும்‌ சாலை ஓரமாக உள்ள ஊர்‌,கீழ்விடயல்‌. ஆனால்‌ இங்கு அரசியல்‌ பிரமுகர்களோ, தியாகிகளோ, இசைக்‌ கலைஞர்களோ, புகழோடு தோன்றும்‌ பெருந்தகைகளோ, ஐ.சி.எஸ்‌.ஸுகளோ ஐ.ஏ.எஸ்‌.ஸுகளோ தோன்றியதில்லை. இங்குள்ளவர்கள்‌ சாதாரண மக்கள்‌. நல்ல மக்கள்‌. “புகழோடு தோன்றாவிட்டால்‌, தோன்றாமல்‌ மண்ணுக்குள்ளேயே இரு” என்று நான்‌ சொல்லத்‌ தயாராயில்லை. ஒருவனுக்குப்‌ புகழ்‌ வேண்டுமானால்‌ ஒரு லட்சம்‌ பேர்‌ புகழில்லாமல்‌ இருந்தால்தான்‌ முடியும்‌.


ஆனால்‌, இங்கு ராமையா என்று ஒரு பெரியவர்‌ இருந்தார்‌. அந்தக்‌ காலத்தில்‌ பொம்மலாட்டக்‌ கலையில்‌ புகழ்பெற்ற புதுக்குடி சாமாவின்‌ குழுவில்‌ இவர்‌ பாடினவராம்‌. அவர்‌ பல தடவை பாடி நான்‌ கேட்டிருக்கிறேன்‌. அவருக்குச்‌ செவியாறல்‌ பயிற்சிதான்‌. இருந்தாலும்‌ அவர்‌ பாடுகிற ராகங்களில்‌ நிரம்பிக்‌ கிடந்த வடிவழகையும்‌, லட்சண ஞானத்தையும்‌ புகழைச்‌ சுமந்து பவனி வருகிற சங்கீத வித்துவான்களில்‌ ஒரு சிலரிடம்தான்‌ நான்‌ கண்டிருக்கிறேன்‌. இந்த மனிதர்‌ காலமாகிவிட்டார்‌. ஆனால்‌ இவருக்காக, இன்னும்‌ ஏழு தலைமுறைகளுக்கு இந்த ஊர்‌ புகழில்லாத மக்களைப்‌ படைத்தால்கூட பொய்யா மொழியார்‌ மன்னித்துவிடுவார்‌. மற்றபடி என்னை ஒன்றும்‌ கேட்காதீர்கள்‌. நான்‌ வள்ளுவருக்கு எதிர்க்‌ கட்சி. எனக்குப்‌ புகழ்‌ இல்லாதவர்களைக்‌ கண்டால்தான்‌ பிடிக்கும்‌.


கீழவிடயல்‌ எனக்குப்‌ பிடித்திருப்பதற்கு முதல்‌ காரணம்‌, அதன்‌ அமைப்பு. குடமுருட்டி ஆற்றங்கரை, காவிரிக்கு ஒப்பாக இதன்‌ வளத்தைச்‌ சொல்வதுண்டு. பஸ்ஸிலிருந்து சாலை இறங்கியதும்‌ ஒரே சோலை. மூங்கில்‌ தோப்பு - தூங்கு மூஞ்சி, மா, பலா, வாழைத்‌ தோட்டங்கள்‌. ஊருக்குள்ளே போக ஒரு வாய்க்கால்‌ மதகு. பிறகு ஒரு சத்திரம்‌. அடுத்து ஒரு பிள்ளையார்‌ கோயில்‌. உடனே வலப்பக்கம்‌ திரும்பினால்‌ அக்ரகாரம்‌, இடப்பக்கம்‌ திரும்பினால்‌ வேளாளர்‌ தெரு. ஊருக்கு மேற்கே ஒரு குளம்‌, இரண்டு வேளாளர்‌ தெரு. மேற்கு குளத்தோடு நடந்து தெற்கே போனால்‌ பெரிய களம்‌. அங்கு ஒரே ஆல நிழல்‌. அதற்குக்‌ கிழக்கே வயலுக்கு நடுவே ஹரிஜனத்‌ தெரு. சாலைக்கும்‌ ஊருக்கும்‌ வர இவர்கள்‌ வரப்புகள்மீது நடந்துதான்‌ வர வேண்டியிருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாகப்‌ பீடைபிடித்த இந்த சிரமம்‌ ஒழிந்துவிட்டது.


இப்பொழுது ஹரிஜனங்களுக்கு பஸ்‌ போகும்‌ சாலை ஓரமாகவே நிலம்‌ கொடுத்துவிட்டார்கள்‌. வீடுகள்‌ எழுந்துவிட்டன. என்‌ தலைமுறையில்‌ இந்த மாறுதல்‌ நடந்ததற்காக நான்‌ பெருமைப்பட வேண்டும்‌. அக்கிரகாரத்து முனையிலும்‌ கொல்லையிலும்‌ நின்று “எசமானைப்‌ பார்ப்பதற்காக தொண்டைகிழிய ஹரிஜனங்கள்‌ கூப்பாடு போட்டதெல்லாம்‌ போய்‌ இப்பொழுது எங்கும்‌ தாராளமாக நடமாடும்‌ நிலமை வந்துவிட்டது. ஆனால்‌, இதெல்லாம்‌ இந்த கிராமத்திற்கான தனி குற்றமோ, சிறப்போ அல்ல. இந்து கிராமங்கள்‌ அனைத்தும்‌ பழகி வந்த குணதோஷங்கள்‌. காலத்தோடு இந்த ஊரும்‌ மாறிவிட்டது.


கட்டுக்கோப்பான கிராமம்‌. நூறு, இருநூறு வீடுகள்‌ இருந்த கிராமங்களில்‌ மக்கள்‌ பிழைப்பதற்காக வெளியேறி, முக்கால்வாசி மனைகள்‌ பாழ்த்துக்‌ கிடப்பதை நான்‌ பார்த்திருக்கிறேன்‌. இந்த ஊரில்‌ அந்தச்‌ சலனம்‌ ஏற்படவில்லை. சிற்சில மனைகளைத்‌ தவிர மற்றவை அனைத்தும்‌ குடியும்‌ குடித்தனமுமாக இருந்து வருகின்றன. இதை நினைத்தோ, ஊரின்‌ பொதுவான அமைப்பை நினைத்தோ காமகோடி பீடம்‌ பெரியவர்கள்‌ பல ஆண்டுகளுக்கு முன்‌ இந்த ஊரில்‌ தங்கி வியாசபூஜைப்‌ பருவத்தைக்‌ கழித்தார்கள்‌. கிராமத்தின்‌ புனித நினைவுகளில்‌ அது ஒன்று. ஆனால்‌, எந்தப்‌ பெரியவர்களும்‌ நல்ல வழியைக்‌ காட்டத்தான்‌ முடியும்‌. ஒவ்வொருவனும்‌ தன்னைத்‌ தானேதான்‌ உயர்த்திக்கொள்ள வேண்டும்‌; முடியும்‌.


கோயிலோ, சத்திரமோ, பொதுக்கிணறோ - இவை ஒவ்வொன்றும்‌ ஒற்றுமையின்‌ சின்னம்‌. நம்பிக்கை, பக்தி- இவற்றைவிட ஒரு நெருக்கடியில்‌ ஊர்‌ மக்கள்‌ ஒன்று கூடிச்‌ செயலாற்ற இவை பயிற்சிக்‌ கூடங்கள்‌. முக்கியமான பயிற்சிக்‌ கூடமான எங்கள்‌ ஊர்‌ சிவன்‌ கோவில்‌ இடிந்து கிடக்கிறது. ஊர்ப்‌ பொதுவில்‌ பணமில்லையோ என்னவோ, செப்பனிட முடியாமல்‌ திண்டாடுகிறார்கள்‌. சர்க்காரின்‌ இந்து மத பரிபாலன சபை இதைக்‌ கவனிக்கலாம்‌. என்‌ சொத்து எனக்கே என்று எந்தக்‌ கோயில்‌ கடவுளும்‌ சொல்லவில்லை. ஆஸ்பத்திரிகள்‌ நோயாளிகளின்‌ பணத்தைக்‌ கொண்டு அதேபோல்தான்‌ இவையும்‌. (என்‌ கதைகளைப்‌ படிக்கிறவர்கள்‌ சாதாரண மக்கள்‌. லட்சப்‌ பிரபுக்களும்‌ கோடீஸ்வரர்களும்‌ வாசித்திருந்தால்‌, நமக்குக்‌ கொஞ்சம்‌ வேண்டியவன்‌ என்ற பாசத்துடன்‌ “இந்தா ஒரு ஐயாயிரம்‌ அல்லது பத்தாயிரம்‌” என்று எங்கள்‌ கிராமத்துக்‌ கோயிலுக்காகத்‌ தள்ளி விட்டிருப்பார்கள்‌. நடக்காத கனவுகளைப்‌ பற்றிப்‌ பேசுவானேன்‌? . . .)


இது பாடல்‌ பெற்ற ஸ்தலமில்லை. ஆனால்‌, நான்‌ பல கதைகளில்‌ இந்த ஊரின்‌ அழகைப்‌ பெயரைச்‌ சொல்லாமல்‌ பாடியிருக்கிறேன்‌. நான்‌ படிக்கிற பருவத்தில்‌ இந்த ஊருக்குப்‌ போக வலங்கைமானிலிருந்தோ குடவாசலிலிருந்தோ நடந்து போக வேண்டும்‌. அல்லது இருசைக்கட்டை மாட்டு வண்டியிலோ தெனாலிராமன்‌ குதிரை கட்டிய ஜட்காவிலோ போக வேண்டும்‌. நடந்து போகிறவர்கள்‌ எப்பொழுதுமே ஜயித்துவிடுவார்கள்‌. இப்பொழுது சில ஆண்டுகளாகத்‌ தார்‌ சாலை, பஸ்‌ எல்லாம்‌ வந்துவிட்டன. காந்தியப்‌ பொருளாதாரத்தில்‌ நான்‌ நிபுணன்‌ இல்லை. ஆனால்‌ பெரிய நகரங்கள்‌, கிராமங்களின்‌ ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றதைப்‌ பார்க்கும்போது வயிற்றெரிச்சலாகத்தான்‌ இருக்கிறது. கிராமத்து மக்கள்‌ எவ்வளவு ஒற்றுமை உழைப்போடு செயல்பட்டாலும்‌ நகரத்தின்‌ ராட்சதப்‌ போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாது. பள்ளிக்கூடம்‌, பல்கலைக்கழகம்‌ என்று எல்லா நிர்வாகத்திலும்‌ பங்கு கேட்கும்‌ இளைஞர்கள்‌ ஏன்‌ இந்த மாதிரி அடிப்படையான விஷயங்களைப்‌ பற்றிச்‌ சிந்தனை செய்யவில்லை என்று வியப்பாக இருக்கிறது.


எங்கள்‌ ஊரில்‌ பால்கூடச்‌ சரியாகக்‌ கிடைக்கவில்லை. நகரங்களின்‌ வயிறுகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்களிலிருந்து பால்‌ செல்லுகிறது. எங்கள்‌ ஊரில்‌ பாதிக்‌ காய்கறி கும்பகோணத்து ஆட்கள்‌ கொண்டு விற்கிறார்கள்‌. இவை தேவையில்லாத சங்கடங்கள்‌.

தமிழகத்தில்‌ சிறிய நிலக்காரர்களே அதிகம்‌. உணவுப்‌ பெருக்கத்‌ திட்டங்களில்‌ வெளிநாடுகளின்‌ தயவிலோ, உள்நாட்டுத்‌ தயவிலோ வழங்கப்படும்‌ உதவிகள்‌, பாங்க்‌ கடன்‌ வசதிகள்‌ முதலியன எங்கள்‌ ஊர்‌ போன்ற சிறிய ஊர்களுக்குப்‌ போதிய அளவுக்குக்‌ கிட்டவில்லை. இந்த வசதி எங்கள்‌ ஊர்‌ போன்ற *பெரிய மனிதர்கள்‌” இல்லாத ஊர்களுக்கு எப்பொழுது கிட்டப்போகிறதோ என்று நான்‌ எங்கோ உட்கார்ந்து ஏங்குகிறேன்‌. கூடிச்‌ செயலாற்றுகிற பண்பு இளைய தலைமுறைக்கு இன்னும்‌ அதிகமாக இருந்தால்‌, இந்த இரவுக்‌ கனவுகள்‌ நனவாகும்‌.


நான்கு மாதங்களுக்கு முன்பு எங்கள்‌ ஊருக்குப்‌ போயிருந்த போது, வாசல்‌ திண்ணையில்‌ ஒருநாள்‌ காலையில்‌ உட்கார்ந்திருந்தேன்‌. மார்கழி மாதம்‌, பள்ளி விடுமுறை, ஓர்‌ எட்டு வயதுச்‌ சிறுவன்‌ புத்தாடைகளை அணிந்து, வாசலோடு போனான்‌. விசாரித்தேன்‌. “எங்க பெரிய சார்‌ சபரிமலை. போகிறார்‌. போய்ப்‌ பார்க்கப்‌ போகிறேன்‌” என்று சொல்லிப்‌ போனான்‌, பெரிய சாரிடம்‌ உள்ள பக்தி மட்டுமின்றி. சபரிமலை எங்கோ அமெரிக்கா போன்ற தொலைவில்‌ இருப்பதுபோல்‌ அந்தச்‌ சிறு உள்ளம்‌ பிரமிக்கும்‌ பிரமை கண்களில்‌ தெரிந்தது.


பெரிய இடங்கள்‌, செல்வாக்குகள்‌ போன்ற மதிப்பீடுகளைக்‌ கடந்து புதிய வாழ்க்கைப்‌ பாதையில்‌ எங்கள்‌ ஊரைக்‌ கைப்பிடித்து ஏற்றும்‌ உதவி நனவாகுமா என்ற பிரமை எனக்கும்‌ ஆசையோடு தட்டுகிறது. ஊர்‌ இளைஞர்களாவது ஏதாவது முனைந்து செய்வார்கள்‌ என்ற நம்பிக்கையும்‌ ஒரு மூலையில்‌ மின்னுகிறது.- தி.ஜா (1969)

685 views

Comments


bottom of page