top of page

நம்‌ மொதேரா - தி.ஜானகிராமன்

Updated: Dec 31, 2023

1968ல் தினமணி கதிரில், எழுத்தாளர் தி.ஜானகிராமன் எழுதிய மொதேரா சூரிய கோவில் பற்றிய பயண கட்டுரை இது .

(குஜராத் மொதேராவில் உள்ள சூரிய கோவிலின் கோட்டோவியம். நன்றி Haresh Purohit )


காகிதம்‌, மென்மையான மரம்‌ - இவற்றையே கத்தரித்தும்‌ தேய்த்துவிட்டும்‌ உருவாக்கியதுபோல ஒரு கருக்கும்‌ நெளிவும்‌ பிசிறில்லாத கச்சிதமும்‌ ஒவ்வொரு அங்குலத்திலும்‌ விரவிக்‌ கிடக்கிறது.

மொதேராவுக்கு நாங்கள்‌ போய்ச்‌ சேர்ந்த பொழுது மாலை ஐந்து ஐந்தரை மணி இருக்கும்‌. காரை நிறுத்தி இறங்கியபொழுது எதிரே கோயில்‌, சுற்றிலும்‌ மைல்‌ கணக்கிற்கு நான்கு பக்கமும்‌ பரந்த வெளி, பெரிய மரங்கள்‌ இல்லாத சமவெளி. ஒரு நிசப்தம்‌. ஒரு பூசை இல்லாத கோவில்‌; கோவிலுக்குத்‌ தங்கப்‌ பழுப்பான உடம்பு. அதன்‌ மீது மாலை நேர வெயில்‌ பட்டு, கோயிலின்‌ அந்த மென்மைப்‌ பழுப்பு தகதகவென்று கழுவித்‌ துடைத்தாற்போல, தெளிந்து, புன்னகை செய்வது போலிருந்தது. அடுக்கடுக்காக, நுணுக்கு நுணுக்காகச்‌ செதுக்கு வேலைகளைப்‌ பார்க்கும்பொழுது யாரோ வாயை அகட்டி, லேசாகத்‌ திறந்து புன்னகை செய்வது மாதிரிதான்‌ எனக்குத்‌ தோன்றிற்று. ஒன்றா, இரண்டா! ஆயிரக்கணக்கான புன்னகைகள்‌. கோயிலுக்கு முன்னே உள்ள வெளியில்‌ நின்ற சிறுசிறு வேப்ப மரங்களுக்கிடையில்‌ அங்கும்‌ இங்குமாக ஏழெட்டு மயில்கள்‌. காற்று சற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. அதில்‌ பம்மி வளைந்தன மயில்களின்‌ தோகைகள்‌. அதனால்‌ நேராக நடக்க முடியாமல்‌ மயிலினம்‌ அத்தனையும்‌ நண்டு நடையாக, பக்கவாட்டு நடை போட வேண்டியிருந்தது.


இந்தப்‌ பரந்த வெளி, கோயில்‌, அதற்கு முன்‌ குளம்‌, நிசப்தம்‌, மாலை வெயில்‌, கிசுகிசு வென்று காதில்‌ பம்மும்‌ காற்றோசை - அத்தனையும்‌ பார்த்துக்‌ கொண்டே சிறிது நேரம்‌ நின்றோம்‌. சூரியனுக்கான கோவில்‌. பூசை இல்லாத கோவிலுக்குப்‌ பூசை செய்வதுபோல்‌ சூரிய கிரணங்கள்‌ கோவில்‌ மீது அப்பி விழுந்திருந்தன. வருகிற மனிதர்களும்‌ வேடிக்கை பார்க்கத்தான்‌ வருகிறார்கள்‌. பூசையை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூரிய விக்கிரகம்‌ இப்போது அங்கு இல்லை. சூரியனுக்கு எத்தனையோ கோயில்கள்‌ நம்‌ நாட்டில்‌ இருக்கின்றன. பலவற்றில்‌ பூசை நடக்கவில்லை. வெறும்‌ காட்சிப்‌ பொருளாகத்தான்‌ அவை நிற்கின்றன. மொதேரா சூரியன்‌ கோயிலும்‌ ஒரு காட்சிப்‌ பொருள்‌ தான்‌. மொதேரா கிராமம்‌ குஜராத்தில்‌ அகமதாபாதிலிருந்து வடக்கே சுமார்‌ அறுபத்தைந்து மைலுக்கு அப்பால்‌ இருக்கிறது. அந்தக்‌ கிராமத்தில்‌ சுமார்‌ 940 ஆண்டுகளுக்கு முன்பு ஸோலங்கி மரபைச்‌ சேர்ந்த பீமதேவன்‌, சூரிய பகவானுக்கு இந்தக்‌ கோவிலைக்‌ கட்டினான்‌. இதை 1025- 1026ஆம்‌ ஆண்டுகளில்‌ கட்டியதாகச்‌ சொல்லுகிறார்கள்‌. கஜினி மகமூத்‌ இந்தியாவில்‌ புகுந்து எத்தனையோ கோயில்களை இடித்து, செல்வங்களை வாரிச்‌ சுருட்டிப்‌ போனான்‌. குஜராத்தில்‌ இருந்த சோமநாதபூர்‌ கோவிலும்‌ அந்தக்‌ கொள்ளைக்கு இரையாயிற்று. ஆனால்‌ அவன்‌ போன கையோடு, குஜராத்‌ மன்னர்கள்‌ இரட்டிப்பு ஆர்வத்துடன்‌ புதிய புதிய கோயில்களை எழுப்பினார்கள்‌. அப்படிச்‌ சூட்டோடு சூடாக எழுந்த கோவில்தான்‌ மொதேரா சூரியன்‌ கோயிலும்‌.


மணியின்றி, மலரின்றி, பண்ணின்றி, பாவின்றி நிசப்தமாக நிற்கிறது அது, கர்ப்பக்கிரகத்தில்‌ விக்ரகத்தைக்‌ காணவில்லை. ரகசிய கர்பக்கிரகம்‌ ஒன்று கோவில்‌ மட்டத்திற்கு ஒரு ஆள்‌ ஆழத்திற்கு - காணப்படுகிறது. அங்கும்‌ விக்ரகம்‌ இல்லை, ஆனால்‌ கோவிலுக்கு வெளியேயும்‌ உள்ளேயும்‌ திரும்பின இடம்‌ எல்லாம்‌, கண்‌ விழுந்த இடம்‌ எல்லாம்‌ விக்ரகங்கள்‌. வெளிச்சுவர்‌ எங்கும்‌ பற்பல சூரிய உருவங்கள்‌ நிமிர்ந்த அழகும்‌ அருளுமாக நிற்கின்றன. சூரியனைத்‌ தவிர, இன்னும்‌ பல தேவிகளின்‌ சிலைகள்‌. கோவிலின்‌ வெளியேயும்‌ உள்ளேயும்‌ உச்சிமுதல்‌ அடிவரை மலர்கள்‌, மனிதர்கள்‌, விலங்குகள்‌, பறவைகள்‌, தேவர்கள்‌ என்று அங்குலம்கூட விடாமல்‌ செதுக்கி, இழைத்துத்‌ தள்ளியிருக்கிறார்கள்‌. எனவே கல்லால்‌ செய்த பெரிய நகைபோல்‌ காட்சி அளிக்கிறது கோயில்‌.


கோயிலுக்கு முன்பு ஒரு மணிக்குளம்‌. சச்சதுரமாக உள்ள ஞாபகம்‌. ஏகப்பட்ட படிக்கட்டுகள்‌. படிக்கட்டிலேயே பிறை பிறையாகப்‌ பல சிறு கோயில்கள்‌, குளத்தை விட்டுக்‌ கோயிலில்‌ நுழைந்ததும்‌ முன்னால்‌ ஒரு சபாமண்டபம்‌. பிறகு பிராகாரம்‌. பிறகு கர்ப்பக்கிரகம்‌. அதற்குள்ளேயே ரகசியமான இன்னொரு பள்ளக்‌ கர்ப்பக்கிரகம்‌. உள்மண்டபத்தின்‌ கூரை இடிந்து திறந்து கிடக்கிறது. துளி இடம்‌ விடாமல்‌ திணிந்து பொருந்தியிருக்கிற ஆயிரக்கணக்கான சிற்பங்களையும்‌ அணிகளையும்‌ பார்க்கும்போது அடி மலைக்‌ கோயில்கள்‌, மைசூர்‌ பகுதியில்‌ உள்ள ஹளயபீடு, சோமநாதபுரா இவற்றின்‌ நினைவு வருகிறது. தமிழ்நாட்டு நாய்க்க மண்டபங்களிலும்‌ இப்படி அலங்கார வேலைகள்‌ உண்டு. ஆனால்‌ அவை கட்டிடத்தின்‌ உருவ முழுமையைக்‌ கெடுத்து, உணர்ச்சியற்ற வெறும்‌ அலங்கார ரசாபாசங்களாக நிற்கின்றன. ஆனால்‌ கன்னடத்து ஹொய்சளர்‌ கோயில்களிலும்‌ மேற்கிந்தியக்‌ கோயில்களிலும்‌ காணும்‌ நுணுக்க வேலைகள்‌, கட்டிடத்தின்‌ உருவ ஒருமையோடு இழைந்து அதிலிருந்து இயற்கையாகப்‌ பூத்ததுபோல்‌ வளர்ந்து; அதன்‌ அழகை இன்னும்‌ நுண்ணியதாக்கிக்‌ கூட்டுகின்றன. விஜயநகர, பல்லவ, சோழ பாணிகளையெல்லாம்‌ அவியலாக்கி விரசப்படுத்திற்று தமிழகத்து நாய்க்கர்களின்‌ கட்டிடக்‌ கலை. சாளுக்கிய, ராஷ்ட்ரகூடப்‌ பாணிகளைப்‌ புரிந்துகொண்டு, அவற்றை வளர்ந்து, புதிய நுணுக்க அதிசயங்களைப்‌ படைத்தது குஜராத்‌ - அடிமலைகளில்‌ காணும்‌ மேற்கத்தியப்‌ பாணி.


மொதேரா கோயிலில்‌ முதலில்‌ நம்முடைய கண்ணைக்‌ கவர்வது நுழைவுகளிலும்‌ நிலைகளிலும்‌ தொங்கும்‌ வளைவுத்‌ தோரணங்கள்‌, பிறகு தேவர்‌, மனிதர்களின்‌ சிற்பங்கள்‌. மனிதச்‌ சித்திரங்களில்‌ பல அன்றாட வாழ்க்கைக்‌ காட்சிகளைக்‌ காட்டுபவை. பிறகு தெய்வச்‌ சிலைகள்‌; மலர்‌, இலைகள்‌ கொண்ட அலங்கார நுணுக்க வரிசைகள்‌; குதிரைகள்‌, போர்புரியும்‌ யானைகள்‌ - இவற்றின்‌ வரிசைகள்‌. இருள்‌ மண்டிய இண்டு இடுக்குகளில்கூட நுண்ணிய சிற்பங்கள்‌ பொதிந்து கிடக்கின்றன. ஒரு விசேஷம்‌ என்னவென்றால்‌, அத்தனை சிற்பங்களும்‌ - சிறியவை, பெரியவை, மூலை முடுக்கில்‌ இருப்பவை - ஒவ்வொன்றும்‌ உணர்ச்சியின்‌ உயிர்த்‌ துடிப்புடனும்‌, மாசற்ற விகித அளவுணர்வுடனும்‌, செதுக்கப்பட்டிருப்பதுதான்‌. அவற்றைப்‌ பார்க்கும்போதுதான்‌ தமிழ்நாட்டு நாயக்கச்‌ சிற்பங்களின்‌ வெற்று ஆடம்பரம்‌ நினைவுக்கு வந்தது எனக்கு. தூண்‌ அணி வேலைகள்‌, குதிரைகள்‌ இவற்றை மிகவும்‌ மெனக்கிட்டுச்‌ செய்திருக்கிற நாய்க்கச்‌ சிற்பிகள்‌, மனிதர்களை உணர்ச்சியற்ற தடிக்‌ கம்புகளாகப்‌ பொறித்திருப்பதுதான்‌ விந்தை. அதனால்‌, அவர்கள்‌ நிறுவிய விலங்கு வகைகள்கூடப்‌ பொருத்தமாக இருக்குமா என்று சந்தேகம்‌ வந்துவிடுகிறது.


கொளாரக்‌, கஜுராஹோவைப்‌ போல, மொதேரா தூண்களிலும்‌ ஆண்‌ - பெண்‌ காதல்‌ ஜோடிகளும்‌, பலவகைப்‌ புணர்ச்சி வகைகளும்‌ செதுக்கப்பட்டுள்ளன. இவையும்‌ துடிப்பு, தன்மறதி, நாணம்‌, அர்ப்பணம்‌, கேளிக்கை - இந்த நிலைகளின்‌ முழுமையுடன்‌ உருவாகியிருக்கின்றன.


காகிதம்‌ மென்மையான மரம்‌ - இவற்றையே கத்தரித்தும்‌ தேய்த்துவிட்டும்‌ உருவாக்கியதுபோல ஒரு கருக்கும்‌ நெளிவும்‌ பிசிறில்லாத கச்சிதமும்‌ ஒவ்வொரு அங்குலத்திலும்‌ விரவிக்‌ கிடக்கிறது. இத்தனைக்கும்‌ மணற்கல்‌ வளைந்து கொடுக்கக்‌ கூடியதுதான்‌. வளைந்து கொடுக்கும்‌ பொருள்‌ மட்டும்‌ எப்படிப்‌ போதும்‌? கவனமும்‌ சிரத்தையும்‌ பூர்ணகலைத்‌ தன்மையும்‌ ஒருமித்தால்தானே இந்த முழு அழகும்‌ சாத்தியமாகும்‌? இந்த சிரத்தையின்‌ பயனாகத்தான்‌ உலோக நகைகளில்‌ செய்வது போல, இண்டு இடுக்குகளில்கூட ஆழ்ந்து செல்லும்‌ நுணுக்கம்‌ சாத்தியமாயிருக்கிறது.


இதெல்லாம்‌ ராஜஸ்தானத்துக்குக்‌ கிழக்கேயுள்ள பிரதேசம்‌. ராஜஸ்தானத்து மணற்புயலின்‌ கடை வீச்சுக்கு இலக்காகும்‌ பகுதி. எனவே பெரும்‌ காற்று ஒன்று வீசினால்‌ காற்றில்‌ பறந்து வரும்‌ மணல்‌ கோயிலின்‌ வெளிச்சிற்பங்களை ராவத்தான்‌ செய்யும்‌ கோயிலைச்‌ சுற்றி உயர்ந்த மதிற்‌ சுவர்கள்‌ இருந்தால்‌ திருடர்கள்‌, அந்நியர்களோடு, காற்றின்‌ சூறையையும்‌ ஓரளவுக்காவது தடுக்க முடியும்‌. மொதேரா கோயிலில்‌ மதில்‌ சுவர்‌ இல்லை. இல்லாவிடில்‌ வேறு ஏதாவது பூச்சாவது பூசி அரிப்பைத்‌ தடுக்க வேண்டும்‌. தடுக்கிறார்களோ, என்னமோ தெரியாது. ஆனால்‌ பாதுகாப்புக்கு உட்பட்டது என்று வெளியேயிருந்த தொல்‌ பொருள்‌ இலாகாவின்‌ எச்சரிக்கைப்‌ பலகையும்‌ இலாகாவின்‌ நிரந்தரக்‌ காவல்காரன்‌ இருப்பும்‌ சான்று கூறுகின்றன.


குஜராத்துக்குத்‌ தனிப்‌ பெருமைகள்‌ பல உண்டு. மகாத்மா காந்தி அவதரித்த இடம்‌. மேநாடுகளுடன்‌ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்த்தகத்‌ தொடர்பும்‌, அதனால்‌ பொருட்‌ செல்வமும்‌ துணிச்சலும்‌ புதுமைகளை வரவேற்கும்‌ திறந்த மனமும்‌ நிறைந்த இடம்‌. உலகத்தின்‌ சிறந்த சிற்பிகளான லா கர்பூஸியர்‌, லூயி கான்‌ போன்ற கட்டிடக்‌ கலை மேதைகளின்‌ படைப்புக்களைக்‌ கொண்ட பிரதேசம்‌. சமணம்‌ இன்னும்‌ தழைத்து ஓங்கிக்கொண்டிருக்கிற இடம்‌. ஆசியாவிலேயே சிங்கங்கள்‌ இன்னும்‌ வாழ்கிற இடம்‌.


குஜராத்துக்குப்‌ போகிறவர்கள்‌ சோமநாத்பூர்‌, துவாரகை, கிர்‌ காடு, அகமதாபாத்துக்கு அருகில்‌ உள்ள காந்திஜியின்‌ சபர்மதி ஆசிரமம்‌, கர்பூஸியர்‌ கட்டிய இரண்டு கட்டிடங்கள்‌, லூயி கானின்‌ நிர்வாகக்‌ கழகக்‌ கட்டிடங்கள்‌, கலிகோமில்லில்‌ உள்ள அதிசயமான நெசவு வேலைப்பாட்டுக்‌ கண்காட்சி, அழகு நிறைந்த ஆயர்‌ பெண்மணிகள்‌ இவற்றையெல்லாம்‌ கண்டு வருகிறார்கள்‌. இவ்வளவையும்‌, பார்த்துவிட்டு மொதாரா சூரியன்‌ கோயிலைப்‌ பார்க்காமல்‌ வந்தால்‌ அந்த அனுபவம்‌ முழுமை பெறாத அனுபவமாகத்தான்‌ இருக்கும்‌.


- தி.ஜா (1979)













159 views

Recent Posts

See All
bottom of page