top of page
Writer's pictureஇளம்பரிதி

கிழக்கு நோக்கி - 4

சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.


(சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் உள்ள ஏரியில் இருக்கும் கருப்பு நிற அன்னப்பறவை , நன்றி :Darisalee)


"மேகத்தனிமையில் உலாவியபடி ஆயிரம் மஞ்சள் டாஃபோடில் மலர்களைக் கண்ட கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எய்த இன்ப  மதுரத்தை ஒருதுளியேனும் இங்கே வந்தால் அடையமுடியும். "

    

"சிங்கையின் சிகையில் சூடப்பட்ட மலர்கள்"


சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டபோதே என்னை மிகவும் கவர்ந்த இடம் அங்குள்ள தாவரவியல் பூங்கா. ஆசியாவிலே மிகவும் அழகான, செறிவான திட்டமிடலுடன் அமையப்பெற்ற பூங்காகளில் ஒன்று. எந்த ஊர் சென்றாலும் அதன் வரலாற்றையும் கலாச்சார செறிவையும் அறிந்துகொள்வதற்கு குறைந்தது நூறுவருட பழமை கொண்ட பகுதிகளை காண்பது எங்கள் வழக்கம். சிங்கப்பூரின் ஆன்மபலமே அதன் தாவரவியல் பூங்காவில் இயங்குகிறது என்பதை அங்கே சென்ற நொடியிலிருந்தே அறியமுடிந்தது. 


தாவரவியல் பூங்காவின் பெயரிலியே ஓர் மெட்ரோ ரயில் நிலையம் உண்டு அங்கே இறங்கி கொண்டோம். பூங்காவிற்கு செல்வதற்கு மொத்தம் ஆறு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலுக்கும் ஒரு சிறப்புண்டு. ஒவ்வொரு வாயிலும் வெவ்வேறு வகையான தாவரங்கள், பூக்கள், மரங்கள் மற்றும் பலதரப்பட்ட தோட்டக்கலை திட்டங்களை முன்னிறுத்தியுள்ளன. நாங்கள் புக்கிட் திமா சாலையை ஒட்டி உள்ள கதவின் வழியாக உள்ளே சென்றோம். வாயிற்கதவுகளே மிகவும் நேர்த்தியான வடிவைமைப்பில் செய்யப்பட்டிருந்தது. கொடிகளும், இலைகளும் இணைந்து பின்னிச் செல்லுவதைப் போன்ற வடிவமைப்பு. அழகிய பெண் ஒருத்தி பட்டுசரிகை சேலையை உடுத்தி நிற்பதைப் போல் இருந்தது அந்தக்கதவு. 


பசுமையான சூழல் அந்த கதவுகளிலிருந்தே துவங்கியது. நாங்கள் உள்ளே நுழைந்ததுமே இருவாட்சி(ஹார்ன்பில்) பறவையைப் பார்த்தோம். இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் அரியவகை மஞ்சள் அலகு கொண்ட பறவைபோன்றே இருந்தது. நாங்கள் பார்த்த பறவைக்கு கழுத்து பளிச்சிடும் நீலநிறத்தில் இருந்தது. பொதுவாக தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வாழும் பெண் பறவைகளுக்கு இந்த நீல நிற கழுத்து இருக்கும். தன் இணைக்காக கூவியபடியே நிலைகொள்ளாமல் கிளைகளில் தாவியபடி இருந்தது அந்தப்பறவை. இந்தியாவில் குடகு பகுதியிலும், அருணாச்சலப்பிரதேசத்திலும் மட்டுமே இதற்கு முன்னர் ஒரே ஒரு முறை நான் இருவாட்சியை கண்டுள்ளேன். பெரும்பாலும் கூச்சசுபாவம் கொண்ட பறவை இது. அந்த இருவாட்சியை அருகில் கண்ட தருணம் எக்கணத்திலேனும் கரைந்துசெல்லும் வானவில்லின் நீலநிறம் மட்டும் நாம் காணும் வரை கலையாமல் இருப்பதன் பரவசத்தை அளித்தது. 


இருவாட்சியை கண்டு சில அடி தூரத்திலேயே பாம்பு உடலுடன், கால் கொண்ட மிருகம் ஒன்று நடந்து சென்றது. மானிட்டர் லிசார்ட் என்று நண்பர்கள் சொன்ன பொது ஏதோ புதிய வகை உயிரினம் என்று பரவசம் ஆனோம். நிக்கிதா என்னிடம் இது தான் உடும்பு என்றதும் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். உடும்பைப் பற்றி பல கதைகளை அதுவரையிலும் எங்கள் ஊர்களில் கேட்டு இருந்தாலும் சிங்கப்பூர் வந்து தான் அதை நேரில் காணவேண்டும் என எனக்கு வாய்த்திருந்தது. 


இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பூங்காவாகவே இருந்தாலும் இங்கே ஒவ்வொரு உயிரினத்திற்கான இயற்கை வாழ்வியல் மனிதர்களால் பெரிய பாதிப்புக்குள்ளக்காமல் இருந்தது. மனிதனின் விசை ஒரு மரத்தை மட்டுமே வளர்த்திருக்கும், ஒரு மரம் தனக்கான வனத்தையே உருவாக்கி கொண்டிருக்கும். நாங்கள் நடந்து சென்றது தானே தன்னை செதுக்கி கொண்ட ஒரு மழைக்காட்டின் சிறுபகுதி. மனிதனின் வாழ்விடத்தை நன்கு அறிந்து அவனின் எந்த எல்லையையும் தாண்ட விரும்பாத அறிவு கொண்ட மூத்த மரங்கள் நிறைந்த கானகம். 


இந்திய நிலப்பரப்பில் அழகிற்காக தோட்டம் வளர்ப்பது, இயற்கையை ரசித்து அறிவதற்காக மட்டுமே. கானகத்தின் ஒருபகுதியை சீர்செய்வதென்பது அரிதிலும் அரிது. முகலாயர்களின் வருகைக்குப் பின்னர்தான் இந்தியாவில் அரண்மனையைச் சுற்றிய தோட்டங்கள் உருவாகின. அந்த வகை தோட்டங்களிலும் மரங்கள் குறைவு. மலர்ச்சோலைகளே அதிகம் காணப்பட்டன. இன்று இந்தியாவில் எஞ்சியிருக்கும் முக்கியமான பூங்காக்கள் ஸ்ரீநகர், தில்லி, பெங்களூர், ஊட்டி ஆகிய பகுதிகளிலேயே அதிகம் உள்ளது. இவையாவும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டது. 


ஆங்கிலேய வரலாற்றில் விக்டோரியா காலகட்டத்தில் (1837 - 1901) கட்டுமானக்கலை முக்கிய உச்சங்களை அடைந்தது. அதன் ஒரு பகுதியாக பூங்காகளை அமைப்பதற்கான தனித்துவ அழகியல் கூறுகளும் உருவாகி வந்தன. விக்டோரிய தோட்ட அழகியல் பல்வேறு வரலாற்று தடையங்களிலிருந்து உத்வேகம் பெற்றது. ரோம், கிரீஸ் போன்ற பண்டைய நாகரிகங்களின் முறையான தோட்டங்கள் மற்றும் மறுமலர்ச்சி காலகட்டத்தின் ஐரோப்பிய தோட்டங்களின் அடிப்படைகளை ஆராயத்துவங்கினர். இந்த தாக்கங்கள் வடிவ சமநிலை, ஒழுங்கு மற்றும் அலங்கார அம்சங்களின் பயன்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தின. மேலும் பிரிட்டனின் காலனித்துவ விரிவாக்கதால் தொலைதூர நிலங்களிலிருந்த கவர்ச்சியான தாவரங்கள் மீதும், புதுவகையான நிலப்பரப்புகளின் மீது கவனம்விழுந்தன. இதனால் தாவரவியல் ஆய்வு மற்றும் தாவர சேகரிப்புப் பயணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. 


விக்டோரியன் தோட்டங்களில் நிலத்திற்கு அந்நியமான புதிய தாவர இனங்கள் அறிமுகப்படுத்தபட்டன. பூங்காக்களில் தாவரங்களின் பன்முகத்தன்மையை முன்வைக்கவும், பல்லுயிரி பெருக்கத்துக்கும் இந்த முயற்சிகள் உதவின. (பாதக விளைவுகளையும் இந்த முயற்சிகள் உருவாகின, அழகியலை கணக்கில் கொண்டு அவற்றை இங்கே தவிர்த்துவிடலாம்). உலகம் எங்கிலும் இன்றுள்ள முக்கியமான பூங்காக்களை பட்டியலிட்டு பார்த்தால் அவை அனைத்துமே விக்டோரிய தோட்ட அழகியலின் அடிப்படையில் ஆங்கிலேர்களாலே உருவாக்கபட்டுள்ளது (ஜப்பானை தவிர்த்து) . 


(பூங்காவில் நாங்கள் கண்ட காட்சிகள்)


உலகமெங்கும் ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த தேசங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுவதற்கு ரொமான்டிசிச காலகட்டத்தின் (கற்பனாவாத காலகட்டம்) கலைஞர்களின் படைப்புகள் முக்கிய பங்காற்றின. அக்காலகட்டத்தின் படைப்புகளில் இயற்கைபற்றிய ஆர்வமும் அதன் முக்கியத்துவம் குறித்த நம்பிக்கையும் அதிகம் தாக்கம் செலுத்தின. அக்காலகட்டத்தில் இலக்கியபடைப்புகள் யாவும் இயற்கையை கொண்டாடித் தீர்த்தன. மேலும் அவை இயற்கையுடன் தனித்திருத்தல், இயற்கையை அறிந்துகொள்ளுதல், இயற்கை மீதான ஏக்கம், இயற்கை பற்றிய கடந்த காலத்தின் நினைவுகள் ஆகிய உணர்வுகளை அதிகம் சார்ந்திருந்தது. இந்த காலக்கட்டத்தை படைப்புகள் பலகாலமாக நிறுவப்பட்ட விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு சவால் விடுத்தன. தேசியவாத இயக்கங்களின் எழுச்சிக்கும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ரொமாண்டிசிச கலைஞர்கள் ஓரளவுக்கு பங்களித்தனர். இதன் விளைவே இன்று தனிமனித உரிமை, தனித்துவம், உணர்ச்சிவயம், கற்பனையின் சக்தி ஆகியவை மேற்கத்திய தேசங்களின் கலாச்சார மற்றும் அறிவுசார்சிந்தனையின் மையக் கோட்பாடாக உள்ளது. 


ஒரு தேசத்தின் கட்டமைப்பை உருவாக்குவதிலும், அடிப்படை அழகியலை தக்கவைத்துக்கொள்வதிலும் ரொமாண்டிசிசம் பாதிப்பை செலுத்தியுள்ளது. இதற்கு வளர்ச்சி அடைந்த தேசங்களில் உள்ள பூங்காக்களே முக்கிய சாட்சி.


சிங்கப்பூரில் தேசியத் தோட்டம் என்ற கருத்துருவாக்கம் ஆங்கிலேயே அதிகாரி சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் என்பவரால் 1822ல் முன்னெடுக்கபட்டது. ஃபோர்ட் கேனிங் என்ற இடத்தில் தாவரவியல் சார்ந்த பரிசோதனைத் தோட்டத்தை அவர் நிறுவினார். காலனிய ஆட்சி பகுதிகளில் "ஆங்கில நிலப்பரப்பு இயக்கம்" நிலப்பரப்புகளை வடிவமைப்பதில் பெரிய தாக்கத்தைச் செலுத்தியது. இந்த இயக்கம் அதற்கு முந்தைய தோட்டபாணிகளின் முறையான, வடிவியல் அமைப்புகளில் இருந்து விலகி, ஆங்கில கிராமப்புறங்களால் ஈர்க்கப்பட்ட மிகவும் இயற்கையான மற்றும் அழகிய அணுகுமுறையை நோக்கியதாக இருந்தது. பொதுவாக இந்த சித்தாந்தத்தில் அமைக்கப்படும் தோட்டங்கள் ஒரு முழுமையான இயற்கை பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் வளைந்த பாதைகள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் வழியாக அலைந்து திரிந்து, வழியில் எதிர்பாராத ஆச்சரியங்களை எதிர்கொள்ளும் வகையில் பூங்கா திட்டமிடப்பட்டிருக்கும்.  


படக்காட்சி அழகியல் (picturesque) என்ற சிந்தனை வில்லியம் கில்பின் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டின் கோட்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது. ஆங்கில நிலப்பரப்பு தோட்ட வடிவமைப்பில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வகை அழகியல் ஒழுங்கற்ற தன்மை, இயற்கையின் கட்டற்ற மூர்க்க வளர்ச்சியின் இயல்பான அழகை வலியுறுத்தியத., இது தோட்ட வடிவமைப்பாளர்களை இயற்கை ஓவியங்களை ஒத்த காட்சிகளை உருவாக்க ஊக்குவித்தது. கட்டிடங்களும், அசுரவளர்ச்சிகொண்ட நகர்ப்பகுதியும் நிரம்பபபெற்ற சிங்கப்பூருக்கு, இதுபோன்ற கிராமப்புறங்களின் இயற்கை அழகைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இடங்கள் முக்கியமாகின்றன.


வெப்பமண்டல மழைக்காடுகளுள் அடர்த்தியாக பசுமையாக சொரிந்து வளைந்து செல்லும் பாதையில் நடந்து சென்றோம். இலைகளுக்கென்றே தனியான பகுதி ஒன்று பூங்காவில் ஒதுக்கப்பட்டிருந்தது. துளிர் இலையில் துவங்கி, இளம்பச்சை அடர் பச்சையாகி பின்னர் முதிர்ந்த பச்சையாகி, மஞ்சள் படிந்த செந்நிறமாகி, காய்ந்து வறண்ட சருகாவது வரையிலான மாறுபட்ட சாயல்கொண்ட இலைகள் அங்கே கண்டோம். ரப்பர் தோட்டங்களுக்கு ஊடாக நடந்து சென்றோம். 


பூங்காவின் சில பகுதிகளில் சமச்சீரற்ற தளவமைப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது, கருப்பு நிற கூழாங்கற்களை தேர்ந்தெடுத்து தரையில் பதித்து அலைபாய்ந்து செல்லும் நீரை நினைவுறுத்தும் வகையில் நடந்து செல்லும் பாதை வடிவமைக்கப்பட்டிருந்தது, நடந்து செல்லும் பாதை எவ்வாறாக இருந்தாலும் சரி காணும் திசையெல்லாம் கானகம் இன்றி வேறில்லை, கண்ணுக்கினிய களியாட்டம் மட்டுமே எஞ்சும் அளவிற்கு பூங்கா வடிவமைக்க பட்டுள்ளது. 


பூங்காவில் வழக்கமான முறைசார்ந்த வடிவமைப்புகளைத் தாண்டி பல்வேறு வகையான பூர்வீக மற்றும் கவர்ச்சியான பூக்கும் மரங்கள், புதர்கள் மற்றும் வற்றாத தாவரங்களை இணைத்து, இயற்கையான குழுக்களில் அமைந்துள்ளன. பூங்காவை குப்பை இல்லாமல் கூட்டி துடைப்பதாக கூட ஊழியர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. குப்பை இல்லாமல் தங்கள் சுற்றத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இங்குள்ள மரங்கள் கூட விரும்புவதை இலைகளை உதிர்க்காத மரங்களை காணும் போதே தெரிகிறது. மனிதர்கள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அழகியல் என்ன என்பதை இங்குள்ள தாவரங்கள் அனைத்தும் உணர்ந்து அதற்கேற்றாற் போல் தங்களை தகவமைத்துக் கொண்டு வளர்வதாகவே தெரிகிறது. 


பூங்காவில் உள்ள பரந்த புல்வெளிகள் மற்றும் திறந்தவெளி நிலங்கள் அடர்த்தியான மழைக்காடுகளிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தன. திறந்தவெளிப் பகுதிகள் தடையற்ற விசாலமான காட்சியை உருவாகின்றது. உள்ளத்தை பேரமைதி கொள்ள செய்கிறது. நாய்ப்பிரியர்கள் அவர்களின் செல்லங்களுடன் நேரத்தை செலவழிக்க இந்தவகை பூங்காக்கள் உதவுகின்றன. உலகில் உள்ள விலையுயர்ந்த அத்தனை நாய் வகைகளையும், அவற்றின் அரியவகை உரிமையாளர்களையும் ஒரே இடத்தில் காண்பதற்கு சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவிற்கே செல்லவேண்டும். ஒருவர் காய்கறி வாங்கும் துணிப்பையில் இரண்டு நாய்களை வைத்துக்கொண்டு நடந்தார். மற்றொருவர் திருவிழாவில் தோள் மீது குழந்தையைத் தூக்கித்திரியும் தந்தையைப் போல வெள்ளைநிற நாய் ஒன்றை தூக்கித் திரிந்தார். சிங்கை தாவரவியல் பூங்காவின் ஒவ்வொரு காட்சியும் இயற்கையின் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்தியபடியே இருந்தது. 


(மரத்தின் உச்சியிலிருந்து பறந்து செல்லும் கொழுத்த அணிலை கண்டு திகைத்து நின்றோம்)



சீன வம்சாவெளி குழ்நதைகளும், இந்திய வம்சாவளி குழந்தைகளும் பள்ளியிலிருந்து சுற்றுலாவாக பூங்காவிற்கு வந்திருந்தனர். அவர்கள் யாவரும் சீராய் கூடி நின்று பாட்டுப்பாடி விளையாடி, கூடி உண்டனர். "இது அல்லவோ சொர்க்கம்" என்ற வழக்கமான மானுட பூரிப்பு தோன்றியது.  


நாங்கள் அதுவரை சுற்றி பார்த்த எந்தப் பகுதிக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கபடவில்லை. ஆர்கிட் கார்டன் என்ற பகுதியை சுற்றிப் பார்க்கமட்டும் கட்டணமாக பதினைந்து சிங்கப்பூர் டாலர்கள் வசூலிக்க படுகின்றது. இங்கே ஆர்க்கிட் வளர்ப்பு மற்றும் கலப்பினத் திட்டங்களுக்காக சர்வதேச ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. இதன் தனித்துவமான அம்சம் என்னவெனில் சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் முக்கிய தேச தலைவர்களின், ஆளுமைகளின் பெயரில் ஆர்க்கிட் மலரினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 


ஜாக்கி சான் முதல் ஷாருக்கான் வரை, நெல்சன் மண்டேலா முதல் இளவரசி டயானா வரை ஒரே நாளில் ஒரே இடத்தில் நாங்கள் சந்தித்தோம். மலர்ந்தமுகத்துடன் எங்களைக் கண்டு அவர்கள் புன்னகைத்தனர்! சிங்கையின் சிகை அழகு இந்த தாவரவியல் பூங்காவெனில், அந்த சிகைமீது சூட்டப்பட்ட அழகிய மலர்நிரை ஆர்க்கிட் தோட்டம். மேகத்தனிமையில் உலாவியபடி ஆயிரம் மஞ்சள் டாஃபோடில் மலர்களைக் கண்ட கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எய்த இன்ப  மதுரத்தை ஒருதுளியேனும் இங்கே வந்தால் அடையமுடியும். 


இந்தப் பூங்காவில் குளங்கள், சின்ன நீரோடைகள்,  நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இயற்கையான அழகியலை மேம்படுத்தம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்ந்து நின்ற பாறை ஒன்றிலிருந்து நீர் ஒழுகி வரும்படி நீர்ச்சிற்பம் ஒன்று வடிவமைக்கபட்டிருந்தது, அதன் அருகில் நின்று கவனித்த போது காட்டின் இசையை அறியமுடிந்தது. நானும் நிக்கிதாவும் கல்லின் மேல் வழிந்த நீரில் கைவைத்து விளையாடினோம். கல்லின் கணப்பு நீரில் கடத்தப்பட்டிருப்பதையும், நீரின் குளுமையை கல் உள்வாங்கிக் கொண்டிருப்பதையும் உணர முடிந்தது. கல் நீர் அருந்தியது.   நீர் அருந்தும் அந்த கல்லுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம், இயற்கைடமிருந்து நினைவுகளை அன்றி இந்த அற்ப மானுடன் வேறு எதை எடுத்துவர முடியும்?  


நத்தைக் கூட்டின் அண்டை வீடு

பெருமரத்திலிருந்து உதிர்ந்த,

மஞ்சள் மலர்.

மடிந்த மலரை உண்டபடியே விழுந்தது புழு, 

எறும்பு குடும்பத்திற்கு கூடாரத்தையும்,

உணவையும் அளித்தது காற்று.


- மேலும்



98 views

Recent Posts

See All

Comments


bottom of page