top of page

கிழக்கு நோக்கி - 2

Updated: Feb 14

சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.


(மழைச்சுழல் நீர்வீழ்ச்சி, நம்புங்கள் இது தான் விமான நிலையம்)


" இந்தியாவின் பகுதிகளை நதிகள் வடக்கும் மேற்காக பிரிப்பதைப் போல், தி ஜெவெலின் மழைச்சுழல் நீரூற்று சிங்கப்பூரின் கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்வதறக்கான நுழைவாயிலாக உள்ளது "

    

சாங்கி - இன்ப குவிமாடம்            


என் பதின்பருவத்தில் எங்கள் பெரியம்மாவின் மகன் சிங்கப்பூருக்கு வேலைக்காகச் சென்றார்,  அன்று அவருக்கு வயது இருபது இருக்கும். நாங்கள் முப்பது பேர் ஒரு பேருந்தை வாடகைக்கு வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து இரவு உணவை கட்டி எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மீனம்பாக்கம் விமனநிலையத்திற்குச் சென்று  அவரை வழியனுப்பி வந்தோம். கோவிலில் விமானசேவை செய்வதற்காக கூட யாரும் அத்தனை முன் தயாரிப்புகளுடன் இப்படி திரண்டு சென்றிருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன். அதன் பின் சிங்கப்பூர் பற்றிய உரையாடல் எங்கள் தெருவில் அன்றாடம் புழங்கும் ஒன்றாக ஆகியது.


ஒவ்வொருமுறை ஆகாயத்தில் விமானத்தை கண்டாலும் சிங்கப்பூர் சென்ற கணேஷ் அண்ணாவை எண்ணிக்கொள்வேன். வீடியோ வசதி இல்லாத கைபேசிகளின் காலகட்டம் அது வாரம் ஒருமுறை சிங்கப்பூரின் நிலைக்காட்சிகள் ஒளி வடிவில் செவியின் வழி புலப்பட்டுக்கொண்டே  இருக்கும். மெர்லயன், செண்டோசா, ஜூரோங், லிட்டில் இந்திய என சகல இடங்களையும் எங்கள் குடுபத்தில் பலரும் அறிந்திருந்தோம். விமானியின் அழகிய தமிழ் அறிவிப்புகளுடன் சாங்கியில் விமானம் தரை இறங்கும் வரை சிங்கப்பூர் பற்றிய என் நினைவுகளை நிக்கிதாவிடம் கதைத்துக்கொண்டே வந்தேன். அவள் பதிலுக்கு சிங்கப்பூரில் பணிபுரிந்த அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்தாள். 


சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இன்றைய சாங்கி உலகின் முதன்மையான விமான நிலையங்களில் ஒன்று , சுமார் நூற்றி இருபது ஆண்டுகள் முன்பு வரை சதுப்புநிலக்காடுகளாக இருந்த பகுதி இது. சதுப்புநிலக்காடுகளை சுற்றி "பாலனோகார்பஸ்" என்ற மரங்கள் அதிகம் உண்டு. இவை நூற்றி ஐம்பது அடி வரை வளரக்கூடியவை, டைனோசரின் கால்கள் போல் இதன் அடிப்பகுதி காட்சியளிக்கும். இந்த மரங்களை பூர்வகுடிகள் சாங்கி என அழைப்பதுண்டு, இந்த மரத்தின் பெயராலே இந்த பகுதியும் இன்றைய விமான நிலையமும் அழைக்கப்படுகின்றது. 


சாங்கியின் அமைவிட வல்லமைகளை நன்கு அறிந்த ஆங்கிலேயர்கள் இங்கே இராணுவத்தளவாடங்களை அமைக்கும் பணிகளை 1900 களில் துவங்கினர். அவர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது மலேரியாவை பரப்பும் கொசுக்களும், கொடிய விடம் கொண்ட பாம்புகளும். இந்தப்பகுதி மனிதர்கள் வாழ்வதற்கு உகந்ததாக சுத்தம் செய்யப்பட்ட பின்பு இப்பகுதியை அழகுபடுத்துவதற்காக பூக்கும் மரங்களையும், புதர்வகைத் தாவரங்களையும் ஆங்கிலேயர்கள் வளர்க்கத் துவங்கினர், அன்றைய நாட்களில் உலகின் ராணுவத் தளங்களில் மிகவும் அழகான ஒன்றாக சாங்கி இருந்தது.


கடவுளர்களின் வரலாறுகளை மாற்றி எழுதும் மனிதன், காட்டின் காட்சிகளையும் மாற்றி அமைத்துள்ளான். சதுப்பில் காலூன்றாமல் நிமிர்ந்து நிற்கின்றது சாங்கி டவர், கொசுக்கள் வட்டமிட்ட காட்டில் விமானங்கள் மிதக்கின்றன, பாம்புகள் நெளிந்த வெளியில்  பயணிகளின் மூட்டை முடிச்சுக்கள் சுமந்தபடி கன்வேயர் பெல்ட்கள் சுழன்று வருகின்றன. 


நான் கதைகளின் வழி பார்த்த சிங்கையும் நிக்கிதா பணிபுரிந்து கண்டுவந்த சிங்கையும் ஒன்றுதானா என்பதை சென்று நோக்கும் பொருட்டு அன்றைக்கான திட்டங்களை செய்தோம். என் நண்பன் ஜெரின் பெங்களூரிலிருந்து சிங்கப்பூருக்கு தனியாக கிளம்பினான், எங்கள் குழுவில் மீதி ஆறுபேரும் சென்னையில் இருந்து ஒன்றாய் சிங்கை வந்தோம். தரையிறங்கியதும் விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட இலவச இணைய இணைப்பு  வசதியை பயன்படுத்திக் கொண்டோம். எங்கள் முதல் பணி ஆசியாவின் மிக பெரிய விமான நிலையமான சாங்கியில் ஜெரினைய கண்டுபிடிப்பது.


தேசத்தை விட்டு கிளப்புவதற்கு மூன்று நாள் முன்பு வரை ஜெரினின் கடவுச்சீட்டு என்னிடமிருந்து, அவனை அழைத்து அவனுக்கு பாஸ்போர்ட் வேண்டாமா என வினவியதற்கு சிங்கப்பூர் செல்வதற்கு பாஸ்போர்ட் அவசியமா? என என்னிடம் பதிலுக்கு வினவிய தூய உள்ளம் கொண்ட  அவனை கண்டுபிடிப்பது சற்று சிரமம் தான். அவன் எளிதில் தொலைந்துவிட கூடியவன் என்பது அனைவரும் அறிவோம், சந்திக்கும் முன்னரே அவன் தொலைந்து விட்டான் என்பது நண்பர்களிடத்தில் பதற்றத்தை அளித்தது.


இந்தியாவிலிருந்து கிளம்பும் முன்னரே அவனை தி ஜெவெல் என்ற செயற்கை நீர்வீழ்ச்சிக்கு முன் வந்து காத்திருக்க சொன்னோம், அவன் எண்ணுக்கு அழைத்து பேசியதும் அவன் நாங்கள் சொன்ன இடத்தில தான் காத்திருப்பதாக சொன்னான். நாங்கள் கூகுள் வரைபடத்தை வைத்து அவனைத் தேட துவங்கினோம். ஆளுக்கொரு திசையாக நாங்கள் ஆறு நபர்கள் அவனைத் தேடி அந்த இடத்தில் அலைந்தோம் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை, தேடும் அவசரத்தில் நாங்கள் நிற்கும் இடத்தை ரசிக்கத் தவறி இருந்தோம்.


விமான நிலையத்திலிருந்து வெளியேறுபவர்களும், வெளியிலிருந்து விமான நிலையம் வருபவர்களும் சந்திக்கும் மைய இடமாக தி ஜெவெல் பகுதி அமைந்துள்ளது. மொத்தம் பத்து அடுக்குகள் கொண்ட இந்தப் பகுதி, தரைக்கு கீழ் ஐந்து தளங்களும், தரைக்கு மேல் ஐந்து தளங்களும் என விரிந்திருக்கும் ஓர் நகரம் அவ்விடம், அறிவியல் புனைவு கதைகளில் வருவதைப் போல தரைக்கு மேல் உள்ள ஐந்து தளங்களும்  ஷிசீடோ வனப்பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது ,  உலகெங்கிலும் உள்ள உயரமான வெப்பமண்டலக்காடுகளில் வாழும் நூற்றி இருபது வேவ்வேறு இனங்களை சார்ந்த சுமார் மூன்றாயிரம்  மரங்களும் அறுபதாயிரம் புதர்த் தாவரங்களும் இந்த வனப்பகுதியில் உள்ளது. இதை செயற்கை காடு என விவரிப்பது சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது, காட்டின் குறுவடிவம் மனிதனின் உதவியால் தன்னை உருவாக்கி கொண்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.


காட்டின் நடுப்பகுதியில் நூற்றி முப்பது அடி உயரத்திலிருந்து விழும் "மழைச்சுழல்" என்ற செயற்கை நீர்வீழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது, இதையும் செயற்கையான ஒன்று எண்ணுவதில் பயனில்லை, பொதுவாக இது போன்ற உள்ளரங்க நீரூற்றுகள் தண்ணீரை அதிகம் வீணாக்குபவை. மாறாக இந்த மழைச்சுழல் சிங்கப்பூர் பிராந்தியத்தியத்தில் பெய்யும் கனமழையிலிருந்து சேகரிக்கப்படும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறது. சேகரிக்கப்பட்ட மழைநீர் வினாடிக்கு எழுநூறு லிட்டர் என்ற வேகத்தில் நீர்வீழ்ச்சியிலிருந்து பாய்கிறது, இது சுற்றுப்புறத்தை  குளிர்ச்சியாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மழைச்சுழலின் அருகில் நின்றது குற்றால சாரல் மழைப்பருவத்தை நினைவுக்கு கொண்டுவந்தது. இந்தியாவின் பகுதிகளை நதிகள் வடக்கும் மேற்காக பிரிப்பதைப் போல், தி ஜெவெலின் மழைச்சுழல் நீரூற்று சிங்கப்பூரின் கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்வதறக்கான நுழைவாயிலாக உள்ளது.


( சாங்கி விமான நிலையத்தில், தி ஜுவல் பகுதியின் குறுக்குவெட்டு தோற்றம் )


இயற்கையின் வேட்கையையும், மனிதநுகர்வின் வேட்கையையும் ஒன்றாய் பிணைப்பதன் பொருட்டு சிங்கையின் மணிமுடியில் ஜூவல் பொலிந்து கொண்டிருக்கின்றது. அங்கே இடி மின்னலுக்கு மாற்றாக இயந்திர விளக்குகள் இயங்குகின்றது, மேகத்திற்கு மாற்றாக கண்ணாடி கூரையுள்ளது, மண்ணைத் தீண்டும் நீரின் வாசத்திற்கு மாற்றாக சர்வதேச சுகந்தம், மழையை வேடிக்கை பார்க்கும் நாதமற்ற உறுப்புகளாக மனிதர்கள், அவர்களை வழிநடத்த கூச்சலிட்டபடி வட்டமிடும் ரோபோட்கள் இப்படி எத்தனை காட்சிகள் மாறினாலும் பொழியும் நீர் மட்டும் நீராகவே உள்ளது.


ஆளுக்கொரு திசைதேடி களைத்தபின் அறிந்துகொண்டோம் சிங்கப்பூர் என்னும் நகரின் நுழைவாயில் எத்தனை பிரம்மாண்டம் என்பதை. ஜெரினும் இப்படி எங்கோ தன்னை தொலைத்து கொண்டுவிட்டான், இனி அவனை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. "இந்தக் காட்டில் மிருகங்கள் மட்டும் தான் இல்லை" என பச்சை அண்ணன் சொல்லியதற்கு நாம் எல்லாம் குரங்குகளை போல் இங்கும் அங்கும் இப்படி குதித்து அலைந்து கொண்டிருக்கிறோமே போதாதா? என ஜார்ஜ் வினவினார். மூன்றாம் தளத்தில் நின்றிருந்த எங்கள் கண்களுக்கு ஓர் குரங்கு ஒன்றாம் தளத்திலிருந்து கை அசைப்பது புலப்பட்டது, அது ஜெரின் என்பதை அவன் பொம்மை கண்ணாடியும், வண்ண உடைகளும் உறுதிசெய்தன. அவன் வந்ததும் என்னை ஆறத்தழுவிக் கொண்டான், என்னை அதிகம் முத்தமிட்ட ஒரே ஆண் இவன். நிக்கிதா அருகிலிருப்பதை அறிந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி அமைதி காத்தான். அவனுடன் சேர்ந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம், இனி எங்கேனும் அவன் தொலையும் சமையத்தில் அருகிலிருப்பவரிடம் இந்த புகைப்படத்தை காண்பித்து அவன் தன் குழுவை தொலைத்துவிட்டதாக சொல்லி உதவி கேக்க இயலும் என்ற யோசனையை எங்களிடம் பகிர்ந்து கொண்டான், அதை எண்ணி என்னால் மட்டுமே சிரிக்க முடிந்தது.


சிங்கப்பூரில் பார்ப்பதற்கு எவ்வளவோ இடம் இருந்தும் எனக்கு சிங்கப்பூரில் மிகவும் பிடித்த இடம் எனில் அது சாங்கி விமான நிலையம், ஏன் இந்த உலகிலேயே என் மனதுக்கு பிடித்த ஒரே விமான நிலையமும் சாங்கி தான். பொதுவாக விமான நிலையம் என்றாலே எனக்கு உள்ளூர நடுக்கம் ஏற்படும், எந்தப் பயணம் என்றாலும் நான் சந்திக்கும் பெரிய சவால் என்பது விமான நிலைய சோதனைகளைத் தாண்டி விமானத்தில் ஏறி அமர்வதற்கு வரைக்குமான பொழுதுகளில் ஏற்படுபவை தான். விமான நிலைய வாசலில் இருக்கும் காவலாலியிடம் என் அடையாள அட்டையில் இருக்கும் நபர் நான்தான் என்பதை உறுதி செய்வதில் துவங்கி, பாதுகாப்பு சோதனையில் பெல்ட்டை கழட்டியதும் இடுப்பில் இருந்து கால்சட்டை அவிழ்ந்து விழாமல் பிடிப்பது,  இலவச குடி தண்ணீருக்காக அலைவது, ஐந்து ரூபாய் மதிப்புக்கொண்ட கடுங்காப்பியை இருநூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கிப் பாதி குடித்து தூக்கி வீசுவது வரை எல்லாம் வதை. விமானநிலைய சூழலே சைரன் ஒளிக்கும் ஆம்புலன்ஸ் வண்டிக்குள் இருப்பதை போன்ற உணர்வை அளிக்கும் எப்போதுமே பதற்றத்தில் வைத்திருக்கும். 


சாங்கி அந்த மாதிரியான எந்த வேதனையையும் அளிக்கவில்லை, முழுக்க முழுக்க பயனாளரின் அனுபவத்தில் கவனம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள முனையம் அது. சந்தேகப் பார்வையுடன் பார்க்கும் அதிகாரிகள் இல்லை, இலவசமாக படுத்துறங்க நல்ல மெத்தைகள் உண்டு, அறிவிப்புகள் ஒலித்துக்கொண்டே இருப்பதில்லை, விமானங்கள் எழுப்பும் இரைச்சல் சத்தம் கூட விமானநிலையத்தில் கேட்பதில்லை. பாதுகாப்பு சோதனையில் நீங்கள் அணிந்திருக்கும் பெல்ட், வாட்ச், ஜாக்கெட், ஷூ , ஆகியவற்றை சோதனைக்காக கழட்டி மாட்ட வேண்டிய தேவை இல்லை. சோதனைகளை அதற்கான உபகரணங்கள் அதை செவ்வனே செய்துவிடும். விமான நிலையத்தின் உள்ளே நுழைவதும், வெளியேறுவதும் எந்த வழிகாட்டல்களும் இல்லாமல் செய்ய இயலும். வர்த்தக வளாகமும், விமான நிலையமும் சேர்ந்தே இருப்பதனால் பல கடைகளில் மாதிரிக்காக , குறைந்தளவில் அளிக்கப்படும் இலவச உணவுகளையும் சுவைத்துப்பார்க்க இயலும். அப்படி இலவச உணவுகள் இல்லாவிட்டாலும், அங்கே விற்கப்படும் உணவின் விலை அதிகம் ஒன்றுமில்லை. விலைக்கு ஏற்ற சுவையும் தரமும். இலவச குடிநீர் பல இடங்களில் கிடக்கின்றது.


பொதுவாக பயண முனையங்களான பேருந்து நிலையமோ, ரயில் நிலையமோ, விமான நிலையமோ அங்கே உங்களை அதிக நேரம் தங்க அனுமதிப்பதில்லை, உடனே நம்மை அங்கிருந்து வெளியேற்றவே நினைக்கிறன. மூத்திர வாடை நிரம்பிய சென்ட்ரல் ரயில் நிலையத்திலோ, குப்பை குவியல் பொங்கி ஒழுகும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலோ, ஜன நெரிசலின் கூச்சல் நிறைந்த மீனம்பாக்கம் விமான நிலையாயத்திலோ ஒரு பகலோ, இரவுவோ கூட என்னால் கழிக்க இயலாது. மாறாக சாங்கி விமான நிலையம் உள்நாட்டு பயணிகளையும், வெளிநாட்டு பயணிகளையும் கேளிக்கைக்காக அழைக்கிறது, தங்கிக்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஒரு இரவு தங்குவதற்கு ஆயிரம் ரூபாயில் துவங்கி லட்சங்கள் வரை கட்டணம் வசூலிக்கும் விடுதிகள் அங்கே இருக்கின்றது.


சர்வதேச விமான நிலையங்கள் நம் கழிப்பறைக் கதவுகளை போல நம் அவசரங்களுக்கு ஏற்றார் போல் ஆடிக்கொண்டிருக்கும். மாறாக சாங்கி, "விமான நிலையம்" என்பதின் பொருளையே மாற்றி அமைத்துள்ளது. விமான நிலையம் என்பது பயணம் நடைபெறுவதற்கான இயங்குதளம் என்பதை தாண்டி மனதளவில் ஒரு பயணம் துவங்கவும், நிகழும் பயணம் இனிமையானதாக முற்றுப் பெறவும், மீண்டும் பயணிக்கும் ஆவலை நம்முள் தூண்டும் துவக்க புள்ளியாகவும் செயல்படவேண்டும். பிடித்த ஆசிரியருக்காக நாம் செல்லும் வகுப்புகளைப் போல அங்கே ஒரு காதலும், கற்றலும், விடைபெறுதலும், திரும்பி வருவதற்கான எதிர்பார்ப்பும் நிறைந்திருக்க வேண்டும்.


சாங்கி என்னும் இன்பக் குவிமாடத்தில் வண்ணமலர்கள் நிறைந்த பூங்காவில் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்கலாம் அல்லது இறந்த பட்டாம்பூச்சிகளை சட்டகமிட்டு விற்கப்படுவதைக் கண்டு திகைக்கலாம். புதிர்ப்பாதைகளில் தொலைத்து தொலைத்து விளையாடலாம், குளிர்காற்றை சுவாசித்தபடி காலாற நடைபயணம் செல்லலாம், வாழும் வண்ண மலர்களும், பாசிகளும் சேர்ந்து உருவாக்கப்பட்ட பட்சி பொம்மைகளை உற்று நோக்கலாம், ஒரு முனையத்திலிருந்து இன்னொரு முனையத்திற்கு குட்டி ரயிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி பயணிக்கலாம். நம் காலுக்கு கீழ் நகரும் மனிதர்களுக்கு வலிக்காதபடி அவர்களின் தலைக்கு மேல் நடந்து செல்ல கண்ணாடிப் பாலங்கள் உதவும். தண்ணீரில் ஒளிரும் விளக்குகள் நம் தாய் மொழியில் வரவேற்பு செய்திகளை பகிர்வதைக் கண்டு புன்னகைக்கலாம், வெள்ளை கிரிஸான்தமம் என்னும் மலரின் சுவையில் விற்கப்படும் ஐஸ் கிரீம்களை சுவைத்துப்பார்க்கலாம்,  எதுவும் செய்யாமல் தெளிவான கண்ணாடிகளின் வழியே விமானங்கள் விண்ணோக்கி பாய்வதையும், மண்நோக்கி தரையிறங்குவதையும் கண்டு நிறைவடையலாம். பயணங்களின் அத்தனை பதட்டங்களையும் தனித்து, சுதந்திரமாய் ஒரு கணம் சிந்தித்து, சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு புது தேசத்தை அன்புடன் சந்திக்கவோ, சொந்த தேசத்தை துணிவுடன் எதிர்கொள்ளவோ விமான நிலையங்கள் உறுதுணையாக இருக்கவேண்டும், சாங்கி இருப்பதை போல.


நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஓர் இடம் தேடி அமர்ந்தபடி அன்றைக்கான நகர் உலா திட்டங்களைப் பற்றி  ஏழு பேரும் விவாதித்தோம். சிங்கப்பூர் மெட்ரோ ரயிலில் டக்கோட்டா ரயில் நிலையம் வரை சென்று, அங்கிருந்து கூன் செங் சாலை என்னுமிடம் வரை நடக்கலாம் என்பது திட்டம். பெரனாகன் சீனர்கள் எனப்படும் வர்த்தக  சமூகத்தால் கட்டப்பட்ட அழகிய வண்ண நிற மாளிகைகள் அந்த சாலையில் உண்டு. அதைக் கண்டு முடித்து சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா, பின்னர் கேனின் கோட்டை , மெர்லியன், கார்டன்ஸ் பை தி பே ஆகியவற்றை காணலாம் என உத்தேசித்தபடி சாங்கியின் அழகில் மயங்கி வாய்பிளந்து நின்றோம்.


வாடிய மலர்கள் நிறைந்த கொடி அருகே ஓர் அழகிய குளம் அதில் மீசை நீண்ட கோய் மீன்கள்,  முதிர்ச்சி அடைந்து மெல்ல நகர்கின்றது. நீரில் அதிர்வுகள் எதுவும் இல்லை, சுருக்கங்கள் நிறைந்த முகம்கொண்ட சீனர் ஒருவர் மீன்களை பார்த்தபடி தன் சக்கர நாற்காலியில் நகர்ந்து செல்கிறார். இந்திய மாணவன் ஒருவன் தான் விரும்பிய பாடலைக் கேட்டு  உடல் நடனித்தபடி, தன் ஸ்கேட் போர்டில் அந்த குளத்தை சுற்றி வட்டமடிக்கிறான். மழைச்சுழல் நீர்வீழ்ச்சி அருகே நின்றிருக்கும் புத்த பிட்சுகளை படம்பிடித்துத் தருகிறான்.  மியான்மரை சேர்ந்த இஸ்லாமியன் ஒருவன். ஜப்பான் கொடி பதிந்த டிஷர்ட் அணிந்த ஒருவன் இரண்டு காப்பி கோப்பைகளுடன் ,கொரிய கொடியை கையில் பச்சைகுத்தியிருக்கும் பெண்ணை நோக்கி புன்னகைத்து நடக்கிறான்.


அறம் நல்குவோர்க்கு அத்துணை போகங்களை அருளும் சுவர்க்கலோகமான சிங்கப்பூர் எங்களை அன்புடன் வரவேற்கிறது. - மேலும்352 views

Recent Posts

See All

Comments


bottom of page