2018ல் எழுத்தாளர் சமஸ் ஒரு வாரம் லண்டன் பயணம் செய்தார், அவரின் பயண அனுபவ கட்டுரை இது. "லண்டன்" என்ற பெயரில் புத்தகமும் அருஞ்சொல் வெளியீடக வந்துள்ளது.
“எந்த ஊரையும் பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்ப்பதுபோலவே பார்க்கக் கற்றுக்கொள்” என்று சொல்வார் தாத்தா. “எந்த வயதிலும் குழந்தைமையைத் தக்கவைத்துக்கொள்” என்பது அதன் சாராம்சம்.
குதூகலம் தொற்றிக்கொண்டது. ஆசிரியர் அசோகன் அப்போதுதான் கூப்பிட்டு சொல்லியிருந்தார். “லண்டன் போகிறீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விருந்தினராக. ஒரு வாரம். கொண்டாடிவிட்டு வாருங்கள்.” லண்டன் காமன்வெல்த் மாநாட்டையொட்டி வந்திருந்த அழைப்பு அது.
எந்த ஊர்ப் பயணமுமே குதூகலத்தைக் கொண்டுவந்துவிடக் கூடியதுதான் என்றாலும், என்னளவில் இது கூடுதல் விசேஷத்துக்குரியது. சிறுவயது தொட்டு என்னை வசீகரித்துவந்திருக்கும் சொற்களில் ஒன்று லண்டன்.
வரலாற்றின் ஒரு மாணவனாக லண்டன் கதைகள் எனக்கு எப்போதுமே வியப்பூட்டிவந்திருக்கின்றன. அலெக்ஸாண்டிரியா, கான்ஸ்டான்டிநோபிள், பாக்தாத் இப்படி எத்தனையோ நகரங்கள் வரலாற்றில் ஓங்கி நின்றிருக்கின்றன - ஒரு காலகட்டத்தை வசப்படுத்த முடிந்த அவற்றால் இன்னொரு காலகட்டத்துக்கும் அதை நீட்டிக்க முடிந்ததில்லை. ரோம், டெல்லி போன்ற நகரங்கள் தன்னளவில் ஒரு எல்லைக்குட்பட்ட செல்வாக்கை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் பராமரித்துவந்திருக்கின்றன. எனினும், இவை எவற்றோடும் லண்டனை ஒப்பிட முடியாது.
உலகில் இன்றுள்ள பழமையான பெருநகரங்களில் தொடர்ந்து தன் உலக செல்வாக்கைப் பேணிவரும் நகரம் அதுவே. உலகப் போர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. கொள்ளைநோய்களை அது எதிர்கொண்டிருக்கிறது. இயற்கைப் பேரிடர்களை அது எதிர்கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து எல்லா தாக்குதல்களுக்கும் சவால்களுக்கும் லண்டன் முகம் கொடுக்கிறது.
எப்போதும் காலத்தை முந்திக்கொண்டு தன்னைத் தகவமைப்புக்குத் தயார்படுத்திக்கொள்கிறது லண்டன். ஏனைய நகரங்களோடு ஒப்பிடுகையில், “அரசியல் வல்லாண்மைக்கு ஒரு வாஷிங்டன், பொருளாதார வல்லாண்மைக்கு ஒரு நியூயார்க், ஆராய்ச்சி - கண்டுபிடிப்புகள் வல்லாண்மைக்கு ஒரு சிலிக்கான் வேலி - இவை மூன்றுக்கும் இன்று ஒருசேர முகம் கொடுக்கிறது லண்டன்” என்று பிரிட்டிஷார் சொல்வதுண்டு. ஈராயிரம் வருஷங்களாக அது எப்படி தொடர்ந்து துடிப்போடு பாய்கிறது என்பதை அங்கு தங்கி பார்க்க வேண்டும் என்பது நெடுநாள் எண்ணம். இப்போது அது சாத்தியம் ஆகிறது.
பிரிட்டிஷ் அரசின் அழைப்பின்பேரில் செல்வதில் ஒரு அனுகூலம் இருந்தது. பிரிட்டனின் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கிற பலரைச் சந்திக்கிற வாய்ப்பும் இந்தப் பயணத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. லண்டன் மாநகர நிர்வாகம், கல்வி - ஆராய்ச்சி, நிதியாள்கை என்று பல துறை ஆளுமைகளுடனான உரையாடலுக்கும் ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.
கோடைகாலத்தின் தொடக்க நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பயணம் என்றாலும், பருவ நிலை அங்கு வெயிலைக் கொண்டுவந்திருக்கவில்லை. “உங்களோட வீம்பையெல்லாம் ஊரோடு வெச்சிட்டு வந்துடுங்க. இன்னைக்குக்கூட காலையில ஐஸ் மழை. ராத்திரில வெப்பநிலை ஆறு டிகிரிக்குக் கீழே போய்டுது. கோட் - சூட், ஷூ, க்ளௌ, தெர்மல் வாங்கிக்கங்க. நம்மூர் உடுப்பை வெச்சு சமாளிச்சுடலாம்னு நெனைச்சீங்கன்னா குளிர்ல விரல் வெடிச்சுடும்” என்று முன்னெச்சரித்தார் லண்டன் நண்பர் ராஜகோபால்.
சென்னை - லண்டன் பயணம் அவ்வளவு நீளமானது இல்லை. 8,206 கி.மீ. சுமார் 11 மணி நேரம். அவர்களுடைய நேரத்திலிருந்து நம்முடைய நேரம் 4.5 மணி முந்தியிருக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டால் மாலை 6.30 மணிக்கு விமானம் லண்டனைச் சென்றடையும்.
தொடக்கக் காலங்களில் எனக்கு விமானப் பயணம் அச்சம், எரிச்சல் தரக்கூடியதாக இருந்தது. ரயில் பயணங்களைப் போல ஒரு சொகுசு அதில் இல்லை. வாகனம் எதுவானலும் மனதுக்கு நிலத்தோடு ஒரு பிடிமானம் வேண்டியிருக்கிறது. விமானம் அதை அறுத்துவிட்டு மேலெழும்போது இந்த நிலத்தோடு தனக்கு இருக்கும் பிடிமானமும் அறுந்துவிட்டதாக மனம் நம்புகிறது. இரைச்சல், காதடைப்பு, மண்டையழுத்தம், விமானியின் அச்சுறுத்தும் அறிவிப்புகள் இவை எல்லாமும் கூடி விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கையில், “ஐயா, தயைகூர்ந்து வண்டியை நிறுத்து. நான் பொடிநடையாகவேனும் போய் சேர்ந்துகொள்கிறேன்” என்று விமானியிடம் முறையிடத் தோன்றியிருக்கிறது. சீக்கிரமே அது மாறியது.
இன்று விமானப் பயணம் ஒரு ஆன்ம தரிசனம் ஆகிவிட்டது. விமான ஜன்னல் வழியே கீழே தோன்றி மறையும் நதிகள், மலைத்தொடர்கள், பாலைவனங்கள், பெருங்காடுகள் ஒவ்வொன்றும் சிறுசிறு புள்ளிகளாகையில் மனம் சரசரவென ஒரு நீளக் கம்பளமாக விரியும். ‘பேருருவங்களே சிறு புள்ளிகளாகும்போது நீ யார், எவ்வளவு சிறியன், எவ்வளவு அற்பன்!’ என்ற கேள்வி முளைக்கும். உடல் சிறுக்கும். கைகள் குவியும். பல தருணங்களில் அந்தப் பெரும் சக்தியை கீழே பணிந்து வணங்க முற்பட்டிருக்கிறேன். மரணத்தின் உயிர் எதுவோ, அது அங்கே உறைந்திருப்பதாக உணர்ந்திருக்கிறேன். காலமும் இடமும் காணாமல்போவதன் விளைவாகவும் இருக்கலாம்.
சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பயணத்தை ஆசியாவிலிருந்து ஐரோப்பாவைக் கடக்கும் பயணமாகவும் விரிக்கலாம். “எந்த ஊரையும் பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்ப்பதுபோலவே பார்க்கக் கற்றுக்கொள்” என்று சொல்வார் தாத்தா. “எந்த வயதிலும் குழந்தைமையைத் தக்கவைத்துக்கொள்” என்பது அதன் சாராம்சம்.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்படுகிறது. பிரெஞ்சு ஒயின் வாசம் விமானத்தினுள் கசிகிறது.
விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.
என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.
இந்தப் பயணத்தில் அபூர்வமான மேகக்காட்சி ஒன்றைக் கண்டேன். ஐரோப்பிய கண்டத்துக்கு மேல் விமானம் பறந்தபோது, அந்த மேகக் கூட்டத்தினுள் விமானம் நுழைந்தது. மிக நீண்ட வெண்பஞ்சுப் படலம். விமானத்தின் இறக்கைகள் அதைக் கிழித்து முன்னகர்ந்த நீண்ட நேரம் விமானம் தடதடத்துக்கொண்டே இருந்தது. நிலத்திலிருந்து பார்க்க அந்த மேகம் எவ்வளவு பெரிதானதாக, என்ன வடிவிலானதாக, என்ன நிறத்திலானதாக இருக்கும் என்று தோன்றியது.
மேகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைமைகள் உண்டு. மேகத்தின் தோற்றம் – அதன் அடர்த்தி, வடிவம், வண்ணம், அமைப்பு என்று பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வகைமைப்படுத்தலை மேற்கொள்கிறார்கள். மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பிரிடோர் பின்னி நினைவுக்குவருவார்.
பிரிடோர் பின்னி ஒரு பிரிட்டிஷ்காரர். புதிய வகை மேகம் ஒன்றை அவர் அடையாளம் கண்டார். மேகங்களை வகைமைப்படுத்தும் சர்வதேச வானிலை அமைப்பு இதற்கென மேக அட்லஸ் ஒன்றை வெளியிடுகிறது. தன்னுடைய மேகத்தையும் அது அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட காலம் போராடிவந்தார் பிரிடோர் பின்னி. இயற்கையை அர்த்தப்படுத்துவது என்பது மனித இனம் தன்னையே அர்த்தப்படுத்திக்கொள்வதுதான். நீண்ட காலமாக புதிய வகைமை எதையும் அங்கீகரிக்காத சர்வதேச வானிலை அமைப்பு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் புதிய மேக அட்லஸை வெளியிட்டது. 11 புதிய வகை மேகங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. பிரிடோர் பின்னி கண்டறிந்த வகைமையும் அதில் இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.
விமானப்பெண் வந்தார். “என்ன உணவு வேண்டும்?” என்றார். எல்லாப் பயணங்களிலும் கேட்பதுபோல “மீனுணவு” என்றேன். எல்லாப் பயணங்களிலும் சொல்லப்படுவதுபோல “அது மட்டும் இல்லை” என்றார். விமான நிறுவனங்கள் இணையத்தில் காட்டும் சாப்பாட்டுப் பட்டியலில் ‘மிதப்பன, நடப்பன, பறப்பன’ என எல்லாம் இடம்பெற்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்களுக்குத் தோதான ஜீவன் கோழி. ஊரில் உள்ள உணவகம் என்றால், அதிலும் நாட்டுக்கோழி வேண்டும் என்பேன். நடுவானில் இந்த அட்டூழியம் எல்லாம் நடக்காது என்பதால் “உங்கள் விருப்பம்” என்றேன்.
சீக்கிய இளைஞர் இப்போது கண் விழித்தார். முன்னதாக மது பரிமாறப்பட்டபோது பிரெஞ்சு ஒயினுக்காக அவர் கண் விழித்தார். மூன்று மடக்கில் கோப்பையைக் கவிழ்த்துவிட்டு அப்படியே சாய்ந்துகொண்டார். இப்போது இயர்போனைக் கழற்றிவிட்டு பேசலானார். அவருடைய பெயர் சரண்ஜித் சிங். லண்டனில் அவருடைய குடும்பம் இரு தலைமுறைகளுக்கு முன் குடியேறியிருக்கிறது. மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். பாட்டியாலாவிலுள்ள உறவினர் திருமணத்துக்கு வந்துவிட்டு லண்டன் திரும்புகிறார்.
அவருடைய அறிமுகம் உற்சாகம் தந்தது. உலகம் முழுக்க விரவியுள்ள இந்தியர்களில் இன்று செல்வாக்கான சமூகம் பஞ்சாபிய சமூகம். பிரிட்டனிலும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகம் – பிரிட்டிஷ் இந்தியர்களில் கிட்டத்தட்ட சரிபாதி. இந்தியாவுக்கு வெளியே கனடாவுக்கு அடுத்து, பஞ்சாபிகள் அதிகம் வாழும் நாடு இன்று பிரிட்டன். அவருடனான உரையாடல் பிரிட்டனிலுள்ள இந்தியச் சமூகத்தின் உள் முகங்களை அறிந்துகொள்ள உதவும் என்று தோன்றியது.
“பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்திலேயே பஞ்சாபிகள் பிரிட்டனில் குடியேறுவது தொடங்கிவிட்டது அல்லவா, பிரிட்டனைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு நாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எல்லாம் சொந்த ஊர்ச் சூழலை உருவாக்கியிருக்கிறோம். லண்டனில் இருக்கும்போது சவுத்தால் பகுதிக்குப் போய் வாருங்கள். பஞ்சாப் சூழல் இருக்கும்.
“1853-ல் மகாராஜா துலீப் சிங் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அது தொடங்கி பஞ்சாபிகள் வருகை இங்கே அதிகரித்தது. பிரிட்டிஷ் ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பஞ்சாபிகள் இங்கே குடியேறியபோது கூடவே வீட்டு வேலைக்காக ஒரு பெரும் கூட்டம் வந்தது. அப்புறம், மாணவர்கள் படிக்க வந்தார்கள்.
“1940 -1950 காலகட்டம் இதில் முக்கியமானது என்று சொல்லலாம். உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் பெரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தியாவில் பிரிவினை நடந்தது. ஒரு பெரும் தொகுதி பஞ்சாபிகள் இங்கே வர இது வழிவகுத்தது. அடுத்து, 1970-1980 காலகட்டத்தில் கென்யாவும் உகாண்டாவும் சுதந்திரம் அடைந்ததை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த பஞ்சாபிகள் பெருமளவில் குடிபெயர்ந்தார்கள்.
“கீழ்நிலை வேலைகளிலிருந்து கஷ்டப்படுவது என்ற நிலையிலிருந்து கடந்த மூன்று தலைமுறைகளில் வேகமாக வெளியேறி மேல் நோக்கி வருகிறது பஞ்சாபிய சமூகம். இன்று பிரிட்டனில் உள்ள முக்கியமான வணிகச் சமூகங்களில் பஞ்சாபிய சமூகமும் ஒன்று. சொந்த நாட்டு உணர்வுடேனேயே என்னைப் போன்றவர்கள் இன்று பிரிட்டனில் இருக்கிறோம்.”
எந்த விஷயத்தையும் துல்லியமான எண்ணிக்கை விவரங்களோடு அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. “நீங்கள் உள்ளூரில் வரலாற்றை மறந்துவிட்டு இருக்கலாம். வெளியூரில் வரலாறுதான் உங்களை வடிவமைக்கும்” என்றார்.
“உங்களுடைய இன்றைய நினைப்பில் இந்தியா என்னவாக இருக்கிறது?”
“நான் நினைப்பதை அப்படியே சொல்லலாமா?”
“தாராளமாக.”
“பிரிட்டனிலிருந்து யோசிக்கையில் ஒரு நெருக்கம் தோன்றும். இந்தியா பக்கம் வந்தால் இனி இந்தப் பக்கமே திரும்பக் கூடாது என்றாகிவிடும். இப்போதும் அதே நினைப்பில்தான் திரும்புகிறேன். சக மனிதர்களைப் பற்றிய அக்கறையே இல்லாதவர்களைக் கொண்ட நாடாக அது இருக்கிறது என்னுடைய பிரதானமான கவலை. உங்களைச் சங்கடப்படுத்தும் இந்தப் பதிலுக்காக நீங்கள் மன்னிக்க வேண்டும்.”
நான் புன்னகைத்தேன். “எனக்கு ஒரு சந்தேகம், இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியச் சமூகத்தைப் பெயரளவில் ஒன்றாகக் குறிப்பிட்டாலும் அதில் பல பிளவுகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணமாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது இந்தியத் தமிழர் – ஈழத் தமிழர் என்ற வகைமைப்பாட்டில் இயங்குகிறது. இரண்டுக்கும் இடையில் அதிகம் உறவாடல் இல்லை. மிக ஒற்றுமையானதாகக் கருதப்படும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலும் சாதிப் பிளவுகள் உண்டு. பஞ்சாபி சமூகம் எப்படி?”
“சீக்கியர் – சீக்கியரல்லாதோர் என்ற பிளவுண்டு. சீக்கியருக்குள்ளுமேகூட ஏராளமான சாதிப் பிரிவினைகள் உண்டு. ஓரளவுக்குக் கடக்க முற்படுகிறோம். பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த பஞ்சாபியரில் பெருமளவினர் முஸ்லிம்கள். ஆனால், வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு பஞ்சாபி அடையாளத்தை வளர்க்க விரும்புகிறோம். மொழிதான் இங்கே இணைப்புச் சங்கிலி. பிரிட்டனில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இன்று பஞ்சாபி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலம் நமக்கு பிழைப்பு மொழி. பஞ்சாபியே அடையாள மொழி என்பதை வலிறுத்துகிறோம்.”
“இப்போது எனக்கு ஒரு சந்தேகம். சொந்த நாட்டு உணர்வுடன் உலகுணர்வுக் கலாச்சாரத்துக்கும் பிரிட்டன் போன்ற நாடுகள் இடம் அளிக்கும் சூழலில், ஏன் பிரத்யேக சமூக அடையாளம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது?”
“இது சிக்கல்தான்…” அவர் வாய் விட்டு சிரித்தார். அடுத்தச் சுற்று மது வந்துகொண்டிருப்பதை தள்ளுவண்டி சத்தம் சொன்னது. அவர் மீண்டும் இசைக்குள் ஆழ்ந்தார்.
- மேலும்
*இந்த பதிவு ஆசிரியரின் முன் அனுமதி பெற்று வெளியிடப்பட்டுள்ளது. லண்டன் புத்தகம் வாங்க
Comments