(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)

(ரஹி தில் எனப்படும் மிசோரமில் உள்ள ஏரி)
தூக்கமற்ற முழு இரவுப்பயணம். பிள்ளிருக்கையில் இருந்த மழைப்பூச்சி போன்றிருந்த பெண்ணொருத்தி அந்த இருளுக்குள்ளும் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தாள்.
சம்பாயிலிருந்து இந்திய மியான்மர் எல்லை நகரமான ஜோகவ்தாருக்கு சென்றோம். நாற்சக்கர ஊர்திகள் நகரின் அங்காடி வரைக்கும்தான் செல்கிறது. அங்கிருந்து மியான்மருக்குள் நுழைந்து சுற்றிப்பார்க்க இரு சக்கர ஊர்திகளைத்தான் வாடகைக்கு அமர்த்த வேண்டும். படமெடுத்த பாம்பைப்போல மெலிந்து நீண்ட உடலுடன் மிஸோ இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்து வண்டிகளின் மேல் அமர்ந்திருந்தனர்.
ஆளுக்கொரு வண்டியில் ஏறிக் கொண்டோம். குடிவரவு & குடி அகல்விற்கான இந்திய எல்லைச் சாவடிக்கு சென்று எங்களது ஆதார் அட்டைகளை நீட்டினோம். கொழுத்து இறுகிய பன்ரொட்டி முகங்களைக்கொண்ட சிப்பாய்கள். கறுப்புக்கும் சிவப்பிற்கும் இடைப்பட்ட நிறம். அரை இமை திறந்த ஆமை போல முழித்தனர். நாட்டை விட்டு வெளியேறுவதற்கான இசைவு வேண்டும் எனக்கேட்டோம். அப்படி ஒன்றும் தேவையில்லை என்ற பாணியில் மந்தமாக சிரித்தனர்.
நடுவணரசுதான் இப்படியென்றால் மாநில அரசும் மெத்தனமாகத்தான் உள்ளது. வெளி மாநிலத்தவர் மீஸோரத்திற்குள் நுழைய கடும் கெடுபிடிகள் காட்டும் மிஸோரம் அரசானது பன்னாட்டு எல்லைப்பகுதியின் கண்காணிப்பு பற்றி கொஞ்சங்கூட அலட்டிக் கொள்ளவில்லை. மியான்மர் தங்களின் ஆதி நிலம் என்ற மன நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். அத்துடன் மியான்மர் வழியாக தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேம்பட்ட வாழ்க்கைக்காகவும் பொருளாதார நலன்களுக்காகவும் மிஸோக்கள் எளிதாக பயணிக்க முடிகின்றது என்பதும் ஒரு காரணம்.
இந்திய மியான்மர் எல்லைப்பாலத்தினைக்கடந்த பின்னர் மியான்மரின் சின் பிராந்தியத்தின் ரீ கவ் தர் மியோ கிராமம் வருகின்றது. மியான்மரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின் பிராந்தியத்தினுடனான இன்னொரு இந்திய எல்லையானது மணிப்பூருடனும் அமைந்துள்ளது.
மியான்மரின் ராணுவ ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டு, தற்போதைய அரசாலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதிதான் சின். கொடும் வறுமையும் பஞ்சமும் போதிய உணவின்மையும் நிறைந்த பகுதி இது. மருத்துவ, சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் போன்றவை மோசமான நிலையிலேயே உள்ளன.
இவை அனைத்திற்கும் காரணம் மியான்மர் ஒரு பௌத்த பெரும்பான்மை நாடு. ஆனால் சின் மக்களோ கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள். கிறிஸ்தவர்களை வலுக்கட்டாய மாக பௌத்தர்களாக மதமாற்றும் முயற்சிகளையும் கிறிஸ்தவ அடை யாளங்களை அழிக்கும் வேலைகளையும் சிறுபான்மை யினரின் வழிபாட்டுரிமைகளை மௌனமாக மறுதலிக்கும் போக்கையும் மியான்மரின் அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது.
மியான்மர் சோதனைச்சாவடியில் எங்களின் ஆதார் அட்டையை வாங்கி வைத்துக் கொண்டார்கள். மாலைக்குள் திரும்ப வேண்டும் அங்கிருந்த தலைமை அலுவலர் தலைக்கு 10 ரூபாய்களையும் வாங்கிக் கொண்டார். மியான்மர் நேரமானது இந்திய நேரத்தை விட ஒரு மணி நேரம் கூடுதல். இரண்டு நேரங்களையும் காட்டும் கடிகாரங்களை வைத்திருக்கிறார்கள்.
கிராமத்திற்குள் நுழைந்தோம். மரப்பலகைகளிலான பெட்டிக்கடையும் அதனுடன் சேர்ந்த வீடொன்றும் நின்றன. கூடைகளில் நாட்டுகோழி முட்டைகள் சிவந்து கிடந்தன, கடைக்காரரிடம் இந்திய பத்து ரூபாய் தாளை நீட்டி மியான்மர் செலாவணியைக் கேட்டோம். நூற்றைம்பது கியாட்டுகள் தந்தார்.
நாங்கள் தேநீர் கிடைக்குமா ? எனக் கேட்டதற்கு. இல்லை என முதலில் சொன்னவர்களிடம் வேறெங்கு கிடைக்கும்! எனக் கேட்டோம். எங்களை அமரச்சொன்னார்கள். ஐந்து நிமிடங்களில் பெரிய குவளைகளில் பால் கலந்த காஃபியை அவர் மனைவி கொண்டு வந்தார். அத்துடன் மென் பஞ்சு போலிருந்த முட்டை கலந்த உள்ளூர் தின்பண்ட சிப்பம் ஒன்றை தந்தார்கள். காசை நீட்டினோம். வாங்க மறுத்து விட்டார்கள். இது எங்கள் அன்பளிப்பு என்றனர். அந்த பலகை வீட்டிற்குள் சென்றோம். ஏசு நாதரின் படத்துடன் தங்கள் மகனின் படத்தையும் மாட்டி வைத்திருந்தனர். மொழி சிக்கலினால் முக பாவனைகளும் புன்னகையுமே மொழியாக எங்களுக்குள் மாறியது.
ரீ எனப்படும் ஏரிக்கு சென்றோம். மிஸோக்கள் அனைவருக்கும் புனிதமான ஏரி. தங்கள் முன்னோர்கள் அங்கு குடியிருப்பதாக கருதுகிறார்கள். மிஸோரத்துக்குள்ளும் இதே போல மியான்மரிகளுக்கு புனிதமான ஏரியொன்று இருப்பதாக சொன்னார்கள். நாங்கள் போன சமயம் வேக்காட்டை உண்டாக்கும் இளம் வெயிலடித்துக் கொண்டிருந்தது. வெயிலை உருக்கி ஓட விட்டாற் போல ஏரித்தண்ணீர் கிடந்தது. ஓய்ந்து கிடக்கும் முதிய மனதில் ததும்பும் நினைவுகளைப்போல மெல்லிய காற்றினசைவில் கரையை முட்டிக் கொண்டிருந்தது நீர்.
சிறு சிறு குப்பிகளில் பாசியையும் ஏரி நீரையும் நிரப்பிக்கொண்டிருந்தனர் இரு படகோட்டிகள். விற்பனைக்கான புனித பொருள். கொஞ்ச நேரத்தில் மிஸோ மாணவ மாணவியர் குவிந்தனர். அவர்களின் களிப்போசையில் ஏரியின் மீது விழுந்து வந்து கிடந்த மெளனம் கரைந்தது.
ஊருக்குள் மேடொன்றில் சிறு பௌத்த விகாரையொன்று இருந்தது. இளம் இணையர் ஏதோ வேண்டுதலுக்காக அங்கு அமர்ந்திருந்தனர். ஊட்டுப்புரையில் சிறுவனொருவன். உணவருந்திக் கொண்டிருந்தான். இறையியல் போலும், சட்டையணியாத கட்டு மஸ்தான தண்டவாளம் போன்ற உடலைக் கொண்ட பணியாளர் அங்கு நின்றிருந்தார். சவரம் செய்யப்பட்ட தெளிவான முகம். கேடயம் போலிருந்தது.
கொல்லாமை, அடுத்தவர் பொருளை விரும்பாமை கூடா இன்பத்தைக் கொள்ளாமை, பொய் பேசாமை, மது அருந்தாமை என்ற பௌத்தத்தின் ஐவகை நெறிகளும் சுவரில் வரையப்பட்டிருந்தன. வெண்கல தாம்பாளத்தில் எங்களுக்காக மரச்சுத்தியலைக் கொண்டு தட்டினார் பௌத்த துறவி.. ரீங்காரம் அதிர்ந்து பரவியது.
மியான்மரிகள் தேரவாத பௌத்தத்தை பின்பற்றுபவர்கள். தேரவாத பௌத்தம் என்றால் முன்னோர்களின் வழி என்று பொருள். பௌத்தத்தின் இந்தக் கிளையானது சிறீலங்கா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா. தென்கிழக்காசியாவின் ஒரு பகுதியிலும் பின்பற்றப்படுகின்றது.
கி.பி.1044 இல் பகான் அரசாட்சி காலத்திலேயே மியான்மரின் அரசாட்சிக்குள் பௌத்தம் நுழைந்து விட்டது. 1961 இல் அன்றைய மியான்மரின் தலைமையமைச்சர் யூ நூ பௌத்தத்தை ஆட்சி மதமாக அறிவித்தார். சராசரி மியான்மரிய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பெளத்த சங்கமானது சன்னஞ் சன்னமாக மியான்மரிய தேசிய வாதத்துடன் கலந்தது. ஆன்ம அமைதியின் அகல் விளக்கான பௌத்தமானது பேரினவாத எரிகொழுந்தாக ஊதி விசிறப்பட்டுள்ளது . இன்று அது மொத்த மியான்மரையும் வளைத்து பிடித்துள்ளது.
தேரவாத பெளத்தத்தை பின்பற்றும் சிறீலங்காவும் மியான்மரும் இந்திய எல்லையை ஒட்டியே அமைந்திருப்பதாலும் சனாதன தெய்வங்களையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பிரிவினைகளையும் இந்த தேரவாத பௌத்தம் பெருமளவில் உள்வாங்கியிருக்கின்றது அதனால்தான் சக மனிதன் மீதான வெறுப்பை பௌத்த ஆன்மீகத்தின் பெயரால் நிகழ்த்த முடிகின்றது. இத்தனைக்கும் சனாதனத்தின் முக்கிய குறியீடுகளை தொன்மங்களை நிராகரிப்பதுதான் தேரவாத பௌத்தத்தின் அடிப்படை. மதங்கள் ஆதிக்க வெறிக்கான ஊர்தியாக மாற்றப்படும்போது மதத்தின் ஆன்மா இறந்துதான் போகின்றது. ஆதிக்க வாதிகளின் கையில் அது உயிரற்ற கூடாகத்தான் மிஞ்சுகின்றது.
நெகிழ்வு தன்மை மிக்க மஹாயான பௌத்தத்தை பின்பற்றும் சீனம், திபெத், கொரியா, மங்கோலியா, வியத்நாம், ஜப்பான் போன்ற நாடுகள் இத்தகைய மத இன அழித்தொழிப்பை செய்ததில்லை. மஹாயான பௌத்தத்திலிருந்துதான் தன்னை அழித்து தன்னை உணரும் ஜென் பெனத்தம் பிறந்தது.
ரீ கவ் தர் மியோ கிராமத்தின் சந்தைப்பகுதியில் வண்டிக்காக காத்திருந்த பெண்களின் முகத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தது. மியான்மரில், சின் பிராத்தியத்து பெண்கள்தான் மிகவும் அழகானவர்களாம். அரசாட்சி காலத்தில் நகர் உலா வரும் அரசர்கள் இங்குள்ள அழகிய இளம் பெண்களை தங்களின் அந்தப்புரங்களுக்கு தூக்கி சென்று விடுவார்கள். அவ்வாறு தூக்கி செல்லப்படுபவர்கள் ஒரு போதும் தங்களின் குடும்பத்தினரிடம் திரும்புவதில்லை. இதை தடுக்கும் விதமாக இளம் பெண்களின் முகங்களில் அவர்களது பெற்றோர்களே பச்சை குத்தி விடுவார்கள். பெரும் பலியிடுதலை அதை விட குறைந்த ஒரு பலியிடுதலின் மூலமாகத்தான் தடுத்திட இயலும் போலும். ஒரு தற்காப்பு முயற்சியானது சமூகத்தின் வழமையாக உருக் கொண்டுள்ளது.
மதிய உணவிற்காக ஒரு உணவகத்திற்குள் சென்றோம். தங்கும். விடுதியும் இணைந்துள்ளது. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பன்னாட்டு தரத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. முஸ்லிம் குடும்பத்திற்கு சொந்தமானது. ரீ கவ் தர் மியோ கிராமத்தில் வசிக்கும் ஒற்றை முஸ்லீம் குடும்பம். ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையைப்போல மியான்மரின் மற்ற பகுதிகளில் வசிக்கும் முஸ்லீம்கள் மீது வன்முறை ஏவப்படுவதில்லை. ஆனால் கிறிஸ்தவத்தின் மீது காட்டப்படும் கெடுபிடிகள் அப்படியே இவர்கள் மீதும் அரசினால் நிகழ்த்தப்படுகின்றது. மதிய உணவருந்தி விட்டு இந்திய ரூபாய்களை செலுத்தினோம்.
நாங்கள் திரும்பும்போது இந்திய சுங்கச்சாவடியில் மூட்டை யாக மூட்டையாக வணிகப்பொதிகள் குவிந்து கிடந்தன. சோதனையெல்லாம் கண் துடைப்புதான். பெருமளவில் போதைப் பொருட்கள் இங்கு கடத்தப்படுகின்றன.இது ஒரு பன்னாட்டு போதை வணிகத்தடம், மிஸோக்களை தூங்க வைக்க இவை தேவை என நடுவணரசு நினைத்திருக்கலாம்.
சம்பாயிலிருந்து அய்ஸோல் திரும்பும்போது எங்கள் வண்டியில் அஸ்ஸாமின் பொறியாளர் ஒருவரும் பயணித்தார். சம்பாய் மறை மாவட்டம் முன்னெடுக்கும் பள்ளிக்கூட கட்டுமானத்தின் மேற்பார்வை பொறியாளராக அவர் பணியாற்றுகின்றார். இத்தகைய நலப்பணிகளுக்கான மிகக் கூடுதலான நிதி பங்களிப்பானது தமிழகத்தின் திருச்சி, சேலம் மறை மாவட்டங்களிலிருந்துதான் பெறப்படுகின்றன என சொன்னார். அதே போல வடகிழக்கின் வசதியற்ற குழந்தைகளுக்கான கல்வி நல்கையில் கேரள கிறிஸ்தவ நிறுவனங்களின் பங்களிப்பும் மகத்தானது. நல்லறங்களின் ஆடி வழியே தென்னகமானது வடகிழக்கில் நன்றியுடன் நோக்கப்படுகின்றது.
சம்பாயிலிருந்து வெளியேறும்போது சோதனைச் சாவடியில் பதிவதற்காக வண்டி நின்றது. அப்போது எங்களைக் கவனித்த காவலரொருவர் வெளி மாநிலத்தவர்கள் என்பதை புரிந்து கொண்டவராக வண்டியிலிருந்து இறங்கச் சொன்னார். உள்ளக நுழைவு சீட்டை வாங்கி பார்த்தார். இதில் ஏற்பாதாரவாளர் (ஸ்பானசர்) சுலம் நிரப்பப்படவில்லையே? என இறுக்கமாக புன்னகைத்தார்.
மனிதர் அளவான போதையில் நிறைந்திருந்தார். ஷில்லாங்கிலுள்ள உங்கள் மாநில அரசின் அலுவலர் சரி பார்த்து. கையொப்பமிட்டு முத்திரையிட்டதுதானே ? அதன் பிறகும் ஏன் கேட்கின்றீர்கள் ? சுற்றுலா பயணிகளுக்கு எப்படி உள்ளூர் அறிமுகம் இருக்கும் ? என்றெல்லாம் கேட்டோம். இத்தனைக்கும் ஏற்பாதாரவாளர் என்பது கட்டாயமுமில்லை என அந்த படிவத்திலேயே அச்சிடப்பட்டிருக்கின்றது.
ஆனால் அவரிடம் இருந்ததோ மறுக்கும் ஒற்றை மறுமொழிதான். உங்களை சம்பாய் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். பால் குடத்தில் கைப்பிடியளவு கரியை அள்ளி போட்டது போல மொத்த பயணச் சுவையும் கலங்கியது. புன்னகை மாறாமல் கசப்பை புதைத்துக் கொண்டு காவலர்களிடம் வாதாடினோம். எங்கள் வண்டியிலிருந்த வந்த மிலோ இனைஞரொருவர் காவலர்கள் சொல்வதுதான் சரியென்றார். சாவடி அலுவலகத்திற்குள் கூப்பிட்டார்கள்.
வடகிழக்கின் பயண அட்டவணைக்குள் காவல் நிலைய வாசம் கூடுதல் சேர்மானமாகப்போகின்றது போல என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, இளஞ்சிவப்பேறிய கண்களுடன் இனி இந்த தவறை செய்யாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் இல்லையா?” என இளித்தார் காவலர் போதைக்குள்ளும் ஓர்மைகள் மங்குவதில்லை. எங்களிடம் இரவு பானத்திற்கான காசை எதிர்பார்த்திருப்பார்கள் போலிருக்கின்றது. மனது சமநிலையை அடைய கொஞ்சம் நேரமாயிற்று. ஒரு துளி கசப்பில் நாம் மூழ்கிவிடக்கூடாது என மனம் தெளிந்தது.
தூக்கமற்ற முழு இரவுப்பயணம். பிள்ளிருக்கையில் இருந்த மழைப்பூச்சி போன்றிருந்த பெண்ணொருத்தி அந்த இருளுக்குள்ளும் கறுப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். ஓட்டுனர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு மணி நேரம் தூங்கிய பிறகே வண்டியை எடுத்தார்.எங்களது உள்ளக நுழைவுச் சீட்டானது ஒரு வாரத்திற்கானது மட்டுமே. அய்ஸோலில் நாங்கள் மீண்டும் வந்த சேர்ந்த அன்றுதான் கெடு நாள். எனவே அன்று மதியமே அய்ஸோலை விட்டு புறப்பட்டு அஸ்ஸாமின் சில்ச்சர் நகர் சென்றோம்.
போகும் வழியில் கடும் மழை பிடித்தது. துளியாக தொடங்கி வரி வரியாக மாறிய மழை அதன் உச்ச கட்டத்தை எட்டிய போது வெண் துகிலிலான சாளரத்திரையை விருட்டென கீழிழுத்தது போல இருந்தது. நேப்பாளி ஒருவரின் சாலையோர தேநீர்க் கடையில் இஞ்சி ஏலக்காயுடன் சூடான தேநீரும் பிஸ்கட்டுகளும் கிடைத்தது. சுவைக்காக இரண்டு முறை அருந்தினோம்.
எங்களுடன் நடுத்தர வயது அஸ்ஸாமியர் ஒருவர் பயணித்தார். அவர் ஒரு தனியார் விற்பனை நிறுவனத்தின் பணியாளர் போலும். மெதுவாக பேச்சை தொடங்கினோம். மோதி அரசின் செல்லாக்காசு, ஜி.எஸ்.டி, போன்றவற்றை மிகத்தீவிரமாக ஆதரித்தார்; எப்படி வாதிட்டாலும் அவரின் கண்மூடித்தனத்தில் அழுந்தி நின்றார். எனவே இனி அவரை வைத்து சலிப்பை போக்கிக் கொள்வது என முடிவெடுத்து மோதியை சீண்டினோம். எதிர்பார்த்தது நடந்தது. சூடானார். அகல வாயுள்ள கைப்பை போல அவரின் வாயும் கண்களும் சுருங்கி சுருங்கி பிளந்தது. கொந்தளிப்பு அடங்கியவுடன், "அதெல்லாம் இருக்கட்டும் உங்களின் தொழில் எப்படியுள்ளது? எனக் கேட்டதற்கு பாதிப்பு இருக்கத்தான் செய்கின்றது" என முனகினார்.
நடுத்தர வயதின் பொருளாதார போதாமைகளும் ஏக்கங்களும் முறைப்பாடுகளும் ஒரு வகையான கையறு நிலையையும் தாழ்வு எண்ணத்தையும், சமூகத்தை பழி வாங்கும் உணர்வையும் தலைக்குள் கொண்டு வந்து நிறைக்கும் போல இருக்கிறது. இவர்கள் ஃபாஸிஸத்தின் சமூக பண்பாட்டு அரசியல் அராஜகங்களில் வன்முறைகளில் தங்கள் மனதின் அரிப்பை கொண்டு போய் தேய்த்து தீர்த்துக் கொண்டு ஒரு வகை விடுதலையை அடைவார்கள். ஃபாஸிஸத்திற்கு பொது மனத்தின் ஏற்பு அங்கீகாரமென்பது இது போன்ற அடித்தட்டு மனங்களிடமிருந்துதான் கிடைக்கின்றது.
வண்டியின் வேகத்திற்கேற்ப மழையும் தீவிரமடைந்து கொண்டிருந்தது. நன்கு இருட்டி விட்டது. சாலையில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் கை காட்டினார்கள். ஓட்டுனர் ஏற்றிக் கொண்டார். மிஸோ பழங்குடி பெண்கள். மழையானது வானத்தையும் நிலத்தையும் ஒன்று போல ஆக்கி விட்டிருந்தது. எதிரே தெரியும் சாலை என்பது கண்களிலிருந்து கிட்டதட்ட மறைந்து மனதிற்குள் நெளியும் ஊகமாகவே மாறி விட்டிருந்தது. நீர் நிறைந்த சாலையின் நடு குழிக்குள் வண்டி தடாரென விழுந்து எழும்பியது. பின்னிருக்கையில் முனகலொளி வண்டியின் கூரைக்குள்ளிருந்த இரும்புத்தகட்டில் மிஸோ பெண்ணின் தலை மோதி உடைந்து குருதி பெருக்கு.
அந்த பெண்கள் தங்களின் வீட்டை நோக்கி வண்டியை திருப்பச் சொன்னார்கள். வண்டி வந்த வழியே திரும்பியது. பெண்களின் வீட்டை அடைந்தபின் வண்டியை நாம் போகும் திசைக்குத் திருப்பிய பிறகே அவர்களை இறக்கி விடுமாறு ஓட்டுனரிடம் மோதி ஆதரவு மனிதரும் நாங்களும் சேர்ந்து சொன்னோம். அவர்களின் வீட்டார் மீதான அச்சத்தில்தான் அவ்வாறு சொன்னோம். ஆனால் அந்த பெண்களோ வண்டியிலிருந்து இறங்கும்போது எங்களுக்கு நன்றி சொன்னார்கள். அந்த கணத்தில் எங்களின் உயரத்தில் பாதி உடைந்து விழுந்தது.
- மேலும்
Commentaires