top of page

பாபநாசம் - மகாகவி பாரதியார்

Updated: Oct 31, 2023

1919 ஆம் ஆண்டு ஜனவரி மாத சுதேச மித்திரன் நாளிதழில், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய பயண கட்டுரை இது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் நீர்வீழ்ச்சி - 1804 ஆம் ஆண்டு வரையப்பட்டது. வில்லியம் டேனியலின் 'ஓரியண்டல் சீனரி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஓவியம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் நீர்வீழ்ச்சி - 1804 ஆம் ஆண்டு வரையப்பட்டது. வில்லியம் டேனியலின் 'ஓரியண்டல் சீனரி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஓவியம்

நன்றி - royalacademy )

"ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று இந்த நதி இன்னும் எத்தனையோ சதுர் யுகங்கள் வரை சொல்லிக் கொண்டேதானிருக்கப் போகிறது.

கிழக்கே என் கண்ணெதிரே ஸுரியன் உதயமாய் ஒரு பனையளவு வான் மீதேறி ஒளிர்கிறான். நான் ஒரு பாறைமேல் உட்காந்திருக்கிறேன். என் காலின் கீழே மாதாவாகிய தாம்ரபர்ணி ஓடுகிறாள். தெளிவான நீர்; கண்ணாடி போலிருக்கிறது, அதன் அடியிலுள்ள பாறை அப்படியே கண்ணுக்கு ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. எண்ணற்ற பாறைகளின்றும் சிறு சிறு அருவிகளாக வீழ்ந்து செல்லும் தாம்ரபர்ணியில் இடைவிடாமல் சலசல என்ற ஓசை பிறக்கிறது. எனது வலக்கைப் புறத்தே, தென்திசையில், மலயாசலத் தொடரின் பச்சை போர்த்த குன்றுகள் நிற்கின்றன. நான்கு புறத்திலும் மரங்கள் செறிந்திருக்கின்றன. நதியின் நடுவில் எண்ணற்ற பாறைத் திட்டுக்கள் சிறிதும் பெரிதுமாக விரவிக்கிடக்கின்றன. இவற்றின் மீது பல மரங்களும், செடிகளும் காணப்படுகின்றன. இம்மரங்களினின்றும் பறவைகள் ஒலிக்கின்றன.


இந்த அற்புதக் காட்சியைக் கண்டவுடன் என் மனம் பின்வருமாறு கருதலாயிற்று: " எத்தனை வருஷங்களாக எத்தனை யுகங்களாக இந்தக் குன்றுகளின் மீதும் சங்கீதக்காரியாகிய தாம்ரபர்ணியின் மீதும் இங்கனம் அற்புதமான ஸூர்யோதயம் நிகழ்ச்சி பெற்று வருகிறதோ !, எத்தனை யுகங்களாக இந்தக் தாம்ரபர்ணி இங்கே இடைவிடாமல், ஓயாமல் தீராமல் ஒரே ராகமான பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாளோ? ஒலி வடிவமான கடவுளை முன்னோர் "நாதப்ரஹமம்" என்றனர். இந்த ஒலிக் கடவுளை ஒருவன் உபாசனை செய்ய விரும்பினால் அவன் பாபநாசத்தில் வந்து வாழக்கடவன். யாதேனுமொரு மந்திரத்தைச் சிறிது நேரம் சொல்லிக் கொண்டு போய்ப் பிறகு சலிப்பெய்திவிடும். அவ்விதமான சலிப்புக்கிடமின்றி மந்திரத்தை நழுவவிடாமல் ஜபித்துக் கொண்டிருக்குமாறு ஒருவன் பழக்கப்படுத்த விரும்பினால் அவன் இந்த நதியின் ஒலிக்கருகே வந்திருந்து பழகலாம்.


"ஓம் சக்தி" "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று நதி ஒளிப்பதாகப் பாவனை செய்து கொள்வோமாயின், அப்பால் நமக்கு மந்திர ஜெபத்தில் எவ்விதமான கஷ்டமுமில்லை. "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று இந்த நதி இன்னும் எத்தனையோ சதுர் யுகங்கள் வரை சொல்லிக் கொண்டேதானிருக்கப் போகிறது. அதை மனச்செவியால் கேட்டுக் கொண்டிருப்பதே நமக்கு உயர்ந்த ஸாதனமாய்விடும்.


இங்கனம் நான் இந்த நதியைக் குறித்துப் பலவிதமாக யோசனை செய்துவிட்டுப் பிறகு ஸ்நானம் பண்ண வேண்டும் என்ற கருத்துடன் இறங்கினேன்.


தண்ணீரில் காலை வைத்தால் காலைச் சுற்றி மீன்கள் ! பாபநாசத்து மீன்கள் அழகுக்கும், தைர்யத்துக்கும் கீர்த்தி பெற்றண, அவை மனிதருக்கஞ்சுவதில்லை. ஏனெனில் அவற்றை இங்கு மீன், வலைஞரேனும் பிரேனும் பிடிக்கக்கூடாதென்ற ஸம்ப்ரதாயமொன்று நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. யாரோ ஒரு ஆங்கிலேயன் அந்த ஸம்ப்ரதாயத்தை மீறி இங்கு மீன் பிடித்ததாகவும், அதனால் அவனுக்குக் கண் தெரியாமல் போய் விட்டதாகவும் ஜனகளுக்குள்ளே ஒரு கட்டுக் கதை வழங்கி வருகிறது. அச்சமில்லாமல் மனிதனை நெருங்குவதனாலும், ஜலத்தின் தெளிவினாலும் இந்த மீன்கள் நானாவிதமான சுந்தர வர்ணங்களையும், கண்ணழகையும் கண்டு வியத்தல் எளிதாகிறது. இவற்றுள்ளே பெரும்பான்மையானவை பொன்னிறமுடையன. இலேசான தங்க கம்பியினால் ஒரு சிறு வளையம் பண்ணி அதனிடையே நீல ரத்னம் பதித்தது போல் இவற்றின் கண்கள் மிளிர்கின்றன. வேகமான நீரோட்டத்தில் கொஞ்சம் சோறு கொண்டு போடத் தொடங்கினால் அதைத் தின்னும் பொருட்டாக நீரோட்டத்தை எதிர்த்து இந்த மீன்கள் அணியணியாக வந்து நிற்பதைப் பார்க்கும்போது, எதிரியின் குண்டுகளைக் கருதாமல் அணிவகுத்து நிற்கும் காலாட் படைகளைப் போன்ற தோற்றமுண்டாகிறது.


ஸ்நானத்துக்கு பாபநாசத்து ஜலம் மிகவும் இன்பமானது. வாய்க்குத் தேன் போன்ற ருசியுடையது. இது பொதிய மலை மீது பல்லாயிரம் கிளைகளாகத் தோன்றி, வரும் வழியிலே எண்ணற்ற ஓளஷதிகளைத் தீண்டி வருவதால், இந்த ஜலத்தில் ஸ்நான பானங்கள் செய்வதினின்றும் எல்லாவித நோய்களும் நீங்கிப் போய்விடும்மென்று சொல்லுகிறார்கள்.


வேஷ்டி துவைப்பதற்கும் இந்த ஜலம் மிக நல்லது, இந்த ஜலத்தில் நனைத்துப் பாறையின்மேல் இரண்டடி அடித்தவுடனே வேஷ்டி வெள்ளை வெளேரென்று பால் போலாய்விடுகிறது. ஆஹாரத்துக்கும் இவ்விடம் மிகவும் சொ ஸெளக்யமானது. நான்கு புறமும் ஜலமேடை நடுவே ஒரு பாறைத் திட்டின் மீது பளிங்கு போல் வழவழப்பான கல்லைக் கழுவி அதன் மேல் தோசை அல்லது அன்னத்தை வைத்துக் கொண்டு தின்றால் அது வாய்க்கு அமிர்தம் போலிருக்கிறது.


பாபாநாசத்து மீன்களை போலவே அவ்விடத்துக் குரங்குகளும் கீர்த்தியுடையன. எத்தனையோ நூற்றாண்டுகளாக அவை யாத்திரைக்கு வரும் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வருவதால், தாமும் இயன்றவரை மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி வருவதால், தாமும் இயன்றவரை மனித நாகரிகத்துடன் ஒத்த நடைகள் பெற்றிருக்கின்றன. மனிதர் கையினின்றும் தின்பண்டங்களை மிகவும் பயபக்தியுடனும் விநயத்துடனும் வாங்கித் தின்னுகின்றன. இதனின்றும் அக்குரங்குகள் ஸமயம் வாய்த்த பொது களவு, கொள்கைகளை நடத்துவது கிடையாதென்று நினைக்க கூடாது. அந்த செயல்கள் முறைப்படியே நடைபெற்று வருகின்றன.


சில குழந்தைகளின் கையில் தின்பண்டமிருப்பதைக் கண்டால் குரங்குகள் அதி ஸுலபமாகத் தட்டிக் கொண்டு போய்விடும். பெரியோர் வைத்திருக்கும் பண்டங்களையும் அவர்கள் சற்றே கவனக் குறைவாக இருக்கக் கண்டால் அக்குரங்குகள் பறித்துக் கொண்டு போகும். துணி, மணி, செருப்பு & கையில் அகப்படக் கூடியதையெல்லாம் ஆட்காவல் இல்லாவிட்டால் திருடிக் கொண்டு போய்விடும்.


நான் ஒரு சிறு கூடையில் இரண்டணாவுக்குப் பொரியும், கடலையும், மிட்டாயும் வாங்கி வைத்துக் கொண்டு பாபநாசத்துக்கு கோயிலெதிரே ஒரு மரத்தடிக்குப் போய், அங்கு கூடியிருந்த சில குரங்குகளின் முன்னே பொறி, கடலை முதலியவற்றை ஒவ்வொரு தானியமாக எடுத்து வீசினேன்.


ஒரு பெரிய, முரடான , ஆண் குரங்கு மாத்திரம் முற்பட்டு வந்து அந்தப் பொரி கடலையையெல்லாம் பொறுக்கித் தின்னலாயிற்று. ஆண் குரங்குக்கு அவ்வூரில் "தாட்டையன்" என்றும், பெண் குரங்குக்கு "மந்தி" என்றும் பேயர் சொல்லுகிறார்கள். பிறகு அந்தத் தாட்டையன் என்னை நெருங்கி வந்து நான் கொடுக்கும் பொரி கடலையையெல்லாம் என் கையைத் தொட்டு தொட்டு வாங்கி மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் தின்று கொண்டிருந்தது. ஐந்து நிமிஷம் வரை அது தின்னத் தின்ன நான் துளி துளியாக எடுத்தெடுத்துக் கொடுத்து கொண்டிருந்தேன். அப்பால், மற்றக் குரங்குகளுக்கும் கொடுப்போமென்றெண்ணிப் பார்க்குமிடத்தே அவை இந்தத் தாட்டையனுக்கஞ்சி, என்னை நெருங்கத் துணியாமல் விலகி நிற்பது கண்டேன். உடனே அவற்றை நோக்கி ஒரு காய் பொரி கடலையெடுத்து வீசினேன்.


ஒன்றுக்கொன்று கோபம் கொண்ட குரங்குகள்
ஒன்றுக்கொன்று கோபம் கொண்ட குரங்குகள்

( நன்றி Dayne Henry Jr)


தன்னுடைய கட்டுக்குக் கீழ்ப்பட்டிருப்பதனால் தன் ஸநிதியில் எதையும் தின்ன அதிகாரமில்லாத குரங்குகளுக்கு நான் பொரி, கடலை போட்டதை ஒரு பெரும் குற்றமாகக் கருதி அந்தத் தாட்டையன் என்னை நோக்கிப் பற்களை விரித்துக் காட்டி பயமுறுத்தலாயிற்று. இதைக் கண்டவுன் தன்னை மீறிச் சற்றே கோபமுண்டாயிற்று. மனிதராயினும் பிற ஜந்துக்களாயினும் நமக்கெவ்விதமான தீமை விளைவித்த போதிலும் அவற்றுக்கு நாம் எதிர்த் தீமை செய்யக்கூடாது என்பது மட்டுமேயன்றி, அவற்றின் மீது மனத்துக்குள்ளே கோபம் கொள்ளவும் கூடாது என்ற கொள்கையுடைய நான் இந்தத் தாட்டையனுடைய செய்கையைக் கண்டபோது அக்கொள்கையை மறந்து அதன்மீது கையோங்கினேன். பிறகு சற்றெ கோபத்தைத் தணித்துக் கொண்டேன். எனினும் "ஓட்டக்கூத்தன் பாட்டுக் கிரட்டைத் தாழ்" என்பது போல் தாட்டையனுக்குப் புத்தி வறுத்தும் பொருட்டாகப் பொறி கடலையை அல்லி அல்லி அதற்குப் போடாமல் மற்றக் குரங்குகளுக்குப் போட்டேன். அப்போது தாட்டையனுக்கு என்மீதிருந்த கோபத்தீ பொங்கியெழலாயிற்று. கண்கலிலே தீப்பொறி பறக்கப் பற்களை முன்னிலும் அதிக விகாரமாகக் காண்பித்துக் கொண்டு தாட்டையன் கையோங்கி என்னை அடிக்க வந்தது. நான் அந்தத் தாட்டையன் முகத்திலே காறியுமிழ்ந்தேன். என் மீது தன் சினம் செல்லாதென்பதை நன்கு தெரிந்து கொண்ட தாட்டையன் உடனே தன் இனத்தாரின்மீது பாய்ந்தது. "நம்மிடம் சிறிதேனும் மதிப்பில்லாமல் நாம் வாங்கித் தின்னுமிடத்தில் நீங்களும் வாங்கத் துணிந்தீர்களா?" என்ற அர்த்தத்தில் மற்றக் குரங்குகளை நோக்கி உறுமிற்று. அவையெல்லாம் நடுங்கிப் போய்த் திசைக்குத் திசை ஓடலாயின.


இதனிடையே என்னைச் சூழ ஒரு சிறிய மனிதக் கூட்டமும் உண்டாய்விட்டது. ஒரு பிராமணக் கன்னிகை, இரண்டு மூன்று மறப் பிள்ளைகள், எங்கள் மாமா இத்தனை பேரும் வந்து நான் குரங்குகளுக்குத் தான்யங் கொடுக்கும் வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு நின்றனர். அப்போது அந்த பார்ப்பாரப் பெண் சொல்லுகிறாள் "குரங்குகளுக்குள்ளே வழக்கமே இப்படித்தான். யார் என்ன தீனி போட்டாலும் இதைப் பெண் குரங்களுக்குத் துளிக்கூடக் கொடுக்காமல் தாட்டையன்களே தின்னுகின்றன. அதிலும் சின்னத் தாட்டையன்களைப் பெரிய தாட்டையன் பக்கத்தில் அணுக விடுவதில்லை. ஒரு குரங்கு தின்பதை கண்டால் மற்றொன்றுக்குப் பொறாமை ! மனுஷயர்களைப் போலதான் இக் குரங்குகளும்" என்றாள்.


இதைக் கேட்டவுடன் அந்த மறச்சிறுவர் இருவரும் என் மாமாவும் ஆளுக்குகொரு கல்லெடுத்துத் தாட்டையத் தலைவன்மீது வீசலாயினர். நான் அவர்களுடைய கொடிய, குரூரமான, செய்கையைத் தடுக்க வேண்டுமென்று தீர்மானித்து ஒரு நிமிஷம் வரை நாவெழாதிருந்துவிட்டு, அப்பால் கடைசியாக "சிச்சீ! ஏழை பிராணன் ! அஹங்காரத்தை அதனிடம் மாத்திரம்தானா கண்டோம்! ஐயோ பாவம், அதன் மேலே கல் எறியாதீர்கள்" என்று சொல்லத் தொடங்கு முன்னாகவே அந்தத் தாட்டையத் தலைவன் தன் உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டாக எங்கோ ஓடி மறைந்தது. மற்றக் குரங்குகள் திரும்பி வந்தன. நான் அவற்றுக்குத் தான்யங்கள் போடுகையிலே நடந்த பொறாமைக் கதைகளையெல்லாம் இங்கெழுதப் புகுந்தால் இந்த வ்யாசம் மிதமிஞ்சிய நீட்சி பெறும், அப்பால் பிராமணப் பெண் சொல்லிய வார்த்தைகளை மாத்திரமே இங்கெழுதி முடித்து விடுகிறேன்.


"ஆனாலும் சோற்று விஷயத்தில் மனுஷ்யர்களுக்கும் இந்தக் குரங்குகளும் ஒன்றுக்கொன்று பொறாமைப்பட்டும், அடிமைப்படுத்தியும் செய்யும் அநியாயங்களை வேறெந்த ஜாதியிலும் நான் பார்த்ததே கிடையாது. காக்கை ஜாதியைப் பார், தங்கம் போலே! எல்லாக்காக்கையும் அக்கா வா, தங்கை வா என்று ஒன்றையொன்று கூவி ஒக்க விருந்துண்ணுகின்றன. குரங்கும் மனிதனும் சுத்த அநாகரிக ஜந்துக்கள் ! காக்கை ஜாதி மிகவும் நாகரிகமானது" என்று சொல்லி அந்தப் பார்ப்பனப் பெண் நகைத்துச் சென்றாள்.


- சி. சுப்பிரமணிய பாரதி

"சுதேசமித்திரன்"

2-1-1919


(பாரதி எழுதிய இந்த கட்டுரை வெகுநாட்களாக கண்டுபிடிக்காப்படாமல் இருந்தது, இதை தேடி ஆவணபடுத்தியவர் ஏ.கே.செட்டியார், இதை அவர் 1968 இல் தொகுத்த "தமிழ் நாடு - பயண கட்டுரை" என்ற நூலில் சேர்த்துள்ளார்)


பி.கு. : மனிதன் குரங்கு ஜாதி என்ற சிந்தனையை தன் கவிதையின் மூலம் பாரதி உடைத்தார். காக்கையுடனும், குருவியிடனும் மனிதனை ஒப்பிட்டு நோக்க அகத்தூண்டுதல் இந்த பயணத்திலிருந்து அவருக்கு கிடைத்திருக்கலாம்.


காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்;

நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;

நோக்க நோக்கக் களியாட்டம்.Comments


bottom of page