top of page

பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - 2

Updated: May 29, 2023

நான் கசோலில் உள்ள சலால் என்ற மலை கிராமத்திற்கு மலையேறி சென்று அங்கிருந்து மணிகரண் குருத்வாரா சென்றதும், அங்கிருந்து கீர்கங்கா நோக்கி சென்றது வரை இந்த பதிவில் உள்ளது.


"முன்னர் விழியறியாத ஆயிரமாயிரம் காட்சிகள் - பெயரறியா சிறுமலர்கள், பறவைகள், சரேலனப்பாயந்திறங்கும் சிற்றாறுகள் என வழியெங்கும் நிறைந்து இருப்பினும், ஒவ்வொரு அடியும் விழி தவறாத கவனமும் ஊன்றுதலும் கோரியது மலை."

இமாசலப் பிரதேசம்: பனிமலைப் பகுதி - தொலைவில் தெரியும் பனிச் சிகரங்களில் கணம் கணமென உருகி வழிந்து பல்வேறு ஓடைகளாய் சிற்றாறுகளாய் மண்ணிறங்கும் கருணைப் பெருக்கால் வளம் பெறும் நிலம். பொங்கிப் பெருகும் நீரின் வேகம். சீறிப் பெருகி, பாறைகளை ஒவ்வொரு கணமும் தகர்க்கவென மோதி, சுழித்துப் பேரோசையிட்டு, பால்நதியென வெண்நுரை சூடி, ஒரு நொடியும் நில்லாது பொழிந்து, கட்டில்லை எனக்காட்டி கரை மீறாதோடும் காட்டு மகள். அவளிடமிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. எனினும் அந்தப் பிரவாகத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும் எளிய புலன்களால் இயலவில்லை. ஒரே நேரத்தில் பல விளையாட்டுப் பொருட்கள் கிடைத்த குழந்தை போலொரு தவிப்பு. அந்தக் கரையோர மரங்கள் போல, ஓங்கி நிற்கும் சிகரங்கள் போல நிலைத்து விட முடியுமென்றால் ஒரு வேளை இந்த ஆற்றை முழுமையாக நிதானமாகப் பார்க்க முடியலாம்.


பாலத்திலிருந்து இறங்கி ஆற்றின் கரையோரப் பாறைகளில் அமர்ந்து கொண்டோம். நீரில் காலை சில நொடிகள் கூட நீடித்து வைக்க முடியாத சில்லிப்பு. அங்கும் ஆற்றுக்குப் போட்டியாகக் கூச்சலிடும் பெண்கள். சிரிப்பும் கொண்டாட்டமுமாக ஒரு நொடி போல அடுத்த நொடி இல்லாது நேற்றும் நாளையும் இல்லாத ஒரு உற்சாகம் அனைவர் முகத்திலும். சில நிமிடங்கள் அமர்ந்திருந்துவிட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த சலால் கிராமத்திற்கு சரிவுகளில் நடந்தோம். துணையாய் வாலைக் குழைத்து வரும் மனிதனின் தோழர்கள் வரத் தொடங்கினர். ஒவ்வொரு குழுவோடும் ஒன்றோ இரண்டோ நாய்கள் இணைந்து கொண்டு கால்களை உரசியும் முகர்ந்தும் வந்தன. எங்கள் உடன் வந்த நாய் குறுகுறுப்பான கண்களும் பார்த்தவுடன் பலநாள் சிநேகம் போலொரு பரபரப்புடன் வாலை வேகவேகமாக ஆட்டியபடி வந்தது. நாய் என்றாலே எனக்கு உள்ளூர சற்று பயம். அச்சம் என் உடலில் தெரிந்து விட்டது போல; அதிகம் மேலே உரசாமல் ஆனால் இணையாக ஓடி வந்தது. அதற்கு ஒரு பெயர் வைத்தால் கொஞ்சம் பயம் குறையுமெனத் தோன்றியது. வழிகாட்டி ஓடும் அவனுக்கு கூகுள் எனப் பெயரிடலாம். அலைவரிசை கிட்டாத இடங்களில் வழிகாட்டிச் செல்லும் கூகுள். குறுகலான ஏற்றப்பாதை. நீரோடும் வழி. கசிந்துகொண்டே இருந்த நீரோடை வழியாக சரளை மண்ணில் ஏறுவது போலிருந்தது. இருபுறமும் சற்று உயரங்களில் அக்கிராமத்தின் தெருக்கள் வந்து ஊடுபாவின. கூகுள் வாலை ஆட்டியபடி முன்னால் சிறிது தொலைவு ஓடி நின்றுகொள்ளும். குழுவினர் மொத்தமும் கடந்ததும் மீண்டும் வந்திணைந்து கொள்ளும். ஒரு பழைய பாழடைந்த கோவில் வரை சென்றோம். அதற்கும் மேலே இருந்த ஓடைக்கு செல்லும் பாதை அடைபட்டிருந்தது. மீண்டும் சலால் வழியாக இறங்கி சற்றே களைப்படைந்ததும் தேநீர் அருந்த ஒரு கடையில் அமர்ந்தோம்.

கூகுள் ஓடிவந்து தேநீர்க்கடைக்குள் காதை விடைத்து பவ் பவ்வென்று ஏதோ சொன்னான். உள்ளிருந்த பெண் ஏதோ அவனிடம் பதில் சொன்னதும் வாஞ்சையோடு எங்கள் முகங்களைப் பார்த்துவிட்டு எங்கள் காலடியில் அமர்ந்து கொண்டான். அதற்குள் கூகுள் மேல் ஒரு பாசம் உருவாகியிருந்தது. கொடுத்த பிஸ்கட்டைத் தின்று விட்டு நாங்கள் தேநீர் குடிப்பதை ‘ஐயோ பாவம்’ எனப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தி கவிந்து கொண்டிருந்தது. பள்ளி முடிந்து பிள்ளைகள் புத்தகச் சுமையோடு திரும்பிக் கொண்டிருந்தனர். எல்லா வயதிலுமான பெண்கள் ஏதோ கோணிகளைத் தலையிலோ முதுகிலோ சுமந்து அனாயாசமாக மலையேறிக் கொண்டிருந்தனர். மலைச் சிற்றூர்களுக்கு செல்ல வேண்டிய அனைத்துப் பொருட்களும் குதிரைகளிலோ மனிதர்கள் முதுகில் சுமந்தோதான் ஏற்றப்படுகிறது. ஆற்றின் கரைக்கு மீள்வது வரை கூகுள் குடும்பத்தாரும் உடன்வந்தனர். எல்லையை அடைந்ததும் தங்கள் ஊருக்கு வந்தமைக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்பிச் சென்றன. அழகான ஒரு மலைச் சிற்றூறைப் பார்த்துவிட்டு மீண்டும் நதிக்கரைக்கு இறங்கி வந்தோம். கூகுள் இல்லாதது சற்று வருத்தமாகவே இருந்தது. பெயர்க் கோளாறு போலும் - கூகுள் அற்றிருப்பது கையறு நிலைதான். ஆற்றோரம் ஒரு பெண் கோணிப்பையில் குப்பைகளில் இருந்து பணமாகக் கூடிய பொருள் தேடி சேகரித்துக் கொண்டிருந்தாள். என்றோ ஒரு நாள் சுற்றுலாத்தலம் என நாம் சென்று, வியந்து நிற்கும் தளம் யாரோ ஒருவருக்கு அன்றாடங்களால் நிறமிழந்து வாடிக்கையாகவே இருக்கும். மகத்தானவை அரிதானவையாகவே இருப்பதன் வாயிலாகவே வியப்பைத் தருகின்றன; அன்றாடம் இயற்கையின் பெருந்தரிசனம் பார்த்த ஆதி மனிதன் அதன் வண்ணங்களைக் காணும் கண்களை இழந்து பாதுகாப்பு நோக்கியும் வசதிகள் நோக்கியும் குறுக்கிக் கொண்டது இயல்புதானே. ஒரு மணிநேர நடைக்குப் பிறகு நதிக்கரையில் அமர்ந்து விட்டு இரவு மணிகரண் குருத்வாரா சென்றடைந்தோம். பனியுருகிய ஆற்றின் கரையில் கொப்பளித்துக் கொதிக்கும் வெந்நீரூற்றுகள். அந்த குருத்வாராவின் வாயிலை இணைக்கும் பாலத்துக்கு அடியில் வெந்நீராவி கண்ணை மறைக்க சூழலில் வெப்பம் தெரிந்தது. மக்கள் குழுமும் இடம். பல்லாயிரம் கால்தடம் சுமந்த மண்ணும் ஈரமும் தரையெங்கும். மக்கள் திரள் இட்டுச் சென்ற வழியே முன்னேறி உள்ளே சென்றோம். வெந்நீரூற்றுக்களில் குளிக்க நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் பெருங்கூட்டம். குருத்வாராவின் கீழே அறைபோல ஓர் இடத்துக்கு இறங்கிச் செல்ல அங்கும் வெந்நீர்க்குளம். ஆவி அலையடித்த குளத்திலிருந்து வாளியில் நீரள்ளிக் குளிக்கிறார்கள். நிற்க இடமில்லாமல் கூட்டம் நெரித்துத் தள்ள, அனைவரும் மேலே படியேறி வழிபாட்டுத் தலத்துக்குச் சென்றோம். காலணிகள் பாதுகாப்பிடம் அணுக முடியாத நெரிசலில் இருந்தது. வழக்கமாக விழா நாட்களில் கும்பலை நினைத்தே கோவிலுக்குப் போகாத எனக்கு அந்நெரிசல் மூச்சுத் திணறியது. நூற்றுக்கணக்கான தலைகளுக்கும் தோள்களுக்கும் மேலே துழாவி காலணி பாதுகாக்கும் இடத்தை நெருங்கினோம். உள்ளே காலணிகள் வைக்க இடமில்லை எனக் கூவிக் கொண்டிருந்தார் அங்கிருந்த முதியவர். மேற்கொண்டு உள்ளே போகமுடியாதென எண்ணித் திரும்ப முற்படும் போது, தில்லியிலிருந்து உடன் வந்திருந்த பெண் பிரதீபா, அனைவரும் அணிந்திருந்த காலணிகளை சிறிதும் மனத்தடை இன்றித் தனது பையிலிட்டு முதுகில் சுமந்து கொண்டாள். எவரையும் வெளித்தோற்றத்தைக் கொண்டு எடை போடுவது எப்போதும் தவறாகத்தான் முடிகிறது. குருத்வாராவிற்குள் சென்று வழிபாடு முடித்து வெளியேறி லங்கர் (சமபந்தி) நடைபெறும் இடத்துக்குச் சென்றோம். நிற்கவும் இடமில்லாத ஒரு நீண்ட அறை. தரையெங்கும் பல்லாயிரம் காலடிகள் பதிந்து ஈரமாக இருக்க மனம் ஒரு நிமிடம் அமர்வதற்குத் தயங்கியது. சுத்தம் சுகாதாரம் என மனம் புலம்பியது. அனுபவங்கள் நம் வசதிக்குரிய வீட்டுக்குள் அமைவதில்லை. இதுபோன்ற பயணங்களுக்கு இத்தகைய மனத்தயக்கங்களே பெருந்தடை எனத் தோன்றியது, பிரதீபா முகத்தைப் பார்த்ததும் சென்று லங்கரில் அமர்ந்தேன். தட்டுகளையும் கிண்ணங்களையும் நாம் எடுத்துச் சென்று அமர, பம்பரமென சுழலும் கரங்கள் கடி எனப்படும் மோர்க்குழம்பு வகை உணவையும் கீரையையும் சூடான சாதத்தையும் பரிமாறின. யார் முகமும் பிரித்தறிய முடியாத கூட்டம். பரிமாறுபவர்களின் கால்களும் தட்டு நோக்கி நீளும் கரங்களும் வண்டிகளில் பெருங் கலங்களை சுமந்து தள்ளிக் கொண்டு வருபவர்களும் அனைத்தும் ஒரே முகமெனப் பட்டது. சூடான சாதமும் கடுகுக் கீரையின் தனித்த சுவையும் மோர்க்குழம்பும் கலந்து வாயில் மெல்வதன் முன் வயிற்றுக்கு இறங்கியது. அந்த லங்கர் என்ப்படும் பந்தி இடையறாது எல்லா நேரமும் நடந்து கொண்டே இருப்பது. தன்னார்வத்துடன் பங்கு கொள்ளும் சீக்கிய அன்பர்களாலேயே நடத்தப் படுகிறது. பரிமாறிக் கொண்டும் தட்டுகளை கழுவிக் கொண்டும் உணவு வகைகளை சமைத்த இடத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்தும் நெரிசலுக்கு இடையில் சுழன்று கொண்டிருந்த கைகளும் கால்களும் முகங்களும் காலத்தின் சலிக்காத கரங்களென இயங்கிக் கொண்டிருந்தன. அங்கே அன்னமே பிரம்மம். பஞ்சாபி மொழியும் மக்களும் அவர்களது ஆரவாரமான உபசரிப்பும் மனதுக்கு அணுக்கமாகிக் கொண்டிருந்தன.

அடுத்ததாக அருகிலேயே இருந்த ஒரு சிவன் ஆலயத்தில் வெந்நீரூற்றுக்களைக் காண சென்றோம். குருத்வாரா விட்டு வெளியேறும் பாதை சிறு குகைவிட்டு வெளியேறுவது போலிருந்தது. கூரை, தரை, பக்கச்சுவர் என அனைத்தும் கொதித்தது. வெளியேறியதும் தலைக்கு மேலே சென்ற சாலையில் எற, வண்ணங்களின் வெளியென ஒரு கடைவீதி மின்னொளியில் விதவிதமான மலைக் கைவினைப் பொருட்களுடன் தேனீக்கூடு போல இயங்கிக் கொண்டிருந்தது. சில நிமிட அங்காடிச்சாலை நடைக்குப் பிறகு சிவனாலாயம். நுழைவதற்குப் பத்துப்படிகள் கீழிறங்க வேண்டியிருந்தது. மணிரத்னம் படம் போலொரு புகை சூழ் இருளுக்குள் எங்கிருந்து எனத் தெரியாத விளக்கொளியில் ருத்ர மூர்த்தி. ஏழெட்டி உயரமான கருத்த சூலபாணி முன்னிலையில் கொப்பளிக்கும் சிறு நீரூற்று. அரிசியைப் பானையிலிட்டு கொதிக்கும் வெந்நீரூற்றுக்குள் இறக்குகிறார்கள். இன்னொரு புறம் வெந்த சோற்றுப் பானைகளை வெளியேற்றி உணவு பரிமாறும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். நின்ற தரையும் சூழ்ந்த சுவரும் கொதித்தது. பனிக்குள் உறங்கும் நெருப்பின் வாய். மீண்டும் கடைவீதி கடந்து நடந்தோம். ஏனைய வடஇந்தியர்களோடு ஒப்பிடும்போது இமாச்சலப் பெண்களும் ஆண்களும் சற்று சிறிய உடல்வாகு. எனில் மலை மக்களுக்கே உரிய திடமும் முகத்தில் வெளிறிய செம்மையின் அழகும் இருந்தது. கடைவீதியில் அரைநெல்லி அளவிலான குலாப்ஜாமூன் விற்ற ஒரு சிறுவனுடன் பேசிவிட்டு, அவனுக்காக ஒரு தட்டு வாங்கினோம். இரவின் குளிருக்கு அனல் உள்ளே போவது போல் இதமாக இருந்தது அவ்வினிமை. அறைக்குத் திரும்பியதும் அடுத்த நாள் செல்லப் போகும் கீர்கங்கா குறித்துத் திட்டமிடல். இரண்டு திட்டங்கள் – ஒன்று காலையில் பர்ஷணி எனும் இடத்தில் தொடங்கி நான்கு மணிநேர நடை தொலைவு வரை ஏறிச் சென்று, மாலைக்குள் கசோல் அறைக்குத் திரும்பிவிடுவது; அல்லது மாற்றுத்திட்டம் முழுமையாக கீர்கங்கா உச்சி வரை ஏறிச் சென்று அங்கு இரவு தங்கிவிட்டு அதற்கடுத்த நாள் இறங்கி வருவது. குழு ஒரு மனதாக கீர் கங்கா சென்று அங்கு தங்குவதைத் தேர்ந்தெடுத்தது. எனவே ஓரிரவு தங்குவதற்கான உடைகளையும் குளிர்காக்கும் ஆயத்தங்களையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். இரவில் கீர் கங்காவின் மலை வெளிகளில் கூடாரங்களில் தங்க வேண்டும். உச்சியிலிருந்து பனிமலைகள் முழுப்பார்வைக்குத் தெரியும். அந்தத் தகவலே மனக்கிளர்ச்சி கொள்ளச் செய்தது. ‘சென்றடையும் இடம் மட்டுமல்ல செல்லும் வழியே நீங்கள் இதுவரை கண்டிராத காட்சிகள் நிறைந்தது; அங்கு ஏறும் களைப்பனைத்தையும் களையும் தன்மை கொண்ட வெந்நீரூற்றுக்கள் உண்டு’ என்று மோனிகா சொன்னார்.

இன்று கண்ட நெரிசலான நீரூற்று நினைவுக்கு வந்தது. உடனே அன்றைய மாலை நடையிலேயே உடல் தளர்ந்துவிட்டது போலவும், அவ்வளவு தொலைவு செல்ல வேண்டுமா என்றும் ஒரு கணம் தோன்றியது. ஏறத்தாழ 900 மீட்டர் உயரம் - சுற்றி வளைத்தேறும் பாதைகளில் 13 கிலோமீட்டர் நடைபயணம். மலையேற்றம் முழுமையாக என்னால் ஏற முடியாமற் போய்விடுமோ என்றெல்லாம் தயக்கங்கள். செல்லும் வழியில் ஏதேனும் காரணம் குறித்து மலையேற முடியாமல் போனாலும் நடந்தேதான் திரும்ப வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்பப்ட்டது. முழுவதும் ஏற முடியாமற் போனால் பிறருக்கும் இடைஞ்சலாகி விடுவோமோ என மனதில் ஒரு சிறு சஞ்சலம் இருந்து கொண்டேதானிருந்தது. மலையேற வரவில்லையெனில் கசோலைச் சுற்றிப் பார்க்கலாம் என யாரோ சொன்னார்கள். சிறு சஞ்சலத்தோடு அன்றைய இரவு முடிந்தது. பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்! புன்மையிருட்கணம் போயின யாவும்! எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி!பாரதி.

மனம் தெளிந்திருந்தது. குறித்த நேரத்திற்கு முன்னரே குளித்து ஆயத்தாமகி வெளியே சென்றோம். ஏழரை மணி; இன்னும் வெயிலில் சூடில்லை. மேலே குளிராடை, காது மறைக்கும் கம்பளித்துண்டு, வெயிலுக்குக் கண்ணாடி, முதுகில் இரண்டு நாளுக்கான ஆயத்தங்கள். கடைவீதியில காத்திருந்து எங்கள் வாகனம் ஏறி, பர்ஷணி எனும் இடம்வரை சென்றோம். நாகமென வளைந்து நெளிந்து மலைகளைக் கவ்வியிருக்கும் சாலைகள். காலைப் புத்தொளியில் மின்னும் மலைகள். வழியெங்கும் கணமும் விட்டகலாமல் கீழே உடன்வரும் பார்வதி. சிலநூறடிகள் கீழே ஓடி வந்து வளைவுகளில் இடமிருந்து வலம் மாறி மரங்களூடே மறைந்து, சட்டென்று காணாமல் போய் ஒரு மலைத்திருப்பத்தில் மீண்டெழுந்து தொடர்ந்த அவளுடன் மேலேறியது பாதை. அவளது முடி தேடிச் செல்கிறோம் எனத் தோன்றியது. ஓரிடத்தில் வண்டி விட்டிறங்கி காலை உணவுக்காக நின்றோம். அது ஒரு சிறு வீடு போல மலைப்பாதையில் பள்ளத்தாக்கு நோக்கித் தொக்கியிருந்தது. உணவருந்தும் இடத்திலிருந்து சினிமாஸ்கோப் திரை போல இடமிருந்து வலம் நீண்டு விரிய ஆறு. அதன் பின்புறம் பனிமலைகள். மேலிருந்து பள்ளத்தாக்கைப் பார்க்கும்போது சட்டென்று சிறகு விரித்துப் பறந்துவிட முடியுமெனத தோன்றியது. ஒரு கணம் பறவை போல அந்த நதிமீது பறப்பது போன்ற ஒரு உணர்வேற்பட முதுகு சிலிர்த்தது.ஒவ்வொருவருக்காய் பராட்டா தயாராகிக் கொண்டிருந்தது. அடுப்பில் இட்டு எடுத்த பெண்ணுக்கு இருப்பத்து மூன்று வயது. சிவந்த சிறிய எடுப்பான கூரிய முகவெட்டு. முதுகில் குழந்தையை துணியால் இறுக்கக் கட்டியிருந்தாள். அன்னை முதுகில் அமர்ந்தவாறு ரொட்டி தயாராவதைப் பார்த்துக் கொண்டிருந்தது அச்சிறு குழந்தை. அனாயசமாக நெருப்பில் ரொட்டியை வாட்டிக் கொண்டே, இடையிடையே அனைவருக்கும் உணவு பரிமாறி, எங்களோடு பேசி, சிணுங்கும் குழந்தையை சமாதானப் படுத்தி, வெளியே புதிதாய் வருபவரை வரவேற்று, ஆயிரம் கரம் கொண்ட அன்னை போலிருந்தாள் அச்சிறு பெண் - தேவயானி! கிளம்பும்போது மர ஊன்றுகோல்களை அங்கேயே வாங்கிக் கொண்டோம். ஆர்வமும் அச்சமும் மகிழ்ச்சியும் கலந்து வயிற்றில் சிறகுலைக்க நடை துவங்கியது. மலை இடது புறம் சுவரென நின்றிருக்க, கீழே பள்ளத்தாக்கில் நதி பெருகியோட வளைந்திறங்கியது பாதை. டோஷ் மற்றும் பார்வதி ஆறுகள் சங்கமிக்கும் இடம். பார்வதி நதியில் NHPCயின் நீர்மின் நிலையத்திற்கான அணை கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கிறது. அதை ஒட்டியிருந்த படிக்கட்டுகளில் இறங்கி அந்த சங்கமத்துறையில் பார்வதியை மிக அருகில் பார்த்தவாறு கடந்தோம். மறுபுறம் ஏறக்குறைய நூறு படிகள் உயரம் மலைப்பாதை பாறைகளினூடாக ஏறியது. சற்றே ஈரம் கசிந்த மண்ணை மிதித்துவிட்டு பாறைப் பொருக்குகளில் கால் வைத்த போது சற்று சறுக்கியது. கால் மண்ணைப் புரிந்து கொள்ளும் வரை அந்தத் தடுமாற்றம் இருந்தது.


அந்த சிறு மலையேற்றம் முடிந்ததும் வியர்வையில் உடல் நனைந்தது.அதுவரை அணிந்திருந்த குளிராடைகள் சுமையாகத் தெரிந்தது. முதலில் குளிருக்கான ஜாக்கெட் கழற்ற வேண்டியிருந்தது. பின்னர் குளிருக்கென போட்டிருந்த முழுக்கை சட்டையையும் அகற்றி விட்டு உள்ளிருந்த டீஷர்ட் போதுமானதாக இருந்தது. அதன் பின்னர் இரண்டு மணிநேர நடை நாங்கள் ஏறியிருந்த மலையைச் சுற்றி வளைந்து வளைந்தேறிய மண்பாதையில் கழிகளை ஊன்றியபடி முன்னேறினோம். இடது புறம் மலை கோட்டைச்சுவரென. மூன்றடி அகல மண்பாதை. வலப்புறம் கீழே சரிந்திறங்கும் பள்ளத்தாக்கில் சில நூறடி ஆழத்தில் கலகலக்கும் பார்வதி. சில இடங்களில் ஏற்றமாகவும் சில தொலைவு சமதளமாகவும் சென்றது பாதை. ஏழெட்டுக் குதிரைகள் (மட்டக் குதிரை அல்லது கோவேறு கழுதை வகையை சேர்ந்தவை) முதுகில் பொதி சுமந்து எங்களைக் கடந்து சென்றன. ஒதுங்குவதற்கும் இடமில்லாத திருப்பங்களில் மலைச் சுவரை ஒட்டி நாம் நின்று கொண்டால் அவை மிக இலகுவாக விளிம்புகளிலும் குளம்படி பதித்துக் கடந்து போயின. மனதில் அச்சத்தை சுமந்தலைவதால் மனிதருக்கு அந்த நிகர்நிலை கைகூடுவதில்லை. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு சிற்றூரை சென்று சேர இரண்டு மணிநேரம் பிடித்தது. அரைமணிநேரம் முன்னரே எங்கள் குழுவில் சிலர் அவ்விடம் சென்று சேர்ந்திருந்தனர். அங்கே சற்று இளைப்பாறினோம். நீரையும் சக்தியையும் நிரப்பிக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தது பயணம். கண்ணுக்குத் தெரிவது பனிமலையும் நதியும். ஆனால் சூரியன் தோலை உரித்துக் கொண்டிருந்தான். கண்ணைக் கூசச் செய்யும் வெயில். வியர்வை உடலைத் தெப்பமாக்கியிருந்தது. வழியில் தேவைப்பட்டால் இயற்கையோடு இயைந்தே இயற்கை அழைப்புகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமே எனத் தொடங்கும் போது தயக்கம் இருந்தது. அது தேவையில்லாது போயிற்று. வியர்வை வழிந்து குளிர்ந்த உடலில் சிறுநீர் கழிப்பதற்கான தேவையே யாருக்கும் எழுவில்லை.

ஒரு மணிநேர நடைக்குப் பிறகு வலது புறமிருந்த மற்றொரு மலையை நோக்கிப் பாதை திரும்பியது. எதிர்பாராத தருணமொன்றில் இரண்டு மலைகளுக்கும் நடுவே, ஐங்குறுநூறு சொல்வது போல ஒல்லென விழிதரும் அருவி. ‘ருத்ரநாக்’ - நீர் நாகமென மண்ணில் பொழிந்திறங்கி சிற்றோடையென செல்கிறது. இரண்டு மலைகளை இணைத்த பாலத்தின் அருகே பைகளை வைத்துவிட்டு பாலத்தை ஒட்டி சில அடிகள் சரிவில் அருவியை நோக்கி இறங்கினோம்.


நீர் பொழிவுக்கு மிக அருகில் வரை செல்ல முடிந்தது. சிறு குளமென அருவி நீர் நிறைந்து வழிந்தோடுமிடத்தில் சிறிது நேரம் நண்பர்கள் உற்சாகமாக படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆழத்து உருளைக் கற்களை கண்ணாடியெனக் காட்டும் சிறு குளம். நீரில் காலை வைத்ததும் உச்சந்தலை வரை சில்லிட்டது. இட்ட அடி நோக எடுத்த அடி அடுத்த பாறையைத் தேடியது. ஒவ்வொருவராக அருவிக்கு மிக அருகே செல்ல சற்று நேரத்தில் அனைவரும் அருவியின் ஒரு சிறு பொழிவு வரை சென்று சாரலில் நனைந்தோம். பனித்தீக்குள் விரலை வைத்தது போலிருந்தது. முழுமையாக நனைய தைரியம் எழவில்லை. சாரலில் நனைந்ததிலேயே அதுவரை உடல் கொண்டிருந்த களைப்பு நீங்கியது.


காற்றில் ஆடைகள் உலர்ந்து விடும் என்பதால் அப்படியே பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கிருந்து வலது புறமிருந்த மலையில் ஏறும் பயணம் தொடங்கியது. எல்லோரும் ஒன்றாகத்தான் கிளம்பினோம். பெங்களூரில் இருந்து வந்த ஹேமா என்ற பெண் சிட்டுக்குருவி போல சட்டென்று பாறை விட்டுப் பாறை தாவினாள். பெங்களூரில் நடனப் பள்ளி நடத்துபவர். விசையுறு பந்தினைப் போல உடல் வேண்டியபடி சென்றது. விரைந்தேறி பார்வையிலிருந்து மறைந்தாள். செங்குத்தான மலையேற்றப் பாதையைச் சென்றடைவதற்குள் இன்னும் சில அருவிகள். நீரோடு சேர்ந்து பேரொலியை ஆற்றில் கொட்டின. அவற்றைக் கடக்கும் மரப்பாலங்கள் பச்சை படர்ந்திருந்தன. காடு அடர்ந்து கொண்டே வந்தது. தேவதாரு உயர்ந்து நிற்கும் மலைச்சாரல். இங்கிருந்து மலைப்பாதை முற்றிலும் மேல் நோக்கி ஏறிச் சென்றது. இப்போது வலது புறம் சுவரென மலையும் இடது புறம் பார்வதியுமென பாதை மாறிவிட்டது. வலக்கைப் பழக்கம் உள்ளதால் இடது புற பள்ளத்தாக்கை எதிர்கொள்ள கழியை இடங்கையில் வைத்து நிகர் செய்து கொள்வது சற்றுக் கடினமாக இருந்தது. சூரிய வெளிச்சம் இலைகளின் ஊடாக சில்லறை இறைத்திருக்க உச்சி வெயில் அங்கே தெரியவேயில்லை. பாதையென்பது மரவேர்கள் பிண்ணிச் செல்லும் பாறை நிலமென ஆகிவிட்டிருந்தது. பல்லாண்டுகள் பார்த்து விட்ட பெருமரங்கள் இருபுறமும் நின்றும் கிடந்தும் சரிந்தும் வழித்தோரணங்களாயின. ஒரு அடியிலிருந்து அடுத்து அடிக்கு ஒரு முழமேனும் ஏற வேண்டியிருந்தது. இடையிடையே சற்றே சரிவான ஏற்றம் என்பதே சமதளம் போல சந்தோஷம் தருவதாக இருந்தது. ஏறும் ஒவ்வொரு அடியும் கணுக்காலிலும், முதுகிலும், தோளிலும் உள்ள ஒவ்வொரு தசையையும் சுட்டிக்காட்டின. வாய் வழியாக மூச்சுவிடாதிருக்குமாறு தொடக்கத்திலேயே அறிவுறுத்தியிருந்தார்கள். அறிவுரையெல்லாம் ஏறும்போது எண்ண முடியமா என்ன? சில நூறு அடிகளுக்கு ஒருமுறை வியர்த்தும் களைத்தும் வெளியேறிவிட்ட சக்தி மேலும் காற்றைக் கேட்டது. வாய் திறந்து மூடி மீன் போல மூச்சு வாங்கி ஏற நடையின் வேகம் குறையத் தொடங்கி விட்டது. பாதையை அழகாக்கி ஏறுவதை இனிமை என்றாக்கின குறிஞ்சி நிலக் காட்சிகள். இடையிடையே தெளிந்த நீருடன் குறுக்கிடும் சிற்றோடைகள். நின்று குனிந்து நீரள்ள முடிந்த இடங்களில் கற்கண்டு இனித்தது. நீரோடைகளிலும் சிற்றருவிகளிலும் கால்பதித்து கடந்து செல்ல பாதை தொடர்ந்தது. அரைமணிக்கொரு முறை கடக்கும் பொதி சுமந்த குதிரைகளும் பாரம் சுமந்த மனிதர்களும். குதிரை என்றதும் மனதில் வருவது வேகம் அவை தன்னியல்பு மறந்து யாருக்காகவோ சுமைதாங்கி கழுத்தைத் தொங்கவிட்டு நடந்து கொண்டிருந்தன. அலுவலகமும் அதைத் துரத்தும் அன்றாடங்களும் நினைவில் வந்து மறைந்தது. பாதை ஒன்றரை அடி அகலமே இருந்தது. இடக்கையில் கழி ஊன்றி மலையேறிக் கொண்டிருந்தேன். திருப்பத்தில் எதிர்பாராமல் சில குதிரைகள் எதிர்வந்துவிட்டன. குதிரைகளை வழிநடத்துபவர் அந்நிரைக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். முன்னால் நகர வழியில்லை. பின்னால் நகர்ந்தால் பள்ளத்தாக்கை நோக்கி இறங்கும் சரிவு. வேறு வழியின்றி பாறையில் தொடுக்கி நின்றபோது, பொதிசுமந்து வந்த குதிரை நேராக என்னை நோக்கி வந்தது. அதிர்ச்சியில் உறைந்து போய் வேறொன்றும் தோன்றவில்லை. குதிரை தன் விலங்குணர்வில் நிலையுணர்ந்து சற்று சரிவில் கால்பதித்து என்னைக் கடந்து சென்றது. பின்வந்த அத்தனை குதிரைகளும் முட்டுவது போல முகம் வரை நெருங்கிவிட்டு பின்னர் அதையே செய்தன. மூலாதாரத்திலிருந்து அனைத்தும் நடுங்கி விட்டது. தாளமுடியாத திரைப்படத்தின் இடையில் வரும் சுகமான ராஜா பாடல் போல படபடப்பை அடக்கி மனதை அமைதிப்படுத்த மீண்டும் ஒரு சிற்றருவி; அதிலிருந்து வழிந்த சிற்றோடையைக் கடக்க சிறு மரங்களால் ஆன பாலம். தகிடததிமி என சலங்கை ஒலி கமல் போல கைகால் சமப்படுத்தி நடனமிட்டுத் தாண்ட வேண்டியிருந்தது. முற்றிலும் நிழலில் நடந்ததனால் குளிர் எடை கொண்டிருந்தது. ஆனால் குளிராடையை எடுத்து அணியும் தெம்பு இல்லை. சில அடிகள் தொலைவில் அவ்வப்போது குழுவில் யாரேனும் தென்படுவார்கள். இன்னமும் பின்தங்கிவிடவில்லை என நம்பிக்கை எழும். முன்னர் விழியறியாத ஆயிரமாயிரம் காட்சிகள் - பெயரறியா சிறுமலர்கள், பறவைகள், சரேலனப் பாயந்திறங்கும் சிற்றாறுகள் என வழியெங்கும் நிறைந்து இருப்பினும், ஒவ்வொரு அடியும் விழி தவறாத கவனமும் ஊன்றுதலும் கோரியது மலை.இருந்தாலும் அலைபாய்ந்தன விழிகள். தன் முழு ஆயுளைக் கழித்துவிட்ட பெருமரமொன்றின் அடிமரம் குகையென உள்ளே ஏதுமின்றி ஒழிந்து நின்றது. அப்பால் நெடு நிழலென அதன் மேல் பாதி நதி நோக்கி விழுந்து கிடந்தது. பாதை முடிவே இல்லாதது போல நீண்டு கொண்டே சென்றது. பதின்மூன்று கிலோமீட்டரை இவ்வளவு நீளமாக அதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு படிக்கும் ஏறவேண்டிய முழநீளத்தை கணக்கிட மறந்துவிட்டார்கள் போலும். கடைசி இரண்டு கிலோமீட்டர் தொலைவை இரண்டு மணிநேரம் நடந்து கடந்தேன். உடன் வந்த மலையேற்றக் குழு ஒருங்கிணைப்பாளர் அர்ஜன் சில நிமிடங்கள் எனது பையைத் தான் சுமந்து கொண்டு வந்ததோடு மலைச் சிகரத்தை அடையும் வரை என் வேகத்தோடு உடன் வந்தார். அர்ஜன் உதவியோடுதான் இறுதிச்சுற்று சாத்தியமாயிற்று.


(மேலும்)
Comentários


bottom of page