top of page

எனது இலங்கைச்‌ செலவு - திரு.வி.க

Updated: Oct 31, 2023

கொழும்பு இந்திய வாலிபர்‌ சங்கத்தின் அழைப்பின் பெயரில் 1926ல் திரு.வி.க இலங்கை பயணம் செய்தார், 27-08-26ல் அவர் இயற்றிய பயணக்கட்டுரை இது.

(மலைபாறையில் வளைந்த துவாரம் வழியாக செல்லும் ரயில் பாதைகள், 1875-76 இல் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டின் வருகையின் போது எடுக்கப்பட்டது - நன்றி :RCT.UK)


"புகைவண்டி அப்‌பசுமை நிலத்தில்‌ பறந்தோடுவதை நோக்குழி, அது பச்சை மரகத மலையைக்‌ கிழித்தோடும்‌ அம்பெனத்‌ தோன்றுகிறது"

இலங்கைச்‌ செலவு என்னுந் தலைப்பை நோக்கியதும்‌ சிலர்‌ இலங்கைக்கு சென்று திரும்பியதற்கு நேர்ந்த செலவு போலும்‌ என்று நினைக்கலாம்‌. ஈண்டுச்‌ 'செலவு' என்னுஞ்‌ சொல்லைப்‌ பொருட்செல வென்னும்‌ பொருளில்‌ பெய்தேனில்லை ; தரை-நீர்ச்‌ செலவு என்னும்‌ பொருளில்‌ அச்‌சொல்லைப்‌ பெய்தேன்‌. இந்நாளில்‌, செலவு என்னுஞ்‌ சொற்குப்‌ பதிலாகப்‌ பெரிதும்‌ 'யாத்திரை' என்னுஞ்‌ சொல்‌ ஆட்சி பெற்றிருக்கிறது. பண்டைத்‌ தமிழ்‌ நூல்களில்‌ செலவு என்னுஞ்‌ சொல்லே ஆட்சி பெற்றிருத்தல்‌ காணலாம்‌. "செங்‌ கோன்‌ தரைச்‌ செலவு” என்று பெயர்‌ தாங்கிய ஒரு தமிழ்‌ நூலுண்மையும்‌ கவனிக்கற்பாலது.


எனது இலங்கைச் செலவுவென்னும் இக்கட்டுரைக்கண் எனது புறப்பாடு சேர்க்கை, இருக்கை, வரவேற்பு முதலியவற்றை முறை முறையாக தொகுத்து கூறப் புகுகிறேனில்லை. இலங்கைச் செலவில் யான் கண்ட தோற்றங்களுள் சிலவற்றை ஈண்டுக் கிளந்து கூறவேண்டுமென்பது எனது உள்ளக்கிடக்கை, அவைகளின்றும் புலனாகும் சில நுண்மைகளும் உண்மைகளும் நேயர்கட்கு பயன்படும் என்னும் நோக்கோடு, சுருங்கச் சொல்லல் என்னும் வரம்பு வழி நின்று, இக்கட்டுரை வரைவான் புகுகிறேன்.


முதலாவது குறிக்கத்தக்கன இரண்டு, ஒன்று மண்டபம் என்னுமிடத்தில் இலங்கை நோக்கிச் செல்வோர்க்கு இலங்கை அரசினர்கோலியுள்ள கட்டுப்பாடு ; மற்றொன்று கப்பலில் சுங்க காவலர் கட்டுப்பாடு, இவைகளை நோக்குழி, முன்னை நாளில் இலங்கை போதருவோரைத் தகைய நிருவப்பெற்ற காப்புகளைக் கூறும் இராமாயணப் பகுதி நினைவிற்கு வந்தது. இலங்கைத் தெய்வத்தைக் காண்டற்கு முன்னர், நந்தி வழிபடும் களிற்றுக் கடவுள் வழிபாடும் செய்யவேண்டும் போலும் என்றும் எண்ணினேன். மண்டபத்தில் எனக்கும் என்னுடன் போந்த நண்பருக்கும் எத்தகை மறியலும் நிகழாதொழிந்தது. அரசினர் சீட்டும் பிறவும் எங்களை அழைத்தோர் வாயிலாக நாங்கள் பெற்றிருந்தமையான், எங்கட்கு எத்தகைய மறியலும் நேரவில்லை. அச்சீட்டுப் பெறாதார் பட்ட பாடு சொல்லுந் தகையதன்று. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பில் வீற்றிருப் போர்களை டாக்டர்கள் நேரே போந்து சோதிக்கிறார்கள். அரசினர் சீட்டுப் பெறாத முதலிரண்டு வகுப்பினரும் 'காவலில்' ஒரு நாளிருந்து செலுத்தல் வேண்டுமாம். அரசினர் உரிமை பெட்ரா சிலர் தம்முடன் போந்த வேலையாட்களை விடுத்தேகலும் நேர்கிறது. மூன்றாம் வகுப்பில் வருவோர் நிலை சாலவும் இரங்கத்தக்கது. அன்னார் அவண் ஆறுநாள் தங்கல் வேண்டுமாம். சிற்சில மாறுதல்கள் டாக்டர்கள் விருப்பதைப் பெறுத்திருக்கின்றன. என் பார்வையில் பட்ட டாக்டர்கள் அன்புடையவர்களாகவே காணப்பட்டார்கள். அவர்கள் என் செய்வார்கள் ! கட்டுப்பாட்டிற் கிணங்கியன்றே அன்னார் நடத்தல் வேண்டும் ?

( சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு வரை இயக்கப்பட்டிருந்த ரயில் வழி தடம், ராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து தலைமன்னார் வரை கப்பலில் சென்று அங்கிருந்து மீண்டும் ரயிலில் பயணம் செய்து கொழும்பை அடையவேண்டும் )


எப்பொழுதோ பிளேக் நோய் இந்தியாவினின்று இலங்கைக்கு குடியேறிற்றாம். அதைத் தகையவேண்டி இலங்கை அரசினர் மண்டபத்தில் சில ஏற்பாடுகள் செய்துள்ளனர். பிரயாணிகள் குறிப்பிட்ட நாள்வரை வதிதற்குப்பாந்த நிலையங்களும், பிறவும் ஒழுங்காக அமைக்கப் பெற்றிருக்கின்றன. சேய்த்தே ஒதுங்கி அந்நிலையங்களை நோக்குழிச் சிறை நினைவு தோன்றாமற் போகாத. சிறைக்கூடத்துக்குச் செல்வது போலவே மக்கள் அவ்வெல்லைக்குள் செல்வார்களென்று யான் கருதுகிறேன். மூன்றாவது வகுப்புப் பிராயணத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை ! அந்நரகத்திடைப் பல்லாற்றாலும் வருந்தி வரும் மக்களின் காட்சி நோயுற்றோர் காட்சியை வழங்கும். அவர்களை ஆறு நாள் ஓரிடத்தில் அடைத்து, அவரவர் இயல்புக்கு மாறுபட்ட உணவூட்டி வருதலால், அவர்கள் உடல் நலன் குன்றுதல் திண்ணம். பிளேக் மலிவுற்ற ஒருபோழ்து செய்யப் பெற்ற ஏற்பாட்டுவழியை, எப்பொழுது தொடர்ந்து நிற்றல் மறுக்கத்தக்கது, அக்கட்டுப்பாடு, சிலரை அச்சுறுத்தி இலங்கை மங்கைமீது வெறுப்புற்றுத் திரும்பவுஞ் செய்ய்யும், பெரும் பொருள் செலவழித்துச் செய்த ஏற்பாடுகளை நிறுத்தலும் குலைத்தலும் கூடா என்பது இலங்கை அரசினர் எண்ணமோ என்னவோ தெரியவில்லை. இலங்கையை நோய்வாய்னின்றும் காக்கச் செய்யப்படும் முயற்சி போற்றற்குறியதே. ஆனால் காரணமின்றி எப்பொழுதும் பிரயாணிகளை அல்லற்படுத்தல் அறமன்று.


இத்தடையைக் கந்ததும் என்னுடன் போந்த அன்பர் குமாரசாமியாருக்குப் புன்முறுவல் அரும்பிற்று; முகமும் மலர்ந்தது, பின்னர்த் தனுஷ்கோடித் துறையில் இழிந்து ஆண்டிருந்த கலத்தில் இவர்ந்தோம்."மயக்கம்" "வாந்தி" என்னும் நினைவு அன்பார் குமாரசாமியார் உள்ளத்தில் தோய்ந்து பருமையடைந்து, அவரைப் படுக்கையில் கிளத்தி விட்டது. எண்ணம் என்ன தான் செய்யாது ? அன்று கப்பலுக்குற்ற ஊறல், அது தவழ்ந்தது என்றோ சொல்வேன். "பஞ்சாப் மெயில் போல" பறக்குங் குமாரசாமியாரே ! கப்பலில் தவழ்தல் பிடியாது கண்மூடிக்கொண்டீர் போலும் " என்று யான் அவரைக் கேட்டுக் கேட்டு நகைபாடலானேன். எனக்கு எத்திற மயக்கமும் உறவில்லை. அந்திவான் அழகும் நீலக்கடல் வனப்பும் பெருவிருந்து அளித்து வந்தன. கப்பலில் நம்மவர்கள் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்புகளில் வீற்றிந்தாலும், அவர்களுள் பெரும்பான்மையோர் ஒழுங்கின்றி நடக்கிறார். அவர் இரைந்து, விரைந்து, முனிந்து பேசுவதும், வெற்றிலை பாக்கை மென்று மென்று துப்புவதும், வழித்துறையின்றித் துயில்வதும், முறையின்றி யுண்பதும் வெறுக்கத்தக்கன. ஐரோப்பியர்கள் அவ்வலங்கோலங்களை கண்டும் காணாமலிருந்ததை இடை இடையே யான் கவனித்து கொண்டே சென்றேன், இரண்டு மணி நேரத்துள் தலைமன்னார் துறை நண்ண வேண்டிய கலம், அன்று அத்துறை நண்ண ஏறக்குறைய நான்கு மணி நேரமாயிற்று. துறை நண்ணியதும் கலத்தினின்றும் உடனே இரங்கல் இயலவில்லை. சுங்க காவலர் கூட்டங் கூட்டமாக ஈண்டினர். அன்னார் வழி நெடுக வாளாகிடந்தது, இறங்கும் வேளையில் பிரயாணிகளை மறிப்பது, காலா தூதர் காட்சி வழங்குவது போலிருந்து. அந்நிலையில் பொறுமையாளரும் பொறுமையிழப்பர். இலங்கை அரசினார்க்கும் இந்த அரசினார்க்கும் ஏற்பட்டுள்ள நீர் எல்லையை யொட்டி சோதனை செய்யப்படுகிறது போலும். எவ்வேறுபாடு எவ்வாறிருப்பினும், சோர்ந்து வரும் பிரயாணிகளைக் காக்கச்செய்வது அறிவுடையமையாகாது. நடுக்கடலில் கப்பல் உழுது செல்லும் போது, சோதனை முடித்தல், காலக் கடவுளை உற்றவழியில் வழிபடுவதாகும்.


( எழும்பூர்-மண்டபம் வரை ரயில், தனுஷ்கோடி-தலைமன்னார் வரை படகு, தலைமன்னார்-கொழும்பு வரை ரயில் மூன்று பயணத்திற்கும் சேர்த்து ஒரே பயணசீட்டு, 1975 இல் வழங்கப்பட்ட பயணசீட்டு )


கப்பலினின்றும்‌ இறங்கி, இலங்கைப்‌ புகைவண்டியில்‌ இரண்டாம் வகுப்பில் எற முயன்றோம், முயன்றோம், இரண்டாம் வகுப்பில் இடமே இல்லை. இரண்டாம் வகுப்பு சீட்டை முதல் வகுப்பு சீட்டாக மாற்ற எண்ணி முதல் வகுப்பிடங்களை பார்த்தோம்; அவைகளிலும் மக்களீட்டம் செறிந்திருத்தல் கண்டோம், கண்டு விழித்தோம். ஓரன்பர் முயற்சியாழ் மூன்றாவது வகுப்பி, முதல் வகுப்புபோல எம் பொருட்டு ஒதுக்கப்பெற்றது. இலங்கைப் புகைவண்டி, அரசினரால் நடத்தப்பட்டுவது. சென்னை வண்டியின் மூன்றாம் வகுப்பு, இலங்கை அரசினர் இரண்டாம் வகுப்பைக்கடுத்துநிற்கிறது. இலங்கை அரசினர் இரண்டாம் வகுப்பில் சில ஒழுங்குகள் செய்வது நலம். நாங்கள் ஏறியது மூன்றாவதாக இருந்தாலும் மக்கள் நெருக்கமின்மையால், திருவின் தமக்கை எங்கட்கு மிக விரைவில் அருள் சுரந்தாள், நாங்கள் அவள் வயப்பட்டு விட்டோம்.


ஓரிடத்தில் பொழுதுபுலரும் வேளையில் "குருனாகல், குருனாகல்," என்னும் ஒலிகேட்டது. விழித்தெழுந்தோம். சிலர் எமது வண்டியிலேறினர். அவரது கோரை மீசையும், நெருப்பு விழியும், முரட்டுப் பார்வையும் அச்சமூட்டுவனவாகத் தோன்றின. அவர்கள் பேசும் மொழி ஒன்றும் விளங்கவில்லை. இடையிடையே சிலச்சில தமிழ்மொழிகள் தோன்றி மறைதல் கண்டோம். அவர்களோடு இரண்டோர் உரைப்பேசி பார்க்கலாமென பேசினேன். எனது கருத்தை அவர்கள் உணர்ந்து, 'இன்று வண்டி அதிக நேரம்' என்னுங் கருத்தை வெளியிட்டார்கள். அடுத்த நிலையத்தில் அவர்கள் இறங்கிவிட்டார்கள்.


( குருனாகல் நிலையத்தை ரயில் கடக்கும் பொது )


பொழுது செவ்வனே புலர்ந்தது, எங்கள் பேறே பேறு ! கப்பல் எங்கள் நலன் கருதியே ஊறுற்றது போலும் என்று நினைந்து நினைந்து கழிபேருவகை எய்தினோம். புகை வண்டி மெல்லப்போகாதா, ஊர்ந்து செல்லாதா, தவழாதா என்று கருதினேன். யான் ஒரு பாங்கர் அமர்ந்து தலை சாய்ந்துக் கண்களை நாலாப் பக்கமுஞ் சுழற்றி சுழற்றி, இயற்கை தேவியை உற்று நோக்கிச் சென்றேன். இலங்கையின் இயற்கை வனப்பென்னே என்னோ என்று மகிழ்ந்தேன் இலங்கை நந்தென்னாட்டோடு தொடர்பு கொண்டிந்தஞான்று, பழந்தமிழ் புலவர்கள் உறைந்த இடம் இதுவாயிருக்குமோ என்று எழுந்து நினைவு என்னை விட்டகலவில்லை.


வானத்தின் கருமையும், நானாபக்கமும் பசுமையுமன்றி வேறென்ன ஆண்டுள்ளன ?வழிநெடுக பசுமை உமிழும்‌ மலைகளின்‌ செறிவும்‌, சூழலும்‌, நிரையும்‌, அணியும்‌ உள்ளத்தைக்‌ கவர்கின்றன. முகிற்‌ குழாங்கள்‌ கொண்டால் கொண்டாலாக அசைந்தும் ஆடியும் ஓடியும் மலை முகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகை போல் பொலியுங்‌ காட்சியும்‌ அம்மலைகளின்‌ உடல்‌ புலனாகாவாறு பசும்பட்டுப்‌ போர்த்தாலெனப்‌ பொழில்கள்‌ துதைந்துள்ள அழகும்‌, புலன்களை ஒன்றச்‌ செய்கின்றன. மலையுச்சியினின்றும், தரைவரை நிரை நிரையாகச் சரிந்து செறிந்து நிற்கும் தெங்கின் பெருக்கும், அவ்வாறே தெங்கைவிட்டுப்‌ பிரியாது அணித்தே புடைசூழ்ந்து நிற்கும்‌ கமுகின்‌ உயர்வும்‌ அவைகளுடன்‌ நீக்கமின்றி வாழ்க்கைத்‌ துணையெனச்‌ சுற்றிச்‌ சுற்றிப்‌ பின்னிக்‌ இடக்கும்‌ கான்பரந்த செடிகொடிகளின்‌ ஈட்‌டமும்‌, வானுலகேறப்‌ பச்சை படாம்‌ விரித்த படிகளெனத்‌ திகழ்கின்றனவோ என்றும்‌ ஐயுறலாம்‌. புகைவண்டி அப்‌பசுமை நிலத்தில்‌ பறந்தோடுவதை நோக்குழி, அது பச்சை மரகத மலையைக்‌ கிழித்தோடும்‌ அம்பெனத்‌ தோன்றுகிறது. பசுமை காட்சியில்லாத இடனும்‌ உண்டோ ? கண்ணுக்கும்‌ மனத்துக்கும்‌ இனிமையூட்டும்‌ பசுமையின்‌ பெற்றியை என்‌ னென்‌ றுரைப்பேன்‌ !


புகைவண்டியின்‌ விரைவில்‌, இடையிடை யோடுஞ்‌ சிற்றருவிகளின்‌ தோற்றம்‌, பசிய வானில்‌ மின்னொளி தோன்றி மறைவது போலப்‌ புலப்படுகிறது. பச்சைப்‌ பசுங்கடலில்‌ சிறு சிறு தீவுகள்‌ நிலவுவதை மான, கூரை வேய்ந்த சிறு சிறு குடில்‌களின் ஈட்டமும் அவைகள் நடுவண்‌ ஆடவர்‌ மகளிர்‌ குழந்தைகள்‌ காளை மயில்‌ கன்றுகளென நிற்குங் கூட்டமும் இயற்கை யோடியைந்த இன்பமாகப்‌ பொலிகின்றன. ஆங்காங்கே சிற்சில இடங்களில்‌ தற்கால நாகரிகக்‌ கட்டிடங்களும்‌ புலனாகின்றன. அவைகளைக்‌ காணுந்தோறும்‌ காணுந்தோறும்‌ பொல்லா அரக்கர்‌ குழுவைப்‌ பார்ப்பதுபோன்ற நிகழ்ச்சி உள்ளத்துறாமற்‌ போகாது. கூரை வேய்ந்த வீடுகள்‌ இயற்கையோடியைந்து இன்பூட்டுவது போலப்‌ பெரும்பெரும்‌ மாடிகள்‌ இயற்கையோடியைந்து நிற்‌பினும்‌ இன்பூட்டுவதில்லை.


தென்னிலங்கையின் இயற்கையமிழ்தை ஒருவாறு பருகிக்கொண்டே சென்றேன். மெல்ல மெல்ல எனது அருமை இயற்கை அன்னையின் வடிவம் மறைந்து செயற்கை அரக்க வடிவங்கள் புலனாயின. "கொழும்பு நகரம் இதுதான்" என்று உடனிருந்தோர் சொற்றனர். தற்கால நகரங்களை நரகங்கள் என்றே எனது உள்ளங்கொள்வது வழக்கம். நரகக் கொடுமையை ஏன் ஈண்டுக் கூறிக் கெடுதல் வேண்டும் ? தற்கால நகர அமைப்புகள் பெரிதும் யாண்டு ஒரு தன்மையனவாயிருத்தல் இயல்பு. தண்புன லாடடிக்கொண்டிருந்த ஒருவனை ஈர்த்து, வெயிலுமிழும் எரியிடை நிறுத்தினால், அவன் எந்நிலை யுறுவனே.அந்நிலையை யானும் அன்று அவன் உற்றேன்.

(கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் கடலையும், தெங்கு மரங்ககளையும் ஒட்டி ஓடும் ரயில், 1971 இல் எடுக்கப்பட்ட படம்.)


இந்நிலையில்‌, வண்டி, குறித்த காலத்துக்கு இரண்டரை மணிநேரங்‌ கடந்து, நிலையம்‌ சேர்ந்தது. சேர்ந்ததும்‌, கொழும்பிலுள்ள "இந்திய வாலிபர்‌ சங்க” அடியவர்கள், ஆண்டுப்‌ போந்து, தென்னாடுடைய சிவனே போற்றி' என்‌று ஒருவர்‌ முழங்க, மற்றவர்‌, "எந்நாட்டவர்க்கும்‌ இறைவா போற்றி” என்று எதிரொலிபோல்‌ முழங்க, எங்களை வரவேற்றார்கள்‌. செயற்கை வெம்மையில்‌ வீழ்ந்து வருந்திக்கொண்டிருந்த எனதுள்ளம்‌ தமிற்மறைமீது ஓடிற்று. தென்னாட்டவர்க்குச்‌ சிவனாக விளங்குவோனே, எந்நாட்டவர்க்கும்‌ இறைவனாக விளங்குகிறான்‌' என்று எண்ணி எண்ணி, அம்மறை அருளிய மாணிக்க வாசகனாரை உள்ளத்தால்‌ போற்றிப்‌ போந்தேன்‌. எனது எளிய வாழ்வுக்கும்‌ எனது மனத்துக்கும்‌ இனியதாய்‌ வெளியில்‌ போந்துங்‌ கடற்காட்சி நல்கவல்லதா யுள்ள ஒர்‌ இன்ப நிலையத்தில்‌ வதியுமாறு அன்பர்கள்‌ என்னையும்‌ நண்பரையும்‌ விடுத்தார்கள்‌.


கொழும்பிற்‌ கணித்தாயுள்ள வெள்ளவத்தையில்‌ நாங்கள்‌ தங்கியிருந்தோம்‌. நாங்கள்‌ சென்ற காலம்‌ ஆடிவேல் விழாக்‌காலம்‌. கதிர்வேற்‌ பெருமான்‌ வெள்ளித்‌ தேர்மீது இவர்ந்து, கொழும்பினின்‌றும்‌ வெள்ளவத்தைக்கு எழுந்தருளி அடியவர்க்‌கருள் செய்கிறார்‌. அவ்விழாவில் கவனிக்கத்தக்கன பல உள. சிலவற்றை ஈண்டு குறிப்பிடுகிறேன். ஆங்கே தேர் புறப்படும் வேளையில் ஆடு பலியிடப்படுவதாகக் கேள்வியுற்றேன். இஃது அருள் வடிவினனான முருகக்கடவுளிடத்து அன்புடையார் நிகழ்த்துஞ் செயலன்று. கொலையிலா உளத்தில் கோயில் கொள்ளும் பெருமானின் தேர்ப்புறப்பாட்டின் போழ்து, உயிர்ப்பலியிடல் முற்றும் பொருந்தாத செயலாகும். வரும் ஆண்டில் அக்கொலைக் கொடுமை நிகழாதவாறு ஆண்டு வதியும் அன்பர்கள் காத்தல் வேண்டும்.


அவ்விழாவில்‌ முருகப்பெருமானைப்‌ போற்றாத குலத்தாரில்லை. எல்லாச்‌ சமயத்தாரும்‌ சாதியாரும்‌ காணிக்கை செலுத்தி நெற்றியில்‌ திருரீறணிந்து செல்கின்றனர்‌. “முருகக்‌ கடவுள்‌ தமிழ்க்கடவுள்‌" என்பது அவ்விழாவில்‌ நன்கு தெரிகிறது. பல சமயக்‌ கொள்கையுடைய தமிழ்‌ மக்கள்‌ அனைவரும்‌ முருகக்கடவுளை வழிபடுதல்‌ கவனிக்க தக்கது . நமது தென்‌னாட்டில்‌ வேறு மதம்‌ புகுந்த தமிழ்மக்கள்‌ முருகக்‌ கடவுளை வழிபடுகிறார்களில்லை. இலங்கைத்‌ தமிழ்‌ மக்கள்‌ முருகன்‌ வழிபாட்டில்‌ ஒன்றி நிற்கிறார்கள்‌.


கொழும்பு இந்திய வாலிபர்‌ சங்கத்‌தின்‌ ஆண்டுவிழாவில்‌ தலைமை வகிக்கவே யான்‌ அழைக்கப்பட்டேன்‌. அவ்‌விழா அழகியதொரு கொட்டகையில்‌ நடைபெற்றது. எனக்கு சங்‌க சார்பாக வழங்கப்பெற்ற நன்மொழியில்‌ சங்கத்தார்‌ என்‌ மாட்டுள்ள முழு அன்பையும்‌ காட்டியிருக்கிறார்‌. அவர்க்கு நன்றி கூறுமுகத்தான்‌, அந்‌ நன்மொழியைச்‌ தழுவியே எனது முன்னுரைக்‌ கடனாற்றினேன்‌. அம்‌ முன்னுரைக்கண்‌ இந்தியாவில்‌ பல குறைகள்‌ இருக்கின்றன என்றும்‌ அவைகளில் சிறந்து விளங்குவன ஐந்து என்றும், அவை


(1) பெண்ணை அடிமைப்‌ படுத்தியிருத்தல்‌,

(2) மக்களுள்‌ பிறப்‌பால்‌ உயர்வு தாழ்வு கொண்டமை,

(3) பிறப்பில்‌ தீண்டாமை வகுத்தது,

(4) கருத்து வேற்றுமைக்கு மதிப்புக்‌ கொடாமை,

(5) பொறாமை என்பன என்றும்‌ பேசி, அவைகளைப்‌ பீடிகையாகக்‌ கொண்டு, சுமார்‌ ஒன்றரை மணிநேரம்‌ சொற்‌ பொழிவு நிகழ்த்தினேன்‌.


இந்திய இளைஞர்‌ உலகில் அவ்வைம் பெருங்‌ குறைகள்‌ இருத்தல்‌ ஆகாதென்றும்‌, அக்குறை பாடுகள்‌ ,உள்‌ளமட்டும்‌ இந்தியா உரிமைபெறல்‌ அரிதென்றும்‌, அவைகளை அன்பு வழி நின்று களைய இளைஞர்கள்‌ முயலல்‌ வேண்டுமென்றும்‌ இளைஞர்களுக்கு விண்ணப்பஞ்‌ செய்து கொண்டேன்‌.


பின்னே இரண்டு நாள் பல அறிஞரால் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன. சில சொற்பொழிவுகள் காலத்துக்குரியனவாயிருந்தன. ஆண்டுவிழா காலங்களில் கூடும் அவைகளில் புராண கதை பிரசாரங்களின் இன்றியமையாமை எனக்கு விளங்கவில்லை. புராணங்களை பற்றி எனக்கு கெட்ட எண்ணமில்லை. புராணங்களில் அறியக் கிடக்கும் நுட்பங்கள் பல உண்டு. அந் நுட்பங்களை எடுத்துப் பேசவதனால் பயன் விளைதல் ஒருதலை. வெறுங் கதைகளை சொல்வதால் வாழ்விற்கு எவ்விதப் பயனும் விளையாது. புராணக் கதை விரும்பப்படின் அதற்குக் கால எல்லை எற்றுக்கு? அவைத் தலைவர் எற்றுக்கு? அதற்கென ஒரு வைதிக இடங்கோலிப் புராணிகரை விட்டுவிட்டால் அவர் நவரசாத்தோடு கதை சொல்வர். காலவரை குறிப்பிட்டுப் புராணிகரைப் பேசவிடுத்தால் அவருக்கும் வருத்தம்; தலைவருக்கும் இடுக்கண். தமிழ் நாட்டில் சில கழக விழாக்களில் வாலி வடகியும் சூரசம்மாரமுங் கேட்டுத் தலைமயக்கத்தால் வருந்தியது முண்டு . இந்திய வாலிப சங்கத்தில் அவ்வளவு புராணம் புகவில்லை யாயினும், சிறிதும் புகாமலில்லை என்று குறிப்பிடாமற் செல்லல் முடியவில்லை. சொற்பொழிவுகளை தழுவி இரண்டரை நாள் சுமார் மூன்று மணிநேரம் முடிவுரை கூறினேன்.


அம்முடிவுரையை கேட்ட சில அறிஞர், யான் தங்கியிருந்த இடம் போந்து பல திற ஐயப்பாடுகளை எழுப்பினர். மூன்று மணி நேரம் பேசியது களைப்பும் இளைப்பும் அவ்வறிஞரோடு பேசப் புகுந்ததும், ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போல பறந்தோடின. அறிஞரோடு உரையாடுவதில் எனக்குள்ள வேட்கைக்கு ஓர்அளவில்லை. வடமொழி மறைகளைப் பற்றியும் தென்மொழி மறைகளை பற்றியும் இல்லறத்தை பற்றியும் யான் கொண்டுள்ள கருத்தை குறித்து உரையாடல் எழுந்த வேளையில், மணியாய் விட்டது; மணியாய் விட்டது; எனும் அரவம் நானாபக்களிலும் கிளம்பிற்று. அதை குறிப்பால் உணர்ந்த அறிஞர்கள், விடை பெற்றுச் சென்றார்கள். ஆண்டு விழாக்களில், விழா நாடாகும் நேரம் போக மற்ற நேரத்தில் ஒருபொது, குறிப்பிட்ட அறிஞ்ரோடு உரையாடல் என்பதும் நிகழ்ச்சி முறைகளில் சேர்த்தல் நல்லது. இத்தகைய ஏற்பாடு செய்யுமாறு விழா நடத்துவோரை கேட்டு கொள்கிறேன்.


(1930 களில் கொழும்பு சாலை)


கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இது போழ்ந்து என் தோழர் சங்கை கிங்ஸ்பரி அவர்கள் தமிழாசிரியராயிருக்கிறார். அவர் விரும்பியவாறு அக்கல்லூரியில் 'தமிழ் கல்வி' 'தொண்டு' என்னுஞ் சொற்பொழிவுகள் முறையே அடியேனாலும் என்னுடன் போந்த நண்பர் குமாரசாமியாராலும் நிகழ்த்தப்பெற்றன. அக்கல்லூரி மாணக்கர் நிறம் தவிர ஏனையவெல்லாம் மேல் நாட்டு மயமாயிருந்தன. குழந்தைகள் என்ன சொல்வார்கள் ! தாய் தந்தையர்கள் பிழைபாடு ! கொழும்புக்கணுள்ள தமிழர்களிடைப் புகுந்துள்ள மேல் நாட்டு நாகரிகம, இந்தியாவில் எந்தப் பகுதியிலுமில்லை என்று சொல்வது மிகையாகாது. ஆங்கிலம் பயின்ற பெண்மணிகள் நமது நாட்டு ஆங்கிலோ இந்தியர்களைப்போல இருக்கிறார்கள். குழந்தைகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே உளங்கொள்கிறார்கள். இவ்வழியில் வளர்க்கப்படும் பிள்ளைகள் நிலையைப்பற்றி விரித்து கூறவேண்டுவதில்லை. இவர்கள் புறக்கோலத்தை பற்றிய கவலைகள் எனக்கில்லை, இவரகத்தே தமிழ் தேன் பிலிற்ற வேண்டுமென்பது எனது விருப்பம். இன்னுஞ் சின்னாளில் கொழும்பிலுள்ள சில தமிழர்கள் தாய் மொழியாக கொள்வார்கள் போலும். மற்றொருபால் தமிழ் கிளர்ச்சியும் தமிழர் இயக்கமும் முருகி எழுந்துவாலால் , பெருங்கவலைக்கு இடமிராது தென்று நம்புகிறேன். ஆண்டுள்ள தமிழர்கள் தமிழை வளர்க்கப் பெரு முயற்சி செய்வார்களாக.


கொழும்பில் விவேகானந்தர் பெயரால் ஒருசபை நிருவப் பெற்றுள்ளது. அச்சபை வாயிலாக தமிழும் சமய உணர்வும் ஆண்டுப்பாவிவருதல் கண்டு சிறிது மகிழ்வெய்தினேன். அச்சபை நேயர்களிற் பெரும்பான்மையோர் மேல் நாட்டு கோலத்தவராக காணப்பெரினும், அன்னார் உள்ளம் தமிழின் மீதும் சமயத்தின் மீதும் பதிந்துகிடக்கிறது.புறக்கோலம் ஏத்தன்மையாதாயினுமாக எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருளன்றே என்று நமது தெய்வ சேக்கிழாரே கூறிப்போந்தார். புறக்கோலங்கள் காலத்துக்கேற்ற வண்ணம் மாறுபட்டுக் கொண்டே போகும். என்னுடன் போந்த அன்பர் குமராசாமியாருக்கு ஐரோப்பிய உடைக்கோலம் முதலில் மருட்சியூட்டிற்று. பின்னே நாளடைவில் என் கருத்துடன் அவருங் கலந்து கொண்டார். விவேகானந்தர் சபையிலும் எம்மால் சொற்பொழிவுகள் நிகழ்ந்தப்பெற்றன.


வெள்ளவத்தையில் யான் நண்பருடன் தங்கியிருந்த போழ்து, பலமுறை சொற்பொழிவிற்கும் பிறவற்றிற்கும் அங்கும் இங்கும் போதல் நேர்ந்தது. அவ்வப்பொழுது கண்ணுற்ற பொருள்கள் பற்பல. அவைகள் பெரிதும் எல்லா நகரங்களிலும் காணப் பெறுவேன. கொழும்பில் பெரிதும் தமிழ்மக்களும் சிங்களவர்களும் வாழ்கிறார்கள்.இலங்கை வாசிகளில் பெரும்பான்மையோர் சிங்களவர்களே. அவருள்‌ ஆங்கிலம்‌ பயின்ற ஆண்மக்களும்‌ பெண்மக்களும்‌ ஐரோப்பிய நடை உடை பாவனைககக்‌ கொண்டிருத்தலால்‌ அவர்களைப்‌ பற்றி ஒன்றுங்‌ கூறவேண்டுவதில்லை. ஐரோப்பிய நாகரிகத்தில்‌ தோயாத சிங்களவ ஆண்மகன்‌ மிக வலியனாய்‌, கூரிய நோக்குடையனாய்க்‌ காணப்படுகிறான்‌. அவன்‌ முகத்தில்‌ சாந்தம்‌ காணோம்‌. அவன்‌ எளிய உடையே அணிகிறான்‌. பலர்‌ மயிரைக்‌கோலிக்கட்டி, வளைந்த தந்தச்‌ சப்பைச்‌ செருகியிருக்‌கின்றனர்‌. பெண்மகள்‌ மிகத்‌ திண்மையாயிருக்கிறாள்‌. அறிவு விளக்கம்‌ புலப்படவில்லை. அவள்‌ தன்‌ அரையில்‌ நான்கு முழத்‌ துண்டையும்‌, மார்பு மறைய ஒரு கஞ்சுகத்தையும்‌ அணிந்திருக்கறாள்‌. மற்ற மேலாடை ஒன்றுமில்லை. பின்‌னின்று பார்த்தால்‌ ஆண்மகனுக்கும்‌ பெண்‌ மகளுக்கும் வேற்‌றுமை தோன்றாது. சிங்களவர்கள், வங்காளத்தார் வழி வழி வந்தவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.அவர்களிடையில் கொலை அதிகம் என்று கேள்வியுற்றேன். அவர்கள் சமயம் பௌத்தமாம்.சமயத்துக்கும் அவர்கள் வாழ்விற்கும் பெரிதுந் தொடர்பில்லை. குருமார்களிடத்தில் அவர்கட்கு அன்புண்டாம்.


(வெள்ளவத்தை கால்வாய், 1875 இல் ஆங்கிலேயரால் வெள்ள நீர் வடிவதற்காக உருவாக்கப்பட்டது)


கொழும்பினின்றும்‌ கண்டிக்குப்‌ புறப்பட்டோம்‌. எம்மை வழி கூட்டி அனுப்பப்‌ போந்த அன்பர்களோடு நாங்‌கள்‌ பேசிக்கொண்டிருந்தமையால்‌, எங்கட்குச்‌ செயற்கை வெம்‌மை புலனாகாமலிருந்தது. வண்டி புறப்பட்டதும்‌ அவ் வெம்‌மைக்‌ கொடுமை வருத்தத்‌ தொடங்கிற்று. சிறிது நேரத்துக்குள்‌ இயற்கையன்னை காட்சி வழங்கினாள்‌. அவ்வழியின்‌ இயற்கை வளத்தை என்னென்று சொல்வேன்‌ ! ஸ்ரீநகர்‌, டார்ஜிலிங்‌, ஆல்ப்ஸ்‌” முதலிய இடங்களிலுள்ள இயற்கை வளங்களைப்‌ பற்றிக்‌ கேள்வியுற்றிருக்கிறேன்‌ ; நூல்கள்‌ வாயிலாகப்‌ படித்து மிருக்கறேன்‌ ; அவைகளை நேரே கண்டதில்லை. கண்டிக்குச்‌ செல்லும்‌ வழிநெடுக இயற்கையன்னையின்‌ திருவோலக்கமன்றி வேறென்ன இருக்கறது? எங்கணும்‌ மலைகள்‌, மலைத்தொடர்கள்‌, மலைச்‌ சூழல்கள்‌ ; எங்கணுஞ்‌ சோலைகள்‌- சாலைகள்‌ -.செடிகள்‌- கொடிகள்‌ - பைங்கூழ்கள்‌ ; எங்கணும்‌ அருவிகள்‌ - ஆறுகள்‌ - நீர்‌ நிலைகள்‌-இவை யாவும்‌ ஒன்றோ டொன்று கலந்து அளிக்குங்‌ காட்சியன்றோ கடவுள் காட்சி? நூற்றுக்‌ கணக்கான குற்றாலங்கள்‌-நூற்றுக்‌ கணக்கான பாபநாசங்கள்‌ - ஆண்டுள்ளன.


மலைகள்‌ எத்துணை எத்துணை விதமாகக்‌ காட்சி வழங்குகின்றன, சில இடங்களில்‌ மலைகள்‌ படிப்படியாக இழிந்து இடைவெளியிட்டு இவர்ந்து நிற்குந் தோற்றம்‌ இயற்கை ஊசல்போல விளங்கிற்று. சில இடங்களில்‌ மலைகள்‌ சிங்கம்‌ எழுந்து நின்று பாயவருக்‌ தோற்றத்தை வழங்கக்கொண்டு நிற்கின்றன. சில இடங்களில்‌ அவைகள் செய்கரைபோல்‌ நேர்மையாக நிற்கின்றன. பசுமை நிலவாத மலைப்பாங்கரே கானோம்‌. தெங்கும்‌ கமுகும்‌ ரப்பர்‌ மரங்களும்‌ ஒரு பெரும்‌ பசுங்கடல்‌ பொங்கிவருதல்‌ போல்‌ காணப்படுகின்றன. சில இடங்களில்‌ நாலாப்‌ பக்கங்களிலும்‌ மலைசூழ்ந்து நிற்ப, அவைகளினின்றும்‌ பொழியும்‌ அருவி அவைகளினடியில்‌ நீரரண்‌ என ஓடித்‌ திகழ, நடுவண்‌ பச்சைப்‌ பசேலென வான்பயிர்‌ தலையசைத்து நிற்கும்‌ அழகைக்‌ கண்டு கண்டு உவந்தேன்‌. பசிய மலைச்‌ சோலைகளைப்‌ பார்க்குந்தோறும்‌ பார்க்குந்தோறும்‌ இயற்கை இன்பவாழ்வு உள்ளத்தில்‌ தோற்றமுறா நிற்கும்‌. இப்பொழுது ஐரோப்பியத்‌ தோட்டக்‌ காரகளும் மற்றவர்களும் இப்‌பசுங்‌ காடுகளைப்‌ பண்படுத்திப்‌ பொருளீட்டுந் துறை கண்டிருக்கின்றனர்‌. நம்‌ முன்னோர்‌கள் அவ்‌வியற்கை நிலையங்களிடை வாழ்ந்து, இயற்கையின்‌ வாயிலாக இறைவனைக்‌ காணும்‌ எளிய வாழ்வு நடாத்தினார்‌கள். பசுமைபொங்கும்‌ மலைகளைப்‌ பார்த்து கொண்டே கண்டி சேர்ந்‌தோம்‌. நிலையத்தருகே கண்டித்‌ தமிழ்மக்கள்‌ அன்போடு எம்மை வரவேற்றார்கள்‌. நாங்கள்‌ 'தமிழக' நிலையத்தில்‌ தங்கியிருந்தோம்‌. ஆங்குச்‌ 'சைவம்‌, 'தமிழ்‌ வரலாறு' என்னும்‌ இரண்டு சொற்பொழிவுகள்‌ நடைபெற்றன. அங்குள்ள தமிழர்‌, தமிழ் மனத்தோடு எங்களோடு உறவாடினர்‌கள் என்று சுருங்கச்‌ சொல்லி மேலே செல்கிறேன்‌.

(கண்டி ஏரியின் காட்சி, 1940 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்)


கண்டி, கண்டின்புற வேண்டிய இடங்களில்‌ ஓன்று. கண்‌டியை இயற்கைக்குடில்‌ என்று கூறுவது மிகையாகாது. கண்டியிலுள்ள விவசாயக்‌ கல்லூரி, தோட்டம்‌ முதலியவற்றைக்‌ கண்டோம்‌. அத்தோட்ட அழகை வருணிக்கப்புகுந்தால்‌ இக்‌ கட்டுரை வருணனை யுரையாகவே முடியும்‌. இயற்கை அரசியின்‌ உறையுளெல்லாங்‌ கண்டு, பின்னர்ப்‌ பெளத்தமடம்‌, கலாசாலை கோயில்‌ முதலிய அறநிலையங்களுக்குச்‌ சென்றோம்‌. மடத்தில்‌ பெரிய பெளத்த குருவைப்‌ பார்த்து உரையாடப்‌ போனேன்‌. அவர்க்குத்‌ தமிழுந்‌ தெரியவில்லை, ஆங்கிலமுந்‌ தெரியவில்லை. அவர் ஆணைப்படி புத்த வித்தியாலயம்‌ போந்து, ஆண்டுள்ள ஓர்‌ ஐரோப்பியர்பால்‌ உரையாடினேன்‌. அவர்‌ பெளத்த நூல்களில்‌ பேராராய்ச்சி யுடையவர்‌ என்பது, அவரது அன்பார்ந்த பேச்சால்‌ தெரியவந்தது. சம்பாஷணையால் யாங்கள் ஒருமை முடிவே பெற்றோம்‌.


(கண்டியில் உள்ள புத்தரின் நினைவு பொருள்களின் முன் பிக்ஷுக்கள் கூடி நின்று பிராதிக்கும் காட்சி )


புத்த பிக்க்ஷுக்கள் - பொங்கிகள்-சந்நியாசிகள் - கூட்டங் கூட்டமாகத் திரிகிறார்கள். கலாசாலையில் சிறு குழந்தைகள் சீவர ஆடை புனைந்து, சந்நியாசக்கோலந்தாங்கியிருப்பது கண்டேன். சந்நியாச வாழ்வு இயற்கைக்கு முரண்பட்டது என்பது அடிப்படையான கொள்கை. அக்கொள்கையுடைய அடியேன் கண்ணுக்கு அச்சந்நியாசக் கூட்டம் எவ்வாறு தோன்றியிருக்குமென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. நமது நாட்டுப் பண்டாரங்கட்கும் அச்சந்நியாசிகட்கும் வேற்றுமையில்லை.அருள்நெறி ஓம்ப வேண்டிய அவ்வறவோர்கள் விலாப்புடைக்கப் புலால் உண்கிறார்கள். பிறர் கொன்றதைத் தின்னலாம் என்று அவர் வாதமிடுகிறார்.சந்நியாசமும் புலாலுணவும் பௌத்த மதத்தின் பெருமைக்கு இடையூறாக நிற்கின்றன. இயற்கையின் வாழ்வை வெறுப்பது துறவொழுக்கமாகாது.


கண்டியின்‌ பலதிறக்‌ காட்சி கண்டு, அன்பர்கள்பால்‌ விடை பெற்று, யாழ்ப்பாணம்‌ நோக்கினோம்‌. இடையில் போல்காவளை என்னுமிடத்தில் சுமார் மூன்று மணி நேரம் தங்குதல் நேரந்தது. அவ்வூரின் எப்பகுதியில் சென்றாலும் தென்னைமரச் சோலைகளின் பெருக்கம் கண்பார்வையயுங் கடந்து ஒளிர்கிறது. தென்னைமாப் பெருக்குடையது என்னும் பொருளை அவ்வூர் பெயரே தாங்கி நிற்கிறதென்று ஆங்குள்ளோர் கூறினார். அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றோம்.


யாழ்ப்பாணத்தின்‌ இயற்கை வளம்‌ நமது தென்னாட்டு இயற்கை வளத்திற்கு அரண்‌ செய்வது. இலங்கையின்‌ மற்றப்‌ பகுதியின்‌ இயற்கை வளம்‌ யாழ்ப்பாணத்தில்‌ இல்லை. புகையிலைப்‌ பெருக்குக்‌ குறிக்கத்தக்கது. கொழும்பு வழியிலும்‌ கண்டி வழியிலும்‌ தெங்கின்‌ பசுமை கண்ணுக்கு விருந்தளித்தது. யாழ்ப்பாணத்‌ திலோ அத்‌ தென்னங்‌ கீற்றுகளின்‌ வேலிகள்‌ கண்ணைக்‌ கவர்ந்துநின்றன. யாழ்ப்பாணத்தில்‌ சொற்பொழிவுகள்‌ பல நிகழ்ந்தன. ஒரே நாள்‌ நான்கிடங்களில்‌ சொற்பொழிவு நிகழ்‌தலும்‌ நேர்ந்தது. பல கல்லூரிகளிலும்‌ சொற்பொழிவுகள்‌ நடைபெற்றன. கல்லூரிகளில்‌ எனதுள்ளத்தைக்‌ கவர்ந்தது ஸர்‌. பொன்னம்பலம்‌ இராமநாதன்‌ பெண்மக்கள்‌ கல்லூரி. அக்‌கல்லூரியைப்‌ பெருஞ்‌சிதம்பரமாக மனத்தால்‌ தொழுதேன்‌. தமிழும்‌ சைவமும்‌ ஆண்டிருந்து புத்துயிர்‌ பெறும்‌ என்னும்‌ உறுதியும்‌ எனக்குத்‌ தோன்றிற்று.


(இன்று பொன்னம்பலம்‌ இராமநாதன்‌ பெண்மக்கள்‌ கல்லூரி)


ஸ்ரீலஸ்ரீ நாவலர் பெருமான் உண்மையுழைப்பு, யாழ்ப்பாணத்தில் எவ்வாறு பரிணமித்திருகிறது என்பது நேரிற் காண்போர்க்கே இனிது விளங்கும். யாழ்ப்பாணக்‌ குடிமக்கள்‌ தமிழர்‌; வேளாளர்‌ ; சைவர்‌, அவர்‌ நமது தமிழ்‌ நாட்டினின்றும்‌ அவண்‌ குடிபுகுந்தவர்‌. அவருடன்‌ போந்த வேறு சிலருமிருக்கின்றனர்‌. தாய்‌ நாட்டின்‌ நினைவு தோன்ற ஆண்டுள்ள தமிழ்மக்கள்‌ சல இடங்களுக்குத்‌ திருநெல்வேலி, பட்டுக்கோட்டை முதலிய பெயர்களைச்‌ சூட்டியிருக்கிறார்கள்‌. யாழ்ப்பாணத்‌ தமிழ்மக்கள்‌ எங்கள்பால்‌ காட்டிய அன்பு என்றும்‌ மறக்கற்பாலதன்று. தென்னாட்டுத்‌ தமிழ்மக்களுக்கும்‌ தங்கட்கும்‌ இடையறத்‌ தொடர்பிருத்தல்‌ வேண்டுமென்று கூறாத அன்பர்களில்லை.


யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவர்கட்கும் சைவர்கட்கும் ஒரு வழியில் ஒற்றுமையும் மற்றொரு வழியில் ஒற்றுமை இன்மையும் வளர்ந்து வருகின்றன. சமயப் போருஞ் சில இடங்களில் கனன்று கொண்டிருக்கிறது. சைவசமயத்தின் சமரசத்தையும் அன்பு நிலையையும் அருள் நெஞ்சங் கொண்டு அறிவுறுத்தினால், ஆண்டுள்ள கிறிஸ்துவர்கள் பாதிரிமதத்தை விடுத்து, உண்மைகிறிஸ்துவை வழிபடத்தொடங்குவார்கள். கிறிஸ்துவின் போதனை, சைவ சமயம் அறிவுறுத்தும் அன்புப் பற்றியும் யான் குறிப்பிட்ட சில பொருள்கள் கிறிஸ்துவர்கட்குக் கழிபேருவகையூட்டின. உடுவிலிலுள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் 'காந்தியடிகள் சமயநிலை' என்பது பற்றிக் சிறிது நேரம் பேசுதல் நேர்ந்தது. அப்பேச்சு, கிறிஸ்துவர்களால் அன்புளத்தோடு செவிமடுக்கப் பட்டது. சமரசமும் அனுப்பும் பெருகப் பெறுக உலகில் சமயப்போர் அழியும் என்பது எனது உள்ளக் கிடக்கை.


யாழ்ப்பாண நகர் விடுத்துப் புறப்படும்போது, பருத்தித் துறை முதலிய இடங்களிலிருந்து போந்த அன்பர்கள் விருப்பத்துக்கு இணங்க நேராமை போனது குறித்து எனதுள்ளத்தெழுந்த வருத்தத்துக்கு ஓர் அளவில்லை. யாழ்ப்பாணத் தமிழ் மக்கட்கு எங்கள் வணக்கத்தைச் செலுத்தி இந்தியா நோக்கினோம்.


இன்னும் இலங்கையில் பார்க்கத் தக்க இடங்கள் பல உண்டு, அவைகளுள் சிறந்தன அனுராதபுரம், திருகோணமலை, திருக்கேதீச்சரம், கதிர்காமம் முதலியன. மீண்டும் இலங்கை செல்லத் திருவருள் கூட்டுமேல் அவ்விடங்களைக் காணும் பேரு பெறுவேன்.


இலங்கையில் குறிப்பிட்ட சில இடங்களில் செல்லவும், ஒல்லும் வகை இயன்ற தொண்டாற்றவும் காரணமாக இருந்து இந்தியவாலிபச் சங்கத்தார்க்கும், என் மாட்டுக் கெழுதகை நட்பும் உலுவலன்பும் கொண்டுள்ளவரும், தமிழ் அகமும் முகமுடையவருமாகிய திருமிகு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கட்கும் எனது அன்பார்ந்த நன்றி யறிதலைச் செலுத்தி அவர் நலன்கருதித் திருவருளை வாழ்த்துகிறேன். (20, 27-8-1926).


- திரு. வி. கலியாணசுந்தரனார்


(தமிழ் சோலை அல்லது கட்டுரை திரட்டு என்னும் நூல் - 1935 இல் திரு.வி. கலியாணசுந்தரத்தால் பதிப்பிக்க பட்டது, அதில் வெளியான பயண கட்டுரை இது. கட்டுரை எழுதப்பட்டு 97 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஒரு இணையதளத்தில் நேரடியாக படங்களுடன் வெளிவருகின்றது)

535 views

Comentarios


bottom of page