வெ. சாமிநாதசர்மா தன் நாட்குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய பயணநூல் "எனது பர்மா வழி நடைப் பயணம்" . 1978 ஆம் ஆண்டு அமுதசுரபி இதழில் இந்த நூலின் முதல் அத்தியாயம் வெளியானது. இன்றளவும் தமிழில் அதிகம் வாசிக்கப்பட்ட பயண நூல்களில் ஒன்றாக உள்ளது. சமகாலத்தில் இந்த புத்தகத்தை வாசித்த வாசகரின் அனுபவ கட்டுரை இது.

மியான்மரின் பாகன் பகுதியில் உள்ள கோவில்களில் காணப்படும் ஆயிரம் வருட பழமையான ஓவியங்களில் ஒன்று.
" 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதியிலிருந்து ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்விகம் என்ற மூன்று வகைத் துன்பங்களும் சேர்ந்து தன்னைத் தாக்க ஆரம்பித்து விட்டன எனக் கூறுகிறார். உலகமே கோரமானதோர் அவஸ்தையில் சிக்கிக் கொண்டிருக்கிறபோது எளிய ஜீவனாகிய தானும் அதை அனுபவிக்கத்தானே வேண்டும் என தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறார்."
பண்டைக் காலங்களில் பாண்டிய, சோழ ஆட்சி காலங்களிருந்து தமிழத்துக்கும் பர்மாவுக்கும் (தற்போது மியான்மார்) வணிகத் தொடர்பு இருந்து இருக்கிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் தொடர்பு இருந்து இருக்கிறது. 1824ல் இருந்து ஆங்கிலேயர்களுக்கும் பர்மாவுக்கும் மூன்று போர்கள் நடந்தன. 1886ல் முழு பர்மாவும், ஆங்கிலேயர்(பிரிட்டிஷ்) ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு அரசு அலுவலங்கள், தொழிற்சாலைகள், தோட்டங்கள், பராமரிப்பு, சாலைப் பணி, துறைமுகப் பணி மற்றும் இன்ன பிற பணிகளுக்காக ஆங்கிலேய அரசு இந்தியர்களை பர்மாவிற்கு போக ஆதரித்துக் கொண்டிருந்தது. 1931ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஏறத்தாழ 10லட்சம் இந்தியர்கள் பர்மாவில் இருந்தனர். அவர்களில் 4லட்சம் பேர் பர்மாவிலேயே பிறந்தவர்கள்!
வெ. சாமிநாத சர்மா, இலக்கியத்திலும், பத்திரிக்கை துறையிலும் ஈடுபாடு உள்ளவர், செய்யும் பணியில் மிகச் சிரத்தை உள்ளவர், எல்லோருக்கும் இனியவர், 1932 ஆம் ஆண்டு பர்மா சென்றார். பத்திரிக்கைத் துறை, நூலாக்கம், சொற்பொழிவு என ஆக்கம் மிகுந்தவர். அவருடைய படைப்புகள் மற்றும் ஆளுமை மூலம் பர்மிய தமிழ் மக்களிடையே மதிப்பு பெற்றவர்.
பர்மா ஆங்கிலேயர்(பிரிட்டிஷ்) ஆட்சியின் கீழ் இருந்த கால கட்டத்தில், இந்தியாவிலிருந்து பர்மாவிற்கு கடல் மூலமாகமாகவும், விமானம் மூலமாகவும் மக்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். சலை வழிப் பாதைகள் எவையும் சிறப்பாக இல்லை. இந்திய வடகிழக்கு பகுதிகளில் இருந்து ஒரு சில நடை வழிப் பாதைகளும், மாட்டு வண்டிப் பாதைகளும் இருந்தன.
இரண்டாவது சீனா - ஜப்பான் போர் 1937லிருந்து 1945 வரை தெடர்ந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும், பர்மா பகுதிகள் வழியாக சீனாவுக்கு போர் பொருட்களை அனுப்பிக் கொண்டு இருந்தனர். இது ஜப்பானுக்கு பிடிக்கவில்லை. ஆங்கிலேயர்கள், பர்மாவிலிருந்து கனிம வளங்களையும், எண்ணெயையும் தன் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இதுவும் ஜப்பானுக்கு பிடிக்கவில்லை . அவையெல்லாம் ஜப்பானுக்குத் தேவைப் பட்டன.
1941ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில், ஜப்பான் அமெரிக்காவின் “Pearl Harbour”ல் குண்டு வீசி இருந்தது. இரண்டாம் உலகப் போர் மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது. இரண்டு வல்ல அசுரர்கள் சண்டையிடும் போது, மத்தியில் இருக்கும் அப்பாவி உயிரினங்கள் மாட்டிக் கொள்வது போல, ஆங்கிலேய - ஜப்பான் சண்டையில் பர்மா மாட்டிக் கொண்டது.
நிறைய உறவினர்கள், உற்ற நண்பர்கள், அறிவுத்துறையில் பணி, அன்பான மனைவி என்று ஒரு நிறைவான வாழ்க்கை வெ.சாமிநாத சர்மா அவருக்கு பர்மாவில் அமைகிறது, இதையெல்லாம் தகர்ப்பது போல பர்மா மீது ஜப்பானிய போர்த் தாக்குதல் ஆரம்பிக்கிறது. 23 டிசம்பர் 1941ல் இவர் வாழ்ந்து கொண்டிருந்த பர்மா தலைநகர் ரங்கூனில், ஜப்பானியரின் குண்டு மழைத் தாக்குதல் ஆரம்பிக்கிறது. பிறகு தினமும் இரவு, பகல் என்று எப்போதும் தொடர்கிறது. இந்தியர்கள் கப்பல்கள், விமானங்களில் ஊர் திரும்பத் தொடங்குகிறார்கள். சாமிநாத சர்மாவுக்கும் ஏனையோருக்கும் நிலைமை சீராகிவிடும் என்ற ஏக்கம், நம்பிக்கை. அங்கேயே தங்கியிருக்கின்றனர். அலுவலகத்தை வணிக மையமான 39ம் தெருவிலிருந்து, “காலபஸ்தி” என்னும் பகுதிக்கு மாற்றிக் கொள்கிறார். தானும், தன் மனைவியும் தனியாக இருக்க வேண்டாம் என இன்னொரு குடும்ப நண்பரின் வீட்டில் அவர்களுடன் வசிக்கத் தொடங்குகிறார். அவர் குடியிருந்த வீட்டுக்கு மிக அருகிலும் குண்டு விழுகிறது.
ரங்கூனில் தொடர்ந்து இருப்பதா, வெளியேறுவதா என முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார். 20 பெப்ரவரி 1942 ஒரு அதி முக்கியமான நாளாக அமைகிறது. ரங்கூனில் நிலமை வெகு மோசமாகி விட்டது. அவருக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் வெளியேற முடிவெடுத்து விட்டனர். பர்மா அரசாங்கத்தின் அலுவலங்கள் பர்மாவின் வடக்கேயுள்ள மாந்தளை எனும் நகருக்கு மாற்றப் பட்டுக் கொண்டிருந்தன. அலுவலங்களில் வேலை பார்த்தவர்களும் அங்கே போக பணிக்கப் பட்டிருந்தனர்.
பிரிட்டிஷ் இராணுவத்தில் உயர்தர அதிகார பதவி வகித்து வந்தவரும், அவரிடம் அபிமானமும் மதிப்பும் கொண்டிருந்த ஹரி , " ராணுவம் மக்களை வெளியேறச் சொல்கிறது. கூடிய சீக்கிரம் இராணுவமும் ரங்கூனைவிட்டு வெளியேறிவிடும்" என்று கூறி, இவரையும் உடனடியாக வெளியேறச் சொல்கிறார். மறு நாளில் இருந்து ரங்கூனிலிருந்து கப்பல்கள் போக்குவரத்தும் நிறுத்தப் பட போகிறது என்ற செய்தியும் கிடைக்கிறது.
இப்போது, வேறு வழி ஏதும் இல்லாமல், சாமிநாத சர்மா அவரது மனைவி மற்றும் நண்பர்கள், மொத்தம் 12 பேர் கொண்ட குழுவாக , 3 கார்களில் , ஜப்பானிய தாக்குதல் ஆரம்பித்தது ஏறத்தாழ 2மாத முடிவில், 21 பெப்ரவரி 1942 காலையில் ரங்கூனை விட்டு வெளியேறுகின்றனர்.
ரங்கூனிலிருந்து ஏறக்குறைய 400மைல் (640கிமீ) தூரம் கார்ப் பிரயாணத்திற்கு நான்கு நாட்கள் பிடித்தன. இதில் அவர்களுக்கு எத்தனையோ இன்னல்கள். எத்தனையோ தெரிந்த மற்றும் தெரியாத உள்ளங்களும் உதவின.
பெப்ரவரி 24 முதல் இருந்து மார்ச் 16 வரை , மாந்தளையில் தங்கியிருந்தனர். ரங்கூனிலிருந்து வந்த செய்திகள் மோசமான நிலையைக் கூறின. மேலும் 12ம் பேரும் ஒன்றாக பயணிப்பது இயலாது எனப் புரிந்தது. காரில் பயணிக்கவும் இயலாது. சிறு குழுக்களாக வாய்ப்பு கிடைக்கும் போது பிரயாணிக்க முடிவெடுத்தனர்.
சாமிநாத சர்மா அவரது மனைவிக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கொசுத் தொல்லை, அடிக்கடி விமானத் தாக்குதல் எச்சரிக்கை அபாய ஒலி. நல்ல வேளையாக அவர்கள் அங்கிருந்த வரை ஏதும் தாக்குதல் நடக்கவில்லை. இந்த குழப்பங்களுக்கு இடையிலும், சாமிநாத சர்மா அவரது மனைவியும் வி.வே.ரா அவர்களும், அருகில் உள்ள மாந்தளைக் குன்றுக்கு (Mandalay Hill) போகிறார்கள். அதைப் பற்றி சாமிநாத சர்மா கூறுகிறார். “ என்னைப் பொறுத்தமட்டில் அங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவ்வளவு மனோ ரம்மியமான இடம்”. ஆபத்துக் காலத்திலும் இலக்கியவாதிகள் இயற்கையுடன் ஒன்றி விடுவார்கள் போல. என்ன ஒரு விசித்திரம்!
மாந்தளையில் அதிக நாட்கள் தங்கியிருக்கமுடியாதென்ற பயங்கர நிலைமை 1942-ஆம் வருடம் மார்ச் மாதம், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் ஏற்பட்டு விட்டது. ரங்கூன் நகரம் முழுவதுமாக ஜப்பானியர் வசப்பட்டு விட்டதென்றும், அவர்களுடைய அடுத்த இலக்கு மாந்தளையாகவே இருக்குமென்றும் என்ற செய்திகள் வந்தன.
எப்படி வெளியேறுவது? இந்த கேள்விக்கு சுலபமான பதில் இல்லை.
மாந்தளையில் இருந்து இந்தியாவுக்கான விமானத்தில், பொதுவாகவே, ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட்டது. மற்றவர்கள் பயணிப்பது மிகக் கடினம்.
மாந்தளைக்குச் சிறிது வடமேற்கே சுமார் எண்பத்தைந்து மைல் தொலைவில் உள்ள மொனீவா என்ற ஊர்வரை ரெயிலில் செல்லலாம். ரெயில் போக்குவரத்து ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. நீண்ட தேடுதல்களுக்குப் பிறகு ரெயிலில் போக அனுமதி கிடைக்கிறது.
அடுத்த சிக்கல், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டளை. மார்ச் 8 லிருந்து 14ம் தேதி வரை அதற்கான அலைதல்கள். ஊசி போட்ட பின், காய்ச்சலில் அவதி. அவர்களின் உடல்நிலை பலவீனமாயிற்று. இந்தியப் பயணத்திற்கு உடல் ஒத்துழைக்குமா என்ற கலக்கம் ஏற்பட்டது. மொனீவாவுக்கு அப்புறம் வழி எப்படிப்பட்டது, போக்குவரத்து சாதனங்கள் என்னென்ன கிடைக்கும் என்பன போன்ற விவரங்களைச் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுவாக, பலமைல்கள் தூரம் நடைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கு மென்று மட்டும் தெரிந்து கொண்டு இருந்தனர்.
நண்பர்களின் உதவியால், 17 மார்ச் 1942ல், இவர்கள் இருவர் மட்டும் மொனிவா என்ற அடுத்த ஊருக்கு ரெயிலில் போய்ச் சேர்ந்தார்கள். இத்தனை நாட்களாக ரங்கூனிலிருந்து வந்த நண்பர்கள் கூட இருந்தனர். அவர்கள் யாரும் மொனிவாவிற்கு வர இயலவில்லை. இங்கிருந்து இந்தியாவிற்கு போவது பற்றிய ஒரு தெளிவும் இல்லாத சுழல். மொனிவாவிற்கு சேர்ந்த இரவு ஒரு கொட்டகையில், இரவு உணவு ஏதும் இல்லாமல் கழித்தனர். மறு நாள் காலை, சாமிநாத சர்மா சிந்த்வின் நதிக்கு குளிக்கப் போகும் போது, தபால் தணிக்கைத் துறையில் மேலதிகாரியாக இருந்த பா.சு, இவரையும், மனைவியையும் தாம் குடியிருக்க ஏற்பாடு செய்ந்து கொண்ட இடத்தில் தங்குமாறு ஏற்பாடு செய்கிறார். அங்கு 7-8 பேர் கூட்டாக சமையல் செய்ந்து கொண்டு தங்கியிருந்தனர். அவர்கள் சாமிநாத சர்மாவுக்கு பரிச்சமாயிருந்தனர். அவர்களில் ஒருவர், ரங்கூனில் சாமிநாத சர்மா குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், என்னோ ஒரு விந்தை! அவரை சாமிநாத சர்மா திரு.ம என்று குறிப்பிடுகிறார். இங்கு தங்கியிருந்த நாட்களில் உடல் சோர்ந்திருந்தாலும், நண்பர்களுடனான இலக்கிய உரையாடல் மனதுக்குத் தெம்பு தந்தது எனக் குறிப்பிடுகிறார்,
இவர்கள் அடுத்ததாக போகவேண்டிய இடம் “கலேவா”. ஆற்று மார்க்கமாக சுமார் 120மைல்(சுமார் 180 கிமீ ) தூரம். சிறிய படகுகளில் பயணம் செய்வது மிகுந்த துன்பகரமானது. 10-12 நாட்கள் ஆகும். பெரும்பாலோர், இந்த சிறு படகுகளில் பயணித்தனர். திரும்பவும் அதிர்ஷ்ட தேவதை, இவரின் நண்பர்கள் ஏ.வி.ம மற்றும் ந வடிவத்தில் வந்து உதவுகின்றாள்.
22 மார்ச், 1942 மாலை ஒரு நீராவிப் படகில் பிரயாணிக்கின்றனர். 4 நாட்கள் பயணித்து கலேவாவிற்குச் சென்று சேருகின்றனர்.
“கலேவாகுக்கு அடுத்த படியாக டாமு என்ற ஊருக்குப் போகவேண்டும். டாமு பர்மா எல்லையில் உள்ளது. பள்ளத்தாக்குகளும், மலைப்பகுதிகளுமான ஒரு நிலப்பரப்பு. இதில் செல்லும் ராணுவ வாகனங்கள், மலைப் பாதையை குண்டும் குழியுமாக ஆபத்தானதாக மாற்றியிருந்தன. வாரத்துக்கு 2 நாட்கள் இருந்த பஸ் போக்குவரத்தும் நிறுத்தப் பட்டுவிட்டது.
8 ஏப்ரல் 1942, நண்பர் “ந” மற்றும் “ம” உதவியால், கலேவாவிலிருந்து “இண்டாஞ்சி” என்ற இட த்துக்கு லாரியில் பயணித்து சென்றடைகின்றனர். பகல் முழுவதும் பட்டினி. இரவு நண்பர் “ந” வின் நண்பரான “மு” என்பவரின் இடத்தில், உணவு மற்றும் தங்கல்.
9 ஏப்ரல் 1942 நண்பர் “மு” வின் உதவியால் சுமார் 150கிமீ தூரத்தை, வெட்ட வெயிலில் நாள் முழுதும் லாரியில் பயணித்து டாமு ஊரைச் சென்றடைகின்றனர். . பகல் முழுவதும் பட்டினி. இங்கு ஒரு பெரிய அகதிகள் முகாம் இருந்தது. அதன் நிலவரமோ பரிதாபமானது.
நண்பர்கள் “நா” மற்றும் “ ரா” உதவியால், அகதி முகாமுக்குப் போகாமல், டாமுவின் தபால் நிலையத்திற்குப் போகிறார்கள். அங்கு சென்ற பிறகு திரும்பவும் அதிர்ஷ்ட தேவதையால், அதன் போஸ்ட் மாஸ்டர், “கி”, ரங்கூனில் மிகவும் பரிச்சயமான நண்பராக அமைகிறார். அவர்களது இல்லத்தில் தங்குகிறார்கள்.
இப்போது, சாமிநாத சர்மா, அவரது மனைவி, நண்பர் “ந”வின் மனைவி மற்றும் 3 குழந்தைகள், நண்பர் “கி”யின் மனைவி, ராமு மற்றும் “பா” என்ற இளைஞர்கள், நண்பர்கள் “நா” மற்றும் “ ரா” என்று 11 பேர் குழு இந்தியா செல்ல வேண்டும்.
இரண்டு நாட்களாக மிகுந்த கஷ்டப்பட்டு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மாட்டு வண்டியில் போக ஏற்பாடு செய்யப்பட்டது. 11 ஏப்ரல் 1942ல் மாலை பெண்களும் குழந்தைகளும் வண்டியிலும், மற்றவர்கள் நடந்தும் ஒரு பெரிய வண்டித் தொடர் புறப்பட்டது. இரவில் இருட்டிலும் பயணம். சிறிது ஓய்வு. இப்படி பயணித்து மணிப்பூரில் உள்ள வக்ஸு என்ற கிராமத்தின் அருகில் உள்ள அகதி முகாமுக்கு 12 ஏப்ரல் 1942 காலை சுமார் 10மணிக்கு வந்து சேர்கிறார்கள்.
21 பெப்ரவரி 1942 ல் ஆரம்பித்த பயணம், கார், நீராவிப் படகு, லாரிகள், மாட்டு வண்டி, நடைப் பயணம் மூலம் இந்திய எல்லையை அடைய 50 நாட்களுக்கு மேல் பிடித்தது. இருந்தாலும், சென்னை இன்னும் அதிக தொலைவிலேயே இருந்தது. இவ்வளவு நாட்கள் வெயிலில் பயணம். இப்போது, மிக உயரமான மலைப் பகுதிகளில், குளிரில் பேய்க் காற்றில் பயணம், மிகுந்த சிரமங்கள் பட்டு மலைப் பயணத்தை டிமாப்பூர் முகாமில் முடிக்கிறார்கள். அங்கிருந்து சில பல சிரமங்களுக்குப் பிறகு சென்னையில் உள்ள இல்லத்திற்கு 13 மே 1942 வந்து சேர்கிறார்கள். போர்ச் சூழல், ஏறத்தாழ 4 மாதங்கள் பாதுகாப்பற்ற, நிலையற்ற பயணங்களால் சாமிநாத சர்மாவின் உடல் நலத் தொந்தரவுகள் மேலும் 2 வருடங்கள் நீடித்தன. அப்போதும் கூட அவரது இலக்கியப் பணி தொடர்ந்தது.
இந்த நூலில் நிறைய விசயங்கள் என்னைப் பாதித்தன, கவர்ந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.
இந்த 21ம் நூற்றாண்டில் நாம் எவ்வளவு பயணங்களை மேற்கொள்கிறோம். மலைப்பகுதிகளுக்கு போவது எல்லாருக்கும் மிகுந்த ஆர்வத்தை மன அமைதியும் கொடுப்பது. ஆனால் பயணங்கள் நம் மேல் திணிக்கப்படும் போது அவை துயரம் மிகுந்ததாக ஆகிவிடுகிறது. இந்த துயரத்தையும் ஒரு சமமான மனநிலையில் இருந்து எதிர்கொள்ளும் சித்திரத்தையே இந்த புத்தகம் அளிக்கிறது மனிதர்களின் ஒரு சிலர் மட்டுமே நாடோடி வாழ்க்கையை தேடி விரும்பி அமைத்துக் கொள்கிறார்கள் மிகப் பெரும்பாலான மக்களுக்கு ஓரிடத்தில் அமைந்த ஒரு உறுதியான, கால, இட ஒழுங்குடன் அமைந்த வாழ்க்கையே வசதிப்படுகிறது.
பர்மாவில் இருந்து இந்தியாவுக்கு 1942 அமைந்த பயணம் ஆசிரியர் விரும்பி ஏற்றதல்ல. அவர் மேல் திணிக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரிட்டன் அரசுகளின் பேராசையால் விளைந்த ஒரு பெரும் மானுட துயரம். இந்த துயர காலங்களிலும், அவர் பயணக் குறிப்புகளை வெகு சிரத்தையாக எழுதி வைத்துள்ளார். பின், 1978 ஒரு தொடராக வந்து பின் புத்தக வடிவம் பெற்றது. உலகில் நன்மை தீமை எல்லா இடங்களிலும் கலந்தே இருக்கிறது. சுவாமிநாத சர்மா அவர்கள் வே சாமிநாத சர்மா அவர் பார்த்த பிரமித்து போன நல்ல விஷயங்களையும் மனதை மிகவும் கஷ்டப்படுத்திய சிலர் தீய விஷயங்களையும் கலந்து கொடுத்துள்ளார்
சமநிலையில் நோக்கும் பார்வை
47 வயதானவர், இலக்கியத்திலும், பத்திரிக்கை துறையிலும் ஈடுபாடு உள்ளவர், செய்யும் பணியில் மிகச் சிரத்தை உள்ளவர், எல்லோருக்கும் இனியவர், எத்தனை தொலைவு, எத்தனை நாட்கள் என ஒரு கடினமான பயணத்தை மேற்கொள்ளும் போதும் அதற்கு காரணமாக வேறு எவரையும் சுட்டிக் காட்டி கசப்பை உமிழவில்லை.
1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் பத்தொன்பதாந் தேதியிலிருந்து ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்விகம் என்ற மூன்று வகைத் துன்பங்களும் சேர்ந்து தன்னைத் தாக்க ஆரம்பித்து விட்டன எனக் கூறுகிறார். உலகமே கோரமானதோர் அவஸ்தையில் சிக்கிக் கொண்டிருக்கிறபோது எளிய ஜீவனாகிய தானும் அதை அனுபவிக்கத்தானே வேண்டும் என தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறார்.
பிரியாவிடை
தாங்கள் குடியிருந்த வீட்டை விட்டுக் கிளம்பும் போது, வீடு பத்திரமாக இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லாத போதும், அந்த வீட்டை எவ்வளவு மதித்தார் என்பது அவரின் செயல்களிலிருந்து புரிகிறது.
கோயிலுக்கு அல்லது சுப காரியங்களுக்குப் போகுவதற்கு முன் செய்வது போல, வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, பால் காய்ச்சி நமஸ்காரம் செய்தனர். நாம் பொதுவாக வெளியூர் செல்லும் முன் எல்லா ஜன்னல்களையும் மூடி , கதவுகளையும், அல்மாரிகளையும் பூட்டுவோம். ஆனால் இவர்கள், தாங்கள் இல்லாத போதும், இந்த வீடு மற்றவர்களுக்கு எந்த வகையிலேனும் உதவியாக இருக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில், வீட்டிலிருந்த பீரோக்கள், அலமாரிகள் ஆகியவற்றின் சாவிகளை அவற்றிலேயே வைத்து விட்டு, கதவுகளை பூட்டாமல், வெறுமனே மூடிவிட்டுச் சென்றனர். என்ன ஒரு உயர்ந்த மனநிலை!
என்ன எடுத்துச் செல்வது
நாம், நம் வாழ்க்கையில் எத்தனையோ பொருட்களைச் சேர்த்து வைக்கிறோம். நம் இல்லத்தை விட்டு ஒரு ஆபத்தான, அவசர நெருக்கடியில் கிளம்ப வேண்டியிருந்தால், எவற்றை எடுத்து வர இயலவில்லை என்று வருந்துவோம்?
ஓரு இலக்கியவாதியான சாமிநாத சர்மா எவற்றுக்காக வருத்தப்பட்டார்? விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள், நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த புத்தகங்கள், நூல்களாக வெளிவருவதற்குத் தயார்ப்படுத்தி வைத்திருந்த கையெழுத்துப்பிரதிகள், பல இடங்களில் நிகழ்த்தி வந்தசொற்பொழிவுகளின் குறிப்புக்கள், நூல்களைப் படித்து வரும்போது எடுத்துக்கொண்டு வந்த குறிப்புக்களடங்கிய நோட்புத்தகங்களை எடுத்து வர இயலவில்லை என்று மிகவும் வருந்துகிறார்.
மனிதர்களின் தனி உரிமையை மதித்தல்
அவருடன் பயணித்த, பயணத்தின் போது சந்தித்த எல்லா மனிதர்களையும் அவர்களிடம் முழு பெயர் கொடுக்காமல் அவர்களது பெயர்களில் முதல் ஒன்று இரண்டு எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியுள்ளார்.
கார்ப் பயண சிக்கல்கள்
ரங்கூனிலிருந்து ஏறக்குறைய நானூறு மைல் தூரம் கார்ப் பிரயாணத்திற்கு நான்கு முழுநாட்கள் பிடித்தன. நாம் இந்த 21ம் நூற்றாண்டில் இருந்து கொண்டு, அவர்களுக்கு என்ன, 600கிமீ தூரத்தை காரில் கடந்து உள்ளார்கள் என்று வெகு சாதாரணமாகக் கேட்கலாம். போர்க்காலத்தில் கார் பயணம் கூட எவ்வளவு கடினமாக இருந்தது என்றும் விவரித்துள்ளார்.
- மேலும்
Comments