top of page

அருவி - வள்ளி வாண தீர்த்தம் ஆடின கதை - 1

Updated: Jul 17

பாரதியாரின் மனைவி செல்லமாள் எழுதிய இந்தப் பயணக்கட்டுரை, 1920 இல் (பாரதி காலமான இரண்டு மாதத்தில்) சுதேசமித்திரனின் "கத மாலிகா" என்ற நூலில் வெளியானது.

பாபநாசம் அருவி, தாமஸ் டேனியல் என்ற ஆங்கில ஓவியர் 1792இல் வரைந்த ஓவியம் (நன்றி :Rarebooksociety)


"மதுர நாமம். மதுரமான தீர்த்தம். பாபநாசத்து நதியில் நாலுபுறம் ஜலம் சூழ்ந்திருக்க நடுப் பாறைகளில் உட்கார்ந்து அன்னம் புஜித்து தீர்த்தத்தை வாரிக் குடித்து, அந்தபி பொன் மீன்கள் துள்ளி விளையாடக் கண்டு சந்தோஷப்படாத ஜென்மம் என்ன ஜன்மம் ?"

பொதிய மலையருகே பாபநாசம் என்ற புகழ்பெற்ற சிவக்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு ஸ்வாமி பெயர் பாபவிநாசர், அம்மன் பெயர் லோகநாயகி. பாபநாசத்துக்கு அப்பால் மலையினைடையே வாண தீர்த்தம் என்ற அருவி பாய்கிறது. பாபநாசத்திற்கு சமீபத்தில் உள்ள அகஸ்தியகூடத்தில் கண்ணுக்கு மறைவாக அகஸ்திய மகரிஷி வாழ்வதாக ஜனங்கள் நம்புகிறார்கள். 


மேற்படி க்ஷ்த்திரத்திலேருந்து ஒரு காதம் மேற்கே கடவூர் என்பதோர் கிராமம் இருக்கிறது. அங்கு பிராமணர்கள் குடியிருக்கும் வீதிகள் இரண்டு. ஒன்றின் பெயர் புதுகிராமம். மற்றதன் பெயர் பழையகிராமம். 


பழையகிராமம் சிறிய தெரு. அதில் சிரகுக்கு பத்து வீட்டுகுக்கு மேல் இராது. தென் சிரகின் நடுவே ஒரு சிறு வீடு. நான் பிறந்து வளர்ந்தது, என் பெற்றோர் இப்போது குடியிருந்து வருவது. ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு ஒருமுறை நான் சென்ன பட்டணத்தில் உத்யோகம் செய்து கொண்டிருந்த என் பர்த்தாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு எனது இளைய பெண் மூன்று வயது குழந்தையுடன் பிறந்த அகத்துக்கு வந்து, மருந்து தின்னும் பொருட்டாக மூன்று மாதம் தாமதித்தேன். அப்போது ஆடி மாசத்தில் அமாவாசைக்கு இரண்டு நாள் முந்தின தினத்தில் மாலைப்பொழுதில் வீட்டு நடையில் நானும் என் தமயன் அகமுடையால் சரஸ்வதியும் குழந்தைகளுக்கு தலைவாரிப் பின்னிக்கொண்டிருந்தோம். என் தாயார், கிராமத்துக்கு மேற்கே ராமஸ்வாமி கோவிலுக்கு சமீபத்திலுள்ள கிணற்றிலிருந்து ஜலம் எடுத்துக் கொண்டு, அப்படியே ராமஸ்வாமி கோவிலையும் பிள்ளையார் கோவிலையும் சுற்றி வழக்கப்படி சுவாமி தரிசனம் பண்ணி வரும் பொருட்டாகப் போயிருந்தாள். 


போலீஸ் கிட்டண்ணா வர்த்தமானம் 


இப்படி இருக்கையில் எனது சிற்றப்பா கிட்டண்ணா என்ற க்ரிஷ்ணய்யர் வந்து சேர்ந்தார். " எங்கிருந்து வருகிறீர்கள் கிட்டண்ணா?" என்று கேட்டேன்.


திருப்பரங்குன்றத்திலிலிருந்து " என்று சொன்னார். 


இவருக்கு அப்போது முப்பது, நாற்பது வயதிருக்கும். பெண்டாட்டி இறந்து நாலைந்து வருஷங்களாயின. குழந்தைகளைத் தென்காசியிலுள்ள அவருடைய மாமனார் வீட்டில் கொண்டு போய் வளர்த்தார்கள். கொஞ்சம் பூஸ்திதி உண்டு. அதை வைத்துக்கொண்டு மதுரை ஜில்லாவில், திருப்பரங்குன்றம் என்ற சுப்ரமணிய சுவாமி ஷேத்திரத்தில் குடியிருந்தார். சமையலுக்காக  எங்கள் பந்த வர்கத்தைச்  சேர்ந்த காந்திமதி என்ற அனாதை விதவைப் பெண்ணை வைத்து கொண்டிருந்தார். இது பெருங்குற்றம் என்று சிலர் அவரைக் கண்டித்தனர். 

 

அவர் பிறருடைய கண்டனைகளை கவனிக்கக்கூடிய மனிதன் இல்லை. பால்யத்தில் கிட்டண்ணா சரியாக படிக்கவில்லை. தாத்தா பணமும் பூஸ்திதியும் ஏராளமாகவைத்திருந்தார். விவசாயத் தொழிலினால் மிகுந்த லாபம் பெற நினைத்து, தரிசு நிலத்தை ஒரேடியாக ஐம்பதறுபது காணிவாங்கி அதைத் திருத்துவதற்காக நிறைய பணத்தைக்  கொட்டி, அதில் எவ்வித லாபமுமின்றி பெரிய நஷ்டமுண்டாகி, கல்யாணகங்களை அளவு மீறி டம்ப செலவு செய்து நடத்தி, இப்படி நானாவிதமாக கடன்பட்டு நொந்து போனபடியால், முதலிரெண்டு பிள்ளைகளுக்கு இங்கிலிஷ் படிப்புச் சொல்லி வைக்க பணம் செலவிட்டது போல மூன்றாவது பிள்ளையாகிய கிட்டண்ணாவுக்குச் செலவு செய்ய வழியில்லாமல் (தாத்தா ) விட்டுவிட்டார். கிட்டண்ணாவுக்கு படிப்பில்  புத்தி நுழையவில்லை. அதாவது புத்தியில்படிப்பு நுழையவில்லை. எனவே பால்யத்தில் கிட்டண்ணா வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் , ரங்கூனுக்கு புறப்பட்டுப் போய்விட்டார். பல வருஷங்கள் அங்கிருந்து மீண்டு வந்து, போலீஸ் வேலையில் சேர்ந்தார். நானாவதமாய் கஷ்டங்கள் பட்டு பதினாறு வருஷம் வேலை பார்த்த பிறகு, அந்த வேலையை ராஜினாமா கொடுக்கும்படி நேரிட்டது. அங்ஙனம் நேரிட்ட காரணத்தை இங்கே எழுதினால் அது ஒரு பாரதமாக முடியும். அது தனிப் புஸ்தகம் போடவேண்டிய கதை. அது நிற்க. 


கிட்டண்ணா என்னை நோக்கி - 


" வள்ளி, என்ன சங்கதி ? வள்ளி, பெரிய குழந்தை காசியில் சௌக்கியமாக இருக்கிறதா? காசியிருந்து காயிதம் வந்ததா? அண்ணா எங்கே போயிருக்கார்? மதனி எங்கே ? உன் தமயன் திருச்சினாப்பள்ளியிலேருந்து காயிதம் போட்டானா? வள்ளி, நான் நாளை காலையில் பாபநாசத்துக்கு புறப்படுகிறேன். நீங்கள் யாரெல்லாம் வருகிறீர்கள்? என்று கேட்டார் " எல்லா திக்குகளிலும் எல்லாரும் சௌக்கியம தான், பாபநாசத்துக்கு போகிற விஷயம் அம்மா வந்தவுடன் அவளிடத்தில் கேட்கலாம்" என்று சொன்னேன்.


இப்படி வார்த்தை சொல்லி கொண்டிருக்கையிலே  அம்மா ஜலங்கொண்டு வந்தால் ; வந்தவள் கிட்டண்ணாவை நோக்கி ," வா கிருஷ்ணா" என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் பிறகு என்னை நோக்கி - " வள்ளி, எல்லாரும் ஆடி அமாவாசைக்கு வாணதீர்த்தம் போகிறார்கள். நமக்கு தீர்த்தமேது ஸேவையேது? நாமும் போகலாம். வருகிறாயா? " என்று கேட்டாள் . 


அதற்கு நான் - குழந்தையை யார் பார்த்து கொள்வார்கள்? " என்றேன்.


மதனி ஸரஸ்வதி : " நான்பார்த்துக் கொள்கிறேன். நான் பாபநாசத்துக்கு இந்த விசை வரவில்லை " என்றாள் . 


அம்மா: சரி, குழந்தையை ஸரஸ்வதி பார்த்துக்கொள்வாள் . நாமெல்லாரும் நடந்தே போகலாம். ஊரார் எல்லாரும் நடந்துதான் போகப் போகிறார்கள். நாம் மாத்திரம் கையிலிருக்கிற காசை வண்டிக்காரனுக்கு ஏன் தொலைக்க வேண்டும் ? " என்றாள் . 


கிட்டண்ணா: அதுவே சரி. வண்டியாவது சந்தியாவது. தள்ளு ! நடந்தே போகலாம் . நடந்து போவதில் இருக்கிற மஜா, அதில் இருக்கிற ஷோக், அந்த குஷி, அதிலுள்ள ஸந்தோஷம் வண்டியில் போனால் கிடையாது" என்றார்.


இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே எனது பிதாவாகிய தர்மராஜய்யர் வந்து சேர்ந்தார். அவர் கிட்டண்ணாவை நோக்கி: " கிட்டா, நீ எப்போது வந்தாய் ?" என்று கேட்டார். 


"இப்போது தான் வந்தேன் . இன்னும் கால் நாழிகூட ஆகவில்லை " என்று கிட்டண்ணா சொன்னார்.


பிதா சொல்லுகிறார் : "கிட்டா, அவள் - அவள் தாண்டா . காந்திமதி - அவள் இப்போதெங்கே இருக்கிறாள் ? தெரியுமா ? " என்றார் .


" திருப்பரங்குன்றத்தில் " என்று கிட்டண்ணா சொன்னார் . அப்பாவுக்கு மஹா கோபம் வந்துவிட்டது. கண் சிவக்கிறது. உதடு துடிக்கிறது. 


அப்பா சொல்லுகிறார்: " அடே கிட்டா ! உன்னுடைய முகாலோபனம் பண்ணுனாலும் தோஷம். உன்னுடைய நிழல் பட்டால் அன்றைக்கு தாகத்துக்கு தீர்த்தம் அகப்படாது. நீ அந்தச் சனியை துரத்திவிட்டதாக போன மாதம் எனக்கு கடிதம் போட்டாயே. இப்போது அவள் மறுபடி திருப்பரங்குன்றத்தில் இருப்பதாக சொல்லுகிறாயே. நீ யோக்கியனா ? " என்று சொன்னார்.


கிட்டண்ணா சொல்லுகிறார்: " ஓஹோ , அதுவா? ஓஹோ , நான் காயிதம் போட்டேனா அந்த விஷயமா? நீர் எழுதினதற்கு பதில் அப்படி எழுதினேன். கேட்டாயா வள்ளி, இவர் எனக்கு ஒரு காயிதம் போட்டார். அதில், சனியை தொலைத்து விடு என்று எழுதியிருந்தது . நான் - நம்முடைய ஜாதகத்தில் இருந்து மாறிப்போன சனி திசையை நினைத்துக் கொண்டு சனியைத் தொலைத்து விட்டேன் என்று பதில் எழுதினேன். இவர் காந்திமதியை சனி என்று சொன்னதாக நான் நினைக்கவில்லை. காந்திமதி என்னோடுதான் சௌக்யமாய் இருந்து வருகிறாள். அவளுடைய குழந்தையும் சௌக்கியமாக இருக்கிறது " என்றார். இங்கனம் கிட்டண்ணா சொல்லியதைக் கேட்டு எங்களுக்கெல்லாம் கலீர் என்று சிரிப்பு வந்து விட்டது. அப்பா கூடச் சிரித்தார். 


அவராலே கூடச் சிரிப்பை அடக்க முடியவில்லை. 


பிறகு நான் பிதாவை நோக்கி : எல்லாரும் நாளை வாண தீர்த்தத்திற்கு புறப்படுகிறார்கள். நாமும் போகலாமா ?" என்று கேட்டேன். 


அவர் : " சரி, போகலாம், வண்டி ஏற்பாடு பண்ணட்டுமா ? " என்றார். 


"வண்டி வேண்டியதில்லை. ஊரார் எல்லாரும் நடந்து தான் போகப் போகிறார்கள். அப்படிப் போனால்தான் வேடிக்கையாக இருக்குமென்று கிட்டண்ணா சொல்லுகிறார். அம்மாவும் வண்டிக்குப் பத்து ருபாய், பதினைந்து ரூபாய் வாடகை கொடுப்பது வீண் செலவென்று சொல்லுகிறாள். " என்றேன். 


பிதா சொல்லுகிறார் : " என்னால நடக்க முடியாது. மலை செங்குத்தாக இருக்கும். ஏறுவது மஹா கஷ்டம். கூட்டம அதிகம். வண்டி வைப்போம். நாளை சாயங்காலம் புறப்படுவோம். இராத்திரி, கல்லிடைக்குறிச்சியிலே போய்ப் படுத்துக்கொள்வோம். மறுநாள் விடிய ஜாமத்துக்கு அங்கிருந்து புறப்பட்டால், பகல் பனிரெண்டு மணிக்கு புல்லுப்புரை போய்ச் சேரலாம். அன்றைக்கு ராத்திரி அங்கேயே இருப்போம். மறுநாள் விடிய ஜாமத்துக்கு புறப்பட்டு, வாண் தீர்த்தத்திலே போய் ஸ்நானம் பண்ணி விட்டு, ஒரே மூச்சாக சாயங்காலத்துக்குள் பாபநாசத்துக்குத் திரும்பி வந்துவிடலாம். என்ன சொல்லுகிறாய் ?" என்று கேட்டார். "நான் நடந்து தான் போவேன் " என்றேன்.


" எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள். எதற்கு என்னிடம் ஏன் கேட்க வேண்டும் ?" என்று பிதா மஹா கோபத்துடன் சொல்லி எழுந்து போய் விட்டார். அவரும் வருவாரென்று முகக் குறியால் தெரிந்து கொண்டோம் . 


பயணம்

கடவூரில் ரயில் வண்டி ஏறினால் , பாபநாசத்துக்கருகே சுமார் இரண்டு, மூன்று கல் தூரமுள்ள ஆம்பூர் ஸ்டேஷன் வரை போகும். அங்கிருந்து தான் நடந்து போக வேண்டும். மறுநாள் பகல் பனிரெண்டு மணிக்கு, நடுவெயில் கொளுத்தும்போது கடவூர் ரயில் ஸ்டேஷனுக்குப் புறப்பட்டோம். கிராமத்திலிருந்து ஸ்டேஷன் ஒரு மைல் தூரம் இருக்கிறது. மிகவும் சிரமத்துடன் நடந்து போகையில் , நான் பிதாவை நோக்கி- " நம்முர் ஸ்டேஷனுக்கு வண்டி வைப்போம். இரண்டணாத் தானே?" என்றேன். அவர் பதிலே சொல்லாமல் விர் விர் என்று முன்னே நடந்து போனார். நான், அம்மா, கிட்டண்ணா, அப்பா, சாதம், தோசை , அரிசி பருப்பு மூட்டைகள் சகிதமாக கடவவூர் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம். வண்டி வந்தது. அதில் ஏறி ஆம்பூர் ஸ்டேஷனில் இறங்கினோம். அங்கே கொஞ்சம் தாகசாந்தி செய்துகொண்டு புறப்பட்டுப் பாபநாசத்துக்குப் போகும்போது மாலை இருளாகிவிட்டது. போகிற பாதையில் ஒரு குன்று பொத்தை . அதனிடையே கணவாய் இடுக்கு வழியுண்டு. அதில் கள்ளர் பயமதிகம். ரெண்டுமலைக்கு நடுவே அப்பா குடுகுடு  என்று ஓடுவது போல் நடக்கிறார் .


"ஓடிவா " என்று எங்களையும் நெரிக்கிறார். எனக்கு கால் நோவு ஒரு புறம் கள்ளர் பயம் ஒரு புறம், அப்பாவிடத்திலுள்ள பயம் ஒரு புறமாகக் கஷ்டப்பட்டேன். ஓட்டமாக ஓடி ஒரு மட்டில் இடுக்கு மலையைத் தாண்டி பொழுது அஸ்தமித்து ஒரு நாழிகைக்கெல்லாம் போய்ச் சேர்ந்தோம்.


பாபநாசம் 


மதுர நாமம். மதுரமான தீர்த்தம். பாபநாசத்து நதியில் நாலுபுறம் ஜலம் சூழ்ந்திருக்க நடுப் பாறைகளில் உட்கார்ந்து அன்னம் புஜித்து தீர்த்தத்தை வாரிக் குடித்து, அந்தபி பொன் மீன்கள் துள்ளி விளையாடக் கண்டு சந்தோஷப்படாத ஜென்மம் என்ன ஜன்மம் ? நாங்கள் பாபநாசத்துக்கு வந்து சேரும்போது ராத்திரி ஏழுமணி இருக்கும். சுமையை எல்லாம் சத்திரத்தில் கொண்டு வைத்துவிட்டு தோசையை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரையில் புஜிக்கப் போனோம். இருட்டு குகையாக இருந்தது. கையில் லாந்தல் கொளுத்திக் கொண்டு போனோம். ஜலத்துக்கு நடுவில் ஒரு பாறைமேல் தோசையை வைத்துக் கொண்டு தின்றோம். பாறையை ஜலத்தாலே அலம்பி, அதில் வைத்துக்கொண்டு ஜலத்தில் முழுக்கி முழுக்கி தோசையை விழுங்கினால் மிகவும் ருசியாக இருக்கும், முதலாவது நானும் கிட்டண்ணாவும் அப்பாவும் தின்றோம். பிறகு அம்மா போஜனம் தொடங்கினாள். அம்மா உண்ணும் முன்னாகவே அப்பா நெரிக்கினார். அவர் பொறுமையில்லாமல் அந்தக் காலத்தில் அற்ப விஷயங்களுக்கெல்லாம் வீண் சங்கிடப்படுத்தினார். இப்போதெல்லாம் அப்படியில்லை. இப்போது தங்கக்  கம்பியாய் விட்டார். 


" ஏ ! எழுந்திரு ! எத்தனை நாழிகை ; நடு ராத்திரி வெள்ளம் வருகிறது " என்று கூறுகிறார். அம்மா மிச்சத் தோசையைத் தண்ணீரில் எறிந்தாள் . படீர் என்று எழுந்துவிட்டாள் . எல்லோரும் திரும்பி முட்டை வைத்திருந்த சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே கூட்டமும் இரைச்சலும் சகிக்க முடியவில்லை. நாங்களும் அங்கே சற்று நேரம் ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருந்தோம். விடிய ஜாமம் ஆயிற்று. வாண தீர்த்தத்திற்குப் போகிற ஜனங்கள் எல்லாரும் புறப்பட்டுக்  கூட்டம் கூட்டமாக போனார்கள். நாங்கள் ஒரு கூட்டத்தில் சேர்ந்து போனோம். எங்கள் படை அறுபது பேர் இருக்கும். மலையின் அடிக்கு வந்தோம். 


மலை ஏற்றம்


பாதித்தூரம் ஏறுமுன்னே எனக்கு கால் நோவு மிகுதியாய் விட்டது. பிதாவிடம் சொன்னால் முன்பு வண்டி வேண்டாமென்று சொன்ன காரணத்தை கொண்டு அவர் மிகவும் கோபம் கொள்ளுவார். கிட்டண்ணாஎன்னிடம் அடிக்கடி: - " கால் வலிக்கிறதா ? இரையாதே பல்லை கடித்துக்கொண்டிரு . இல்லாவிட்டால் அண்ணா வைவார். கதைகள் சொல்றேன் கேள் " என்று பல விதங்களிலே சமாதானம் பண்ணுவார் . ஒரு மட்டிலும் ஏறி உச்சிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு சின்ன மைதானம். 


மைதானதுக்கப்பால் ஒரு மாந்தோப்பு. தோப்பிலிருந்து நாலு ஒற்றையடிப் பாதை நாலு கிளைகளாகப் பிரிகிறது. எந்த கிளை வழியாகப் போக வேண்டும் என்று எங்கள் படையில் யாருக்கும் தெரியவில்லை. அப்பா வழி காட்டினார். அவருக்கே இந்த இடத்தில் சந்தேகம் ஏற்பட்டு விட்டது. 


அந்த சமயத்தில் அவர் என்னை நோக்கி நான் முன்பு வண்டி வேண்டாம் என்று சொன்னதற்காக நான்கு கோபப் பார்வை பார்த்தார். எனக்கு கால் நோவு பொறுக்க முடியவில்லை . 


பல கூட்டங்கள் அங்கு வந்தன, ஒவ்வொரு கூட்டம் அதனதன் இஷ்டப்படி ஒரு பாதையைப் பிடித்துக்கொண்டு போகிறது. எந்த பாதை சரியென்பதை நிச்சயிக்க வழியில்லை. கடைசியாக ஒரு கிளை வழியே துணிந்து பிதா வழி காட்டிச் செல்ல எங்கள் படை பின்னே சென்றது. 


அந்தப் பாதை எங்கள் ஓரிருண்ட வனத்துக்கு நடுவே கொண்டு சேர்த்து. அந்தக் காட்டிலே திக்குத் திசை தெரியவில்லை. திரும்பிப்போக மனம் துணியவில்லை. அங்கே சில வண்டுகள், ஹோ என்று கத்தியது.


அம்மா பயந்து : ஏதடீ நடுக்காட்டில் அகப்பட்டுக்கொண்டோமே ! புதரில் புலி கடுவாய் கிடந்தாலும் கண் தெரியாதே, என்றாள் எனக்கு வயிற்றை ஒரு கலக்கு கலக்கிற்று. 


பிதா சொல்லுகிறார் : நேர் மேற்காக போவோம். அதோ மேற்கே தெரிகிறதே, அது தான் வாண தீர்த்த அருவி. அதை பார்த்துக்கொண்டே நடப்போம். அட மூடர்களா, என்னைப் பின்பற்றி வாருங்கள் யாதொரு பயமும் கிடையாது."


எங்களுக்கு தைரியமுண்டாய், அவரைப் பின்பற்றி நடந்தோம். சுவடில்லாத புது வழி ஒன்றில் கூட்டிக் கொண்டு போனார். எங்களுடன் வந்தவர்களிலே பலர் பட்டு நூல்காரர் என்று சொல்லப்படும்  சௌராஷ்ட்ர பிராஹ்மணர்கள். அவர்களுடைய பாதையில் ஏதெல்லாமோ சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டு வந்தார்கள். சிறிது தூரம் போனவுடன் அங்கே ஓரிலந்தை முட்காடு. காலிலே முள் குத்துகிறது. மேலெல்லாம் முள் கிழிக்கிறது. மறுபடியும் ஒற்றையடி பாதைகள் கிளைக்கத் தொடங்கின. பத்தடிக்கு ஒரு பாதையாகப் பிரிகிறது. இப்படி இருக்கையில் வழிகாட்டின தந்தை நெடுந்தூரம் முன்னே சென்று விட்டார். கண்ணனுக்குப் புலப்படவில்லை. எந்த வழியே போனார் என்பதும் தெரியவில்லை. மேற்கே நோக்கி நாங்கள் வேகமாக ஓடினோம். கடைசியாக அவரை கூப்பிடு தூரத்திலே கண்டு " எந்த வழியாக வரவேண்டும் " என்று கத்தினேன். அதற்கவர் " வடக்குப் பாதை வழியே வாருங்கள் " என்று மறுசத்தம் கொடுத்தார். சற்றே தூரமாகச் சென்றோம். அங்கு பிதா நின்றுவிட்டார். 


அடர்ந்த காடு முன்னே போக வழியில்லை. பலர் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நாங்கள் காடு முழுதும் சுற்றிச்சுற்றி வந்தோம். கடைசியாக ஒரு தேக்குமரத் தோப்பிலே கொண்டுசேர்த்தது. நான் கீழே உட்கார்ந்துவிட்டேன். பசி பொறுக்க முடியவில்லை. தோசை தின்றோம். ஜலமில்லை. தாகமானால் ஒட்டிக்  கொண்டு போகிறது." இவ்வளவு தான் என்னாலே  நடக்க முடியும், அனாவசியமாக காடெல்லாம் சுத்த முடியாது " என்று சொல்லி அழுதேன். 


அப்போது பிதா சொல்லுகிறார் : " நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் , முன்னே போய் ஏதேனும் நல்ல வழி கிளைக்கிறதா என்று பார்த்து வருகிறோம் . என்று சொல்லி அவரும் வேறு பலரும் நந்நான்கு பேராக நாலுபுறத்தும் வழி தேடப் போனார்கள். சிறிது தூரம் போனவுடன் வடக்கே ஜனங்கள் நடக்கும்  சத்தம் கேட்டதாம்.


இன்னும் முன்னே போய்ப் பார்த்தார்களாம். அங்கே ஜனங்கள் பெருந்திரளாக போவதைக் கண்டு திரும்பி வந்து எங்களை அழைத்துச்சென்றனர். சிறிது தூரம் போனோம். அங்கொரு கோவில் இருக்கிறது. 


- மேலும்



1,283 views

2 Comments


I AM ALSO TRAVELLING WITH MAHAKAVI S BETTER HALF..CLASS

Like

அற்புதம்...

Like
bottom of page