ஜெயமோகனின் கொற்றவை மற்றும் முனைவர் வி.ஆர்.சந்திரனின் கொடுங்கோளூர் கண்ணகி என்ற இரு புத்தகங்கள் வழியாக கண்ணகியின் தடத்தில் தொடர்ந்த பயணத்தின் நிழற்பட கதை இது.
கொடுங்கோளூர் கண்ணகி கோயிலுக்கு மீனபரணித் திருவிழாவின்போதும் (09-April-2024) மற்றும் இடுக்கி-தேனி எல்லையில் உள்ள கண்ணகி கோவிலிலுக்கும் (23- April-2024) சென்றிருந்தேன். கண்ணகி மதுரை புகுந்த நாளின் நினைவாக பரணி விழா நடக்கிறது என்று கூறப்படுகிறது. விழா பற்றிய குறிப்புகளை கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.
ஜெயமோகனின் கொற்றவை மற்றும் முனைவர் வி.ஆர்.சந்திரன் எழுதி தமிழில் ஜெயமோகன் மொழிபெயர்த்த கொடுங்கோளூர் கண்ணகி என்ற இரு புத்தகங்கள் வழியாகத் தொடர்ந்த பயணம் இது. இந்தப் பயணத்தில் நான் உணர்ந்ததை அங்கு எடுத்த படங்கள் வழியாகவே பகிர்கிறேன்.

படம் 1: தன் கணவன் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, மலர் அணிந்த தன் கொண்டையைப் பிய்த்துத் தலையை உதற, நடக்கப்போவதை அறிந்த காலம் திடுக்கிட்டு அதிர்ந்தது.

படம் 2: தொடும் அனைத்தையும் எரித்துண்டு சமன் செய்யும் நெருப்பின் பசித்த நாக்குகளாய் அவள் மயிர்க் கொடிகள் ஒவ்வொன்றும் துடிதுடித்து எழ, நீதி கேட்கச் சென்றவளின் உடலில் குடிகொண்டது நாமறியாப் பிரிதொன்று.

படம் 3 : மாமதுரை வீதியில் அவளது வெம்மூச்சுக்காற்று பட்ட உடலெல்லாம் தானும் கொதிக்க, செஞ்சுடராய் எரிந்த அவள் கண்கள் தொடும் பெண்டிர் எல்லாம் தாங்களும் சுடர்ந்தெரிய, எங்கும் சிவப்பு சினந்து படர்ந்தது.

படம் 4 : சிலம்பொலியின் பெருமழை பெய்ய, வேங்கையின் கால்களில் விரையும் தாளமாய் மேளம் கொட்டி முழங்க, அண்ணயர் சூழ கண்ணகி அரசவை சென்றாள்.

படம் 5 : அரசியல் பிழைத்த அரசவையின் தரையில் சிதறிக்கிடக்கும் சிலம்புடைத்த முத்துக்கள், நீதி கேட்டுச் சுடர்ந்த பேரன்னையின் சொற்களாய் இம்மண்ணில் என்றும் அருள்ந்திருக்கக் கண்டனர்.

படம் 6 : கொற்றவையின் சிற்றாலயக் கருவறைக்குள் சென்ற கண்ணகி, பலிக்கல்லின் மீதிருந்த பள்ளிவாளால் தன் இடமுலையை வெட்டி வீசி உதிரம் கொட்டச் சதிர்ந்து விழுந்தாள் அவள் கால்களுக்கடியில்.

படம் 7 : நெருப்பு லட்சம் கரங்களாய் மாறி மதுரையை எரித்துண்டது. புகையும் புழுதியும் சேர்ந்து நெருப்பு விண்நெழ, மதுரை மாநகரம் மண் அடங்க, மக்கள் யாவரும் கொண்டாடித் திளைத்தனர்.

படம் 8: கோல் மறந்த ஆட்சியில் நீதிதப்பிச் செத்தழிந்த பல்லாயிரம் ஆவிகள் எழுந்து, இலைகள் சலசலக்கக் குலவையிட்டு, வெறியாட்டம் போட்டு மகிழ்ந்தன.

படம் 9: மலைமுடி சென்று ஊழ்கத்தில் அமர்ந்து விண்கலந்தாள் பேரன்னை.

படம் 10 : சோழ நாட்டில் பிறந்த பெருவணிகர் குடியினளாகிய கண்ணகி, தன் கணவனின் குற்றங்களை மன்னித்து அவனுக்காக வாழ்ந்த பேரன்பு கொண்ட மாமங்கலதேவி. நீதி வென்ற கொற்றவை. தவத்தில் அமர்ந்து நிறை கொண்ட அறிவமர்செல்வி. மூன்று நாடுகளுக்கும் உரிய தெய்வம் அவள். மூன்று படிகளிலும் மெய்மை அடைந்தவள். அன்பு அவள், அறம் அவள், அறிவு அவள்.
விழா பற்றிய குறிப்புகள்:
கொடுங்கோளூர் மீனபரணி திருவிழாவானது மலையாள நாட்காட்டியின் படி கும்ப மாதம் பரணி நாளன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்பு மீன மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோழிக்கல் மூடலில் ஆரம்பித்து ஏழு நாட்கள் தொடர்ந்து நிகழ அஸ்வதி நாள் காவுதீண்டலில் உச்சம் பெற்று முடிவடைகிறது. மீனபரணி நாளன்று கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்குமாறு சில சடங்குகளுடன் திருவிழா உண்மையில் நிறைவடைகிறது.
இந்த விழாவின்போது நடக்கும் வழிபாட்டு முறைகள் ஆதிவீரியம் கொண்டவையாக உள்ளன. பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கை பூசையறையில் கொடுக்கப்படாமல் வாசலுக்கு வெளியே நின்றபடி கோவில் மீது வீசப்படுகின்றன. கோழி வெட்டி குருதி பலி கொடுப்பது இன்று குறியீட்டுச்சடங்காக மாறி பல்லாயிரம் சிவப்புத் துணிகளால் பலிக்கல் மூடப்படுகிறது (படம் 3). சிலம்பொலி அதிர கன்னியின் செவ்வாடை உடுத்து கோவிலைச் சுற்றி வரும் வெளிச்சப்பாடுகள் தங்கள் குருதியை அன்னைக்கு படையலிட்டு வெறிகொண்டு ஆடுகின்றனர். கோயிலின் கூரைக்கம்பியைக் கட்டையால் அடித்து பெருங்கூச்சலிட்டுக் கொண்டாட்ட மனநிலையில் ஓடி வலம் வருகின்றனர் பல்லாயிரம் பக்தர்கள் (படம் 7). பல நூறு ஆண்டுகளாக மாற்றமின்றித் தொடர்கின்றன இந்த வழிபாடுகள்.
மலைமுடியில் அமைந்த ‘மங்கலதேவி கண்ணகி’ கோவிலுக்குச் செல்ல வருடத்தில் ஒரு நாள் மட்டும் சித்ரா பௌர்ணமி விழாவின்போது அனுமதிக்கப்படுகின்றது. பேரன்னை ஊழ்கத்தில் அமர்ந்து விண்கலந்த மாலையுச்சிப் பாறை, இன்று கேரள இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழக தேனி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.
Comments