top of page

கிழக்கு நோக்கி - 6

Writer's picture: இளம்பரிதி இளம்பரிதி

Updated: Jul 18, 2024

சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.



" சிங்கப்பூர் என்ற தேசத்திற்கென தனித்துவமான உணவு இல்லை, தமிழர், அரேபியர், சீனர், மலேயர், இந்தோனேசியார் ஆகியோரின் உணவுகளின் கலப்பே சிங்கப்பூரின் உணவு பாரம்பரியத்தை நிர்ணயித்துள்ளது "

பெருநகர் கூட்டாஞ்சோறு


19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை ஒரு செழிப்பான துறைமுக நகரமாக மாற்றினார், அதனைத் தொடர்ந்து சீனா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடைய சமையல் பாரம்பரியத்தை சிங்கப்பூருக்குக் கொடையளித்தனர்.


பெரும்பாலும் தள்ளுவண்டிகள் அல்லது தற்காலிக தங்குமிடங்களைப் பயன்படுத்தி குறைவான முதலீட்டில் பாரம்பரிய உணவகங்கள் துவங்கப்பட்டன, "ஹாக்கிங்" என்ற தெருவோர கடைகள் சிங்கப்பூரின் ஒரு வாழ்க்கை முறையாக மாறியது, பெருகிவந்த மக்கள் தொகைக்கு சுவையான, மலிவான உணவை ஹாக்கர் நிலையங்கள் பரிமாறத் துவங்கின.  சிங்கப்பூரின் நவீனமாக்களுக்கு  பல சிக்கல்களை இந்த சாலையோர உணவகங்கள் முன்வைத்தன, சுகாதாரச்சவால்கள் அதில் முதன்மையானவை, கட்டுப்பாடற்ற கழிவுகளும், உலகப்போரின் தாக்கமும், புதிய குடிபெயர்வுகளும் உணவகத் தொழிலை மேலும் முடக்கின.


இத்தனை தடைகள் அணிவகுத்தாலும் தேசத்தின் கலாச்சார அடையாளத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் நடைபாதை வியாபாரிகளின் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்தது, அதன் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கியது. 1960 இன் துவக்கத்தில் நடைபாதை உணவகங்களின் இடமாற்றம் துவங்கப்பட்டு 80கள் வரை நீண்டது, வெவ்வேறு இடங்களில் இருந்த  நடைபாதை வியாபாரிகளை பொதுவான இடத்திற்கு அரசு நகர்த்தியது. இதிலிருந்தே சிங்கப்பூரின் ஹாக்கர் சென்டரின் கருத்தாக்கம் துவங்கியது. இருபது வருட மறுஉருவாக்கத்திற்கு பின்னர் நடைபாதை வியாபாரிகள் எல்லாம் ஒரு மையப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டனர். 


இந்த மையங்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதாரத் தரத்துடனும், முறையான கழிவுகளை அகற்றும் நெறிமுறையுடனும், வாடிக்கையாளர்களுக்கான  இருக்கைகைகளுடனும் இயங்கத் துவங்கின, இத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாலை உணவகத்தின் சாரத்தை  ஹாக்கர் நிலையங்கள் தக்கவைத்துக்கொண்டது, அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பாகுபாடின்றி உணவைப் பகிர்ந்துகொள்வதற்கும், பழகுவதற்கும், உணவின் பெயரால் ஒன்று கூடுவதற்கும் துடிப்பான சூழலை ஹாக்கர் உணவு நிலையங்கள் உருவாக்கியது, இதனால் சிங்கப்பூரின் கலாச்சார ஒற்றுமையில் சாலையோர ஹாக்கர் உணவு நிலையங்களுக்கு முக்கியப்பங்கு உண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது. 


இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிறு உணவகங்கள் ஹாக்கர் நிலையத்தில் இயங்குகிறது. ஹாக்கர் நிலையத்தின்  வளாகத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் விதவிதமான மாமிச உணவுகளை நெருப்பில் வாட்டி விற்றுக்கொண்டிருந்தன. மீன்கள், இறால்கள், ஆக்டோபஸ், கடல் குதிரை, மேலும் பெயர் தெரியாத மாமிசத் துண்டங்கள் கம்பிகளில் சொருகப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்ட புகை மணம் என்னைச் சற்று மயக்கமுறச் செய்தது. நான் ஒரு இளநீரை வாங்கிப் பருகியபடி ஹாக்கர் நிலையத்திற்கு சென்றேன், உள்ளே யானையைத் தவிர அத்தனை மிருகங்களும் சமைக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன், யானையின் துதிக்கை நீளமும், தோலின் கணமும் மனிதனின் உணவாகாமல் யானையை பாதுகாக்கிறது என எண்ணத் தோன்றியது.


பிரவீன் பல முறை இங்கே வந்திருப்பதால் முக்கியமான சில உணவகங்களிலிருந்து எங்களுக்கு உணவுகளை வாங்கி கொடுத்தான், ஹாக்கர் நிலையம் பல வகையில் எனக்கு கோயம்பேடு காய்கறி சந்தையை நினைவு படுத்தியது, வெளித்தோற்றம், கலவையான காய்கறி மனம், கூட்ட நெரிசல் என எல்லாமுமே சென்னையில் இருப்பதைப் போன்றே தோன்றியது. 


சிங்கப்பூர் என்ற தேசத்திற்கென தனித்துவமான உணவு இல்லை, தமிழர், அரேபியர், சீனர், மலேயர், இந்தோனேசியார் ஆகியோரின் உணவுகளின் கலப்பே சிங்கப்பூரின் உணவு பாரம்பரியத்தை நிர்ணயித்துள்ளது. பல மலாய் உணவுகளின் அடித்தளம் இஞ்சி, மஞ்சள், லெமன்கிராஸ் மற்றும் மிளகாய் போன்ற பொருட்களால் ஆன "ரெம்பா" என்னும் மசாலாக்கலவை, இது தெற்காசிய கறிகள், சாதங்கள் ஆகியவற்றுக்கு தனித்துவமான சுவையும், நறுமணத்தையும் அளிக்கிறது. பொதுவாகவே மலாய் சமையலில் தேங்காய்ப்பால் பிரதானமான சேர்த்துக் கொள்ளப்படும். சிங்கப்பூர் சமையலும் அதற்கு விதிவிலக்கல்ல. சீன சமையலின் ஆதி நாதமான சோயா சாஸ், ஆய்ஸ்டர் சாஸ், போன்றவை பெருமபாலான சிங்கப்பூர் உணவுகளில் நிரம்பி வழிகின்றது. கறிவேப்பிலை, கடுகு, மைதா ரொட்டிகள்  ஆகியவை சிங்கப்பூர் சமையலில் இந்தியர்களின் பங்களிப்பு, இவ்வாறாக பல தேசத்தின் உணவு கலவையே சிங்கப்பூரின் உணவின் சுவை. 


என்னுடன் வந்திருந்த நண்பர்கள் சுட்ட கறிகளை வாங்கிக்கொண்டனர், அதை சோயா சாஸில் முக்கி உண்டனர். நான் லக்சா என்ற நூடுல்ஸ் சூப் சாப்பிட்டேன், தேங்காய்ப்பால், மொச்சைப்பயிர், பூண்டு, மிளகாய் கலவை ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என்ன சுவை அது என்றே சொல்ல தெரியவில்லை. முதல்முறை பன்றி, மாடு ஆகியவற்றின் உள்ளுறுப்புகள் கொண்டு சமைக்கும் ஒரு இடத்திற்கு சென்றமையால் கொஞ்சம் விசனமாக உணர்ந்தேன், நிக்கிதா உடன் இருந்து சாந்தப்படுத்தினாள், எந்த உணவகத்தை நோக்கியும் செல்ல மனம் இல்லாமல் தனியாக ஒரு மேஜையில் அமர்ந்து மக்களை வேடிக்கை பார்த்தேன். உங்கள் உடல் கோவில் அல்ல, அது ஒரு சாகச பூங்கா, எல்லா மிருகங்களும் ஒன்றுடன் ஒன்று விளையாடி உங்களுக்குள் சாந்தி பெறட்டும் என என நண்பர் ஜார்ஜ் எருமை வாலை கடித்தபடி எனக்கு அறிவுரை சொன்னார், அவர் வாயில் கவ்வியிருந்த வாலின் கனத்தைக் கண்டு புன்னகைக்க மறுத்துவிட்டேன். ரோஜக் என்ற ஒரு வகை சாலட் எனக்கு கொஞ்சம் ஆசுவாசத்தை தந்தது அன்னாசி, வெள்ளரிக்காய், பிற பச்சை காய்களுடன் வேர்க்கடலை சேர்த்து சமைக்காமல் பரிமாறப்பட்ட உணவு அது, கொஞ்சம் எலுமிச்சை சாறையும் நான் சேர்த்துக்கொண்டேன் தலைவலி நீங்கியது.  


எங்களை சுற்றி இருந்த பல உணவகத்தில் கேரட் கேக் விற்கப்படும் என்ற அறிவிப்பு இருந்தது, அதுமட்டும் தான் நான் அறிந்த உணவின் பெயராக இருந்ததால் நம் ஊர் பேக்கரியின் நினைவில் அதை வாங்கித் தர பிரவீனிடம் சொன்னேன், அவனும் வாங்கி கொடுத்தான். உண்ணும் போது பெரிய சுவையில்லாமல் உப்புருண்டை போல் இருந்தது, பன்னீர்த் துண்டு போல் கலகலத்தது பின்னர் தான் தெரிந்துகொன்டேன் அது முள்ளங்கியும், அரிசிமாவு சேர்த்து செய்யப்பட்ட உணவு என்று. என் குமட்டல் உணர்விற்கு ஏதுவான உணவாக பந்தன் இலை என்ற ஒருவகை இலையில் சமைக்கப்பட்ட சூப் நிக்கிதா வாங்கி கொடுத்தாள், திருநீற்றுப்பச்சிலை எல்லாம் சேர்ந்த தூதுவளை சூப் போல் இருந்தது, முழுவதுமாக அந்தி கவிழத் துவங்கியதும் ஹாக்கர் நிலையத்திலிருந்து புறப்பட்டு கால்நடையாக மெரினா கடற்கரை நோக்கி நடந்தோம். 


"மெரினா" என்ற சொல் பொதுவாக ஒரு துறைமுகம் அல்லது படகுகள் நங்கூரமிடப்பட்டுள்ள பகுதி என்று பொருள்படுகிறது. நம் சென்னை மெரினா கடற்கரை போல் சிங்கப்பூரின் மெரினா கடற்கரையில் மணலில் கால் பதித்து, நீரில் கால் நனைத்தெல்லாம் விளையாட இயலாது, கரையில் இருந்து மறுகரையை வேடிக்கை பார்க்க இயலும், கப்பலிலிருந்து அலை பாயும் நீரைப் பார்ப்பதை போல் கடலை மட்டும் வேடிக்கை பார்க்க இயலும். நாங்கள் இருந்த கரையை விட மறுபுறமிருந்த கடற்கரை பிரகாசமாகவும், வண்ணவிளக்குகளுடன் ரம்யமாகவும் காட்சியளித்தது. கார்டன்ஸ் பை தி பே என்ற உல்லாசப்  பூங்கா அங்கே உண்டு, இக்கரைக்கு அக்கரை பச்சை தான் என எண்ணிக்கொண்டேன். 


இந்த மெரினா கடற்கரையோரம் தான் சிங்கப்பூரின் புகழ்பெற்ற மெர்லயன் ( சிங்க முகமும், மீனின் உடலும் கொண்ட சிற்பம்) உள்ளது, நாங்கள் சென்ற சமயத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றதால் எங்களால் அந்தச் சிற்பத்தை பார்க்க இயலவில்லை. ஆரம்பத்தில் சிங்கப்பூர், ஒரு  மீன்பிடி கிராமம் என்ற வகையில் வகையில் ஜாவானீஸ் மொழியில் "டெமாசெக்" என்று அழைக்கப்பட்டது.  நாட்டுப்புறக் கதைகளின்படி இந்தோனேசிய இளவரசர் சங் நிலா உத்தமா முதன் முதலில் டெமாசெக் நகரில் இறங்கியபோது அங்கே ஓர் சிங்கத்தைக் கண்டான் அதன் அடிப்படையில் சிங்கப்பூரா என்று அந்த நகரத்திற்கு பெயரிட்டான், இன்று அந்த நகரமே சிங்கப்பூர். 1970களில் சுற்றுலா மற்றும் வர்த்தகக் காரணங்களுக்காக சிங்கப்பூரின் குறியீடாக மெர்லயன் சிற்பம் கடற்கரையில் நிறுவப்பட்டது, இன்று உலகம் அறிந்த ஒரு உருவம் இந்த சிங்க-மீன். 


மெர்லயன் சிற்பத்தை காணமுடியாது சற்று ஏமாற்றத்தை அளித்தது, நான் கடற்கரை அருகிலிருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் சீனத் திருமண வரவேற்பு நடந்தது, அதை வேடிக்கை பார்த்தேன். மிகவும் செல்வச்செழிப்பான மக்கள் கூடி நின்று சிரித்து மணமக்களை வரவேற்றனர், விலை உயர்ந்த பூக்கள் அந்த நிகழ்வில் பயன்படுத்தப்பட்டது. ஆடம்பர கார்களில் மக்கள் வந்து இறங்கினர், ஒரு கொரியத் திரைப்படம் பார்ப்பதை போல் இருந்தது. அந்த விடுதியின் பின்புறம் கடல் பார்த்தபடி "தி திங்கர்" என்ற புகழ்பெற்ற சிற்பத்தின் மாதிரி நிறுவப்பட்டிருந்தது, பிரெஞ்சு சிற்பி அகஸ்டே ரோடினின் இருபது வருட உழைப்பு அந்த வெண்கலச் சிற்பம். அந்தச் சிற்பம் ஒரு கல் பீடத்தின் மேல் அமர்ந்துள்ள நிர்வாண ஆண் உருவத்தை சித்தரிக்கிறது. சிற்பி ரோடின் மஹாகவி தாந்தேவின் "தி டிவைன் காமெடி" என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைத்ததாக தெரிகிறது, நரகத்தின் வாசலில் அமர்ந்திருக்கும் ஒரு கவிஞன் என்ற தோரணையில் இந்தச் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


அன்று மட்டும் இருபது கிலோமீட்டர்கள் நடந்திருப்போம், அனைவர்க்கும் கால் வலியும் உடல் சோர்வும் சேர்ந்துகொண்டது. கார் இருந்தால் மட்டுமே அடுத்த இடத்திற்கு செல்லுவோம் என அனைவரும் தர்ணா செய்தனர். சில நண்பர்கள் கடைவீதிக்கு செல்லவேண்டும் என ஆசைப்பட்டனர். நானும் நிக்கிதாவும் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனைச் சென்று சந்திக்க வேண்டும் என எண்ணினோம். நாங்கள் இருக்குமிடத்திலிருந்து இரண்டு மணி நேர சாலைப்பயணத்தில் சுனீல் தங்கியிருக்கும் கல்லூரி இருந்தது. பிரவீன் எங்களைப் பேருந்தில் லிட்டில் இந்திய வரை பயணிக்கச் சொன்னான், அங்கிருந்து கணேஷின் ஏற்பாட்டில் சுனீலைச் சென்று சந்திக்கலாம் என திட்டமிட்டோம். பிற நன்பர்கள் அவர்கள் விரும்பும் இடத்திற்கு சென்று, மறுதினம் காலை ஐந்து மணிக்குள் விமான நிலையம் திரும்பலாம் என முடிவு செய்தோம். 


எங்களுக்கு மிக தெளிவாக பேருந்து வழித்தடத்தை தெரிவித்து, பேருந்து ஏற்றிவிட்டான் பிரவீன். பேருந்தில் எங்கள் வங்கி அட்டையை காண்பித்ததும் பயணசீட்டு கிடைத்தது. அரை மணி நேர பயணம் களைப்பில் நிக்கி தூங்கிவிட்டாள். நான் பிரவீனுடன் உரையாடியதை எண்ணிக்கொண்டே வந்தேன். சிங்கப்பூரின் குடிமகனாக உன்னை உணருகிறாயா என்று நான் மாலையில் உணவருந்தும் போது கேட்டேன், இப்பொது நான் இந்தியனா, சிங்கப்பூரை சேர்நதவன என திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலாது. ஆனால் நிச்சயம் ஒரு இந்திய மனம் கொண்டவன் அல்ல, என்னால் பிறரின் நேரத்திற்கு அதிகம் மதிப்பளிக்க இயலுகிறது, சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க முடிகிறது, பாகுபாடின்றி பலதரப்பான மக்களுடன் நெருங்கி பழகமுடிகிறது , மிக நேர்மையாக என் அலுவல்களில் ஈடுபடமுடிகிறது, இந்த ஏழு வருடம் ஒரு வேலை இந்தியாவில் நான் கழித்திருந்தால் இந்த மாற்றங்களை என்னுள் உணராமலே போயிருக்கக் கூடும், எனவே இப்போது நான் சிங்கப்பூர் மனநிலைகொண்டவன் என்றான். நானும் நிக்கிதாவும் எங்கள் வாழ்வில் அந்த ஒரு நாள் சிங்கப்பூர் மன நிலை கொண்டவர்களாக இருந்தோம்.   


- மேலும்



91 views

Comments


தொடர்புக்கு : vazhi.travel@gmail.com 

சுவாரஸ்யமான பயண கதைகளை வாசிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் !

இணைந்தமைக்கு நன்றி !

© 2022 vazhi.net  அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

bottom of page