சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.

" இலைப்பூங்காவில் பல விதமான இலைகளின் காட்சி ஓர் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணர்வை அளித்தது, வட்டம், நீல் கூம்பு, இதயம், கண்ணீர்த்துளி, நட்சத்திரங்கள் போன்ற வடிவத்தில் இலைகளைக் கண்டோம்"
இலைகளில் ஓர் நகரம்
பட்சிகளின் வீடு திரும்புதல் அந்தி அருகில் வருவதை எங்களுக்கு உணர்த்தியது. நாங்கள் என் நண்பன் பிரவீணுக்காக இலைத்தோட்டத்தில் காத்திருந்தோம். சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் மலர்களுக்கென தனிப்பிரிவு இருப்பதைப் போல, இலைகளுக்கும் தனி பகுதியுள்ளது. புது தளிர் நிறத்திலிருந்து, காய்ந்து உதிர்ந்து தூளாகும் பதத்தில் உள்ள எல்லா வகை இலைகளையும் இங்கே காண இயலும். மரங்களின் அழகை மெருகேற்றுவது பூக்கள் என பொதுவான எண்ணம் உண்டு, பூவுக்கு நிகரான வசீகரம் கொண்டவை இலைகள்.
இலை மீதுள்ள ஒவ்வொரு மெல்லிய வடிவும் ஒரு காட்டின் கதையைச் சொல்கிறது, நாங்கள் பூங்காவில் கண்ட இலையுதிர் மரங்களான மேப்பல், ஓக் போன்றவை பரந்த, தட்டையான இலைகள் கொண்டுள்ளன. இதனால் அதிகபட்ச சூரியஒளியை உள்வாங்க இயலும். வெப்பம் மிகுந்த மாதங்களில் மரங்களின் வளர்ச்சியை இந்த இலைகளால் தூண்ட இயலும். இதற்கு நேர்மாறாக, பைன் மற்றும் ஸ்ப்ரூஸ் (spruce) போன்ற ஊசியிலை இலைகள் மரங்களிலிருந்து நீர் இழப்பைக் குறைக்கின்றன. இதன் மூலம் குளிர்ந்த, கடுமையான காலநிலையில் மரங்களால் உயிர்வாழ இயலுகின்றது.
இலையின் நரம்புகள் கையில் உள்ள கோடுகளைப் போல சிக்கலானதாகவும் தனித்துவமாகவும் இருக்கின்றது, மனம் மயங்கும் புதுமையான வடிவங்களை இலைகளில் காண இயலும். ஒரு இலையின் மேலோடும் கோடுகளின் மென்மையான நிறம், இலைகளுக்கு ஆழமான பரிமாணத்தை அளிக்கின்றன. இலைகள் மீதிருக்கும் ஒளி மற்றும் நிழலின் பின்னல் விளையாட்டு இலையின் காட்சி அழகை மேம்படுத்துகிறது, இலைகளை உயிருள்ள கலைப்பொருளாக சூரியஒளியே மாற்றுகிறது. மரத்தின் பிற பாகத்தைப் போல் அல்லாமல், இலைகள் அரிதாகவே நிலைத்தன்மை கொண்டவை. மழைத்துளிகளைப் பிடித்து முத்தாக்கி நுனியில் தேக்கி விழச்செய்யும், காற்றில் மெதுவாக சலசலக்கும் இலைகள் அமைதியின் உணர்வைத் தூண்டும், அதே நேரத்தில் புயலின் போது ஏற்படும் உக்கிர அதிர்வு இயற்கையின் மூல சக்தியைக் குறிப்புணர்த்தும்.
உலகின் பெரும் படைப்புகளில் இலைகள் முக்கிய குறியீட்டு அம்சம் பெற்றவை, அவை வளர்ச்சி, புதுப்பித்தல் மற்றும் வாழ்க்கையின் சுழற்சி இயல்பு ஆகியவற்றின் சின்னங்களாக கருதப்டுகின்றன. இலையின் வீழ்ச்சி மனச்சோர்வை தூண்டும் விதத்திலும், வசந்த காலத்தில் புதிய இலைகள் துளிர்ப்பது நம்பிக்கை, மறுபிறப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் நீண்ட காலமாக இலைகளிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளனர்.
சிக்கலான வடிவங்கள் மற்றும் இலைகளின் துடிப்பான வண்ணங்கள் எண்ணற்ற கலைப்படைப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. உலகின் மதங்களிலும், பல நாகரீகங்களிலும் இலைகளின் குறியீட்டுப் பயன்பாடு அதிக செல்வாக்கை செலுத்துகிறது. முக்கண் முதல்வனுக்கு வில்வம், திருமாலுக்கு துளசி, அம்மனுக்கு வேப்பிலை என இந்திய பண்பாட்டில் இலைகள் அதிகம் பயன்படுத்தப்படுவது பெரும்பாலும் நாம் அறிந்தது. கிரேக்க பாரம்பரியத்தில் ஆலிவ் இலைகள் அமைதிக்கும், வெற்றிக்கும் குறியீடாகப் பயன்படுத்தபடுகின்றது, இன்றும் ஒலிம்பிக் விளையாட்டில் வென்றவர்களுக்கு ஒலிவ் இலை கீரிடம் செலுத்துவது வழக்கமாக உள்ளது. ஆதாமும் ஏவாளும் அத்தி இலைகளையே ஆடையாக அணிந்ததாக நம்பப்படுகிறது. உலகை அடிமையாக வைத்திருக்கும் முக்கிய போதை பொருட்களான தேனீர், கஞ்சா, புகையிலை இவை யாவுமே இலைகள் தான்.
இலைகளின் பூங்காவில் நின்று யோசிக்கையில் எத்தனை இலைகளை நம்பி நம் அன்றாடம் இருக்கின்றது என்பது மலைப்பாக இருந்தது. விழாக்காலத்தை அலங்கரிக்க மாவிலை, தென்னை ஓலை கொண்டு தோரணம் செய்வோம். விஷேசம் என்றாலே முருங்கை இலை உணவில் இல்லாமல் இருந்ததில்லை, மந்தார இலையில் பரிமாறப்படும் புளியோதரை, பனை ஓலைப்பணியாரம், அரசமர இலை மோதகம், தாமரை இலையில் பரிமாறப்படும் தயிர் சோறு, பலா இலையில் செய்யப்படும் இட்லி , துளசி இலை தண்ணீர், வேப்ப இலை துவையல், வெற்றிலை தாம்பூலச்சாறு என முழு உணவே இலை அமுதாகும். பிணி வந்தாலும் இலைகளே துணையாக அமையும் கற்பூரவல்லி இலைத் தைலம், ஆடாதொடை இலை கஷாயம், நொச்சி இல்லை நீராவி மருத்துவம், காயம் ஆற்றும் எருக்கு இலை, என வாழ்வியலின் எல்லா நிலையிலும் இலைகள் இருக்கின்றன.
வளர்ந்து நிற்கும் மரங்களுக்கு இலைகளே உணவு சமைத்து அமுதூட்டும் தாய். இலை நரம்புகள் எப்போதுமே பேரிளம் பெண்ணின் புறங்கை பச்சை நரம்புகளை நினைவுறுத்தும், பழுத்து சிவந்த இலைகள் மருதாணி அணிந்த மங்கையின் நுனி நகத்தின் மிளிர்வை நினைவுறுத்தும். இலைகள் இல்லாத மரம் தென்றல் அற்ற பாலையை நோக்கித் திறந்து நிற்கும் ஜன்னல் போன்றது என்பது என் எண்ணம். வானின் உச்சியை நோக்கி நீளும் ஊசியிலை முதற்கொண்டு நீரின் பரப்பில் மீன் வலை போன்று பறந்து விரிந்துகிடக்கும் இலை வரை எத்தனை எத்தனை தோரணைகள் இந்த இலைகளுக்கு, பூவின் நிறத்திற்கு நிகரான நிறங்கள் இலைகளிலும் உண்டு. மண்ணோடு கலந்த வேர்களை காண்பது இனிமை, மலர்களை நுகர்தல் இனிமை, கனிகளை சுவைத்தல் இனிமை, கிளை அசையும் ஓசை ஓர் இனிமை, இலைகளைத் தொடுதல், அதன் வழவழப்பை தீண்டுதல் நிகரில்லா இனிமை, மரத்தின் அத்தனை முழுமையும் இலைகளையே நிறைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் என் இல்லத்தில் வாழை இலையில் உண்ணும் போதெல்லாம் இலை கிழியும் வரை அதை விரல் வைத்து தேய்த்து கொண்டே இருப்பேன், நகம் பதித்து பதித்து ஓவியம் வரைவேன், இலையின் ஓரத்தை பிரித்து அதன் கசப்பை கொஞ்சம் சுவைப்பேன். இலையின் மீது பரிமாறப்படும் பாயசத்தின் மதுரத்தை விட வாழை இலையை மேனியை விரல் தொடுவது ஓர் சுகம். எங்கள் அருகில் இருந்த வாழை மரத்தின் இலைமீது நத்தை ஒன்று ஊர்ந்து சென்று இலையை மென்று தின்றது அதன் உருவ அளவிற்கு ஒரு முழு வாழை இலையை பல மாத உணவாக தின்ன இயலும் என பட்டது, என்னை போல் அந்த நத்தையும் ஓர் வாழை இலை பிரியன்.
இலைப்பூங்காவில் பல விதமான இலைகளின் காட்சி ஓர் அருங்காட்சியகத்தில் இருக்கும் உணர்வை அளித்தது, வட்டம், நீல் கூம்பு, இதயம், கண்ணீர்த்துளி, நட்சத்திரங்கள் போன்ற வடிவத்தில் இலைகளைக் கண்டோம். நுணுக்கமான மடல்களும், நேர்த்தியான விளிம்புபட்டைகளும் ஒரு இலை ஓடம் போல் தோன்ற செய்கிறது, நாங்கள் நின்றிருந்த இடத்தில ஓர் சிறிய குளம், அதில் விழுந்த இலை மீது கட்டெறும்பு குழு ஒன்று பயணித்தது. ஒரு தாவரத்தின் அங்கம் பெரிய வாழ்விடமாக மாறும் காட்சி அது எனத் தோன்றியது, பரிணாம வளர்ச்சியின் முற்றுப்பெறா நாடகம்.
குளத்தை உற்று நோக்கி கொண்டே இருந்த போது, சிங்கப்பூரே நீர் மேல் மிதக்கும் ஓர் இலை என்ற சித்திரம் தோன்றியது. வளங்களையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்க்கு இலைகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, சிங்கப்பூரின் நகரத் திட்டமிடலும் ஒரு சீரான, இணக்கமான நகர்ப்புறச் சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இலையின் நரம்புகளை சிங்கப்பூரின் போக்குவரத்து வலையமைப்பிற்கு ஒப்பிடலாம். திட்டமிடப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் பொது போக்குவரத்து அமைப்புகள் சிங்கை தீவு முழுவதும் தடையற்ற பயண இணைப்பை உருவாக்கி உள்ளது. பேருந்துகள், MRT (Mass Rapid Transit), மற்றும் LRT (Light Rail Transit) உள்ளிட்ட சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து அமைப்பு ஒன்றோடொன்று இணைப்பதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பு தீவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகத் திட்டமிடப்பட்டுள்ளது, ஒரு இலைக்குள் ஊட்டச்சத்துக்கள் எவ்வாறு திறமையாகக் கொண்டு செல்லப்படுகிறதோ, அதுபோலவே போலவே சிங்கப்பூரில் குடியிருப்பாளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதும் எளிதானது. சிங்கப்பூர் மாநகராட்சி தற்சார்பு போக்குவரத்து முறைகளை அதிகம் ஊக்குவிக்கிறது, அதன் தொடர்ச்சியாக பாதசாரிகளுக்கு ஏற்ற பாதைகள், பிரத்யேக சைக்கிள் ஓட்டும் பாதைகள் போன்றவற்றை நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இலையின் மைய நரம்பிலிருந்து பிரிந்து செல்லும் நுண்ணிய கிளைகளை அமைப்புகளை பிரதிபலிக்கிறது.
மேலைக் காற்றில்
கிழக்கே குவியலாகும்
உதிர்ந்த சருகுகள்
என்ற பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ப்யூசனி’ன் ஹைக்கூ கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.
நாங்கள் இலைகளின் பூங்காவை முழுவதுமாக சுற்றி நடந்து களைப்பாகி அமர்ந்தோம். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக எங்களைச் சந்திக்க பிரவீன் வந்துவிட்டான், நானும் அவனும் கல்லூரியில் ஒரே துறையில் பயின்றவர்கள், கல்லூரியில் படித்த நாட்களில் இருவரும் அதிகம் உரையாடிக் கொண்டதில்லை ஏழு வருடங்களுக்கு பின் அவனை அன்று தான் சந்தித்தேன். பொதுவாகவே அவன் இருக்கும் இடமே தெரியாமல் மிகவும் அமைதியாக இருப்பவன், சிங்கப்பூர் அவனை நன்று மெருகேற்றியிருந்தது, என்னுடன் பயணித்திருந்த எல்லா நண்பர்களையும் முகமலர்ந்து வரவேற்றான்.
பூங்காவின் பல பகுதிகளைச் சுற்றிக் காண்பித்தான், சிங்கப்பூருக்கு வரும் நண்பர்கள் பாரக்கவேண்டிய இடங்கள் என ஒரு திட்டம் அவனிடம் இருந்தது. நாங்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதால் நாங்களே இணையத்திலிருந்து ஒரு பட்டியல் தயாரித்திருந்தோம், அவனே அறிந்திராத பல இடங்கள் எங்கள் பட்டியலில் இருந்ததால் பிரவீன் சற்று திடுக்கிட்டான்.
பிரவீன் கடந்த ஏழு வருடங்களாக சிங்கப்பூரில் வசித்து வருகிறான், கணினிகளுக்கான சிப்புகளை தயாரிக்கும் முக்கிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான். சென்னையில் கல்லூரி முடித்ததும் மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் வந்துவிட்டான், சிங்கப்பூரின் அரசு உதவித்தொகை பெற்று தேசிய தொழிநுட்ப கல்லூரியில் மிக குறைந்த செலவில் மேற்படிப்பை முடித்ததும் சிங்கப்பூரிலே பணியும் கிடைத்துவிட்டது. சிங்கப்பூரில் கல்வியின் தரம் எனபது இங்கு அளிக்கப்படும் சுதந்திரம் என்பதே என்றான். தேவையான வகுப்புகளை மட்டும் கல்லூரி சென்று படித்துக்கொள்ளலாம், எல்லா வகுப்புகளுக்கும் சென்று உட்காரவேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் படிக்கும் போதே கட்டாயம் பட்டபடிப்பு சார்ந்த ஒரு துறையில் வேலைக்குச் செல்லவேண்டும், அதற்கான ஏற்பாட்டை கல்லூரியே செய்து கொடுக்கும். சிங்கை வந்த முதல் மதமே அவனால் பணியில் இணைய முடிந்தது காலை பணிக்குச் சென்று, மாலையில் கல்லூரிப்படிப்பை தொடரந்தான். கல்லூரிப்பாடம் அவனுக்கு உதவுவதை விட அவன் கற்றுக்கொண்ட தொழிலே இன்று அவன் மிகவும் ஆக்கபூர்வமாக இயங்குவதற்கு உதவுகிறது என எங்களுடன் பகிர்ந்துகொண்டான்.
சிங்கப்பூரின் அரசமைப்புப் பற்றியும், இங்கே நிகழும் வாழ்வியல் நெருக்கடிகளையும் பற்றியும் விரிவாக என்னுடன் பகிர்ந்துகொண்டான். சுற்றுச்சூழலில் சிங்கப்பூர் அரசு எவ்வளவு கவனம் செலுத்துகிறது என்பதை எண்ணி நான் மெச்சிக் கொண்டதைக் கண்டு கொஞ்சம் கடுப்படைந்தான். பிற தேசங்களைப் போல் வேண்டும் என்றால் சுற்றுசூழல் பற்றி சிந்திக்கலாம் என்ற தளர்வோ , இயல்பான சூழலோ சிங்கப்பூருக்கு இல்லை. இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு தேவையான ஆரோக்கியமான சூழலை அமைப்பதற்கு பசுமையை பேணும் திட்டங்கள் மிக அத்தியாவசிய ஒன்றாக இருக்கின்றது என்பதை எனக்கு விளக்கினான்.
திடமான காலை உணவை கணேஷின் உணவகத்தில் சாப்பிட்டதால் மதிய உணவை பற்றிய எண்ணம் இல்லாமல் பூங்காவைச் சுற்றினோம், பிரவீனை கண்டதும் ஏனோ பசிக்கத் துவங்கிவிட்டது, நேரமும் மாலை நான்கை நோக்கி நகர்ந்தது. எங்களை ஹாக்கர் மையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான், பூங்காவிலிருந்து நடந்தே சென்றோம். பூங்காவில் இருந்தவரை பெரும் வனத்தின் விளிம்பில் இருக்கும் எண்ணமே அதிகம் இருந்தது, பூங்காவிலிருந்து சாலை நோக்கி நடக்கத் துவங்கியதுமே நகரின் விரிவு புலப்பட்டது.
வளர்ச்சி அடைந்த தேசங்களின் அடையாளமே வானளவு உயர்ந்த கட்டிடங்கள் தான், அது ஒரு அறைகூவல். ஒரு குறியீடு. ஒரு தேசத்துக்குள்ளே இருக்கும் தொழில்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் உயர்ந்தவை என்று நிரூபிக்க முயலுகின்றன, முக்கியமாக வங்கிகள். ஆசியாவின் வர்த்தகத் தலைநகரம் என்று சிங்கப்பூரை குறிப்பிட இயலும். பல தேசங்களிலிருந்து தொழில் நிலையங்கள் தங்கள் அமைப்பை சிங்கப்பூரில் நிறுவி தொழில் போட்டி செய்வதற்கு சிங்கப்பூர் ஓர் விளையாட்டு அரங்கமாகத் திகழ்கிறது.
சீட்டுக்கட்டுகள் போல் பத்து பனைமர உயரத்திற்கு கட்டிடங்கள் எங்களைச் சுற்றி உயர்ந்திருந்தன, பெரும் வணிக கட்டிடங்களைத் தலை தூக்கி பார்க்கையில், கணியின் மதர்போர்டில் ஊர்ந்து செல்லும் எறும்பு போல் உணரத் துவங்கினேன்.
அத்தனை கட்டிடங்களுக்கு மத்தியில் அழகிய வெள்ளை நாய் ஒன்றை நிக்கிதா கண்டுகொண்டுவிட்டாள் அவற்றுடன் ஓடிச்சென்று கொஞ்சல்களை துவங்கிவிட்டாள், அந்த நாயின் உரிமையாளர்கள் காதலில் மூழ்கியிருந்ததார்கள் நிக்கிதாவை கண்டுகொள்ளவில்லை, எத்தனை பூதாகரமான நகரத்திலும் தூய்மையான காற்றும் காதலும் இருக்கத்தான் செய்கிறது.
- மேலும்
Comentários