பயண நூல்கள்
இந்த தளத்தை உருவாக்கும் போதே ஓர் எண்ணம் எழுந்தது, தமிழில் வெளிவந்த பயண இலக்கிய நூல்களை தொகுத்து ஓர் அட்டவணை உருவாக்க வேண்டும். இந்த முயற்சியை துவங்கும் முன் தமிழில் பயணம் சார்ந்த நூல்கள் அதிகம் இல்லை, தமிழர்களுக்கு பயணம் செய்த அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்யும் வழக்கம் குறைவு என்ற எண்ணமே அதிகம் இருந்தது, ஆனால் இணையத்தில் தேடி சேகரித்த தரவுகள் பெரும் வியப்பையே அளித்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இங்கே பயண குறிப்புக்கள், கட்டுரைகள், கதைகள் இயற்றப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. தமிழன் பயண இலக்கிய முன்னோடியான ஏ.கே.செட்டியார் 1960களில் பயண இலக்கியங்களை தேடி சேகரிக்க தொடங்கிய போதும் இத்தகைய வியப்பையே அடைந்திருப்பார்.
இணையத்திலிருந்து அறிந்த தகவலின்படி தமிழின் முதல் பயண அனுபவ நூல் 1832இல் வீராசாமி என்பவர் எழுதிய "காசியாத்திரை" என்பதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. ஆனால் ஆதாரபூர்வமாக கிடைக்கும் தகவலின் அடிப்படையில் பார்த்தால் 1888 இல் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்பதை அறியமுடிகின்றது.
எப்படி கணக்கிட்டாலும் 150 வருட பயண இலக்கிய சரித்திரம் நவீன தமிழில் உண்டு, 1900க்கு முன்பு வரை தலபுராணங்களும், புனித யாத்திரை சென்று வந்த குறிப்புகளே அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன, பின்னர் தலைமறைவு, புலம்பெயர் வாழ்க்கை சூழலில் நாடு கடத்தப்பட்டவர்கள் எழுதிய குறிப்புகள் ஒரு வகை பயண எழுத்துக்களாக பதிவாகி உள்ளன.
1960களுக்கு பின் பயண வசதிகள் அதிகமாகியதும் அரசியல் தொடர்பான பயணம், கேளிக்கை சார்த்த பயணம், வரலாறு, கலை, பண்பாடு, மக்கள் தொடர்பான பயணங்களும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதை அறியமுடிகின்றது.
ஈழத்திலிருந்தும் நிறைய பயண நூல்கள் வந்துள்ளன, உலக பயணங்களையும், யாத்ரைகளையும் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் இனிமையான மொழிநடையில் பதிவு செய்துள்ளனர், இது வரை தமிழ் இலக்கிய சூழலில் ஈழ படைப்பாளிகளின் பயணம் சார்ந்த நூல்கள் பெரிய கவனிப்பை பெறாமலே இருப்பது வருந்த தக்க விஷயமே.
இந்த பட்டியலில் 160 பயண நூல்களுக்கு மேல் சேகரிக்கப்பட்டுள்ளது அதில் அறுபதுக்கும் மேற்பட்ட பதிப்பில் இல்லாத பயண நூல்களை இலவசமாக வாசிக்கவும், தரவிறக்கி கொள்ளவும் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பதிப்பில் உள்ள நூல்களை வாங்குவதர்க்கான சுட்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.