வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.
(முதற்கனல் 20 : அணையாச்சிதை , ஓவியம்: ஷண்முகவேல்)
"இன்று சென்று காசியில் கங்கையைக் காணும் போது, கங்கையில் படகில் செல்லும் போது அம்பையையும் படகோட்டும் நிருதனையும் எங்கேனும் பார்த்துவிடக்கூடும் என்றே மனம் எண்ணுகிறது."
வெண்முரசு காட்டும் இடங்கள்
காசி
முதற்கனலின் துவக்கத்திலேயே காசி இளவரசிகளின் சுயம்வரத்தில் காசி நகரம் அறிமுகமாகிறது. வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்த பிறைவடிவத் துறை கொண்ட நகரம். கல்லாலான அடித்தளம் மீது மரத்தால் எழுப்பப்பட்ட ஏழடுக்கு கோபுரம் கொண்ட விஸ்வநாதனின் பேராலயம் அங்கு இருக்கிறது. காசியின் படித்துறையெங்கும் கன்னியரும் அன்னையரும் நிறைந்திருக்க பல்லாயிரம் மணிகளும் மந்திரங்களும் ஒலிக்க நீர்க்கடன் செய்ய வந்தவர்களும், எண்ணற்ற சைவர்களும், வைணவர்களும், சாக்தர்களும் நடக்க, அனைத்துக்கும் மேலே விஸ்வநாதனின் ஆலய மணியோசை ஓங்கி ஒலிக்கிறது. கங்கை சுமந்து செல்லும் பல்லாயிரம் தீபச்சுடர்களால் காசி மாலையிலேயே முழுமை கொள்ளும் நகரமாக வருகிறது
அம்பிகை, அம்பாலிகை, பானுமதி, அசலை என்று காசியின் இளவரசியர் குருகுலத்துக்கு வந்து கொண்டே இருக்கிறார்கள். அம்பையின் அனலும் கங்கையின் அருளும் இணைந்தே அஸ்தினபுரியின் எல்லையில் காவலிருக்கின்றன..
அன்று முதல் இன்று வரை காசியும் கங்கையும் இதே போல என்றுமுள ஒன்றின் சான்றாக பாரதத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. இன்று சென்று காசியில் கங்கையைக் காணும் போது, கங்கையில் படகில் செல்லும் போது அம்பையையும் படகோட்டும் நிருதனையும் எங்கேனும் பார்த்துவிடக்கூடும் என்றே மனம் எண்ணுகிறது.
பிறகு பிரயாகையில் சியமந்தக மணியைக் கவர்ந்து சென்ற சததன்வாவின் கிருஷ்ணவபுஸுக்கு கங்கையில் செல்லும் போது காசியின் துறைமுகத்தை படகிலிருந்து சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் பார்க்கிறார்கள். நதியிலிருந்து பார்க்கையில் புடவிக்கிறைவனின் ஆலய கோபுரம் பன்னிரு அடுக்குகளாக பெரிய படிக்கட்டுகளுக்கு மேல் தெரிகிறது. மணிகர்ணிகை தேவியின் படிக்கட்டிலும் அரிச்சந்திர ஆலயம் அமைந்த படிக்கட்டிலும் சிதைகள் எரிவதை படகுகளில் இருந்து பார்க்கிறார்கள். காசியின் புடவிக்கிறைவனின் வேள்விக்குளமென கருதப்படும் அச்சிதைநெருப்பு தொலைவிலிருந்து நோக்குகையில் சிற்றகல்களெனத் தெரிகிறது.
கிராதத்தில் காசியைக் குறித்து பிச்சாண்டவர் வைசம்பாயனனிடம் இவ்விதம் சொல்கிறார்:
"அங்கு இரு பெரும் சுடலைத்துறைகளில் இரவும் பகலும் எரிதாழாது சிதைகள் எரிகின்றன. அத்தழல்களுக்கு நடுவே கையில் முப்புரிவேலும் உடுக்கையும் கொண்டு வெற்றுடல் கோலமாக காலபைரவன் நின்றிருக்கும் ஆலயம் உள்ளது. அவன் கையிலிருந்து உதிர்ந்த கப்பரை குருதி உலராத பலிபீடமாக ஆலய முகப்பில் அமைந்துள்ளது. நாளும் பல்லாயிரவர் பலியும் படையலும் கொண்டு அங்கே வருகின்றனர். அவ்வாலயத்தின் முகப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவுமணி ஓய்ந்து ஒலியடங்கும் கணமே இல்லை.”
காசியில் ஆலயத்திற்கு தென்மேற்கே படித்துறையருகில் பார்ப்புக்கொலைப் பேய் தொழுத கையுடன் மூதாட்டி வடிவில் அமர்ந்திருக்கிறாள் என்றும் கங்கையில் நீராடுவதற்கு முன் அவள் முன்னிலையில் பழைய ஆடைகளை நீக்குவது மரபு என்றும் கூறுகிறார். இறந்தோர் ஆடைகளும் அங்கு குவிக்கப்பட்டு அன்று போல இன்றும் எரியூட்டப்படுகின்றன.
சிபி நாடு
பாரதவர்ஷத்தின் வடக்கெல்லையில் அமைந்த உத்தரபதத்தின் வணிகர்கள் செல்லும் வணிகப்பாதை அம்மலைகளின் ஊடாகவே செல்கிறது. வணிகர்களுக்கான செல்வழியை மலைக்குடிகள் காக்கிறார்கள். அவர்களுக்கு இல்லங்களும் உணவும் அளிக்கிறார்கள். மலைப்பகுதிகளில் வலுவான கோட்டைகளை கட்டி உத்தரபதத்தின் வணிகச்சாலைகள் முழுக்க காவல்மாடங்களை அமைக்கவேண்டும் என சல்லியர் மற்ற மன்னர்களிடம் சொல்கிறார். அதன் பொருட்டு குருகுலத்தில் தோன்றிய பால்ஹிகரை சிபிநாட்டிலிருந்து அழைத்து வந்து பிரிந்து கிடக்கும் பால்ஹிகக் குடியினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும் திட்டத்தை சல்லியர் வகுக்கிறார். அதற்காக பூரிசிரவஸ் சிபி நாட்டுக்குப் பயணமாகிறான்.
சிபிநாட்டின் வெறுமைமூடிய பாழ்நிலம் குறித்து பலவிதமான பாலை நில வருணனைகள் வருகின்றன:
இரவுகளில் கூடாரங்களின்மேல் மழையென மணல் பெய்துகொண்டே இருக்கும் பாலை,
நோக்க நோக்க ஒளிகொள்ளும் பாலை,
கால்கீழ் அடியிலி திறந்துகிடக்கும் தவிப்பு ,
திசைகள் திறந்துகிடக்கும் பாழ்வெளி,
பாலை நிலத்தின் வான் முகில்களே இல்லாத நீலநிறமான வெறுமை. நீலநிறமான இன்மை.
சிபி நாட்டுப் பாலையில் பயணம் செய்வோரின் உடல்களும் வரிவரியாக வெடித்த தோலோடு அங்குள்ள பாறைகளைப்போலவே வெந்து அனல்நிறமாகியிருக்கின்றன. அங்கே சென்று சேர்ந்ததும் நீர்க்குளியலுக்குப் பதிலாக மெல்லிய இறகுக்குவையால் உடலை நன்றாக வீசித்துடைப்பதை அவன் பார்க்கிறான். அதிலிருந்த வாசனைப்புல்தைலம் அவன் உடலின் நூற்றுக்கணக்கான விரிசல்களை எரியச்செய்கிறது. நீர்பட்டால் அத்தனை புண்களும் சீழ்கட்டிவிடும் என்பதால் அவ்விதம் செய்கிறார்கள்.
தேவபாலபுரம்
சிந்துவின் பெருக்கில் பயணம் செய்யும் பீஷ்மர் கடல் முகத்தில் அமைந்திருக்கும் மானஸுரா தீவுக்கும் (இன்று கராச்சிக்கு அருகே உள்ள மனோரா தீவு) அதன் அருகே இருக்கும் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகமான தேவபாலபுரத்துக்கும் எளிய காவல் வீரனென தன் அடையாளம் மறைத்து செல்கிறார். கராச்சிக்கு அருகில் இருக்கும் தேபல் என்ற இடம் வெண்முரசில் பீஷ்மர் செல்லும் தேவபாலபுரம் என்ற பெருந்துறைமுகமாக வருகிறது. யவனநாட்டிலிருந்தும்(கிரேக்கம்) சோனகநாட்டிலிருந்தும்(அரேபியா) பீதர் நாட்டிலிருந்தும்(சீனம்) அங்கு நாவாய்கள் பொருள்கொண்டு பொருள்பெற்றுச்செல்லும் கடல்வணிகத்தின் அன்றைய சித்திரத்தை அளிக்கிறது.
மிருதஜனநகரம்
மழைப்பாடலில் திருதராஷ்டிரனுக்காக பெண் கேட்டு காந்தரத்துக்கு பீஷ்மர் செல்கிறார். வழியில் பீஷ்மர் சிந்து சமவெளி நாகரீகத்தின் எச்சங்களான "இறந்தவர்களின் நகரம்" என்று பாலை மக்களால் குறிப்பிடப்படும் மொஹெஞ்சதாரோ பகுதியைப் பார்க்கிறார். சுட்டசெங்கற்களாலான ஒரு கைவிடப்பட்ட ஊராக அது பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆயிரம் வருடகாலம் பழைய பாடல்களையும் குலவரலாற்றையும் நினைவில் வைத்திருக்கும் குலப் பாடகர்கள் கதைகளில் நினைவுகளாக எஞ்சி நிற்கிறது. நமது எழுத்தில் ஆவணம் செய்யப்படாத வரலாறு குலப் பாடல்களுக்கும் தொன்மங்களுக்கும் மறைந்து நிற்பதை உணரச் செய்யும் பகுதி இது.
"ஐந்து நிவர்த்தன நீளமும் அதேயளவு அகலமும் கொண்ட நகரம் அது. முதலில் பெரிய கோட்டை ஒன்று நகரைச் சூழ்ந்திருந்தது. அது சுட்டசெங்கற்களால் கட்டப்பட்டு மேலே மண்ணாலான கட்டுமானம் கொண்டதாக இருந்திருக்கலாம். மண்கோட்டை கரைந்தபின் செங்கல் அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது. ஐந்தடி அகலம் கொண்ட அடித்தளம் அந்தக்கோட்டை எப்படியும் பதினைந்தடி உயரம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
கோட்டைக்குள் அரண்மனைக்கோட்டை தனியாக இருந்தது. அரண்மனையின் அடித்தளம் பன்னிரண்டடி உயரத்தில் மண்கொட்டி மேடாக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்த நகரத்தின் வீடுகள் முழுக்க சுட்ட செங்கற்களால் அடித்தளமும் முதற்தளமும் அமைக்கப்பட்டு மேலே மரத்தாலான எடுப்புகள் கொண்டவையாக இருந்திருக்கலாமென்று தோன்றியது. அவை முழுக்க எரிந்தழிந்து மழையில் கரைந்து மறைந்திருக்க சுட்ட அடித்தளங்களும் பாதி இடிந்த அடிச்சுவர்களும் மட்டும் எஞ்சியிருந்தன. அவை செந்நிறச் சதுரங்களாக மாபெரும் வேள்வி ஒன்று நடந்தபின் கைவிடப்பட்ட எரிகுளங்கள் போலிருந்தன."
காந்தாரம்
திருதராஷ்டிரருக்கு பெண் கேட்டு செல்லும் பீஷ்மர் காந்தார நகரத்துக்குள் நுழையும் போது தாரநாகம்(தார்னாக்) என்னும் துயிலும் ஆறொன்றைக் கடக்கிறார். முற்றிலும் ஓசையே இல்லாமல் ஆழ்ந்த நீலநிறத்தில் இருக்கும் அதன் நீரை எந்த மிருகமும் வாய்வைத்து அருந்துவதில்லை என்பதை காண்கிறார். மிகுந்த கனவுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நகரமாக காந்தாரநகரம் அறிமுகமாகிறது. பாலை நிலத்தின் பேராசை என்று அக்கோட்டை தெரிகிறது. காந்தாரத்தின் பெரிய நகரங்கள் வடக்கே குஃபாவதிக்கரையில்(காபுல்) இருக்கும் புருஷபுரமும்(பாகிஸ்தானின் பெஷாவர்) அப்பாலிருக்கும் தக்ஷசிலையும்(பாகிஸ்தானின் தக்ஷிலா).
உத்தரபதம் என்பது ஆரியவர்தத்தின் வடக்கே அமைந்த பெருவணிகப் பாதை. கிழக்கே வங்கத்தில் கங்கை முகத்துவாரத்துவமான தாம்ரலிப்தியிலிருந்து இந்திய கங்கை சமவெளியினூடாக பாஞ்சாபைக் கடந்து காந்தரத்தில் நுழைந்து பால்ஹிகம் வழியாக மத்திய ஆசியப் பகுதிகளுக்கு செல்லும் உத்தரபதத்தின் அருகே உள்ளன அந்நகரங்கள்.
நந்ததேவி
சதசிருங்கத்தில் பாண்டு தன் மனைவியரோடு தங்கிய குடிலை கானகத்தீ எரித்த பிறகு இன்னும் மேலே மலையிடுக்கில் அமைந்த புஷ்பவதி என்னும் சோலைக்கு செல்கின்றனர். இருபக்கமும் ஓங்கி பனிசூடிய மலைகளின் நடுவே, எங்கெங்கும் அருவிகள் பாலெனப் பொழிந்து கொண்டிருக்க, அம்மலைச்சரிவு செந்நிறத்தின் நூறு வண்ணமாறுபாடுகளினாலான துணிக்குவியல்போல காட்சியளிக்கிறது. இன்றைய சுற்றுலாத் தலங்களில் புகழ் பெற்ற உத்தராகண்ட்டில் உள்ள மலர்ப் பள்ளத்தாக்கை (valley of flowers) நினைவுறுத்தும் மலர்வெளி. நந்தாதேவி சிகரத்துக்கு அருகே இருக்கிறது இப்பகுதி.
பாஞ்சாலம்
பாஞ்சாலம் என்பது இமையமலை அடிவாரத்தில் இருந்து இன்றைய அலஹாபாத் வரையிலான இடமாக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இமையத்தை ஒட்டிய பகுதி உத்தர பாஞ்சாலம். கங்கையை ஒட்டியது தட்சிண பாஞ்சாலம். இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நிலப்பகுதி இது. பாரதவர்ஷத்தின் தொல்தேசங்களில் ஒன்றாகிய பாஞ்சாலம், கிருவிகுலம், துர்வாசகுலம், கேசினிகுலம், சிருஞ்சயகுலம், சோமககுலம் என்னும் ஐம்பெரும் குலங்களால் ஆளப்பட்ட கங்கை நதி பாயும் சதுப்பு. பின்னாளில் பாஞ்சாலம் என்னும் ஒற்றைநாடாக ஆகிறது.
சோமக குலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தபோது அது இருநாடுகளாகிறது. தட்சிண பாஞ்சாலத்தின் தலைநகரமாக காம்பில்யம் உருவாகி வருகிறது. அதை முதற்கனல் நிகழும் காலத்தில் சிருஞ்சயகுலத்து பிருஷதன் ஆண்டு வருகிறான். பாஞ்சாலத்தை ஒன்றாக்கி தன் மைந்தன் யக்ஞசேனனை(துருபதன்) மன்னனாக்க பிருஷதன் எண்ணியிருக்கிறான்.
உத்தரபாஞ்சாலத்தின் தலைநகரம் சத்ராவதி. அங்கே அப்போது சோமகவம்சத்து சோமகசேனன் ஆட்சி புரிகிறான். அவனுக்கு மைந்தர்கள் இல்லை. அவனே அம்பையின் அழலை வாழ்வென அமைத்துக் கொண்ட சிகண்டியை பாஞ்சாலத்தின் இளவரசனாக்குகிறான்.
தலைமுறைகாலமாக இரண்டாகப்பிரிந்திருந்த பாஞ்சாலம் ஒன்றாகி துருபதனின் காலத்தில் காம்பில்யம் மிகப்பெரிய நகராக இருக்கிறது. துரோணர் தனது வஞ்சத்தின் பொருட்டு அர்ஜுனனைக் கொண்டு பாஞ்சாலத்தை வென்ற பிறகு, அஸ்வத்தாமன் சத்ராவதியைத் தலைநகரெனக் கொண்டு உத்தர பாஞ்சாலத்தை ஆள்கிறான். துருபதன் காம்பில்யத்தைத் தலைநகரெனக் கொண்டு தட்சிண பாஞ்சாலத்தை ஆள்கிறார்.
மிகப் பெரிய துறைமேடைகளைக் கொண்ட வணிகம் செழித்த பெருநகரமாக காம்பில்யம் திகழ்கிறது. துரோணர் துருபதனைக் காண வரும் வண்ணக்கடல் பகுதியிலும், வெண்முகில் நகரத்தில் சாத்யகியின் விழிவழியே விரியும் நகராகவும், கர்ணனோடு துரியோதனன் சிறுபடை கொண்டு வந்து காம்பில்யத்தைத் தாக்கும் பகுதிகளில் இதன் துறைமுகக் குறிப்புகள் வருகின்றன.
தெற்குப் பாஞ்சாலத்தின் தலைநகரான காம்பில்யத்தின் அறிமுகம் தெற்குவாயிலில் மயானங்களுக்கு அப்பால் இருக்கும் சிறிய கற்கோவிலில் துவங்குகிறது. நெடுங்காலமாக திறக்கப்படாத தெற்குக் கோட்டைவாயில், கைவிடப்பட்டு உடைந்த காவல்மாடத்தின் மரக்கூரையில் சருகுகள், புதர்களுக்குள் வாழும் கூடுகாத்தான் குருவி, கோரையடர்வுக்குள் ஓடிய கீரி, மிகத்தொலைவில் ஊளையிடும் நரி, அழுகியசேற்றும்ணம் கொண்ட சதுப்பு என்று குருத்திக்கென காத்திருக்கும் கைவிடப்பட்டவற்றின் கண்ணீரின் காட்சிப் படிமங்கள் விரிகின்றன.
சண்டிகையின் ஆலயத்தில் துடிதாளம் எழ அங்கே ஒருவன் தன் கழுத்தை அறுத்துப் தற்பலி ஆகிறான். கோரை பற்றிக்கொண்டு புல்பொசுங்கும் வாசம் எழுகிறது. மண்ணில் வந்த கொற்றவையின் மணத்தன்னேற்புக்கு முன்னரே வருவதுகூறும் முற்காட்சி இது. ஐந்து அன்னையரின் ஆலயங்கள், நகர வீதிகள் எனக் காம்பில்யம் அணிகொள்கிறது.
சௌவீரம்
மேற்கே யவனதிலிருந்து வந்து குடியேறிய மக்களைக் கொண்ட சௌவீரநாடு பாரதவர்ஷத்தின் வடமேற்கே இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நிலம் என்று பிரயாகையில் விதுரர் திருதராஷ்டிரரிடம் விவரிக்கிறார். தட்சிண சௌவீரத்தை ஹரஹூண குலத்தைச் சேர்ந்த விபுலன் ஆட்சி செய்கிறான்.
உத்தர சௌவீரத்தை வடக்குப் பெரும்புல்வெளிகளில் வாழும் தார்த்தர்கள் இனத்தைச் சேர்ந்த தத்தமித்ரன் ஆட்சி செய்கிறான். ஹரஹூணர்கள் சீனாவின் க்சின்ஜியாங் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தார்த்தர்கள் (டார்டார்-Tartar) ருஷ்ய-சீன எல்லையின் பெரும்புல்வெளிகளில் (ஸ்டெப்பி புல்வெளிகள்) வாழ்ந்தவர்கள் என்றும் வரலாற்றுக் குறிப்பிருக்கிறது. அவர்கள் பீதர்களின் வணிகப்பாதையை கட்டுப்படுத்துகிறார்கள். அவர்களுக்குத் தேவையாய் இருப்பது கடலைத் தொடும் ஒரு நிலம். ஆகவே கூர்ஜரத்தை வெல்ல எண்ணுகிறார்கள்.
சிந்துவை கைப்பற்றி தேவபாலபுரம் (இன்றைய பாகிஸ்தானின் சிந்து நிலப்பகுதி கராச்சி வரை) வரை கப்பல் செல்லும் பாதையை அவர்கள் அடைந்துவிட்டார்கள் என்றால் சிந்துவின் கரைமுழுக்க காவல்படைகளை அமைத்து வல்லமை பெற்று விடுவார்கள். அதனால் பாண்டவர்களை அனுப்பி சௌவீரர்களை அஸ்தினபுரி வெல்கிறது.
வாரணவதம்
அர்ஜுனன் கிருஷ்ணனுடன் இணைந்து நிகழ்த்திய போரில், மதுராவில் சரண் அடைந்த ஹிரண்யபதத்தினரைக் கொன்றதும் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்ததும் பெரும்பிழை என்று அதற்குக் கழுவாயாக பாண்டவர்களை கணிகரின் திட்டப்படி வாரணவதம் சென்று அங்குள்ள முக்கண்ணன் ஆலயத்தில் நோன்பிருந்து வரும்படி திருதராஷ்டிரால் முடிவு செய்யப்படுகிறது.
பாண்டவர்களும் குந்தியும் கங்கையில் படகில் ஒரு இரவும் பகலும் சென்று சிருங்கபதம் என்னும் மலைநாட்டைச் சேர்ந்த வாரணவதத்தை அடைகிறார்கள். அரக்கு மாளிகையில் அவர்களை எரித்தழிக்கும் திட்டத்தை அறிந்து, அதிலிருந்து தப்பித்து சுரங்கப் பாதை வழியாகக் கங்கைக் கரைக்கருகே ஒரு பாழும் கிணற்றுக்குள் இருந்து வெளியேறுகிறார்கள். அந்த சுரங்கவழியின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஒன்று.
மாபெரும் நாகம் ஒன்றின் உடலுக்குள் செல்வது போல நீண்டிருக்கும் பாதையில் குகைக்குள் நீர்த்துளிகள் சொட்டும் குளிரும் இருளும் நிறைந்திருக்கிறது. அவர்களின் காலடிகள் சேற்றில் பதியும் ஓசையும் மூச்சொலியும் நாகத்தின் சீறல் போல கேட்கிறது. முழந்தாளிட்டே முன்னகரக் கூடிய அளவிலான பாதை. இமயப்பகுதியின் மண் உறுதியற்றது என்பதால் பழமையான முறையில் மூங்கிலைக் கொண்டு சுரங்கம் அமைத்திருக்கிறான் அந்த அரக்கு மாளிகை கட்டிய புரோசனன்.
மூங்கிலை வளைத்து அதன் மேல் மரப்பட்டைகளையோ மூங்கில்தட்டியையோ அமைத்து அந்தச்சட்டத்தை மண்ணில் பதித்து, அதற்குள் உள்ள மண்ணை அள்ளி வெளியே எடுத்துக்கொட்டி அதை உள்ளே தள்ளி, அதன்பின் அடுத்த சட்டத்தை அதற்குள் பொருத்தி உள்ளே உள்ள மண்ணைத் தோண்டிச் செல்லும் முறை. மண் மூங்கில் வளைவுக்கு மேல் அமர்ந்திருக்கிறது. அந்த வடிவத்தை மண் ஏற்று வேர்கள் பின்னிவிட்ட பின்னர் மூங்கில்வளைவில் மண்ணின் எடையே ஏறாது இருப்பது போல ஒரு கட்டுமானம் என்று பீமன் விளக்குகிறான்.
அப்பாதை அங்கு வாரணவதத்தைச் சுற்றியிருக்கும் தேவதாருக் காட்டின் ஆணிவேர்களைத் தவிர்த்து மிக ஆழத்துள் செல்வதால் சற்றுத் தொலைவுக்கு ஒரு முறை ஒரு பெரிய மூங்கில்குழாய் மேலே காற்றுக்குத் திறந்திருக்கும்படி நடப்பட்டிருக்கிறது. இறுதியாக அந்த சுரங்க வழி ஒரு ஆழமான பாழுங்கிணற்றில் முடிகிறது. அதிலிருந்து வெளியேறி கங்கையைக் கடந்து மானுடர் வாழாத இடும்பவனத்துள் நுழைகின்றனர்.
சிவன் யானையின் கரிய தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட இடம் என்று புராணக் கதை விளக்கம். இதே வாரணவதம் நிகழ்ந்த இடங்களாக வேறு சில இடங்களும் குறிப்பிடப்படுவது பின்னர் கிராதத்தில் பிச்சாடனார் சொல்கிறார்.
- மேலும்
コメント