வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.
(முதற்கனல் 40: வேங்கையின் தனிமை, ஓவியம்: ஷண்முகவேல்)
" பனித்துளி துளிர்த்து சொட்டும் ஒலி ஊழ்கநுண்சொல் போல் காட்டை சூழ்ந்திருக்கிறது. அடர்காட்டில் நடக்க நீண்ட கழிகளை வெட்டி முனை கூர்செய்து கையில் கொண்டு செல்கிறார்கள். ஆண்டுக்கு மூன்று மழைக்காலம் திகழும் அத்தென்னகம் பெருங்காடுகளின் நிலம் "
வெண்முரசு காட்டும் இடங்கள்
நெடுங்கடல் நெய்தல்
மழைப்பாடல் கூர்ஜரத்தின் கடற்கரையில் நின்றிக்கும் பீஷ்மரிலிருந்து தொடங்குகிறது. தென்கிழக்கு பருவமழையின் பருவம், சிந்துவின் நீர் வெம்மையில் ஆவி எழுப்பிக்கொண்டிருக்கிறது. சிந்து சமநிலத்தை அடைந்தபோது அதில் வேகமும் அலைகளும் அடங்குகின்றன. கடலே காற்றெனப் பெருகிச் செல்வது போன்ற கடற்காற்றும், மழைக்காலத்தில் இடம்பெயரும் கூர்ஜரத்தின் மணல்மலைகள் குறித்தும் படகோட்டி பேசியபடி சிந்து நதியில் படகு செலுத்துவதன் காட்சிகளைக் காண்கிறார் ஷத்ரிய வீரர் என்று மட்டுமே அடையாளம் கொண்ட பீஷ்மர்.
விடியற்காலை இரண்டுநாழிகைநேரம் மட்டும்தான் கடலுக்குள் செல்வதற்குரிய நீரோட்டம் என்றும் நீரோட்டமே அள்ளித்தூக்கி மானஸுரா தீவுக்குக் கொண்டுசென்றுவிடும் என்றும் அங்கேதான் பாரதவர்ஷத்தின் மிகப்பெரிய துறைமுகமான தேவபாலபுரம் உள்ளது என்றும் படகோட்டிகள் சொல்கிறார்கள். கூர்ஜரத்தில் சிந்து கடலை சந்திக்கும் இடத்தில நிகழும் கடல்வேலியேற்றத்துக்காக காலை வரை காத்திருந்து, அவ்விதம் அணுகும் போது கடல் பள்ளத்தில் இருப்பதாகவும் மொத்த நதியும் அருவியென அதைநோக்கிச் செல்வதாகவும் தோன்றும் பகுதி, ஒரு படகில் பெருநதி நீரோட்டத்திலிருந்து கடலை அணுகும் அனுபவத்தைத் தருவது.
சிபி நாட்டின் பாலையிலும், மூலத்தானநகரி முதல் தேவபாலபுரம் வரை படகுகளிலும், வணிகர்களுக்கு பாதுகாவலராகப் பணியாற்றி பீஷ்மர் அங்கு வந்து சேர்கிறார். கடற்புறங்களில் பொழியும் பருவமழையையும் இப்பகுதி காட்சிப்படுத்துகிறது.
மகாபாரத காலகட்டத்தில்தான் உலகளாவிய கடல்வணிகம் உருவாகி வருகிறது. அங்கே கன்னங்கரிய காப்பிரிகளும்(ஆப்பிரிக்கர்கள்), செந்நிறமான யவனர்களும்(கிரேக்கர்கள்), வெண்ணிறமான சோனகர்களும் (அரேபியர்கள்), மஞ்சள் நிறமான பீதர்களும்(சீனர்கள்) கூடி வெவ்வேறு மொழிகளில் பேசிய இரைச்சல் எந்நேரமும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
“பாரதவர்ஷத்தின் மாபெரும் துறைமுகமான தென்மதுரை மட்டுமே இதைவிடப்பெரியது”
என்று தென்தமிழகம் பற்றிய குறிப்பொன்றும் இப்பகுதியில் வருகிறது.
அஸ்தினபுரியில் சத்யவதி திருதராஷ்டிரருக்கும் பாண்டுவுக்கும் மணஉறவென காந்தாரத்தையும் யாதவ நிலத்தையும் திட்டமிட்டு அதன் வழியாக மேலும் உறுதியான அஸ்தினபுரிக்கு அடிகோலும் சத்யவதியின் கனவுகளை பீஷ்மர் விவாதிக்கிறார். அவர் எப்போதும் பயணங்களில் இருப்பதால் எழுந்து வரும் மாற்றங்களைக் குறித்து சத்யவதியிடம் உரைக்கிறார். குருவி பறக்கும் தூரத்துக்கு ஒரு நிலத்தை அரசென்று கூறிக்கொண்டு கங்கைப் பகுதி ஷத்ரியர்கள் வாழ்கிறார்கள். கங்கையும் சிந்துவும் உழைப்பே இன்றி வளங்களை அள்ளி வழங்குவதால் தங்களை அச்சிறு நிலத்துக்கு அரசனென எண்ணி பூசலிட்டுக் கொள்கின்றனர் என்றும் உண்மையில் “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” என்று துறைமுக நகரங்கள் எழுவதன் பின்புலத்தை விவரிக்கிறார். நீர்வளம் கொண்டு மேலெழுந்த ஜனபதங்களின் காலம் முடிவுறப்போவதையும், கடல் வாணிபம் மேலெழுந்து வருவது குறித்தும் இரும்பு யுகம் முடிந்து பொன்னின் யுகம் வருவதையும் பீஷ்மர் சத்யவதிடம் உரைக்கிறார்.
காந்தாரிக்கு மணத்தூது பேசப்படும் மகத இளவரசனான விருஹத்ரதன் பயணம் ஒன்றில் இருக்கிறான். கங்கை வழியாக படகில் வங்கம் சென்று கடலை அடைந்து கடல்வழியாக கலிங்கதின் பாலூர் துறைமுகம் (ஒரிசாவில் கஞ்சம் அருகே இருக்கிறது பாலூர்) சேர்ந்து, அங்கே இருந்து கடல்வழியாக வேசரத்துக்கும் சோழநாட்டுக்கும் சென்று மீளவேண்டுமென நினைக்கிறான். அவன் கண்கள் வழியாக கங்கையில் செல்லும் நூறு பாய்கொண்ட மரக்கலங்கள், கங்கை சென்று சேர்ந்த கடல்முனையில் இருந்த நூறு மரக்கலங்கள் ஒரேசமயம் கரைதொடும்படி அமைக்கப்பட்டிருந்த மயன் அமைத்த நகர் போல நின்றிந்த தாம்ரலிப்தி (மேற்கு வங்காளத்தின் தாம்லுக்) துறைமுகம் அறிமுகமாகிறது. அவனது தலைநகர் ராஜகிருஹத்தை(பீகாரின் ராஜ்கிர்) விட மிகப் பெரிய நகரம் தாம்ரலிப்தி, இனி நாவாய்களே மன்னனின் வல்லமையை வகுக்கப்போகின்றன, நதிகளும் வயல்களும் அல்ல, கடலே இனி பொன்விளையும் வெளி என்று மகதன் உணரும் தருணம்.
இந்த இரு துறைமுகங்களும் பண்டைய இந்தியாவின் இரு முக்கியமான வணிகத் துறைநகர்கள். ரிஷிகுல்யா நதிக்கரையில் அமைந்திருக்கும் பாலூர் அருகே தொல்லியல் அகழாய்வில் பச்சை நிறச் சீனக் பீங்கான் கலங்களும், யவன நுண்வேலைப்பாடு மிக்க மண் கலங்களும், ரோமானிய நாணயங்களும் கிடைத்திருக்கின்றன. இலங்கை, காப்பிரி, சோனக நாடுகளுடன் வாணிபம் நடந்திருப்பதை சுட்டும் சிற்பங்கள் கோனார்க்கின் சூரியக் கோவிலில் இருக்கின்றன. தாம்ரலிப்தி பின்னர் மௌரியப் பேரரசு காலத்தில் பெருந்துறைமுகமாகவே இருந்திருக்கிறது. சீன யாத்ரீகர்கள் யுவான் சுவாங் மற்றும் பா ஹியானின் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கிறது.
முடிவிலா முல்லை
பலவிதமான காடுகள் வெண்முரசு முழுவதும் வந்து கொண்டே இருக்கின்றன. யமுனைக் கரையின் மென்சாரல் வீசும் காடுகள், கதிர் ஒளி மண் தொட முடியாத தண்டகாரண்யக்காடுகள், மானுடர் அணுக இயலாக் கீழை நாடுகளின் காடுகள், வேதம் வளர்த்த குருநிலைகள் அமைந்த காடுகள் என முல்லை நிலத்தின் பல விதங்களை வெண்முரசில் காணலாம்.
மழைப்பாடலில் யாதவர் நிலமான மார்த்திகாவதியில் பர்ணஸா நதியின் கரையில் கௌந்தவனம் என்ற மலையடிவாரக் குறுங்காட்டில் குந்தி அறிமுகமாகிறாள். பதினைந்து நாட்களாகத் சரடறாமல் பொழிந்துகொண்டிருக்கும் மழையும், இலைகள் எல்லாம் சொட்டும் துளிகளும், சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் நிலம். மாடுகளின் கழுத்துமணி ஓசை நிறைந்த, ஓங்கிய பெரிய மரங்கள் சூழ்ந்த ஒரு சோலை அருகே புல்வேய்ந்த குடில்களும், ஊரைச்சுற்றி உயரமில்லாத புங்கமரங்களை நட்டு அவற்றை இணைத்து மூங்கிலால் வேலியும் இடப்பட்ட இடையர்குடி. நிறைவான மழையும் அளவான வெயிலும் பெறும் யாதவ நிலங்களின் காடுகளில், கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் நிறைந்திருக்கின்றன.
அடர்காட்டு முல்லைநிலத்திற்கான உணர்கொம்புகள் வயல் நிறை மருதத்தினின்று முற்றிலும் வேறானவை. கான் வாழ்வென்பது முற்றிலும் வேறு. தேனீக்களின் முரளலைக்கொண்டு எங்கே குகையிருக்கிறதென அறிவதும், காதில் மோதும் நீராவியைக்கொண்டு நீர்நிலையிருக்கும் திசையை உணர்வதும், தரையின் நகத்தடங்களைக்கொண்டு சிறுத்தைகள் எத்திசையில் உள்ளன என்று கணிப்பதுமென, குந்திபோஜனுக்கு மகளாகச் சென்ற அரசமகள் குந்தி, காட்டில் மட்டுமே யாதவப் பெண் பிருதையாக இருப்பதாக உணர்கிறாள்.
காட்டில் ஒரு அந்திப்பொழுதில் கதிர் சாயும் தருணம் வருகிறது, திரிதாழ்த்தப்பட்ட அகலின் ஒளி அவிவதுபோல நோக்கி நிற்கவே ஒளி குறைகிறது. அது மறைந்த அக்கணம் இலைகளுக்குள் இருந்த பல பறவைகள் ஒளி எழுப்புகின்றன. காடெங்கும் ஒரு மென்மிளிர்வு பரவியிருக்கிறது. சிலந்தியிழைகள் செந்நிறக் கம்பிபோல ஒளிவிடுகின்றன. மேலை வானில் சூரியவட்டத்தின் மேல்விளிம்பு மட்டும் தெரிய, ஒளியற்ற முழுவட்டம் என கீழை வானில் நிலவு மேலேறி இருக்கிறது. கதிர்வட்டம் நீரில் மெல்ல அசைந்தசைந்து மூழ்குவது போலத் தெரிகிறது. முகில்களின் சிவப்பு கருமை கொள்கிறது. இப்பகுதியில் வரும் காட்டின் அந்தியும் இரவும் காட்டுக்குள் வாசகரை திசையறியாது மயங்கிவிடச் செய்பவை.
காடுகளில் ஒவ்வொரு பொழுதும் எப்படி மாற்றம் கொள்கிறது என மாமலர் பேசுகிறது. காட்டின் பின்காலை வெயில் நீராவியை எழுப்ப காடெங்கும் அதன் மென்மயக்கம் பரவுகிறது. காட்டின் பறவையோசை காலையில் கொப்பளிக்கிறது, வெயிலெழுகையில் மெல்ல தொய்வடைந்து உச்சியில் அமைதியாகி முன்மாலையில் மயங்கியெழுந்து முன்னந்தியில் மீண்டும் அலையடிக்கிறது. இருள் எழுகையில் புதைந்து மறைந்து இரவுக்குள் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக காடு என்னும் காட்சி அனுபவம் குறித்த ஒரு வரி நீர்க்கோலத்தில் வருகிறது: "காட்டில் தனித்தனியாக மரங்களைப் பார்ப்பதில் பொருளில்லை. காடு என்பது ஒற்றைப்பெரும் பரப்பு. ஒரு சூழ்கை. ஓர் அமைதி. அலைகளின் அசைவின்மை. "
திரௌபதி விரும்பிய கல்யாண சௌகந்திக மலரைத் தேடி அடர்கான் வழியே பீமன் முண்டனுடன் பயணிக்கிறான். காடு என்னும் அனுபவத்தின் சித்தரிப்பு. காடு எவ்வாறெல்லாம் வந்து சூழ்ந்து கொள்கிறது? "காடு மெல்லிய குளிராக, தழை மணமாக, ஈரமண் மணமாக, மகரந்தப்பொடி கலந்த காற்றாக அவனை வந்து சூழ்ந்தது. பின்னர் பச்சை இலைகளின் அலைக்கொந்தளிப்புக்குள் நீரில் மீனென மூழ்கி மறைந்தான்."
காடு குறித்த நுன்வர்ணனைகள் சில:
வண்ணக் கம்பளத்தை தைத்துச்செல்லும் ஊசிநூல் என காட்டுக்குள் சென்ற சிறுபாதையில் நடந்துகொண்டிருந்தனர். (மாமலர் - 29)
அச்சோலைக்குள் இருந்த சுனை இளவெயிலில் ஒளி கொண்டிருந்தது. பச்சைப் பட்டால் மூடிவைத்த சுடரகல்போல. (மாமலர் - 45)
மரங்களுக்கு நடுவே வாழைமரத்தொகைகள் யானைக்கூட்டங்களின் கால்கள்போல நின்றிருக்க உள்ளே குட்டிகள் என சிறு கன்றுகள் செவியாட்டின. பெரிய காய்களுடன் வாழைக்குலைகள் மத்தகத்திலிருந்து துதிக்கை என வளைந்து நின்றன (மாமலர் - 93)
நளதமயந்தி கதையில், நளனும் தமயந்தியும் சூதில் நாடிழந்து காடேகுகிறார்கள். காட்டிற்குள் நுழைந்து பச்சைத் திரையால் மூடப்பட்டதுமே மனம் தளர்ந்த நளன் சற்று நிலை மீள்கிறான். உயரமற்ற மரங்களின் குறுங்காடு, வெயில் இலைத்தழைப்புக்குமேல் விரிந்திருக்க, தழைமணமும் நீராவியும் உள்ளே நிறைந்து மூச்சுத் திணறச்செய்கின்றன. மரங்கொத்தியின் தாளமும், கிளைச்செறிவுக்குள் பறவைகளின் ஓசையும், நீரோடை ஒன்று துள்ளிச்செல்லும் ஒலியும் கேட்கிறது.
இயற்கை களைப்புற்ற கவலையுற்ற மனதை இலகுவாக்குவதை,
“வெளிநோக்கி விழிவிரிப்பதே நம் துயரை குறைத்துவிடும். இங்கு சூழ்ந்திருக்கும் உயிர்வெளியில் நாம் சிறு துளி என்ற உணர்வு எப்போதேனும் வருமென்றால் அதைவிட உளமாற்றுவது பிறிதொன்றுமில்லை” என்று தமயந்தி சொல்கிறாள். காடும், தொடர்ந்து காட்டில் வாழ்வதும், என்ன செய்யக்கூடும்: "காட்டின் கைகள் நீண்டு ஒவ்வொன்றாக அவனிடமிருந்து கழற்றி எடுத்துக்கொண்டிருந்தன. ஆடைகளை முதலில். சென்றகால நினைவுகளை பின்னர். சூழுணர்வை, செல்திசையை. இறுதியாக தன்னுணர்வை "
கிராதத்தில் சண்டனும் வியாசரின் மாணவர்கள் ஆகப் போகும் நால்வரும் கடந்து செல்லும் திருவிடத்தின் காடுகள் மாறா இருள் நிறைந்தவையாக இருக்கின்றன. ஒளிஊடுருவ இயலா இலைத்தழைப்பு கூரையென்றிருக்க மான்களும் மிளாக்களும் காட்டெருதுகளும் ஒலிகளாக நிறைந்திருக்கின்றன. செதில்செறிந்த அடிமரங்களின் வேர்க்கிளைகள் உருகிவழிந்து மண்ணில் ஊன்றியிருக்க சிற்றிலைப்புற்களும் பச்சிலைப்பூசணங்களும் தரையை மூடியிருக்கின்றன. பசலைக்கொடிகளும் ஒட்டிப்பற்றி மேலேறும் இத்திள்களும் மட்டுமே அங்கு கை தொடும் இலைகளென இருக்கின்றன. இலைநுனிகளில் தளிர்பச்சை நிற சிறுதவளைகள் அமர்ந்திருக்கின்றன. பனித்துளி துளிர்த்து சொட்டும் ஒலி ஊழ்கநுண்சொல் போல் காட்டை சூழ்ந்திருக்கிறது. அடர்காட்டில் நடக்க நீண்ட கழிகளை வெட்டி முனை கூர்செய்து கையில் கொண்டு செல்கிறார்கள். ஆண்டுக்கு மூன்று மழைக்காலம் திகழும் அத்தென்னகம் பெருங்காடுகளின் நிலம்.
இது தவிர பாண்டவர்கள் கானுறை நாட்களில் வாழும் காடுகள், கங்கைக் கரைக் குறுங்காடுகள் என முல்லை நிலத்தின் சித்திரம் வெண்முரசெங்கும் வருகிறது.
பாலைப் புயல்
‘புயலின் தொட்டில்’ என்ற இப்பகுதியில் பீதர்களுடன் பயணம் செய்த பாலை நிலத்து சூதர்கள் சொல்லும் தொன்மக் கதையாக கந்தபுரம் என்றழைக்கப்பட்ட காந்தாரம் உருவாகும் கதை வருகிறது. சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டு மேற்கே பாலை நிலத்தை அடைந்து அமையும் கதை. பாலை நிலத்தின் காற்றுகளும், அவை அந்நிலத்தில் விளையாடி உருவாக்கும் நில அமைப்பும் தொன்மங்களென வருகிறது. காற்றின்மைந்தர்கள் பலன், அதிபலன், சண்டன் மூவரும் எரிவடிவங்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்தபடி மேற்கே பாய்ந்தோடுகிறார்கள். மேற்கே செல்லச்செல்ல அவர்களின் வேகமும் வெம்மையும் அதிகரிக்கிறது.
ஒவ்வொரு காற்றின் மைந்தனின் பலமும் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது:
"பலன் பாறைகளை உடைக்கும் வல்லமை கொண்டவன். அதிபலன் பாறைகளைத் தூக்கி வீசும் பேராற்றலின் வடிவம். சண்டன் அனைத்தையும் தன் ஆயிரம் கைகளில் அள்ளி வீசி தாண்டவமாடுபவன். அரசே, நீரனைத்தையும் உண்ணும் பாவகனும் உயிர்களனைத்தையும் அழிக்கும் பவமானனும் அனைத்தையும் தூய்மைசெய்யும் சூசியும் அவர்களுடன் இணையும்போது அந்த மண்ணில் எவர் வாழமுடியும்?"
வானையும் மண்ணையும் இணைக்கும் மாபெரும் தூண் போல ஒரு மாபெரும் பாலைப் புயல் எழுந்து வருவது இக்கதையில் விவரிக்கப்படுகிறது. மரங்களென ஸாமியும் பிலுவும் கரிரும் மட்டுமே நிழல் தரும் பாலை. முழுமையாக தொலைந்துவிட்டிருக்கிறோம் என்ற அச்சத்தை நெஞ்சின் ஆழத்தில் கரையாமல் நிறுத்திவைக்கும் பாலை.
வெள்ளம் புகுநகர்
அஸ்தினபுரியில் வரலாறு காணாத பெரு மழை ஒரு மாதத்துக்கு மேல் நில்லாமல் பொழிகிறது. மழை புரட்டிப்போட்ட நகர் வாழ்வின் இடர்கள் தெரிகின்றன. எலிகளைப்போல மனிதர்கள் மழைத்தாரைகளுக்குள் வாழவும், தவளைகளைப்போல நீரில் துழாவி நடக்கவும், நீர்ப்பாம்புகள் போல மழையூடாக நடக்கவும், நண்டுகள் போல வளைகளை மூடிக்கொண்டு சேற்றின் ஈரத்தில் துயிலவும் தொடங்குகின்றனர்.
முன்னொருகாலத்தில் கங்கையாக இருந்து கங்கை திசைமாறியபின் காடாகிய புராணகங்கைப் பகுதியில் நீர் நுழைந்து அஸ்தினபுரியின் தெருவெங்கும் வெள்ளம் பெருகுகிறது. கோட்டைவாயில் வழியாக ஒரு புதிய நதி போல நீர் நகருக்குள் நுழைய நீரில் மரங்களும் புதர்களும் சுழித்து வந்து கட்டடங்களில் மோதுகின்றன. நகரம் முழுக்க செந்நிறமான நீர் நிறைந்திருக்க நகர்மாளிகைகள் மரக்கலங்கள் போல, இல்லங்கள் படகுகள் போலத் தோன்றுகின்றன. நகர்த்தெருக்களில் படகுகள் ஓடுகின்றன.
மழை நின்று நீர்பெருக்கு நின்ற பின்னும், மென்மையான சேறு நகரமெங்கும் படிந்திருக்க, மக்கள் வீடுகளைத் தூய்மை செய்ய, உதவிக்கு அரசு ஆணைப்படி காடுகளிலிருந்து நாகர்கள் வந்து வீடுகளுக்குள் சாளரத்து அழிகளிலும் தாழ்வறைகளிலும் சுற்றியிருந்த பாம்புகளை கழிகளால் தட்டிக் கூடைகளில் பிடித்துச் செல்கின்றனர். இது தற்காலத்தில் கேரளத்திலும் சென்னையிலும் நகரில் வெள்ளம் புகுந்த காட்சிகளை நிகர்த்த ஒன்று.
பனிப்பாலைவெளி
இமயமலையின் மண் மிக மென்மையானது. இன்றும் இமயப் பகுதியில் பயணம் செய்தவர்கள் பார்த்திருக்கலாம். பனி உருகி இறங்குவதால் மலை அரிக்கப்பட்டு ஆழமான மலையிடுக்குகள் உருவாகின்றன. அதில் பனியால் உடைத்து நொறுக்கப்பட்ட பாறைகள், கற்கள், மண் ஆகியவை சரிந்து பரவி இறங்கி நிற்கும்.
இமாச்சலப் பிரதேசம், அல்லது இன்னும் மேலே ஸ்பிடி, லடாக் செல்பவர்கள் காணக் கூடிய காட்சி. மலை முழுவதும் பலவண்ணப்பாறைகள். பல வகையான மலைகள். முடிவிலியின் பல வடிவங்கள். வடிவங்களின் முடிவிலி என மலைகள் கொள்ளும் உருவங்கள். வெட்டி எடுக்கப்பட்டது போல, ஓவியரின் கத்திகள் ஒன்றன் மேல் ஒன்றெனத் தீட்டியது போல, கசங்கிய தாள்கள் போல, அவசரமாக வழித்து வைத்த மாவு போல - என்று உவமைகளால் இம்மலைகளின் உரு வர்ணிக்கப்படுகிறது
பனிப்பாலைவெளியில் உயிர்கள் மிக அரியவை. வெறுமை சூடிய வெளிகளில் சிற்றுயிர்களை உண்டுவாழும் ஊர்வன, அவற்றை உண்டு வாழும் ஓநாய்கள் போன்றவையே வாழ்கின்றன. பால்ஹிக மலைக்குடியினர் மாதக்கணக்கில் வேறு மனிதர்களையே காணாது தங்கள் ஆடுகளோடு மட்டும் வாழ்வு கொண்டவர்கள். அவர்களின் பார்வைகளும் செவித்திறனும் கூர் கொண்டவை. தொலைவிளிம்பில் சிற்றுயிரின் அசைவென எதைக் கண்டாலும் பாறைகளுக்குள் மறைந்து அசைவிழப்பதே அவர்களின் முதல் தற்காப்பு செயல்பாடு என்று சல்லியர் சொல்கிறார். இது மலை நில விலங்குகளின் இயல்புகள். செங்கழுகிடம் இருந்து தப்ப அச்சிற்றுயிர்கள் கற்று வைத்திருக்கும் தற்காப்பு உத்தியை மலைமக்களும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
கான் எரி
சதசிருங்கத்தில் ஒரு நாள் காட்டுத்தீ வருகிறது. காட்டுத்தீ எவ்வளவு விரைவு கொண்டது என்பதை இப்பகுதியில் அறியலாம். நெருப்பு வந்தவுடனேயே உயரமான பகுதிக்கு அனைவரும் விரைகிறார்கள். புகைமணம் எட்டாத தொலைவில் ஒரு வெண்ணிறக்காளான் போலத் தெரியும் தழல்கள் அருகே வரும் போது ஒவ்வொன்றாகப் பற்றி உண்டபடி தொற்றித்தொற்றி ஏறி பெருவெள்ளம் போல பொங்கி பெரிய தேவதாரு மரங்களைக் கூட அக்கணமே உள்ளிழுத்துக்கொண்டு முன்னேறிச்செல்கின்றது. மலைமேல் நெருப்பு ஏறிச்செல்லமுடியாது என எண்ணிய ஒரு முனிவர், பெரும் நெருப்புக்கு நெடுந்தூரம் செல்லும் வல்லமை உண்டு என்று உரைக்கிறார். நெருப்பு அவர்களின் குடில்களை ஒரேபாய்ச்சலில் கடந்துசெல்கிறது. அதன் பிறகு மழை வலுத்து நெருப்பையும் பின்னர் புகையையும் அணைக்கிறது.
காட்டுத்தீயை எத்தனை விதமாக சொல்ல முடியும்?
பொன்னிறமான நரிக்கூட்டம் புதர்களை ஊடுருவி காட்டுக்குள் வளையம் அமைத்துச் செல்வதுபோல. பற்றி எரிந்த மரங்கள் நெருப்பையே மலர்களாகவும் இலைகளாகவும் கொண்டு சுடர்விட்டன.(மழைப்பாடல்-84)
உருகிய பொன்னின் பெருவெள்ளம் (மழைப்பாடல்-84)
அது உடலற்ற பசி ஒன்றின் நாக்கு. உண்ணும்போது மட்டுமே வெளிப்பட்டு பசியடங்கியதும் மறையும் ஒற்றைப்பெருநாக்கு அது. (மழைப்பாடல்-84)
காட்டுநெருப்பு எரித்த சதசிருங்கம் மீண்டும் முற்றிலும் பசுமை கொண்டு தழைத்திருக்கும் காட்சி காட்டுத்தீ காட்டைஅழிப்பதில்லை, புதுமரங்கள் முளைத்தெழ வழிகோலுகிறது என்ற இயற்கை நெறியை அறிய முடிகிறது.
குருக்ஷேத்திரப் போருக்குப் பிறகு ஓராண்டு நீர்க்கடன் சடங்குகளும் நிறைந்த பிறகு, விதுரர் கங்கை மண் தொடும் வாயிலாகிய ரிஷிகேசம் என்னுமிடத்தில் சதகுண்டம் என்னும் காட்டில், சதயூப முனிவரின் குருநிலையில் உயிர் துறக்கிறார். கங்காமுகம் எனப்படும் ரிஷிகேசத்தில் அமைந்த சிருங்கபாதம் என்னும் மலையடிவாரத்தில் திருதராஷ்டிரரும் காந்தாரியும், குந்தியும் காட்டெரியில் சிக்கி உயிர் துறக்கின்றனர் .
- மேலும்
Comments