top of page
Writer's pictureசுபஸ்ரீ

வாழிய நிலனே - 11

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.

(முதற்கனல் 39: வேங்கையின் தனிமை ஓவியம்: ஷண்முகவேல்)


" மழைப்பாடலில் காந்தார இளவரசியை மணம் பேசுவதற்கு பீஷ்மர் செல்லும் பாலை நிலப் பயணம் பாலையில் நூறு வாழ்வு வாழ்வதற்கு நிகர். முதற்கனலில் சிகண்டி சென்ற சிபி நாட்டையும் தாண்டி மண்ணின் நீர்வளம் முழுமையாகவே மறைந்த வன்பாலை. "

வெண்முரசு காட்டும் இடங்கள்


நிலச்சித்தரிப்புகள்


கதை வரிசைப்படி வேசர நாட்டிலிருந்து தொடங்கி குமரி முனையில் நிறைவுறும் நிலச்சித்தரிப்புகள் வெண்முரசின் மிக முக்கியமான அங்கம். இந்நாவலில் மேற்கே கருங்கடல் எல்லை வரை பாலைப் பயணமும், பனி பொழியும் பால்ஹிகமும், மணல் விரியும் காந்தாரமும் சிபியும், இமயப் பனிவெளியும், சிந்து, கங்கை யமுனை சமவெளிகளும், பாஞ்சாலமும், சிந்து தேசமும், கூர்ஜரப் பாலையும், அஸ்தினாபுரியும், இந்திரப்பிரஸ்தமும், துவாரகையும், விந்தியனும், ஆசுரமும், மகதமும், சேதியும், விதர்பமும்,தண்டகாரண்யமும், வேசரமும், ஆந்திரமும், திருவிடமும், கடல்கொண்ட மூதூர் மதுரையும், குமரிக்கோடும், தென்தமிழகமும், குமரியும், கிழக்கே அங்கமும், வங்கமும், கலிங்கமும், ப்ரக்ஜ்யோதிஷமும், கின்னர தேசமும், நாக தேசமும், காமரூபமும், அப்பால் சூரியனின் முதற்கதிர் தொடும் கிழக்கு எல்லை வரை வருகிறது.


இந்நிலத்தின் வேறுபட்ட நிலஅமைப்புகள், காடுகள், இயற்கை நிகழ்வுகள், கடல் சீற்றம் என அனைத்தாலும் தீட்டப்படும் பெரும் சித்திரமே இந்நிலத்தின் வாழ்க்கை. தான் மேற்கொண்ட ஒவ்வொரு பயணத்தின் அனுபவத்தை மிக நுணுக்கமாக ஒவ்வொரு சிறு பகுதியையும், ஒவ்வொரு வண்ணத்தையும், ஒவ்வொரு சிறு அசைவையும், வெப்பத்தையும், ஈரத்தையும், விண்ணையும், மண்ணின் தன்மையையும், தாவரங்களையும், உயிர்க்குலங்கள் அனைத்தையும் உள்ளே சுருக்கி அடுக்கிக்கொள்ள நீண்டகால அகப்பயிற்சியும் சாதனையும் தேவை. ஆசிரியர் ஜெயமோகன் புலன்வழி கண்ட காட்சியனுபவம் மன ஆழங்களில் சென்று அமைந்திருக்கிறது. இது போன்ற ஒரு பேரிலக்கியத்தில் அந்த நுண்ணிய அவதானிப்புகள் ஹோய்சால சிற்பங்களின் நுண்செதுக்குகள் போல தக்க தருணங்களில் வெளிப்படுகின்றன.


விரிவான நிலக்காட்சி விவரிப்பு வாசகரை படைப்பின் உலகுக்குள் ஈர்க்கும் ஒரு நுழைவாயில். வெண்முரசு வாசிப்பிற்கு பிறகான பயணங்களில் மிகப் பெரிய மாற்றம் உருவாகிவிடுகிறது. ஒன்று, நாம் முதல்முறையாக செல்லும் ஒரு நிலப்பகுதி, ஏற்கனவே முழு வாழ்வு வாழ்ந்த ஒரு அனுபவத்தையோ அல்லது ஏற்கனவே அவ்விடங்களை முன்னரே பார்த்தது போன்ற முற்தோற்ற அனுபவத்தையோ ஏற்படுத்துகிறது. வெண்முகில் நகரத்தின் மரத்தாலான ஒரு நகரமாக மத்ர தேசத்துத் தலைநகர் சகலபுரி வருகிறது. சமீபத்திய மேகாலாயப் பயணத்தில் வேர்ப்பாலங்களைப் பார்த்ததும் சகலபுரி கண்முன் வந்தது.


குன்றாப்புகழ் குறிஞ்சி


முதற்கனலில் விசித்திரவீரியன் மறைவுக்குப்பிறகு நியோகமுறைப்படி அம்பிகையும் அம்பாலிகையும் கருவுறவேண்டுமென சத்யவதி ஆணையிட அதை நிறைவேற்றும் வியாசர் பெரும் தவிப்புக்கு ஆளாகி, அவரது மகன் சுகரைத் தேடி சுகசாரிமலை செல்கிறார். அந்தப் பயணம் விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. விந்திய மலையில் ஒரு சிறு மலையிடுக்கு வழியாக வழி கண்டு, நீரோடும் வழிகளில் பயணித்து கானகங்கள் வழி சென்றடையும் பயணம் மலைவழிப் பயணங்களின் ஒரு சிறு துளி இப்பகுதியில் அறிமுகம் ஆகிறது.


மழைப்பாடலில் பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பி இமயமலைச்சாரலில் அமைந்த சதசிருங்கம் செல்கிறார்கள். ரிஷிகளை சந்திக்கிறார்கள். அங்கு செல்லும் வழியில் காட்டுப்பாதையில் பயணம்செய்து வெண்ணிறச் சுண்ணப்பாறைகள் வெடித்து சிதறிய வெளியை கண்டு பிடிக்கிறார்கள். வெண்ணிறப்பாறைகள் நடுவே படிகவளையங்களை அடுக்கியதுபோல தெள்ளத்தெளிந்து சென்ற நீரோடை எங்கும் கூழாங்கற்களென கிடந்த அனைத்தும் வைரக்கற்கள் என்பதைக் காண்கிறார்கள். பெரும் மலைப் பிளவால் உருவான இடம் அது என்று தெளிந்து, அவ்வளவு செல்வத்தின் மீது மானுடன் நிம்மதியாக வாழ முடியாதென வேறு இடம் தேர்கிறார்கள்.


சதசிருங்கத்தில் தவம்செய்துவந்த கௌதமமுனிவரின் மைந்தன் வழிகாட்டி கந்தமாதன மலைக்கு அழைத்துச் செல்கிறார். ஊன் அழுகியதுபோன்ற துர்நாற்றம் கொண்ட, உச்சியில் சிவந்த கனல் கொண்ட கந்தமாதன மலை ஒரு எரிமலை. மண்ணைக்குவித்தது போன்ற கூம்பு வடிவ மலைக்கு மேல் வெண்முகில் பட்டுத்தலைப்பாகை போல எப்போதும் நின்றுகொண்டிருக்கிறது.

அதைக் கடந்து சதசிருங்கத்தை சென்றடைகிறார்கள்.


வெண்மேகங்கள் செறிந்திருப்பதாக முதற் பார்வைக்குத் தோன்றும் நூறு பனிமுடிமலைகள் அமைந்த இடம் சதசிருங்கம். பனிமலைகள் சூழ்ந்து காக்கும் ஹம்சகூடம் என்னும் சோலை நடுவே இந்திரத்யும்னம் என்னும் பெருநீர்தடாகம் இருக்கிறது. தேவதாரு மரக்கட்டைகளை நட்டு அவற்றின்மேல் தரையில் இருந்து நான்கடி உயரத்தில் தரைப்பலகைகள் பரப்பி மேலே கூரையிட்டு அங்கே குடில் அமைத்து பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் வாழ்கிறார்கள்.


சதசிருங்கம் நெருப்புக்கு இரையான பிறகு, இன்னும் மேலே பனியடுக்குகளுக்குள் செல்கின்றனர். மலையிடுக்கில் அமைந்த புஷ்பவதி என்னும் சோலையைத் தேடிச் செல்கின்றனர். இந்திரன் மைந்தன் பிறக்கும் நிலம். சுற்றிலும் மூடியிருந்த வெண்பனித்திரை விலக, முழுவதும் செந்நிற மலர்கள் பூத்துச்செறிந்த குறும்புதர்கள் விரிந்த பெரும்புல்வெளி. அந்த மலையிடுக்கில் இருந்த சரத்வானின் தவச்சாலையில் தங்குகிறார்கள். சுண்ணத்தாலும் பளிங்காலுமான குகைகள் அங்கே இருக்கின்றன. உள்ளே ஊறிவழிந்த நீரால் பல்லாயிரமாண்டுகளாக அரிக்கப்பட்டு மாளிகைமுகப்பளவுக்கே பெரிய குகைகள். இது போன்ற குகைகளின் உட்பகுதி சிற்பங்கள் நிறைந்த கோயில் போல இருக்கும்.


மழைக்காலத் தொடக்கத்தில் குந்தி பார்த்தனைக் கருவுருகிறாள். கருமேகங்கள் சூழ, மின்னல்கள் வெட்டியதிர, இடியோசையால் என் திசையும் முழங்க, இரண்டரை மாதம் தொடர்ந்து மழை பொழிகிறது. பெருமழைக்காலத்துக்குப் பிறகு, புஷ்பவதியின் சரிவு முழுக்க மென்மையான ஊதாநிறம் கொண்ட மலர்கள் நதிநீரின் ஓரத்திலும் செந்நிறமலர்கள் மலைச்சரிவிலும் நிறைகின்றன. கோடை முதிர்ந்து மலர்வெளி சுருங்கி நீரோட்டத்துக்கு அருகே மட்டுமென சுருங்குகிறது. பனிக்காலம் குளிர்ந்த காற்றாகத் தொடங்கி, இமயத்தின் செய்தியென வரும் பனித்துளிகளால் நிரம்புகிறது. வெண்பனி பளிங்குவாள்முனையாக மாறி நின்ற எல்லைக்கு அப்பால் கருநீலக் கோடாக புஷ்பவதி. குளிர்காலம் வந்தபின்னர் முதல்முறையாக சூரியன் வந்த ஒரு நாளில், மலைச்சரிவே ஒரு பொன்னிறப்பாத்திரமாக மின்னுகிற பொழுதில், அங்கிருந்த பன்னிரு பனிமலைச் சிகரங்களிலும் பன்னிரண்டு சூரியவடிவங்கள் தோன்றும் பொழுதில் மைந்தன் அர்ஜுனன் பிறக்கிறான். அனுதினமும் இந்திரநிமித்தங்கள் தோன்றுகின்றன.


பர்ஜன்யபதம் என்ற அந்த சமவெளியில் இடியின் மாதமான ஃபால்குன மாதத்தில், நந்ததேவி சிகரமே இடிந்து சரிவது போன்ற இடிகளுக்கிடையே, இந்திரன் தன் வெண்களிற்றில் எழுவது போன்ற பெருமின்னல் தோன்றுகிறது.


மலைப்பாறைகளை தோல்சவ்வுகளாக மாற்றி உடைத்துவிடுவதுபோல பேரொலியுடன் இடி எழுந்தது. அப்பால் கைலாயம் வரை சூழ்ந்திருந்த மலைகள் அனைத்தும் கர்ஜனை புரிந்தன. மாறி மாறி அவை முழக்கமிட்டபடியே இருந்தன. நெடுநேரம் கழித்து அப்பால் மிகமெல்ல ஒரு மலை ‘ஓம்’ என்றது.


விண்ணாளும் இந்திரனின் மைந்தன், இந்திரன் ஆதித்யர்கள் சூழ மண்ணிறங்கிய பொழுதில் பிறந்தவன் என்று முனிவர்களால் வாழ்த்தி பெயர் சூட்டப்படுகிறான். வடக்கையும் தெற்கையும் இணைத்தபடி மிகப்பிரம்மாண்டமான வானவில் ஒன்று எழுந்திருந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக எல்லா மலையுச்சிகளுக்குமேலும் வானவிற்கள் நின்றன. ஓடையெங்கும் மலர்களெங்கும் வானவிற்களை சுமந்த நீர்த்துளிகள்.


இமயத்தின் அடுக்குகளில் அத்தனை பருவங்களையும், வான் நிலை மாற்றங்களையும் வாழ்ந்து அறிந்து கொள்ள இப்பகுதியே போதும்.


இமயத்தின் விடியல் மண்ணில் தவறவிடக்கூடாத அற்புதங்களில் ஒன்று. விழிமுன் கீழ்வானில் செம்மை மேலெழுந்து, மலைமுடிகளின் கிழக்குப்பக்கங்கள் ஒளிகொள்ளத் தொடங்குவதும், பனிப்பரப்புகள் நெருப்பை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றாவதும், வெண்பனிப்பரப்பின் மேல் சூரியனின் கதிர்கள் தொடும் வேளையில் வானம் இருள்விலகாதிருக்க பனித்தரை ஒளிவிடுவதும் மெய்நிகர் அனுபவம். இமயத்தின் பனிமுடிமேல் நிகழும் ஒரு இரவு மற்றும் விடியலின் வர்ணனை அங்கே சென்று அதை உணர்ந்தவர் மட்டுமே சொல்லாக்கக் கூடியது.


"மெல்ல விடிந்தது. வெண்முகடுகள் வெளிறின. பின் குருதி பூசிய ஈட்டிமுனைபோல் ஒளிகொண்டன. ஒவ்வொரு மலைமுகடாக எரியத் தொடங்கியது. ஒன்றிலிருந்து ஒன்றென பற்றிக்கொண்டு எரிந்தெழுந்து அனல்வெளியென்றாகிச் சூழ்ந்தன. அவற்றின் மடிப்புகளில் மேகப்பிசிறுகள் விழுந்து கிடந்தன. மிக மென்மையானவை. வெண்பறவையின் ஈரம் காயா குஞ்சுகள் போன்றவை. வானம் ஒளிகொண்டது. ஒரு சொல்கூட இல்லாமல் மலைப்பெருக்கு தன்னை எனக்கு காட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு திரையாக விலக்கி. மேலும் மேலும் மேலும் என. பின்னர் இசையமைந்தது. ஓசையின்மை நிறைந்தது. அது வானின் அமைதி என்றாயிற்று."



மண்விளை மருதம்


கங்கபுரியிலிருந்து கிளம்பிய பீஷ்மர் கிராமங்கள் வழியாக அடையாளமில்லாத பயணியாகச் செல்கிறார். சப்தசிந்து என்று குறிப்பிடப்படும் ஏழுநதிகளான சுதுத்ரி(சட்லஜ்), பருஷ்னி(ரவி), அஸிக்னி(செனாப்), விதஸ்தா(ஜீலம்), விபஸ்(பியாஸ்), குபா(காபுல்), சுஷோமா(சோன்) ஆகியவற்றைக் கடந்து ஒரு சிற்றூரைச் சென்றடையும் காட்சி வருகிறது. ரிக்வேதத்தின் நதி ஸ்துதி சூக்தத்தில் வரும் சப்தசிந்து என்றழைக்கப்பட்ட இப்பகுதி ஏழு நதிகளும் இமயமலைச் சரிவிறங்கியபின் அடர்ந்த காட்டுக்குள் இருந்து விரிந்த நிலவெளிநோக்கி இருகரைகளைத் தழுவிச்சென்று வண்டல்படிந்த நிலம். இது நெடுங்காலம் முன்னரே வயல்வெளியாக மாறி பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது என்பது சிந்து சமவெளி பலகாலமாக வேளாண் குடியிருப்புகளாகத் திகழ்ந்ததை சொல்கிறது. வளமான மருத நிலப் பகுதியை மிக நுணுக்கமாக சித்தரிக்கும் ஒரு பகுதி முதற்கனலில் வருகிறது. காணும் காட்சிகளே ஆழ்மனப் படிமங்களாகி கனவுகளாக வெளிவருபவை. இப்பகுதி மீண்டும் சிகண்டியின் கனவு போல, ஒரு மீள்நிகழ்வுத் தோற்றம் போல இதே வர்ணனைகளுடன் பின்னர் வருகிறது. வாழ்வு முழுமையும் பீஷ்மரைக் குறித்தே எண்ணிய சிகண்டியின் நனவிலியில் பீஷ்மர் கண்ட காட்சி.


சுதுத்ரியின் மணல்மேடுகளில் நாணல் காற்றில் ஆடுவதும், ஆற்றிடைக் குறைகளில் வெண் நாரைகள் எழுந்தும் பறந்தும் அமர்வதும், நீரின் ஒலி இருபுறம் ஒழிக்க பீஷ்மர் நடந்து செல்லும் ஈர மண் பாதையும், கிளிகள் எழுந்து பறக்கும் வயல் வெளியும், அவர் சென்றடையும் வேளிர் கிராமத்தின் புற்கூரை கொண்ட வீடுகளும், ஊர் மன்றின் அரச மரமும், நான்கு மூலைகளில் சிறு கோவில்களும் ஏதோ ஒரு பிறவியில் வாழ்ந்து நிறைந்த ஒரு கிராமமென எண்ணிக் கொள்ள வைத்தது. இப்போது சென்றாலும், ஊரைச்சுற்றிலும் கன்னங்கரிய எருமைகள் ஓடைகளில் நின்றிருக்க, தாமரை இதழ்களால் நிறைந்திருந்த அந்தக் குட்டையை அடையாளம் காண முடியும். அவ்வேளிர் கிராமத்தின் மாலைக் காட்சியும் விடியல் சித்திரமும் அங்கேயே நூறாண்டு வாழ்ந்த அனுபவத்தைத் தருபவை.


களிற்றியானைநிரையில் துவாரகை நோக்கி அமைச்சர் சாரிகர் செல்லும் பயணத்தில் பாலை நிலம் தொடுவதற்கு முன் அவந்தியை அடைந்து அங்கு ஒரு வேளிர் கிராமத்தில் தங்குகிறார். கோபகுப்தம் என்னும் அச்சிற்றூர் ஷிப்ரை ஆற்றின் கரையோரமாக விரிந்திருந்த மாபெரும் வயல்வெளியின் நடுவே அமைந்த உழவர்ச்சிற்றூர். அந்த வயல் வெளியும், புல்வேய்ந்த இல்லங்களும், பசுக்கொட்டில்களும் சப்தசிந்துவில் பீஷ்மர் கண்ட வேளிர் கிராமத்தை நினைவூட்டுகிறது. எனில் சப்தசிந்துவின் நீர் வளத்தோடு அந்த தாமரைப் பொய்கையும் நீர் சூழ் வயலும், இந்த கோபகுப்தத்தின் விரிவயல்களில் மேல் நின்றாடும் வெயிலும் இரண்டு வேளாண் சிற்றூர்களையும் வேறுபடுத்தியும் காட்டுகிறது.


பெருவிடாய்ப்பாலை


முதற்கனலில் முக்கியமான இரு பயணங்கள் பீஷ்மர் மற்றும் சிகண்டியுடையது. ஒரே வில் எய்த இரு அம்புகள். அம்பையின் ஆணையைத் தனது ஒற்றை இலக்காக ஏற்றுக்கொண்ட சிகண்டி செய்யும் நீண்ட பயணம் முதற்கனலில் வருகிறது. சித்ராவதியில் இருந்து கிளம்பிய சிகண்டி ஐம்பதுநாட்கள் நதிகளையும் கோதுமைவயல்களையும் தாண்டி திரிகர்த்தர்கள்(லூதியானா பகுதி) ஆண்ட ஹம்ஸபுரம் வந்துசேர்கிறான். வழியெங்கும் மருத நிலம் - பசுங்கடல்வயல்கள், நீலமொழுகிய நதிகள், மக்கள் செறிந்த கிராமங்கள். அஷிக்னி (செனாப்) நதிக்கரையில் காசியபபுரத்தைச் சுற்றிஇருந்த கோதுமை வயல் வெளிகளும் அஷிக்னியில் பாய்விரித்த படகுகள் செல்லும் காட்சியையும் பார்த்தபடி ஹம்ஸபுரத்தை (இன்றைய பாகிஸ்தானின் மூல்தான் நகர்) அடைகிறான்.


சம்பாபுரி என்றும் வேகபுரி என்றும் பெயர்கள் கொண்ட அந்நகரம் அஷிக்னியின் களிமண்ணை குழைத்துக் கட்டப்பட்ட சதுர வடிவ கட்டிடங்களால் களிமண் நிறத்திலேயே தெரிகிறது. அன்று முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்த இந்நகரின் சந்தைப் பொருட்கள், சிவப்பு நீலம் பச்சை மஞ்சள் நிறங்களில் வண்ண வண்ண உடையணிந்து செல்லும் மக்கள், அவர்கள் பேசும் மொழி என்று மிக விரிவான ஒரு காட்சிச் சித்தரிப்பு. முக்கியமாக இங்குள்ள சூரியக் கோவில் குறித்த சித்திரம் இப்பகுதியில் விரிகிறது. சூரியன் தன் உக்கிரமான செங்கோலை ஊன்றி இளைப்பாறிச்செல்லும் இடம் என்பதால் மூலஸ்தானநகரி என்றும் அழைப்பதுண்டு என்று இப்பகுதியில் வரும் கதிரோன் ஆலயம் இன்றும் பாகிஸ்தானின் முல்தான் நகரில் தொல்லியல் சிதைவுகளாக எஞ்சி இருப்பது.


பீஷ்மரைப் போரில் வென்ற பால்ஹிகரைக் காணவே சிகண்டி பயணம் மேற்கொள்கிறான். எனவே ஸென்யாத்ரி(ஜென்), போம்போனம்(பம்போர்), துங்கானம்(துங்கன்) என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்த சின்னஞ்சிறு சிபிநாடு (பலூச்சிஸ்தான்) நோக்கி செல்கிறான். பாலை நிலத்தின் வன்வனப்பு இப்பகுதியில் அறிமுகமாகிறது. இதன் பிறகு சிபிக்கும் அப்பால் விரியும் காந்தாரத்தின் (ஆப்கானிஸ்தான்) பெரும்பாலை நிலப்பகுதியை மிக விரிவாக மழைப்பாடலில் பார்க்க முடியும். பட்டு வழிப்பாதை தொட்டுச் செல்லும் இப்பகுதிகளில் வணிகக்குழுக்கள் மேற்கொள்ளும் பாலை நிலப் பயணமும் அதன் சிரமங்களும், முன்னேற்பாடுகளும், சிகண்டியோடு வாசகரும் அறியலாம்.


மேலும் அங்கிருக்கும் ஈரமே அற்ற காற்று, உடலில் மோதும் பொழுது உண்டாகும் அனுபவம் –

"மண்ணில் நீர் குறைந்ததை காதுமடல்களில் மோதிய காற்று காட்டியது. சற்றுநேரத்தில் மூக்குத்துளைகள் வறண்டு எரியத்தொடங்கின. காதுமடல்களும் உதடுகளும் உலர்ந்து காந்தலெடுத்தன." என்று மெய்நிகர் அனுபவமாக வருகிறது . செம்பொன்னிறமாக விரியும் மணல்வெளி, ஏற்ற இறக்கமே இல்லாமல் வானம்வரை சென்று தொடுவான்கோட்டில் முடிந்த சமநிலத்தில் இருக்கும் முட்புதர்ச்செடிகள், முதல்பார்வையில் உயிரற்று விரிந்துகிடந்த பாலைநிலம் கூர்ந்துபார்க்கும்தோறும் பற்பல உயிர்களைக் காட்டுவது, பாறை இடுக்கு ஒன்றில் கிடைத்த உடும்பு ஒன்றை பாலையில் வயிற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றும் என்று வணிகன் ஒருவன் உண்ணும் காட்சி போன்ற நுண் சித்தரிப்புகளால்தான் வாசிப்பின் வழி நிகர் வாழ்வென இந்நிலங்களில் அலைந்த மயக்கெழுகிறது. ஆங்காங்கே வழி தவறாது சென்று ஓய்வெடுக்கும் பசிய குறுமரங்கள் அடர்ந்த குறுங்காடுகள், மணற்குன்றுகள், இரவில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் இறங்கி வந்தது போலத் தோன்றும் வான், இவற்றின் வழியாக நான்காம் நாள் சைப்யபுரியைச் சென்றடைகிறான். இது பாகிஸ்தானின் சிபி மாவட்டமாக இன்றும் இருக்கும் பகுதி.


சைப்யபுரியின் கட்டிடங்கள் அனைத்தும் பெரிய மண்பானைகளைக் கவிழ்த்து வைத்ததுபோலவோ மண்குவியல்கள் போலவோ தெரிகின்றன. பால்ஹிகர் வாழ்ந்த கட்டடம் படிகள் வழியாக மேலே எந்த அளவுக்குச் செல்கிறதோ அதேயளவுக்கு அடியிலும் களிமண்பாறையில் குடைந்த படிக்கட்டுகள் மடிந்து மடிந்து செல்கிறது. மெல்லிய தூசியின் வாசனை காற்றில் இருக்கிறது. பாலை நிலத்தின் எலிவளை போல நிலத்துக்கு அடியில் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.


அம்பையின் அன்பு திரிந்த வெறுப்பாகிய பீஷ்மரும், அழல் கனிந்து அன்பாகிய சிகண்டியும் நீண்ட தனிப்பயணங்கள் செய்து இறுதியாக குறிஞ்சியும் முல்லையும் திரிந்த கொடும் பாலையில் சந்திக்கிறார்கள். தன்னைப் போரில் கொன்று அம்பை அன்னையின் ஆணையை நிறைவேற்றுவதற்கான வில் வித்தையை சிகண்டிக்கு தான் யாரென்று அறிவிக்காத பீஷ்மர் கற்றுத்தருகிறார்.


மழைப்பாடலில் காந்தார இளவரசியை மணம் பேசுவதற்கு பீஷ்மர் செல்லும் பாலை நிலப் பயணம் பாலையில் நூறு வாழ்வு வாழ்வதற்கு நிகர். முதற்கனலில் சிகண்டி சென்ற சிபி நாட்டையும் தாண்டி மண்ணின் நீர்வளம் முழுமையாகவே மறைந்த வன்பாலை.


வீண்நிலத்தைத் தாண்டினால் வரும் வறண்ட மலைநிலத்தையும், அதற்கப்பால் உள்ள பாழியைத் தாண்டி மலைகளுக்கு அப்பால் உள்ளது காந்தாரநகரி. அதற்கப்பால் நிஷாதர்கள் வாழும் பெருமணல்நிலம். எலி வேட்டைதவிர வேறு தொழிலே இல்லாத ஆப்கனிஸ்தான் பகுதியின் மலைநிலம் முழுக்க வாழும் தொன்மையான லாஷ்கரர் குடி நூறுதலைமுறைக்காலமாக ஆறலைக்கள்வர்களாக வாழ்கிறார்கள்.


களிற்றியானைநிரையில் மீண்டும் ஒரு பாலை நோக்கிய பயணம் வருகிறது. போருக்குப் பின்னர் குருகுலத்தின் எஞ்சும் ஒரே கொடிவழியினன் ஆகிய உத்தரையின் மகவைப் பார்க்க அஸ்தினபுரியில் இருந்து துவாரகை நோக்கி அமைச்சர் சாரிகர் செல்கிறார். வழி நெடுக அவரது பார்வையில் நாடுகளின் நிலைமைகள், வழிகளின் சூழல், வணிகத்தின் ஏற்ற இறக்கங்கள் முதலியவை சொல்லப்படுகின்றது.


பாலை மெல்ல மெல்ல அணுகும்தோறும் - குற்றிலைகள் கொண்ட மரங்கள், விறகென உலர்ந்த அடிமரங்கள், முட்கள் செறிந்த புதர்கள், பொருக்கென பரவியிருந்த நிலத்தில் பல்லாயிரம் எறும்புக் குழிகளும், காற்றில் வெந்த புழுதியின் மனமும், உடும்புகளின் கால்தடங்களும் வெண்மை, பொன்னிறம், செம்மை என மாறி மாறித் தோற்றம் அளித்த மண்ணின் நிறமும் என காட்சிகளில் நிகழும் நுண்மாற்றங்கள். ஓநாய்கள், பாலைவன ஆடுகள், கீரிகள், சிறுத்தை என பாலை வாழ் மிருகங்களின் காலடித்தடங்கள் வருகின்றன. அங்கிருந்த புல்வெளி, நீர் வளம் மிக்க கங்கை, யமுனைப் புல்வெளிகளைப் போலல்லாது, வெண்ணிற நிலப்பரப்பில் பூசணம் பரவியதுபோல பரவி இருக்கிறது. ஆங்காங்கே பசுக்கள் அவற்றை அடித்தாடையால் கரம்பி தின்றுகொண்டிருக்க, முள்மரங்களுக்குக் கீழே சில பசுக்கள் படுத்திருக்கின்றன. அருகே ஒரு சுனை இருப்பதால் உருவான புல்வெளிகள், அவற்றைத் தாண்டி வெண்மணல் விரிந்த பாலை விரிகிறது.


பாலையில் நிகழும் அந்தியின் வர்ணனை. குருதிக்கடல் என மாறிய மாலை வானில் கதிரவன் மறைந்த பிறகும் நெடுநேரம் ஒளி இருக்கிறது. பாலை வெட்டவெளி விரிவின் நிலம், கண்ணுக்கெட்டிய வரை நிலம் விரிந்த மாபெரும் பரப்பு, அங்கு நிகழும் காலையும் மாலையும் நிலவும் மயக்குபவை, நிலையழியச் செய்பவை. பாலை நிலைத்து இரவும் வேறெங்கும் காண முடியாத மிக அரிய காட்சி. வானுக்கும் மண்ணுக்கும் இடையே வேறேதும் இல்லாத வெளியில் ஆயிரக்கணக்கான ஒளிப்புள்ளிகள் வானில் தோன்றும் கணம் காட்சிப்படுத்தப்படுகிறது


பாலை குறித்த நூற்றுக்கணக்கான வர்ணனைகளை சுருக்கி வரைவது போல சில சொற்களில், வெண்முரசின் சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் - "காற்றின் இடைவிடாத ஓலம், மணல்மழை, கண்கூசும் பகலொளி, இரவின் மிளிர்வொளி, மண்வெந்த மணம், அரிக்கப்பட்டுநின்ற பாறைகள், குற்றிலை மரங்கள், முட்புதர்கள். "


தனிமையைத் தேர்ந்து பீஷ்மர் செல்லும் முதல்பாலைவனம், பின்னர் சிகண்டியின் வஞ்சம் போல திரிந்த வன்பாலை. ஓநாயின் தீயோடு சகுனி கனவுகளில் திளைக்கும் பாலை. கானல் நீரென காதல் கொண்ட மங்கையர் பின்னால் பூரிசிரவஸ் அலைந்து திரியும் கொடும்பாலை. மெய்ம்மை தேடும் அர்ஜுனன் கடக்கும் பாலைநிலங்கள், மாயவித்தைக்காரனின் கைக்கோல் என மாளிகை முளைத்தெழும் துவாரகையின் பாலைவனம், முற்றழிவுக்கு முன்வரைவென ப்ரதிபானு கடக்கும் பாலைவனம். எத்தனையோ பேரின் விழிகளில் விரிகிறது பாலை நிலம். எத்தனை விதங்களாக பாலையை விவரிக்க முடியும்!! காற்று தன தூரிகையால் எண்ணற்ற கோடுகள் வரையும் பாலை நிலம் போலவே வெண்முரசில் நூறு நூறு வரிகளிலாக முடிவிலாது பாலை விரிகிறது.


  • ஆன்மாவின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சி வானுக்கனுப்பிவிடும் பாலை (மழைப்பாடல் – 12)

  • வானகப்பிரஜாபதிகள் வேள்வி முடித்து சென்ற எரிகுளம் போல வெந்து சிவந்து கருகிக் கிடந்தது அந்நிலம். அதிலிருந்து பாதாளநாகங்களின் விஷமூச்சு போல அனல் வீசியது.( மழைப்பாடல் – 12)

  • நீருக்கான ஏக்கம். பசுமைக்கான ஏக்கம். ஏக்கம் மட்டுமேயான ஏக்கம். அது நெஞ்சுக்குள் வறண்டகாற்றாக அலைந்து அனைத்தையும் உண்டது (மழைப்பாடல் – 12)

  • காலையொளியில் பாலைமண் மிகமென்மையான பொன்னிறப்பட்டுபோல அலைபடிந்து விரிந்திருந்தது (மழைப்பாடல் – 15)

  • நிழல்குவைகளாக புதர்கள் பரவிக்கிடக்க பாழ்நிலத்தின் எல்லையில் தொடுவானம் கவிந்திருந்தது. கண் எட்டும் தொலைவுக்கு அப்பாலிருந்து சாம்பல்நிறமான தரைக்கம்பளம் போல அதை அவர்களுக்கு முன்னால் வடதிசை விரித்துக்கொண்டே சென்றது. (மழைப்பாடல் – 15)

  • விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது. (மழைப்பாடல் – 15)

  • காற்றே இல்லாத மண்பரப்பில் ஒரு ஊசித்தையல் கோடுபோல அந்தக் கால்தடம் சென்றது.(பாலை வெளியில் ஓநாயின் காலடித்தடம்) - (மழைப்பாடல் – 15)

  • காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை (மழைப்பாடல்-19)

  • பாலைநிலத்தில் மழை பெய்யப்போவதுபோன்று காற்று கனிந்து வரும். ஆனால் நுண்வடிவ நீரை மழைத்துளியாக்கும் கனிவு வானுக்கு இருப்பதில்லை. இங்குள்ள வானம் அடங்கா விடாய்கொண்டது. நீர்த்துளிகளை அதுவே உறிஞ்சி மேலே எடுத்துக்கொள்கிறது (மழைப்பாடல்-24)


எல்லையற்ற பாலைவெளி போல விரிந்து கொண்டே போகிறது பாலை குறித்த உவமைகள்.


- மேலும்



4 views

Recent Posts

See All

Σχόλια


bottom of page