top of page

கிழக்கு நோக்கி - 8

சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.

(மோமோ வேகவைக்க படும் மூங்கில் கூடை வடிவில் உள்ள நன்யாங் கட்டிட வளாகம்)


" பெரு தேசங்களின் வளர்ச்சி சென்று முடிவது போரில் தானே ? மகதம் முதல் ஜெர்மனி வரை அதை தானே வரலாறு நமக்கு கற்பித்து உள்ளது ?. "

ஒருவாறாக வழியை ஊகித்து கணேஷின் செட்டிநாடு கறி பேலஸ் உணவகத்தை நாங்கள் அடைந்தபோது இரவு எட்டுமணியாகி இருந்தது. எங்களுக்காக ஒருமணி நேரத்துக்கு மேல் கணேஷ் காத்திருந்தார், எங்கள் தொலைபேசியில் இணைய இணைப்பு இல்லாததால் எங்களை அவர் தொடர்பு கொள்ள முயன்றும் அழைப்பு எங்களை அடையவில்லை. நாங்கள் நேரம் தாமதித்ததால் முன்னர் திட்டமிட்டபடி எழுத்தாளர் சுனீல் கிரிஷ்ணனை சென்று சந்திப்பது சிரமம் என தோன்றியது.


கணேஷ் பட்டரின் மகன் அன்பு, மிகவும் அழகானவர் , மலர்ந்த முகத்துடன் புன்னகைத்துக்கொண்டே இருப்பவர், பார்த்தவுடனே அணுக்கம் ஏற்பட்டுவிடும். அன்று இரவு எங்களை விமான நிலையத்தில் கொண்டு சேர்ப்பதற்கான டாக்ஸியை ஏற்பாடு செய்து வைத்திருந்தார், எங்கள் அனைவரின் உடமைகளும் கணேஷின் உணவாக கல்லா பெட்டியின் அருகில் பாதுகாப்பாய் இந்தது. 


சுனீல் தங்கியிருந்த ஜூரோங் பகுதி நாங்கள் இருந்த லித்தில் இந்தியா பகுதியிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில், நகருக்கு வெளியே இருந்தது, அங்கே செல்வதில் எந்த சிரமும் இல்லை, ஆனால் அங்கிருந்து விமான நிலையம் நேர் எதிர்திசையில் ஐம்பது கிலோமீட்டர் தூரம். மெட்ரோ போக்குவரத்து குறைவான விசையில் இயங்கும் வழித்தடம் வேறு. டாக்ஸிக்கு அதிகம் செலவாகும் என்ன செய்வது என யோசித்தோம், 


கணேஷ் உடனே, "நான் இருக்கும் போது என்ன கவலை, வாங்க நம்ம வண்டியில் போவோம் என உற்சாகமாக எங்களை கிளப்பினார்". 


நம்ம வண்டியா என அதிர்ந்தபடி அன்பு அண்னன் கணேஷ் பட்டரை பார்த்தார், கணேஷை அழைத்து தனியாய் ஏதோ பேசிப்பார்த்தார் அன்பு, அவரின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டதால், குழப்பம் என்னவென்று விசாரித்தேன். 


"ஒன்னும் இல்ல தம்பி நீங்க போய் சாப்பிடுங்க இதோ வந்துடுறேன்" என கடையின் வெளியே சென்றார் கணேஷ்.  


கடையில் எல்லா மேஜையும் நிறைந்து இருந்தது, இந்திய தமிழ் முகங்கள், சீன முகங்கள் என கலவையான வாடிக்கையாளர்கள் இருந்தனர். உணவுடன் மது அருந்துபவர்களுக்கென தனியான பகுதி அமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அமர்ந்த  மேஜையில் தெஹ் தாரிக் என்ற பானம் பரிமாறப்பட்டது , நீங்கள் இதை குடித்து முடிப்பதற்குள் உங்கள் இரவு உணவுவை பார்சல் செய்து எடுத்துவருகிறேன் என சமையல் அறைக்கு சென்றார் அன்பு.  


தெஹ் தாரிக் என்பது கேரளத்து கடைகளில் கிடைக்கும் தேநீர், தமிழகத்தில் டீ தூளை நேரடியாக பாலில் கொட்டி கொதிக்கவைப்பது வழக்கம், அல்லது ஸ்ட்ராங் டிக்காஷனுடன் பாலும், சக்கரையும் கலப்பது வழக்கம். சிங்கப்பூர் , மலேசியாவில் குடிபெயர்ந்த இந்திய முஸ்லீம்கள் அறிமுகப்படுத்திய பானம் தெஹ் தாரிக். தேநீர் டிக்காஷனை தனியாக தயாரித்து, அதில் இனிப்பூட்டப்பட்ட பாலை கலந்து , ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு கோப்பையை இழுத்து இழுத்து டீயை ஆத்தி, அதை நுரைக்க செய்து, சூடு இல்லாமல் பரிமாறப்படும் பானமே  தெஹ் தாரிக். புரியும் படி சொல்லவேண்டும் என்றால் தேனீர் போல் தோற்றமளிக்கும் பால். அதன் மனமும் சுவையும் அத்தனை சிறப்பாக இல்லை, நான் சிங்கப்பூரின் கோப்பி என்ற பானத்திற்கு அடிமையாகி இருந்தேன். பிளாக் காப்பியில் சுண்டவைத்த கெட்டியான பாலை ஒரு கரண்டி சேர்த்து செய்யப்படும் பானம், நம்மவூர் பில்டர் காபிக்கு , பால் இல்லாத கட்டங்காப்பிக்கும் இடையில் இருக்கும் பானம் அது.


அன்பு அண்ணன் பாசத்துடன் தெஹ் தாரிக் அளித்ததால் என்னால் மறுக்க முடியவில்லை, எங்கள் எதிர் மேஜையிலிருந்த சீனப் பெண் இரண்டவது கோப்பை தெஹ் தாரிக் பருகிக்கொண்டிருந்தாள், அவள் கணேஷின் உணவத்தின் வழக்கமான வாடிக்கையாளர் என்பதை அறிந்துகொண்டோம். 


எங்களுக்கான வண்டி வெளியே காத்திருந்தது, எங்கள் உடமைகளை அன்பு அண்ணனிடமிருந்து பெற்றுக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம். எங்களுக்காக காத்திருந்த வண்டியை கண்டதும் புது சாகசத்துக்கான பரவசம் பீறிட்டது, உணவத்துக்கு உணவு ஏற்றி கொண்டுவரப்படும் வண்டி அது, குட்டியானை வண்டியை போன்றது. ஓட்டுனரின் இருக்கை அருகில் நாங்கள் இருவரும் அமர்ந்துகொண்டோம்  எங்கள் பைகள் வண்டியின் பின்புறம் வைக்கப்பட்டது. ஓட்டுநர் வேறு யாருமில்லை கணேஷ் பட்டர் தான் எழுவதை கடந்தவர். அடுத்த ஒருமணிநேரம் அதிவிரைவாக அந்த வண்டியில் நாங்கள் மூவரும் பயணிக்க ஆயத்தமானோம். 


எனக்கும் நிக்கிக்கும் குதூகலம் தாங்கவில்லை, லிப்ட் கேட்டு பயணிக்கும் பயணிகளின் மனநிலையில் இருந்தோம், கணேஷ் அவரின் வாழ்கை கதைகளை சொல்லிக்கொண்டே வந்தார், கடந்த முப்பது வருடங்களில் சிங்கப்பூர் எவ்வாறெல்லாம்  மாற்றம் அடைந்துள்ளது என்பதை ஒவ்வொரு இடமாக காண்பித்து  விவரித்தார். 


அவ்வப்போது  சில பீதிகளையும் கிளப்பி விட்டார், அதில் முதலாவது அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது, அதை அவர் சொல்லியபோது எட்டு வழி சாலையில் எண்பது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் எங்கள் வண்டி விரைந்து கொண்டிருந்தது. 

இரண்டாவதாக அவர் எங்களுக்கு அளித்த அதிர்ச்சி அவருக்கு காது கேட்பதில் இருந்த குறைபாடு, வண்டி ஓட்டும் சமையத்தில் அவரால் காது கேட்கும் கருவியை பயன்படுத்த இயலாது, எனவே யாரேனும் பின்னிருந்து ஹாரன் ஒலி எழுப்பினால் நான் தான் அவரை தொட்டு செய்கை மொழியில் எச்சரிக்க வேண்டும். 


சிரிப்பதா, பயப்படுவதா, சட்டைசெய்யாமல் சாலையை வேடிக்கை பார்ப்பதா என இருவருக்கும் புரியாமல் கணேஷ் சொன்னவற்றுக்கெல்லாம் தலை அசைத்துக்கொண்டே வந்தோம். இடை இடையே நிக்கி என்னை சிரிப்பு மூடியபடியே இருந்தாள், நாங்கள் சிரிப்பது மட்டும் கணேஷுக்கு தெளிவாக கேட்டது, எங்களை கண்டு அவரும் புன்னகைப்பார். 


“சிங்கப்பூர் ஹைவேல விபத்து நிகழ்ந்தால் உடனே ஆம்புலன்ஸ் வந்துவிடும் இங்க எல்லாம் சாலை பாதுகாப்பு சிறப்பானது” என்றார் கணேஷ், பரிதி ஆக்சிடென்ட்ல உயிர் போனபின்னடி ஆம்புலன்ஸ் வந்து யாருக்கு என்ன யூஸ் டா என டார்க் காமெடிகளை அடித்து தலை சுற்ற வைத்தாள் நிக்கி. . 


எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பார்வையிடும் பேராசிரியராக மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். நகரிலிருந்து வெகுதொலைவில் அமைந்திருந்த பல்கலைக்கழக வளாகம் மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது, ஐந்நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட வளாகம். துயில் என்பதே அறியாத சிங்கப்பூர் போன்ற நகரத்தில் கல்விக்கென இதுபோன்ற ஒரு அமைவிடம் எத்தனை அவசியம் என புரிந்தது. முதல்முறையாக கல்லூரி வளாகம் ஒன்றுக்கு சுற்றுசுவர்களோ, தடுப்பு அரண்களோ, முகப்பு கதவுகளோ இல்லை என்பதை அங்கு தான் பார்த்தேன், ஒரு பல்கலைக்கழகத்துக்கு மிக முக்கியமா அம்சம் இதுதானே?. பல முறை சென்னை ஐஐடி வளாகத்துக்குள் நுழைவதற்கு பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறேன், சும்மாவேனும் கடந்து அறிவு சமூகத்தை பார்வை இடுவதற்கே எத்தனை தடைகள் நமக்கு உள்ளன. கதவுகள் இல்லாத பறந்து விரிந்த பல்கலை கழகத்துக்குள் சிம்ம நடையிடுவது பயணிகளுக்கு மட்டுமே வாய்க்கப்பெறுவது. 


பெரிய பூங்கா, அதன் மத்தியில் ஒரு குளம், குளத்தின் விளிம்பு வரை செல்வதற்கு ஓர் மரப்பாலம் இரவிலும் அத்தனை அழகுடன் இருந்த பகுதியை பார்த்தவாறு எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் தங்கியிருந்த வீடு இருந்தது. சுனீல் எங்களை வரவேற்று வீட்டினுள் அழைத்துச்சென்று சுற்றிக்காண்பித்தார், நாங்கள் கூடுதல் நாட்கள் சிங்கையில் தங்குவதாக திட்டமிருந்தால் அந்த வீட்டிலியே தங்கிக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார், ஒரு சமையல் அறை, மூன்று பெரிய படுக்கையறை, பெரிய கூடம் என பங்களா போன்ற வீடு. நாங்கள் சென்ற நேரத்தில் ஆராச்சியாளர் சரவணனும் அங்கு இருந்தார். கணேஷ் பட்டர் சுனீலுக்கும் சேர்த்து இரவுணவு கொண்டு வந்திருந்தார், நானும் நிக்கிதாவும் உணவருந்திக்கொண்டே சுனீலிடம் எங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்தோம்.  


சிங்கையில் சுனீலின் அன்றாட பணிகள் குறித்தும், அவர் ஒருங்கிணைக்கும் சிறுகதை, இலக்கிய பயிற்சி வகுப்புகள் பற்றியும் விரிவாக அறிந்துகொண்டோம். கர்ட் வோன்னுகாட் "ஸ்லாட்டர் ஹவுஸ் 5" என்ற புத்தகத்தை சுனீலின் மேஜையில் பார்த்தேன் அதை புரட்டி பார்த்த நொடியிலிருந்து எங்கள் உரையாடல் இலக்கியம் நோக்கி திரும்பியது. சிங்கப்பூர் தேசிய நூலகம் தமிழ் நூல்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவம் குறித்தும், உலகில் வேறு எங்கும் கிடைக்காத அறிய தமிழ் நூல்கள் இங்கே தான் உள்ளது என சுனீல் சொன்னார்  


சிங்கப்பூர் எப்படி இருக்கிறது , என்றார் சுனீல். 


பெரிய சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நின்று கொண்டிருப்பது போல் இருக்கிறது, எல்லோரும் எதையோ தேடிக்கொண்டே இருக்கிறார்கள், என்றேன். 


சுனீல் தொடர்ந்தார், ஆம் எனக்கும் அப்படிதான் இருந்தது,இது ஒரு உட்டோப்பியா என நம்பத் தோன்றும், எல்லாமே இங்கே மிக் சரியாக இயங்குகிறதை போன்று. ஆனால் இது டிஸ்டோபியான் சமூகமாக கூட மாறலாம், அல்லது இந்த உட்டோபியா நீண்டால் ஒருவகை பதற்றத்தை கொண்டுவரலாம், இங்கிருப்பவர்களுக்கு பிற எல்லா தேசங்களும் டிஸ்டோப்பியாவாக தோன்றும். 


சிங்கப்பூரின் கடுமையான சட்டங்கள் பல தேசத்து மக்களை சச்சரவுகள் இல்லாது வாழ்வதற்கு வழிவகை செய்துள்ளது, அதே நேரத்தில் பிற தேசங்களில் கிடைக்கும் சிறிய சுதந்திரங்கள் கூட சிங்கப்பூர் குடிமகன்களுக்கு ஆடம்பரமாக தோன்றும். சிங்கப்பூர் என்றதுமே எல்லோரும் அங்கே செல்வந்தர்கள் தான் என தோன்றும். சிங்கப்பூரில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு, அதே நேரத்தில் பொருளாதார சமமின்மை மிகவும் அதிகம். இந்தியாவில் வீட்டு வேளைக்கு ஆட்கள் வைத்துக்கொள்வது சுலபம், செலவு குறைவும் கூட, ஆனால் சிங்கப்பூரில் வீட்டு பணியாளின் சம்பளம் இந்தியாவில் உள்ள ஒரு சராசரி ஐடி ஊழியரின் சம்பளத்திற்க்கு நிகரானது. இந்தியாவில் ஒரு அறைகொண்ட வீடுகளுக்கு ஒருவர் செலுத்தும் வாடகையை சிங்கப்பூரில் மூன்றுமடங்கு அதிகம் செலுத்தவேண்டி இருக்கும். இவ்வாறு சிங்கப்பூரில் வாழ்வதில் உள்ள அன்றாட சிக்கல்கள் பற்றி சுனீல் எடுத்துக்கூறினார். 


நிக்கிதா  சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவங்களை பற்றி உரையாடினாள், அவள் தங்கியிருந்த அறையின் அளவு எட்டடி  அகலமும் ( அதில் இரண்டு அடி கழிப்பறைக்கு ஒதுக்கப்பட்டது) , ஆறடி நிலமும் கொண்டது. அந்த அறையின் வாடகை இந்திய மதிப்பில் நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ருபாய். வேறு கிழக்காசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் சிங்கப்பூரில் விலைவாசி அதிகப்படியானது, உதாரணத்துக்கு இந்தியாவில் மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர் அவர் வாழும் வாழ்கை தரத்தில் சிங்கப்பூரில் வசிப்பதற்கு 400 சிங்கப்பூர் டாலர்கள் தேவைப்படும் ( 25000 ரூபாய்) அதாவது கூடுதலாக 15ஆயிரம் ரூபாய். ஒப்புநோக்க அதே பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர், அவரின் வாழ்க்கை தரம் சிறிதும் குறைவு படாமல் தாய்லாந்திலோ, மலேசியாவிலோ ஒரு மாதம் வாழ அவர் சம்பாத்தியத்திலிருந்து கூடுதலாக மூன்றாயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்படும், என புள்ளி விவரங்களை எடுத்து கூறினாள். 


நான் இருவரின் வாதத்தையும் ஒருவாறாக தொகுத்துக்கொள்ள முயன்றேன். சிங்கப்பூரின் வரலாறு குறித்தும், இன்றைய உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் உரையாடினோம். சிங்கப்பூரை மலேஷியா கைவிட்டதை பற்றியும், இன்று மலேசியாவை விட மும்மடங்கு பொருளாதார வளர்ச்சியை சிங்கப்பூர் அடைந்துள்ளதை பற்றியும் விவாதித்தோம். 


காந்தி என்ற ஆன்மாவை மேற்குலகு உள்வாங்கிக்கொண்டதை போன்று கிழக்கு உலகம் உள்வாங்கிக்கொள்ள வில்லையே ஏன் ? காந்தி இந்தியாவை கடந்து கிழக்கில் எந்த தேசத்தையும் வந்து சேரவில்லை.  காந்தியின் மறைவுக்கு பின்பான வருடங்களில் வங்கதேசம், இலங்கை, பர்மா, வியட்நாம், மலாய் போன்ற தேசங்களில் நடந்த அரசமைப்புகள் வன்முறை அதற்கு ஒரு சான்று. இவ்வாறு நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகத்தை சுனீலிடம் பேசி தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தேன். 


என் கேள்வியை கேட்டு புன்னகைத்து சுனீல் தொடர்ந்தார், நீங்கள் குறிப்பிட்ட தேசங்களின் அசுர வளர்ச்சிக்கு காந்தி ஒரு பெரிய தடைக்கல், காந்தி என்ற அடையாளத்தின் விலை இந்த நாடுகளுக்கு மிகவும் அதிகமானது. அவர்களுக்கு அன்றும், இன்றும் காந்தி ஒரு ஆடம்பரம் மட்டுமே. ஏன் எனில் எளிமையே இந்த தேசங்களுக்கு ஆடம்பரமானது. 


சிங்கப்பூர் போன்ற தேசத்தில் காந்தி என்பவர் ஒரு கேப்பிடலிஸ்ட் ஐகான், “நம் வாடிக்கையாளர்களே நம் தெய்வம்” என்ற பொன்மொழியை முன்வைத்த ஒரு வர்த்தகர் காந்தி, அதற்கு மேல் காந்தியின் எந்த கோட்பாடும் இவர்களுக்கு தேவை படவில்லை. சுனீலின் பதில் மிகவும் கூர்மையானதாக இருந்தது. 


மேலும் எங்கள் உரையாடலில் சிங்கப்பூர் என்னும் தேசத்திற்கு அண்டை தேசமான சீனா மீதும், மலேசியா மீதும் இருக்கும் பயத்தை பற்றி விவாதித்தோம். சிங்கப்பூரில் இன்றும் கூட போர் நடந்தால் மக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பதற்கான பயிற்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குண்டு விழுந்தால் பதுங்கிக்கொள்ள தேவையான பங்கர் வசதிகள் தான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ளதை சுனீல் சுட்டிக்காட்டினார். 


எங்கள் உரையாடலின் முடிவில் இவ்வாறு எண்ணம் தோன்றியது, பெரு தேசங்களின் வளர்ச்சி சென்று முடிவது போரில் தானே ? மகதம் முதல் ஜெர்மனி வரை அதை தானே வரலாறு நமக்கு கற்பித்து உள்ளது ?.  


நாங்கள் அடுத்து செல்லப்போகும் தேசங்களை பற்றியும், அங்கே எங்களது திட்டங்கள் பற்றியும் உரையாடி அங்கிருந்து கிளம்பினோம். சுனீலும் சரவணனும்  வாசல் வரை வந்து எங்களை வழியனுப்பினார். வாசலில் சரவணனின் ஹார்லே வகை இருசக்கர வாகனம் இருந்தது நம் ஊர் மதிப்பிற்கு முப்பது லட்சம் ருபாய், வாகனத்தின் விலையை விட அதை சிங்கப்பூரில் சொந்தமாக வைத்து, சாலையில் ஓட்டுவதற்கான தொகை அதிகம். அந்த வாகனத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்கு எழுத்தாளர் ஜெயமோகன் ஒருமுறை பயணம் செய்தார் என்பது கூடுதல் தகவல்.  


ஆராச்சியாளருக்கே உரிய அமைதி சரவணனிடம் இருந்தது. அவரின் அமைதி எங்களை சூழ்ந்திருந்த வனப்பகுதியின் அமைதியை மேலும் ஆழமாக்கியது, நாங்கள் நின்ற காட்டின் அமைதி கூட சிங்கப்பூர் அரசாங்கத்தால் திட்டமிட்டு உருவாக்க பட்டுள்ளது என எண்ணினேன். இயற்கை பற்றிய விழிப்புணர்வை தாண்டி இயற்கை மீதான ஒரு கட்டுப்பாடு உணர்வு அங்கே அதிகம் நிலவுவதாக தோன்றியது, இதை சுனீலிடம் சொன்னேன் அவர் ஆம் என்றார் இங்குள்ள மனிதர்கள் கணக்கிடபட்டு, அவர்களுக்கென வருகை பதிவு உள்ளதை போல பாம்பு, பட்சி, கீறி, உடும்பு என இங்கே தோன்றும்  உயிரினங்களுக்கும் வருகை பதிவு உண்டு. 


நாம் அடுத்தமுறை இதே நேரத்தில் இங்கே சந்திக்கும் போதும் இதே சூழல் நிலவும், அந்த செட்டிங்கை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். நாமும் சரவணனின் ஆராய்ச்சி கூடத்தில் வளரும் எலிகள் தான ? ஆம் என புன்னைகைத்து அங்கிருந்து விடைபெற்றோம்.     


- மேலும்



8 views

Recent Posts

See All

Comments


bottom of page