சென்னையில் துவங்கி சிங்கப்பூர் சென்று அங்கிருந்து , வியட்நாமின் ஹோசிமின் நகர் வழியாக ஜப்பான் சென்று, டோக்கியோ, கியோட்டோ, வாக்கயாமா ஆகிய இடங்களை சுற்றி அலைந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக மீண்டும் சென்னை என்பது இப்பயணத்தின் கழுகுப்பார்வை.
" அடுத்த நிறுத்தத்தில் இறங்க ஒரு பயணி எழுந்தார், பார்க்க இந்தியர் போல் இருந்தார் அவரின் உடையெங்கும் சிமெண்ட் தூசி இருந்தது பிஹாரி என எண்ணி ஹிந்தியில் லிட்டில் இந்தியா எந்த நிறுத்தம் எனக் கேட்டேன், நான் தமிழ் தான் ப்ரோ என்றார் "
அன்றைய மாலையின் பஸ் பயணத்தில் சிங்கப்பூர் சாலையின் தரத்தை நன்கு உணர முடிந்தது, விலையுயர்ந்த சொகுசுக்காரில் பயணிப்பதை போல் இருந்தது, மெட்ரோவில் இருந்த கூட்ட நெரிசல் பேருந்தில் இல்லை. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்தில் தமிழ் முகங்களே அதிகம் பேருந்தில் ஏறவும், இறங்கவும் செய்தனர். மலாய், சீன மக்கள் நாங்கள் பயணித்த பேருந்தில் அதிகம் காணப்படவில்லை.
நெரிசல் அற்ற சாலையில், ஒலி கக்கும் வாகனங்களின் தொந்தரவில்லாமல் பயணிக்கும் அனுக்கிரஹம் சென்னையில் எப்போதாவது வாய்க்கும் என எண்ணிப்பார்த்தேன், சிந்தனையில் எந்த நம்பிக்கையும் தோன்றவில்லை. களைப்பில் நிக்கிதா தூங்கிவிட்டாள்.
என் நண்பன் குரு, தேவகோட்டையை சேர்ந்தவன். அவன் தாத்தாவின் தலைமுறையிலிருந்து அவன் குடும்பத்து ஆண்கள் மட்டும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகின்றனர். இவன் என்னுடன் பள்ளியில் பயின்ற நாளில் வருட வருடம் சிங்கப்பூரிலிருந்து விதா விதமான பென்சில், பேனா, அதற்கான பிரத்தேயேகமான டப்பா, வண்ண வண்ண கைக்கடிகாரங்கள் என எடுத்து வருவான், எல்லாம் அவன் அப்பா சிங்கப்பூரிலிருந்து அனுப்பிவிடுவது. வருடத்திற்கு ஒருமுறை அவன் அப்பாவைச் சந்திப்பான். விடுமுறைக்கு வரும் தந்தை அவனுடன் மூன்று வாரங்களுக்கு மேல் இருந்ததில்லை, அன்று அவர் ஓர் கட்டுமான நிலையத்தில் வெல்டிங் பணி செய்தார். இன்று குரு அதே நிறுவனத்தில் கட்டட வேலைகளை மேற்பார்வையிடுகிறான். அவன் அப்பா இப்போது சென்னையில் ஓர் உணவகம் நடத்துகிறார், இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து அப்பாவுடன் வசிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கும் என தெரியவில்லை.
சிங்கப்பூர் வந்து இறங்கியதிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என்னை அழைத்து எல்லாம் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக்கொண்டான், எப்போதும் சிரித்த முகம் கொண்டவன். அன்று மாலை அவனை வந்து சந்திப்பதாக சொல்லியிருந்தேன், நான் இருக்குற இடத்துக்கு உன் மனைவியெல்லாம் கூட்டிகொண்டு வரவேண்டாம் டா, இது ஒரு மாதிரி கண்டைனர் ஏழு பேர் ஒரே அறையில் இருக்கோம். உன்னோட பயணப்பைகளைக் கூட இங்க சுலபமா வைக்கமுடியாது. நானே உன்னை வந்து லிட்டில் இந்தியாவில் சந்திக்கிறேன் எனச் சொல்லிவிட்டான்.
சென்னையிலிருந்து கிளம்பும் போது நான் ரோமிங் சேவையை வாங்கவில்லை. சிங்கப்பூரில் பல இடங்களில் இலவச இணைய வசதி உள்ளது, தெருவிளக்கு போல் கிடைக்கும் சேவை. அதிவேகமானது அல்ல, நம் 3ஜி வேகத்திற்கு இணையானது. நான் பேருந்தில் இருந்தபடி இணையத்துடன் என் தொலைபேசியை இணைத்தேன். வாட்சப்பில் இருபது அழைப்புகள் குருவிடமிருந்து வந்திருந்தன, நான் தொலைந்திருப்பேன் என எண்ணிவிட்டான் போல, நான் ஆன்லைன் சென்றதும் மீண்டும் அழைத்து எல்லாம் நலமா என விசாரித்துக்கொண்டான். எனக்காக லிட்டில் இந்தியாவில் இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகச் சொன்னான், நான் அழைப்பை எடுக்காததால் மீண்டும் அவன் தங்கியிருக்கும் இடம் நோக்கியே சென்று விட்டதாக தெரிவித்தான். அந்தச் சூழலை எண்ணி குற்றவுணர்ச்சி உண்டானது.
அன்று மாலை பேருந்து ஏறுவதற்கு முன்னர், நாங்கள் ஹாக்கர் நிலையம் சென்ற போது மிகவுயர்ந்த கட்டிடங்களை பார்த்து வியந்தோம். அதே நேரத்தில், அதே போன்று மற்றொரு கட்டிடம் கட்டப்பட்ட இடத்தையும் பார்த்தோம், ஒரு கட்டிடத் தொழிலாளி விபத்தொன்றில் சிக்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபட்டார். "இங்க இருக்குற பெரும்பாலான கட்டிடம் கட்டுறவங்க நம்ம தமிழ் ஆளுங்க, நம்ம ஊர்ல ஹிந்திக்காரங்களை நாம எப்படி நடத்துறோமோ அப்படிதான் இங்க இருக்குற சீன முதலாளிங்க நம்ம தமிழ் ஆளுங்கள பாப்பாங்க. நாம இங்க பாக்குற பெரிய கோபுரம் மட்டும் சிங்கப்பூர் இல்ல, இங்க இருந்து ஒரு மணிநேரத்துக்கு பயணம் செய்தா, மலேஷியா எல்லை ஓரம் ஒரு சிங்கப்பூர் இருக்கு. தகர கொட்டைகள், கழிவுகள் வெளியேற இடமில்லாத, ஒரு எலிக்கூடு அந்த சிங்கப்பூர். அத பத்தி எங்கயும் யாரும் பேசமாட்டாங்க. என்று பிரவீன் சொன்னது ஒரு நிமிடம் நினைவுக்கு வந்தது.
தொடர் சிந்தனையில் நான் இறங்கவேண்டிய பேருந்து நிறுத்தத்தின் பெயரை மறந்திருந்தேன், நிக்கியை எழுப்பி கேட்டேன் அவளும் மறந்துவிட்டிருந்தாள். அடுத்த நிறுத்தத்தில் இறங்க ஒரு பயணி எழுந்தார், பார்க்க இந்தியர் போல் இருந்தார் அவரின் உடையெங்கும் சிமெண்ட் தூசி இருந்தது பிஹாரி என எண்ணி ஹிந்தியில் லிட்டில் இந்தியா எந்த நிறுத்தம் எனக் கேட்டேன், நான் தமிழ் தான் ப்ரோ என்றார்.
"லிட்டில் இந்தியா என்பது நம்ம தி.நகர் போல ஒரு பகுதி நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க அந்த நிறுத்தம் பெயர் சொல்றேன்" என்றார். எங்களுக்கு கணேஷின் உணவகத்தின் பெயர் மட்டுமே நினைவில் இருந்தது அதை அவரிடம் சொன்னதும், அவர் தொலைபேசியில் வழி பார்த்தார், 'நீங்க இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்து வந்துட்டோம். நீங்க இப்போ வரப்போற நிறுத்தத்துல இறங்கி வழி கேட்டு போய்டுங்க நம்ம ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க உங்களுக்கு ரூட்டு சொல்லுவாங்க" என்றார்.
ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து தோட்டவேலைகளுக்காக ஆண்கள் மட்டும் சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்டனர், அவர்களில் சிலர் கால்நடை மேய்ச்சலுக்காக ஒருபகுதியை பயன்படுத்தினர், அந்த பகுதி லிட்டில் இந்தியா என அழைக்கப்பட்டது. சில வருடங்களில் தொழில் நடைமுறையில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வேலை ஆட்களின் மனைவியும் மக்களும் சிங்கப்பூருக்கு வரஇயலும் என்ற நிலை வந்ததும், லிட்டில் இந்தியா பகுதியில் தமிழர் குடியேற்றம் நிகழ்ந்தது. தோட்ட வேலையாட்களின் கூடாரமாக இருந்த பகுதி, இந்திய சரக்கு சாமான்களை விற்கும் பகுதியாக மாறி, மிளகு, மஞ்சள், பன்னீர் ரோஜா, நிஜாம் பாக்கு, ஊதுபத்தி ஆகிய வாசனை இந்தப் பகுதி முழுவதும் நிறைந்தது, கூடவே எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலும் காற்றில் நிறைந்தது.
நாங்கள் இறங்கிய நிறுத்தத்திலிருந்து முன் செல்வதா, பின் செல்வதா என தெரியவில்லை. சாலையின் மறுபுறம் தமிழ் அதிர்வலைகள் இருப்பதை அறிந்துகொண்டோம். நாங்கள் சென்ற நேரம் தீபாவளி சமயம் என்பதால் நகர் விழாக்கோலம் பூண்டது, அழுகல் மனம் இல்லாத ரங்கநாதன் தெருவில் இருப்பது போன்று இருந்தது, சுவாசிப்பதற்கு கொஞ்சம் காற்று வீசியது. நாங்கள் இறங்கி தெருவெங்கும் தங்க நகைககடைகள் இருபக்கமும் இருந்தது, கவரிங் கடைகளும் இருந்தன. எந்த வழி செல்வது என்பதை அறியாமல் கொஞ்சம் குழம்பினோம், நம்மவூராக இருந்தால் ஆட்டோ அண்ணாக்கள் எங்களை அப்படி வழி கேட்க ஆளில்லாமல் அலைய விட்டிருக்க மாட்டார்கள், அந்தத் தெருவில் எல்லோருக்கும் பரபரப்பாக இயங்க ஏதோ ஒரு காரணம் இருந்தது.
ஜிபிஸில் தெருவை குறித்துக் கொண்டு நாங்களே வழி தேட ஆரம்பித்தோம். முதல் முச்சந்தியின் ஒரு முனையில் மாரியம்மன் கோவில் இருந்தது, சீனர்களும், பிற தேசத்தவர் சிலரும் கோவிலில் வழிபாடு செய்தனர், எனக்கு அது ஒரு கனவுக்காட்சி போல் இருந்தது. எனக்கு இவ்வாறான கனவுகள் அடிக்கடி வருவதுண்டு கடலில் குதிரை நடந்துபோகும், மேகத்தில் பெரிய மீன் ஒன்று துள்ளிக் குதித்து பறக்கும், தேவாலயம் ஒன்றில் சீக்கியர் தொழுகை செய்வார். juxtaposition என்ற ஆங்கில சொல் ஒன்று உண்டு, அதன் அர்த்தத்தை நொடிதோறும் சிங்கப்பூரில் உணர்த்துக்கொண்டே இருந்தேன்.
பரிதி இவ்வளவு தூரம் வந்திருக்கோம் சாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு போய்டலாமே என நிக்கிதா கேட்டாள், எனக்கும் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் எங்களுக்காக கணேஷ் காத்திருப்பார், நாங்கள் அன்று இரவு எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனை சென்று பார்க்கலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். வழி தேடுவதற்கு முன்னர் கோவிலை கொஞ்சம் எட்டிப்பார்த்து வரலாம் என எண்ணி உள்ளே சென்றோம். கடை வாசலில் நிரம்பி இருந்த பெரிய தாமரை மொட்டுக்கள் அம்மனின் கழுத்தில் மலர்ந்த கமலங்களாக அலங்கரித்திருந்தன, நாதஸ்வரமும், கொட்டுமேள இசையும் நாங்கள் இருந்த பகுதியை நிறைத்தது.
பரிதி உள்ள இருக்கறது என்ன சாமி, என ஒரு சன்னதியை கை நீட்டி கேட்டாள் நிக்கி. பெரியாச்சி அம்மன் என்றேன். கிராம தெய்வமா ? என்றாள். இந்தகோவிலை கட்டினவங்களுக்கு கிராம தெய்வம், இப்போ நகர தெய்வம் ஆயிட்டாங்க என்றேன். தமிழகத்தில் பெருமபாலான கிராம தெய்வங்களும், குல தெய்வங்களும் சிவன், பார்வதி என்ற ஒற்றை குறியீட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டார்கள். சிங்கப்பூரில் மட்டும் பெரியாச்சி இன்னும் தனித்த பெண் தெய்வமாகவே வழிபடப்படுகிறாள். நரசிம்மரின் பெண் ரூபம் போல் உக்கிர உருவம் கொண்டு ஒரு கையில் குழந்தையை ஏந்தி, தொடையில் ஒரு பெண்ணை கிடத்தி அவள் வயிற்றைக் கீறி, குடலை உருவும் நிலையிலும், கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிக்கும் தோரணையில் அமர்ந்திருப்பவள் பெரியாச்சி .
சோழமண்டலத்தை பூர்வீகமாக கொண்ட செட்டியார் சமுதாயத்திற்க்கும், ராஜகம்பள நாயக்கர் மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கும் முக்கியத் தெய்வமாக பெரியாச்சி இருந்து வருகிறாள். அவளின் தொன்மமும் பிற்கால சோழர் ஆட்சிக்காலத்தை சேர்ந்த ஒன்று.
வீரமாகாளி அம்மன் கோவில் வெளியே இருந்த பூக்கடையில் கணேஷின் விடுதிக்கு செல்லும் வழியைக் கேட்டோம், உணவகத்தின் பெயர் அங்கிருப்பவருக்கு அப்பர் வெல்ட் சாலை என்ற பகுதில் உணவகம் இருப்பதைத் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடக்கவேண்டி இருந்தது. சோர்ந்திருந்த நிக்கிதாவுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பெரியாச்சியின் கதையைச் சொல்லிக்கொண்டே நடந்தேன்.
தொண்டைநாட்டின் சில பகுதிகளை ஆட்சிசெய்த கடைசி சிற்றரசர் சம்புவராயரின் மகன் நான்காம் வல்லாளன் கி.பி.1406 ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்து, மனைவி கார்குழலியுடன் காட்டில் வாழ்ந்துவந்தான். அவனது மனைவி கார்குழலி கர்ப்பம் தரித்தாள், வல்லானுக்கு பிறகும் குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் என அவனுக்கு சாபம் அளிக்கப்பட்டிருந்தது. அவனது குழந்தை பூமியை தொட்டு விட்டால் அவன் இறந்து விடுவான் என்பதால் பிறந்தவுடன் குழந்தையையும் அதைத் தொட்டவர்களையும் உடனே கொன்று விட வேண்டுமென சோதிட கணிப்புகள் அவனுக்கு பரிகாரம் கூறின.
ஒரு நாள் நள்ளிரவில் கார்குழலிக்கு பிரசவவலி ஏற்பட்டது, அப்போது மருத்துவச்சி உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் அந்தக் காட்டில் பிரசவம்பார்க்கும் தாதியாக அங்கே தோன்றினாள். அவளிடம் குழந்தை பூமியைத் தொடாதவாறு பிரசவத்தை நடத்திக் கொடுக்க கேட்டுக் கொண்டான் வல்லாளன். அதற்கு ஒப்புக்கொண்ட பெரியாச்சி வீட்டின் அருகில் இருந்த சிறிய கற்பாறையில் அமர்ந்து இரண்டு கால்களும் தரையைத் தொடும்படி ஆசனம் கொண்டாள். கார்குழலியை தனது மடியில் மல்லார்ந்த நிலையில் கிடத்தி, அவளது வயிற்றைக் கிழித்து கருப்பையின் மேற்புறத்தை திறந்து குழந்தையை வெளியே எடுத்தாள். அந்த ஆண் குழந்தை பூமியைத் தொடாதபடி அவளது கையால் மேலுயர்த்திப் பிடித்துத் தாங்கினாள். கார்குழலிக்கும் குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு வெற்றிகரமாக பிரசவத்தை செய்து முடித்தாள்.
சோதிட அறிவுரையின்படி குழந்தையையும், மருத்துவச்சியையும் கொல்வதற்காக தனது உடைவாளை உருவினான் வல்லாளன், அதைக் கண்டு ஆத்திரம் கொண்ட பெரியாச்சி ஒரு கையால் குழந்தையை உயர்த்திப் பிடித்து இன்னொரு கையால் வல்லாளனின் இதயத்தை வாளால் அரிந்து எடுத்தாள், அவனை அவளது காலடியில் தள்ளி ஓங்கி மிதித்துக் கொன்றாள். வல்லாளனைக் காப்பாற்றுவதற்காக எழ முயற்சித்த கார்குழலியின் ஈரக்குலையை அறுத்து வீசினாள், குடலை அள்ளி உண்டாள்.
தனது கையால் தாங்கிப் பிடித்து பாதுகாத்து வைத்திருந்த வல்லாளனின் குழந்தையை பூமியில் தவழ விட்டாள். அவனுக்கு “சீராளன்” எனப் பெயரிட்டு வளர்த்தாள். அன்றிலிருந்து கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் காக்கும் தெய்வமாக பெரியாச்சியை மக்கள் வழிபடத் தொடங்கினர். இன்று பெரியாச்சி இறைதேவதையாக உயர்வடைந்து பெரியாச்சி அம்மனாக வணங்கப்படுகிறாள்.
பெரியாச்சியே தம்பதியரை ஆடி மாதத்தில் சேர்ந்து இருக்க வேண்டாம் என வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது. ஆடி மாதத்தில் கருவுற்றால் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் பிரசவ வலி ஏற்படும். சித்திரை மாதத்தில் வெயில் உச்சத்தில் இருப்பதால் பிரசவிக்கும் பொழுது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான ரத்தப் போக்கினால் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் பெரியாச்சியின் இந்தப் பேறுகால அறிவுரையை இன்றளவும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது, சிங்கப்பூரிலும் இந்த வழக்கம் தொடர்கிறது.
பெரியாச்சி அம்மன் கர்ப்பவதிகளை காக்கும் தெய்வமாக வழிபடப்படுகிறாள். மெதுவாக பெண் தெய்வங்கள் குமரி தெய்வங்களாகவும், அண்ணை தெய்வங்களாகவும், வழிபடப்படுவது வழக்கம். வயதான மூதாட்டி ரூபத்தில் பெரியாச்சி அம்மன் வழிபடப்படுகிறாள். பெரியாச்சிக்கு களி, கருவாட்டுக் குழம்பு, மற்றும் முருங்கைக் கீரை ஆகியவற்றை படைத்தது வழிபடுவது வழக்கம், சிங்கப்பூரில் சுத்தமுக பெரியாச்சியாக வழிபடப்படுவதாலும், வைதிக முறையில் பூஜிக்கப்படுவதாலும் அவளுக்கும் சைவப்படையல் மட்டுமே, அதனால் தான் அம்மை இளச்சி போய்ட்டா என்றாள் நிக்கி, மாடன் மோட்சம் கதையை நினைவுகூர்ந்து நானும் நிக்கியும் சிரித்துகொண்டோம்.
- மேலும்
Comments