அந்தமான் சென்றதை பற்றி எழுத்தாளர் தி.ஜானகிராமன், 1979ல் கணையாழி இதழில் எழுதிய பயண கட்டுரை இது.
(அந்தமான் பழங்குடிகள் இந்திய பெருங்கடலில் வில்லுடன் மீன் பிடிக்கும் காட்சி. 1890 இல் எடுக்கப்பட்ட புகைப்படம். நன்றி meisterdrucke.uk)
“போர்ட்ப்ளேர் எப்படி?” என்று கேட்டதற்கு “ஐயைய, எங்களுக்கு பிடிக்கவே இல்லை, எங்கே பார்த்தாலும் ஒரே வெளிச்சம்!”என்றார்களாம். கொசுவோ, பூரானோ, மலேரியாவோ, அவர்களுக்குக் காடுதான் வீடு. மண்பூச்சு, வேர், இலை மாதிரி கைவைத்தியம் இருக்கவே இருக்கிறது.
அந்தா . . . மான் என்று கத்தினானாம். அந்தமானுக்கு இப்படித்தான் பேர் வந்ததாம். மரக்கலத்திலிருந்து கத்தியவன் தமிழனாக இருந்திருக்கலாம். அது சோழ ராஜாவின் மரக் கலமாக இருந்திருக்கும். ஆனால் சோழர்கள் கொடுத்த பேர் நக்கவரம். அம்மணமாக நின்ற காட்டுமிராண்டிகளைப் பார்த்து அந்தப் பெயர். நிக்கோபாரிகள் இப்போது அப்படியில்லை.
அந்தமான் போர்ட்ப்ளேர் நகரில் ஆபர்டீன் கடைத் தெருவில் கோவிந்தராஜுலு ஒரு பெரிய மரவீட்டில் வசிக்கிறார். ரொம்ப வயதானவர். ஜப்பானியர்கள் அந்தமான் தீவுகளைப் பிடித்து ஆட்டிவைத்தபோதெல்லாம் அங்கே இருந்தவர் அவர். ஜப்பானியரோடு வந்து தங்கிவிட்டுப் போன சுபாஷ் சந்திர போஸைச் சந்தித்துப் பேசியவர். 1971இல் என்னைக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அந்தமான் கதையெல்லாம் சொன்னார்.
ஜப்பானியர்கள் படுத்திய பாட்டையெல்லாம் கதை கதையாகச் சொன்னார். ஒரு சின்னக்கப்பல் நிறைய இந்தியர்களை ஏற்றி நடுக்கடலில் தள்ளி முழுக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்கள் ஜப்பானியர்கள் ஒரு தடவை. அதை மூடுமந்திரமாகச் செய்ய ஏற்பாடு. தந்திரமாகப் பேசியே அந்த ஜப்பானிய ஜீவகருணையைத் தடுத்தார் கோவிந்தராஜுலு. “இது அனுமான் தீவு சார். அனுமார் இமயமலைக்குப் போய் சஞ்சீவி பர்வதம் கொண்டு வந்தாரே, அப்போது அவரோடே ரேடியோ; ரேடார் எல்லாம் கெட்டுவிட்டது. வழிதவறி விட்டது. அப்படியே சுமையைக் கீழே போட்டுவிட்டு மறுபடியும் போய், வேறு ஒரு பாகத்தை பெயர்த்துக்கொண்டு போனார். கீழே போட்டுவிட்டுப் போன பாகம்தான் இது. அனுமான் அந்தமானாகிவிட்டார்.” என்று அவரும் பேருக்குக் கதை சொன்னார். மானும் சரியான காரணம் தான். அந்தமான் காடுகளில் மான்கள் ஏராளம். பல தீவுகளில் வீடுகளில் ஆடு கோழிகளோடு மானும் வளைய வளைய வந்து கொண்டிருக்கும். மான் இறைச்சி சுவையானதாம். அந்தமானில் சுலபமாகக் கிடைக்கும். முட்டை, கோழி போல அதுவும் மலிவு. வாரத்திற்கு இருமுறை கல்கத்தாவிலிருந்து வந்து திரும்பும் விமானத்தின் சிப்பந்திகள் அதை வாங்கிப்போகும் மும்முரத்தைப் பார்த்தாலே தெரியும்.
போன வருஷம் ஏப்ரலில் போனபோது கோவிந்த ராஜுலுவைப் பார்க்க நேரமில்லை. டிசம்பரில் போனபோது அவர் ஊரிலில்லை. ஆந்திராவில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தாராம். பார்த்திருந்தால் அவர் வாயைக் கிளறியிருக்கலாம்.
ஆனால் வேறு யார் யாரோ கதை சொல்லப் படுத்துக் கிடந்தார்கள். பஜாருக்குப் போகிற நாலைந்து சாலைகளிலும் சாலையின் குறுக்கே பெண்களும் ஆண்களுமாகப் படுத்துக் கிடந்தார்கள். டாக்ஸி, கார்கள் எல்லால் திரும்பி வேறு வழிகளைத் தேட வேண்டியிருந்தது. நடுப்பகல். தோலை உரிக்கிற வெய்யில். தார் போட்ட சாலை. சுடச்சுட வேர்க்க வேர்க்க அப்படி சத்யாக்ரகம் செய்வதானால் தலைபோகிற காரியமாக இருக்க வேண்டும்.
படுத்திருந்தவர்கள் வங்காளிகள். வடக்கு அந்தமான் தீவுகளைச் சேர்ந்த திக்லிப்பூர் வட்டாரத்திலிருந்து இரண்டு நாள் கப்பலில் பிரயாணம் செய்து இந்த சத்யாக்ரகம் செய்யவே வந்திருக்கிறார்கள். யாரவாக்கள் காட்டிலிருந்து வந்து இந்த வங்காளிகளின் மூன்று எருமைகளைக்
கொன்றுவிட்டார்களாம். மாமிசத்திற்காக வந்தார்களோ என்னவோ, பல பேர் சேர்ந்து விரட்டவே, அப்படியே எருமைகளைப் போட்டுவிட்டு ஓடி விட்டார்களாம்.
“ஒன்று, எங்களுக்குப் பாதுகாப்புத் தரட்டும், இல்லாவிட்டால் இந்த யாரவாக்களை ஒழித்துக்கட்டட்டும். எங்களையாவது விடட்டும். நாங்கள் ஒழித்துக்கட்டிவிடுகிறோம் அவர்களை. இரண்டும் செய்யாமலிருந்தால் எப்படி! எங்களை ஏன் குடியேற்றினார்கள்? காட்டைத் திருத்து - பயிர் செய் என்று ஏன் சொல்ல வேண்டும்? அப்புறம் இந்தக் காட்டுமிராண்டிகளையும் தொடக் கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும்? மீசை வேண்டுமா? கூழு வேண்டுமா? ஒரு முடிவாகச் சொல்லட்டுமே” என்று நாலைந்து வங்காளிகள் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார்கள்.
வடக்கு, தெற்கு, மத்திய அந்தமான் தீவுகளிலும் நிக்கோபாரிலும் வங்காளிகள், தமிழர்கள், மலையாளிகள், மாஜி ராணுவத்தினர் என்று நூற்றுக்கணக்கான பல குடும்பங்களுக்கு காட்டைத் திருத்தி வேளாண்மை செய்யுமாறு ஏக்கர் ஏக்கராக நிலம் தந்து குடியேற்றியிருக்கிறார்கள்.
வடக்கு அந்தமானிலிருந்து குடியேற்றப்பட்ட வங்காளிகள் அந்தக் காலத்துக் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இப்போது பங்களாதேஷ்) வந்த அகதிகள்.
அந்தமான் தீவுகளில் பலவிதக் காட்டு மக்கள், யாரவாக்கள், ஞங்கிகள், சிறிய அந்தமான்கள், சென்டினலிகள் என்று பலர். எல்லாம் நீக்ரிட்டோ இனம். தலையில் சுருட்டை சுருட்டையாகக் கம்பளி மயிர். கறுப்பு அல்லது கறுப்புச் செப்பு நிறம். ஒரு காலத்தில் இந்த நூற்றுக்கணக்கான
காடுகளில் எதேச்சையாகத் திரிந்துகொண்டு வாழ்ந்தவர்கள். பிரிட்டிஷார்கள் பிடித்துக்கொண்டு நாகரிகம் புகுந்ததும் உட்பகுதிகளுக்கு ஓடிவிட்டார்கள். முக்கியமாக யாரவாக்களும் சென்டினலிகளும் நாகரிகத்தின் வாடையையே விரும்பவில்லை. கண்ணாடி, உடை, ட்ரான்ஸிஸ்டர் அணிகள் என்று பல சாமான்களைக் கடற்கரையில் போட்டுவிட்டுக் கப்பல்கள் ஒதுங்கி நின்று என்ன செய்கிறார்கள் என்று காத்திருந்ததுண்டு. அவர்கள் அதைச் சீந்தக்கூட இல்லை. யாரவாக்களில் சிற்சில கூட்டங்களை சிநேகிதம் செய்துகொண்டு பழகியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் நாகரிகக் கும்பலோடு வந்து கலக்கத் தயாராக இல்லை. ஓரிரண்டு யாரவாக்களை போர்ட்ப்ளேர் (அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம்) நகரத்திற்கு அழைத்து வந்து உபசாரங்கள் செய்து மியூசியப் பொருள் போல் காட்டிவிட்டுத் திரும்பிக் காட்டிலேயே கொண்டுவிட்டிருக்கிறார்கள். இந்த யாரவாக்களில் சில குழுக்களோடாவது சிநேகம் செய்துகொள்ள முடிந்திருக்கிறது. ஆனால் சென்டினலிகளை நெருங்கவே முடியவில்லையாம். அவர்கள் பரம விரோதிகள். ஓங்கிகள் என்ற இனம் மட்டும் நட்புக்கு இடம் கொடுத்திருக்கிறது. ஒரு ஓங்கிப் பையனை போர்ட்ப்ளேர் பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன். அவனைப் பிடித்து அரசில் வேலை கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓங்கிச்சியை வாத்தியார்ச்சியாகக்கூட நியமித்திருக்கிறார்களாம். ஓங்கிகளோடு பழகியிருந்த ஒரு தமிழ்ப் பெண்மணி ஒரு என்ஜினியர் மனைவி. தகரக் கதவும் பலகைகளுமாகவே கொண்ட ஒரு வீட்டில் ஒரு தீவில் பத்து வருடங்களுக்கு முன்னால் வசித்துவந்தாராம். பூரானும் பாம்புகளும் வீட்டில் வளைய வந்துகொண்டிருக்கும். பாம்பைப் பழுதையாகப் பார்க்கக்கூடிய அளவுக்கு பயம் தெளிந்துவிட்டதாம். ஓங்கிகள் தலைமறைவோடு மட்டும் அம்மணமாக வருவார்களாம். ஒரே ஒரு ஸ்பூன் தேயிலையைப் போட்டு இரண்டு செம்பு நீரில் காய்ச்சிக் கொடுத்தால் போதுமாம். அவ்வளவையும் குடித்துவிட்டு தூங்குவானாம். தூக்கம் தெளிந்ததும் எழுந்து போய்விடுவானாம். மறுநாள் சாம்பிராணி, தேன் என்று காட்டுப் பொருட்களைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கொடுத்துவிட்டு போவானாம். காசு கிடையாது. ஒரு இரண்டு செம்பு டீத்தண்ணிக்குக் கைம்மாறு.
ஒரு முறை சில ஓங்கிகளை போர்ட்ப்ளேருக்கு அழைத்து வந்து வேடிக்கை காட்டிவிட்டுத் திரும்பி காட்டிலேயே கொண்டு விட்டார்களாம். இந்த அம்மாள் “போர்ட்ப்ளேர் எப்படி?” என்று கேட்டதற்கு “ஐயைய, எங்களுக்கு பிடிக்கவே இல்லை, எங்கே பார்த்தாலும் ஒரே வெளிச்சம்!” என்றார்களாம். கொசுவோ, பூரானோ, மலேரியாவோ அவர்களுக்குக் காடுதான் வீடு. மண்பூச்சு, வேர், இலை மாதிரி கைவைத்தியம் இருக்கவே இருக்கிறது.
பழங்குடிகளைக் காப்பாற்றுகிற அக்கறை நாகரீக உலகமனைத்துக்கும் உண்டு. அவர்கள் இனம் அழியாமல் இருக்கவும் வேண்டும். நம்மையும் தொந்தரவு செய்யக் கூடாது. ஆஸ்திரேலியப் பழங்குடிகளைப் பன்றி வேட்டைபோல வேட்டையாடியே சுட்டுத்தள்ளி விட்டு, மூண்டழியக் கூடாது என்று ஒதுக்கிடம் வைத்துக் காத்தும் வருகிறார்கள். பழைய அமெரிக்கர்களான செவ்விந்தியர்களை அப்படியே வேட்டையாடி நெருக்கி, வெள்ளை ஐரோப்பியர்கள் புதிய அமெரிக்கர்களாகி விட்டார்கள். ஒதுக்கிடமும் ஒதுக்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் நடக்கிற சங்கதி இது. பழங்குடி மக்கள் அப்படிக் காட்டுமிராண்டிகள் இல்லை. தங்கள் இடத்தை ஆக்ரமித்துக் கொண்டவர்களிடம்தான் அவர்களுக்குக் கோபம். அம்பும் ஈட்டியும் வீசுகிறார்கள். அந்தமானிலும் நடந்தது இதுதான். எதேச்சையாக அவர்கள் திரிந்த இடங்களை யார் யாரோ பிடித்துக்கொண்டு வந்து தங்கிவிட்டார்கள். கற்காலத்தில் வாழ்பவர்களுக்கு வெள்ளைக்காரன், ஜப்பான்காரன், இந்தியன் - எல்லாரும் ஒன்று. அவனுக்கு வரலாறு, தேசியம் எல்லாம் கற்பித்தாக வேண்டும். மேலும் ஜப்பான் அந்தமானை ஆக்ரமித்திருந்தபோது, காடுகள் மீதெல்லாம் விமானங்களில் பறந்து குண்டு வீசியிருக்கிறார்கள். அவதிக்குள்ளான யாரவாக்களுக்கு வேற்று மனிதர்கள் எல்லாரும் வேம்பு. மிருகம், பட்சிகளை வேட்டையாடுவதில் கையாளும் தந்திரங்களை மனிதர்கள் மீதும் கையாள்வதுண்டு. ஏதோ வாழைமரம் பெரும்பெரும் இலைகளாக மரங்களோடு மரங்களாக நிற்கும். புதிதாகப் போகிறவர்களைக் கண்டு திடீரென்று அந்த மரம் சற்று அசையும். அங்கிருந்து ஒரு அம்பு பாயும். உயிரைக் குடித்து உடலில் குத்திட்டு நிற்கும். இதனால்தான் காட்டுக்குள் போகிறவர்களுக்கு “புஷ் போலிஸ்” உதவக் கத்தி. பழங்குடி மக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்களாலும் தொந்தரவுக்கு ஆளாகக் கூடாது.
பழையவர்களைக் காப்பாற்றுவதில் பல கேள்விக்குறிகள். சில மனித இனங்களில் முப்பது நாற்பது பேர்கூட மீதி இல்லை. இவர்களை எப்படிக் காப்பாற்றுவது? கற்காலத்திலேயே அவர்களை வைத்திருக்க வேண்டுமா? நாகரீகப்படுத்த வேண்டுமா? கலக்க விரும்பாதவர்களை அப்படியே
விட்டுவைக்க வேண்டுமா? அல்லது வலுக்கட்டாயமாக அவர்களைப் புதிய காலத்தில் பெயர்த்து வைக்க வேண்டுமா? இதே போல இருநூறு பேர்களே, இரண்டாயிரம் பேர்களே பேசும் எழுத்தில்லாத சிறுமொழிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. நோபல் பரிசு அவற்றைக் காக்க வேண்டுமா?
இந்தக் கேள்விகளை நாம் கேட்கையில், காடுகளில் அம்மணமாகத் திரியும் கற்காலத்தவர்கள் மேலே ஜெட் விமானப் பெரும் பறவைகள் பறப்பதைப் பார்க்கிறார்கள். சிறுமொழி பேசுவோரிடம் எப்படியோ வந்த ஒரு ட்ரான்சிஸ்டர் என்னென்னமோ பாடிப் பேசிக்கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் ஆண்ட நாடுகளை அரையும் குறையுமாக ஆண்டார்கள். தங்கள் தேவைக்குப் போதுமான அளவுக்குத்தான் ஆண்டார்கள். அந்தமானில் அதுகூடச் செய்யவில்லை, முதலில் அது “திறந்த வெளி” சிறையாகவே இருந்தது. இந்தியக் குற்றவாளிகளை அங்கு கொண்டுபோய் கால் விலங்கு பூட்டியோ பூட்டாமலோ காடு திருத்தவும் மரம் வெட்டவும் பயிர் செய்யவும் கட்டிடம் கட்டவும் கார்வார் செய்தார்கள். விலங்கு தேவை இல்லை. ஓடாமல் காக்க பாரா உண்டு. ஓடினால் போக்கிடம் கிடையாது. காட்டுக்குள் ஓட வேண்டும். காடு இன்றேல் கடல். திரும்பிப் பார்க்கும் இடம் எல்லாம் கடல்.
சிப்பாய்க் கலகம் என்ற முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு சுதந்திரக் கிளர்ச்சி வீரர்களை அந்தமான் சிறைவாசத்திற்கு அனுப்பினார்கள். நூற்றுக்கணக்கான வங்காளம், பிஹார், இன்னும் பல மாகாணங்களிலிருந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் அங்கு சிறைவாசிகளாகப் போனார்கள்.
இந்தக் கிளர்ச்சிக்குப் பிறகுதான் “செல்லுலர் ஜெயில்” என்ற சிறைக்கோட்டையைக் கட்டினார்கள்.
- தி.ஜா (1979)
Commentaires