top of page
Writer's pictureசாளை பஷீர்

என் வானம் என் சிறகு - 7

(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)


(காங்க்லா கோட்டையின் முகப்பில் உள்ள ட்ராகன்)


வண்டிக்குள் பழங்குடியினப்பாடல்கள் ஒலித்தன. நவீனமும் தொன்மையும் பிணைந்த இசையிழையானது வண்டிக்குள் நிலவிய இட நெரிசலை மறக்கச் செய்தது.

சில்ச்சரில் தீபாவளிக்கு முந்திய இரவு காளி பூஜைக்காக சாமி சிலைகளின் அலங்காரம் ஆங்காங்கே பந்தல் கட்டி நடந்து கொண்டிருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும் பெருங்குழந்தைகள் போல சிற்பிகளின் கைகளில் கிடந்தன சிலைகள். இங்கு தங்கும் விடுதிகள் சொல்லுந்தரத்தில் இல்லை. மது நெடியுடன் காற்றின் புழுக்க வாசமும் விடுதி முழுக்கவே தேய்த்து ஒட்டியது போலிருந்தது. மறு நாள் காலையே மணிப்பூர் தலை நகர் இம்பாலுக்கான வண்டிக்கான முன்பதிவை பண்ணி விட்டே தூக்கத்தை போட்டோம்.


வண்டியில் ஏறுவதற்கு முன்னர் பயண ஏற்பாட்டாளர்கள்,பயணிகளின் ஆதார் அட்டையை வாங்கி பார்த்து தாளில் பதிந்து மீண்டும் பரிசோதித்த பிறகே வண்டியை எடுத்தார்கள். 35 கிலோ மீற்றர் தொலைவில் மணிப்பூர் மாநில எல்லையான ஜிர்பிம் வருகின்றது. மாநில காவல்துறையினரின் சாவடி, ஒவ்வொருவரின் ஆதார் அட்டையை வாங்கி அதில் உள்ள குறியீட்டு பகுதியை செல்பேசியின் வருடி மூலம் சோதித்தார்கள். எனது அட்டைக்கு நேராக செல்பேசியை பிடித்தார் காவலர். விவரங்கள் திரையில் தோன்றவில்லை. இது ஒரிஜினலா? நகலா? என்ற கேள்விக்கு மேல் பெரிதாக தோண்டவில்லை. நாங்கள் சுற்றிப்பார்க்க வந்திருக்கின்றோம். என்றவுடன் வாழ்த்தியனுப்பினார்கள்.


சாலைகள் பாதி வழிக்கு நன்றாகவும் மீதி வழிக்கு மோசமாகவும் இருந்தன. இரண்டிலிருந்து பத்து கிலோமீற்றர் தொலைவிற்கு ஒரு காவல் சோதனைச் சாவடி இருந்தது. மாநில காவல்துறை, நடுவண் ஆயுத காவல்படை, அஸ்ஸாம் துப்பாக்கி போன்ற படைப்பிரிவினர் மாறி மாறி சாவடிகளை அமைத்திருந்தனர். ஒரு சாவடியில் காவலுக்கிருந்த கர்நாடக சிப்பாயுடன் உரையாடினோம். அப்போது அவர் அருகிலிருந்த பாதையோரக்கடைக்கார பெண்மணியைக் கைகாட்டி கூறினார்,

இவங்க இங்க காய்கறி விக்குறாங்கல்ல. இவங்க வீட்டுல யாராவது ஒரு ஆளு நிச்சயமா தீவிரவாதியா இருப்பாங்க. நம்ப நடமாட்டத்த பத்தி அவங்களுக்கு தகவல இவங்கதான் பாஸ் பண்ணுவாங்க" என்றார்.


163 கிலோ மீற்றரும் பன்னிரண்டு மணி நேரமும் கொண்ட சில்ச்சர் இம்பால் பயணத்தில் கிட்டதட்ட பத்திலிருந்து பதினைந்து சோதனைச் சாவடிகள். ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கிய எங்களின் வண்டி ஓட்டுநர் ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு பத்திலிருந்து இருபது ரூபாய்கள் வரை கையூட்டாக

கொடுத்தார். இரண்டு இடங்களில் பயணிகளை வண்டிகளை விட்டு இறங்க வைத்து சாவடிகளினூடே நடக்க வைத்தனர். மணிப்பூர் முழுக்க நடுவண் அரசானது தன் கண்களை விதைத்துள்ளது. சொந்த மக்களைக் கண்காணிப்பதும் ஐயப்படுவதும் அவர்களை எதிரியாக கருதுவதுமான எதிர்மறை சூழல் ஒரு சில தினங்கள் வந்து போகின்ற எங்களைப் போன்ற வெளியாருக்கே மனதிற்குள் எரிச்சலையும் ஒரு வகை அன்னியத்தன்மையையும் ஏற்படுத்தும்போது உள்ளுரில் அது எத்தகைய விலகல் மன நிலையை ஏற்படுத்தும்? .


இடைவழியில் மதிய உணவிற்காக சந்தை ஒன்றில் நிறுத்தினர். வழமை போல பெண்களால் நிறைந்த அங்காடிகள். நேப்பான பழங்கள், உணவு வகைகள், மணமூட்டி வகைகளுடன் சிவப்பு மிளகாயும் குளியல் குவியலாக வைக்கப்பட்டிருந்தது. கிளியின் மூக்கை பியத்து போட்டது போல இருந்தது. சக பயணி மிளகாய் சிப்பமொன்றை வாங்கினார். இம்பாலில் இந்த வகை மிளகாயின் விலை கூடுதலாம். அது சரி இவ்வளவு மிளகாயை வைத்து என்ன செய்யப்போகின்றீர்கள்? எனக் கேட்டதற்கு மிளகாய் ஊறுகாய் செய்வோம் என்றார். இவை காரமிக்கவை. அளவில் சிறியதாக இருக்கிறதே என்ற நினைப்பில் பிய்ந்து வாயில் போட்டால் நாக்கின் சதையை அரித்து ஓட்டை போட்டு விடுமாம். அடர் அமிலக் குப்பிகள்.


வழியில் மலைகளைக் குடைந்து கொண்டிருந்தனர். இம்பாலை நாட்டின் ஏனைய பகுதியுடன் இணைக்கும் தொடர்வண்டிப் பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மெய்த்தி ஹிந்து ஓட்டல் மணிப்பூரி முஸ்லிம் ஓட்டல் என தகர பலகைகளில் பெயர் எழுதியிருந்த குடில்கள் வா

வா என கூவினர். கைகழுவ பின்பக்கம் போய் பார்த்தால் குடிலின் பின்பக்க மானது அந்தரத்தில் மிதந்தது. நீண்ட கழிகள்தான் கடைக்கால், கழிப்பிடத்தைக் கேட்டால் கீழே கைகாட்டினர். ஏணி ஒன்று பாதாளத்திற்குள் இறங்கியது. மேகத்திலிருந்து தரையை எட்டிப் பார்ப்பது போலிருந்தது. சமையல் வேலைகளில் இருந்த மணிப்பூரி முஸ்லிம் பெண்களை படமெடுக்க முயன்றேன். கச்சா பிச்சாவென்று கத்தி மறுத்து விட்டனர். உள்ளூரின் அழகிய பண்பாட்டுடையில் பூவிதழ்களில் பொதியப்பட்ட பழங்களைப்போலிருந்தனர்.


சோற்றுக்கு இறைச்சியுடன் கருவாட்டையும் பரிமாறினர்.. மொத்த உணவுமே சிறக்கவில்லை. பசியுமில்லை. அடுத்து என்ன கிடைக்கும் என்ற உத்திரவாதமில்லாத சூழலில் வேறு வழியின்றி உண்ண வேண்டியிருந்தது. மணிப்பூரின் பெரும்பாலான கிராமங்களில் மின்வசதி யில்லை. வெளிச்சத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கப்பாக இருக்கின்றன மணிப்பூரின் இரவுகள், மாலை ஆறு மணியளவில் இம்பாலுக்குள் நுழைந்தோம். தீபாவளி இரவு சாலையின் இருமருங்கிலும் அகல் விளக்குகளின் வரிசை, மெய்த்திகளின் நெற்றியிலுள்ள சந்தனக் கீற்று திலகம்

போல இருளோடு சமரசம் செய்து நின்ற ஒளிப்பொட்டுகள் வெளிச்சத்துணுக்குகள். கொண்டாட்டம் அமைதியை அணிந்திருந்தது.


கணக்கற்ற மக்கள், ஊர்தி ஒலிப்பான்கள், சாலைகளில் சுதந்திரமான மாடுகள், ஆங்காங்கே குப்பைகள் என இம்பால் இன்னொரு இந்திய சம நிலம் போல இருந்தது. ஆட்டோக் காரர்களிடமும் ஏமாற்று இருக்கின்றது. நாங்கள் போக வேண்டிய விடுதிக்கு நேராக போகாமல் தலையைச் சுற்றி கொண்டுவந்து விட்டார். நாங்கள் தங்கிய விடுதியானது மார்வாடி பனியா பகுதியில் இருந்தது.

கடூரமான பட்டாசு ஒலி. சாலையில் நடப்பதே பெரும் அறைகூவலாக இருந்தது. பட்டாசோடு சேர்த்து நம் தலையை கட்டி விட்டாற் போலிருந்தது. மார்வாடிகளுக்கு அவர்களின் வீட்டையும் கடையையும் தவிர மற்ற அனைத்தும் குப்பை கிடங்குகள்தான். தீபாவளி அன்று அந்த பட்டியலில் வானத்தையும் காற்றையும் கூடுதலாக இணைத்துக் கொள்வார்கள்.


ஷரஃபுத்தீனின் நண்பரின் ஏற்பாட்டில் நீதமான வாடகையில் தரமான விடுதி கிடைத்தது. இம்பாலில் உள்ள நடுவண் தொழில் நுட்ப பயிலகத்தில் பணிபுரியும் நாகராஜ் மதுரையைச் சேர்ந்தவர். இளம் வயது பேராசிரியர் அய்ஸோல் சதீஷ் வழியாக அறிமுகம். மாணவர் அஸார், திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர். இவர் நாகராஜ் மூலம் அறிமுகம். இவர்களிருவரும் அறைக்கு வந்து சந்தித்தனர்.


அடுத்த நாளைய இம்பால் உலாவிற்கு துணையாக வருவதாக அஸார் சொன்னார். அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருந்ததால் இமா சந்தையின் அருகிலுள்ள பள்ளிவாசலுக்கு சென்றோம். வெள்ளி மேடையின் உரை மெய்த்தீ மொழியில் இருந்தது. பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமைகளில் தமிழ், உந்தூ, மலையாளம் தவிர்த்து இந்தியாவிற்குள் நான் கேட்ட பிற மொழி உரை இதுதான். பழங்குடிகளின் மொழியில் ஒரு நல்லுரை. பொதுவாகவே தமிழகம், கேரளத்தை தவிரவுள்ள ஏனைய மாநிலங்களில் உள்ள பள்ளிவாசல்களில் உர்தூ மொழிதான் ஒலிக்கும்.


மணிப்பூரிய இஸ்லாத்தின் வயது நானூறு ஆண்டுகள். மெய்த்தீகளில் ஒரு பிரிவினர் மணிப்பூரின் தனித்த பண்பாட்டுக் கூறுகளை தக்க வைத்துக் கொண்டே இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முஸ்லிம் மெய்த்தீகள், மெய்த்தீ பங்கால் என அழைக்கப்படுகின்றனர். அரசியல் ரீதியான இன முறுகல்களுக்கப்பால் சனமாஹி, ஹிந்து மெய்த்தீகளுடன் மெய்த்தீ பங்கால்கள் கலந்துறவாடி வாழ்ந்து வருகின்றனர்.


மணிப்பூர் மாநிலமானது மன்னராட்சி, பிரிட்டிஷ் ஜப்பானிய ஆட்சிகளின் கீழ் மாறி வந்து தற்சமயம் இந்தியாவிற்குள் இருக்கின்றது. 1972 ஆம் வருடம் மணிப்பூருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. மணிப்பூரானது நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் மியான்மரால் சூழப்பட்டுள்ளது. மணிப்பூரின் சமவெளிகளில் மெய்த்தி, மெய்த்தி பங்கால் இனங்களும் மலைப்பகுதிகளில் குக்கி, நாகா இனங்களும் வசித்து வருகின்றன. மணிப்பூரின் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்த்தி மக்கள் எனவும் கூற்றுக்கள் உள்ளன. குக்கி இனத்தவர்களின் வேரானது திபெத்தோ பர்மன் இனவழியாகும். குக்கீகளும் நாகாக்களும் பழங்குடி வழிபாட்டு நம்பிக்கைகளையும், கிறிஸ்தவத்தையும் பின்பற்றுகின்றனர்.


மெய்த்தீகள் அனைவரும் தொடக்கத்தில் சனமாஹிளம் என்ற பழங்குடி வழிபாட்டு முறையையே கொண்டிருந்தனர். கரீப் நிவாஸ் என்ற மன்னரால் பதினேழாம் நூற்றாண்டில் சைதன்ய வைஷ்ணவம் மணிப்பூருக்குள் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வந்த மன்னர்கள் வைஷ்ணவத்தை வன்செயல் மூலம் பரப்பினர். சனமாஹி நெறியின் வழிபாட்டுருவங்கள் உடைக்கப்பட்டு புளித நூற்கள் தீயிலிடப்பட்டு அழிக்கப்பட்டன. வைஷ்ணவத்தை ஏற்க மறுத்த மெய்த்தீ மக்கள் கடுமையான தண்டனைகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.


இதன் காரணமாக வெளிவாழ்க்கையில் வைஷ்ணவத்தையும் தரையின் அந்தரங்க வைப்பறைகளுக்குள் தேக்கப்படும். நீர் போல மெய்த்தீகள், தங்களின் மரபார்ந்த சனமாஹி வழிபாட்டு முறைகளையும் வீட்டிற்குள்ளும் வாழ்வின் தனித்த தருணங்களிலும் கடைபிடிக்கத்தொடங்கினர். நாளடைவில் இந்த இரண்டு வழிபாட்டு முறைகளையும் கலந்து பின்பற்றத் தொடங்கினர். . இன்று வைஷ்ணவத்திலிருந்து சனமாஹி வேர்களின் பக்கம் திரும்பும் தன்னுணர்வு மெய்த்திகளிடயே பரவத் தொடங்கியுள்ளது. வேர்களை நோக்கிய நீரின் திரும்புதல்.


வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவு செய்து விட்டு இமா சந்தைக்கு சென்றோம், மணிப்பூரி மொழியில் 'மொ' என்றால் அன்னை எனப்பொருள். வடகிழக்கின் வழமை போலவே இங்கும் முழுக்க முழுக்க பெண்களிடம்தான் சந்தையின் ஆட்சி. மதிய உணவை பஞ்சாபி உணவகத்தில் முடித்து காங்லா கோட்டைக்கு சென்றோம். பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரின் வருகை வரை மணிப்பூரின் அரசியல் பண்பாட்டு நடவடிக்கைகளின் மைய இருக்கையாக தலை நகரமாக இந்த கோட்டைப் பிராந்தியம் விளங்கியுள்ளது.


சனமாஹி வழிபாட்டு மரபின் தலையாய தெய்வமான பகாங்க்பாவின் உறைவிடம் இங்குள்ளது. மணிப்பூரின் தொன்ம டிராகன் காவல் தெய்வத்தின் வெண் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். தங்களின் பிளந்த வாய்களின் வழியே வானத்தை இழுத்து உறிஞ்சி குடிக்கும் தீரா தாகத்துடன் நின்றிருந்தன அந்த பெரும்பூனைகள்.


காங்க்லா கோட்டை 2004 ஆம் ஆண்டுகள் வரை அஸ்ஸாம் துப்பாக்கி படையினரின் பாசறையாக திகழ்ந்தது. அதே ஆண்டு, தங்ஜம் மனோரமா என்ற மணிப்பூரி மெய்த்தி பெண்ணை சிறைப்பிடித்து வன்புணர்ந்து அருகிலுள்ள தோட்டமொன்றில் கொன்று எறிந்துள்ளனர் அஸ்ஸாம் துப்பாக்கி படையினர். படையினரின் பெண்ணுடல் வெறிக்கு அதே மொழியில் விடை கூறினர் மணிப்பூரின் 12 பெண்கள். தங்களின் ஆடைகளை முழுவதுமாக துறந்து, "இந்திய ராணுவமே எங்களை வன்புணர்ச்சி செய்!" என்ற பதாகையை ஏந்தி கங்க்லா கோட்டை முன் நின்றனர். அன்றிலிருந்து அந்த பெண்கள் "இமாக்கள்” ( அன்னையர் ) என அழைக்கப்படுகின்றனர். இந்த போராட்டத்தின் விளைவாக காங்க்லா கோட்டையிலிருந்து அஸ்ஸாம் துப்பாக்கி படையினர் வெளியேறினர்.


மணிப்பூரின் திரையரங்குகளில் ஹிந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய இணைய காலத்தில் தடைகளெல்லாம் அசாத்தியமானதே கலைப்படைப்புகள் மீதான தடையை வரவேற்க முடியாதுதான். இத்தனையையும் தாண்டி ஹிந்தி திரைப்படங்களின் மீதான தடையின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.


காங்க்லா கோட்டையினுள் மணிப்பூரின் அரசர்கள், மக்களின் வாழ்வியல், சனமாஹி பண்பாடு போன்றவற்றிற்கான அருங்காட்சியகம் இருந்தது. மணிப்பூரின் சிறைவாசிகளுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காட்சியொன்று படமாக தொங்கியது. மூங்கில் பலகங்களில் கைதிகள் பெருக்கல் குறி போல பிணைக்கப்பட்டு தலை சரிந்து கிடந்தனர். அதிகாரமும் வேதனையும் அருகருகே உறைந்து கிடந்தன. துரித நடையில் பார்க்க வேண்டியிருந்ததால் சரியாக உள் வாங்க முடியவில்லை. பயண நெருக்கடிகளினால் பலவற்றை இழக்க வேண்டியிருக்கின்றது.


அருங்காட்சியகமென்பது அந்தந்த மண்ணின் நிலப்பரப்பின் காலப்பெட்டகம், நினைவுப்பேழை. அதைக் காணுவதில் பொறுமை இல்லையென்றால் அந்த பயணத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை இழந்திருக்கின்றோம் என்றுதான் பொருள்.


இம்பாலிலிருந்து 55 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மொய்ரங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் தொடர்பான அருங்காட்சியகமுள்ளது. நாங்கள் போன சமயம் நல்ல மழைப்பொழிவு. பங்கு ஊர்திகளில் ஆட்களை அடைத்து ஏற்றினார்கள். வண்டிக்குள் போதையிலிருந்த மணிப்பூரின் மூத்த குடிமகன் எங்களுடன் மிக உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்தார். தான் இங்கிலாந்திலிருந்து வந்திருப்பதாக சொன்னார். போதையில் அறிவுக்கும் மனதிற்குமான கண்ணி மட்டும் அறுபடுவதில்லை. நாடுகளுக் கிடையேயான எல்லைகளும் தொலைவும் இல்லாமலாகி விடும் போலிருக்கின்றது. ஆமாம் நீங்கள் இங்கிலாந்துதான் எனக்கூறி அவரின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தி விட்டு வண்டியை விட்டு இறங்கினோம்.


அருங்காட்சியகத்திற்குள் படமெடுக்க தடை. நேதாஜியும். ஹிட்லரும் சந்தித்தது உள்ளிட்ட அரிய ஒளிப்படங்கள், வரலாற்று பொருட்களின் சேகரம். நேதாஜியின் பாதை தீவிரமிக்கது என்றாலும் அவரின் நேர்மையும் நெருப்பு போன்ற விடுதலையுணர்வும் தன் மொத்த வாழ்க்கையையுமே நாட்டின் விடுதலை என்ற தவத்தில் காணிக்கையாக்கி அளித்த உணர்வையும் எதைக் கொண்டு அளவிடமுடியும்?


நவீன ஊர்திகளின் மூலமாகக் கூட பயணிப்பது சிரமமாகவிருக்கும் இக்காலகட்டத்தில் பிரிட்டிஷாரின் கண்காணிப்பிலிருந்து தப்பி பாக்கிஸ்தான், அஃப்கானிஸ்தான், ரஷியா போன்ற பெரும் பயணப்பாதைகளினூடே ஜர்மனி சென்றடைந்திருக்கின்றார். அவர் கால்நடை, கார், ரயில் வழியாக மேற்கொண்ட பயணப்பாதை வரைபடத்தையும் காட்சிப்படுத்தி யிருந்தார்கள்.

வெளுத்த அந்த வட்ட முகமானது இரும்புக்குவியலுக்குள் எறியப்பட்ட காந்த உருண்டை போல எண்ணற்ற முகங்கள் மொழிகள் உணர்வுகள் இனங்கள் என அனைத்தையும் ஈர்த்து ஒற்றை விசையாக்கி எந்த சமரசமுமின்றி பெரும் இலக்கு ஒன்றினை நோக்கி செலுத்தியிருக்கின்றது. முடிவற்ற கனவுகளுடனும் திட்டங்களுடனும் அம்பு போல பாய்ந்துகொண்டிருந்த அந்த மகா மனிதன் வாழ்வின் மர்ம வளைவொன்றினுள் மறைந்ததின் துயரமானது நினைவுகளை சூழ்ந்து நெருக்கியது.


அருங்காட்சியகத்திலிருந்து திரும்பி வரும்போது மாபெரும் நன்னீர் ஏரியைக் கண்டோம். மழை இறங்கிக் கொண்டிருந்தது. வானமும் மேகமும் நீரும் ஒரே நிறத்தில் ஒரே அலைவரிசையில் பேசிக்கொண்டிருந்தன. ஏரியை சரிவரக் காண இயலவில்லை.


மணிப்பூர் மியான்மர் எல்லையிலுள்ள மோரே கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் காலையிலேயே கிளம்ப வேண்டும். இருட்டிய பிறகு எந்த வண்டிகளையும் இந்திய ஆயுத படைகன் விடுவதில்லை. எனவே காலையிலேயே கிளம்பினோம். வண்டிக்குள் பழங்குடியினப்பாடல்கள் ஒலித்தன. நவீனமும் தொன்மையும் பிணைந்த இசையிழையானது வண்டிக்குள் நிலவிய இட நெரிசலை மறக்கச் செய்தது.


35 கிலோ மீற்றர்கள் தொலைவு பயணத்திற்கு மூன்றரை மணி நேரம் எடுத்தது. தேனீருக்காக ஓரிடத்தில் வண்டி நின்றது. அந்த சிற்றூரில் கடை வீதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சாலையோரத்தில் மும்முரமாக இளைஞர்கள் சூதாடிக் கொண்டிருந்தனர். பகடைக்காய்களும் நார் கூடையுமாய் உருண்டுக் கொண்டிருந்தது அவர்களின் உலகம். இம்பால் பள்ளத்தாக்கு மெய்த்தீகளால் நிறைந்தது என்றால், சந்தால் டினோபால் மாவட்டங்கள் தொடங்கி மோரே வரை குக்கீ இனக்குழுக்களின் பிராந்தியமாகும். மெய்த்தீகளுக்கு பெங்காலி, பிஹாரி, நாகா குக்கீகளை ஆகாது.


1990 களில் ஹிந்து & முஸ்லிம் மெய்த்தீகளிடையே மோதல் நடந்துள்ளது. குக்கீ நாகாக்களுக்கு இடையேயும் முரண்கள் நீடிக்கின்றன. நாகாலிம், குக்கீலாந்து கோரிக்கைகளும் அவ்வப்போது ஒலிக்கின்றன. மணிப்பூரின் பெரும்பான்மையினரான மெய்த்தீகள், இன்னர் லைன் பெர்மிட் எனப்படும் உள்ளக நுழைவு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்கின்றனர். அதோடு தங்களுக்கு அட்டவணை ஆதிவாசி அந்தஸ்தையும் கோருகின்றனர். இதை மற்ற இனக்குழுக்கள் எதிர்க்கின்றன.


மெய்த்தீ, குக்கீ, நாகா இனக்குழுக்களும் ஆயுத படைகளை வைத்துள்ளன. மோதல், உரையாடல் என இரண்டு வழிமுறைகளோடு மூன்றாவது ஒரு வழிமுறையினூடாக இங்குள்ள இன ரீதியான ஆயுத குழுக்களை இந்திய ஆயுத படை கையாள்கின்றது. இன ஆயுதக்குழுக்களிடையே உள்ள முரண்களை தீவிரப்படுத்துவதற்காக சில இன ஆயுதக் குழுக்களை ராணுவமே செல்லப்பிள்ளையாக ஊட்டி வளர்க்கின்றது.


எங்களுடன் மணிப்பூர் காவல்துறையின் உளவுப்பிரிவின் அலுவலர் ஒருவரும் பயணித்தார். அவர் மணிப்பூரின் சமூக நிலவரங்களைத் தற்போதைய கனபரிமாணங்களுடன் வரைந்து காட்டினார்.

எல்லா பக்கங்களிலுமிருந்தும் உமிழப்படும் வன்முறையால் மானுடத்திற்கு தேவையான வளர்ச்சி தடைப்படுவதுடன் மணிப்பூரின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது. வன்முறைகளில் மக்கள் சலிப்படைந்துள்ளனர். முன்னர் உள்ள அளவிற்கு இந்திய எதிர்ப்பு மணிப்பூரில் தற்சமயம் இல்லை.


எனினும் அனைத்து இனக்குழுவினரின் மனதிலும் 'பிறர்' மீதான ஒவ்வாமை நீடிக்கவே செய்கின்றது. மணிப்பூரானது தற்காலிக அமைதியைக் கொண்டிருக்கும் எரிமலையின் வாயில். ஒன்றை ஒன்று தீய்க்க காத்திருக்கும் நெருப்பு இருள்.

- மேலும்


72 views

Comments


bottom of page