top of page

என் வானம் என் சிறகு - 6

(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)


(மிசோ பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்)


இருளுக்குள் ஒளிந்திருக்கும் யானையைப்போல முன்னும் பின்னுமாக ஏராளமான வண்டிகள் நின்றிருந்தன. எங்கள் வண்டியிலிருந்து இறங்கிய ஓட்டுனரும் எடுபிடி இளைஞனும் தேநீர் போட்டனர். எனக்கும் ஒரு வாய் தேநீர் கேட்டேன். வெற்று குடிநீர் குப்பியை இரண்டாக அறுத்து அதில் சுடச்சுடப் ஊற்றித்தந்தார்கள். காசு வாங்க மறுத்து விட்டார்கள்.

அய்ஸோலுக்கும் எங்களுக்கும் முக்கால் மணி நேர தொலைவே இருந்த நேரத்தில் மீண்டும் சாலைத்தடை. சாலையின் நடுவே இருந்த மண் களி திரம்பிய பெரும் வாய் கொண்ட குழிகளில் வண்டிகள் மாட்டின. ஒரு வண்டியை மீட்ட பிறகு இன்னொரு வண்டி என முறை வைத்தாற் போல மீண்டும் மீண்டும் வண்டிகள் அதில் விழுந்து கொண்டே இருந்தன. வாயில்களோ சாளரங்களோ எதுவுமின்றி ஆறு பக்கமும் மூடப்பட்ட அறைக்குள் சிக்கிய ஈ போல பெரும் அலைக்கழிப்பாக இருந்தது.

அந்த வெறுமையான இரவையும் அதற்குப் பின் வருவதற்காக காத்திருக்கும் பகலையும் இவற்றுடன் சேர்த்து எங்களையும் தடப்பது நடக்கட்டும் என இறைவனின் கைகளில் ஒப்புக் கொடுத்து விட்டோம்.


இருளுக்குள் ஒளிந்திருக்கும் யானையைப்போல முன்னும் பின்னுமாக ஏராளமான வண்டிகள் நின்றிருந்தன. எங்கள் வண்டியிலிருந்து இறங்கிய ஓட்டுனரும் எடுபிடி இளைஞனும் தேநீர் போட்டனர். எனக்கும் ஒரு வாய் தேநீர் கேட்டேன். வெற்று குடிநீர் குப்பியை இரண்டாக அறுத்து அதில் சுடச்சுடப் ஊற்றித்தந்தார்கள். காசு வாங்க மறுத்து விட்டார்கள்.


வண்டிகள் நகருவது மாதிரி தெரியவில்லை என்றவுடன் பேருந்தில் இருந்த மிஸோ இளைஞர் இளைஞிகள் கொஞ்சம் பேர் கையிலும் தலையிலுமாக சுமையுடன் நடக்கத் தொடங்கி விட்டனர். வண்டிகளின் முகப்பு விளக்கு வெளிச்சத்திற்கு அப்பால் எந்த ஒளியுமற்ற அந்த கரிய மலை இருளுக்குள் அவர்கள் எப்படி நடந்தார்கள் ?

பேருந்திலேயே தங்கி விட்ட மீதி இளைஞர் கூட்டம் சாலைகளில் வட்டமாக அமர்ந்து கொண்டும் புகைத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் தற்படம் எடுத்துக் கொண்டும் எந்த பதட்டமுமின்றி அந்த இரவைக் கழித்தனர். காரணம் இது அங்கு வழமையாக நடக்கும் ஒன்றாம். இதற்கிடையே பேருந்துகளை தவிர்த்து, சிறு வண்டிகளின் போக்குவரத்திற்கு எந்த தடையுமில்லை. மிதந்து ஊரும் வண்டு போல அவை மண்களி குழி துயரத்தை எளிதாகக் கடந்தன அப்படி வந்த குட்டி யாளை வண்டியொன்றில் ஏறுபவர்கள் ஏறிக் கொள்ளலாம் என குரலிட்டனர்.


அங்கு நின்றிருந்த மிஸோ இளைஞியிடம், இந்த இருளுக்குள் முன்பின் தெரியாத ஆட்கள் நிறைந்த வண்டிக்குள் ஏறுவது அச்சமில்லையா? எனக் கேட்டபோது, நீங்கள் நினைப்பது போல இங்கு எவ்வித சிக்கலும் நேராது." என்றார். அது உண்மை என்பதை பின்னர் கிடைத்த பயண பட்டறிவின் வழியாக அறிந்து கொண்டோம்.


விடிந்த புதிய நாளின் சிக்கலாக காலைக்கடன் தீர்த்தலும் தேநீருக்கான நா வறட்சியும் முதன்மையாக வந்து நின்றன."


சாலை ஓரத்தில் கொட்டகை ஜாகைகள் அமைத்து ஆந்திரம், ஓடிஸா, ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கியிருந்தார்கள் உலோக எட்டுக்கால் கால்களையும் விரித்து நிற்கும் பூச்சிகளை போல கைகளையும் பெரும் மின் கோபுரங்களை மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிறுவும் உள்கட்டமைப்பு வேலை. வண்டிகள் விழுந்து கிடந்த கிடங்கிலிருந்து ஐம்பது மீற்றர் தொலைவில் சாலையோரம் வீடுடன் கூடிய தேநீர் கடையொன்று இருந்தது. இரவில் சிக்கியவர்களின் பசி தாகம் தீர்க்கும் அன்னசாலையாக மாறி விட்டது. அன்று அவர்களுக்கு நல்ல விற்பனை,

இரு சக்கர ஊர்தி ஒன்றில் ஷரஃபுத்தீன் ஏறி பக்கத்து ஊருக்கு சென்று ஒரு டெம்போ டிராவலரை வாடகைக்கு பேசினார். அந்த வண்டிக்காரர் நாங்கள் இருந்த இடத்திற்கு வர மறுத்து எங்களை அரை கிலோ மீற்றர் தொலைவிற்கு நடந்து வரச் சொன்னார். சுமைகளை தூக்கிக் கொண்டு நாங்கள் நடக்க தொடங்கியபோதுதான் அவர் ஏன் வர மறுக்கின்றார் என்பது புரிந்தது. சாலை முழுக்க பெருங்குழிகளும், அகமும் புறமும் விரவிக் கிடக்கும் சாம்பல் நிற மண் களியும் திகைப்பை உண்டு பண்ணியது.


காலும் காலணியும் சேர்ந்து அந்த புதை களிக்குள் செருகிக் கொண்டது. சாலையின் விளிம்பில் அரை அடி மட்டுமே அகலமுள்ள திட மண்ணில் நடக்கலாம் என பார்த்தால் அங்குல இடைவெளியில் திடுமென செங்குத்தாக இறங்கும் பள்ளம், அச்சமும் சோர்வும் பெரும் தளர்வை உண்டு பண்ணின. எங்களுக்கு பின்னால் நடந்து வந்த இளவயது லாரி ஓட்டுநர் எனது சுமைகளைத் தூக்கி உதவ ஒரு வழியாக அகழியைக் கடந்தோம்.


முந்திய தின இரவில் நடக்கத்தொடங்கிய அந்த மிஸோ இளைஞர் குழு எப்படி இந்த கண்டத்தைக் கடந்தார்கள்? ஒரு வேளை, இருளின் திரவத்திற்குள் தங்களை மந்திர மை போல கரைத்துக் கொண்டார்களோ? குறிப்பிட்ட நேரத்திலிருந்து சரியாக ஒரு நாள் கழித்து அய்ஸோல் வந்து சேர்ந்தோம். மேகாலயா போலவே இந்திய பெரு நிலத்திலிருந்து வேறுபட்ட நிலவமைப்பு,

நண்பரும் ஒளிப்படக்கலை லஞரும் ஆவண முன்னோடிகளில் ஒருவருமான ஆர்.ஆர்.சினிவாசனின் நண்பர் சதிஷ், திருநெல்வேலிக்காரர். அய்ஸோலில்தான் இருக்கின்றார். பயணங்களுக்கு அஞ்சாத மனிதர். மதுரை காமராசர் பலகலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர், மனைவி பிள்ளைளின் இடப்பெயர்தலுக்காக அந்த வேலையை விட்டு விட்டு மிஸோரமில் ஆய்வு உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி முனைவர் ரத்னமாலா, மிஸோரம் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றுகின்றார். வயதான அம்மா, இரு குழந்தைகள் உடன் இருக்கின்றனர். மிகவும் அன்பான குடும்பம் ப்பட சதீஷின் நண்பர் -ஆமோஸ் எட்பெர்க், மிஸோரம் மாநில அரசின் மின் ஆளுகைத்துறையில் வலையமைப்பு பொறியாளராக பணியாற்றுகின்றார். குமரி மாவட்டத்தை சேர்ந்தவர். நல்ல வாசிப்பும் தன் விமர்சனமும் கூர்ந்த நோக்கும் கொண்டவர்.


ஆமோஸ் ஏற்பாடு பண்ணிய இடத்திற்கு போய் நின்றோம். எங்களை வரவேற்ற அவர் சொன்னார், நீங்கள் வந்த பகுதி எங்கள் கட்டிடத்தின் ஐந்தாம் மாடி. நானிருப்பது முதல் தளம். அடுத்த தெருவின் வழியாக வாருங்கள் என அழைத்து சென்றார். பொதுவாகவே மிஸோரத்தில் பெரும்பாலான கட்டிடங்களுக்கு வெளியிலிருந்து நுழைவதற்கான வாயில் மாடியிலும் அடித்தளத்திலும் என இரண்டு வழிகள் உண்டு.


சறுக்கு பலகை போல ஏற்ற இறக்கமான இரு சாலைகளுக்கு நடுவில் கட்டப்படும் வீடுகளின் மாடிப்பகுதி மேட்டிலும், தரைத்தளம் பள்ளத்திலுமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆமோஸின் இருப்பிடம் வசதியாக இருந்தது. ஒன்றரை நாள் துயரங்களிலிருந்து விடுவிக்கக் கூடிய நல் ஓய்வு கிடைத்தது.


மதியத்திற்குப்பிறகு படா மார்க்கட்டுக்கு போகும்படி துரிதப் படுத்தினார்கள். காரணம் சனிக்கிழமை. வார இறுதியில் மட்டுமே இந்த சந்தை கூடுமாம். சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து மக்கள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வருவார்கள்.


நாங்கள் போகும்போது அரை வெளிச்சம் மட்டுமே மீதமிருந்தது. சந்தைக்குள் நுழைந்தவுடன் முதியவர் ஒருவர் லைமானிடம், நீங்கள் இந்தியாவிலிருந்தா வருகின்றீர்கள்! எனக் கேட்டார். பின்னர் நண்பர் ஆமோஸிடம் இது குறிந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த முதியவரின் ஒற்றை வினாவிற்குள் ஒண்டிக்கிடக்கும் ஏராளமான உள்பொதிவு களைப்பற்றி சொன்னார்.


அய்ஸோலில் உள்ள மிஸோரம் நடுவண் பல்கலைக்கழகத்தின் சமூகப்பணி துறையில் பேராசிரியர், துறைத்தலைவராக பணியாற்றி வரும் முனைவர். சி. தேவேந்திரன் திருப்பத்தூரை சார்ந்தவர். Leisure and Recreation of Youth in Northeast India (வடகிழக்கிந்திய இளைஞர்களிடையே ஓய்வும் கேளிக்கையும்) என்ற தலைப்பில் ஆய்ந்திருக்கின்றார். முழு உழைப்பில் உருவாகியுள்ள மிக இன்றியமையாத ஆய்வு.


மிஸோரத்தின் பண்பாடு வரலாறு, அரசியல் இனம் மக்கள், மன நிலை போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பார்வையை அகலப்படுத்திக் கொள்வதற்கும் இவ்விருவரும் அளித்த தரவுகளும் தகவல்களும் பெரிதும் பயன்பட்டன. இருவருக்கும் என் அன்பும் நன்றிகளும்.

மிஸோக்களின் பழம் பெயர் லுஷை.. மிஸோ என்றால் மலைவாழ் மனிதன் என்று பொருள். மியான்மரின் சின் மலையிலுள்ள 'மூடிய கல்' எனப் பொருள்படும் சின்லங் என்ற பெயருடைய கற்குகையிலிருந்து தங்களது முன்னோர்கள் மிஸோரத்திற்கு வந்ததாக அவர்கள் நம்புகின்றனர். திபெத்தோ பர்மன் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். மணிப்பூரின் குக்கி இனத்தவர்களுடன் இவர்களுக்கு இன நெருக்கம் உண்டு.


மிஸோக்களில் 17 பெரிய குலங்களும், அவற்றிற்குள் 62 துணை குலங்களும் உண்டு. இவர்களிடையே சிற்சில வேறுபாடுகளுடன் கூடிய பழக்கவழக்கங்களும் கிளை மொழிகளும் மொழி வழக்கும் நடைமுறையிலுண்டு. பிரிட்டிஷ் அரசின் தோற்றத்திற்கு பிறகு இனக்குழுத்தலைமை உதிரத்தொடங்கியது. அத்துடன் இத்தகைய வேறுபாடுகளும் மெல்ல கரைந்து இப்பொழுது பொதுவில் மிஸோ மொழியே பேசுகின்றனர்.

பங்ளாதேஷின் சிட்டகாங் மலைப்பகுதியை வேராகக் காண்ட, பௌத்தத்தை பின்பற்றும் சக்மாக்கள். திரிபுராவிலிருந்து வந்த ஆவியை வழிபடும் ரியாங்குகள் போன்ற இனச்சிறுபான்மையினரும் மிஸோரத்தில் வசிக்கின்றனர். இந்த இரண்டு இனத்தவரும் மிஜோ மொழியுடன் தொடர்பற்ற, தங்களுக்கென சொந்த மொழிகளைக் கொண்டுள்ளனர்.


முழுக்க முழுக்க பழங்குடி வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தனர் மிலோக்கள் பிரிட்டிஷ்காரர்கள், கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் வருகைக்குப் பிறகே அவர்கள் கிறிஸ்தவத்தை தழுவத் தொடங்கினர். கிறிஸ்துவின் செய்தியை சுமந்து வந்தவர்கள் பின்பற்றிய மேற்கத்திய வாழ்க்கை முறையை யும் சிந்தாமல் சிதறாமல் மிஸோக்கள் எடுத்துக் கொண்டனர். மிலோக்களின் அன்றாட வாழ்க்கையானது தேவாலயத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மத போதகர்கள், மிஸோக்களை காம போதை நுகர்வு தளைகளிலிருந்து விடுவித்திருக்க வேண்டும். ஆனால் மந்தைக்குள் ஆடுகளின் எண்ணிக்கையோடு நிறைவடைந்திருக்கின்றார்கள் மேய்ப்பர்கள்.


மண்ணின் தேவைக்கேற்ப கிறிஸ்தவம் தகவமைக்கப்பட்டு அன்றாட வாழ்க்கைக்குள் பொருத்தப்படாததால் மிஸோக்கள் பழங்குடி, நாடோடி வாழ்க்கை முறையிலிருந்தும் விவசாயத்திலிரு தும் வெகு தொலைவிற்கு அகன்றுவிட்டனர். பணத்தை அறியாத மிஸோ சமூகமானது பணப்பொருளாதாரத்திற்குள் வழுக்கி விழுத்தது.

விலையுயர்ந்த அலை பேசிகள், இரு சக்கர ஊர்திகளின் பயன்பாடு கூடுதலாக உள்ளது. அனைத்து மிஸோக்களும் அவர்களின் மரபார்ந்த உடைகளை கைவிட்டு விட்டு முழுக்க முழுக்க மேலைப்பாணியிலான விதம் விதமான உடைகளையே அணிகின்தனர். மிகக் குறைவான வருமானத்தைக் கொண்டு இவர்கள் எப்படி இத்தனை விலையுயர்ந்த ஆடைகளை அணிகின்றனர்?என்பதை அங்கு விசாரித்தோம். இவையனைத்தும் மேலை நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஆடைகள். அவைகளை சரக்கு கொள்கலத்தில் இந்தியாவிற்கு கொண்டு வந்து வெளுத்து குறைந்த விலையில் விற்கின்றனராம்.


ஒரு மிஸோ குடும்பத்தலைவனின் மாத வருமானம் ஐயாயிரம் ரூபாயிக்கும் கீழ்தான் என்கிறது முனைவர் தேவேந்திரனின் ஆய்வறிக்கை. ஆனாலும் பாதிக்கும் மேற்பட்ட இளைய மிஸோக்கள் சேமிப்பதில்லை. அய்ஸோல் பளபளப்பாக தெரிந்தாலும் கிராமப்புறங்களில் வறுமை துலங்குகிறது. ஆனால் கீழ்மையோ தாழ்மையோ இல்லாத வறுமை. யாசகர்களோ முறைப்பாடுகளோ இல்லை. மிஸோக்களின் உணவு முறை மிக எளிமையானது. மிகக் குறைந்த வருமானத்திற்குள், புளி போட்டு துலக்கிய தாமிர குடம் போல வாழ்க்கையை இவர்களால் எப்படி மின்னச் செய்ய முடிகிறது? இந்த முடிச்சை கண்டுபிடிப்பதற்காக இன்னொரு வடகிழக்கு பயணம் தேவைப்படும் போலிருக்கின்றது.

போதை கட்டற்ற பாலுறவு, ஒரு சில இடங்களில் அதீத நுகர்வு போன்றவற்றை கழித்து விட்டு எஞ்சும் மிஸோ வாழ்க்கைக்குள் வாழ்க்கையை கொண்டாடும் இந்த வாழ்க்கைக்குள் நாம் மனங்கொள்ள நிறையவே இருக்கின்றது.


ஜோல்பக் எனப்படும் வளரிளம் பருவத்திற்கான பாசறைகளில் மிஸோ இளைஞர்களிடம் உடல், மன வலிமை, மரபுக்கலை கல்வி, பழங்குடி பண்பாடு, விருந்தோம்பல், உதவும் பண்பாடு, சமூகப் பணி போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன. இங்கு ஒரு ஓரத்தில் இன ஓர்மையும் புல் போல வளர்க்கப்பட்டது.மேலை நாகரீகத்தின் தழுவலுக்குப் பிறகு ஜோல்பக் முறையானது மெல்ல மறைந்து இப்போது அந்த இடத்தை மிஸோ இளைஞர் கூட்டமைப்பு (YMA) மாற்றீடு செய்துள்ளது. ஒரு பக்கம் கிறிஸ்தவத்தின் வழியாக விடுதலை மறுபுறம் மேற்கத்திய நுகர்வு பண்பாட்டின் அடிமைத்தனம் என இரு முரண்களுக்கிடையில் இன ஓர்மையை பொத்தி பிடித்துக் கொண்டு நகர்கின்றது மிஸோ வாழ்க்கை.


பெரு நில இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறது ? ஜீன்ஸும் மிடியும் குட்டை பாவாடையும் அணிந்து கொண்டு உடலின் அனைத்து புலன்களாலும் நுகர்வை அள்ளி அள்ளி அருந்தும் இளைஞர்களும் இளைஞிகளும் சாதி மத வெறித்தனங்களில் எத்த சமரசமுமின்றி நீடிக்கின்றனர்.

இந்தியப் பெரு நிலத்தையும் வட கிழக்கையும் அருகருகே வைத்து பார்த்தால் ஒரு உண்மை புரியும்.


பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பெரு நகரங்களில் கிராமங்களில் இரவுகளின் ஓரங்களில் பொது வெளிகளில் காடுகளில் மலைகளில் ஊர்திகளில் பெண்களை குழந்தைகளை ஆதி வாசிகளை சிறுபான்மையினரை தலித்துகளை நாம் எப்படி தடத்துகின்றோம்?


இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்போதே அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்திலிருந்து ஒலிபரப்பான செய்திக் கோவையைக் கேட்டேன். அதில் கூறினார்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நகரம் புது தில்லிதான் என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்ற னவாம். வடகிழக்கில் நடக்கும் ஆயுத கிளர்ச்சி என்பது முழுக்க அரசியல், பாதுகாப்பு, இனக்குழு கோரிக்கைகளுடன் தொடர்புடையது.


அது வட கிழக்கின் குடிமைப்பண்பிற்குள் எந்த வளர்சிதை மாற்றங்களையும் உண்டு பண்ணவில்லை. கொலை கொள்ளை பாலியல் வன்புணர்வு போன்ற எந்தக் குற்றச் செயலையும் மிஸோரத்தில் காண முடியாது. இணைய வழி பாலுறவுக் காட்சிகள் பார்ப்போர் எண்ணிக்கை இங்கு இந்த கூடுதல்தான். கட்டற்ற பாலுறவு நடைமுறையில் இருக்கும் மாநிலத்தில்தான் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுதல். ஆனால் இங்கு நள்ளிரவில் ஆண் துணையின்றி ஒரு இளம் பெண் நடமாடவியலும். காதல் முறிவிற்காக இங்கு நடந்தது ஒரே ஒரு கொலைதான். அதுவும் வெளி மாநில ஆண் ஒருவரால் நடத்தப்பட்டது.


மிஸோக்கள் தங்களது தனிப்பட்ட விருப்பங்களையும் தேர்வுகளையும் பாத்தி கட்டுவது போல கட்டி அதற்குள் நிறுத்திக்கொள்கின்றனர். இங்கு பிற மனிதர்களுடனான நடத்தை என்பது இந்திய பெரு நில ஒழுக்கத்தைவிட பல நூறு மடங்கு உயர்ந்தது. இங்கு சட்டம் ஒழுங்கை பேணிப்பாதுகாப்பதில் இணை காவல் துறையாக மிஸோ இளைஞர் கூட்டமைப்பு செயல்படுகின்றது. குற்றங்களுக்கான தண்டனையளிப்பதில் மிஸோக்கள், மற்றவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் முழுமையாக நின்று உதவுகின் றனர் மிஸோக்களின் தேசீய பண்பில் பயணங்களில் காண முடிந்தது. உறைந்துள்ள இக்குணத்தை, பயணங்களில் காண முடிந்தது


வெளிமாநிலத்தவரை மதிக்கின்றனர். பெங்காலிகள் என்றால் ஒரு ஒவ்வாமை இருக்கின்றது. காரணம் உள்ளூர் சிக்கல்கள், மிஸோக்கள் நேபாளிகளை தங்களுக்கு நெருக்கமானவர்களாக பார்க்கின்றனர். தமிழகம், கேரளத்து மக்கள் என்றால் மிலோக்களுக்கு அவர்கள் மீது மதிப்பு கூடுதல்தான். காரணம் வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்களை மிகவும் பாதுகாப்பாக இந்த இரண்டு மாநிலங்களிலும் உணருகின்றனர்.

மிலோ இளைஞர் கூட்டமைப்பின் வழியாக பேணப்படும் இன ஓர்மைக்குள் "பிறவற்றின் மீதான ஐயமும் ஒவ்வாமை சற்று தூக்கலாக இருப்பதற்கான பல காரணங்களில் இந்தியப் பெரு நிலத்தின் ஆதிக்க மனதிற்கும் தலையாய பங்கு இருக்கின்றது. 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அஸ்ஸாம் துப்பாக்கி படையினர் மீது மட்டுமே மிஸோ தேசிய முன்னணியினர். ஆயுத தாக்குதல் நடத்தினர். மறு நாளே இந்தியாவிலிருந்து மீஸோரத்தின் விடுதலையையும் அறிவித்தனர்.

இந்திரா காந்தியின் தலைமையிலான அன்றைய இந்திய அரசு நான்கு குண்டு வீச்சு வானூர்திகளை அனுப்பி அய்ஸோல் மீது குண்டுகளை பொழிந்தது. பொது மக்கள் இறந்தனர். இருப்பிடங்கள் அழிந்தன. நாங்கள் வானத்தின் வழியாக உணவு வினியோகம்தான் செய்தோம் என வெட்கமின்றி பொய்யுரைத்தது இந்திய அரசு.


விடுதலை பெற்ற இந்தியாவின் நடுவண் அரசு தனது சொந்த குடிமக்கள் மீது நடத்திய முதல், ஒரே வான் வழி தாக்குதல் இதுதான். மலை குன்றுகளிலும் உயரமான பகுதிகளிலும் உள்வாங்கியும் மிஸோக்கள் வீடுகளை அமைப்பர். மிஸோக்கனின் இவ்வகையான பழங்குடி இடவமைப்பானது வெளியார் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ளும் முறையிலானது.


இந்த காப்பு அமைப்பை தகர்க்கும் விதமாக இந்திய ராணுவம் மிஸோக்களின் இருப்பிடங்

களைத் தீயிட்டுக் கொளுத்தி அழித்தது. மிஸோக்களை எப்போதும் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் வகையில் சாலைகளை ஒட்டி மிஸோ இருப்பிடங்கள் அமையுமாறு பார்த்துக் கொண்டது நடுவணரசு, இந்திய அரசின் மிகை நடவடிக்கைகளும் வன்முறையும் மிஸோக்களின் தேசீய நினைவில் வடுவை அழுந்த பதித்து விட்டது. மிஸோக்கள் ஹிந்தியைவிட ஆங்கிலத்தையே தங்களுக்கு நெருக்கமாக உணருகின்றனர்.


படா மார்க்கட்டில் உயிருடனுள்ள நண்டு, புழுக்கள், எருமை, கோழி, பன்றி, நாய், மாடு போன்றவற்றின் இறைச்சிகளும், ரொட்டி, கேக், பிஸ்கட் வகைகளும் விதம் விதமான காய்கறி களும் விற்பனைக்கிருந்தன. நம் ஊர் பக்கம் செய்வது போல இறைச்சிக்கான பறவைகளையோ விலங்குகளையோ நினைத்த இடத்தில் அறுத்து விற்க இயலாது. சுகாதார விதிகளைக் கண்டிப்பாக பேணுகின்றார்கள். அப்ஸோலுக்கு வெளிப்புறம் அரசே அறுப்பு கூடத்தை நடத்துகிறது. வடகிழக்கின் வழமை போல இங்கும் கடை உரிமையாளர்களில் கூடுதலானவர்கள் பெண்கள்தான்.


மியான்மர் எல்லையிலுள்ள சம்பாய் கிராமத்திற்கு மறு நாள் காலை 8 மணியளவில் கிளம்பினோம். நாங்கள் ஏறிய சுமோவின்இருந்த வயதான மியான்மர்காரர், சன்னமான குரலில் கர்த்தரை துதிக்க வண்டியில் உள்ள ஏனைய பயணிகளின் ஆமென்களுக்குப்பிறகு வண்டி கிளம்பியது. 194 இவோ மீற்றர் தொலைவு. உத்தேச பயண காலம் ஆறு மணி நேரங்கள் என மிஸோரம் அரசின் சுற்றுலா துறை வெளியீடு சொல்லியது. ஆனால் கிட்டதட்ட 12 மணி நேர குலுக்கல் பயணம். மோசமான பள்ளங்கள். ஆனால் எந்த இடத்திலும் யாரும் ஒலிப்பானை அலற விடவில்லை. மிஸோரம் மாநிலம் முழுக்கவே ஊர்திகள் தேவையற்ற ஒலி எழுப்புவதில்லை. எவ்வளவு நேரமானாலும் வரிசைகளைப் பேணியே செல்கின்றனர். போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்கின்றனர்.


மிஸோரம் மாநில அரசானது வெளி பண்பாட்டின் படை யெடுப்பை எண்ணி அஞ்சி இங்கு சுற்றுலாவை பெரிதாக ஊக்கு விப்பதில்லை. திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் தடை உண்டு. இரவு 10 மணியளவில் சம்பாய் சென்றடைந்தோம்.


போகும் வழியில் மதிய உணவிற்காக செலிங் என்ற ஊரில் நிறுத்தினார்கள். அங்கிருந்த அஸ்ஸாம் துப்பாக்கி படையின் சிப்பாய்கள் இருவரிடம் பயண வழிகளை விசாரித்தோம். அவர்களிருவரும் எங்களிடம் சரியாக முகங்கொடுக்கவில்லை. சிப்பாய்களுக்கு மக்களிடமுள்ள அச்சம்தான் காரணம் என பின்னர் விளங்கியது.


நாங்கள் சம்பாய்க்கு போன நேரத்தில் அங்கு மிலோ இளைஞர் கூட்டமைப்பின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தேநீருக்காக ஓரிடத்தில் இறங்கிய போது மீஸோ இளைஞர் கூட்டமைப்பின் நிர்வாகிகளும் அங்கு நின்றிருந்தனர், நாங்கள் தமிழர்கள் என்பதை அறிந்தவுடன் புன்னகையும் ஆர்வமும் கலக்க எங்களுடன் தற்படம் எடுத்துக் கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்தனர். சம்பாவில் நாங்கள் தங்கிய விடுதி உயர் தரமானது தூய்மையும் அழகும் ஒருங்கே அமையப்பெற்றது. அறைய பணியாளர்களின் சேவையும் உணவும் அருமை. அதிகாலை 05:30 மணிக்கே சம்பாயின் கடை வீதிகள் இயங்கத் தொடங்கின.

இரவையும் விடுமுறையையும் முழுக்க கொண்டாடுபவர்கள் மிஸோக்கள்தான், கதிரவனோடு எழுந்து அதனுடனேயே ஓய்பவர்கள்.


ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் அய்ஸோல், சம்பாய் நகர சாலைகளில் முழு மனித நீக்கம்தான். சனிக்கிழமை மாலையே ஊரானது விடுமுறை வளைக்குள் ஒடுங்கத் தொடங்குகின்றது. தேவாலயங்களுக்கு செல்லும் கூட்டத்தைத் தவிர வேறெங்கும் ஆட்களை பார்க்க இயலாது. எந்தவொரு அத்தியாவசிய பொருட் களையும் வாங்க இயலாது. வாடகை ஊர்திகளையும் காண முடியாது. தனியாக தங்குபவர்கள், வெளியூர்காரர்கள் வெள்ளிக் கிழமையே சுதாரிக்கவில்லையென்றால் கடும் சிரமம்தான்.


மேற்கத்திய இசை, நடனம், நண்பர்கள் அரட்டை, போதை பாலுறவு என மொத்த விடுமுறையையும் களிப்பிற்காகவே செலவழிக்கின்றனர். மிஸோரத்திற்குள் நுழைக்கப்படும் போதைப் பொருட்கள் இளைஞர்களை பல வகையிலும் சீரழித்து வருகின்றன.


ஆபாச பட காணலுக்கும் போதை மருந்து புழக்கத்திற்கும் நுகர்வு பண்பாட்டிற்கும் மேற்கத்திய பண்பாட்டையும் கிறிஸ்தவத்தையும் முழுக்க முழுக்க பொறுப்பாக்குவது என்பது தங்கள் கைகளில் படிந்துள்ள கறைகளை அடுத்தவரின் ஆடையில் துடைப்பது போலத்தான்.

- மேலும்


Comments


bottom of page