(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)
(லிவிங்க் ரூட்ஸ் பாலம் - Prateek Lata)
இடையறாத மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற ஸோஹ்ராவின் சுற்றுப்பகுதிகளில்தான் இவ்வகையான உயிருள்ள மரவேர் பாலங்கள் அமைந்துள்ளன. திடுமென உயரும் ஆற்றின் நீர்ப்பெருக்கால் அடித்துச் செல்லப்படும் மூங்கில் பாலங்களுக்கு மாற்றாக கசீ இன முன்னோர்கள் இயற்கையின் போக்கிலேயே சென்று அதை தங்களுக்கு இசைவாக்கியுள்ளனர்.
ஷில்லாங் திரும்பும் முன்னர் கடைசியாக பார்க்க வேண்டியது ராமகிருஷ்ணா மிஷன் வளாகம். அங்கு எதற்கு போக வேண்டும்? என ஒட்டுனர் ஹுஸைன் முகஞ்சுளித்தார்.
எங்கிருந்தோ வந்த மனிதர்கள் இவ்வளவு உயரமான தொலைவான இடத்தில் இவ்வளவு பெரிய நிறுவனத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். அதற்காகவாவது செல்வோம் என முடிவெடுத்தோம். பழுப்பேறிய நிறப்பின்னணியில் உறுதியாகவும் அகலமாகவும் நின்றது ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம். திடலின் ஓரத்தில் பொன்னிறத்தில் விவேகானந்தர் சிலை. ஓரமாக ஆசிரம், அலுவலக கட்டிடங்கள். நடுவணரசின் அலுவலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது.
முதலில் கண்ணில் தட்டுப்பட்டது விற்பனையகம். ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் போதனை & ஹிந்து மதி நூல்கள், உருத்திராட்ச மாலை, குர் குரே வகை நொறுக்குத்தீனி பொட்டலங்கள், சாக்லேட்டுகள், கோல்கேட் பற்பசை என கதம்பமாக இருந்தது. காவியுடைத் துறவிகள்தான் விற்பனையாளர்கள்.
1924-ஆம் ஆண்டு ராமகிருஷ்ண மடத்துறவி ஒருவர் இங்கு வந்து பணி தொடங்கியிருக்கிறார். 1952 ஆம் ஆண்டு தலைமையமைச்சர் ஜவாஹர்லால் நேரு வருகை தந்து விரிவாக்கத்திற்கான அடிக்கல் நாட்டியிருக்கின்றார். மடத்தின் கீழே நெசவு பயிற்சிக்கூடமும் மேல் தளத்தில் அருங்காட்சியகமும் அமைத்துள்ளனர். ஷில்லாங்கின் தொன்போஸ்கோ அருங்காட்சியகத்தை விட இது பழமையானது என்பதால் பெரிதாக கவனத்தை கவரவில்லை. இங்கு படம் எடுக்க முனைந்த போது அங்கு நின்ற பொறுப்பாளர் படம் எடுக்க தடை என எழுதப்பட்ட அறிவிப்பு பலகையை கட்டிக் காட்டினார். அங்கு மட்டுமல்ல மடத்தின் வளாகம் முழுக்க இந்த படத்தடை அறிவிப்புகள் இருந்தன. இந்த அறிவிப்பை வெறும் கரும்பலகையருகிலும் எழுதி வைத்திருந்தார்கள்.
தொன்போஸ்கோவில் தேவைப்படாத தடை இங்கு ஏன்? நீங்கள் ஐம்பது வருடம் பின்னால் அல்லவா இருக்கின்றீர்கள் ? எனக்கேட்டதற்கு நாங்கள் இலவசமாக சேவை செய்கிறோம் அவர்கள் அதில் காசு பார்க்கின்றார்கள் என சூடாக மறு மொழி வந்தது.
கடை, உணவகம், சந்தை வேலை,விவசாயம் என எந்த பொது வெளியானாலும் கசி பழங்குடியினப்பெண்களைத்தான் கூடுதலாக பார்க்க முடிகின்றது. அஸ்ஸாம் நீங்கலாக நாங்கள் போன நான்கு வ.கி. மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆண்கள் என்ன செய்கிறார்கள் ?
இங்குள்ள பெண்களிடம் தங்க அணிகலன்கள், சாலைகளில் இரு சக்கர ஊர்திகளையோ மிதிவண்டிகளையோ பார்க்க முடிவதில்லை. கவனித்தீர்களா? என ஷரஃபுத்தீன் கேட்டார்.
பழங்குடி வாழ்வின் கூறுகளும் கிறிஸ்தவ நெறியின் உள்ளுறைக் கூறுகளும் கலந்த உற்சாகத் திரவம் கசி பழங்குடியினரின் வாழ்க்கைக் கலனை நிரப்புகின்றது. நிரம்பியதற்குள் மேற்கொண்டு எதைக் கொண்டு நிரப்புவது ?
நாங்கள் ஷில்லாங் திரும்பும்போது ஏறக்குறைய ஆறு மணியாகி விட்டது. இருளின் அடர்த்தியை பார்க்கும்போது இரவு 10 மணி போல இருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் அந்தி சரிந்து விட்டது. இருளும் மழையும் கலந்த கரைசலுக்குள் நின்றது ஷில்லாங். மதீனா மஸ்ஜிதிற்கு தொழச்சென்றோம். இஸ்லாத்தைத் தழுவிய கசி பழங்குடியினரால் கட்டப்பட்ட மஸ்ஜித் என ஓட்டுனர் சொன்னார். மஸ்ஜிதின் மினாரா, முகப்பு உள்ளே வெளியே என எல்லா திசைகளிலிருந்தும் பச்சை நிறம் கசிந்து மரகத ஒளிர்வை தந்து கொண்டிருந்தது.இதன் குப்பா (கவிகை மாடம்) மினாரா (கோபுரம்) இரண்டும் கண்ணாடியினால் ஆனது. இந்தியாவிலேயே இத்தகைய மஸ்ஜித் இது ஒன்றுதானாம். மஸ்ஜிதின் உள், வெளிப் பகுதிகளில் ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேர் வரை தொழ முடியும். உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவியில் இதனை கட்டி எழுப்பியவர்கள் ஹிந்துக்களாவர்.
மறு நாள் நோஹ்வெட் கிராமத்தில் தைலாங் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள லிவிங்க் ரூட்ஸ் பாலத்திற்கு சென்றோம். போகும் வழி முழுக்க சில் வண்டுகளின் ஓசையானது தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டே வந்தது. இந்த ஓசையை வடகிழக்கின் பெரும்பாலான பகுதிகளில் கேட்க முடிகின்றது, சாலைக்கும் காட்டிற்கும் இடையே போடப்பட்ட ஒலி அரண் போல, வடகிழக்கின் அடையாள முத்திரை சை போல வண்டுகளின் ரீங்காரம், ஷில்லாங்கிலிருந்து நோஹ்வெட் கிராமம் வரையிலான 38 கிலோ மீற்றர் பாதையில் கொஞ்சம் பகுதியைத் தவிர்த்து மீதி முழுக்க சாலைப்பயணமானது நெடுஞ்சாலையின் வறண்ட உணர்வைத் தரவில்லை. அந்த சாலைகளை, இரு கரையிலும் பசுமை அரண்களால் காப்பிடப்பட்ட கல் மண் நாளங்கள் என சொல்வதுதான் சரியாக இருக்கும். நெடும் குழாய்க்குள் வழுக்கி வழுக்கி பெருந்தொட்டிக்குள் விழுந்தது போன்ற உணர்வு.
மலையிலிருந்து ஒழுகும் நீர்த்தாரையிலிருந்து பயணிகள் நீரருந்துவதற்கு வசதியாக குழாய்களை செருகி வைத்திருக்கிறார்கள். நாங்களும் தீரகுத்தி குப்பிகளிலும் நிறைத்தோம்.
தேநீருக்காக ஒரு கடையில் நிறுத்தினோம். இங்கெல்லாம் பெரும்பாலான தேநீர்க்கடைகளில் முழு உணவும் சமைத்து பரிமாறுகின்றார்கள். பன்றி இறைச்சி இங்கு அறிவிக்கப்படாத தேசிய உணவு. நாங்கள் ஏற்கனவே இருப்பில் வைத்திருந்த ரொட்டி, பழக்கூழ், பழங்கள், நொறுக்குத்தீனிகள் பெரியதாக கை கொடுத்தது.
நோஹ்வெட் கிராமத்தில் ஏராளமான கைவினைப் பொருட் களின் விற்பனையகங்கள். இங்கு மூங்கிலும் மர வகைகளும் ஏராளமாக கிடைப்பதால் விதம் விதமான அறை, சமையல்
காலன்கள், மர முட்டைகளுடன் உண்மையான பழத்துண்டங்களும் விற்பனைக்கிருந்தன. நாங்கள் சென்றது ஒற்றைப்பாலத்திற்குத்தான் மலையாற்றின் குறுக்கே உயிருடனுள்ள மர வேர்களினால் ஆன பாலம். இதில் இரண்டடுக்கு பாலமும் உண்டு. ஆனால் அதை அடைவதில் பாதை சிரமங்கள் உள்ளன.
இடையறாத மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற ஸோஹ்ரா வின் சுற்றுப்பகுதிகளில்தான் இவ்வகையான உயிருள்ள மரவேர் பாலங்கள் அமைந்துள்ளன. திடுமென உயரும் ஆற்றின் நீர்ப்பெருக்கால் அடித்துச் செல்லப்படும் மூங்கில் பாலங்களுக்கு மாற்றாக கசீ இன முன்னோர்கள் இயற்கையின் போக்கிலேயே சென்று அதை தங்களுக்கு இசைவாக்கியுள்ளனர்.
ரப்பர் மர வேர்களை திட்டமிட்டு ஆற்றின் குறுக்காக நெய்து வளர்த்தனர். வருடங்கள் பல கடந்தன. அவர்களின் பொறுமையான முயற்சி பலன் கொடுத்தது. இவற்றின் வயது நூற்றிலிருந்து நூற்றைம்பது வருடங்கள் வரை என சொல்கின்றனர். பாலத்தின் இரு பக்கமும் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். யாரையும் அதில் நிற்க விடுவதில்லை. பாலத்தின் நடுவில் நின்று படமெடுக்கவும் சம்மதிப்பதில்லை. கைக்குழந்தைக் குரிய முழுக்கரிசனையுடன் பாலம் பராமரிக்கப்படுவதால் வேர்கள் புத்திளமையுடன் வலுவாக இருக்கின்றன.
மரத்திலும் செடி கொடிகளிலும் ததும்பும் பச்சையமானது நீர்த்தளத்தில் ஊறி பாறைகளின் பழுப்புடன் கலந்து வெயிலுக்கும் நிலத்துக்கும் இடையில் ஒரு சுவர் போலவும் சுவரில்லாதது போலவும் ஒரு வன அரசிற்குரிய தோரணையை உண்டாக்கியிருந்தது. அந்த பேரரசின் எல்லைக்குள் குட்டிப் பருவத்து நினைவுகளும் கனவுகளும் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தன.
இந்த உயிரி பாலம் அமைக்கப்பட்டதற்கான நினைவுக் கல்வெட்டை தாய்லாந்து இளவரசியைக் கொண்டு திறத்திருக்கிறார்கள். வடகிழக்கின் வேர்களை சரியாக புரிந்து கொள்பவர்களால் மட்டுமே வடகிழக்கை முறையாகக் கையாள முடியும். அதை விட்டு விட்டு ரொட்டி, உருளைக்கிழங்கு, ஹிந்தி, இந்தியா, நீ, நான் எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றை உருண்டையாக உருக்கி வார்க்கும் முயற்சியால் இடைவெளிதான் மிஞ்சும். மல்லிங்லாங் மாதிரி கிராமத்திற்குச் சென்றோம். கிறிஸ்தவ பரப்புரை பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனைக்காக இரண்டு இளம் மருத்துவர்கள் வந்திருந்தார்கள். இருவருமே ஹோமியோபதி மருத்துவர்கள். அரசு தோற்கும் அல்லது இல்லாமல் போகும் இடங்களை கிறிஸ்தவ நலன் புரி நிறுவனங்களே நிரப்புகின்றன.
படமெடுக்க முனைந்த போது பல குழந்தைகள் வெட்கி தலை திருப்பின் முகம் பொத்தின. கேமிராவிற்குள் குழந்தைமையை உறைய வைத்து விடுவார்கள் என அந்தப் பிஞ்சு இதயங்கள் படபடத்திருக்குமோ? மேற்கு ஜைந்தியா மலைத் தொடரில் இருக்கும் இந்திய பங்ளாதேஷ் எல்லை நகரான தங்கிக்கு சென்றோம். போகும் வழியிலேயே அக்கரையில் பங்ளாதேஷ் நிலப்பரப்பு தெரிகின்றது. அந்த பசுமை நிலப்பரப்பில் கால்நடைகளும் மேய்ப்பர்களும் சட்டை அணியா சிறார்களும் எறும்பு போல ஊர்ந்தனர். நூறு மீற்றர்களுக்கு ஒன்று வீதம் என எல்லை பாதுகாப்பு படையின் சாவடிகள் உள்ளன. பல சாவடிகளில் ஆளில்லை.
அப்படியான ஒரு சாவடியில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தானத்தை சேர்ந்த இரண்டு சிப்பாய்கள் இருந்தனர். மிகவும் ஓய்வாக காணப்பட்ட அவர்களுடன் உரையாடினோம். பங்ளாதேஷ் முஸ்லிம்கள் பாக்கிஸ்தானிகளைப்போல இல்லை. பெங்காலிகள் நல்லவர்கள். பங்ளாதேஷ் நட்பு நாடும் கூட எல்லை தாண்டுவோர் அன்றாடங்காய்ச்சிகள் என்பதால் அவர்கள் இங்கு வந்து போவதை நாங்கள் தடுப்பதில்லை. அப்படி வந்து போவோரிடம் சில்லறை வேலைகளை வாங்குவோம். அது போல மேகாலயாவின் மக்களும் போதைபாக்கிற்கு அடிமையானவர்கள். அவர்களின் முழு தினமும் போதையிலேயே கழிவதால் எங்களுக்கு இங்கு எந்த விதமான பாதுகாப்பு சிக்கலுமில்லை. மற்ற வடகிழக்கு மாநிலங்கள் எப்படி? எனக்கேட்டதற்கு மணிப்பூரும் நாகலாந்தும் மோசம். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது. மக்கள் கூடுதல் புழங்காத இடங்களுக்கு செல்லாதீர்கள். மிஜோரத்தில் சிக்கலில்லை என்றனர்.
இந்தியாவின் ஆளும் வர்க்கம், ஊடகம், பொது மனம் ஆகியவை படைத்தனிக்கும் முன் கருதலும் வெறுப்பும் மேட்டிமை & ஆதிக்க மன நிலையும்தான் இந்திய எல்லையில் நிற்கும் கடைசி சிப்பாயின் உலோக மூளையையும் ஆயுத விரல்களையும் இயக்குகின்றன. எல்லை பாதுகாப்பு படையின் பாளையங்களும் படை வீடுகளும் வரிசையாக இருந்தன. தொடர் மழை வீழ்ச்சியினாலும் அசைந்தாடி செல்லும் பாதுகாப்புத் துறையின் கனரக ஊர்திகளினாலும் சாலைகள் உருக்குலைந்துள்ளன.
தவ்கி கிராமம் இந்திய எல்லையில் உள்ளது. மறுபக்கம் பங்ளாதேஷின் சில்ஹட் மாவட்டத்தின் தமாபில் கிராமம்.குவாஹத்தி - ஷில்லாங் - தாகா இடையிலான இந்திய பங்ளாதேஷின் வாரமொரு தடவை பேருந்து போக்குவரத்து சேவை இந்த தடத்தின் வழியாகத்தான் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இரு நாட்டு மக்களின் தொடர்பும் எல்லையோர வணிகமும் எவ்வித பதட்டமுமின்றி இந்த பகுதிகளில் நடைபெறுகின்றன.
நாங்கள் உமன்காட் நதித்துறையை நெருங்கவும் சாலையின் இரு மருங்குகளிலும் அமர்ந்திருந்த சிறுவர்களும் இளைஞர்களும் எங்கள் வண்டியை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் தீவிரமான முக பாவனையும் உடல் மொழியும் கொஞ்சம் பதட்டத்தை ஏற்படுத்தியது. ஓட்டுனரிடம் கேட்ட போதுதான் அவர்கள் வாடகை படகோட்டிகள் என்றார். வாடிக்கையாளர்களை கவர்வதில் போட்டா போட்டி. உம்ன்காட் நதி இந்தியாவில் பிறந்து பங்ளாதேஷ் வழியாக பாய்ந்து பெங்கால் வளைகுடாவில் கலக்கிறது.
நதியில் குளிப்பதற்காக நாங்கள் இறங்கியபோது எல்லை பாதுகாப்பு படையின் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து ஆறு இணை கண்கள் எங்களையே உற்று நோக்கத் தொடங்கின. இவர்களுக்கு இங்கு என்ன வேலை ? என நினைத்தார்களோ என்னவோ ? கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் இரண்டு நாடுகளையும் பிரித்து போடும் பன்னாட்டு எல்லைக்கு அடையாளமாக வெள்ளைக்கொடியும் எல்லைக்கல்லும் நின்றிருந்தன. இந்த எல்லைப்பிரிவினை உம்ன்காட் ஆற்று நீரையும் ஊடறுக்கின்றது. நாங்கள் இறங்கி குளிக்கும்போது மேலிருந்து காவலர்களின் ஊதல் ஒலி கேட்டது, நான்கடி தாண்டினால் பங்ளாதேஷ் எல்லை. எனவே எச்சரிக்கை ஒலி. காற்றும் ஆற்று நீரும் எந்த ஊதல் ஒலிக்கும் காத்து நிற்கவில்லை. சிறு கடிகள், தின்பண்டங்களை விற்கும் பங்ளாதேஷின் சிறு வணிகர்கள் கடை போட்டிருந்தனர். மலிவு விலை சில்லறைப்
பொருட்களை விற்கும் கடைகள் இரு மருங்கிலும் இருந்தன.
பொட்டு வைத்த பங்ளாதேஷி ஹிந்து இளைஞிகள் உற்சாகத்தில் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்தனர். ஒற்றை ஊதல் ஒலியில் அவர்கள் இரண்டு எட்டுக்கள் பின் வைத்து அவர்களின் மண்ணிற்குள் மீண்டனர்.
ஆழமுள்ள குழிகள், பள்ளங்கள், அதில் நிறைந்திருக்கும் சாம்பல் திற மண் களி, எந்நேரம் வேண்டுமானாலும் சரிந்து விழும் மலை அடுக்குகள் என அனைத்து வகை பாதகமான அம்சங்கள்.
வடகிழக்கின் பல இடங்களில் "அமிழும் இடங்கள் என அறிவிப்பு பலகை நடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தரை மண்ணானது உறுதியற்றதும் நெகிழக்கூடியதுமாகும். மலைப்பாம்பு தனது இரையை விழுங்குவது போல இங்கு சுட்டப்பட்டுள்ள வீடுகளை பூமி மெல்ல தன் வாய்க்குள் இழுத்துக் கொள்ளும் பருவ மழைக்காலங்களில் இங்கு ஏற்படும் நிலச்சரிவில் வீடுகளும் ஆட்களும் இல்லாமல் போவதுண்டு.
தற்காலிகத்திற்குள் தற்காலிகம். வடகிழக்கு முழுமைக்குமே தரை வழி போக்குவரத்து என்பது நிலச்சரிவினாலேயே மிகவும் சிரமம் நிறைந்ததாகவும் நேரம் பிடிப்பதாகவும் மாறியுள்ளது.
ஓரிடத்தில், மலைப்பள்ளத்திற்கும் சாலைக்குமான சில அடி இடைவெளியில் எங்கள் பேருந்தானது இடம் வலமாக ஆடி சாலைக்குள் மீண்டது. பாதாள கதி மோட்ச பேறு கிடைக்கப் பார்த்தது. வாழ்விற்கும் இறப்பிற்குமான நூலிழை நடனம்.
அதிகாலை ஆறு மணியளவில்தான் நிலச்சரிவில் சிக்கி இரண்டு ஊர்திகள் விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலை எட்டு மணிக்கு பிறகே மலைப்பாதை முடிவடைந்து சமதளம் தொடங்கியது, அஸ்ஸாமின் சில்ச்சர் நகரம், ஏராளமான மக்கள் திரள் கொடுக்கலும் வாங்கலும் கூச்சலும் நிரம்பிய பெரும் சந்தையூர். நம்ம பக்கத்து பரமக்குடியை பார்த்தது போல இருந்தது. தமிழகத்தின் பட்டாசு வணிகர்கள் இங்கு வருவதாக விடுதிக்காரர்கள் சொன்னார்கள்.
சில்ச்சரிலிருந்து ஒரு மணி நேர ஓட்டத்திற்கு பிறகு மீண்டும் மலைப்பாதை தொடங்கிய சில அடிகளிலிலேயே. மிஸோரம் மாநிலத்தின் எல்லை வந்து விடுகின்றது. வைரங்டி சோதனைச்சாவடியில் உள்ள காவலர்கள் எங்கள் கைகளிலிருந்த இன்னர் லைன் பெர்மிட் எனப்படும் உள்ளக நுழைவு சீட்டை வாங்கி சோதித்த பின்னர் வண்டி புறப்பட்டது. சில நூறடிகள்தான் வண்டி சென்றிருக்கும். இன்னொரு சோதனைச்சாவடி. இது போதை மருந்து தடுப்புக்கானது. மிஸோரத்தை சீரழிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு பின்னால் பல சமூக அரசியல் சமன்பாடுகள் உண்டு.
வண்டி புறப்படும் நேரத்தில் ஒரு நடுத்தர வயது பெண்ணும் இரண்டு மூன்று இளைஞிகளும் கைகளில் குளிர் பாள நீன் உறைகளை ஏந்தி வந்தனர், தேவாலயங்களுக்கான நன்கொடை சேகரம். இரு மருங்கிலும் ஒரு வகையான வறண்ட மலைத்தொடர்க ளுடன் பயணம் முடிவிலியாக தொடர்ந்தது மனதில் ஆயாசத்தை நிறைத்தது. மாலை ஏழு மணிக்குள் அய்ஸோல் போய் விடலாம் என கணக்கிட்டோம்.
நண்பர் ஸுலைமானுக்கு அவரின் சகோதரியின் இறப்பு செய்தி தொலைபேசியில் வந்தது. உடனடியாக எங்குமே மீள முடியாத ஒரு பயணத்தில் திரும்ப பெறமுடியாத இழப்பு பற்றிய செய்தியானது கைவிடப்பட்ட மன நிலையை உண்டாக்கியது. உள் நாட்டில் இருந்தும் நெருக்கமானவர்களின் கடைசி தருணங்களில் உடனிருக்க முடியாமல் போவதன் அவலம் மனதை மீண்டும் மீண்டும் கலைத்தது.
பட்டதும் போதும் இனி படப்போவதும் போதும். இதுதான் வாய்ப்பு, புறப்பட்டு விடு என மனமானது சீரான இடைவெளி களில் சேவல் போல கூவியது. பயணத்தைக் கைவிடுவதைப்பற்றி ஆலோசித்தோம். நல்லடக்கத்திற்கு போய்ச்சேர முடியாத அளவிற்கு கால, தொலைவு சிக்கல்கள் இருந்ததால் பயணத்தை தொடரலாம் என ஸுலைமான் உறுதிபட தெரிவித்தார்.
- மேலும்
Comments