(இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நான் பயணம் செய்த கதை, இந்த கட்டுரைகளை பரிசல் பதிப்பகம் 2018யில் புத்தகமாக வெளியிட்டுள்ளது)

(மவ்ஸ்மாய் குகையின் அழகிய காட்சி)
குட்டி மீன்களும் பச்சைப்பாசியும் கலந்த மலை மேல் குட்டையிலிருந்து நீரானது நம் கால் பாதங்களின் கீழாக நழுவி புன்னகை போல சிதறுகின்றது. நம் வீட்டு ஏணிப்படிகளில் நீர் ஒழுகி வருவது போன்ற உணர்வு.
மேகாலயாவில் கசி இனக்குழுதான் பெரும்பான்மை என்ற போதிலும் ஜைந்தியா, கரோ என மற்ற இரண்டு பழங்குடியினரும் இருக்கின்றனர். மியான்மர், திபெத், தென் சீனம் உள்ளிட்ட தென் கிழக்காசியாவின் மூலைகளில் இம்மூன்று பழங்குடியினரின் ஆதி வேர் உள்ளது. இவர்களின் உள்ளூர் பண்பாட்டு மரபின் சேகரத்தில் முதலில் புதிய தீற்றல்களை சேர்த்தது பௌத்தமும் ஹிந்து மதமும்தான். அந்த வகையில் கிறிஸ்தவ மத தழுவல் என்பது கடைசியாக நிகழ்ந்ததுதான்.
இடப்பெயர்வு, கால மாற்றம், சிந்தனை வளர்ச்சி போன்றவை பல்வேறு நாகரீகங்களின் முயக்கத்திற்கும் புதியனவற்றின் மலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது. ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு கிறிஸ்தவமானது பழங்குடிகளின் வாழ்க்கையை முறையை வலுக்கட்டாயமாக அழித்து விட்டது எனக் குற்றஞ்சாட்டுவது அநீதியானதும் உள் நோக்கம் உடையதும் கூட.
கசி, ஜைந்தியா, கரோ பழங்குடியினர் தனித்தனியாக மேகாலயாவின் நிலப்பரப்பை ஆண்டிருக்கின்றனர். பிரிட்டிஷ், இந்திய ஆதிக்கங்களின் வழியாக மேகாலயா இன்றைய ஒன்றிணைந்த வடிவத்தை அடைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள எதிர்மறை அம்சம் என்பது பழங்குடி இனக்குழுக்களுக்கிடையே உள்ள அளவுக்கதிகமான இனக்குழு தன்னுணர்வுதான் காலங்காலமாக இவர்களுக்கிடையே நடந்து வரும் மோதல்களும் குருதி சிந்தல்களும் கிறிஸ்தவத்தின் பரவல், இந்தியப் பெரு நிலப்பரப்பினுடனான தொடர்பு போன்றவை ஏற்பட்ட பிறகு பெருமளவில் மட்டுப்பட்டுள்ளன.
மேகாலயாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆனால் முதன்மை மொழிகளாக கசி, நார், கரோ மொழிகள் உள்ளன. தென் கிழக்காசியாவின் மன்கெமெர் இனக்குழு குடும்பத்தின் எஞ்சியிருக்கும் மிகச்சில மொழி வடிவங்களில் கசியும் ஒன்று இந்த மூன்று பழங்குடி மொழிகளும் இன்று வளர்ச்சியடைந்து நீடிக்கின்றது என்றால் அதற்கான காரணம் இங்கு வந்த கிறிஸ்தவ
பரப்புரையாளர்களின் கரிசனமும் கடின உழைப்பும்தான். 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தின் பிரெஸ்பெடே ரியன் சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மேகாலயாவிற்கு வந்துள்ளனர். தங்களது சொந்த வாழ்வின் எல்லா கூறுகளையும் தாங்கள் பின்பற்றும் நம்பிக்கைக்கு மொத்த காணிக்கையாக்கி அளித்துள்ளனர்.
வளர்ந்து வரும் இந்தியாவில் தங்களுக்குரிய பங்கை பெறுவதற்கான விழிப்புணர்வும் முனைப்பும் உழைப்பும் அதன் விளைவாக ஈட்டிய ஓரளவு வெற்றியும் வடகிழக்கிந்தியர்களிடம் இருக்கிறது. சட்டியின் அடியில் ஒட்டி வரும் கரிப்பிசுக்கு போல வளர்ச்சியினடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மேலாதிக்கத்தை அடையாளங்கண்டு கொள்கின்றனர். இவையனைத்தும் அவர்களிடம் இருக்கும் பழங்குடி தன்னுணர்வு, கிறிஸ்தவம், நவீன கல்வி என்ற மூன்று காரணிகளின் விளைவாகத் தான் சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவின் ஏனைய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி களைப் பாருங்கள். பெரும்பான்மைச் சமூகம், நடுவண், மாநில அரசுகளின் தொடர் புறக்கணிப்பு, அரச படைகளின் வன்முறை, பெரு வணிக நிறுவனங்களின் இயற்கை வளச்சுரண்டல் போன்றவற்றின் காரணமாக அகதிகளாகவும் நகரத்து எச்சங்களாகவும் உதிரித்தொழிலாளர்களாகவும் குற்ற மரபினராகவும் அவர்கள் சீரழிக்கப்பட்டதுதான் மிச்சம். ஷில்லாங்கின் மார்வாடி உணவகத்தில் வாடகைக் கார் ஓட்டுனர் கிடைத்தார். பெயர் ஹூஸைன். அஸ்ஸாமியர். நல்ல மனிதர்.
ஸோஹ்ராவில் உள்ள (ஸோஹ்ராவின் பழைய பெயர் செராபுஞ்சி ), வஹ் கபா அருவி, நோஹ் காலிகா அருவி, மவ்ஸ்மாய் அருவி & குகை போன்றவற்றிற்கு சென்று வர அவரின் வண்டியையே அமர்த்திக் கொண்டோம். ஷில்லாங்கிலிருந்து ஸோஹ்ரா 62 கிலோ மீற்றர்கள். தொலைவில் அமைந்துள்ளது. மேற்கண்ட தலங்கள் அனைத்துமே கிழக்கு கசி மலைத் தொடரில் அமைந்துள்ளன.
துவான் சிங் செய்ம் என்ற பாலத்தைக்கடந்துதான் போக வேண்டும். பாலத்துக்கருகில் மலைக் காட்சி. எதிரே நடுவே வலம் இடம் என மலை சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. மனது அந்த சரிவில் போய் அமர்ந்து விட்டது. கதிரவனின் ஒளியில் கரும்பச்சை இளம் பச்சையும் ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக நின்று பரஸ்பரம் பார்த்துக்க கொண்டிருந்தன. ஒன்று பலவாகி ஒன்றையொன்று அறிந்து மீண்டும் ஒன்றாகும் முடிவற்ற முயற்சி. மலைகளின் அருவமான முயக்க மொழியின் மிக வலுவான விசையில் இழுபட்ட புலன்களின் குவி மையம் தன்னைத்தானே முழுவதுமாக கரைத்துக் கொண்டது. கரைந்த மனம் கண்களின் வழியாக பொங்கியது.
வஹ் சுபா அருவிக்கு போகும் வழியில் பலகை அடித்த பெட்டிக்கடைகள். கசி மொழி மட்டுமே அறிந்த முதியவர். கீறித் திறந்துவிட்ட கண்கள். இனிப்பு பணியாரமும் ஆவி பறக்கும் தேநீரும் தந்தார். உடலுக்குள் உண்டான இள வெப்பம் உற்சாகமனித்தது. பொதுவாக அருவிகளை ஒற்றை தோட்டத்தில் சுருட்டி நம் புலன்களுக்குள் கொண்டு போய் வைக்க இயலாது. காரணம் எல்லாப்பக்கங்களிலும் அது பேருரு கொண்டு நிற்கும். இதை ஒரு குழந்தை அருவி என சொல்லலாம். குட்டி மீன்களும் பச்சைப்பாசியும் கலந்த மலை மேல் குட்டையிலிருந்து நீரானது நம் கால் பாதங்களின் கீழாக நழுவி புன்னகை போல சிதறுகின்றது. நம் வீட்டு ஏணிப்படிகளில் நீர் ஒழுகி வருவது போன்ற உணர்வு.
"மேகாலயா" என்றால் மேகங்களின் இருப்பிடம் என்று பொருள். உண்மையில் இது மேகங்களின் நாடுதான். ஸோஹ்ராவிற்கு வந்து சேர்ந்தோம். தென் மேற்கு பருவ காலத்தின் விளைவாக உலகிலேயே மிகக் கூடுதலான மழை பொழியும் இடமாக ஸோஹ்ரா அறியப்பட்டாலும் உண்மையில் அதற்கு இரண்டாம் இடம்தான். பொதுவாக நீர்வீழ்ச்சிகள், பன்மய உயிரிகளின் இருப்பிடம் ஸோஹ்ரா எனச் சொல்கிறார்கள். நீர் வீழ்ச்சிகளை பார்க்க முடித்தது. ஆனால் பன்மய உயிரிக்கு அடையாளமாக ஒன்றையும் பார்க்க முடியவில்லை. ஸோஹ்ராவிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மவ்ஸின்ராம் என்ற இடத்திற்குத்தான் முதலிடம் மவ்ஸீன்ராமில் வருடத்திற்கு கிட்டதட்ட 12,000 மில்லி மீற்றரும் ஸோஹ்ராவில் கிட்டதட்ட 11,500 மில்லி மீற்றரும் பெய்கின்றன. ஆனால் மழையல்லாத காலங்களில் மவ்ஸின்ராமில் வறட்சிதான் என்கின்றனர். மலைப்பகுதியாக இருப்பதால் மழை நீரை சேமிக்கும் வழிவகை இல்லை போலும்.
எங்கள் வண்டியின் ஓட்டுனர் ஹுஸைன், "பெஹ்லா ஜோய்ஸா பாரிஸ் இதோர் நஹீ கிர்ரா பாய் (முன் போல் இங்கு மழை பெய்வதில்லை) என பெங்காலி உச்சரிப்பிலான ஹிந்தியில் சொன்னார். தெருவின் இரு விளிம்புகளையும் அடைத்துக்கொண்டு வீட்டின் மடையையும் தொட்டுக்கொண்டு ஓடும் மழைப் பொழிவை ஊரில் இளம்பருவத்தில் பார்த்ததுதான். பல வருடங்களாகவே ஒவ்வொரு மழைக்காலத்திலும் மண் வாசனை அடிக்கும். மேகங்கள் கறுத்து உருண்டு திரண்டு வரும். ஆனால் மழை பெய்யாது. சுட்டெரிக்கும் வெயில் தாம்பாளத்தில்தான் ஊர் காய்கிறது. ஏதாவது புயல், காற்றழுத்த தாழ்வு உயர்வு என வந்தால் ஒழிய ஊரானது கிட்டதட்ட மழை மறைவு பிராந்தியமாகவே மாறி விட்டது.
மழைக்குள் வசிக்கும் மழைத்துளி போல ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு ஊர் அடர் மழைக்குள்ளும் இயல்பாக இயங்குமாம். மழைக்குள் இருப்பதற்காகவே ஒவ்வொரு வருடமும் கேரளத்திற்கு காரில் பயணிக்கும் இலக்கிய குழுக்களும் உண்டு. சோஹ்ராவில் மலையை ஒட்டிய ஒரு வெண் மணல் திடலில் தொழுதோம். நிறைவு செய்யும் தருணத்தில் குழந்தைகள் எறியும் கோலிக்காய்களைப்போல பருத்த மழைத்துளி தொழுகை விரிப்பில் சடசடவென விழுந்தது. ஓடிப்போய் வண்டியில் ஏறிக் கொண்டோம்.
கொஞ்ச நேரத்தில் உன்மத்தம் கொண்ட நடன மங்கையாக வெள்ளுடுப்பில் வந்த மழை ஆடத் தொடங்கியது. மேகத்தில் நின்றிருந்த கொழுத்த பகவின் பருத்த காம்புகளிலிருந்து பீய்ச்சிய பால் சரடாய் இறங்கிக் கொண்டிருந்தது. என் நனவிலியில் ஒட்டிக்கிடந்த மழைக்கான ஏக்கம் ஈரத்தில் ஆழ்ந்து தோய்ந்து கிடந்தது. பொதுவாகவே வடகிழக்கில் கூடுதலாக மழை பொழிவதால் வீடுகளை அதற்கேற்பவே அமைத்துள்ளனர். நான்கு கம்பை நட்டு அதன் மேல் மரப்பலகைகள் அமைத்து மூங்கில் படல், தகரம், ஒட்டுப்பலகை போன்ற ஏதாவது ஒன்றினால் பக்கவாட்டு சுவர்களை அமைக்கின்றனர். கூரைக்கு தகரம் போடுகின்றனர். மிகச்சில இடங்களில் மட்டுமே காங்கிரீட் வீடுகளை பார்க்க முடிகிறது.
இந்த மாதிரி வீடுகளினால் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதில்லை. மழை நீர் தேக்கம், வெள்ளத்தினாலும் வீடுகள் பாதிக்கப்படுவதில்லை. வடகிழக்கு மக்கள் எளிய வறிய வாழ்க்கை உடையவர்கள். அதனால் வீட்டில் கனமான தளவாடங்கள் இருப்பதில்லை, எனவே பலகை தளங்கொண்ட வீடுகளின் தாங்கும் திறனைப் பற்றி கூடுதல் கவலை கொள்ள வேண்டியதில்லை.
வடகிழக்கின் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் மியான்மர் வரையிலும் இம்மாதிரி வீடுகளையே அமைக்கின்றனர்.
லோஹ்ராவில் மற்றொரு முக்கியமான இடமான மவ்ஸ்மாய் குகைகளுக்கு சென்றோம். போகிற வழியில் அருவிகள் இருந்தன. பழுப்பேறிய செங்குத்து பாறை உயரத்திலிருந்து மலை பாய்ச்சும் வெண் நுரை உயிர் நீர் வழிந்திறங்கி பாறைத்தளத்திற்கும் செடி கொடிகளுக்கும் நடுவே தன்னை ஒளித்துக் கொண்டது. எதிர்திசை மலையைச் சுட்டிக்காட்டி பங்ளாதேஷ் என்றார்கள். தலைக்குப் பத்து ரூபாய்கள் வாங்கிக்கொண்டு பைனாகுலர் தந்தான் அங்குள்ள சிறுவன். வெறுங்கண்ணால் பார்ப்பதற்கு மேலாக அது எதையும் காட்டிடவில்லை. பார்த்துப் பார்த்து தேய்ந்து திப்பிலியாகியிருக்கும் போல.
மவ்ஸ்மாயில் புதிய குகை பழைய குகை என இரண்டு உள்ளது. பழைய குகையினுள் மட்டுமே மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய குகை ஆய்வாளர்களுக்குரியது. அதனுள் சுற்றுலாப்பயணிகள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்புப்பலகை சொல்லியது. குகைக்குச் செல்ல கட்டணம் வாங்குகிறார்கள். இந்த குகைகள் சுண்ணாம்பு பாறையினால் ஆனவை. வாய் பிளந்து சோம்பல் முறிக்கும் மலை யானையின் வாய்க்குள் சென்றோம். உள்ளே போன நடுத்தர வயது ஆணும் பெண்ணும் ஒரு வகையான விலகல் முகத்துடன் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் எனக்கும் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனது ஆகட்டும் என நுழைந்துவிட்டேன்.
மண் அடுக்குகளிலிலும் தாவர வேர்களிலிலும் சேமிக்கப் பட்டிருக்கும் மழை நீர் குகையின் முகட்டி லிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் கசிந்து சொட்டி தரையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகத் தேங்கியிருக்கிறது. உருளைக்கிழங்கு வடிவில் வழு வழு கற்கள். கூர்மையான பாறை விளிம்புகள் தலைக்கு மேலே பாயின் கூர் முனைகள். பளிக்கட்டியில் செய்த பரட்டைக் கத்திகள் போல தொங்கும் பாறைக்கூம்புகள். ஆங்காங்கே தலையை இடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
விரிந்த குகை வாய் ஒரு திருப்பத்தில் ரகசிய அறை போல மாறுகிறது. கதிரொளி முழுக்க இல்லாமலால் மின்னொலி மட்டுமே வழிகாட்டுகின்றது உள்ளே சென்றால். காலப்பெட்டகத்திற்குள் சிக்கினது போல பிரமை பழுப்பேறிய பாறைச் சுவர்கள். பெருங்கட்டிகள் கொண்ட உடல் போல் குகையின் உட்புற மடிப்புகள், பெருங்குகை சட்டென சிறு புழையாக சுருங்குகிறது. உடலை மூன்றாய் மடித்து மூச்சடக்கி புழைக்குள் புகுத்தி அடுத்த குகைக் கூடத்திற்குள் நுழைய வேண்டும். உள்ளே படமெடுத்த நாகத்தோற்றத்தில் இரண்டு பாறை செதுக்குகள்.
சிறுவயதில் சிறார் சித்திரக்கதைகளை வாசிக்கும்போது தாவரங்களின் வேர்களுக்குள்ளூம். இலைகளுக்குள்ளும் நம்மால் போய் இருக்க முடிந்தால். என்ற ரீதியில் மனது கழன்று மிதக்கும். அந்தக்கதைகள் நமது மன உலகில் கட்டி எழுப்பும் மாய உலகின் வாசம் தரும் கிறக்கமானது இந்த வயதிலும் நம்மை மிதக்கத்தான் வைக்கிறது. நெட்டையான வலுவான மரங்கள், செடி கொடிகளின் வேர்களுக்குக் கீழான உண்மையான பாதாள உலகத்திற்குள் உயிர்ப்புள்ள கல்லறைக்குள் பூமியின் வயிற்றுக்குள் இருக்கிறோம். என்ற பரவசமும் குகை தரும் திகிலும் எல்லா புலன்களையும் நிறைத்தது.
அடுத்து நோஹ் கா லிகா அருவிக்கு போகும் வழியில் மதிய உணவிற்கு நிறுத்தினோம். உணவகம் தூய்மையாகவும் அழகாகவும் இருந்தது. பணிப்பெண்கள் குள்ள மனுசிகள். கறுகறுப்பாக எறும்புகளைப்போல குறுக்கும் நெடுக்குமாக உலாவினர். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் புன்னகை மாறாத சேவை. கசி மரபு மரக்கறி உணவு. இளிப்பு புளிப்பு கலந்த வெஞ்சனம். நல்ல சுவை.ஸோஹ்ராவில் அங்குலக் கணக்கில் மழை பெய்தாலும் வெயில் 38 பாகை வரை செல்கிறது. பயணித்துக் கொண்டிருக்கும் போது பல இடங்களில் எந்த ஒரு மரமும் இல்லாமல் லேசாக புல் படர்த்த கட்டாந்தரை பகுதிகள் நிறைய தென்பட்டன. சிறு சிறு தாவரங்களைத்தவிர வேறொன்றும் இல்லை. டிப்பர் லாரிகள் ஆங்காங்கே தென்பட்டன. சிறு கருங்குன்றுகள் இவையனைத்தும் நிலக்கரி வயல்கள்.
மேகாலயாவின் நிலக்கரி இருப்பு பல மில்லியன் டன்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே அகழத் தொடங்கி விட்டார்களாம். நாட்டின் மொத்த நிலக்கரி வளத்தின் 0.2 சதவிகிதம் இங்கிருக்கிறதாம். மக்களின் வாழ்வாதாரத்தில் நிலக்கரி தலையாய பங்கு வகிக்கின்றது. நீரும் நெருப்பும் ஒரே துறையில் சேர்ந்து அருந்தும் மேகாலயாவிற்கு துணைப்பெயராக கரியாலயா என பின்னர் யாராவது சூட்டக்கூடும். ஸோஹ்ராவில் உள்ள நோஹ் காலிகா அருவிக்கு நாங்கள் போன சமயம் பார்த்து கடுமையான மேக மூட்டம். ஏமாற்றமாக இருந்தது.
நோஹ் காலிகா அருவிக்கு அந்த பெயரானது வந்த காரணத்தை பலகையில் எழுதி வைத்திருக் கிறார்கள். காலிகா என்ற பெண்ணொருத்திக்கு முதல் திருமணம் முடிந்து அதன் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. காலிகாவை இரண்டாவதாக மண முடித்த கணவன் அந்த பெண் குழந்தையை வெறுத்தான். ஒரு நாள் காலிகா வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சமயம் கணவன் உணவை சமைத்து வைத்திருந்தான். அதைப் பார்த்து வியப்படைந்த காலிகா ஐயங் கொள்ளாமல் உணவருந்தினாள். பின்னர் பாக்கு கொட்டை கூடைக்குள் கணவனால் கொல்லப்பட்ட தனது மகளின் கைவிரல்களை கண்டுபிடித்தான். மனத்துயரில் உள்ளம் உலைந்து போன காலிகா அருகிலுள்ள செங்குத்தான பாறைக்கு சென்று அருவிக்குள் பாய்ந்து தன்னை முடித்துக் கொண்டாள். அன்றிலிருந்து காவிகாவின் பாய்ச்சல் எனப் பொருள் படும்படியாக நோஹ் காலிகா அருவி என அழைக்கப்படலாயிற்று,
மேக மூட்டம் கடுமையாக இருந்தது. மொத்த வானத்தையும் பள்ளத்தாக்கிற்குள் இறக்கி நிறைத்தாற் போல வெண் குவியல், மழை தூறிக் கொண்டிருந்தது. சாலை தடுப்பின் விளிம்பு வரை சென்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞியை அவருடன் வந்த முதியவர் பதட்டத்துடன் திட்டிக் கொண்டிருந்தார். அதைப்பற்றி அந்த கேமிராப்பெண் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இயங்கிக் கொண்டிருந்தார்.
குஜராத்தி சாயலுள்ள ஆட்கள், அங்கு வரிசையாக கடைகள் இருந்தன. ஸோஹ்ரா கருவாப்பட்டைக்கு பெயர் பெற்ற இடம் போலும். இரண்டு முதிய பெண்கள் கருவாப்பட்டையை சீவிக் கொண்டிருந்தனர். கருட்டப்பட்ட தோல் போல குச்சியாக கட்டி வைத்திருந்தனர். கருவா பட்டையுடன் அக்கடைகளில் வாழைப்பழம், தேன், பழச்சாறு, ஊறுகாய், நொறுக்குத்தீனிகள், கைவினைப்பொருட்கள் போன்றவை விற்பனைக்கிருந்தன. இந்தக்கடைகளில் முழுக்க முழுக்க இளம் பெண்கனே இருந்தனர்.
மாணவி போல் தோற்றமளித்த கடை உரிமையாளரான இனைஞியிடம் பேசிக்கொண்டிருந்தபோது நீங்களெல்லாம் எத்தனை வயதில் திருமணம் முடிப்பீர்கள் ? எனக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே பின்பக்கம் திரும்பி ஏதோ பெயரைக் கூப்பிட்டார். கூட்டுக்குள்ளிருந்து குருவி கிளம்புவது போல இரட்டைக் குழந்தைகள் குடிலின் பக்கவாட்டிலிருந்து எங்கள் முன் வந்து நின்றனர். அங்கெல்லாம் பருவத்துடன் காதலும் சேர்த்தே வருவதால்! திருமண தாமதம் என்ற பேச்செல்லாம் இல்லை போலும்.
மேக மூட்டம் விலகாததால் நான் அங்குள்ள ஒரு திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், பூனை ஒன்று அரைக்குரலில் மியாவிக் கொண்டிருந்தது. மெல்ல என்னருகில் வந்து தன் மென் மயிர் வயிற்றை என் மேல் உராய்ந்தது. பிறகு தரையில் ஆணி அடித்தாற்போல நான்கு கால்களையும் அகல விரித்து கொஞ்ச நேரம் சலனமற்றுக் கிடந்தது. பிறகு அங்குமிங்கும் உருளத் தொடங்கியது. பூனைக்கு மண்டைக்குள் இளகி விட்டதோ என்ற ஐயம் கிளம்பியது.
அதற்குள் ஸுலைமானும் ஷரஃபுத்தீனும் அருவியைப் பார்த்து விட்டோம் என வந்து சொன்னார்கள். ஆனால் பனி மூட்டம் அப்படியேதான் இருந்தது. அந்த சாலையிலேயே கொஞ்ச தொலைவு நடந்து சென்றால் பள்ளத்தாக்கிற்குள் இறங்கும் வகையில் படிக்கட்டுகளை அமைத்திருக்கின்றனர். ஸுலைமான் முன்னூற்றைம்பது படிகள் வரைக்கும் சென்று பார்த்திருக்கிறான். இன்னும் நூற்றைம்பது படிகளாவது இருக்கும் என சொன்னான். என் முட்டியை நினைத்து நடையை ஐம்பது படிகள் வரைக்கும் போவோம் என முடிவு செய்து கொண்டேன். இருபது படிகள் இறங்கினவுடனேயே அருவி தென்படத் தொடங்கியது.
மேகத்தை நிலத்தில் பிணைத்து வைத்திருக்கும் வெள்ளைக் கயிற்றைப் போல அந்தரத்திலிருந்து பசுந்தடாகத்திற்குள் விழுந்து கொண்டிருந்தது, தன்னழிப்பின் வழியாக கணவனின் தவறை காலிகா தண்டித்ததினால் என்னவோ அம்புக்கூர்மையுடன் அருவிநீர் கொட்டியது.
- மேலும்
Comments