பாரதியாரின் மனைவி செல்லமாள் எழுதிய இந்தப் பயணக்கட்டுரை, 1920 இல் (பாரதி காலமான இரண்டு மாதத்தில்) சுதேசமித்திரனின் "கத மாலிகா" என்ற நூலில் வெளியானது.
பாபநாசம் அருவி, தாமஸ் டேனியல் என்ற ஆங்கில ஓவியர் 1792இல் வரைந்த ஓவியம் (நன்றி :Rarebooksociety)
"மேகத்தனிமையில் உலாவியபடி ஆயிரம் மஞ்சள் டாஃபோடில் மலர்களைக் கண்ட கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எய்த இன்ப மதுரத்தை ஒருதுளியேனும் இங்கே வந்தால் அடையமுடியும். "
கிட்டண்ணாபட்ட துயரம்
அந்த கோவில் ஸ்வாமியின் பெயர் சொரிமுத்தையன். அவர் சாஸ்தா உக்ரமூர்த்தி வரப்ரசாதி. கோயிலுக்கு நாங்கள் சென்றபோது அங்கே கூட்டம் இமைக்கமுடியாது. வில்லடிச்சான் பாட்டுகளும் சாமி ஆட்டங்களும் மிக நேர்த்தியாக இருக்கும்.
கூட்டத்தை கடந்து போக மாட்டாமல் அங்கு நதிக்கரை வழியே இறங்கி போனோம். சிறிது தூரம் சென்றால் அங்கே இப்பால் நதி, அப்பால் பெரிய பெரிய தோப்புகளும் குன்றுகளும் அவ்விடத்து நதியில் கன்னங்கரேல் என்று எண்ணெய் போலே ஜலம் தங்கலாயிற்று. அது திருநீலகண்டன் கயம். அதன் ஆழத்தை யாரும் கண்டு பிடித்தவரே கிடையாதென்று சொல்லுவதுண்டு.
வேறு கதியில்லாதவர்கள் அந்த வட்டத்தில்: " திருநீல கண்டன் , கயத்திலே போய் முழுகி இறந்துபோவோம் " என்று சொல்லுவார்கள்.
அதற்க்கப்புறம் சிங்கம்பட்டி ஜமீன்தாருடைய பங்களா . அதற்கப்பால் சற்று தூரம் சென்றால் அங்கு ஸ்நானபானங்களுக்கு வசதி இருப்பது கண்டு நதியில் ஸ்நானம் செய்து, யோசனை பண்ணினோம்.
பிதா சொன்னார் : " இப்போது மணி பதினொன்று. புல்லுப் புரைக்கு போனால் சமையல் பண்ண இடம் கிடைக்காது இங்கே சமையல் போஜனம் நடத்தி மாலை நாலு மணிக்கு புறப்பட்டு புல்லுப் புரைக்குப் போவோம்" என்றார்.
அம்மா சமையல் பண்ணத் துவங்கினாள். கிட்டண்ணா எங்கிருந்தோ ஒரு பெரிய கட்டையைக் கொண்டுவந்தார். இரண்டோரத்தையும் இரண்டு கல்லின் மேல் வைத்தார். அந்தக் கட்டையை ஒடிக்கும் பொருட்டாக, அந்தக் கல்லை தொப்பென்று போட்டார்.
கல் கட்டை மேல் படவில்லை. அவர் காலிலேயே விழுந்தது. பலமான காயம் ! அவர் அங்கிருந்து துள்ளிப் போய் ஒரு பாறையிலே உட்கார்ந்தார். பிதா ஓடிப்போய் தம்முடைய வேஷ்டியைக் கிழித்து ஜலத்தில் தோய்த்துக் காட்டினார் ஆற்றங்கரையெல்லாம் இரத்தம் . வேஷ்டியெல்லாம் இரத்தம் ! நடுக்காட்டில் என்ன செய்வது ?
பிதா சொன்னார் : நீங்களெல்லோரும் இங்கிருங்கள் நான் அம்பாசமுத்திரத்துக்குப் போய் மருந்து வாங்கிக் கொண்டு வருகிறேன்" என்றார். கிட்டண்ணா" நான் நடந்து வர மாட்டுவேன் " என்றார். ஜலத்துக்குள்ளே காலை வைத்து கொண்டு " முருகா முருகா என்று கூவினார். கிட்டண்ணாவுக்கு முருகன் பக்தியுண்டு. அம்மா சமையல் பண்ணி முடித்தாள். எல்லாரும் போஜனம் செய்தோம்.
அம்மா சில பச்சிலைகளைப் பறித்துக் கொண்டுவந்து அரைத்துக் கொடுத்தாள் . அதை வாங்கி அப்பா கிட்டண்ணா காலில் காட்டினார். கிட்டண்ணா நடந்து வரலானான். புல்லுப்புரைக்கு போய்ச் சேர்ந்தோம்.
புல்லுப் புரை
வரிசை வரிசையாக குடிசைகள். இந்த யாத்திரை உபயோகத்துக்கு மாத்திரமென்று வனத்தில் பணக்காரர் செய்வித்தனர். மைதானத்தில் ஜனங்கள் குடியிருந்தார்கள். எங்களுக்கு ஒரு வண்டி நிழல் கிடைத்தது. அங்கே நாட்டுக்கோட்டை செட்டியார் வந்தவர்களுக்கெல்லாம் போஜனம் செய்விக்கிறார். பந்துக்கள் சந்தித்து ஹோ ஹோ என்று கத்துகிறார்கள்., அழுகிறார்கள் , சிரிக்கிறார்கள்.
ராத்திரி மணி ஏழாகிவிட்டது கிட்டண்ணாக்கு கால் நோவு பொறுக்க முடியவில்லை. விண் விண் என்று தெரிகிறது.
ஜபித்துக் கொண்டு கத்துகிறான் - " புல்லுக் குடிசை காலிலே தீயைக் கொளுத்துவேன் அண்ணா! நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரத்தில் போய் சாப்புடுவேன் அண்ணா! என்று கூவுவார்.
நாங்கள் நகைப்போம். பாதிராத்திரி வரையில் ஜனங்கள் வந்து கொண்டேயிருந்தனர். நாங்கள் தூங்கவேயில்லை .
அதற்கு முன், விசைக்கு விசை, அந்த கூட்டத்துக்கு விளக்கே கிடையாதாம். எல்லாரும் இருளிலே குவிந்து கிடப்பார்களாம். சிலர் லாந்தல் கொண்டு வருவார்களாம். மழையானால் ஒருபுறம் கொட்டுமாம்.
சிலர் வண்டிக்குள்ளும் , சிலர் வண்டியடியிலும் உட்கார்ந்திருப்பார்களாம். இந்த தடவை, அத்தனை கஷ்டமில்லை. தீவட்டி ( காஸ் லயிட் ) போட்டிருந்தது. இடம் கட்டிக் கொண்டிருப்போர் தப்பித் தவறி யாரேனும் ஒதுங்கிப்போனால் வரக்கூடாந்தென்று சொல்லுவார்கள் . அவரபன்மார் வீடு ஆஸ்தி போலே அதைக் குறியாமல் அங்கே சற்று நின்றால் பணியாளரை விட்டுத் துரத்துவார்கள். இந்த வேடிக்கையல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். விடிய ஜாமம் ஆகிவிட்டது. ஜனமெல்லாம் குளிக்கப் புறப்பட்டது. நாங்களும் புறப்பட்டோம்.
கிட்டண்ணாவைப் பார்த்து: - கால் நடக்க முடியாது. இந்தக் கூட்டத்தில் போவது நிரம்ப கஷ்டம், யாரவது காலை மிதித்து விடுவார்கள். இன்னும் மூன்று மலை ஏற வேண்டும். நீ வர வேண்டாம். இந்த வண்டியில்தானேயிரு. நாங்கள் மாத்திரம் வாண தீர்த்தம் சென்று ஸ்நானம் பண்ணி விட்டு வருகிறோம் " என்று ஆனமட்டும் சொன்னோம் .
அதற்கவர்: " இவ்வளவு தூரம் வந்துவிட்டு இனிக் குளிக்காமல் போக மாட்டேன். அங்கெல்லாம் நடக்கிற வேடிக்கை பார்க்க வேண்டும். எனக்கு கூட்டத்தில் வருவது கஷ்டமாய் இராது . காலும் வலிக்கவில்லை " என்று சொல்லி அவரும் புறப்பட்டார். எங்களுடன் வந்த பந்துகளும் நாங்களும் காலை நாலுமணிக்கு புல்லுப்புரை என்ற இடத்தில எங்கள் வண்டியில் சாமான்களை வைத்துவிட்டு புறப்பட்டோம்.
இப்போது மண்மலை
நல்ல களிமண் நாம் ஓரிடத்தில் காலைவைத்தால் அதுஓரிடத்துக்கு இழுத்துக்கொண்டு போகிறது. ஜனங்கள் இரண்டு மணிக்கே போய் குளித்து விட்டு எதிரே வருகிற கூட்டம் சொல்லி முடியாது. இரண்டு பக்கமும் சில இடத்தில மலைகளும் சில இடத்தில பள்ளங்களுமாக இருக்கும். கொஞ்சம் தவறினால் ஆளைக் காண முடியாது. அதற்கு நடுவிலே கூடி இரண்டால் போகும்படி பாதை வெட்டி விட்டிருக்கிறது. இவ்விடத்தில் மரங்களை வெட்டிப் படி மாதிரி போட்டிருக்கிறது. ஜனங்கள் குளித்துவிட்டு துணிகளை பிழிந்து கட்டாமல் சொட்டச் சொட்ட வருவதனால் வழியெல்லாம் ஜலம். ஜலமும் களிமண்ணும் சேர்ந்தால் என்னாகும் முட்டு வரைக்கும் சேற்றின் மலை ஏற வேண்டும் அனால் ஒரு சௌக்கியம். நாமாக ஏறவேண்டியதில்லை.
பின்னே வருவோர் முன்னே போவோரை இடித்திடித்து தள்ளிக்கொண்டே போவார்கள். அவர்கள் இடிக்கும் போது நாம் சிரமப்படாமல் மடமடவென்று தள்ளிக் கொண்டே போகும். இந்த கூட்டத்தில் போதல் அதுவொரு சுகம். இப்படியாக காலை ஏழு மணி வரைக்கும் நடந்து போனோம். கிட்டண்ணாவும் எப்படியோ காலை ஒருவரும் மிதிக்காமல் இந்தச் சேற்றில் நடந்து கொண்டே வந்தார். ஒரு மட்டிலும் வாண தீர்த்தம் போய்ச் சேர்ந்தோம்.
வாண தீர்த்தம்
கூட்டமோ கழுத்தை நெரிக்கிறது . அங்கொரு பெரிய தடாகம். மலையிலிருந்து அருவி அந்த தடாகத்தில் விழுகிறது. அந்த தடாகத்தில்தான் குளிக்க வேண்டும். அதில் இறங்கப் படி கெடையாது. நாலு பக்கத்திலும் மலை. நடுவில் இந்தத் தடாகம் இருக்கிறது. தடாகத்தில் இறங்க ஒருபக்கத்து மலையைச் சரிவர வெட்டி விட்டிருக்கிறார்கள். ஒரு பாறைமேல் வைதிக ப்ராஹ்மணர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு வாத்தியாரிடம் சங்கற்பம் சொல்லிக்கொண்டு குளிக்க இறங்கினோம். எனக்குப் பெரிய ஆற்றிலும் பெரிய குளத்திலும் குளிக்கப் பயம் . இந்தத் தடாகத்தில் இறங்கினால் கூட்டம் நம்மை ஜலத்தில் தள்ளிவிடும். கிட்டண்ணாவுக்கும் காலில் பட்டிருக்குகிறது. அவர் இருந்தாலும் தைரியமாகவிருக்கும் என்ன செய்வது ? இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து குளிக்காமல் போக மனது வரவில்லை. அம்மா கையை பிடித்துக் கொண்டு படியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டேன். எனக்கு இவ்வளவு போதும் என்று சொல்லி ஒரு பாறையில் ஏறி நின்று கொண்டிருந்தேன் .
எல்லோரும் குளித்தாய் விட்டது. அப்போது கிட்டண்ணா சொன்னார்: - எவ்வளவு தூரம் வந்து அருவியில் குளிக்காமல் போகக் கூடாது. இப்போது கூட்டம் அங்கே அதிகமில்லை நானும் வருகிறேன் போவோம் " என்றார். எல்லோரும் சரியென்றார்கள். நான் மாத்திரம் வரமாட்டேன் என்றேன். அதற்கவர் - " பயப்படாதே நான் உன்னை பத்திரமாக கூட்டிக் கொண்டு போகிறேன். அவனுக்கு காலில் பட்டிருக்கிறது, நாம் ஒரு வேளை தவறி விழுந்து விட்டால் என்ன செய்வதென்று யோசிக்காதே" என்றார்.
என்ன செய்வது? நானும் கூடப்போனேன். அருவிக்கு போகிற வழி மிகவும் சிறியது. அது எதிர் கரையிலிருக்கிறது. நாங்கள் ஒரு பாறையின் மேல் இருந்தோம். கூட்டம் நிரம்ப அதிகமாயிருந்தது. அருவிக்கு வரும் வழியில் இடது பக்கம் மலை, வலது பக்கம் அந்தத் தடாகம்.
இடது பக்கத்துக்கு மலையில் பெரிய இரும்பு கம்பிகளை நட்டு ஜனங்கள் தவறி விழுந்தால் பிடித்துக் கொள்ள ஒரு சங்கிலி நெடுகப் போடப்பட்டிருந்தது. நாங்கள் பாறையிலிருந்து ஒரு பனை பிரமாணம் கீழே இறங்கி அந்தச் சங்கிலியை பிடித்துக்கொண்டு போகிறோம். போகும் பொது முன்னும் பின்னும் நடக்கும் ஜனங்கள் சங்கிலியிலிருந்து எங்கள் கையைத் தள்ளுகிற அவஸ்தை பொறுக்க முடியவில்லை. சங்கிலியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு போனோம், ஒரு கையைப் பிடுங்கினால் மற்றொரு கையால் பிடித்துக்கொள்ளும் பொருட்டாக.
எல்லாரும் அருவி போய்ச் சேர்ந்தோம். அருவியில் தலை கொடுத்தோம். சரி திரும்புவோமென்று புறப்பட்டடோம். ஒரு பட்டுநூல்க்கார கூட்டம் எதிரே வந்தது. அதனால் என்னுடன் வந்த பந்துகள் எல்லாரும் பிரிந்துபோய் முன்னே பாறையில் ஏறிக்கொண்டார்கள். நான் மாத்திரம் அந்த கூட்டத்தை எதிர்க்க முடியாமல் சங்கிலியை இரண்டு கையாளும் பிடித்துக் கொண்டு அருவி பக்கத்தில் நின்று, " அப்பா !" என்று அலறினேன். என்ன செய்வது ? நாலு பக்கத்திலும் சுற்றிச்சுற்றிப் பார்த்தேன். ஒரு பாறை மேல் ஏறிக்கொண்டு கிட்டண்ணா என்னைப் பார்த்தார். பார்த்தவுடன், " பயப்படாதே ! நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். கையை மாத்திரம் விட்டு விடாதே, கெட்டியாகப் பிடித்துக்கொள் . எதிரே வருகிற கூட்டம் போனவுடன் மெல்ல வா " என்றார். சரியென்று அங்கேயே நின்றேன். எதிரே வரும் கூட்டம் போனதும் கொஞ்சம் நல்ல வழி கிடைத்தது. மெல்லப் பாறையில் ஏறி அவர்களுடன் சேர்ந்துகொண்டேன்.
திரும்பி வருகிறோம்
இடுப்பில் ஈரத்துணி பிழிந்துகூடக் கட்டவில்லை. பனிகட்டி மாதிரி ஜில்லென்ற ஜலத்தில் குளித்துவிட்டு வருகிறோம். எனக்கு காது ஒரு பக்கம் குத்துகிறது. இதோடு அந்த சேறெல்லாம் தாண்டி நாங்கள் ஒதுங்கியிருந்த வண்டியடிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே சமையல் பண்ண இடமில்லை யாதலால் புல்லுப் புரையை விட்டு முதல் நாள் சமையல் செய்த இடத்துக்கு வந்தோம். மணி எட்டோ ஒன்பதோ ஆகியிருந்தது. எனக்குப் பசியும், தலை நோயும், காதுகுத்து வந்து விட்டன. அந்த இடத்தில ஒரு பெரிய பாறையிருந்தது . அதன் மேலே போய்ப் படுத்து கொண்டேன். அப்பா வந்து பார்த்தார். '
"அப்போதே சொன்னெனே, உன்னால் முடியாது. கஷ்டமாக இருக்குமென்று, நீ என்னவோ வாணதீர்த்தம்தானே என்று நினைத்தாய். உனக்கென்ன செய்கிறது? தலை வலிக்கிறதா?" என்றார் .
"ஆமாம் " என்றேன்.
" சரி கொஞ்சம் பொறு நான் காபி போட்டுகொண்டு வருகிறேன். அதை குடித்தால் தலைவலி தீர்ந்து போகும் !" என்று சொல்லி விட்டுபி போய் கொஞ்சம் காபி வைத்து கொண்டு வந்தார். சாப்பிட்டேன். அப்படியே படுத்துக் கொண்டிருந்தேன். மணி பதினொன்றாகி விட்டது. கொஞ்சம் தலைவலியும் விட்டது. எல்லாரும் ஒரு கூட்டமாகச் சமைத்தார்கள்.
நாங்களிருந்த இடம் மிகுந்த அழகுடையது. நாலைந்து பெரிய மரங்கள். அதற்கடியில் ஒரு பெரிய பாறை. பாறை பக்கத்தில் பெரிய நதி ஓடுகிறது. நாங்கள் சமையல் செய்து ஆற்றங்கரையில் கொண்டு போய்ச் சாப்பிட்டோம் . மணி இரண்டாய் விட்டது. வீடு சேர்ந்தோம்.
ஜனங்களெல்லாம் எனக்கு முந்தி, உனக்கு முந்தி என்று தத்தம் ஊருக்குப் புறப்பட்டனர். நாங்களும் புறப்பட்டோம். கிட்டண்ணாவின் காலில் இன்னும் இரத்தம் வந்துகொண்டுதான் இருந்தது . எங்கள் பந்துக்கள் வண்டி கொண்டு வந்திருந்தார்கள். அதில் கிட்டகிட்டண்ணாவைப் போகச் சொல்லிவிட்டு நானும், அப்பாவும், அம்மாவும், புல்லு புரையில் எங்களைப் போகும் போது சந்தித்து குருவி போலேப் பறந்து, வண்டு போலெச் சுற்றி கொண்டு வந்த என்னுடைய பார்த்தாவின் இளைய தாயாராகிய என் மாமியாரும், ஆக நால்வரும் நடந்து ஒற்றையடிப் பாதை வழியாக வருகிறோம். இன்னும் பதினைந்து பேர் எங்களுடன் வருகிறார்கள். எங்களுக்கு வழி தெரியவில்லை. வழி எல்லாம் கழிச்சி மரங்களின் முள் மேலே அப்புகிறது. அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பினால் , முள் செடிகள் தலையைப் பிய்க்கின்றன . புடவையை பிய்க்கின்றன . அனால் ஒரு விஷயம். பாதை குறுக்கும் நெடுக்கும் போகாமல் நேரே போகிறது. நாங்கள் போகும்போது போன பாதை வேறு. இது வேறு. எனக்கு முன்போல காடெல்லாம் சுற்ற நேரிடுமோ என்ற பயம். அப்போதாவது காலை வேளை . இப்போது சாயங்காலம். அமாவாசை இருட்டு. இன்னும் மலை இறங்க வேண்டும். கிட்டண்ணாவும் இல்லை. என்ன செய்வது ?
நடந்து நடந்து கழிச்சி முள் காடெல்லாம் கடந்து வந்தோம். அங்கொரு புல்லாந்தரை. அதிலே ஒருவன் நிறைய இளநீர் வைத்துக் கொண்டிருந்தான். தாகம் ஸஹிக்க முடியவில்லை. எங்களிடம் ஜலம் கிடையாது ஓரணா விதம் கொடுத்து இளநீர் வாங்கிக் குடித்தோம். அதன் பக்கத்திலே தான் மலையிறங்க வேண்டும். மலையிறங்க ஆரம்பித்தோம். என்னால் ஒரு படிக்கூட இறங்க முடியவில்லை. கால் வீங்கிப்போய் விட்டது. உடம்பு கிடுகிடுவென்று பறக்கிறது மேலிருந்து கீழே பார்த்தால் தலை கிறுங்கிறது. மணி ஐந்தாய் விட்டது.
இருட்டதிகமானால் மலையிறங்க முடியாது. கடுவாய் வந்து விடும், புலி வந்து விடும் என்று பிதா சொல்லுவார். என்ன செய்வேன்? அங்கிருந்து ஒரு மரக் கொம்பை அப்பா எனக்கு ஊன்றுகோலாக ஒடித்துக் கொடுத்தார். அதை ஒரு கையால் ஊன்றிக் கொண்டு மற்றொரு கையால் பிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு, மெல்ல மெல்ல கொஞ்சம் இறங்கினேன். பின்பு அப்பா கீழ்ப்படியில் நின்றுகொண்டு என் கையைப் பிடித்து மெல்ல இறக்குவார். இப்படியாக மலையிலிருந்து கீழே இறங்கினோம், மணி எழாய் விட்டது.
மலையிலிருந்து இறங்குவதுதான் நிரம்ப கஷ்டமாக இருந்தது. ரஸ்தாவில் நடக்கக் கொஞ்சம் சௌகர்யமாக இருந்தது. கொஞ்ச தூரம் நடப்பது, கொஞ்ச நாழிகை உட்கார்வது, மறுபடி நடப்பது, இப்படியாக வந்தோம். மாமியார் முந்தியே பறந்தோடிப் போய்விட்டாள். மலைஅடிவாரத்திலேருந்து ரஸ்தா வருகிற வரை நாங்கள் மூன்று பெரும் தனியே வருகிறோம். எங்களுக்கு பயம். எவனாவது வந்து இரண்டடி கொடுத்து கையில் இருக்கிற காசைப் பிடுங்கிக்கொண்டு போனால் என்ன செய்வது? ஏதோ தெய்வக் கிருபையால் அப்படியொன்றும் நேரிடாமல் சௌகரியமாக சத்திரம் வந்து சேர்ந்தோம். சத்திரத்தில் உட்காரக் கூட இடம் கிடைக்கவில்லை. வாசல் திண்ணையில் சாமானை வைத்துக் கொண்டு அம்மா உட்கார்ந்தாள். நானும் அவள் பக்கத்திலே படுத்துக்கொண்டேன். எனக்கு நல்ல ஜ்வரம் அடிக்கிறது. இதற்குள் கிட்டண்ணாவும் மற்ற பந்துகளும் வந்து சேர்ந்தார்கள்.
பிதா: " நீங்கள் இருங்கள் . நான் உள்ளே போய் இடம் பார்த்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். அம்மா சொல்லுகிறாள்: -
" ஏதடா கிட்டா இந்தப் பெண்ணை கூட்டிக் கொண்டு வந்தோம்" ஜ்வரமாணுல அடிக்கிறது. அவரானால் சண்டை போடுகிறார். அவர் வரமாட்டாரென்று நினைத்தேன். குறையும் ஊர்போய்ச் சேரவேண்டுமே ! நான் எதுக்கு வந்தேன்?" என்று என்னைக் குறித்துப் பரிதாபப்பட்டாள் .
கிட்டண்ணா : " நான் உங்களை விட்டுப் பிரிந்து தனியாக வண்டியில் வந்தேனே, அங்கும் அதுக்கெல்லாம் ஒன்றுக்கொன்று சண்டை பிடித்துக்கொண்டே வந்ததுகள் " என்றார் .
"உள்ளே கொஞ்சம் இடம் இருக்கிறது" என்று சொல்லி பிதா ஓடி வந்தார். எல்லாரும் எழுந்து உள்ளே போனோம். எல்ல பாட்டிமார்களும் தோசை வார்ப்பதும் கொழுக்கட்டை பண்ணுவதும் தடபுடலாக இருந்தார்கள். எங்களுடன் வந்தவர்களும் ஏதேதோ செய்து சாப்பிட்டார்கள். நான் மாத்திரம் கொஞ்சம் காபி சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டேன்.
இராத்திரி இரண்டு மணிக்கு ஸ்வாமி புறப்படுகிறது. அனால், அங்கு வீதிகளில்லை. இரண்டு சத்திரங்கள் தானுண்டு. அதனால் ஸ்வாமி கோவிலை மாத்திரம் சுற்றி வருவார். எல்லாரும் ஸ்வாமி பார்க்கப் போகிறார்கள். என்னையும் கூப்பிட்டார்கள்.
நான் ஆனமட்டும் தலையைத் தூக்கித்தூக்கிப் பார்த்தேன். துக்க முடியவில்லை. நான் வரலையென்று சொல்லி விட்டேன். எனக்கு அம்மா மாத்திரம் கூட இருந்தாள் .
மறுநாள் எங்களுடன் வந்தவர்களெல்லாம் கல்யாண தீர்த்தம் போனார்கள். அதற்கும் இப்படித்தான் மலையிறங்கவேண்டும். நான் மறுநாள் எழுந்திருக்கவில்லை. எல்லாரும் துணி யந்திரசாலை போய்ப் பார்ப்பதும் அகஸ்தியர் கோவிலுக்குப் போவதுமாக இருந்தனர். அன்று சமையல் பண்ணி போஜனம் செய்து விட்டு சாயங்காலம் ஒரு வண்டி வைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தோம். சில தினங்கள் கழித்தபின், என் உடம்பு சுகநிலையடைந்தது. வந்தே மாதரம். ஓம் சக்தி துணை, சக்தி காக்க, வாழ்க உலகு, வாழ்க யாவரும்.
- முற்றும்
תגובות