
இந்த வருட தமிழ் புத்தாண்டு தினத்தில், வழி பயண இலக்கிய மின் இதழ் துவங்கபட்டது முதல் இன்றுவரை ஐம்பது நாட்களுக்கும் மேலாக தினமும் உலகின் வெவ்வேறு பகுதியிலிருந்து நம் இதழ் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்த இதழை துவங்கிய நாளில் இது இவ்வளவு பெரிய வாசகர் பரப்பை சென்றுசேரும் என நாங்கள் கணித்திருக்கவில்லை. கைப்பட எழுதி அனுப்பப்பட்ட உணர்வு பூர்வமான கடிதங்களும், நம்பிக்கைதரும் சொற்களும், ஒலிவடிவில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களும் எங்களை வந்து அடைந்த வண்ணம் இருக்கின்றது, தொடர்ந்து செயலாற்ற பெரிய பிராத்தனை குரல்களை கேட்ட வாரே இருக்கின்றோம். வாசகர்களாகிய உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி.
எனக்கு தமிழையும், வாசிப்பையும் அறிமுகம் செய்த அப்பா, அம்மாவிற்கும், என்னை என்றும் அருள் சூழசெய்த என் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும், எல்லா பெருஞ்செயல்களிலும் உடன் நிற்கும் என் அன்பு தோழி நிக்கிதாவிற்கும், மானசீகமாக என்னுடன் பயணிக்கும் என் தம்பிக்கும், பேரன்பின் ஊற்றான குக்கூ சிவராஜ், அகர்மா கௌஷிக் ஆகியோர்க்கும் நன்றி.
வழி இணையதளத்தை துவங்கிய பொழுது இதை மின் இதழாக முன்வைக்க எண்ணவில்லை, மாறாக தமிழில் பயணம் சார்ந்த படைப்புக்கள் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் இணையதளமாக இது இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தேர்ந்தெடுத்து வெளியிடப்படும் படைப்புகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் வாசகர்களுக்கு சரியான கால இடைவெளியில் தரமான படைப்புகள் சென்று சேர வேண்டும் என்பது புரிந்தது. எனவே இனிவரும் நாட்களிலிருந்து இரு மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் மின் இதழாக வழி இருக்கும்.
வழியின் முதல் இதழில் தொன்னூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திரு.வி.க அவர்களின் இலங்கை பயண கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. அந்த கட்டுரை இணையத்தில் எங்குமே வாசிக்க கிடைக்காமல் இருந்தது, இணைய சேகரிப்பில் இருந்த சிறுபத்திரிகை ஒன்றில் அதன் சிறு பகுதி மட்டுமே வாசிக்க கிடைத்தது, முப்பது வருடங்களுக்கு முன் வெளியான தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பாடபுத்தங்களிலும் அந்த கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே வெளியிட பட்டிருந்தது. கூடுதல் முயற்சி செய்து கட்டுரையின் முழு வடிவையும் கண்டுபிடித்து, முன்பு பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களை மாற்றி இன்றைய தலைமுறை வாசிக்கும் வண்ணம், நேர்த்தியான நிழற்படங்களுடன் வெளியிட்டதில் பெரும் நிறைவடைந்தோம். இனி வரும் இதழ்களில் தமிழ் வாசகர்களின் கவனம் பெறாமல் போன பழைய பயண கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்ற திட்டத்தை செயல் படுத்த உள்ளோம். இதன்படி இந்த ஜூன் மாத இதழில், 1919 இல் மகாகவி பாரதியார் எழுதிய "பாபநாசம்" என்ற பயணக்கட்டுரையை வெளியிடுகிறோம்.
வழியின் முதல் இதழில் வெளியான "கானகமும், காயமுனியும்" என்ற பயணக்கட்டுரையில் ஒற்று பிழைகளும், சொற்பிழைகளும் அதிகம் இருந்தது நண்பர்கள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டது, சிரமத்திற்கு வருந்துகிறோம். இனியும் பிழைகள் ஏற்படாமல் இருப்பதற்கு விஷ்ணுபுரம் வாசக வட்ட நண்பர் கவிதா அவர்களின் உதவியுடன் எல்லா பதிவுகளையும் நுணுக்கமாக வாசித்து பிழைகளைந்து வருகிறோம்.
இந்த இதழில் பயணத்தின் மீது அளவற்ற நேசம் கொண்ட எழுத்தாளர் சுபஸ்ரீ அவர்களின் ஹிமாச்சல பிரதேச பயண கட்டுரையான "பனிக்குள் உறைந்திருக்கும் ஆத்மா" வெளியாகிறது. தமிழில் மிக நுட்பமாக எழுதப்பட்ட பயண கட்டுரை இது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த கட்டுரையில், பயணியாக இவர் அடைந்த அனுபவமும், ஆன்மீக தரிசனமும் ஒவ்வொரு வரிகளிலும் வெளிப்பட்டு கொண்டே இருப்பதுடன் அந்த உணர்வு வாசித்த எனக்கும் ஏற்பட்டது, எல்லா வாசகர்களுக்கும் அவ்வாறே நிகழும் என எண்ணுகின்றேன்.
யாவரும் அலைந்து அமைக,
- இளம்பரிதி
29/05/23

Comments